Advertisement

அத்தியாயம் – 20

நிரஞ்சனனுக்கு திடீரென்று அனைத்துமே அழகாய் மாறியதாய் இருந்தது. அவனுள் இருக்கும் ஒருவித வெறுமை எங்கே போனது என்று தெரியவில்லை. அலுவலகத்தில் கூட புன்னகை முகமாகத்தான் இருந்தான். சஞ்சீவிற்கு கூட அதிசயமாய் இருந்தது, நிரஞ்சனன் வெகு இயல்பாய் இருப்பது.

அவ்வப்போது அவனின் முகத்தை வேறு பார்க்க, “என்ன சஞ்சீவ் என் முகத்துல என்ன தெரியுது..??” என்று நிரஞ்சனன் கேட்டாலும், அக்குரலில் மெது தன்மையே இருக்க,

“இல்ல சார்.. அது.. நீங்க…” என்று சஞ்சீவ் இழுக்கும் போதே,

“சரி நீ யோசிச்சு முடிவு பண்ணி வை.. நான் கிளம்புறேன்..” என, சஞ்சீவின் கண்கள் பட்டென்று கடிகாரம் பக்கம் தான் போனது.

அடிக்கடி இந்த நேரத்தில் தான் கிளம்புகிறான். தினமும் இல்லை என்றாலும், ஒருநாள் விட்டு இல்லையோ இரண்டு நாட்களுக்கு ஒருமுறையோ இப்படி இதே நேரத்தில் கிளம்ப,

“அடிக்கடி இதே டைம்ல கிளம்புறீங்க..” என்றான் முணுமுணுப்பாய்.

“ம்ம்.. என்னது..??!! என்ன சொன்ன??!!” என்று நிரஞ்சன் திரும்பக் கேட்க,

“இல்லையே.. ஒண்ணுமில்லையே…” என்று சஞ்சீவும் சொல்ல,

“இல்ல இப்ப நீ என்னவோ சொன்னியே…” என்று அவன் டேபிள் முன்பு நின்றே விட்டான் நிரஞ்சனன்.

“என்ன சொல்லு..??!!” என்று திரும்ப கேட்க,

‘இதுக்கு கிளம்பட்டும்னு விட்டிருக்கலாம்..’ என்றெண்ணிய சஞ்சீவ், “அடிக்கடி இதே டைமிங்கல கிளம்புறீங்களா.. அதான்..” என,

“சொல்லி முடி..” என்றான் அவன்.

“இல்ல அவ்வளோதான்..”

“ம்ம் குடும்பஸ்தன்டா… எவ்வளவு வேலை இருக்கும்.. ஆபிஸ கட்டிக்கிட்டே இருக்க முடியுமா.. கல்யாணம் ஆகி ஒரு புள்ள வந்தா உனக்கும் தெரியும்..” என்று கார் சாவியை தூக்கிப் போட்டு பிடித்தபடி செல்ல,

“ஹா..!!!!” என்று சஞ்சீவ் அதிர்ந்து பார்க்க மட்டுமே முடிந்தது.

ஆம்..!! நிரஞ்சனன் இப்போதெல்லாம் அடிக்கடி மகனைப் பார்ப்பது மட்டுமல்ல மாலை நேரத்தில் அழைத்துக்கொண்டு வீடும் செல்கிறான். சுந்தரியிடமோ இல்லை நித்யாவிடமோ சொல்லிடுவான் ‘இன்னிக்கு அத்துவ கூட்டிட்டு வர்றேன்.. சொல்லிடுங்க..’ என்று.

அதாவது ராதிகாவிடம் சொல்லிவிடுங்கள் என்று.

“அதையும் நீயே செய்ய வேண்டியதுதானே..” என்று நித்யா நொடித்தாலும், “சொன்னதை செய்..” என்றுவிடுவான்.

சுந்தரிக்கோ முதலில் பயமாய் போனது, ராதிகா ஏதாவது சொல்லிடுவாளோ என்று. நிரஞ்சனனோ “ம்மா சும்மா சொல்லுங்கம்மா.. அதெல்லாம் ஒன்னும் சொல்லமாட்டா..” என,

“அந்த சும்மாவ நீ சொன்ன என்னவாம்..” என்பாள் நித்யா அப்போதும்.

எப்படியாவது இவர்களை நேரடியாய் பேசவைத்து விடவேண்டும் என்று.

“ம்மா.. இவளோட பேச்சு கேட்காதீங்க.. நீங்க சொல்லிடுங்க..” என்பான் அப்போதும், நிரஞ்சனன்.

இப்படித்தான் அடிக்கடி நிகழ, ராதிகா மறுப்பாளோ என்று அனைவரும் நினைத்தால், அவள் மறுப்பேதும் சொல்லவேயில்லை. மாறாக சில நேரம் சுந்தரிக்கு அழைத்து “அத்தை நான் ஆபிஸ் விட்டு வர நேரமாகும், அவரை போய் அத்துவ பிக்கப் பண்ணிக்கச் சொல்றீங்களா..??!! நான்  வந்து கூட்டிட்டு போயிக்கிறேன்..” என்பாள்.

அதை நிரஞ்சனனிடம் சொன்னால் “ம்மா அத்துவ நானே நைட் கொண்டு போய் விட்டுக்கிறேன். தேவையில்லாம அலைய வேண்டாம் சொல்லுங்க..” என்று இவனும் சொல்ல,

‘என்னடா நடக்குது இங்க..’ என்றுதான் ஆனது மற்றவர்களுக்கு.

மணிவண்ணன் மகளிடம் கேட்டேவிட்டார் “என்னம்மா இதெல்லாம்..” என்று.

“அதுப்பா.. அத்து.. அவனுக்கும் அவங்கப்பாவோட டைம் ஸ்பென்ட் பண்ணனும்னு இருக்கும்ல ப்பா..” என,

ராணியோ “ம்ம் அத்து பெரியவனாகி, அப்பாவும் அம்மாவும் தனி தனியா இருக்காங்கன்னு தெரிஞ்சா அவன் மனசு என்ன நினைக்கும், யோசிக்கும்னு எல்லாம் நீ யோசிச்சு பார்த்துட்டு அப்புறம் இதெல்லாம் பண்ணு..” என்று சொல்ல, ராதிகாவிற்கு ஒருமாதிரி ஆகிப்போனது.

முகம் வாடிட, எழுந்து போனவளை பார்த்தவரோ “என்ன ராணி..” என்று கடிய,

“இல்லைங்க.. கொஞ்ச நாளாவே இவளும் சரியில்ல.. முன்னாடி நம்ம யாருக்கும் வேற எதையுமே யோசிக்கவிடாம ஒரு முடிவு பண்ணி இவ்வளோ தூரம் வந்தாச்சு.. இப்போ அத்து சின்ன பையன், அவனுக்கு இப்போ குஷியா தான் இருக்கும். விபரம் புரிய புரிய இதெல்லாம் அவனுக்கு எவ்வளோ மன உளைச்சல் ஆகும்னு தெரியுமா. இல்லை இவளுக்குமே இதெல்லாம் எவ்வளோ தூரத்துக்கு கொண்டு போக முடியும். வேண்டாம்னு நினைச்சா அப்படி இருக்கணும்.. இல்லையோ வேணும்னு நினைச்சா  அதுக்கு என்ன செய்யணுமோ அதை செய்யணும். சும்மா சின்ன பையனை அலைய விடக்கூடாது…” என்று ராணி சொன்னது அனைத்தும் ராதிகாவின் காதில் விழுந்துகொண்டு தான் இருந்தது.

ராணி சொல்வதும் சரிதான். தங்கள் விசயத்திற்காக அதோஷஜனை தேவையில்லாது குழப்புகிறோமோ என்று தோன்றியது ராதிகாவிற்கு. தாங்கள் ஒரு முடிவிற்கு திடமாய் வராது, மகனை இப்படி அலைக்கழிப்பது சரியே இல்லை எனப்பட்டது. 

‘ம்மா இன்னிக்கு அப்பா வல்ல..’ என்று அவன் கேட்கையில் அவளுக்குமே பதில் சொல்லமுடியாது தானே இருந்தது.

அதெல்லாம் பார்த்து தான் ராணி அப்படிச் சொல்லியிருக்க, அன்றைய தினம் பார்த்து நிரஞ்சனன் மகனைக் அழைக்கக் கிளம்பியவன், தன் அம்மாவிடம் சொல்ல, சுந்தரியும் ராதிகாவிற்கு அழைத்துச் சொல்ல,

அவளோ “இல்ல அத்தை வேணாம்.. நான்.. நான் பிக்கப் பண்ணிக்கிறேன்..” என்றாள் பிசிறிய குரலில்.

“ஏ.. ஏன் ராதிகா.. அவன் கிளம்பிட்டான் போல..”

“இல்ல வேணாம் அத்தை.. நான்.. நானும் கிளம்பிட்டேன் ஆபிஸ் முடிஞ்சது.. நான் போய் பிக்கப் பண்ணிக்குவேன்.. அவர்கிட்ட சொல்லிடுங்க..” என்றவள் வைத்தும் விட்டாள்.

மகனை எண்ணி நொடியில் மனது நோந்துபோனது. இன்று அப்பா வருவானா, இல்லை அம்மா வருவாளா என்று பார்த்திருக்கும் சிறுவன். அந்த தோற்றம் அவளின் கண்முன்னே வர, மகனது உணர்வுகளோடு விளையாடக் கூடாது என்றெண்ணினாள்.

இதே யோசனையோடு அவளும் கிளம்ப, சுந்தரி மகனுக்கு அழைத்துச் சொல்லவும் நிரஞ்சனனுக்கு கோபமாகிப் போனது.

“நீங்க வைங்கம்மா நான் பேசிக்கிறேன்..” என்றவன், நேரடியாக ராதிகாவிற்கே அழைத்துவிட்டான்.

‘என்ன நினைச்சிட்டு இருக்கா இவ.. இவளுக்கு லேட்டானா மட்டும் நான் போய் கூப்பிட்டுக்கணும்.. இதேது நானா போனா வேணாம் சொல்வாளா..’ என்று தோன்ற, அதே வேகத்தில் தான் அழைத்தான்.

ஆனால் நிரஞ்சனன் அழைப்பு என்றதுமே, ராதிகாவிற்கு படபடப்பாய் போனது. மனது ஒருவகையில் எதிர்பார்த்துத் தான் இருந்தது நிரஞ்சனன் அழைப்பான் என்று. இருந்தும் பேசிட ஒரு படபடப்பு இருக்கத்தான் செய்தது. காரினைச் செலுத்திக்கொண்டே ப்ளூ டூத்தில் அழைப்பை ஏற்றவள்,

“ஹலோ..” என, அவளின் குரல் அவளுக்கே கூட கேட்கவில்லை.

நா வறண்டு போனது. இதயத் துடிப்பு அவளுக்கே கேட்கச் செய்தது.

பதிலுக்கு “ஹலோ..” என்று அவனும் சொல்ல, “சொ.. சொல்லுங்க..” என்றாள் அப்போதும் எழும்பாத குரலில்.

எதோ ஒரு பாரம் சட்டென்று வந்து அவளின் இதயக்கூட்டில் அமர்ந்துகொள்ள, கண்களை கண்ணீர் மறைப்பது நன்கு உணர முடிய, அழுந்த துடைத்தவள், காரினை ஒரு ஓரமாய் நிறுத்திவிட்டாள்.

“அத்துவ ஏன் கூப்பிட்டுக்க வேணாம் சொன்ன.??!! என்ன நினைச்சிட்டு இருக்க நீ..” என்ற நிரஞ்சனன் குரலில், கோபமாய் பேசிட முயன்று அது தோற்றுக்கொண்டு இருப்பது நிரஞ்சனனிற்கே புரிந்தது.

ராதிகா, அவனின் குரலையும், வார்த்தைகளும் உள்வாங்கிக்கொள்ள முயன்றுகொண்டு இருந்தாள், அவளின் படபடப்பை மீறி. அதனால் பதில் சொல்லாது இருக்க,

“ராதிகா..!!” என்றழைத்தான்.

அதட்டலாய் வந்தாலும், அதில் உரிமை அதிகம் இருப்பதாய் தான் உணர்ந்தது ராதிகாவின் மனது.

“ம்ம்..” என்று மெல்லமாய் அவள் குரல் ஒலிக்க,

“அத்துவை நான் கூட்டிட்டு தான் போவேன்..” என்றான் உறுதியாய்.

அவளோ “வே.. வேணாமே ப்ளீஸ்..” என, அவள் குரல் இறைஞ்சுவதாய் இருக்க, எப்போதும் கோபமும், பிடிவாதமுமாய் பேசுபவள் இன்று கெஞ்சலாய் கேட்கவும்,

“ஏன்.. ஏன் என்னாச்சு??!!” என்றான் வேகமாய்.

“இ.. இல்ல.. நான் ஸ்கூல் கிட்ட வந்துட்டேன்.. நான்.. நான் பிக்கப் பண்ணிப்பேன்..” என,

“நானும் தான் ஸ்கூல் கிட்ட இருக்கேன்..” என்றான் அவனும் பதிலுக்கு.

“இல்ல வேணாம்..”

“என்ன வேணாம்..??!! எனக்கு ப்ராபர் ரீசன் சொல்லு..” என்றவனுக்கு பொறுமை கரைந்துகொண்டு இருந்தது. அங்கே மகன் காத்துக்கொண்டு இருப்பான் என்ற எண்ணம் வர, “பேசு ராதிகா…” என்று அதட்டினான்.

“இனிமே எதுவும் வேணாம்.. முன்னாடி போல மன்திலி..” என்று அவள் சொல்லும்போதே, “அதெல்லாம் தூக்கி குப்பைல போடு..” என்றான் வேகமாய்.

அவன் குரலில் இருந்த வேகமும், அழுத்தமும், ராதிகாவிற்கு மேலும் மேலும் வருத்தம்கொள்ளச் செய்ய,

“ப்ளீஸ்…” என்றாள் அப்போதும் கெஞ்சலாய்.

“ம்ம்ச்.. எங்க இருக்க நீ…” என்றவன், அப்படியே காரினைக் கிளப்ப, ‘என்னைப் பார்க்க வருகிறானா…’ என்று உள்ளம் திடுக்கிட்டாலும், அவளின் வாய் தன்னப்போல் பதில் சொல்ல,

“அங்கேயே இரு வர்றேன்.. கிட்ட தான் இருக்கேன்..” என்றவன், அடுத்த இரண்டு நிமிடத்தில் அவளின் கார் அருகே தன் காரினை நிறுத்த, ராதிகாவிற்கு கார் கதவினை  திறந்து, இறங்கி நிற்கக் கூட உடல் ஒத்துழைக்கவில்லை. தொய்ந்து போனது போலிருந்தது.

திடீரென அவன் அழைத்தது, திடீரென அவன் வந்து நிற்பது, திடீரென அவனை நேர்கொண்டு எதிர்கொள்ள அவளுள் பதற்றம். கைகள் நடுங்க கதவினைத் திறந்து இறங்க, நிரஞ்சனனும் இறங்கியவன் நேருக்கு நேராய் அவளின் முகம் பார்க்க,

‘அச்சோ.. என்ன இதெல்லாம்..’ என்றுதான் அவளும் ரத்த ஓட்டம் தாறுமாறாய் ஓடியது.

நிரஞ்சனனோ ராதிகாவின் முகத்தினை மட்டுமே பார்த்துக்கொண்டு இருக்க, அவளின் கலங்கிய கண்ணீரும், நடுங்கும் இதழ்களும் அதை மறைக்க அவள் செய்யும் முயற்சியும் என்று எல்லாம் அவனின் கண்ணில் பட, “ம்ம் சொல்லு ராதிகா..” என்றான் அவளுக்கு நேரே நின்று.

ராதிகாவிற்கோ பார்வையை நிமிர்த்தி அவனைக் காண்பது என்பதுகூட முடியாதது போலிருந்தது. முன்னிருந்த ராதிகா இப்போதில்லை என்று அவனுக்கு நன்குப் புரிந்தது. எதையோ மனதில் போட்டுக்கொண்டு இருக்கிறாள், முன்தான் அதெல்லாம் கவனிக்காது விட்டோம் ஆனால் இனியும் அது முடியாது என தோன்ற,

“சரி வா.. அத்து வெய்ட் பண்ணிட்டு இருப்பான்.. ரெண்டுபேருமே போவோம்.. யாரோட அவன் வர்றானோ வரட்டும்.. என்னோட வந்தா நான் நைட் கொண்டு வந்து விட்டுடறேன் ஓகே வா..” என, மறுத்து பேசவேண்டும் என்று நினைத்தாலும் அது முடியாது போக, ராதிகாவின் தலை தன்னப்போல் சரியென ஆட,

“டூ மினிட்ஸ் வாக் தானே, நடந்தே போயிடலாம்..” என்றபடி நிரஞ்சன்  அடி எடுத்து வைக்க, எல்லாமே அவளுக்கு அதிசய அதிசயமாய் போனது. கைகுட்டையால் முகத்தை அழுந்தத் துடைத்தபடி நிரஞ்சனன் பின்னே செல்ல, அவனோ திரும்பிப் பார்க்க, அவளின் கால்கள் வேகமாய் எட்டுபோட்டு நிரஞ்சனன் உடன் சேர்ந்து நடக்கத் தொட,

நிரஞ்சனன் மனதோ “ம்ம் அப்படி வா..” என்று சொல்லிக்கொண்டது. சத்தமாக இல்லை.

ராதிகாவிற்கு இதுவொரு புதுவுணர்வு. என்ன சொல்லவென்பது தெரியாது, அவனின் இழுப்பிற்கு எல்லாம் தான் உடன்படுவது போலிருக்க, இதேபோல் இனி அனைத்திலும் இருந்திடலாமா என்றும் ஆசைகொண்டது உள்ளம்.

இரண்டு நிமிட நடையில் பள்ளிக்கூடம் வந்தாலும், இவர்கள் அதனை பத்து நிமிடமாய் மாற்றி நடந்து செல்ல, அத்து வழக்கம் போல அங்கே வாட்ச்மென் அருகே அமர்ந்திருந்தவன், அப்பாவும் அம்மாவும் சேர்ந்து வருவதைப் பார்த்து

“ஐ..!! அப்பா.. ம்மா..” என்று கத்தியபடி இவர்களை நோக்கி ஓடி வர, இருவரின் முகத்திலும் ஒரு முறுவல் வந்து ஒட்டிக்கொள்ள, அவர்களும் அவனை நோக்கி முன்னேற, ஓடி வந்தவன் இருவரின் கால்களையும் ஒருசேர கட்டிக்கொண்டான். அவ்வளவு தானே அவனின் உயரமும் கூட.

“டேய் அத்து…” என்று நிரஞ்சனன் மகனைத் தூக்கிக்கொள்ள, இத்தனை உற்சாகமாய் மகனின் முகம் என்றும் இருந்திருக்கிறதா என்று பார்த்து நின்றாள் ராதிகா.

அமைதியாய் அவள் அப்பா மகன் இருவரையும் பார்க்க, நிரஞ்சனன் அவளைப் பார்க்க, அத்துவோ “ம்மா…” என்றபடி அவளிடம் போனான்.

“என்னடா தங்கம்…” என்று மகனைக் கொஞ்சினாலும், ராதிகாவின் கண்கள் கசியவும், “ஏம்மா..” என்றான் சிறுவன்.

“ஒண்ணுமில்லடா..” என்றவள் சிரித்தபடி மகனுக்கு பதில் சொல்ல, கண்களில் கண்ணீரும் உதட்டினில் சிரிப்புமாய் மகனைக் கொஞ்சிக்கொண்டு இருக்கும் மனைவியைக் காண நிரஞ்சனன் உள்ளம் தான் இப்போது நிறைந்துபோனது.

ஒருவகை கனமான சூழல் இது என்று பெரியவர்களுக்கு புரிந்தாலும், சின்னவன் ஆர்பரித்துக்கொண்டு இருந்தான் இருவரும் இணைந்து வந்திருப்பது கண்டு.

“ப்பா.. ப்பா.. சாக்கி சாப்பிடலாம்..” என,

“போலாம்டா…” என்றவனோ ராதிகாவைப் பார்க்க, “தினமும் இதான் நடக்குதா..??!!” என்றாள் மகனிடம்.

அம்மாவின் முகம் கண்டிப்பிற்கு மாறவும் வேகமாய் அத்து “நோ ம்மா.. அப்பா தான்…” என,

“டேய் போக்கிரி பொய் சொல்லாதடா..” என்று நிரஞ்சனன் சொல்ல, அத்து பாவமாய் அவனின் அம்மா முகம் பார்க்க,

“பசிக்குதா அத்து..” என்றாள் ராதிகா.

“ம்ம்ஹும்..” என, “பசிக்கலன்னாலும் ஒரு சாக்லேட் சாப்பிடுறதுல தப்பில்ல..”  என்றவன் “போலாம்..” என சொல்லி நடக்க,

“ம்மா கார்..” என்றான் அத்து, கார் எங்கே என்று கேட்பதுபோல்.

“கார் வெளிய நிக்குது அத்து..” என்றவள், ‘மகனை யாரோடு வருகிறாய்..’ என்று எப்படி கேட்பது என்ற யோசனையில் வர, அக்கேள்வியை கேட்டால் அந்த நொடி சிறுவன் மனது என்ன உணரும் என்று எண்ணி பதற, அவளின் நடையின் வேகம் குறைய, அதற்குள் நிரஞ்சனன் சென்று அதோஷஜன் கேட்ட சாக்லேட்டை வாங்கியிருந்தான்.

அதோஷஜனிற்கு அவனின் சந்தோசத்தினை சொல்லத் தெரியவில்லை, வழக்கத்திற்கு மாறாக நிறைய பேசிக்கொண்டே வர, நிரஞ்சனன் வந்து அவனிடம் ஒரு சாக்லேட்டை நீட்ட,

“ம்மாக்கு..” என்றான் வேகமாய்.

ராதிகாவோ தனக்கு எங்கே வாங்கியிருக்கப் போகிறான் என்று நினைத்து நிற்க “அம்மாக்கும் தான் டா…” என்றவன் அவளிடமும் ஒன்றை நீட்ட,

‘எனக்கா…??!!’ என்று திகைத்து கண்கள் விரித்துப் பார்க்க, “ம்ம் பிடி.. உனக்கும்தான்.. இது பிடிக்கும்தான்..” என்று அவள்முன்னே நிரஞ்சனன் நீட்ட,

“ம்மா வாங்கும்மா…” என்றபடி அத்து வாங்கி அவளிடம் நீட்ட, ராதிகா ஒரு புன்னகையோடு அதனை வாங்கிக்கொண்டாள்.

வாங்கிய அம்மா மகன் இருவரும் அதனை உண்ணாது நிற்க “ப்பாக்கு சாக்லேட்..” என்று அத்து கேட்க,

“ஷேர் பண்ணிக்கலாம்டா..” என்றவனின் பார்வை ராதிகாவைத் தான் பார்த்தது.

நிரஞ்சனனிற்கே தெரியவில்லை தான் எந்த தைரியத்தில் இதெல்லாம் செய்கிறோம் என, ஒருவேளை இவள் முகம் திருப்பிக்கொண்டு சென்றுவிட்டால் என்ன செய்வது என்று வேறு இருந்தது.

ராதிகாவிடம் மாற்றங்கள் தெரிந்தாலும், இந்த தளர்வு மகன் விசயத்திலா இல்லை தங்களின் விசயத்திலா என்பது அவனுக்கு இன்னமும் புரியவில்லை. அதேபோல் தான் ராதிகாவிற்கும். நிரஞ்சனனின் இந்த திடீர் நெருக்கும் மாற்றமும் மகனுக்காக மட்டுமா இல்லை தனக்காகவுமா என்று.

“ம்மா ஷேரிங் ம்மா..” என்று அத்து சொல்லவும் “ஏன் உன்னோடத குடேன் டா..” என்று வேண்டுமென்றே நிரஞ்சனன் கேட்க

“நோ நோ..” என்று தலையை ஆட்டியவன் அம்மாவைப் பார்க்க, அவளோ மகனுக்கு சாக்லேட் கவரினை பிரித்துக் கொடுத்தவள், தன்னுடையதை பிரித்து நிரஞ்சனன் முன்னே நீட்ட, அவன் அதில் கொஞ்சமாய் எடுத்துக்கொள்ள, யாருக்கும் வீட்டிற்கு போகும் எண்ணமே வரவில்லை.

ஆனால் இப்படியே கடை முன்னே நின்று எத்தனை நேரம் குடும்பம் நடத்துவது. நிரஞ்சனனிற்குமே மகனிடம் யாரோடு வருகிறாய் என்று கேட்க மனம் வரவில்லை, தயங்கி தயங்கி பார்த்து நிற்க,

சிறுவனே சாக்லேட் உண்டுவிட்டு “ம்மா… அப்பாவும் நானும் ஹோம் வொர்க்..” என, பட்டென்று பெரியவர்கள் இருவருக்கும் சிரிப்பு வந்துவிட்டது.  

‘இப்படி மாட்டிவிடுறானே..’ என்று அப்பாவும்,

‘அப்பாக்கூட சேர்ந்து கள்ளத்தனம் பண்ண போறான்..’ என்று அம்மாவும் நினைக்க,

“ஓகே வா ம்மா..” என்ற அத்து, அடுத்து நிரஞ்சனனிடம் செல்ல, “ஏன் இத்தனை நாள் அம்மாவோட தானே ஹோம் வொர்க் பண்ண..” என்றாள் ராதிகா வேண்டுமென்றே.

“ம்ம்.. அது.. அப்பாதான் ஈசி..” என்று சிறுவனும் சொல்ல,

“இருக்கும் இருக்கும்.. எப்படி ஈசின்னு நானும் பார்த்துட்டு தான் இருக்கேன்..” என்று ராதிகா செல்லமாய் கடிய,

“ஹலோ.. அதெல்லாம் நாங்க ஜெட் வேகத்துல ஹோம் வொர்க் செய்வோம்.. என்னடா அத்து..” என்று நிரஞ்சனன் மகனை இழுக்க, அவனும் ஆமாம் என்று தலையை ஆட்டினான்.

“ம்ம்.. சரி.. பட் சீக்கிரம் வீட்டுக்கு வரணும்..” என்று ராதிகா சொல்லவும் “நீ.. நீயும் வாயேன் ராதிகா..” என்றான் நிரஞ்சனன்.

எதற்கு அழைக்கிறான், எப்படி அழைத்துவிட்டான் என்று அவனே அறியவில்லை. ஆனால் மகனைத் தூக்கிவைத்துக்கொண்டு அவளை மட்டும் போ என்று சொல்ல மனம் கேளவில்லை. அவனை மீறிய ஒரு அழைப்பு தான் இது. இருந்தும் அவனுக்கு பிடித்தே இருந்தது.

ராதிகாவிற்கும் இது மகிழ்ச்சியாகத்தான் இருந்தது, இதே போக்கில் இதே வாழ்வின் ஓட்டத்தில் ஓடினால் தான் என்ன என்று தோன்ற, அவர்களோடு செல்ல ஆசையும் இருந்தாலும்,

“இல்ல.. இருக்கட்டும்..” என்று தயங்கினாள்.

நிரஞ்சனன் அதற்குமேல் வற்புறுத்தவில்லை எதையும் உடனே எதிர்பார்க்கக் கூடாது என்றெண்ணி “ம்ம்.. சரி.. ஒரு எட்டுமணி போல கொண்டு வந்து இவனை விடறேன்…” என்றுசொல்லி மகனை அழைத்துக்கொண்டு செல்ல, அவர்களுக்கு சந்தோசமாகக் கை அசைத்துவிட்டு ராதிகாவும் கிளம்பினாள்.

Advertisement