Advertisement

அத்தியாயம் – 17

‘அம்மாடி… என்ன இது??!!! இப்படியொரு வார்த்தையா??!!’ அப்படித்தான் நினைத்தாள் ராதிகா.

‘மகனைக் காட்டி இவனை இழுக்கிறேனா??!!!’

“ஐயோ..!!” என்று தான் அவளுக்கு நெஞ்சு அடைத்தது.

எத்தனை பெரிய வார்த்தை இது. அதுவும் அவனின் மனைவியிடம்.. பிள்ளையைக் காட்டி இவனை இழுக்க அப்படியென்ன பெரிய காரணம் இருக்கப் போகிறது. சரி அப்படியே செய்தால் என்ன??!! ராதிகா நிரஞ்சனனின் மனைவிதானே. தன் கணவனை தன்னோடு சுமுகமாக்கிக்கொள்ள அவள்  முயற்சித்தால் அதென்ன கொலை குற்றமா??!!

இன்னமும் ராதிகாவிற்கு அந்த அதிர்ச்சி நீங்கவில்லை. அத்துவை அணைத்தபடி நிரஞ்சனனைக் காண,

“என்ன பாக்குற ராதிகா.. அம்மாவோட மெடிகல் ரிப்போர்ட் வாங்கப் போயிருந்தேன்.. நீ கால் பண்ணதும் என்னவோ ஏதோன்னு வந்தா இங்க ரெண்டுபேரும் சிரிச்சு விளையாண்டுட்டு இருக்கீங்க.. உனக்கு என்னதான் ஆச்சோ..” என்றவன், திரும்ப அப்படியே செல்ல,

‘எனக்கு என்ன ஆனது??!!’ என்றுதான் அவளும் நினைத்தாள்.

வேண்டாம்.. திரும்ப திரும்ப அவனிடம் மனதை செலுத்தி காயப்பட்டுக் கொள்ளாதே என்று எத்தனை முறை முடிவு செய்தாலும் அதெல்லாம் நொடியில் ஒன்றுமில்லை என்றாகிப் போகிறது அவன்மீதான அவளின் நேசம்.

என்ன, அது அவனுக்குத்தான் புரியமாட்டேன் என்கிறது..

பிள்ளையை காட்டி கவர்கிறேன் என்றால், இனி இவனை நான் கவர்ந்து என்ன செய்ய??!!

அதுதான் அவன் மனதினில் அவள் மீதான மதிப்பீடு என்ன என்பது தெள்ளத் தெளிவாய் ஒவ்வொரு முறையும் தெரிகிறதே. அவனுக்குத் தேவை ஒரு மனைவி. அவ்வளவே.. வாழ்வை ஓட்டிக்கொண்டு சென்றுவிடுவான்.

ஆனால் அவளுக்கு..??

வாழ்வில் எவ்வித ருசியும் இல்லாது போனது. உப்பு சப்பில்லாத ஒரு வாழ்க்கை.. கண்களை இறுக மூடி அப்படியே மகனை அணைத்தபடி அமர்ந்திருந்தாள்.

ஒன்று போய், அவனோடு சண்டையாவது போட்டிருக்கலாம். என்னை நீ எப்படி அப்படி சொல்லலாம் என்று. இல்லையோ சுந்தரியிடமாவது சொல்லியிருக்கலாம். ராதிகா எதையும் செய்யவில்லை. மாறாக வழக்கம் போல தனக்குள்ளே அனைத்தையும் போட்டு பூட்டிக்கொள்ள, அடுத்து அவள் நிரஞ்சனன் பக்கம் கூட பார்வையை செலுத்தவில்லை.

வீட்டில் அவளுக்கு இருக்கும் வேலைகள், பின் மகனை கவனிப்பது இதுமட்டுமே என்று தன் வட்டத்தை சுருக்கிக்கொண்டாள்.

இரண்டுநாட்கள் இப்படியே போக, சுந்தரிக்கு ஒருவழியாய் ராதிகாவின் மாற்றம் புரிய,

“என்ன ராதிகா.. அன்னிக்கே உங்கம்மா உன்னை கூட்டிட்டு போய் கொஞ்ச நாள் வச்சு அனுப்பனும்னு சொன்னாங்க.. நீ போகலையா…”  என்று கேட்க,

“இல்லத்தை..” என்றவள், அதோடு பேச்சினை முடித்துக்கொள்ள, சுந்தரிக்கு என்னவோ சுருக்கென்று பட்டது.

‘நன்றாகத்தானே இருந்தாள்..’ என்று எண்ணியவர், நிரஞ்சனன் மாலை வரவும் “ராதிகாக்கும் உனக்கும் எதுவும் சண்டையா நிரஞ்சன்..” என,

“ம்ம் என்னம்மா??!!” என்றான் அவர் கேட்பது புரியவில்லை என்பதுபோல.

ராதிகா, தன் மகனோடு அவர்களின் அறையில் இருக்க, அவளுக்கு இவர்கள் பேசுவது தெரியவில்லை. சுந்தரியோ

“இல்ல ராதிகா முகமே சரியில்லை.. அவ கொஞ்ச நாள் போய் அவங்கம்மா வீட்ல கூட இருந்துட்டு வரட்டுமே.. பாவம்டா.. அவளும் என்னதான் செய்வா.. நம்ம  நிலமைக்கு அவளையும் நம்ம படுத்தணுமா..” என,

“ம்மா அவளை யாரும் இங்க போகவேணாம் சொல்லலை.. ஆனா, அத்து இங்க இருந்தா எல்லாருக்குமே கொஞ்சம் நல்லாருக்கும்னு தோணிச்சு அதான் சொன்னேன். அவ போகாம இருந்துக்கிட்டா..” என்று நிரஞ்சனனும் சொல்ல,

“ம்ம்.. பார்த்து என்னன்னு முடிவு பண்ணுங்க…” என்ற சுந்தரி அதற்குமேல் எதுவும் சொல்லமுடியவில்லை.

ஆனால் அவரின் முகத்தினிலும் கவலை ரேகைகள் தெரிய, நித்யா அங்கிருந்தவளும் “ஆமாண்ணா அண்ணி முகத்துல சிரிப்பே இல்லை.. நீ கொஞ்சம் என்னன்னு பாரு.. எங்களுக்காக பார்க்காத வெளிய எங்கயாவது கூட்டிட்டு போறதுன்னா போய்ட்டு வா..” என்றும் சொல்ல, அமைதியாய் கேட்டுகொண்டான்.

இதனைப் பற்றி ராதிகாவோடு அவன் எதுவும் பேசவில்லை. என்னவோ இப்போதெல்லாம் ஏதாவது பேசினாலே சண்டை வருகிறது என்பதாய் இருக்க, வீட்டில் இப்போது அனைவரின் முன்னமும் சண்டை போட்டால் அது அம்மாவை மேலும் பாதிக்கும் என்றெண்ணி அமைதியாய் போனான்.

ஒன்று அவனாவது அவளோடு பேசியிருக்கவேண்டும். இல்லை அவளாவது அவனை இழுத்துப் பிடித்து அமர வைத்து பேசியிருக்கவேண்டும்.

சண்டை வந்தால் தான் என்ன??!!

கணவன் மனைவி உறவென்பது சண்டையே வராத உறவு.. வரவே கூடாத உறவு என்று யாரேனும் சட்டம் போட்டார்களா என்ன??!! இல்லையே..

சண்டைகளும் சில நேரம் நல்லதுதான்.. மனதில் இருப்பதை வெளியே கொட்ட, பிறர் மனதில் என்ன இருக்கிறது என்பதனை தெரிந்துகொள்ளவும். என்ன அதை இருவரும் எப்படி கையாள்கிறார்கள் என்பதில் தான் இருக்கிறது மண வாழ்வின் வெற்றி.

இங்கே இருவருமே அதைச் செய்யத் தவற, வீட்டில் இருக்கும் அமைதியே நிரஞ்சனனுக்கு போதுமாய் இருக்க, ராதிகாவோ மன அழுத்தத்திற்கு ஆளானாள்.

நித்யா கல்லூரிக்குச் செல்ல, நிரஞ்சனன் அவனின் அலுவலகம் செல்ல, சுந்தரி காலையில் உண்டுவிட்டு அவர் அறையில் ஓய்வெடுக்க, அத்தனை பெரிய வீட்டினில் ராதிகாவின் உலகம் என்பது அவளின் அறையும் அவளின் மகனும் மட்டும் என்றாக, ஒருவாரம் கழித்து அவளைக் காண வந்திருந்த ராணிக்கும் மணிவண்ணனுக்கும் மகளைக் கண்டதும் திக்கென்றானது.

“என்னாச்சுடா உடம்பு எதுவும் சரியில்லையா??!!” என்று அப்பா கேட்கவும், அவளால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை.

அவரின் தோளில் சாய்ந்துகொண்டு அழ, ராணி பதறிப்போய் “என்னாச்சு ராதிகா.. எதுவும் பிரச்சனைய ??!! என்னாச்சு டி..” என,

“எ.. எனக்குத் தெரியலைம்மா…” என்றாள் உதட்டை பிதுக்கி.

நிஜமாகவே அவளுக்குத் தெரியவில்லை. தன்னிடம் என்ன பிரச்சனை.. இல்லை அவனிடம் தான் என்ன பிரச்சனை என்று. அப்பாவிடம் இருந்து அக்கறையாய் ஒரு கேள்வி வந்ததும் இத்தனை நாள் அடைத்து வைத்திருந்தது எல்லாம் வெளியே வர, கண்ணை சுற்றி கருவளையம் விழுந்து, முன்னிருந்ததை விட மெலிந்து காணப்பட்ட ராதிகாவைக் காண அந்த அப்பா அம்மாவிற்கு எப்படி இருந்திருக்கும்.

ராணி பொறுக்க முடியாது நிரஞ்சனனிடமே கேட்டுவிட்டார்.

“ஒரு பத்து நாள் உங்களால அவளை அனுப்ப முடியாதா…” என்று,

அனைவரின் முன்னமும் தான் இத்தனை பேச்சுக்களும் நடக்க, சுந்தரிக்கோ ‘தான் சரியாய் கவனிக்கவில்லையோ..’ என்ற குற்ற உணர்வு ஆகிப்போனது.

நிரஞ்சனனோ அப்போதுதான் மனைவியின் முகத்தினை கவனித்தே பார்த்தான். அவனுக்குமே அவளின் மாற்றம் தெரிந்தது. ஆனால் ஏன் என்று புரிந்துகொள்ள முடியவில்லை.

‘இங்க என்ன குறை இவளுக்கு..’ என்று அவனின் யோசனை அப்படிதான் போனது.

“நாங்க யாருமே அவளை போகவேணாம் சொல்லலை அத்தை..” என்று நிரஞ்சனன் சொல்ல,

“அப்புறமென்ன ராதிகா.. எங்களோட வாயேன்…” என்று மணிவண்ணன் கேட்க, ராதிகாவின் பார்வை கண்ணிமைக்கும் நேரத்தில் கணவனைத் தான் தொட்டு மீண்டது..

‘என்னை யாரும் போகவேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் மகனை இங்கே விட்டுப் போ என்றானே…’ இதனை அவள் எப்படி அம்மா அப்பாவிடம் சொல்வாள். அவளால் நிரஞ்சனனை மற்றவர் முன் தாழ்த்திப் பேசவும் முடியவில்லை. இனியும் முடியாது தான்.

எங்கே அங்கே சென்று, ஏதாவது ஒரு விசயத்திற்கு இவனை அழைத்தால், பின் அதற்கும் ஏதாவது குதர்க்கமாய் சொல்வான். அதை அவளால் தாங்கிக்கொள்ளவே முடியாது. தேவையா இது என்று நினைத்தவள்,

“இல்லப்பா.. இன்னும் கொஞ்ச நாள் இங்கயே இருக்கேன்.. அப்புறமா வர்றேன்..” என,

“நீ இப்படி இருக்கிற ராதிம்மா…” என்றார் ராணி மனது கேளாது.

“நான் இனி என்னை பார்த்துப்பேன் ம்மா நீங்க கவலைப் படாதீங்க…” என்றவள், அப்பாவையும் அம்மாவையும் சமாதானம் செய்து அனுப்புவதற்குள் போதும் போதும் என்றானது.

அவர்கள் சென்றதுமே சுந்தரி வந்து மருமகளின் கைப் பற்றிக் கொண்டவர் “சாரி ராதிகா.. நான்.. நான் உன்னைப் பத்தி யோசிக்காம விட்டுட்டேன்.. தப்பு என்னோடதுதான்.. டெலிவரி ஆனா பொண்ணுக்கு உடமும் மனசும் என்ன என்ன பாடுபடும்னு நான் யோசிக்கவேயில்லை.. நா.. நான் உங்க மாமா போனதுலையே மனச விட்டுட்டேன்..” என,

“அத்தை.. உங்கள நான் எப்பவும் தப்பாவே நினைக்கலை.. நினைக்கவும் மாட்டேன்.. கவலைப் படாதீங்க..” என்றவள், அதற்குமேல் அங்கே நிற்காமல் அவளின் அறைக்குச் செல்ல,

பேசிக்கொண்டு இருக்கையிலேயே எழுந்து செல்வதாய் தான் இருந்தது அனைவர்க்கும். எங்கே இன்னமும் அங்கிருந்தால் ராதிகா நிரஞ்சனனை எதுவும் பேசிவிடுவோமோ என்ற அச்சத்தில் தான் எழுந்து போனது. ஆனால் அவளின் நேரம் அவள் பாதியில் எழுந்து போனதாய் இருக்க,

சுந்தரி அங்கே ஹாலில் மாட்டியிருந்த குணசேகரனின் புகைப்படத்தை பார்த்தவர் “நீங்க இருந்திருக்கக் கூடாதா..” என்று கண்ணீர் வடிக்க,

“ம்மா… என்னம்மா…” என்றான் நிரஞ்சனன் சமாதானம் செய்யும்விதமாய்.

“இல்லடா.. எப்பவும் என்னோட நல்லா பேசுவா.. இப்போல்லாம் பேசுறதே இல்லை.. இப்போ கூட பாரேன்..” என்று ராதிகாவை சுந்தரி சொல்ல,

“ம்மா விடுங்க நான் பேசிக்கிறேன்..” என்றான் நிரஞ்சனன்.

அதேபோல் பேசவும் செய்தான் தான். ஆனால் அவன் பேசிய விதமும் ராதிகாவின் பேச்சினை புரிந்துகொண்ட விதமும் தான் தவறாய் போனது.. அறைக்குள் வந்ததுமே

“இங்க உனக்கு என்ன குறை..??!!” என்று ராதிகாவிடம் கேட்க, அவளோ மகனை உறங்க வைத்துக்கொண்டிருக்க, அதனைப் பார்த்தவன், மெதுவாய் குரலை கம்மி செய்து

“சொல்லு ராதிகா உன்னைத்தான்…” என்றான்.

“இவனை தூங்க வைக்க அரைமணி நேரம் ஆகும்..” என்று அவள் சொல்ல,

“ம்ம்ச்.. குடு..” என்றவன், மகனைத் தூக்கிக்கொண்டு போய் சுந்தரியிடம் விட்டுவிட்டு, “இவனை தூங்க வைங்கம்மா..” என்றும் சொல்லிவிட்டு வந்தவன் திரும்பவும் அதே கேள்வியைத் தான் கேட்டான்.

‘இங்க உனக்கு என்ன குறை..??!!’ என்று..

“என்ன குறை.. எதுவுமில்லையே…” என்றாள் பட்டென்று.

நிறை என்ற ஒன்றை கண்ணில் கண்டால்தானே குறை என்ற ஒன்றையும் சொல்ல முடியும். இங்கேதான் எதுவுமே இல்லையே.. அப்படித்தான் இருந்தது  ராதிகாவின் மனதில்.

“ம்ம்ச் ராதிகா… நீ பண்றது சரியில்ல.. இங்க யாருமே உன்னை எதுக்கும் டிஸ்டர்ப் பண்றது இல்லை.. எல்லாருமே உன்னை நல்லாத்தான் பார்த்துக்கிறாங்க..” என,

“அப்படியா??!!!” என்றாள், ஏளனமாய்.

அந்த நேரம் அவளுக்கு அப்படிதான் வார்த்தை வந்தது.

“ராதிகா…!!!” என்று நிரஞ்சனன் குரலை உயரத்த, “நான்.. நல்லாத்தான் இருக்கேன்..” என்றாள், பார்வையை வேறுபுறம் திருப்பி.

“பார்த்தா அப்படி தெரியலையே…” என்றவனின் தொனியும் சரியில்லை.

“ம்ம் உங்களுக்கு என்னைப் பார்க்கவெல்லாம் நேரம் இருக்குமா??!!” என்றவள், “போங்க போய் உங்க வேலையை பாருங்க..” என்றவள் எழுந்து குளியலறைக்குள் சென்று நுழைந்துகொண்டாள்.

‘ச்சே.. என்ன இவ.. பேசணும்னு வந்தா இப்படி பண்ணிட்டு போறா.. இவளுக்கு என்னதான் ஆச்சு…’ என்றவனுக்கு என்று முனுமுனுத்தவனுக்கு தலை வலித்தது.

எங்கே ராதிகாவை ஏதாவது சொல்லி திட்டிவிடுவோமோ என்றெண்ணியே அறையில் இருந்து வெளி வந்தவன், மகனைக் காணச் செல்ல, சுந்தரியோ அத்துவை உறங்க வைத்துக்கொண்டே நித்யாவிடம் பேசிக்கொண்டு இருந்தார்.

“எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு நித்யா.. நம்ம ராதிகாவை சரியா பார்த்துக்கலையோன்னு.. உங்கப்பா இருந்திருந்தா இந்நேரம் நம்ம வீடு எப்படியிருந்திருக்கும்..” என்று அவர் ஆரம்பிக்க, நித்யா ஆறுதல் சொல்லிக்கொண்டு இருக்க, சுந்தரி அழுதுகொண்டு இருந்தார் என்றுதான் சொல்லவேண்டும்.

அம்மாவின் கண்ணீரைக் கண்டவனுக்கோ, “ச்சே என்ன இது.. எல்லாரையும் இப்படி போட்டு படுத்துறா…” என்றே எண்ணத் தோன்றியது.

அவனுக்கு அந்த நேரத்தில், அதுவும் அப்பாவை இழந்து நிற்கும் அந்த நேரத்தில்  அம்மா மற்றும் தங்கையின் மன நிம்மதி தான் பிரதானமாய் தோன்ற, ஒன்றுமில்லாத ஒன்றை ராதிகா இத்தனை பெரிய பிரச்சனையாய் மாற்றுவது சிறிதும் பிடிக்கவில்லை.

தலைவலி அதிகம் இருப்பதுபோல் தோன்ற, தோட்டத்தில் சிறிது நேரம் நடந்துகொண்டு இருந்தான். ஒருமுறை ராதிகாவின் இடத்தில் இருந்து யோசித்து இருந்தால், நிச்சயம் அவனுக்கு அவளின் மனநிலை புரிந்திருக்கும். மாறாக ராதிகா ஏன் இப்படியெல்லாம் செய்கிறாள் என்று அவள் மீது கோபமே அதிகரித்தது.

பிள்ளை பெற்றவள் நேராய் இங்கே வந்திருக்க, தன்னால் அவளுக்கு எவ்வித தொந்திரவும் இருக்கக் கூடாது என்று தள்ளியே இருந்தான்.. அடுத்து அப்பாவின் மரணம்.. அது இன்னமுமே இவர்களை இயல்பு நிலைக்கு திரும்பிடச் செய்யவில்லை. அம்மாவும் தங்கையும் இன்னமும் அதில் இருந்து மீளவில்லை என்பது அவனுக்கு நன்கு தெரியும்..

அப்படியிருக்க ராதிகா இப்படி செய்வது, அவனுக்கு சுத்தமாய் பிடிக்கவில்லை..

நேரம் செல்ல செல்ல தலைவலி அதிகரிக்க, அறைக்குச் சென்று பார்த்தான், ராதிகா அங்கேயில்லை. எங்கே என்றும் தேடவில்லை அவன், பேசாமல் சென்று படுத்துக்கொள்ள, சிறிது நேரத்தில் ராதிகா அறைக்குள் வர, அத்தனை நேரம் சுந்தரி அவளோடு பேசியிருந்தார் என்பது நிரஞ்சனன் அறியவில்லை.

சுந்தரி என்ன பிரச்சனை என்று கேட்கவில்லை மாறாக “அவனுக்கு நிறைய டென்சன் ராதிகா.. எல்லாத்தையும் உள்ள உள்ள போட்டுப்பான்.. நம்ம அழுகை வந்தா அழுதிடுவோம்.. நிரஞ்சன் அதையும் செய்ய மாட்டான்.. நீதான் அவனை பேசி பேசி கொஞ்சம் சரி பண்ணனும்..

நீயும் ஒதுங்கி இருந்தா, அவனுக்கு இதுவே சரின்னு தான் தோணும்.. நாள் ஆக ஆக இறுக்கிப் போயிருவான்.. நீதானே ராதிகா அவனை சமாதானம் செய்ய முடியும்.. என்ன இருந்தாலும் நானோ நித்யாவோ எல்லாம் ஒரு அடி தள்ளித்தான் நிக்க முடியும். ஆனா மனைவிங்கறவ அப்படி இல்லை.. புரிஞ்சதா..” என்று மருமகளுக்கு தன்மையாகவே எடுத்துசொல்ல,

‘ஒருமுறை இவர்கள் சொல்வது போல் செய்து பாரேன் ராதிகா…’ என்று அவளின் மனதும் சொல்ல,

“ம்ம் சரிங்கத்தை…” என்றவள் அறைக்கு வர, தலையில் புறங்கையை வைத்து கண்களை இறுக மூடி படுத்திருந்தான்.

அவன் படுத்திருக்கும் விதமே மனதில் எதையோ போட்டு யோசிக்கிறான் என்றும் தோன்ற, அவனின் முகம் காட்டிய பாவனை கொஞ்சம் அவளின் மனதை இளகச் செய்ய,

“என்னங்க பண்ணுது..??!!” என்றாள் அவன் பக்கம் வந்து.

“ம்ம்..” என்று கண்களைத் திறந்து பார்த்தவன், ராதிகா அவனிடம் வந்து அமர்ந்திருப்பது கண்டு “ஒண்ணுமில்லை…” என

“இல்ல.. உங்க முகமே எப்படியோ இருக்கு..” என்று ராதிகா, மெதுவாய் அவனின் கன்னத்தில் கை வைக்க,

‘இப்போ என்னாச்சு இவளுக்கு திடீர்னு..’ என்றுதான் பார்த்தான் நிரஞ்சனன்.

“தலைவலி..” என்று நிரஞ்சனன் சொல்ல, “நான் தைலம் தேச்சு விடட்டுமா??!!” என்றாள் கரிசனையாகவே.

“வேண்டாம்.. கொஞ்ச நேரத்துல சரியாகும்.. நீ போய் தூங்கு..” என,

“இதென்ன தூங்குற நேரமா.. அத்துக்கு ஊட்டிட்டு எல்லாம் சாப்பிட்டிட்டு தான் தூங்கனும்..” என்றவள், அவன் சொல்லாமலேயே தலைக்கு தைலம் தேய்த்துவிட, ராதிகா அவளையும் அறியாது தான் நிரஞ்சனனை நெருங்கி அமர்ந்திருந்தாள்.

நிரஞ்சனனுக்கு என்னவோ போல் இருந்தது. பல நாட்களுக்கு பிறகான மனைவியின் அருகாமை, அவனை என்ன செய்தது நிஜம். உள்ளத்தில் எரிந்துகொண்டு இருந்தது எல்லாம் ராதிகாவின் நெருக்கத்திலும், தன்மையான பேச்சினிலும், ஸ்பரிசத்திலும் மட்டுப்படுவதாய் இருக்க, அவளின் கரங்களை அப்படியே அவன் தன் கன்னத்தோடு பிடித்து ஒட்டிக்கொள்ள,  அவளுமே இதனை எதிர்பார்க்கவில்லை..

“கை இப்படி பிடிச்சிட்டா பின்ன எப்படி தைலம் தேய்க்கிறதாம்..” என்று அவளின் குரலுமே குழைய,

“ம்ம் நீ தேய்க்க எல்லாம் வேணாம்.. இப்படியே இரு என்கிட்டே..” என்றபடி, அவளை மேலும் தன்புறம் நிரஞ்சனன் நெருக்க,

“ஷ்… என்னங்க…” என்றாள், கொஞ்சமேனும் அதிர்ந்து.

“இப்படியே இரு ராதிகா…” என, ராதிகாவிற்கு நிரஞ்சனனின் இப்பேச்சும், செயலும் ஒருவகை சந்தோசம் கொடுத்தது என்றால், அவன் இப்படியே சரியாகிட வேண்டும் என்று எண்ணியவள், அவனை சரி செய்தே தீர வேண்டும் என்ற நோக்கில் மேலும் மேலும் அவனோடு ஒன்ற, நிரஞ்சனனும் தன்னிலை மறந்தான்.

அப்போதே அவனும் கேட்டிருக்கலாம், உனக்கு என்ன வேண்டும்??! என்ன பிரச்சனை, ஏன் இப்படி இருக்கிறாய் என்று…

அவனும் ராதிகாவோடு  தன்னை இழைத்துக்கொள்ள, திடீரென நிரஞ்சனனுக்கு என்ன ஆனதோ, இரண்டு நொடிகளில் அவளையும் விலக்கி தானும் விலகி அமர்ந்தான். என்னவோ பெரிதும் தவறு செய்த உணர்வு அவனுக்கு..

‘ச்சே.. அம்மாவும் நித்யாவும் அங்க அவ்வளோ பீல் பண்ணிட்டு இருக்காங்க.. நான்.. நான் இங்க.. ச்சே…’ என்று தன் செயல் எண்ணியே அவனுக்கு தன்மீதே கோபம் வர,

ராதிகாவோ “என்னாச்சுங்க…” என்று அவனின் தோள் தொட,

“அறிவில்லையா ராதிகா உனக்கு…” என்றான் சுள்ளென்று..

ராதிகா திகைத்துப் பார்க்க, “அங்க அம்மாவும் நித்யாவும் அப்படி இருக்காங்க.. நான்.. நம்ம.. ச்சே.. நான்தான் இப்படியான உனக்கு எங்க போச்சு ராதிகா.. யோசிக்கவேணாமா நீ.. ச்சே ச்சே…” என்றவன், எழுந்துகொள்ள

“ஏங்க.. இது.. இதுல என்ன தப்பிருக்கு…” என்றாள் நிஜமாய் புரியாது.

அவளைப் பொருத்தமட்டில் இதில் எவ்வித தவறும் இல்லை.. கணவன் மனைவி இருவரின் நெருக்கத்திற்கும் உடல் சார்ந்த உணர்வுகள் மட்டுமே காரணமாய் இருக்கவேண்டும் என்றில்லை. ஒருவரை ஆறுதல் படுத்தவும், ஒருவரிடம் ஆறுதல் தேடவும் கூட நெருங்கலாம்..

அப்படிதான் ராதிகா நினைத்து “நீங்களா எதுவும் நினைச்சுக்காதீங்க.. தலை வலிக்குதுன்னு சொன்னீங்க தானே வந்து படுங்க..” என,

“ம்ம்ச் புரியாம பேசாத ராதிகா.. எதுக்கும் நேரம் காலம்னு இல்லையா.. வீட்ல எல்லாரும் கவலையா இருக்கப்போ, நம்ம இப்படி..” என்றவன் “நான்தான் ஏதோ யோசிக்காம இருந்தேன்னா நீயும் இதான் சாக்குன்னு…” என்றவன், அப்படியே வார்த்தையை விழுங்கிவிட்டு “ச்சே…” என்றபடி வெளியே செல்ல,

ராதிகா விக்கித்துப் போனாள்.

‘நீயும் இதுதான் சாக்குன்னு..’ இதே வார்த்தைகள் தான் அவளுக்கு செவிகளில் ஒலித்துக்கொண்டே இருந்தது..

‘இதான் சாக்குன்னா..??!! அப்.. அப்போ என்ன சொல்றாங்க.. நான்.. நான் நேரம் பார்த்துட்டு இருந்தேனா.. ஐயோ..’ என்று அவளின் உள்ளம் பதறியது.

விலகியிருந்த அவளின் உடைகளை கூட அவளுக்கு சரிசெய்துகொள்ள தோன்றவில்லை.. மனதும் உடலும் பெரும் அவமானமாய் உணர, தன்னை இத்தனை கீழாகவா நினைக்கிறான் என்கையில் ‘ஐயோ போதும்…’ என்று தோன்றிப்போனது ராதிகாவிற்கு.

நிரஞ்சனன், கீழே வந்தவன், மகன் கண் விழித்திருப்பது பார்த்து அவனோடு இருந்துகொள்ள, தான் உதிர்ந்து வந்த வார்த்தைகளின் வீரியம் அவன் அறியவில்லை. தன்மீத வந்த கோபத்தில் தான் அவன் அப்படி பேசியது. ராதிகாவை மட்டமாய் நினைத்து இல்லை.

ஆனால் அது ராதிகாவிற்குத் தெரியாதே..

 எதிலோ பெரும் அடி வாங்கிய வலி அவளுக்கு. இனி எதையும் தாங்கிக்கொள்ள முடியாது என்பதாய் ஓர் உணர்வு. மறுபடியும் ஒரு எண்ணம் நிரஞ்சனனுக்குத் தன்னை பிடிக்கவில்லை என்று.. அதையும் தாண்டி அவன் தன்னை கூறிய வார்த்தைகள்..

அன்றோ பிள்ளையைக் காட்டி இழுக்கிறாய் என்றது.. இன்றோ, இதுதான் சாக்கு என்றது..

இரண்டுமே அவளின் தரத்தை தாழ்த்துவதாய் இருக்க, அவள் மனம் முழுதும் விட்டுப்போனது.

ஆயிரம், லட்சம் என்று மனதில் அப்படியொரு எண்ணங்களின் படையெடுப்பு.. என்ன யோசிக்கிறோம், எதை யோசிக்கிறோம், நாம் நினைப்பது எல்லாம் சரியா என்ற சிந்தனை எல்லாம் இல்லை. மனம் தறிகெட்டு ஓடியது.

விளைவு, அடுத்து வந்த நாட்கள் எல்லாம் வீட்டினில் அனைத்திற்கும் ராதிகா அனைவரோடும் சண்டையிட்டாள். அவளுக்கே தான் என்ன ஆகிக்கொண்டு இருக்கிறோம் என்பது விளங்கவில்லை.

ஒன்று சண்டையிட்டாள் இல்லையோ அறைக்குள் சென்று பூட்டிக்கொண்டாள். ஆகமொத்தம் எதை எதையோ செய்தாள். அனைத்தும் சுந்தரி வழியாக நிரஞ்சனனுக்கு செல்ல,

“என்ன பண்ணிட்டு இருக்க நீ..” என்று கண்டிக்க, அவனோடும் சண்டை..

சூழ்நிலை கட்டுக்கடங்காது செல்ல, ராதிகாவின் மனதினில் அழுத்தம் கூட கூட அத்துவை கூட கவனிப்பதை விட்டாள், நிரஞ்சனன் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவன், தானும் என்ன செய்கிறோம் என்று யோசிக்காது, ராதிகாவை ஓங்கி ஒரு அறைவிட கன்னத்தில் கை வைத்து அவனை திகைத்துப் பார்த்தவளுக்கு, மனதில் தோன்றியது ஒன்றே ஒன்றுதான்..

‘இவனுக்கு என்னை பிடிக்கவில்லை. இனி இந்த வாழ்வு இவனோடு தேவையில்லை..’ என்று..

அடித்தவனோ தன் தவறை உணர்ந்து “ராதிகா…” என்று அவளின் அருகே வர, “ம்ம்..” என்று கைகளை உயர்த்தியவள் “என்னை கொஞ்சம் தனியா விடுங்க..” என, நிரஞ்சனனும் அதை அப்படியே செய்தான்.

“முடியாது.. உன்ன அப்படி எல்லாம் தனியா விட முடியாது டி..” என்று சொல்லியிருந்தாலாவது அவள் சற்று நிம்மதியுற்று இருப்பாளோ என்னவோ.

அவன் கிளம்பி அலுவலகம் சென்றுவிட, ராதிகாவின் தலைக்குள் ஆயிரம் வண்டுகள் குடைவது போலிருந்தது.. சுந்தரி அத்துவை தூக்கிக்கொண்டு வெளி வராண்டாவில் இருந்த ஊஞ்சலில் ஆடிக்கொண்டு இருக்க, வந்து பார்த்தவள் ஏன் சுந்தரியின் அறைக்குள் போகிறோம் என்ன செய்கிறோம் என்பதே அறியாது, அவர் இரவு உறக்கத்திற்கு உண்ணும் மாத்திரையை எடுத்து மொத்தமாய் விழுங்கியிருந்தாள்.

தான் இச்செயல் செய்கிறோம் என்ற எண்ணம்கூட இல்லை.. விழுங்கியவள் அப்படியே திரும்ப சென்று அறையினில் படுத்துக்கொள்ள, வெகு நேரமாகியும் ராதிகா எழுந்து வரவில்லை என்றதும்தான் சுந்தரி அவளைச் சென்று காண, அவளோ அலங்காது அசையாது படுத்துக் கிடந்தாள்.                     

Advertisement