Advertisement

அத்தியாயம்  – 15

குணசேகரன் இருந்திருந்தால்….

இந்த இரண்டு வார்த்தைகளும், ஒவ்வொருவர் மனதில் ஒவ்வொரு எண்ணங்களைக் கொடுக்க, நிரஞ்சனன், ராதிகா இருவருமே ஒரே எண்ணத்தை கொடுத்தது..

‘அப்பா மட்டும் இருந்திருந்தா இதெல்லாம் நடந்தே இருக்காது..’ என்று அவனும்..

‘மாமா மட்டும் இருந்திருந்தா.. கண்டிப்பா இந்நேரம் எல்லாமே நல்லபடியா இருந்திருக்கும்..’ என்று அவளும் நினைத்தனர்.

அதுவும் இப்படியானதொரு நினைப்பு வருவதற்கு காரணமே சுந்தரி கேட்ட ஒரு விசயம் தானே..

மகளின் திருமணத்தை முன்னிட்டு யார் தாரைவார்த்து கொடுப்பது என்ற கேள்வியை முன் வைக்க, அதிலும் ராதிகா இதற்கு சம்மதம் சொல்லிச் செல்வாள் என்பது அங்கே யாருமே எதிர்பாராத ஒன்று.

சுந்தரிக்கோ ‘திடீர்னு என்னாச்சு இவளுக்கு..’ என்று பார்க்க,

நிரஞ்சனனோ ‘நிஜமாவே இவதான் சொல்றாளா..’ என்று பார்க்க, நித்யாவோ எதுவும் புரியாது நின்றாள்.

“ம்மா என்னாச்சும்மா…” என,

“தெரியலை நித்யா.. உங்க மாமியார் கேட்டாங்க யார் தாரைவார்த்து கொடுக்கிறதுன்னு.. அவங்க அண்ணா அண்ணியை நிக்க வைக்கலாமான்னு கேட்டாங்க… நான் நிரஞ்சன் ராதிகாவை நிக்க சொன்னேன்.. ஆரம்பத்துல முடியாதுங்கற போல சொன்னா.. இப்போ இப்படி சொல்லிட்டு போறா..” என்று சுந்தரியும் சொல்ல, அவர் அறியவில்லை தானும் சியாமளாவும் பேசியதை ராதிகா கேட்டிருப்பாள் என்று.

இது நடந்தும் கூட நான்கு நாட்கள் மேலானது. ஆனால் இன்னமும் ராதிகா மற்றும் நிரஞ்சனன் மனதில் அதே எண்ணம். அதே உணர்வு.

குணசேகரன் இருந்திருந்தால் என்று..

ராதிகா, அவளின் வயிற்றினில் அத்துவை சுமந்த நேரம், சிறிது காலம் தாய் வீட்டில் இருந்துவிட்டு கணவன் வீடு வந்தாள். இனியாவது நிரஞ்சனன் தன்மீது கவனம் செலுத்துவான் என்ற நம்பிக்கையில் வந்தவளுக்கு,

முதல் அதிர்ச்சி, நிரஞ்சனன் அப்போதென பார்த்து ஒரு மாதம் வெளியூர் செல்ல வேண்டிய நிலை.

“என்னங்க நீங்க… கண்டிப்பா போகனுமா??!!” என,

“இது ஒரு பெரிய சான்ஸ் ராதிகா.. என்னை நம்பி அவ்வளோ பெரிய பொறுப்பை கொடுத்திருக்காங்க.. என்ன அவங்க சொல்ற ஒரே விஷயம்.. நாங்க அங்க வந்து எல்லாம் சரி பார்க்கணும் அதான்..” என்று நிரஞ்சனனும் சொல்ல, அவன் சொல்வது எல்லாம் சரிதான் என்றாலும் கூட ராதிகாவால் அதனை ஏற்க முடியவில்லை.

மனது ஏமாற்றமாய் உணர்ந்தது.

குணசேகரின் நண்பர் ஒருவர், பெரும் தொழில் அதிபர். இடையில் திடீரென அனைத்தும் சரிய, ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்திருப்பது தெரிய வர, நம்பிக்கையான ஒருவரிடம் கணக்கு வழக்குகளை ஒப்புவித்து சரி பார்க்க சொல்லவேண்டும் என்று நினைத்து, நிரஞ்சனனை அழைத்தார்.

சொல்லப்போனால் அவனுக்கு இது ஒரு சவால் தான்.

அவரின் தொழில் ஒன்றோ இரண்டோ அல்ல.. ஏழெட்டு இருந்தது. எப்படியும் நாள் பிடிக்கும் தானே..

ஆனாலும் இதை திறம்பட செய்து முடித்தால், அவர் மூலமாய் அவனுக்கு நிறைய வாய்ப்புகள் கிட்டும். அவனின் பெயருக்கும், தொழில் ஸ்ரத்தைக்கும் ஒரு மேன்மை கிட்டும் என்று நினைத்தான்.

குணசேகரும் “நிரஞ்சன்.. இதைமட்டும் சரியா பண்ணிடு.. அவனை அவனை வச்சே உனக்கு நிறைய பேர் அறிமுகம் ஆவாங்க…” என,

“சரிப்பா…” என்றுவிட்டான்.

இது ராதிகா இங்கே இவர்களின் வீட்டிற்கு வருவதற்கு முன் எடுத்த முடிவு, அவள் வேறு வந்துவிட, நிரஞ்சன் அதை அவளிடம் சொல்ல, திக்கென்று தான் ஆனது ராதிகாவிற்கு.

தான் இவனை நினைத்து வந்தால், இவனுக்கு தன்மீது சிறு எண்ணம் கூட இல்லையா, முடிவு செய்வதற்கு முன்னம் என்னிடம் ஒருவார்த்தை கலந்து பேசியிருக்க வேண்டாமா??!! என்று தோன்ற, அதை கேட்கவும் செய்தாள்.

“ஏங்க… பேபிக்கு இப்போதான் மூவ்மென்ட் தெரியுது.. நா.. நான் உங்களோட இருக்கணும்னு ஆசைப்பட்டு வந்தா.. நீ.. நீங்க ஒன் மன்த் ஆகும்னு சொல்றீங்க.. டிசைட் பண்றதுக்கு முன்னம் ஒருவார்த்தை என்கிட்டே கேட்கத் தோணலயா….” என,

“ஷ்..!!! ராதிகா.. என்ன இது… இது நான் விரும்பி பண்ற ஒரு தொழில்.. அதையும் தாண்டி இது எனக்கு ஒரு சேலஞ் கூட.. இங்க இருந்தே என்னால செய்ய முடியும்.. ஆனா அங்க இருந்து செஞ்சா இன்னும் சீக்கிரம் முடிக்க முடியும்..” என்று அவனும் சொல்ல, அவளுக்கு மனது சமாதானம் ஆகவேயில்லை.

நிரஞ்சனன் ஊருக்குச் செல்லும் முடிவினில் உறுதியாய் இருக்க, ஒருநிலைக்கு மேல் எது சொல்லியும் பிரயோஜனம் இல்லை என்று எதையும் சொல்வதையே விட்டுப்போனாள் ராதிகா.  மனதில் எழும் இயல்பான எண்ணங்களை கூட அவள் வெளியில் சொல்லிக்கொள்வது இல்லை.

அவளின் உலகம் எல்லாம், அவளும் அவள் வயிற்றினில் இருக்கும் குழந்தை என்ற நிலைக்கு சென்றுவிட, ஊருக்குச் சென்ற நிரஞ்சனன் அவ்வப்போது அழைத்து பேசினாலும், இவளும் கடமைக்கே என்று பேசுவாள் அவ்வளவே.

ஆனால் ஒன்று, கணவனோடு எத்தனை மன கசப்பு என்றாலும், பிணக்கு என்றாலும் அதை கணவன் வீட்டினரிடம் காட்டுவதில்லை ராதிகா.. வீட்டில் சுந்தரியிடமும், நித்யாவிடமும் குணசேகரனிடமும் நல்ல முறையில் தான் நடந்துகொண்டாள். அவர்களும் அவளை அப்படிப் பார்த்துக்கொண்டார்.

நிரஞ்சனன் மனதிலோ ‘இதை மட்டும் சரியா பண்ணிட்டா, இதுல வர்ற சேலரி வச்சு அப்படியே ராதிகாக்கு பெருசா சர்ப்ரைஸ் கொடுக்கணு`ம்… இல்லை அவ நேம்ல ஏதாவது இன்வெஸ்ட் பண்ணனும்..’ என்று எண்ணினான்.

இப்போதும் செய்யலாம் தான். எதுவும் இல்லை என்ற நிலை எப்போதுமே இல்லை. ஆனால் இத்தனை நிரஞ்சன் தனக்குக் கிடைத்த பெரிய வாய்ப்பாக எண்ணினான். அப்படியிருக்கையில், இதன் மூலம் வரும் தொகையில் தன் மனைவிக்கு செய்வது என்பது சிறப்பு அல்லவா..        

என்ன இதனை அவன் மனதினில் எண்ணிக்கொண்டான். அவளிடம் சொல்லவில்லை. சொல்லியிருந்தால் கூட ஏதோ ஒருவிதத்தில் ராதிகாவின் மனதில் கணவன் தன்னைப் பற்றி சிந்திக்கிறான் என்ற எண்ணம் வந்திருக்குமோ என்னவோ..??!!

ஒரு மாதம் என்பது எப்படி கடந்து போனது என்று கேட்டால், ராதிகா சொல்வாள் ‘ம்ம் போச்சு…’ என்று..

இப்படிதான் அவளின் மன நிலை இருந்தது. ஒருவித சோர்வு மனதில் வந்து ஒட்டிக்கொள்ள, அந்த மாதம் அவள் மருத்துவ பரிசோதனைக்குச் செல்கையில் சுந்தரி தான் உடன் வந்தார்.

மருத்துவரோ “பேபி நல்லாருக்கு.. பட்.. ராதிகா உங்களுக்கு என்னாச்சு.. யூ லுக் சோ டல்..” என,

“ஐம் ஆல்ரைட் டாக்டர்..” என்றாள் ராதிகா..

“ம்ம் அப்படியா.. பார்த்தா தெரியலை.. என்னவோ உங்களுக்குள்ள.. ப்ரெஷர் ஆல்சோ நார்மலா இல்லை..” என, சுந்தரி அஞ்சியே போனார்.

“கொஞ்சம் அவங்களை ரிலாக்ஸா இருக்க வைங்க.. வெளிய வாக்கிங் எல்லாம் கூட்டிட்டு போங்க…” என்ற மருத்துவர், மேலும் சில அறிவுரைகளை சொல்லி அனுப்ப,

“இனிமே நீ தோட்டத்துல வாக்கிங் போகாத ராதிகா.. நீயும் நானுமா சேர்ந்து தினம் வெளிய நடந்து போயிட்டு வரலாம்..” என்று சுந்தரி சொல்ல,

“ம்ம் சரிங்கத்தை…” என்றாள் அவள்.

ஆனால் அப்படி சென்ற நடை பயிற்சி, இன்னமும் அவள் மனதின் ஏக்கத்தை கிளறிவிட்டது. காரணம், ராதிகாவும் சுந்தரியும் நடைபயிற்சி செல்லும் நேரம், வேறொரு கர்ப்பிணி பெண்ணும், அவளுக்குத் துணையாய் அவளின் கணவனும் வர, தினம் தினம் அவர்களை சந்திக்க நேர்ந்தது.

கணவனின் கையைப் பிடித்துக்கொண்டோ, இல்லை அவனோடு ஏதேனும் கதை பேசிக்கொண்டோ, கண்ணில் ஒரு கனவோடும், முகத்தில் ஒரு பூரிப்போடும் நடந்துசெல்லும் அந்த பெண்ணைக் காண, ராதிகாவிற்கு அத்துனை ஏக்கமாய் இருக்கும்..

‘நானும் அவரோட இப்படி ஒருநாள் போகணும்…’ என்று எண்ணியவளுக்கு, ‘ம்ம் நடந்துட்டு தான் மறுவேலை..’ என்ற எதிர்மறை எண்ணமும் வந்து ஒட்டிக்கொண்டது.

அப்படி இப்படி என்று ஒருவழியாய் நிரஞ்சனன் அவனுக்கான வேலையை முடித்துக்கொண்டு வந்தான். அதுவும் வெற்றிகரமாய்… அவனுக்கு அப்படியொரு சந்தோசம் என்றால், குணசேகரனுக்கு கேட்கவே வேண்டியதில்லை.

“எனக்குத் தெரியும் நிரஞ்சன்.. நீ இதை சரியா செய்வன்னு…” என்று மகனைப் பாராட்ட,

‘அப்பாடி… இனியாவது எல்லாம் சரியாகுமா…’ என்ற நினைப்பு ராதிகாவிற்கு.

‘இவள் என் மனைவி…’ என்ற எண்ணம் நிரஞ்சனனுக்கு இருக்கிறதா??!! அந்த யோசனை தான் ராதிகாவிற்கு.

தான் நினைப்பது போல் அவனும் தன்னை நினைக்கிறானா??!! அந்த கேள்வி தான் அவளுக்கு..

சுந்தரியோ மகனிடம் மருத்துவர் சொன்னதை சொல்ல “ஏன் ராதிகா.. ரிலாக்ஸா இருக்க வேண்டியது தானே..” என்று அவன் கேட்க,

குணசேகரன் “நீ வந்துட்டல்ல.. இனி எல்லாம் சரியாகிடும்.. என்ன ராதிகாம்மா..” என்று கேட்க, அவளையும் மீறி ஒரு புன்னகை வந்தது.

குணசேகரன் மகனை அழைத்து “கொஞ்சம்  அந்த பொண்ணோட இரு நிரஞ்சன்.. நீ ஊருக்கு போனதுல ராதிகா எப்படியோ ஆகிடுச்சு..” என்று அறிவுரை சொல்ல,

“சரிப்பா…” என்றவனும் அப்பாவின் சொல்லை அப்படியே கடைபிடிக்க,     அதன்பின்னே நிரஞ்சனன் நான்கு நாட்கள் வீட்டிலேயே தான் இருந்தான்.

கணவன் வீட்டில் இருப்பது மகிழ்ச்சிதான் என்றாலும், அது தன் மாமனார் சொல்லித்தான் இருக்கிறான் என்ற எண்ணம் ராதிகாவினுள் ஆழப் பதிந்தது. தான் சொல்லியிருந்தால் கேட்டிருப்பானா??!! என்று நினைத்தாள்.

இருந்தும், அவன் இருக்கும் அந்த பொழுதுகளை அவள் கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை. எதோ இருக்கிறானே என்று எண்ணிக்கொண்டாள்.  அவன் தான் ராதிகாவை நடைபயிற்சி அழைத்துச் சென்றான்.. பார்த்து பார்த்து கவனித்தான். ராதிகாவிற்கோ நடப்பதெல்லாம் கனவா என்று இருந்தது.

நம்பிடவும் முடியவில்லை. இருந்தாலும் ‘இதுபோல எப்பவுமே இருக்கணும்…’ என்ற ஆசை அவளுள் மேலேற, நிரஞ்சனன் கைகளை இறுகப் பற்றிக்கொண்டாள்.

அவனுக்குமே அவன் மனதில் இருந்த உற்சாகத்தினால் “என்ன ராதிகா.. இப்போ ஹேப்பியா…” என,

“ம்ம்ம் என்னைவிட உங்க பையனுக்கு தான் ரொம்ப ஹேப்பி போல.. அப்போ இருந்து உள்ள பாக்சிங் பண்றான்..” என்று அவளும் சொல்ல,

“ஓ!!! அப்போ பையன்னு நீயே டிசைட் பண்ணிட்டியா..” என்றவன் “டேய் குட்டி இப்போவே நீ டிஸ்யூம் டிஸ்யூம் பண்றியா…” என்றவனுக்கு, ராதிகாவிற்கு என்ன சர்ப்ரைஸ் கொடுப்பது, அல்லது அவளுக்கு எதில் முதலீடு செய்வது என்ற குழப்பம்.

‘ம்ம் யோசிச்சு செய்யணும்…’ என்று அவன் நினைத்திருக்கும் வேலையில், குணசேகரன் மகனிடம் “எதுவும் ப்ளான் வச்சிருக்கியா நிரஞ்சன்..” என,

“ஏன்ப்பா..” என்றான்

“இல்லடா.. நித்யாக்காக ஷேர் மார்கெட்ல கொஞ்சம் இவெஸ்ட் பண்ணலாம் பார்த்தேன்.. இப்போ நல்ல க்ராப் இருக்கு.. என்னோடதுல இருந்து இப்போ பணம் எடுத்தா டாக்ஸ் கட்டுறப்போ கேள்வி மேல கேள்வி வரும்.. சோ இந்த பணம் நீ இதுல போட்டா பெட்டர்னு நினைக்கிறேன்.. நான் கொஞ்சநாள்ல திரும்ப உனக்கே இந்த பணம் கொடுத்திடுறேன்.. இல்லை உனக்கு வேற ப்ளான் எதுவும் இருக்கா..” என,

“ப்பா.. என்னப்பா நீங்க.. திரும்ப கொடுக்கிறேன் அது இதுன்னு.. இப்போ என்ன நித்யாக்கு இதுல போடணும்.. அவ்வளோதானே.. பண்ணிடலாம்..” என்றான் தன் மனதில் இருந்த எண்ணங்களை மறைத்து.

தங்கைக்காக என்று அப்பா கேட்கையில், இல்லை நான் என் மனைவிக்காக செய்யவேண்டும் என்று இருக்கிறேன் என்று சொல்வது அப்படியொன்றும் சரியாய் இருக்காது என்பது அவனின் முடிவு.

அப்படியே சொல்லியிருந்தாலும், குணசேகரன் அதை தவறாய் எடுத்திருக்க மாட்டார் தான். ஆனாலும் நிரஞ்சன் சொல்லவில்லை. இப்போது வரைக்கும் கூட..      

அடுத்தடுத்து மாதங்கள் நகர்ந்தோடி, வளைகாப்பு முடிந்து, பின் ராதிகாவின் பிரசவ நாளும் வர, சுகப் பிரசவம் தான் ஆனது. அழகாய் கொழுகொழுவென அதோஷஜன் பிறக்க,

பிறந்தது மகன் என்று தெரியவுமே சொல்லிவிட்டாள், ‘இந்த பேரு தான் வைக்கணும்..’ என்று.

வீட்டினரும் சரி என்றிட, குணசேகரன் “பேரன் பிறந்திருக்கான்.. ஹாஸ்பிட்டல்ல இருந்து முதல்ல எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போகணும்னு நினைக்கிறேன்..” என்று மணிவண்ணனிடம் சொல்ல,

“அப்படிங்களா.. லேடிஸ் முடிவு என்னன்னு தெரியலையே..” என்றவர் ராணியிடம் கேட்க

“எப்படிங்க.. டெலிவர் ஆகி மூணு மாசமாவது நம்மதான் செய்யணும்..” என,

சுந்தரிக்குமே மருமகளையும், பேரனையும் தங்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்லவேண்டும் என்ற ஆசையில் “நாங்க இத்தனை பேர் இருக்கோம்.. வேலைக்கு ஆள் இருக்கு.. நல்லா பார்த்துப்போம்..” என்று கேட்க, ஒருநிலைக்கு மேலே மறுத்துப் பேச முடியவில்லை.

ஆக இப்படித்தான் ராதிகா, அத்துவை தூக்கிக்கொண்டு தன் புகுந்த வீடு வர, முதல் ஒரு மாதம் மிக நன்றாய் போனது. கண்ணில் வைத்து பார்த்துக் கொள்வது போல் தான் பார்த்துக்கொண்டனர்.

நிரஞ்சனன் கூட, இப்போதெல்லாம் அதிக நேரம் வீட்டினில் இருந்தான். வேலை இருந்தாலும் கூட வீட்டில் இருந்துகொண்டு பார்த்தான். இல்லையோ அதெல்லாம் ஒதுக்கித் தள்ளி வீட்டிற்கு வர பழகினான்.

நித்யா ஒருநாள் சும்மா இருக்காது “பார்ரா அண்ணா.. மகன் வரவும் மட்டும் இப்போதான் வீடே கண்ணுக்குத் தெரியுது போல…” என்று கிண்டலடிக்க,

“ஆமா.. என் மகன்.. அவனுக்காக நான் எதுவும் செய்வேன்..” என்று நிரஞ்சனனும் சொல்ல, ராதிகா சற்று தள்ளி நின்று ஒருவித நிராசையோடு கணவனைப் பார்த்தாள்.

அவளைப் பொறுத்தமட்டில், இந்த திருமணம் என்பது ‘நாங்களும் கல்யாணம் பண்ணோம்.. குழந்தை பெத்துக்கிட்டோம்..’ என்கிற ரீதியில் தான் இருந்தது.

அதை தாண்டி, எண்ணி எண்ணி மகிழவோ, நினைத்து நினைத்து சிலிர்க்கவோ, இல்லை தனக்கும் நிரஞ்சனுக்குமான ஒரு ஆத்மார்த்த தருணங்கள் என்பது எல்லாம் யோசித்துப் பார்த்துகூட நினைவில் வரவில்லை.

உடலும் உடலும் மட்டும் புரிந்துணர்வு கொண்டால், அது சிறந்த திருமண வாழ்வு என்பது ஆகாதே..

அதையும் தாண்டி… ராதிகா நிரஞ்சனனிடம் எதிர்பார்ப்பது எல்லாம் ஒன்றே ஒன்றுதான்.. அவன் மனதில் தனக்கான இடம் என்பது எது??!!

அதை அவன் உணரவேண்டும்.. அவளுக்கும் உணர்த்திட வேண்டும்..

எப்படி ராதிகா ஒவ்வொரு நொடியும் கணவன் மீது காதலைப் பொழிகிறாளோ அந்தளவு இல்லை என்றாலும் கூட நிரஞ்சனன் தன் வீட்டினருக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை போல தனக்கும் கொடுத்திடவேண்டும்..

இதெல்லாம் நடந்துவிட்டால், முன்னே மனதில் இருந்த ஏமாற்றங்கள் கூட மறைந்துவிடும் என்று அவளாகவே ஒரு கணக்கும் போட்டுக்கொண்டாள்.

நாட்களும் நகர்ந்துகொண்டே இருந்தது.. வீட்டினர் அத்தனை பேரின் கவனமும் அதோஷஜன் மீது தான் எப்போதுமே.. தினம் ஒருமுறை ராணியும் மணிவண்ணனும் வந்து பார்த்துவிட்டு செல்வர். ராணிக்கு மகளை தங்களோடு அழைத்துச் சென்று சிறிது நாட்களாவது வைத்து கவனித்து அனுப்பவேண்டும் என்ற ஆசை.

அதை சொல்லியும்விட்டார் அவளிடம்..

“ம்மா.. இப்போ என்னம்மா.. அடுத்த வாரம் போல இங்க எல்லார்கிட்டயும் சொல்லிட்டு வர்றேன்..” என்றாள்.

அவளுக்குமே தாய் வீட்டில் சீராட ஆசைக்கொண்டது உள்ளம்..

இங்கேயும் அவளுக்கு பெரிதாய் வேலை எதுவுமே இல்லை. அத்துவிற்கு பாலூட்டுவது தவிர.. பகல் எல்லாம் சுந்தரியும் வேலையாட்களும் பார்த்துக்கொண்டால், இரவில் நிரஞ்சனன் கண் விழித்து கவனிப்பான்..

ராதிகா விழித்தால் கூட “நான் கொஞ்ச நேரம் வச்சிருக்கேனே..” என்பான்.

மகனை இரு கைகளிலும் ஏந்தியே, நடந்தபடி அவனை உறங்கச் செய்வான். குழந்தை உறங்கி, பின் நிரஞ்சனன் வந்து உறங்கும் வரைக்கும் கூட நித்யா விழித்திருப்பாள். அடுத்து நிரஞ்சனன் எதுவும் தன்னோடு பேசுவானா என்று??!!

அப்படியே அவன் பேசினாலும், அது குழந்தையைப் பற்றிய பேச்சாக மட்டுமே இருக்கும்..

அதையும் தான் ‘உனக்கு என்ன பண்ணுது.. அம்மா வீட்டுக்கு போகணும் போல இருக்கா.. இங்க எல்லாம் ஓகே வா… ’ இப்படி ஏதாவது அவளுக்கான அக்கறை வார்த்தைகள் எதுவும் வருமா என்று பார்த்தால், அதெல்லாம் அவன் யோசனை செய்ததாகக் கூட தெரியவில்லை அவளுக்கு.

‘ம்ம்.. எல்லாமே குழந்தைக்காகத்தான்..’ என்று அவளாகவே அப்போதும் ஒரு முடிவிற்கு வர, அதன்பொருட்டே சுந்தரியிடம் “அத்தை அம்மா வீட்டுக்கு போய் கொஞ்ச நாள் இருந்துட்டு வரட்டுமா.. அவங்களுக்கும் ஆசை இருக்கும்தானே..” என,

“ம்ம் ஆமா ராதிகா.. மூணு மாசம் ஆச்சுல்ல.. ஒரு நல்ல நாள் பார்த்து போயிட்டு வாங்க.. மாமாவை நாள் பார்க்க சொல்றேன்..” என்று சுந்தரியும் சொல்ல, குணசேகரனும் நாள் பார்த்துச் சொன்னார்..

நல்ல நாள்.. நல்ல நேரம்.. என்று எல்லாம் பார்த்தார்..

இத்தனை பார்த்தவர், தன்னைப் பார்க்கத் தவறிவிட்டார்.

கடந்த சில தினங்களாகவே அவருக்கு உடலில் ஒரு சில மாற்றங்கள்.. திடீரென மூச்சு அடைப்பது போலிருந்தது. பின் சிறிது நேரத்தில் சீராக சுவாசம் வர, முதலில் ‘வாய்வு..’ என்று எண்ணிக்கொண்டார்.

பின் இரண்டு நாள் கழித்து, உண்டுவிட்டு வந்து அமர்ந்தவருக்கு நெஞ்சை அடைப்பது போல் வர, வேகமாய் போய் அவர் எப்போதும் உண்ணும் மாத்திரையை போட்டுக்கொண்டு படுத்துக்கொண்டார். வீட்டில் இத்தனை பேர் இருக்க யாரேனும் ஒருவரிடமாவது சொல்லியிருக்கலாம்..

வீட்டில் அனைவரோடும், அத்துவை கவனித்துக்கொண்டு சந்தோசமாய் இருக்க, தான் எதுவும் சொல்லி, அதனை கெடுக்க விரும்பாதவர், தானாகவே யாருக்கும் தெரியாமல் மருத்துவரிடம் வந்து காட்ட, அவரோ பரிசோதனை செய்தவர்,

‘ஹார்ட்ல ப்ளாக் ஹெவியா இருக்கு.. ஏற்கனவே டூ டைம்ஸ் அட்டாக் வேற வந்திருக்கு.. இம்மிடியட்டா வந்து அட்மிட் ஆகுங்க..’ என,

‘வீட்ல சொல்லிட்டு வந்து அட்மிட் ஆகுறேன்..’ என்றவர், வீட்டிற்கு வந்தபோது தான் சுந்தரி நல்ல நேரம் நல்ல நாள் பார்த்து சொல்ல சொன்னது.

சரி பேரனையும், மருமகளையும் அனுப்பிவைத்துவிட்டு சொல்வோம் என்றிருந்தாரோ என்னவோ, விதி அவருக்கு அந்த வாய்ப்பை அளிக்கவே இல்லை.

ராணி, மணிவண்ணன் இருவரும் ராதிகாவையும், அத்துவையும் அழைக்கவென்று வந்திருக்க, நிரஞ்சனனுக்கு மகன் அங்கே செல்வது வருத்தம் என்றாலும், மனைவிக்கு இந்நேரத்தில் தாய் வீட்டு உபசரிப்புத் தேவை என்பதனை உணர்ந்து அமைதியாகவே இருக்க, அனைவரிடமும் ராதிகா சொல்லிக்கொண்டு கிளம்ப,

“தாத்தா பாரு.. தாத்தாக்கு பாய் சொல்லு அத்து…” என்று மகனின் தளிர் கரத்தினை பிடித்து குணசேகரனைக் காட்டி மெதுவாய் ஆட்ட, குணசேகரும் அவர்களைப் பார்த்து புன்னகைத்தவர்,

“பாய்டா அத்துக்குட்டி.. பார்த்து ராதிகாம்மா…” என்றபடி, சோபாவில் இருந்து எழுந்தவர், அப்படியே வியர்த்துக்கொட்டி பொத்தென்று இருக்கையில் மீண்டும் அமர, அவரையும் அறியாது அவரின் கை அவரின் நெஞ்சை பிடிக்க, ராதிகாதான் முதலில் கவனித்தவள்

“மாமா…” என்று அதிர்ந்து அழைக்க, அனைவரும் அவர் அருகே செல்கையில் அனைத்தும் முடிந்திருந்தது..

பார்வை ஒருநிலையில் நின்றுவிட, சுவாசம் அற்று அவர் அப்படியே இருக்க, சற்றுமுன்னே புன்னகை சிந்திய மனிதர் தன்னுயிர் விட்டிருந்தார்.. 

Advertisement