Advertisement

   அத்தியாயம் – 19

ராதிகா, நிரஞ்சனன் இருவரின் மனதிலும் எதிர்காலம் பற்றிய புதிய கண்ணோட்டமும்,  தங்கள் குடும்ப வாழ்வை பற்றிய புரிதலுடன் கூடிய ஆசையும் மனதில் தோன்ற, ஒருமுறை முயன்று பார்ப்போமே என்றுதான் நினைத்தனர்.

நம் அனைவருக்குமே வாழ்வில் இந்த நிலை வரும். நமக்கு மிக மிக பிடித்த ஏதோ ஒன்றை தவறவிட்டு இருப்போம். அதை சிலகாலம் கழித்து பின்னே நினைக்கையில்,

‘ஒருமுறை முயன்று இருக்கலாமே..’

‘ஒருமுறை நின்று நிதானித்து செய்திருக்கலாமே..’

‘ஒருமுறை விட்டுக்கொடுத்து போயிருக்கலாமே..

‘ஒருமுறை காதுகொடுத்து கேட்டிருக்கலாமே..

‘ஒருமுறை மன்னித்திருக்கலாமே..’

‘ஒருமுறை மனம் விட்டு பேசியிருக்கலாமே..’ என்று,

இப்படி பல ஒருமுறைகள் மனதில் தோன்றும்.  நிரஞ்சனன், ராதிகா இருவருக்கும் அப்படித்தான் தோன்றியது.

அதிலும் ராதிகா, நித்யாவை நிரஞ்சனனோடு சேர்ந்து நின்று தாரைவார்த்துக் கொடுப்பதற்கு சம்மதம் என்று சொன்னதுமே நிரஞ்சனன் மனதில் தோன்றியது இதுதான்.

ஏன் திருமண வாழ்வில் தோற்றவனாய் இருக்கவேண்டும். எப்படியும் இன்னொரு திருமணம் அவன் மனது ஒப்பவில்லை. ஆக மீண்டும் ஏன் ஒருமுறை முயன்று பார்க்கக் கூடாது. என் வாழ்வு என்பது ஏன் என் மனைவி மகனோடு புதியதொரு ஆரம்பமாய் இருந்திடக் கூடாது என்று நினைத்தான்.

ராதிகா மனதினில் என்ன இருந்தாலும் சரி, உடனடி மாற்றம் என்ற ஒன்று இல்லை என்றாலும், முயன்றுதான் பார்ப்போமே என்று தோன்றியது.

ராதிகாவிற்கோ அங்கே, தன் மனதில் இப்படியொரு எண்ணம் வந்த வேளையில், எங்கே சுந்தரி நிரஞ்சனனிடம் சியாமளா பேசியதை சொல்வாரோ என்று நினைத்தாள்.

‘சொன்னா சொல்லிக்கட்டும்.. அதுக்காக.. நான்.. நான் அப்படியெல்லாம் முழுசா விட்டுக்கொடுக்க முடியாது.. நான் இருந்தாலும் இல்லைன்னாலும் எனக்கான இடம் எனக்கு மட்டும் தான். அவர் அத்துவோட அப்பா..’ என்று எண்ணினாள்.

இவ்வெண்ணங்கள் இருந்தாலும், ஒரு தயக்கம் இருவருக்கும் இருக்க, விதியே அவர்களுக்கு சூழல் அமைத்துக் கொடுத்தது.

ராதிகா அவளின் அலுவலகத்தில் இருக்க, மதிய உணவு வேளையில் நித்யா அவளுக்கு அழைத்தாள்.

நித்யாவின் அழைப்பு என்றதுமே வேகமாய் எடுத்தவள் “என்ன நித்யா..” என, அவளையும் மீறி அவளின் குரலில் ஒரு பதற்றம்.

சுந்தரி எதுவும் வீட்டினில் பேசினாரோ இல்லை அந்த சியாமளாவே திரும்பவும் எதையும் கேட்டு வைத்திருக்கிறாரோ என்று.

“அண்ணி.. என்னாச்சு ஏன் டென்சனா இருக்கீங்க..” என்று நித்யா கேட்க,

“இ.. இல்ல.. திடீர்னு உன் போன் வரவும்..” என்று இழுத்தாள்.

“ஒண்ணுமில்ல அண்ணி.. ஒரு ஹெல்ப் அதான் போன் பண்ணேன்..”

“என்னது நித்யா??!!” என்றாள் இவளும் யோசனையாய்.

“அது.. ஈவ்னிங் நீங்க ப்ரீயா.. கொஞ்சம் ஷாப்பிங் பண்ணனும்.. அம்மாக்கு கால் வலின்னு சொல்றாங்க.. அண்ணாவும் இப்போதைக்கு வர முடியாதுன்னு சொல்லிட்டான்..” என,

“ஏன்.. தங்கச்சி கல்யாணம் வருது.. வந்தா என்னவாம் இவங்களுக்கு.. எப்பவும் ஆபிஸ் கட்டிட்டே இருக்கணும்..” என்றாள் ராதிகாவும் கடிந்து.

ஆனால் நித்யாவிற்கு ராதிகாவின் இப்பேச்சு வியப்பாய் இருந்தது. எப்போதும் அவள் இப்படி பேசுபவள் இல்லை. அதிலும் நிரஞ்சனன் பற்றிய பேச்செனில் காது கேளாதது போல இருந்துகொள்வாள், இன்றோ உரிமையாய் பேசுவது போலிருக்க, நிரஞ்சனன் வேறு வீட்டினில் அருகே இருக்க, வேண்டுமென்றே போனை ஸ்பீக்கரில் போட்டாள் நித்யா.

“ஹ.. ஹலோ அண்ணி என்ன சொன்னீங்க.. எனக்கு கேட்கலை…” என்றவள், நிரஞ்சனன் இருப்பதை கவனிக்காதது போல் இருப்பவளாய் பேச்சினை தொடர,

“எல்லாம் உங்க அண்ணனைத்தான் சொன்னேன்… எப்போ பாரு கணக்கு வழக்கு பார்த்து பார்த்து, மூளைக்கு எப்பவுமே நம்பர்ஸ் மட்டும் தான் புரியும்…” என, நித்யாவிற்கு சிரிப்பு வந்துவிட்டது.

நிரஞ்சனனோ எதுவோ பைல் எடுக்க வந்தவன், கிளம்பிக் கொண்டு இருக்கும்போது ராதிகாவின் பேச்சு காதினில் விழ, ‘அட என்னடா நம்மளை பேசுறாங்க..’ என்று பார்த்தான்.

நிரஞ்சனன் கவனிக்கிறான் என்று தெரியவும், நித்யா பேச்சினை வளர்க்க விரும்ப “ம்ம் நீங்க சொல்றதும் சரிதான் அண்ணி..” என்று பாவமாய் சொல்ல,

“சரி சொல்லு.. எப்போ போகணும்.. டைம் சொல்லு.. நான் பெர்மிசன் போட்டுக் கூட வர்றேன்..” என்று ராதிகா சொல்ல,

“ம்ம்.. அத்துவ வேற நீங்க பிக்கப் பண்ண போகணுமே..” என்றாள் நித்யா.

“ஆமா.. அப்பாக்கிட்ட சொல்லிட்டா அவர் போய் கூப்பிட்டுப்பார்..” என்ற ராதிகா, பின் “ஏன்.. உங்கண்ணா கிட்ட சொல்லு, தெரியாத்தனமா போய் பார்க்கத் தெரியுதுல்ல.. கூட்டிட்டு போய் ஹோம் வொர்க் எல்லாம் சொல்லிக் கொடுக்கச் சொல்லு..” என்று அதட்டலாய் ராதிகாவின் தொனி வர,

‘ஆகா.. அண்ணி புல் பார்ம்ல இருக்காங்கப் போலவே…’ என்று நித்யா நினைக்க, நிரஞ்சனன் அவளின் அருகே வந்தவன், ‘என்னதிது..’ என்பதுபோல் பார்த்து நிற்க,

“ஷ்..!!!” என்று நாக்கினை கடித்தாள் நித்யா,

“அப்படியே பேசு…” என்று நிரஞ்சனன் சைகை செய்ய, “அ..!! அண்ணி சொல்றேன்..” என்றாள் நித்யா.

“ம்ம் நீ டைம் சொல்லு..”  என்றதும் ராதிகா சொல்ல, நித்யாவும் நேரம் சொல்ல,

“ஓகே நித்யா, நீ அவர்கிட்ட கன்போர்ம் பண்ணிட்டு சொல்லு.. நான் வர்றேன்..” என்றவளுக்கே தானா இப்படி பேசினோம் என்று இருந்தது. தானாய் ஒரு புன்னகை வந்து ஒட்டிக்கொள்ள,  அவளுக்கே ஒரு புது உற்சாகம் தான் பிறந்தது.

நித்யாவோ அண்ணனின் முகம் பார்க்க “என்ன இது..??!!” என்றான் சிரித்த முகமாகவே.

எங்கே எதுவும் சொல்வானோ என்று பார்க்க, அவனோ சிரித்தபடி கேட்க “இல்ல ஷாப்பிங் போகலாம்னு…” என்று நித்யா இழுக்க,

“அதுக்கேன் என் மண்டை உருளுது..” என்று நிரஞ்சனன் கேட்க,

“நீ வர முடியலைன்னு மட்டும் தான் நான் சொன்னேன்.. உருட்டினது எல்லாம் அண்ணிதான்..” என்றாள் நித்யாவும் சிரித்தபடி.

“ம்ம் ரெண்டுபேரும் சேர்ந்து என்னை புரணி பேசுறீங்க…”

“அடேங்கப்பா..!! இப்படியொரு நினைப்பா உனக்கு.. சரி ஈவ்னிங் அத்துவ கூட்டிட்டு வந்துடு ஹோம் வொர்க் எல்லாம் பண்ண வைப்பியாம்.. நாங்க ஷாப்பிங் போயிட்டு வர்றோம்..”

“தோடா..!! முடியாதுன்னு சொன்னா.. என்ன செய்வீங்களாம்…” என,

“இரு அண்ணிட்ட கேட்டு சொல்றேன்..” என்றவள் திரும்ப ராதிகாவிற்கு அழைத்துப் பேசப் போக,

“ஏய் ஏய் நித்யா நீவேற சும்மா இரு..” என்று அவளின் போனை பிடிங்கியவன், “நீங்க போயிட்டு வாங்க.. நான் அத்துவ கூட்டிட்டு வந்துக்கிறேன்..” என்று சொல்லி கிளம்பியும் போனான்.

பிள்ளைகள் இருவரின் பேச்சும் சத்தமாய் கேட்க, சுந்தரி என்னவென்று பார்க்கக் வந்தவர் “என்ன நித்யா…” என்று கேட்க, அவளும் விபரங்கள் சொல்ல,

“நிஜமாவா..??!!” என்றார் நம்ப முடியாது.

“அட நிஜமாம்மா.. நீவேனா பாரேன்.. கண்டிப்பா என் கல்யாணம் முடியுறக்குள்ள ரெண்டு பேரும் பேசிப்பாங்க…” என,

“நல்லது நடந்தா சந்தோசம் தான் நித்யா.. ராதிகா தாரைவார்த்து கொடுக்க சரின்னு சொன்னதே ஒரு பெரிய மாற்றம் தான..” என்றவர் பின் சியாமளா சொல்லியதை சொல்லி அதற்கு தன் பதில் என்னவென்பதையும் சொல்ல

“ஓ..!! நல்லவேளை.. இது அண்ணன் அண்ணி ரெண்டுபேருக்கும் தெரியாதேம்மா..” என்றாள்.

“ம்ம்ஹும்.. நான் சொல்லிக்கல.. ராதிகாவும் தாரைவார்த்து கொடுக்க சரின்னு சொல்லவும் நானே மாப்பிள்ளையோட அம்மாக்கிட்ட சொல்லிட்டேன் நிரஞ்சனன்  ராதிகா ரெண்டுபேரும் தான் முன்ன நின்னு செய்வாங்கன்னு..” என்றார் சுந்தரி.

“என்னம்மா.. சைலண்ட்டா நிறைய பண்ணிருக்க போல…”

“வேறென்ன செய்ய.. அவங்க முகத்துல அடிச்சமாதிரி பேச முடியுமா.. இவங்க ரெண்டு பேர் கிட்டயும் எதுவோ ஒரு மாற்றம் தெரியுது. அது நல்லாதா இருக்கட்டுமே..” என, நித்யாவிற்குமே சந்தோசமாய் இருந்தது.

சிறிது நேரத்தில் ராதிகாவே திரும்ப அழைத்துக் கேட்க “அண்ணி.. நீங்க வந்து பிக்கப் பண்ணிக்கிறீங்களா.. அண்ணா கார் எடுத்துட்டு போயிட்டான்..” என,

“சரி நித்யா ரெடியா இரு வர்றேன்..” என்றவளும், சொன்னதுபோலவே, மாலை நான்கு மணி போல் வந்திட,

இருவரும் சுந்தரியிடம் சொல்லிக்கொண்டு கிளம்ப, அங்கே நிரஞ்சனன் சந்தோசமாக மகனை அழைக்கச் செல்ல, சுந்தரி ராணிக்கு அழைத்து ராதிகா தாரைவார்த்து கொடுக்கச் சம்மதம் சொன்னதை சொல்லி அவரின் சந்தோஷத்தினை பகிர்ந்துகொள்ள, ராணியால்  நம்பிடவே முடியவில்லை.

“நிஜமாவா சொல்றீங்க..” என,

“ஏன் உங்களுக்குத் தெரியாதா..??!” என்றார் சுந்தரி.

“ம்ம்ஹும்.. ராதிகா எதுவுமே சொல்லலை..” என்ற ராணிக்கு, மனதினில் மகள் வாழ்வை எண்ணி ஒரு புதுவித நிம்மதி பிறந்தது.

“ஓ..!! அப்போ நானும் சொன்னதா காட்டிக்கவேண்டாம்.. அவளா சொல்றப்போ சொல்லட்டும்..” என,

“சரிதான்..” என்ற ராணி, இதனை தன் கணவருக்குச் சொல்ல, “ம்ம் இப்போதான் எனக்கும் போன் பண்ணா.. நித்யாவோட ஷாப்பிங் போறாளாம்.. அத்துவ அவங்கப்பா வந்து பிக்கப் பண்ணிப்பார்னு சொன்னா..” என்று அவரும் சொல்ல,

“என்னங்க இந்த பொண்ணு இப்படி திடீர்னு மாறிட்டா..” என்று ராணி கேட்க,

“ம்ம்.. ரெண்டு பேருக்கும் நல்ல காலம் வந்திருக்குன்னு நினைச்சுக்கோ..” என்றுவிட்டு போனார் மணிவண்ணன்.

அங்கே ராதிகாவும், நித்யாவும் கடை கடையாய் ஏறி இறங்க, நேரம் போனதே தெரியவில்லை. நித்யாவிற்கு ஒருவித சந்தோசம் என்றால், ராதிகாவிற்கு மனதில் ஏதேதோ உற்சாகங்கள். அது அவளின் முகத்தினிலும் பேச்சினிலும் நன்கு தெரிய,

நித்யாவே வாங்க நினைக்காதவைகளை கூட “இது பாரு நித்யா.. இது உனக்கு நல்லாருக்கும்.. இந்த மாடல் வாங்கேன்..” என்று நிறைய நிறைய வாங்க வைத்தாள் ராதிகா.

நித்யாவிற்கோ, ராதிகாவின் இந்த திடீர் மாற்றம் சந்தோசமாய் இருந்தாலும், எல்லாம் நல்லபடியாய் நடந்திடவேண்டும் என்றும் இருந்தது. நேரம் செல்வதே இருவருக்கும் தெரியவில்லை, ஆனால் வாங்கிட நினைத்ததில் பாதி கூட வாங்கிடவில்லை.

“உன் லிஸ்ட் ஓவரா…” என்று ராதிகா கேட்க,

“இல்லண்ணி.. பாதி கூட முடியலை..” என்றாள் நித்யா..

“ஆகா..!! சரிவிடு இன்னொரு நாள் பண்ணலாம்.. கல்யாணம்னா இப்படி அடிக்கடி ஷாப்பிங் போகணும்.. அப்போதான் ஜாலியா இருக்கும்.. வீக்கென்ட் போலாம்..” என்று ராதிகா அவளே அடுத்து திட்டங்கள் போட, நித்யா தலை மட்டுமே ஆட்ட, நிரஞ்சனன் அழைத்துவிட்டான் நித்யாவிற்கு.

“எங்க இருக்கீங்க..” என்று கேட்டு.

“நாங்களா..” என்றவள், இருக்கும் இடம் சொல்ல,

“சரி பத்து நிமிஷம் இருங்க.. வந்திடறேன்.. டின்னர் வெளிய போயிக்கலாம்..” என, நித்யாவிற்கு தலை சுற்றியது என்றுதான் சொல்லவேண்டும் அண்ணனின் வார்த்தைகளை கேட்டு.

“கிளம்பலாமா.. லேட்டாச்சு.. அத்து வெய்ட் பண்ணிட்டு இருப்பான்..” என்றபடி ராதிகா அவளின் காரினைக் கிளப்ப,

“அண்ணி.. அண்ணா டின்னர் போலாம்னு சொல்றான்…” என,

“ஹா..!! என்னது..” என்றாள் ராதிகா வேகமாய்.

எங்கே அவளுக்கு கோபம் வந்துவிட்டதோ என்று நித்யா பார்க்க “இனி அவங்க வந்து ஹோட்டல் போய் லேட்டாகுமே நித்யா.. எனக்கு வீட்ல போய் கம்ப்ளீட் பண்ற வொர்க்ஸ் வேற இருக்கு..” என,

நித்யா வேறு வழியே இல்லாது நிரஞ்சனனுக்கு அழைத்து சொல்ல “ஒரு நாள் ஒருமணி நேரம் லேட்டாச்சுன்னா உலகம் ஸ்தம்பிச்சு போயிடாது.. வெய்ட் பண்ணுங்க வந்துட்டு இருக்கோம்..” என்று கோபமாய் சொல்வது போல் சொல்லி வைத்துவிட்டான்.

நித்யா அப்படியே அவனின் வார்த்தைகளை ராதிகாவிடம் சொல்ல, எதோ ஒருவகை பூரிப்பு அவளுள்ளே. புதிதாய் எதையோ உணர்வது போலிருந்தது. அவளுக்கும் ஆசையாய் தான் இருந்தது. எடுத்ததுமே சரியென்று சொல்ல தயக்கமாய் இருக்கவும் தான் அப்படிச் சொன்னாள்.

நிரஞ்சனன் இப்போது பிடிவாதமாய் சொல்ல, சந்தோசமாய் இருந்தது.

“ம்ம் சரி.. எனக்கென்ன.. அத்து ஏதாவது மக்கர் பண்ணா உங்கண்ணா தான் சமாளிக்கணும் அவனை..” என்றவள் “எந்த ஹோட்டல் கேளு.. நம்ம அங்க போய் வெய்ட் பண்ணலாம்..” என,

நித்யாவும் கேட்டவள், ராதிகாவிடம் சொல்ல, இருவரும் அங்கே சென்று காத்திருக்க, நேரம் தான் போனது.   

‘என்னடா நடக்குது இங்க… இவங்க ரெண்டுபேருக்கும் நடுவில நான் மாட்டிக்கிட்டேனா..’ என்று நினைத்தாள் நித்யா..

நிஜம் அதுதானே..

பத்து நிமிடங்கள் என்றவன், இருபது நிமிடம் கழித்தே வர, “இதான் பத்து நிமிசமா..” என்று ராதிகா முணுமுணுக்க,

அதையே நித்யாவும் கேட்க “ட்ராபிக்ல வரவேணாமா..” என்ற நிரஞ்சனனின் பதில் ராதிகாவிடம் சென்று பின் நித்யாவை அடைந்தது.

அம்மாவைப் பார்த்ததும் அத்து “ம்மா…” என்று அவளருகே செல்ல, “என்னடா ஹோம் வொர்க் எல்லாம் முடிச்சியா..” என்று கேட்க, சிறுவனோ வேகமாய் தலையை உருட்டினான்.

“நீ தலையை ஆட்டுற விதமே சரியில்லையே… வீட்டுக்கு வா செக் பண்ணுவேன்..” என்றபடி ராதிகா நடக்க, அப்பாவும் மகனும் கள்ளத்தனமாய் புன்னகைத்துக் கொண்டார்கள்.

அதோஷஜனிற்கு ஏக குஷியாகிப் போனது. இப்படி அப்பா அம்மாவோடு வெளியே வந்திருப்பது. ஒரு இடத்தில் அவனை அமர வைக்க முடியவில்லை. அப்படியிருக்க சாப்பிட வைக்க மட்டுமே எப்படி முடியும். நிரஞ்சனனுக்கோ ராதிகா போல அதட்டவோ, கண்டிக்கவோ இன்னமும் மனது வரவில்லை. கூடவே இருந்தால் தான் அது வருமோ என்னவோ..

“அத்து.. அப்பா சொல்றதை கேளுடா..” என்று அவன் கெஞ்சிக்கொண்டு இருக்க, ராதிகா இதனை எல்லாம் உள்ளே ரசித்தாலும்,

“நான் சொன்னேன்ல..” என்று நித்யாவிடம் சொல்ல, “இவன் இவ்வளோ வாலுத்தனம் செய்வானா அண்ணி..” என்றாள் அவள்.

“ம்ம்.. ரொம்ப எக்சைட் ஆனா இப்படித்தான்..” என்றவள், நிரஞ்சனன் தட்டினைப் பார்த்தாள், இன்னமும் இரண்டு வாய் உணவு கூட முழுதாய் உள்ளே செல்லவில்லை.

மகனோடு பின்னே செல்ல, அவனை இழுத்துக்கொண்டு வந்து அமர்த்தி வைக்கவென்று நிரஞ்சனன் அல்லாடிக்கொண்டு இருக்க, ஒருவழியாய் அத்து வந்து அமரவும்,

“அத்து.. என்ன பழக்கம் இது..” என்றாள் ராதிகா கண்களை உருட்டி.

“ம்மா..!!” என்று அவன் அம்மாவின் முகம் பார்க்க,

“குட் பாயா உக்காந்து சாப்பிடனும்.. இல்லை..” என்று விரல் நீட்டி மிரட்ட, அவனோ அப்பா இருக்கும் தைரியத்தில் “ம்ம்ம்…” என்று அழுவது போல் உதட்டினை பிதுக்கினான்.

மகன் அழுகிறான் என்றதும் நிரஞ்சனன் “ம்ம்ச்.. சின்ன பையன் அப்படித்தான் இருப்பான்…” என்று பொதுவாய் சொல்வது போல் சொல்லி,

“நீ வாடா அப்பா மடியில உக்காந்துக்கோ..” என்று மகனையும் உட்கார வைத்து, ஒரு கையால் இறுக அவனைப் பிடித்தபடி, மறுகையால் நிரஞ்சனன் உண்ண, அவன் இரண்டு வாய் ஊட்டி விட்டு உண்ணாதவன், ராதிகா அவளிடத்தில் அமர்ந்தபடி ஊட்டிவிடவும் அழகாய் உண்டான்.

“ம்ம்.. எல்லாம் நடிப்பு உனக்கு..” என்று செல்லமாய் ராதிகா அதட்டியபடி உண்ண, நித்யாவிற்கு நிஜமாவே இக்காட்சிகளைப் பார்த்து மனது நிறைந்து போனது.

அண்ணன் தன் மகனோடு அமர்ந்திருக்க, அண்ணி அருகே அமர்ந்து சிறுவனுக்கு ஊட்ட, உண்டபடி இருந்தாலும் இதனை எல்லாம் பார்த்துகொண்டு தான் இருந்தாள். அவளுக்கே அப்படியெனில் நிரஞ்சனன் ராதிகாவிற்கு கேட்கவும் வேண்டுமா என்ன..??!!

எப்போதுமே நிரஞ்சனன் வேகமாய் உண்டு முடித்துவிடுவான், இன்றோ மெதுவாகவே உண்ண, ராதிகா தானும் உண்டு மகனுக்கும் ஊட்டி முடிக்க நேரம் பிடித்தது.

நித்யா உண்டு முடித்துவிட “அண்ணி நான் கூட ஊட்டுறேன்.. நீங்க ரெண்டுபேரும் சாப்பிடுங்க..” என,

அத்துவோ வேகமாய் “ம்ம்ஹும்…” என,

“இருடா ஒருநாள் உன்னை அமுக்கி பிடிச்சு ஊட்டி விடறேன் பாரு..” என்று நித்யாவும் சொல்ல,

பேச்சோடும், சிரிப்போடும் அந்த உணவு வேளை நகர, நிரஞ்சனன் ராதிகா இருவரும் நேருக்கு நேர் பேசிக்கொண்டாலும் முன்பிருந்த முகத்திருப்பல்களும், விலகல் தன்மையும் இப்போது இருவரிடமுமே சுத்தமாய் இல்லை. அதற்காக அப்படியே ஈஷிக்கொள்ளவும் இல்லை. இன்னமும் அந்த தயக்கம் இருந்தது இருவருக்கும்.

ஒருவழியாய் அனைவரும் கிளம்ப, ராதிகா மகனைத் தூக்கிக்கொண்டாள், நித்யா அவளின் அண்ணன் அருகே நிற்க,

“இன்னொரு நாள் ரிலாக்ஸா போலாம் நித்யா.. வீகென்ட்ல கூட..” என,

“அப்போ இவ்வளோ நேரம் என்ன பண்ணீங்க..” என்றான் நிரஞ்சனன்.

இருவரின் பேச்சுமே நித்யாவிடம் தான் இருக்க, அவளோ “பாதிகூட இன்னமும் முடிக்கலன்னு நினைக்கிறேண்ணா..” என,

“போச்சுடா.. இப்படி இன்னும் எத்தனை நாளைக்கு சுத்துவீங்களாம்..” என்று அவனும் கேட்க,

“நம்மத்தானே நித்யா சுத்தபோறோம்… நீ ப்ரீயா இருக்கப்போ சொல்லு, இவன் இப்போவே தூங்க ஆரம்பிச்சுட்டான் போய் தூங்க வைக்கணும்.. பை…” என்று அத்துவின் ஸ்கூல் பேக் எல்லாம் நிரஞ்சனன் காரில் இருந்து எடுத்துக்கொண்டவள், மகனோடு வீடு செல்ல, நித்யா அண்ணனோடு வீடு சென்றாள்.

அனைவருக்குமே மனதில் ஒரு நிறைவு இருக்க, நிரஞ்சனன் ராதிகாவிற்கு மனதினில் ஒரு பரவசமும் இருந்தது.

வீட்டிற்குச் சென்றதுமே, ராதிகா அப்பா அம்மாவின் முகத்தினை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை. தன்னைப்போல் ஒரு கள்ளத்தனம் வந்து ஒட்டிக்கொண்டது போலிருந்தது அவளுக்கு.

“சாப்பிடனும்ல ராதிகா..” என்று ராணி சொல்ல,

“ம்ம் இல்லம்மா.. ஹோட்டல்ல சாப்பிட்டோம்.. தூக்கமா வருது..” என,

“அத்து பால் குடிக்கனும்ல..” என்றபடி ராணி வர, அத்து நல்ல உறக்கத்தில் இருந்தான்.

“இல்லம்மா.. அவங்கப்பா வாங்கி குடிக்க வச்சார்..” என்று பேச்சோடு ராதிகா சொல்லிட, ‘அச்சோ..!!’ என்று அம்மாவின் முகம் பார்க்க,

ராணிக்கு என்ன புரிந்ததுவோ “ஓ..!! சரி சரி..” என்றவர் ஒன்றும் சொல்லாமல் செல்ல, ராதிகாவிற்கு தான் ஒருமாதிரி ஆகிப்போனது.

“ம்மா..” என்று பின்னோடு வந்தவள் “அது… நானும் நித்யாவும் தான் ஷாப்பிங் போனோம்.. அத்துவ விட வந்தவங்க, அப்படியே ஹோட்டல் போலாம்னு சொல்லவும்..” என்று விளக்க,

“நான் எதுவுமே கேட்கலையே.. நீ சந்தோசமா இருந்தா சரிதான்.. போ.. போய் தூங்கு..” என்றுவிட்டுப் போக, முறுவலித்தபடியே ராதிகா அறைக்கு வந்தவள், மகனின் நோட்டுக்களை எடுத்துப் பார்க்க, எல்லா வீட்டுப் பாடமும் முடிக்கப்பட்டு இருந்தது.

என்ன அதெல்லாம் அத்து எழுதவில்லை. அதோஷஜன் எழுதியது போல் நிரஞ்சனன் எழுதி வைத்திருந்தான்.

அந்த வித்தியாசம் கூடவா ராதிகாவிற்குத் தெரியாது. பார்த்து பார்த்து சிரித்துக்கொண்டு இருந்தாள். என்னவோ அப்படியொரு சிரிப்பு வந்தது அவளுக்கு..

‘அப்பாவும் புள்ளையும் சேர்ந்து பிராடுத்தனம் பண்ணிட்டு ஒன்னும் தெரியாதது போல என்ன பேச்சு..’ என்று முணுமுணுப்போடு இன்னமும் சிரித்தாள். 

Advertisement