Advertisement

அத்தியாயம் – 2

“ம்மா… ஜோ ஜோம்மா…” என்று சிணுங்கிய மகனை வம்படியாய் கமலி தூக்க,  ராணியோ “பாவம் டி குழந்தை தூக்கட்டுமே…” என்றார் அந்த அதிகாலை பொழுதில்.

“ம்மா.. ஏழு மணிக்கு அங்க ஹோமம்.. இப்போ இவனை கிளப்பி, கூட்டிட்டு போனாதான் சரியா இருக்கும்…” என்றபடி மகனை தூக்கி தன் தோளில் போட, அவனோ நன்றாய் இருக்கும் தூக்கத்தினை இப்போது அம்மா பாதியில் பிடுங்குகிறாளே என்று அழவே தொடங்கிவிட்டான்.

“ஷ்.. அத்து கண்ணா.. குட் பாய்ல.. அழக்கூடாது…” என்று ராதிகா சமாதானம் செய்ய, ராணியோ பேரன் அழுவது தாங்காது,

“அவனை அப்படியே தூக்கிட்டு போ.. அங்க போய் குளிக்க வச்சு ரெடி பண்ணிக்கோ.. சும்மா அழ வைக்காத..” என்று ஒரு அதட்டல் போட்டார்.

இவர்களின் பேச்சுக்குரலில், ராதிகாவின் அப்பா, மணிவண்ணனும் எழுந்து வந்திட, பேரன் அழுவதை கண்ட அவருமேகூட “ராதிகா அவனை விட்டுட்டு போ.. தூங்கி எழவும் நானே கூட்டிட்டு வர்றேன்…” என்றார்.

அவரின் பேச்சினில் அம்மா அப்பா இருவரையும் ஒரு பார்வை பார்த்தவள்,  “வேணாம் ப்பா.. நான் பார்த்துக்கிறேன்..” என்றுவிட்டு, மகனை  குளிக்க அழைத்து செல்ல, அவனோ இன்னமும் அழுதான்.

“ம்ம்ச் ராதிகா… பிடிவாதம் செய்யாத..” என்ற பெற்றவர்கள் இருவரின் கண்டன பார்வையில் என்ன நினைத்தாளோ,

மகனை ஒருநொடிப் பார்த்தவள், திரும்ப அவனைத் தூக்கி வந்து கட்டிலில் போட்டு கொஞ்சம் நேரம் தட்டிக்கொடுத்து “நீ தூங்கு அம்மா ரெடியாகிட்டு வர்றேன்…” என்று சொல்லி அவனின் கன்னத்தில் முத்தமிட ‘நீ தூங்கு…’ என்று அவள் சொல்லும்போதே அவன் உறங்கியிருந்தான்.

“ம்ம் இதை முதல்லயே பண்ணா என்ன?? அவனை போய் அழ விட்டுட்டு..” என்று ராணி கடிய,

“ம்மா ப்ளீஸ்.. இப்போவே நேரமாச்சு. நான் ரெடியாகிட்டு வர்றேன்…” என்று அவள் குளியல் அறைக்குள் நுழைந்துவிட்டாள்.

ராதிகா குளித்து வந்து, தயாராகி, வேண்டியதை எடுத்து வைத்துக்கொண்டு, மகனையும் தூக்கிக்கொண்டு கிளம்ப, மணிவண்ணனும் சரி ராணியும் சரி வேடிக்கைதான் பார்த்துக்கொண்டு இருந்தனர். மகளிடம் சொல்வதற்கு ஆயிரம் விஷயங்கள் இருந்தாலும் அவர்களால் ஒன்றுமே செய்ய முடியவில்லை..

தங்கள் வளர்ப்பில் என்ன குறை என்று முதலில் அவர்களுக்கு தெரியவில்லை. தாங்கள் எதில் தவறினோம் என்றும் புரியவில்லை. மகளின் திருமண வாழ்வு அவளின் இந்த வயதிலேயே முடிந்துபோனது எண்ணி அவர்களின் ஆற்றாமையை அவர்களுக்குள்ளே தான் வைத்துகொள்ள வேண்டியதாய் போனது.

ராதிகாவின் முன்பு இதை பற்றி பேசினாலோ இல்லை எதுவும் கேட்டாலோ கூட அவளின் பார்வைக்கு இவர்களால் பதில் சொல்ல முடியாது. தூக்க மாத்திரைகளை விழுங்கி எனக்கு விவாகரத்து வேண்டுமென்றால் வேண்டும் தான் என்று அத்தனை பிடிவாதமாய் சொன்னவளிடம் யாருக்குத்தான் அப்போது பதில் சொல்ல முடியும்.

அப்போது மட்டுமில்லை இப்போதுமே கூட அவர்களால் இதனை பற்றி பேச முடியவில்லை. மற்ற எந்த விதத்திலும் ராதிகாவை குறை சொல்லவே முடியாது. ஆனால் இதிலேன் இப்படியொரு தவறான முடிவு எடுத்தாள் என்பது அனைவருக்கும் அதிர்ச்சி கலந்த ஆச்சர்யமே.

கேள்வி கேட்கவேண்டிய நிரஞ்சனனோ எதுவும் சொல்லாது, எதுவும் கேட்காது மௌனமாய் கையெழுத்து போட்டுக் கொடுத்துவிட்டான்.

அதெல்லாம் நினைக்க நினைக்க அந்த பெற்றோர்களுக்கு வேதனையாய் இருந்தது. ஆனாலும் ராதிகா கணவனை வேண்டாம் என்றதை போல அவனின் குடும்பத்தாரையோ இல்லை அப்பா என்ற அவனின் உறவை தன் மகனுக்கு வேண்டாம் என்று சொல்லாது இருப்பது அனைவருக்கும் ஓரளவு நிம்மதியே.

கடவுளே எப்படியாவது இவர்கள் இருவரும் தடைகள் எல்லாம் தாண்டி, மகனுக்காகவாது வாழ்வில் ஒன்றாய் இணைந்திட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாய் இருக்க, விதி என்ற ஒன்று என்ன செய்ய காத்திருக்கிறது என்று யாருக்கும் தெரியாதே..

ராதிகாவிற்கு, கிளம்பும் வரைக்கும் கூட ஒன்றும் தெரியவில்லை. ஆனால் அங்கே நிரஞ்சனனின் வீடு நெருங்க நெருங்க மனதினுள்ளே ஒரு வித பிசைவு. அதோஷஜன் பாதி உறக்கத்திலும் மீதி விழிப்பிலும் இருக்க, மெதுவாய் அவனின் தலையை வருடியவள், “அப்பா வீட்டுக்கு போறோம்…” என்று இதழசைத்தாள்.

“ம்ம்.. ம்ம்…” என்ற சிறுவனுக்கு உறக்கம் இழுக்க மீண்டும் கண்களை மூடிக்கொள்ள, ராதிகாவிற்கு ஒரு பெரு மூச்சு மட்டுமே வெளிவந்தது.

காரை சென்று நிறுத்தும் போதே, வாசலுக்கு வந்துவிட்டனர் சுந்தரியும்,  நித்யாவும். கார் விட்டு ராதிகா இறங்கும் முன்னமே நித்யா “வாங்கண்ணி..” என்றபடி, 

அவளாகவே மற்றொரு கதவினை திறந்து “அத்து….” என்று பார்க்க, அவனோ நல்ல உறக்கத்தில் இருந்தான்.

ராதிகாவும் அவளே அவனை தூக்கட்டும் என்று விட்டுவிட்டு தான் கொண்டு வந்திருந்த பையை மட்டும் எடுத்துக்கொண்டு நடக்க, “தூக்கத்துலயே கூட்டிட்டு வந்துட்டீங்களா அண்ணி..” என்றபடி நித்யாவும் அதோசஜனை தூக்கிக்கொண்டு நடந்தாள்.

“எழுப்பவுமே அழுதான் நித்யா.. அதான்…” என்றவளை,  சுந்தரி “வாம்மா…” என்றவர்,  பேரனைப் பார்த்து  “தூங்குறானா…” என்று சொல்லிபடி “உள்ள போய் படுக்கவை நித்தியா..” என்று சொல்ல, ராதிகா ஒன்றுமே சொல்லவில்லை..

வீட்டினுள்ளே அனைவரும் செல்ல, ராதிகாவின் கண்கள் நிரஞ்சனனை தேடியது. அய்யர் மட்டுமே அங்க ஹாலில் ஹோமத்திற்கான ஏற்பாடுகளை செய்துகொண்டு இருக்க, அவனை காணோம்.. ஆனால் கேட்க முடியாதே.. எங்கே அவன் என்று.ஆகையால் சும்மா அப்படியே நிற்க,

சுந்தரியோ “காபி குடிக்கிறயா ராதிம்மா..” என்றார் கரிசனமாய்..

“இல்லத்தை வேணாம்…” என்றவள் மகனைப் பார்க்க, நித்யாவோ அதோஷஜனை தூக்கிக்கொண்டு நேராய் அவளின் அண்ணன் அறைக்குத்தான் சென்றாள்.

சரி அவளின் அறையிலோ இல்லை சுந்தரியின் அறையிலோ அத்துவை  படுக்க வைப்பாள் என்றெண்ணியே ராதிகா அமைதியாய் இருக்க, நித்யாவோ  நிரஞ்சனன் அறைக்கு தூக்கி செல்லவும், ஒருநொடி அவளுக்கு பக்கென்று இருந்தது.

‘அத்து எழுந்துட்டா நான் அந்த ரூமுக்கு போகனுமா…’ என்று பார்க்கும் போதே,

“சார வர சொல்லுங்க…” என்று அய்யர் சொல்ல, “நிரஞ்சன்….” என்று சுந்தரி  இங்கிருந்தே அழைக்கவும், “இதோ வர்றேன் ம்மா…” என்றபடி வந்தான் அவன்.

சுந்தரியின் ‘நிரஞ்சன்…’ என்று சொல்கையிலேயே ராதிகாவிற்கு இருதயம் வேகமாய்  அடிக்கத் தொடங்கிவிட்டது.

இருவருக்கும் விவாரத்து ஆன பின் எப்போதுமே இப்படிதான். அவனைப் பார்க்க நேர்ந்தாலோ, இல்லை அவனின் பெயரை கேட்க நேர்ந்தாலோ அவளுக்கு இப்படியான மாற்றம் அந்த நொடி நிகழும். ஆனால் அவனோ உன்னால் எனக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பது போலவே தான் இருப்பான்.

பார்க்கக் கூடாது என்று நினைத்தாலும், தன்னை கடந்து செல்பவனை காணாது அவளால் இருந்திட முடியவில்லை. பார்த்ததுமே மெலிந்திருக்கிறான் என்று தெரிந்தது. வயதை தாண்டிய ஒரு மூப்பு தெரிவது போலவும் இருந்தது. அவளையும் மீறி அவளின் பார்வை அவனில் நின்றது. 

ராதிகாவை ஒரு பார்வை பார்த்தவன், பின் ஒன்றும் சொல்லாது சென்றிட, அவளுக்குத்தான் என்னவோ போலானது. அனைவரும் அவளிடம் நல்ல விதமாய் நடப்பதே அவளுக்கு மனதை போட்டு பாடாய் படுத்தியது..

இதில் இவன் வேறு…

ஆனால் நிரஞ்சனன் பேசாது அமைதியாய் இருப்பதே நல்லதாய் தோன்றியது அவளுக்கு. அவன் கடைசியாய் பேசியது அவள் மருத்துவமனையில் தூக்க மாத்திரை விழுங்கி படுத்திருந்தபோது தான். அதன் பின்னே இப்போது வரைக்கும் ஒரு வார்த்தை பேசவில்லை.

ஒரு உறவு வேண்டாம் என்றால் வேண்டாம். அதைவிட்டு இதென்ன தாமரையிலை நீர் போல. ஒட்டியும் ஒட்டாத ஒரு உறவு. வீட்டினர் அனைவரும் அவளுக்கு உறவு, அவனைத் தவிர.. அவனுக்கோ மகன் மட்டுமே உறவு.  சுந்தரி தான் மகனும் மருமகளும் சந்திக்கும் நேரத்தில் எல்லாம் எங்கே ஏதாவது சண்டை வந்துவிடுமோ என்று பயந்துகொண்டே இருப்பார்.

இப்போதும் அப்படி ஒரு பார்வை பார்க்க, நிரஞ்சனனோ இவர்கள் பக்கம் திரும்பவேயில்லை.. ராதிகா அமைதியாய் சோபாவில் அமர்ந்திருக்க, “எல்லாரும் வாங்கம்மா….” என்று அய்யர் சொல்லவும், நித்யாவும் அத்துவை உறங்கவைத்துவிட்டு வந்துவிட, மூன்று பெண்களும் ஹோமத்திற்கு கொஞ்சம் தள்ளி வந்து அமர்ந்து கொண்டனர்.

ஹோமம் ஆரம்பிக்க, சிறிது நேரத்திலேயே “ம்மா….” என்று அத்துவின் குரல் கேட்க, ராதிகாவோ வேகமாய் மாமியார் முகம் பார்த்தாள். அதற்குள் நித்யா  “நான் போய் பாக்குறேன்…” என்றுவிட்டு செல்ல,

அவள் போன பிறகும் கூட கொஞ்ச நேரத்தில் “ம்மா… ம்மா…” என்று சிறுவன் அழவே தொடங்கிவிட, ராதிகாவோ  தான் இவனின் அறைக்குள் செல்வதா என்ற தயக்கமே பாதி எழவிடாமலும், மகனின் அழுகை ஒருபுறமும் அவஸ்தை படுத்த,

பொறுத்து பொறுத்து பார்த்த நிரஞ்சனன், ராதிகாவை ஒரு முறை முறைத்தான். பிள்ளை அழுவதை விட உனக்கு உன் பிடிவாதம் தான் முக்கியமா என்று சொல்லாமல் சொல்லிய அந்த பார்வை ஒருவித கண்டனத்தையும் தெரிவிக்க அவனின் பார்வையை நேருக்கு நேராய் சந்தித்தவளின் மனம் அப்படியே விதிர்த்து போய்விட்டது.

அடுத்த நொடி அவளையும் அறியாது எழுந்துவிட்டாள். மனதிற்குள்ளேயோ இப்போதும் இவனின் பார்வைக்கு தன் மனம் இத்தனை செவி சாய்க்கிறதா என்ற கேள்வி எழுந்தாலும், அத்துவின் “அம்மா…” என்ற சத்தத்தில் களைந்து வேகமாய் அங்கே உள்ளே சென்றாள்.

அவனோ மெத்தையில் அமர்ந்து “ம்ம்ம்மா…” என்று அழுதுகொண்டு இருந்தான்.

பொதுவாய் இப்படி அழும் பழக்கமும் இல்லை. ஒருவேளை பாதி தூக்கத்தில் காலையில் எழுப்பியாதால் இருக்குமோ என்னவோ. அந்த சிணுங்கள் அப்படியே இப்பவும் தொடர, “அத்து கண்ணா… இதோ அம்மா வந்துட்டேன்…” என்று சேலையை இழுத்து சொருகியபடி வேகமாய் மகனைப் போய் தூக்கினாள்..

“ஏன் அண்ணி இப்படி அழறான்…” என்று நித்யா கேட்க,

“காலைல எழுப்பினேன் இல்லையா.. அதான்…” என்றவளும் மகனை கொஞ்ச நேரம் சமாதானம் செய்ய, அடுத்து அப்படியே அந்த சிறுவனும் அம்மாவையும் அத்தையையும் பார்த்து சிரிக்கத் தொடங்கிவிட்டான்.

“அத்து குட்டி.. இவ்வளோ நேரம் அழுதுட்டு அம்மா வரவும் சிரிக்கிறயா.. வாலு…” என்று நித்யா செல்லமாய் அவனின் முதுகில் தட்ட, அதற்கும் சிரித்தவன் “ப்பா… பாட்டி…” என்று அடுத்து அவர்களிடம் செல்ல கேட்டான்.

“ம்ம் போலாம் போலாம்.. ஆனா குட் பாயா.. ப்ரெஷ் பண்ணி குளிச்சிட்டு போகணும்…” என்ற ராதிகா, “இவன் குளிக்கனுமே…” என்று நித்யாவை பார்க்க,

“கீசர் போட்டுட்டேன் அண்ணி… நீங்க இந்த பாத்ரூம்லயே குளிப்பாட்டுங்க…” எனவும்,

“ம்ம்…” என்றுமட்டும் சொன்னவள், மகனை தூக்கிக்கொண்டு குளியலறை சென்றாள்..

மனதில் இருக்கும் நெருடல்களை எல்லாம் ஒதுக்கித் தள்ளி, மகனுக்காக என்பதனை மட்டுமே மனதில் நிறுத்தி, அதுவும் இன்னமும் கொஞ்ச நேரம் என்பதையும் சிரமப்பட்டே நினைவு படுத்தி மகனை தயார் செய்ய, மனமோ ‘நல்லவேளை பழைய வீட்ல இவங்க இல்லை…’ என்று ஒரு சிறு நிம்மதி கொண்டது..

ஆம் குணசேகரனின் மரணத்திற்கு பிறகு, நிரஞ்சனின் குடும்பம் இந்த வீட்டிற்கு வந்துவிட்டது. இது வீடென்றால் அது பங்களா. இந்த வீட்டினை விட நான்கு மடங்கு பெரியது அந்த வீடு. குணசேகரன், சுந்தரி, ராதிகா, நித்யா, நிரஞ்சனன்,      வேலையாட்கள் என்று வீடே எப்போதும் நிறைந்து இருக்கும். குணசேகரன்  காலமானார். ராதிகாவும் பிள்ளையை தூக்கிக்கொண்டு போய்விட்டாள்.

‘இனிமே என்னால இங்க இருக்க முடியாது நிரஞ்சன்…’ என்று சுந்தரி  சொல்லவும், அவனுக்கும் அதுவே தான் தோன்றியதோ என்னவோ, அம்மாவையும் தங்கையையும் அழைத்துக்கொண்டு இங்கே இந்த வீட்டிற்கு வந்துவிட்டான்..

இது அவனின் சம்பாத்தியத்தில் வாங்கிய முதல் வீடு.. அவனின் வீடு.. எங்கே அந்த வீட்டினில் இருந்தால் கடந்துபோன கசந்துபோன நியாபகங்கள் எல்லாம் வந்து மனதினை போட்டு படுத்துமோ என்றெண்ணியே நிரஞ்சனனும்  இங்கே வர சம்மதித்து விட்டான்.

அதே எண்ணம் தான் இப்போது ராதிகாவிற்கும். அந்த வீட்டினில் அவளுக்கான, அவளுக்கும் அவனுக்குமான நினைவுகள் எத்தனையோ இருந்தன. சந்தோசமாய்.. சண்டையாய்.. ஊடலாய்.. கூடலாய்.. பரிவாய் பின் பிரிவாய் என்று இவர்கள் உறவின் அனைத்து காட்சிகளையும் தாங்கி நிற்கும் இடமல்லவா அது.

அங்கே போனால் இப்போது இருக்கும் இந்த திடம் நிச்சயம் தடம்புரளும்.. கண்ணீரோ கோபமோ எதுவோ ஒன்று வந்து அலைமோதி அவளின், அவனின் அமைதியை கெடுக்கும். அந்தமட்டும் இதுவே நல்லது என்ற எண்ணம் ராதிகாவிற்கு. இங்கே எப்போதாவது என்றாலும் கொஞ்சம் சிரமம் தான். ஆனாலும் அதை சமாளிக்கும் உறுதி இருந்தது..

ஆனால் கணவன் மனைவி இருவருமே சரி, இடங்கள் மாறிவிட்டால் நினைவுகள் மாறும் என்று நம்பினர்தான். இதயங்களில் இருக்கும் நினைவுகள் எங்கே சென்றாலும் மாறாது மறையாது என்று யார் சொல்லி அவர்களுக்கு புரிய வைப்பது?

“ம்மா போதும்மா….” என்று அதோஷஜனின் குரலில் தான் ராதிகா தன் நினைவுகளில் இருந்து களைந்தாள்.

“ம்மா ம்மா…” என்று மகன் அவள் மீது நீரை தெளிக்க,

“ஷ்.. அத்து… நோ.. அம்மா ஆபீஸ் வேற போகணும்…” என்றபடி அவனை தூக்கிக்கொண்டு அறைக்கு வர, அங்கேயோ நிரஞ்சனன் வந்து அமர்ந்திருந்தான்.

இழுத்துக்கட்டி, ஈரம் தெளித்த சேலையும், மகனை தூக்கி வைத்துக்கொண்டு யாரும் இருக்கமாட்டார்கள் என்ற எண்ணத்தில் வந்தவள், அங்க அவன் இருக்க அப்படியே நின்றுவிட்டாள்.

இதெல்லாம் அவர்களுக்குள் சகஜமல்லவே…  

அத்துவோ “ப்பா…” என்றபடி அவளிடம் இருந்து நழுவிக்கொண்டு அப்பாவை நோக்கி ஓடவும், “பார்த்து வா அத்து…” என்ற நிரஞ்சனனின் ஆழ்ந்த குரல் அவளை மீட்டெடுத்தது.

“அத்து பார்த்து…” என்று அவளும் சொல்ல, அதற்குள் மகனோ அப்பாவின் கரங்களில் இருந்தான்.

இதற்குமேல் அவள் என்ன செய்ய அங்கே?? அவனின்  அருகே சென்று மகனுக்கு தலை துவட்டவா?? இல்லை நிரஞ்சனனே மகனை தயார் செய்யட்டும் என்றுவிட்டு வெளியே செல்லவா என்று யோசித்தவள் இரண்டாவது தான் சிறந்தது என்றெண்ணி அத்துவிற்கு வேண்டியதை எல்லாம் எடுத்து கட்டிலின் மீது வைத்துவிட்டு வெளியே சென்றுவிட்டாள்.

அவள் போவதையே நிரஞ்சனன் பார்த்துகொண்டு இருக்க “ப்பா.. ம்மா ஆபிஸ்…” என்றான் மகனோ அம்மா ஆபிஸ் போகிறாள் என்று சொல்வதாய்..

“அப்படியா கண்ணா…” என்று அழுந்த மகனின் கன்னத்தில் முத்தமிட்டவன், ஒருமுறை அவனை இறுக்கி அணைக்க,

“ம்ம்ம்  அப்பா….” என்று திணறினான் சிறுவன்.

அவனின் செய்கையில் நொடிப்பொழுதில் நிரஞ்சனனுக்கு ராதிகாதான்  மனதில் வந்து போனாள். திருமணமான சமயத்தில் அவனின் இறுகிய அணைப்பு நேர்கையில் அவளும் இப்படித்தான் திமிறித் திணறுவாள். இந்த நினைவு வந்ததுமே உறைந்துபோனான் அவன்.

‘என்ன இது… இத்தனை வருசமில்லாம இப்போ என்ன இந்த நினைப்பு…’ என்று அவனது மனமே அவனை கடிய, “ப்பா ப்பா…” என்று அத்துவின் விரல்கள் அவனின் கன்னம் வருட,  

தன்னை தானே உலுக்கி மீட்டவன், லேசாய் சிரித்தபடி “நம்ம ரெடியாவோமா…” என்றபடி மகனை தயார் செய்ய, என்னவோ இந்த நேரம் அவனுக்கு பொக்கிசமாய் இருந்தது.

பொதுவாய் நிரஞ்சனன் அத்தனை எளிதில் அவனின் உணர்வுகளை வெளிக்காட்டுபவன் இல்லை. இப்போது என்றில்லை எப்போதுமே அப்படித்தான். ஒருவேளை அவன் செய்த தவறே அதுதானோ என்னவோ. திருமணம் நடந்த பின்னும் கூட அவன் இப்படியே இருந்ததுதான் ராதிகாவை அவனிடமிருந்து பிரிய செய்ததுவா??

 அதுவும் ஒரு குழந்தை பிறந்த பின்னும் கூட..

ஒவ்வொருவர் வாழ்விலும் பதிலில்லா கேள்விகள் நிறைய நிறைய இருக்கும்.. அது சுமையா மனதினைப் போட்டு அழுத்தினாலும் கூட அதை சுமந்துகொண்டே தான் நாம் நம் நாட்களை நகற்ற வேண்டும்.. வேறு வழியும் இல்லை.. சில பல வலிகள் தாங்கியே அனைவரின் வாழ்வும் சென்றுகொண்டு இருந்தது. 

Advertisement