Advertisement

அத்தியாயம் – 16

முடிந்தது.. அனைத்தும் முடிந்தது.. குணசேகரன் என்ற மனிதரின் வாழ்வில் எல்லாம் முடிந்தது. கணவனாய், அப்பாவாய், குடும்பத்துத் தலைவராய் அவரின் பங்கை அவர் சிறப்பாக செய்தே சென்றிருக்க, அவரின் இடத்தில் இருக்கும் வெறுமை இனியாராலும் சரி செய்ய முடியாது எனும்வகையில் இருந்தது அங்கே.

அனைத்து சாங்கியங்களும் முடிந்திருக்க, வீடே அமைதியில் இருந்தாலும், வீட்டில் ஆட்கள் நிறைய பேர் இருந்தனர். ஏழாம் நாளே காரியம் வைத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்திருக்க, மிக நெருங்கிய உறவுங்கள் அங்கேதான் இருந்தனர்.

ராணியும் மணிவண்ணனும் கூட அங்கேதான்.

“நாங்க இருக்கோம்.. உனக்கு நிறைய வேலை இருக்கும்.. பிள்ளையை நாங்க பார்த்துக்கிறோம்…” என்று ராதிகாவிடம் சொல்ல, அவளுக்குமே அப்பாவும் அம்மாவும் இங்கே இருந்தால் நன்றாய் இருக்கும் என்றுதான் எண்ணினாள்.

சுந்தரிக்கும், நித்யாவிற்கும் சிந்தனை குணசேகரனை தாண்டி வேறெதிலும் செல்லவில்லை. நிரஞ்சனன் மனதில் பெரும் அழுத்தமும் துக்கமும் இருந்தாலும் எதையும் வெளிக்காட்டாது, அவனின் கடமையை செய்துகொண்டு இருந்தான். வேறு வழியும் அவனுக்கு அங்கில்லை தானே.

ராதிகாவிற்கு வீட்டு மருமகளாய் நின்று, வந்திருப்பவர்களை கவனிப்பதா, இல்லை மாமியார் நாத்தனாரை தேற்றுவதா, இல்லை கணவனைப் பார்ப்பதா என்று அனைத்திலும் கால் வைத்து சுற்றிக்கொண்டு இருந்தாள். அதோஷஜனை ராணி முழுதும் தன் பொறுப்பெடுத்துக் கொண்டாலும், ராதிகாவின் பொறுப்புகள் அங்கே அதிகமாகிப் போனது.

சூழல் உணர்ந்து ராதிகா செயல்பட்டாலும், அவளால் ஒருநிலைக்கு மேலே முடியவில்லை. பிள்ளை பெற்ற உடல் அல்லவா, உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம், போதாது என்று இப்போதைய மன அழுத்தம் எல்லாம் சேர்ந்து அவளையும் ஒரு வழிப் படுத்தியது.

இருந்தும் வெளியே காட்டிக்கொள்ளவில்லை..

ஒருவாரம்.. அப்படி இப்படி என்று ஒரு சோக நடைபோட்டே கடந்து சென்றிருக்க, ஏழாம் நாள் காரியம் முடிந்து எல்லாம் அவரவர் ஊருக்குச் செல்ல, வீட்டில் இருப்பது ராதிகாவின் பெற்றோரும், நிரஞ்சனன் குடும்பத்தினருமே.

என்னதான் அங்கே சூழ்நிலை மோசம் என்றாலும், ராதிகாவையும், அதோஷஜனையும் கவனித்துக் கொள்ளவென்று யாரும் நினைப்பதில்லை. சுந்தரிக்கு இப்போது அந்த யோசனை கூட இல்லை. பேரனை தூக்கி வைத்துக் கொள்வார். அவ்வப்போது.. அவ்வளவே..

நித்யாவோ கேட்டிடவே வேண்டாம். அப்பாவின் இழப்பு எவ்வயதிலும் பாதிப்பை கொடுக்கும்தானே. அவளைத் தேற்றுவது தான் யாராலும் முடியாது போனது. நிரஞ்சனன் எத்தனயோ ஆறுதல் சொன்னாலும், அவனுக்கு யாராலும் ஆறுதல் சொல்ல முடியாது போனது.

மணிவண்ணன் நிரஞ்சனனை அமரவைத்து நிறைய பேசினார் தான். இருந்தும் ஒரு மகனாய், ஒரு அண்ணனாய் அவன் சுந்தரியையும், நித்யாவையும் அதிகம் பேணினான். தனிமை கிடைக்கையில் எல்லாம் ராதிகாவும் அவனோடு பேசினாள்.

“பீல் பண்ணாதீங்கன்னு சொல்ல முடியாது.. ஆனாலும் நீங்க தளர்ந்து போனா அத்தையும் நித்யாவும் என்ன ஆவாங்க??!! நீங்கதான் அவங்களுக்கு தைரியம் சொல்லணும்..” என்று அவளுக்குத் தெரிந்த வகையில் எல்லாம் அவனைத் தேற்ற முயன்றாள்.

அவளால் முயற்சி மட்டுமே செய்ய முடிந்தது..

ராணியோ “நீயா இங்க பார்த்துப்பியா ராதிகா.. உன்னை கூட்டிட்டு போகணும்னு மனசு அடிக்குது.. ஆனா இப்படியொரு சூழ்நிலைல நாங்க எங்க பொண்ண கூட்டிட்டு போறோம்னு சொல்றது சரியும் இல்லை. இப்போ உன் உடம்புக்கும் மனசுக்கும் நிறைய ரெஸ்ட் தேவை…” என,

ஒரு அம்மாவாய் அவரின் உணர்வுகளை யாரும் தவறு என்று சொல்லிடவே முடியாது, ஆனால் அந்த வீட்டின் மருமகளாய் ராதிகா அங்கே இருக்க வேண்டிய நிலை.

“ம்மா நான் பார்த்துப்பேன் ம்மா.. வேலை செய்யத்தான் இத்தனை பேர் இருக்காங்க தானே.. நான் பார்த்துப்பேன்..” என்று பெற்றவர்களுக்கும் தைரியம் சொல்லியே அனுப்பிவைத்தாள்.

ஆனால்.. நான் பார்த்துப்பேன் என்று அவள் சொன்னதை ஒரு வாரம் கூட அவளால் தாக்குப் பிடிக்க முடியவில்லை.

அத்து முழு நேரம் அவளின் பொறுப்பு ஆனான்.. சுந்தரி வந்து பேரனைப் பார்ப்பார் தான். ஆனாலும் பொறுப்பாய் நின்று யாரும் எதையும் பார்ப்பதில்லை. அதிகமாய் அவரும் நித்யாவும் தான் ஒன்றாய் பொழுதினை ஓட்டினர். அதை தவறு என்று சொல்லிடவே முடியாது. நிரஞ்சனன் வீட்டில் இருக்கும் நேரம் என்பதே கம்மியாகிப் போனது. அப்படியே வீட்டினில் இருந்தாலும் அம்மாவோடும் தங்கையோடும் தான்.

ராதிகா என்ற ஒருத்தி அங்கே இருக்கிறாள் என்ற எண்ணமே யாரேனும் சொன்னால் தவிர யாருக்கும் அங்கே தெரியவில்லை. அவரவர் அவரவர் கவலையில் மூழ்கிட, ராதிகாவிற்கு தான் மூச்சு முட்டிப் போனது. இரண்டு மாதங்கள் மேலும் பல்லைக் கடித்து ராதிகா ஒட்டிவிட 

ராணியும், மணிவண்ணனும் கூட சொன்னார்கள் தான் “ஒருவாரம் இங்க வர்றியா.. நாங்க பேசுறோம்..” என்று.

“இல்லம்மா வேணாம்..” என்றுவிட்டாள்.

பிள்ளை பெற்ற பின்னே வராத மாதவிடாய், சரியாய் அப்போதென பார்த்து அவளுக்கு வந்திட, தவித்துப் போனாள். அதிக மாற்றம் ஏற்பட்டது அவளுள். உடலிலும் உள்ளத்திலும்.. அவளாலே அதனை தாங்கிக்கொள்ள முடியவில்லை.

இனியும் முடியாது என்று ராணிக்கு அழைத்துச் சொல்ல, “நான் உங்க மாமியார் கிட்ட  பேசுறேன்…” என்றவர்,   

சுந்தரிக்கும் அழைத்து பேச “கூட்டிட்டு போறதுன்னா போங்க..” என்றார் விரக்தியாய்.

இந்த பேச்சு அப்படியே நிரஞ்சனனுக்கு போக, அவனோ “எந்த நேரம் என்ன பேசறதுன்னு இல்லையா ராதிகா. அம்மாவே அத்து முகம் பார்த்து தான் கொஞ்சம் சமாதானம் ஆகறாங்க. இப்போ போய் கிளம்புறேன்னு சொன்னா என்ன அர்த்தம். உனக்கு இங்க என்ன குறை. உடம்புக்கு முடியலன்னா வா ஹாஸ்பிட்டல் போகலாம்.. இல்லை இன்னும் ரெண்டு பேர் சேர்த்து வேலைக்கு ஆள் போடலாம்..” என,

‘எத்தனை வேலைக்கு எத்தனை ஆட்கள் இருந்தாலும் உடல் நோவும் மன நோவும் அவரவர் தான் அனுபவிக்க வேண்டும்…’ என்பது அவனுக்குப் புரியாது போனது..

“இல்லங்க.. எ.. என்னால ரொம்ப முடியல…” என்று அவளும் பொறுமையாகவே சொல்ல,

“சரி.. நீ போ அத்து இங்க இருக்கட்டும்..” என்றான் அவளின் நிலையில் இருந்து யோசிக்காது.

“என்ன??!! என்னது??!! என்ன சொன்னீங்க…” என்றாள் வேகமாய்..

“அத்து இங்க இருக்கட்டும்.. அம்மாவுக்கும் நித்யாவும் எனக்குமே அத்து முகம் பார்த்துதான் கொஞ்சம் மனசு ஆறுது.. அவனையும் நீ தூக்கிட்டு போயிட்டா… நீவேணா போய் ரெஸ்ட் எடுத்துட்டு வா..” என, ராதிகாவிற்கு சுள்ளென்று கோபம் வந்துவிட்டது.

உண்மை தான் குழந்தை முகம் பார்த்தால், கவலைகள் குறையும் தான். சிறிது நேரமேனும் அந்த கவலைகளை எல்லாம் குழந்தையின் புன்னகை காணாது போகச் செய்யும் தான். ஆனால் இப்போது நிரஞ்சனன் சொன்னது. யாரால் ஏற்றுக்கொள்ள முடியும்.

ராதிகா அப்படியே திகைத்துப் பார்க்க “நிஜமாதான் சொல்றேன் ராதிகா.. உனக்கு போகணும்னா போயிட்டுவா.. நான் எதுவும் சொல்லலை.. அத்து இங்க இருக்கட்டும்.. அம்மா நித்யா எல்லாம் பார்த்துப்பாங்க..” என,

“அவனுக்கு பசிச்சா அப்போ நீங்க பீட் பண்ணுவீங்களா??!!” என்றாள், ஆங்காரமாய்.

ஏற்கனவே மனதில் இருந்த அழுத்தம், உடலில் ஏற்படும் மாற்றங்கள் போதாத குறைக்கு இப்போது நிரஞ்சன் பேசிய விதத்தில் ஏற்பட்ட உணர்வு குவியல் என்று எல்லாம் சேர்த்து ராதிகாவை வார்த்தைகளை விட செய்தது.

அவளின் வார்த்தைகளை உள் வாங்கியவனோ “ராதிகா…??!” என்று அதிர்ந்து அழைக்க,

“முடியாதுல்ல.. பின்னே அப்படி அத்துவை இங்க விட்டுப் போன்னு சொல்றீங்க.. யோசிக்கவேணாம்..” என்றவளுக்கு இவன் என்ன சிறிதேனும் தன்னையும் தன் மகனையும் பற்றி சிந்திக்கிறானா என்று இருந்தது.

“ச்சே.. என்ன வாழ்வு…” என்றுதான் தோன்றியது அவளுக்கு..

அவள் எங்கேயும் போகாது இங்கேயே இருந்துகொண்டாள். பிள்ளையின் பொறுப்பினை வீட்டினர் பார்த்துக்கொள்ள, அவளுக்கு ஓய்வும் கிட்டியது..

உடலுக்கு ஓய்வு கிட்டியது சரி.. ஆனால் உள்ளத்திற்கு ஓய்வு..??!!!

இப்படியொரு சண்டை நிரஞ்சனன் ராதிகாவிற்கு இடையில் வந்தபின், இருவரின் பேச்சு வார்த்தையும் முற்றிலும் குறைந்து போனது. இருந்தும் ராதிகா இறங்கி வந்தாள், அவனுக்கான அனைத்தையும் பார்த்து பார்த்து செய்தாள், ஆனால் நிரஞ்சனனோ சூழலின் கனம் தாளாது அனைத்தையும் ராதிகாவின் மீது இறக்கி வைக்கத் தொடங்கினான்.

விளைவு சிறு சிறு சண்டைகள் என்று ஆரம்பித்து, இருவருமே வார்த்தையை விடத் தொடங்கினர்.    

குணசேகரனின் இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்று தான். இல்லை என்றில்லை. ஆனால் இரண்டு மாதங்கள் கடந்துவிட்டது.. மற்றபடி அவரவர் அன்றாடம் எல்லாம் செய்துகொண்டு தான் இருந்தனர். நித்யா கல்லூரிக்கு சென்றுகொண்டு தான் இருந்தாள். சுந்தரி பழையபடி வீட்டினில் அல்லாட ஆரம்பித்திருந்தார்.

எல்லாம் மாறியது.. நிரஞ்சனன் தவிர…

அவன் அம்மாவிற்கும் தங்கைக்கும் தைரியமும் ஆறுதலும் சொன்னவன், தன் உணர்வுகளை தனக்குள் அமிழ்த்திக்கொண்டான். மனதின் இறுக்கங்கள் அவனுக்கு நிறையவே இருந்தது. சுந்தரிக்கு நல்ல மகனாய் நடந்துகொண்டான். நித்யாவிற்கு அண்ணனாய், அப்பாவாகவும் தன்னை நிறுத்திக்கொண்டான்..

எல்லாம் செய்தான்… அத்துனை ஏன் அத்துவை கூட அவன் பார்த்துக்கொண்டான். ராதிகாவைத் தவற.. முன்பிருந்த ஒருசில பேச்சுக்கள் கூட இப்போதில்லை.

மகளைக் காணவென வந்த ராணியோ, “நீதான் பார்த்து அனுசரிச்சு போகணும் ராதிகா.. எல்லாமே மாறும்.. எனக்கும் புரியுது.. இது கஷ்டமான சூழ்நிலை தான்.. ஆனா இது இப்படியே போகப் போறதில்லை.. எதுவா இருந்தாலும் மாப்பிள்ளை கிட்ட மனசு விட்டு பேசு.. அவருக்கும் ஆறுதலா இருக்கும்…” என்றுவிட்டு போக,

ராதிகாவிற்கும் ஒரு எண்ணம், ஒருமுறை நாம் முயற்சி செய்து பார்ப்போம் என்று. அவன் மனதில் இருக்கும் அழுத்தங்களை தன்னோடு பகிர்ந்துகொள்ள செய்வோம், அப்போதாவது அவன் கொஞ்சம் இலகுத் தன்மைக்கு வருகிறானா என்று பார்க்கலாம் என்று நினைத்தாள். 

தன் எண்ணங்களை விட்டு,  நிரஞ்சனனுக்காக என்று யோசித்தாள்.

என் கணவனிடம் நான் பேச அப்படியென்ன தயக்கம் என்று நினைத்தவளுக்கு, எப்படியேனும் அவனை சரி செய்தே ஆகவேண்டும் என்று உறுதி பிறக்க, நிரஞ்சனன் வீட்டில் இருக்கும் நேரமெல்லாம் அவனோடு இருப்பது போல பார்த்துக்கொண்டாள்.

நிரஞ்சனனும் இதனை கவனித்துக்கொண்டு தான் இருந்தான். ஆனால் எதையும் கண்டுகொண்டது போல் காட்டிக் கொள்ளவில்லை. என்ன ஏதேன்றும் கேட்டுக்கொள்ளவில்லை.

“ஏங்க… நம்ம எல்லாரும் சேர்ந்து வெளிய எங்கயாவது போயிட்டு வரலாமா.. எல்லாருக்கும் கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கும்…” என்று அனைவரின் முன்னமும் தான் ராதிகா கேட்டாள்,

அவனுக்குமே கூட அது சரி எனப்பட, “என்னம்மா…” என்றான் சுந்தரியிடம்..

“இல்லப்பா.. நான் வரல.. நீங்க போறதுன்னா போயிட்டு வாங்க..” என, அடுத்து நித்யாவிடம் பார்வையை நிரஞ்சனன் திருப்ப,

“செமஸ்டர் வருதுண்ணா.. விட்ட போர்சன் எல்லாம் பாலோ பண்ணனும்..” என்றுவிட்டாள் அவள்.

ராதிகா இதனை யூகித்தும் இருந்தாள்.

“அட்லீஸ்ட் நம்ம மட்டுமாவது கொஞ்சம் வெளிய போயிட்டு வரலாமா.. உங்களுக்கும் ஒரு சேஞ்சா இருக்கும்…” என,

“இல்ல அது சரிவராது..” என்றுவிட்டான்.

அம்மாவையும் தங்கையையும் தனியே விட்டு, தான் மட்டும் மனைவி பிள்ளையோடு வெளியே சென்றுவருவதில் அவனுக்கு விருப்பமில்லை.

‘போச்சுடா…’ என்று எண்ணியவள், அடுத்த இரண்டு தினத்தில் வீட்டில் இருந்த ஹோம் தியேட்டரில் நிரஞ்சனன் என்றோ பிடித்த படம் என்று சொல்லியிருந்த ஒன்றை ஓடவிட்டு அனைவரையும் அழைத்தாள்.

நிரஞ்சனனுக்கு மட்டுமல்ல வீட்டில் இருக்கும் மற்றவர்களுக்கும் சிறிது மனது வேறு சிந்தனைகளை கொண்டுபோகும் என்று தான் இப்படி செய்தாள். ஆனால் அவள் செய்ததோ வேறு விதமாய் திரும்பியது.. 

சுந்தரியோ “நீ பாக்கனும்னா பாரும்மா…” என்றிட, நித்யாவும் “இல்லண்ணி எனக்கு எழுதணும்..” என்றிட, அடுத்து ராதிகா கணவன் முகம் பார்க்க,

“நீ பாரு..” என்றுவிட்டான்..

பொறுமை பொறுமை என்று இழுத்து இழுத்து பிடிப்பதெல்லாம், சிறிது சிறிதாய் ஆட்டம் காண ‘ச்சே எல்லாம் எப்படியோ போங்க…’ என்று மீண்டும் தானும் தன் மகனும் என்று ஒடுங்க ஆரம்பித்தாள் ராதிகா. இருந்தும் வீட்டில் அனைவரோடும் சுமுகமாய் இருப்பது போலவே இருக்க, நிரஞ்சனன் தேவைக்கு மட்டும் இப்போது அவளிடம் பேசத் தொடங்கினான்.

இடைப்பட்ட நாட்களில், ராதிகாவிற்கு மனதினில் ஒரு எண்ணம், நிரஞ்சனனுக்கு தன்னை பிடிக்கவில்லையோ என்று. ஆரம்பத்தில் இருந்து நடந்தவைகளை எல்லாம் கோர்த்து கோர்த்து பார்த்தாள். அப்படியொன்றும் அவன் தன்னோடு உறுகி கரைந்தது போல் இல்லை என்றே தோன்றியது.

இத்தனைக்கும் இப்படியான ஒரு கடினமான சூழலில், நிச்சயம் எந்தவொரு மனிதனும் தன் மனைவியிடம் மனம் விட்டு பேசுவான்.. அதிலும் பிள்ளை பெற்று வேறு இருக்கிறாள். பிள்ளை மீது வந்த பாசம், மனைவி மீதும் அதிகரிக்கும்.. தன்னுடைய ஆறுதலுக்காகவேணும் மனைவியிடம் பேச நேரம் பார்ப்பான்..

ஆனால் இங்கே அதெல்லாம் இல்லை..

எல்லாம் சேர்த்து சேர்த்து. ராதிகாவிற்கு மனதில் இப்போது தோன்ற ஆரம்பித்த ஒரு எண்ணம், நிரஞ்சனன் தன்னோடு பிடித்து வாழ்வதில்லை.. கடைமைக்கு என்று ஒரு வாழ்வு வாழ்கிறான்.. அவ்வளவே என்று நினைத்தாள். சுந்தரியும், நித்யாவும் ராதிகாவோடு எப்போதும் போல் இருந்தாலும், ஒரு எல்லைக்கு மேலே அவர்களிடம் இவளால் நெருங்க முடியவில்லை. அது ஏன் என்றும் தெரியவில்லை. எல்லாம் சேர்த்து ராதிகா மொத்தமாய் குழம்பிப் போனாள்.

அன்று, சுந்தரிக்கும் குணசேகரனுக்கும் திருமண நாள் போல, அது ராதிகாவிற்குத் தெரியாது. சுந்தரி காலையில் இருந்தே கண்ணீர் சிந்தியபடி இருக்க, நித்யா கல்லூரி கிளம்பிச் சென்றுவிட்டாள். ராதிகா தான் சுந்தரியை கவனித்தவள்,

நிரஞ்சனனிடம் “அத்தை என்னவோ ரொம்ப டல்லா இருக்காங்க… என்னன்னு கொஞ்சம் கேளுங்க..” என்று சொல்ல,

“என்னாச்சு…” என்றபடி அவனும் எழுந்து அம்மாவிடம் செல்ல, மகனின் தோளில் சாய்ந்துகொண்டு சுந்தரி ஒருபாடு அழுது தீர்த்தார்.

“இன்னிக்கு எங்களுக்கு கல்யாண நாள்டா நிரஞ்சன்…” என்ற அம்மாவிற்கு என்ன சொல்லி ஆறுதல் சொல்ல என்று தெரியவேயில்லை..

நிரஞ்சனன் அம்மாவோடு இருக்க, அத்துவோ அன்றென பார்த்து அப்படியொரு அழுகை அழுது தீர்த்தான். காரணமும் தெரியவில்லை. பசியுமில்லை. உடல் நோவும் இல்லை. இருந்தும் அப்படியொரு அழுகை.

ராதிகாவிற்கோ ஏன் என்றே விளங்கவில்லை. பயமாய் வேறு போனது. மூச்சை அடக்கி அடக்கி சிறுவன் அழ, அவனைத் தூக்கிக்கொண்டு கீழே வந்தவள் “ஏன் அழறான்னு தெரியலை..” என்று சுந்தரியிடம் சொல்ல,

நிரஞ்சனனுக்கு அந்நேரம் என்று பார்த்து சுள்ளென்று கோபம் வந்தது.

“பிள்ளை அழறான்னா இப்படிதான் ஒன்னும் தெரியலைன்னு வந்து நிப்பியா??” என்று கேட்க, ராதிகாவிற்கும் அடுத்த நொடி பட்டென்ற கோபம் வந்ததுதான்.

எதுவும் பேசக்கூடாது என்று அமைதியாய் நிற்க, சுந்தரியோ பேரனைத் தூக்கி சமாதானம் செய்ய முயல, அடுத்து ஒரு இருபது நிமிடங்கள் கழித்துத்தான் அழுகையை நிறுத்தினான் அத்து.

அவன் அழுகை நின்றபின்னே தான் ராதிகாவிற்கு சுவாசமே இயல்பாய் வந்தது.. அதன் பின் சிறுவன் சிறிது நேரத்தில் இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டாலும், ராதிகாவிற்கு ஒரு பயம். எங்கே திரும்பவும் அழுது விடுவானோ என்று.

நிரஞ்சன் வேறு வீட்டினில் இருக்கவும், மதியமும் சரி, அதற்கு அடுத்து வந்த பொழுதும் சரி “ஏங்க.. கூட இருங்களேன்..” என்று சொல்லிக்கொண்டே இருந்தாள்.

முதலில் சிறிது நேரம் இருந்தவன், பின் வெளியில் வேலை என்று கிளம்பிச் செல்ல, அவன் கிளம்பிச் சென்ற சிறிது நேரத்தில் அத்து மீண்டும் அழத் தொடங்க, ராதிகா முற்றிலும் பயந்துபோய் உடனே கணவனுக்கு அழைத்துவிட்டாள்.

“ஏங்க ப்ளீஸ் சீக்கிரம் வாங்க.. அத்து அழறான்..” என, நிரஞ்சனனுக்குமே பயம் வந்து ஒட்டிகொண்டது. என்னானதோ என்று..

அடித்து பிடித்து அவனும் வீட்டிற்கு வர, ராதிகா கணவனுக்கு அழைத்து வா என்ற சில நொடிகளிலேயே அத்து அழுகையை நிறுத்தியிருக்க, ராதிகா மகனைத் தூக்கிக்கொண்டு தோட்டத்திற்கு வந்தவள் அவனுக்கு வேடிக்கைக் காட்டிக்கொண்டு இருக்க, சிறுவன் அழுகையில் இருந்து முற்றிலும் சிரிப்பிற்கு மாறியிருந்தான்.

“அப்பா.. இப்போ வந்திடுவார்டா தங்கம்.. என் பட்டுக்குட்டி.. உன் பேரை சொன்னா போதும் அப்பா ஓடி வந்திடுவார்..” என்று ராதிகா மகனை செல்லம் கொஞ்சிக் கொண்டு இருக்க,

காலையில் இருந்து நடந்தவைகளை எல்லாம் வைத்து, அதிலும் இப்போது மகனுக்கு என்னானதோ என்று பதற்றமாய் வந்த நிரஞ்சனன் ராதிகாவின் இந்த வார்த்தைகளை அப்படியே தவறாய் புரிந்துகொண்டான்.

ராதிகா இவன் வந்தது தெரியாது, மகனோடு இன்னமும் செல்லம் கொஞ்சிக் கொண்டு இருக்க,

“என்ன.. பிள்ளையை காட்டி என்னை இழுக்கணும்னு நினைக்கிறியா??!!” என்று நிரஞ்சனன் கேட்ட கேள்வியில் தூக்கிவாரிப் போட, மகனை இறுக்கமாய் பிடித்தபடி திரும்பிப் பார்த்தாள் ராதிகா.. அவளின் கண்களில் அப்படியொரு வலி தெரிந்தது.

‘கடைசியில் இத்தனை கேவலமாகவே நீ என்னை நினைக்கிறாய்..’ என்று பார்த்தாள்.

Advertisement