Advertisement

அத்தியாயம் – 18

ஆகிற்று முழுதாய் இரண்டரை நாட்கள் ராதிகா கண்விழித்துப் பார்க்க. மருத்துவமனையில் தான் மொத்த குடும்பமும் இருந்தது. அவள் கண் விழிக்கும் வரைக்கும் யாராலும் நிம்மதியாய் இருந்திட முடியவில்லை. எப்படி இருக்க முடியும்..??

நிரஞ்சனன் ஆடித்தான் போனான்..

சுந்தரி, ராதிகாவை சென்று எழுப்ப, அவளோ அசையாது இருக்க,  என்னவோ என்று பதறியவர், உடனே மகனுக்குத்தான் அழைத்தார். யாரின் நல்ல நேரமோ  நிரஞ்சனன் வீட்டின் அருகில் வந்துகொண்டு இருந்தான்.

‘அவளை அடித்தோமே..’ என்று மனது கேளாமல் தான் வந்துகொண்டு இருந்தான்..

“சீக்கிரம் வா நிரஞ்சன்.. ராதி.. ராதிகா எழுந்துக்கவே இல்லை..” என்று சுந்தரி சொல்கையில் வீட்டின் வாசலில் தான் இருந்தான்.

இரண்டே நொடிகளில் அறைக்குச் சென்றவன், அவளை தொட்டுப் பார்க்க, எதுவோ சரியில்லை எனப்பட்டது. நின்று நிதானித்து என்ன என்று பரிசோதனை செய்திட எல்லாம் அவனுக்குத் தோன்றவில்லை.

“ம்மா.. நீங்க அத்துவ வச்சிட்டு இருங்க…” என்றவன், ராதிகாவை தூக்கிக்கொண்டு காருக்கு விரைந்தவன் அவளை மருத்துவமனையில் கொண்டுபோய் சேர்த்த பின்னர் தான் ஒருநிலைக்கு வந்தான்.

தெரிந்த மருத்துவர் என்பதால் வேறெதுவும் கேள்விகள் வரவில்லை, இல்லை அதுவேறு பிரச்சனைகளை கொண்டு வந்திருக்கும்.

சுந்தரியோ அவரின் அறைக்குச் சென்று பார்த்தவருக்கு, அப்போதுதான் புரிந்தது ராதிகா எதுவோ உட்கொண்டு இருக்கிறாள் என்று. கீழே சில மாத்திரைகளும் சிந்தியிருக்க, ‘ஐயோ..’ என்று உள்ளம் பதை பதைத்தது..

வேகமாய் மகனுக்கு அழைத்தவர் “ரா… ராதிகா என்னோட தூக்க மாத்திரை சாப்பிட்டிருக்காடா..” என, நிரஞ்சனனின் உணர்வுகளை கேட்கவும் வேண்டுமா என்ன??!!

அடுத்தடுத்து எல்லாம் நடக்க, ராணியும், மணிவண்ணனும் வந்தவர்கள் யாரும் இவர்களோடு ஒருவார்த்தை பேசவில்லை. நித்யா கல்லூரி விட்டு வரவுமே சுந்தரியும் பேரனைத் தூக்கிக்கொண்டு  அவளோடு மருத்துவமனை வந்திட, யாரின் முகத்திலும் உயிர்ப்பில்லை.

சுந்தரி, அத்துவை தூக்கிக்கொண்டு வரவுமே, ராணி அவனை வாங்கி வைத்துக்கொள்ள அனைவருக்குமே சுருக்கென்று தான் ஆனது. இருந்தாலும் அந்த நேரத்தில் யார் என்ன சொல்ல முடியும்.

நிரஞ்சனன் அப்படியே சிலையென அமர்ந்திருந்தான்.

ஏற்கனவே ஒரு உயிரை இழந்திருந்தார்கள். இனி இன்னும் ஒன்று என்றால், அதைப் பற்றி யோசிக்கக் கூட அங்கே யாருக்கும் திராணியில்லை.

சுந்தரியோ “நீங்க கூப்பிட்டப்போவே உங்களோட அனுப்பியிருக்கணும்..” என்று ராணியிடம் சொல்ல,

“ராதிகா கண் முழிக்கட்டும்.. நாங்க கூட்டிட்டு போயிடுறோம்..” என்றார் ராணி ஒரு ஒட்டாத குரலில்.

நித்யாவோ கல்லூரிக்கு விடுமுறை சொல்லிவிட்டு, அவள் அத்துவோடு வீட்டினில் இருக்க, இந்த இரண்டு நாட்களும் பெரியவர்கள் அனைவருமே அங்கே மருத்துவமனையில் தான் இருந்தனர்.

“ம்மா நீங்க போங்க போய் நித்யாவோட இருங்க. ஒருத்தியா அத்துவ ஹேண்டில் பண்ணிட்டிருப்பா..” என, அப்போது தான் அவனுக்கு புத்தியில் முள் தைத்தது போலிருந்தது.

ராதிகாவும் இதனைத்தானே செய்தாள். அவளாய் தானே அத்துவைப் பார்த்துக்கொண்டு இருந்தாள் என்று.  இப்போது இதை யோசித்து என்ன பிரயோஜனம்..??!!

மருத்துவர் வந்து கண் விழித்தாள் மட்டுமே எதுவும் சொல்ல முடியும் என்று சொல்லிட, மூன்றாவது நாள் மதியம் போலவே கண் விழித்தாள் ராதிகா.

“அவங்க ரெஸ்ட்ல இருக்கணும்.. யாரும் எதுவும் பேசிக்கவேணாம்.. ஜஸ்ட் பார்த்துட்டு மட்டும் வாங்க..” என்று நர்ஸ் சொல்ல, வீட்டினர் அனைவருமே அவளை எட்ட நின்றே பார்க்க, மறுநாள் இரவுபோல் தான் அவளால் எழுந்து அமர்ந்து பேசிடவே முடிந்தது.

அதுவும் கூட தொடர்ச்சியாய் இல்லை.  அவளைச் சுற்றி அனைவரும் இருக்க, அவளின் பார்வை அவளின் மகனின் மீதுதான் நிலைத்து இருந்தது.

ராணி அவளின் அருகே சென்று “என்ன ராதிகா.. எதுன்னாலும் நாங்க இருக்கோமே எங்கக்கிட்ட சொல்றதுக்கு என்ன??! இப்படி பண்ண பார்த்தியே..” என்று அழ, அவளின் பார்வை நிரஞ்சனனைத் தொட்டது.

இருந்தும் அவள் யாரோடும் பேசிடவில்லை. மருத்துவர் வந்து பார்த்தவரும் ‘இப்போதைக்கு அவங்கக்கிட்டே எதுவும் பேசிக்கவேணாம். அவங்களே கொஞ்சம் நிதானமா யோசிக்கட்டும்.. ப்ரீயா விடுங்க..’ என யாரும் எதுவும் கேட்கவில்லை.

அடுத்த இரண்டு நாட்களும் அனைவரும் மாறி மாறி அவளோடு இருந்தாலும், ஒன்று உறங்கினாள், கொடுப்பதை உண்டாள், பின் யோசனையாய் சாய்ந்து அமர்ந்துகொண்டு இருப்பாள். மகன் வந்தால் மட்டும் அவளின் கண்கள் கலங்கத் தொடங்கியது..

அம்மாவைப் பார்த்ததும் அவளிடம் போகவேண்டும் என்று அத்து அடம் செய்வான், அதைக் காண்கையில் எல்லாம் ராதிகாவின் முகம் வேதனையில் சுருங்கும்.    

நிரஞ்சனனுக்கோ ராதிகாவின் இச்செயல் பெருத்த அடி. அதைவிட அவளின் அப்பா அம்மா இதுவரைக்கும் அவர்களை ஒருவார்த்தை கேட்கவில்லை. சண்டையிடவில்லை. ஆனால் சட்டென்று ஒரு விலகல் அவர்களிடம் தெரிந்தது.

அவளருகே சென்று பேசிட உள்ளம் துடித்தாலும், எங்கே எதையாவது தெரிந்தோ தெரியாமலோ அவளை நோகடித்து விடுவோமோ என்றே தள்ளி நின்றான்.

அன்றைய தினம் என்னவோ ராதிகா ஓரிரு வார்த்தைகள் ராணியோடு பேசிக்கொள்ள, நிரஞ்சனன் அவளை நோக்கி ஒரு அடி எடுத்து வைக்கப் போக,  அவளோ “ப்பா…” என்றாள் மெதுவாய்.

“என்னடா..??!” என்று மணிவண்ணன் பரிவாய் கேட்க, “நா.. நான் ஒரு முடிவு பண்ணிருக்கேன் ப்பா…” என்றாள்.

இதனை சொல்லும்போதே அவளுக்கு மூச்சு வாங்க, “நீ.. நீ கொஞ்சம் ரெஸ்ட் எடேன் ராதிகா..” என்றார் சுந்தரி.

நிரஞ்சனனோ, ராதிகாவையே பார்த்தபடி இருக்க, ‘இல்லை…’ என்று சுந்தரியை பார்த்து தலையை ஆட்டியவள் “எ.. எனக்கு டைவர்ஸ் வேணும்..” என்றாள் ராதிகா நிரஞ்சனனைப் பார்த்து.

அடுத்த நொடி அங்கே ஒரு பேரமைதி. அவள் சொன்ன வார்த்தைகள் கொடுத்த தாக்கத்தின் அமைதி.

நிரஞ்சனன் திகைத்துப் போய் ராதிகாவைப் பார்க்க, மற்றவர்களோ ‘அச்சோ என்னதிது…’ என்று பார்க்க,

ராணிதான் “ராதிகா.. என்னம்மா…” என்றார் பதறி.

“ம்மா.. ப்ளீஸ்…” என்றவள் “அத்துக்காகவாவது நான் இருக்கணும்னு நினைச்சீங்கன்னா எனக்கு டைவர்ஸ் வேணும்…” என்றாள் திரும்ப நிரஞ்சனனிடம்.

மணிவண்ணன் “ராதிகா.. இந்த டைம்ல எந்த முடிவும் எடுக்கக் கூடாதுடா…” என,

“நீங்க என்ன சொல்றீங்க…” என்றாள் நிரஞ்சனனைப் பார்த்து.

அவள் இதுபற்றி வேறு யாரிடமும் கேட்கவில்லை. அவனிடம் தவிற..

நிரஞ்சனன் என்ன பதில் சொல்வான்..??!! மனைவியின் முகத்தினைப் அப்படியே பார்த்து நிற்க, அவனுள் அப்படியொரு சூறாவளி அடித்துக்கொண்டு இருந்தது.

‘டைவர்ஸ்…’

எத்தனை பெரிய வார்த்தை இது….

ஆனால் அதனைக் கேட்கிறாள்..

இதுநாள் வரைக்கும் எதையும் கேட்காதவள் இன்று இதனைக் கேட்கிறாள்.

நிரஞ்சனன் கண்களில் நீர் கட்டியதோ என்னவோ… பதில் சொல்லிட முடியாது அவன் திணற,

ராணியோ “ராதிகா.. இப்போ இந்த பேச்செல்லாம் வேண்டாம்.. நீ முதல்ல நார்மல் ஆகு.. டைவர்ஸ் அது இதுன்னு என்ன இதெல்லாம்..” என,

“அப்போ.. நெக்ஸ்ட் டைம் என்னை காப்பாத்த நினைக்காதீங்க..” என்றாள் அப்போதும் தன் பார்வையை நிரஞ்சனன் மீது வைத்து.

இதனைக் கேட்ட அவனுக்கோ இருதயம் எப்படியானதொரு பதற்றம் கண்டிருக்கும் என்று அவன் மட்டுமே அறிவான்.

அவள் வாழவேண்டும் எனில் அவனோடு அவள் வாழ முடியாது.. இதைத்தானே சொல்கிறாள்.. சரி இருக்கட்டும்.. இருந்துவிட்டு போகட்டும்.. அதற்காக அவளே இல்லாது போனால், அதைப் பற்றி சிந்திப்பது கூட அவனால் இயலவில்லை..

கண்களை இறுக மூடியவன் “நோ…” என்று தலையை ஆட்ட, அவளோ வெறித்துப் பார்த்துக்கொண்டு தான் இருந்தாள்.

“இப்போ என்ன.. டைவர்ஸ் வேணும்.. அதானே.. சரி.. கொடுத்திடுறேன்.. நீ.. நீ இப்படி பண்ணமாட்டேன்னு ப்ராமிஸ் பண்ணு..” என்றான் நிரஞ்சனன்.

அவனுக்கு அந்த நேரத்தில் வேறு எந்த முடிவு எடுப்பது என்று சத்தியமா புரியவில்லை, ஒன்றைத் தவிர, மற்றுமொரு இழப்பை அவர்கள் யாராலும் தாங்கிக்கொள்ள முடியாது. ஆக இது எத்தனையோ பரவாயில்லை என்று தோன்ற நிரஞ்சனன் சரி என்றுவிட்டான்..

“ப்ராமிஸ்…” என்று ராதிகாவின் உதடுகள் உச்சரிக்க,

அடுத்து அடுத்து எல்லாம் வேக வேகமாய் நடந்தது. தெரிந்த வக்கீல் வைத்து எத்தனை வேகத்தில் விவாகரத்து வாங்கிட முடியுமோ அத்தனைக்கும் முன் நின்று நிரஞ்சனனே ஏற்பாடுகள் செய்தான்.

யார் யாருக்கு எங்கெங்கே எப்படி பணம் கொடுக்கவேண்டுமோ எல்லாம் கொடுத்தான்.

வீட்டில் இருந்த பெரியவர்களோ ‘பேசிப் பார்க்கலாம்.. சிறிது நாள் போகட்டும்..’ என,

நிரஞ்சனனோ “இனி யாரும் இதைப் பற்றி அவளோடு பேசிடவேணாம்..” என்று திண்ணமாய் சொல்லிட,

எண்ணி அடுத்த இரண்டே மாதங்களில் எல்லாம் முடிந்தது. அவர்களின் விவாகம் ரத்து ஆனது.

அதை இன்று நினைக்கையில், அதுவும் ஆண்டுகள் கடந்து இன்று நினைத்துப் பார்க்கையில் இருவரின் மனதுமே கனத்தது.. காந்தியது.. கதறியது..

ஆம்..!! இருவருமே இதனைத்தான் சிந்தித்துக்கொண்டு இருந்தனர். அவரவர் வீட்டினில். ராதிகா மகனின் அருகே படுத்தபடி, நிரஞ்சனன் அவனின் அறையில் ஜன்னல் பக்கம் நின்று வெளியே வெறித்தபடி.

ராதிகாவின் கண்களில் கண்ணீர் வழிந்தோடிக்கொண்டு இருக்க, திரும்பி அதோஷஜனின் முகத்தினைப் பார்த்தாள். சிறுவன் உறங்குகையில் கூட புன்னகைத்து உறங்குவதாய் இருந்தது.

மெதுவாய் அவனின் கன்னம் வருடினாள்.

அன்றைய தினம் எல்லாம் அவனின் அப்பாவைக் காண வேண்டும் என்று வெகுவாய் அடம் பிடித்திருந்தான்.

‘உனக்கு உன் புருஷன் வேணாம்னு சொல்லிட்ட.. ஆனா உன் பையனுக்கு அவன் அப்பா வேணாம்னு நீயே சொல்லிட முடியாது..’ என்று ராணி அன்றும் சொல்ல, அதன்பின்னே தான் இந்த கடந்த கால நினைவுகள் ராதிகாவிற்கு.

உண்மைதானே… அத்து என்ன செய்வான்..

அன்று கேட்டாள் ‘அவனுக்கு பசிச்சா நீங்க பீட் பண்ணுவீங்களா..??!!’ என்று..

இன்று அதே கேள்வி அவள்பக்கம் திரும்பி நின்றது.

‘அவனுக்கு அப்பா வேண்டுமெனில், நீ நிரஞ்சனனாக உருமாறிக்கொள்வாயா..??!!’ என்று.

ஒரு குழந்தைக்கு அப்பா அம்மா இரு உறவுமே அதிமுக்கியம் தானே..

அப்பா.. அப்பா என்று அத்துவின் மனது ஏங்குவது போல்தானே அன்று நிரஞ்சனன் மனதும் அவன் தந்தையை இழந்து துடித்திருக்கும்.. அத்தனை நேரம் அருகே இருந்தவர் திடீரென்று உயிரற்று போனால் அவனின் அப்போதைய நிலையை இன்று யோசித்தாள்.

அன்றும் யோசித்தாள் தான், ஆனால் இன்று அவன் இடத்தினில் தன்னை நிறுத்தி யோசித்தாள்.

அவசரப்பட்டுவிட்டோமோ என்று தோன்றியது. அன்று நிரஞ்சனன் நடந்துகொண்டதை எல்லாம் அவள் நியாயப் படுத்தவில்லை, ஆனால் சிறிது அவகாசம் கொடுத்திருக்கலாமோ என்று தோன்றியது. அவன் விலகிப் போனாலும் பிடித்து வைத்து பேசியிருக்க வேண்டுமோ என்றிருந்தது அவளுக்கு.

‘எனக்கு இதுதான் வேணும்…’ என்று அவள் அவனிடம் சொல்லியிருந்தால், சண்டை போட்டிருந்தால், பிடிவாதம் செய்திருந்தால் ஒருவேளை அவனுக்கும் புரிந்திருக்குமோ..

இருக்கலாம்…

ஆனால் இவளும் தன்னை தனக்குள்ளே இறுக்கிக்கொண்டாளே..

முதல் முறையாக ராதிகாவின் மனம்,  என் கணவன், என் மகன், என் குடும்பம் என்று யோசிக்கத் தொடங்கியது.

அங்கே நிரஞ்சனன் கூட யோசனையில் தான் இருந்தான்.. கடந்த கால நிகழ்வுகள் அனைத்தும் மனதினில் வந்துபோக, தன்மீதே அத்தனை ஆத்திரம் அவனுள்.

“என்னடா பண்ணிருக்க நீ.. மனுஷன் மாதிரியா நடந்திருக்க.. எவ்வளோ செல்பிஷ் நீ..” என்று சொல்லிக்கொண்டவன், சுவற்றின் மீது ஆத்திரம் தாளாது கைகளால் குத்த, வலி வந்ததுதான் மிச்சம்..

‘கொஞ்சமாவது அவ இடத்துல இருந்து யோசிச்சுப் பார்த்தியா நீ…’ என்று நிறைய முறை சொல்லிக்கொண்டான்.

இல்லைதானே..

அப்படி அவன் சிந்திக்கவில்லை தானே. அந்த பிரசவித்து பிள்ளை தூக்கி வருகையில், அவளை தொந்திரவு செய்யக்கூடாது என்று விலகி நின்றான். பின் அப்பாவின் இறப்பு.. பேரதிர்ச்சி.. அனைத்தையும் மறக்கச் செய்திட அதிர்ச்சி.

குடும்பத்தின் சூழலும் அம்மா மற்றும் தங்கையின் மனதை தேற்றுவதும் தான் அவனுக்குப் பிரதானமாய் இருந்தது.  மகனாய், அண்ணனாய் அங்கே நின்றானே தவிர கணவனாய் அவன் நின்றானா என்றால், இப்போது நிரஞ்சனன் இல்லை என்றுதான் சொல்வான்.

அதிலும் இப்போது நித்யாவை காண்கிறான் தானே.. திருமணம் நெருங்க நெருங்க அவளிடம்தான் எத்தனை மாற்றங்கள். முகத்தினில் எப்போதுமே உறைந்திருக்கும் புன்னகையும், கண்களில் ஒருவித கனவுகளுமாய் ஏதாவது ஒரு பாடலை முனுமுனுப்பு செய்துகொண்டு சுற்றி வருகிறாள். இப்படியானதொரு மன நிலையில் தானே ராதிகாவும் திருமண எண்ணங்களில் இருந்திருப்பாள்.

இன்று தான் எப்படி நித்யா அவள் கணவனோடு சந்தோசமாய் வாழ்ந்திட வேண்டும் என்று எண்ணுகிறமோ அதுபோலத்தானே அன்று அவளின் பெற்றோரும் நினைத்திருப்பார்.

‘அண்ணா… இது அரவிந்த் வாங்கிக்கொடுத்த கிப்ட்…’ என்று நித்யா ஒரு மோதிரம் காட்ட, அதை காட்டுகையில் தான் அவளின் முகத்தினில் எப்படியானதொரு பெருமிதம்.

இதெல்லாம் தானே அன்று ராதிகாவின் உணர்வுகளாய், எதிர்பார்ப்பாய், ஆசையாய் இருந்திருக்கும்.

எப்படி அதனை எல்லாம் யோசிக்காது போனான்..

‘இதெல்லாம் ஏன் நிரஞ்சன் நீ யோசிக்கல..’ என்று தனக்கு தானே கேட்டவனுக்கு பெரும் குற்ற உணர்வு..

‘அவளுக்கு எவ்வளோ டிப்ரஸன் ஆகிருந்தா ஸ்லீபிங் பிள்ஸ் சாப்பிட்டு இருப்பா…’ என்று அன்று நடந்தவைக்கு இன்று மேலும் வருந்தினான்.

இருவருமே நிறைய யோசித்தார்கள், மற்றவர் நிலையில் இருந்து. யோசிக்க யோசிக்க, அவரவர் பக்கம் இருக்கும் தவறுகளும், புரிதலின்மையும் புரிந்தது.  எத்தனை முட்டாள்தனமாய் நடந்து, கையில் இருந்த அழகானதொரு வாழ்வை இழந்து நிற்கிறோம் என்று நினைத்தனர்..

அழகான வாழ்வு தான்.. இருவர் மனதிலுமே இருவரின் மீது அன்பிருந்தது.. ஆசையிருந்தது. கொஞ்சம் பொறுத்து, இடைவெளிவிட்டு இருவரும் மனம்விட்டு பேசியிருந்தால் இப்போது ஊர் மெச்சும் கணவன் மனைவியாய் இருந்திருப்பர்.

ஆனால் அந்த சூழலின் கனத்தில் இருந்து தப்பித்துக்கொள்ளவே இருவரும் முயன்றதாய் இன்று தோன்றியது..

இருவருக்குமான பிரச்சனையின் தீர்வு என்பது, இருவருமே மற்றவர் இடத்தினிலும் நின்று யோசிப்பது. அதைவிட்டு பிரிவு என்பதனை இருவருமே சட்டென்று ஏற்றுகொள்ள அடுத்தும் கூட அவர்கள் நிம்மதியாய் இருந்திடவில்லை.

‘ஹப்பாடா விடுதலை…’ என்ற ஒரு ஆசுவாச உணர்வு வரவில்லை.

மாறாக மேலும் மேலும் இறுகித்தானே போயினர்..

இப்போது அந்த இறுக்கம் தளர்ந்து முதல் முறையாய் நடுநிலையாய் யோசிக்கையில், மனதில் தெளிவு வந்தது கொஞ்சம்.. ஆசை பிறந்தது கொஞ்சம்.. குடும்பமாய் ஒரு வாழ்வு வாழ எண்ணம் பிறந்தது கொஞ்சம்.

இதெல்லாம் தோன்றிவிட்டது தான்..

ஆனால் அடுத்து என்ன செய்வது??!! என்ற கேள்வியில் தான் இருவரின் உள்ளமும் நின்றுபோனது..

தன்னைப் போல் அடுத்தவரும் நினைக்கவேண்டுமே.. அது சாத்தியமாகுமா என்று யோசனைக்கு போய்விட்டனர். ராதிகாவின் பார்வையில் இருக்கும் ஏக்கங்களும், நிரஞ்சனன் பார்வையில் இருக்கும் வலிகளும் புரியாது இல்லை.

இருந்தும்.. ஒரு தயக்கம்.. அது உடையும் நாள் அவர்களின் உறவு மீண்டும் மலர்ந்திடும்.

Advertisement