Advertisement

அத்தியாயம் – 14

சுந்தரி இப்படி பேசுவார் என்பது யாருமே எதிர்பார்க்கவில்லை. நிரஞ்சனன் கூட அம்மாவின் மனதில் இத்தனை உண்டு என்று அறியவில்லை. அவனுக்கே அப்படியொரு அதிர்வு என்றால், பின்னே ராதிகாவின் நிலை சொல்லவும் வேண்டுமா??!!

சியாமளா, சுந்தரியிடம் கேட்டது நிஜம். யார் தாரைவார்த்து கொடுப்பது என்று. அதற்கு குணசேகரின் தம்பியும் அவரின் மனைவியும் தயாராகவே இருக்கிறார்கள்.

ஆனால் சுந்தரிக்கு, இதை சாக்காக வைத்தேனும், மகன் மருமகளை ஒருநிலையில் நிறுத்திடவேண்டும் என்ற ஆசை. இதைவிட்டால், வேறு சிறந்த வாய்ப்பும் கிட்டுமா என்பது சந்தேகமே.

மகளின் திருமணம் நல்லபடியாய் நடந்திட வேண்டும் என்பது ஒருபுறம் இருந்தாலும், மகனின் திருமண வாழ்வு என்பதும் இனியாவது சரியாகிட வேண்டும் என்ற எண்ணம் அந்த தாய்க்கு இருப்பதில் எவ்வித தவ்ருமில்லையே.

இருவரும் யோசிக்கட்டும் என்று சுந்தரி எழுந்து அறைக்குள்ளே சென்றிட, அங்கேயோ அதோஷஜனின் குரல் மட்டுமே கேட்டுக்கொண்டு இருந்தது..

“ப்பா.. ப்பா..” என்றும் “ம்மா.. இங்க பாரு…” என்றும்.

மகனின் பேச்சிலும், கன்னம் தொடுதலிலும் இருவரும் கொஞ்சம் சுய நினைவிற்கு வர, ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள கூட அத்துனை தயக்கமாய் இருந்தது. பார்க்கவே இப்படியெனில், இதில் பேசி ஒரு முடிவு எடுப்பது என்பது சாத்தியமா என்ன??!!

அத்து அவனின் அப்பாவிடம் எதையோ சொல்ல, “ம்ம் என்னடா??!!” என்றான் நிரஞ்சனனும்.

அதன்பின்னே தான் ராதிகா அதனை கவனிக்க, நேற்று உடைந்த அந்த ரிமோட் காரினைப் பற்றித்தான் மகன் சொல்கிறான் என்பதும் புரிய, நேற்று தள்ளி வைத்திருந்த கோபம் மீண்டும் வந்து ஒட்டிக்கொள்ள,

“அவனுக்கு இனிமே இவ்வளோ காஸ்ட்லியா எல்லாம் வாங்கித் தரவேணாம்..” என்றாள் எங்கோ பார்த்து.

அவள் தன்னிடம் தான் சொல்கிறாள் என்பதே நிரஞ்சனனுக்கு புரிய சில வினாடிகள் எடுக்க,

“ஏன்??!!” என்றான் அவனும் பார்வையை அவள்பக்கம் விடாது..

“ஏன்னா??!! கொண்டு வந்து ஒருமணி நேரம் கூட அது இல்லை.. உடைச்சாச்சு.. நான் இவ்வளோ காஸ்ட்லியா எல்லாம் போட்டு வாங்கித் தர மாட்டேன்.. அவனுக்கு விளையாட பொம்மை.. அதுக்குமேல பஸில், கலர் புக்ஸ் இப்படிதான் வாங்கித் தருவேன்.. காஸ்ட்லி திங்க்ஸ் ஹேண்டில் பண்ற வயசு எல்லாம் இல்லை அவனுக்கு…” என்றாள் படபடவென.

அவள் சொல்வதில் இருக்கும் கருத்து புரிந்தாலும், ‘இருந்திருந்து என் மகனுக்கு நான் வாங்கிக்கொடுத்தா அதை வேணான்னு சொல்றா…’ என்ற எண்ணமே எழ,

“என் பையன்.. என்ன வாங்கிக் கொடுக்கணும்னு எனக்குத் தெரியும்…” என்றான் இடக்காய்.

அதிலும் ‘என் பையன்…’ என்பதில் அழுத்தம் கொடுத்து சொல்ல, ராதிகாவிற்கு சுள்ளென்று வந்துவிட்டது..

“ஆமா.. உங்களுக்கு எல்லாம் தெரியும்.. எல்லாமே.. ரொம்பவே தெரியும்..” என்று எழுந்து நின்று அவனின் முகத்திற்கு முன்னே கோபமாய் பேசியவள்,

“அத்தை…” என்று அழைத்தபடி, சுந்தரியைக் காணச் செல்ல,

அவரும் இவர்களின் பேச்சினை எல்லாம் உள்ளிருந்து கேட்டபடி தான் இருந்தார். சரி இப்படியாவது இருவருக்கும் இடையில் பேச்சு ஆரம்பிக்கட்டும் என்று அவர் இருக்க, ராதிகாவோ அத்தை என்று அழைத்துக்கொண்டு உள்ளே வர “அ.. என்ன ராதிகா…” என்றார் ஒன்றும் தெரியாதவர் போல.

“நான் சொன்னதுல எதுவும் தப்பிருக்கா…” என,

“எ.. என்னம்மா??!!” என்றார் புரியாது கேட்பதாய்.

“ம்ம்ச் அதான் அத்தை.. இவ்வளோ காசு போட்டு வாங்கிக் கொடுத்து, அது ஒருநாள் கூட இல்லை.. வாங்கிக் கொடுக்கவேணாம் சொல்லலை.. அது பிள்ளைக்கு பிரயோஜனமா இருக்கனுமா இல்லையா??!!” என, முதல் முறையாய் அந்த வீட்டினில் அவளின் குரல், ஒரு உரிமையோடும், ஒருவித பொறுப்போடும் ஓங்கி ஒலிப்பதாய் இருந்தது சுந்தரிக்கும் அவரின் மகனுக்கும்.

சுந்தரி அமைதியாய் மருமகளின் முகம் பார்க்க “என்ன அத்தை.. நான் சொல்றது சரிதானே…” என்றாள் அழுத்தம் கொடுத்து ராதிகா.

எதோ இப்போது தான் அவள் அவளின் கூட்டில் இருந்து வெளி வருகிறாள் என்று புரிய, “அ.. ஆமா.. ஆமா ராதிகா.. சின்ன பசங்கதானே அவங்களுக்கு என்ன தெரியும்.. நம்ம தான் பார்த்து செய்யணும்..” என்று சுந்தரி மருமகளுக்கு ஆதரவாய் பேச,

நிரஞ்சனன் “ம்மா.. ஒரு ரிமோட் கார் வாங்கிக் கொடுத்தது குத்தமா.. என் மகனுக்கு நல்லதா வாங்கிக் கொடுக்கணும்னு அப்படி பண்ணிட்டேன்..” என்றான் தாங்கலாய் அவனும்.

“அதில்லடா…” என்று சுந்தரி சொல்ல வரும்போதே,

“ம்மா நீங்களும் புரியாம பேசாதீங்க…” என்று நிரஞ்சனனும் அங்கே வர, ராதிகா வெடுக்கென்று கழுத்தை திருப்பிக்கொள்ள,

‘பார்த்து.. சுளுக்கிட போகுது…’ என்று அவனையும் மீறி நிரஞ்சனன் மனம் எண்ண, அவனுக்கே அது கொஞ்சம் சுக உணர்வாய் தான் இருந்தது.

என்னவோ காரணமே இல்லாது ஒரு புன்னகை வந்து அமர்ந்துகொள்ள “அத்து.. வா.. நம்ம போய் இன்னொரு கார் டாய் வாங்கிட்டு வரலாம்..” என்று மகனை அழைக்க,

அவனோ “ஐ!!! அப்பா…” என்று ஆர்ப்பரிக்க, ராதிகாவிற்கு புசு புசுவென்று கோபம் வந்துவிட்டது.

“நான் சொல்லிட்டே இருக்கேன்…” என்று அவள் திரும்பவும் ஆரம்பிக்க, “வாடா போவோம்.. இங்க ஒரே நாய்ஸா இருக்கு…” என்று சொல்லியபடி அவன் மகனைத் தூக்கிக்கொண்டு பைக்கினை எடுக்க,

“ம்மா.. பாய் ம்மா.. பாய் பாட்டி…” என்று அத்து சந்தோசமாய் கை அசைக்க, பெண்கள் இருவரும் பின்னேயே வந்தவர்கள், சிறுவன் முகத்தினில் இருக்கும் புன்னகை கண்டு அப்படியே நிற்க, ராதிகாவிற்கு மகனின் முகத்தினில் இருக்கும் சந்தோசம் கண்டு அடுத்து வேறெதுவும் பேசிடவே முடியவில்லை.

சுந்தரிக்கோ மகனின் முகத்தினில் தெரியும் ஒரு மாற்றம்.. அவனின் அந்த புன்முறுவல் பேச்சு. பைக்கில் தன் மகனை அமர வைத்து தானும் அமர்ந்திருக்கும் ஒரு பெருமிதம், ஒரு அப்பாவாய் அவனின் அந்த தோற்றம், பார்க்க பார்க்க தெவிட்டவில்லை அவருக்கு.

ராதிகாவின் பார்வை, மகனைத் தொட்டு, பின் அப்படியே கணவன் பக்கம் மாற, அதுவரைக்கும் காத்திருந்தவன், அதன்பின்னே தான் பைக்கை கிளப்பிக்கொண்டு செல்ல, சுந்தரி இதனைப் பார்த்து சிரித்தவர், உள்ளே சென்றிட, ராதிகாவோ அடுத்த சில நிமிடங்கள் அப்படியே தான் வெளியில் நின்றிருந்தாள்.

வார்த்தைகளால் சொல்லி உணர்த்திட முடிய ஓர் உணர்வு அவளுள் இப்போது..

வாசல் படியில் ராதிகா நின்றிருக்க, உள்ளே அவளின் அலைபேசி சத்தம் கேட்க, “ராதிகா…” என்று சுந்தரி அழைக்கவும்,

உள்ளே போனவள் அவளின் போன் பார்க்க அழைப்பது அவளின் அப்பா எனவும் “ஹலோ ப்பா…” என்றாள் வேகமாய்.

“இன்னும் வீட்டுக்கு வரலையே ராதிகா நீ..” என்று அவர் கேட்க,

“நா.. நான் இன்னும் இங்கிருந்தே கிளம்பலப்பா…” என்றாள் இவளும் .

“ஓ!! சரி நீ பார்த்து வா.. இன்னும் வரலையேன்னு தான் கூப்பிட்டேன்..” என்று ஒரு அப்பாவாய் அவரின் அக்கறை அவரின் குரலில் தெரிய, இதே போல் தானே நிரஞ்சனனுக்கும் தன் மகன் மீது இருக்கும் என்று தோன்றியது.

“ம்ம் சரிப்பா..” என்று வைத்தவள், “அத்தை அப்போ நான் கிளம்பவா…” என்றாள். 

எப்போதும் ‘கிளம்புறேன்.. போகிறேன்..’ என்று பிடிவாதமாய் நிற்பவள், இப்போது ‘கிளம்பவா??!’ என்று அதுவும் குரலில் ஒரு அழுத்தம் கூட இல்லாது கேட்கவும், சுந்தரிக்கே அவளின் இந்த மாற்றம் மனதினில் ஒரு நம்பிக்கை கொடுத்தது.

“இரேன் ராதிகா… உனக்கும் இன்னிக்கு லீவ் தானே..”

“இல்லத்தை.. கொஞ்சம் வெளிய வேலை இருக்கு.. அத்துவ விட்டுட்டு அதெல்லாம் பார்த்துட்டு போகணும்னு இருந்தேன்.. ஏற்கனவே லேட்..”

“ம்ம் நித்யா வர்றப்போ நீ இருந்தா சந்தோசப் படுவா.. எப்படியும் ஏதாவது சொல்லனும்னு நினைப்பா.. எல்லாமே என்கிட்டயும்  நிரஞ்சன் கிட்டயும் சொல்லிட முடியாது இல்லையா..” என,

“ம்ம்…” என்றாள் யோசனையாய்.

“கல்யாணம் ஆகி போகப் போற பொண்ணு.. ஏதாவது மனசுவிட்டு பேசணும் நினைக்கலாம் இல்லையா…” என்று சுந்தரி அடுத்த தூண்டில் போட,

“ம்ம் சரிங்கத்தை… நித்யா வர வரைக்கும் இருக்கேன்..” என்றாள், சிறிது தயங்கி.

முன்னிருந்த தயக்கம் பெரிதாய் இப்போது இல்லை. ஆனாலும் அரவிந்தின் பெற்றோர்கள் வந்துவிட்டால் என்ன செய்வது, என்ன பேசுவது  என்ற யோசனை இருக்க, சுந்தரி மதிய சமையலுக்கு தயாராகிட, அதுவும் வீட்டினில் அவர் மட்டுமே இருக்க, ராதிகாவிற்கு வேறு வழியில்லை, அவரோடு சமையல் அறையில் போய் நின்றாள்.

“நான் ஏதாவது செய்யட்டுமா…” என்று.

“ஒன்னும் வேணாம் ராதிகா.. நீ உக்கார்…” என்று சுந்தரி பட்டும் படாது சொல்ல, “இல்லை.. எனக்கு போர் அடிக்குது…” என்றாள்,

“ம்ம்… சாதம் பருப்புதான் வைக்க போறேன்..” என்றவர் பேசிக்கொண்டே வேலையை செய்ய, ராதிகாவும் எதையோ உருட்டிக்கொண்டு இருந்தாள்.

முன்னே எல்லாம் இப்படி இல்லை. அங்கே சமையலுக்கு கூட ஆட்கள் இருந்தனர். ஆக சுந்தரி நின்று மேற்பார்வை மட்டுமே பார்ப்பார். ஒருநாள் சமையல் ஆள் வரவில்லை எனில் “பாரேன் வரலை.. எனக்கு விட்டுப் போன மாதிரி இருக்கு..” என்பார்.

இப்போதோ பேசிக்கொண்டே எல்லாம் செய்ய, அவளும் பார்த்துக்கொண்டே இருந்தாள்.

“என்ன ராதிகா??!!” என, “இல்ல ஒண்ணுமில்ல அத்தை..” என்றவளுக்கு அடுத்து என்ன பேச தெரியவில்லை..

திடீரென்று பேச்சு நின்றுவிட, சுந்தரி அவராகவே அரவிந்த் வீட்டினரைப் பற்றி பேசிடத் தொடங்கினார்.

“நல்ல மனுசங்க தான்… என்ன கொஞ்சம் தோரணை காட்டுவாங்க அப்பப்போ.. அதுக்காக மட்டமா யாரையும் நினைக்கிறதோ நடத்துறதோ இல்லை.. உங்க மாமாக்கு ஒருவகையில தெரிஞ்ச குடும்பம் தான்.. நடுவில ரொம்ப நாள் பழக்கம் விட்டு போச்சு… தரகர்  வரன் கொண்டு வரவும் தான் யார் என்னனு தெரிஞ்சது…” என,

“ம்ம்..” என்றாள் வேறெதுவும் சொல்லாது.

கணபதியும், சியாமளாவும் பார்த்த பார்வையே தெரிந்ததே..

“ஆனா மாப்பிள்ள அப்படியில்லை.. பிரண்ட்லி டைப்…” என்று சுந்தரி சொல்ல, “நித்யா சந்தோசமா இருந்தா போதுங்கத்தை..” என்றாள் உளமார உணர்ந்து.

“உண்மைதான் ராதிகா..” என, அடுத்து இப்படியே பேச்சு செல்ல, சமையல் கூட முடிந்துவிட்டது, வெளியே போன அப்பாவும் மகனும் கூட வந்துவிட்டனர்.

உள்ளே வந்ததுமே, அதோஷஜன் அவனுக்கு நிரஞ்சனன் வாங்கிக் கொடுத்தவைகளை கடை பரப்ப, நிரஞ்சனன் ராதிகா சொன்னதுபோல் வாங்கிருந்தான்.. ஒருசில உடைகள் கூட.. அனைத்துமே அழகாய் இருந்தது.. சில விளையாட்டு பொருட்கள் அத்துவின் மூளைக்கு வேலை கொடுப்பதாய் இருக்க, அனைத்தையும் பார்த்தவள்,

‘ம்ம் அது…!!!’ என்று எண்ணிக்கொள்ள, அது அவளின் முகத்திலும் தெரிய,

நிரஞ்சனன் பார்த்தவனோ “எங்களுக்கும் எல்லாம் தெரியும்மா…” என்றான் அம்மாவிடம் சம்பந்தமே இல்லாது.

“என்னடா??!!” என்று சுந்தரி புரியாது கேட்க,

“ஒன்னுமில்லையே…” என்று நிரஞ்சனன் சொல்ல, அது ராதிகாவிற்கு சொன்னது என்று அவளுக்கு நன்றாக விளங்கியது.

‘இவ என்ன இன்னும் கிளம்பாம இருக்கா…’ என்று நிரஞ்சனன் பார்க்க,

“நித்யா வர வரைக்கும் நான் தான் இருக்கச் சொன்னேன் நிரஞ்சன்..” என்று சுந்தரி சொல்லவும், ராதிகா இருவரையும் நிமிர்ந்து பார்த்தவள்,

“அத்துக்கு ஊட்டனும்…” என்றாள் சுந்தரியிடம்.

நிரஞ்சனனுக்கும் சரி, ராதிகாவிற்கும் சரி, அவர்களின் மனதினில் இருக்கும் இறுக்கம், ஒதுக்கம் எல்லாம் அவர்களையும் அறியாது கொஞ்சம் கொஞ்சமாய் விரிசல் விட்டுக்கொண்டே வர, கூடிய சீக்கிரம் அவர்களுக்குள் இருக்கும் விரிசல் காணாது போகும் என்று சுந்தரிக்கு புரிந்தது.

ஆனால் அதெல்லாம் யோசிக்கும் நிலையில் கூட சம்பந்தப் பட்டவர்கள் இல்லை.

ராதிகா, மகனுக்கு சாப்பாடு போட்டுக்கொண்டு வர, நிரஞ்சனனோ “அப்பா என்னடா குட்டி சொன்னேன்..” என,

“ம்மா.. நானு.. நானா…” என்றான் நானே உண்கிறேன் என்று.

“வேண்டாம் அத்து.. இன்னிக்கு அம்மா ஊட்டி விடறேன்.. நாளைக்கு நீயா சாப்பிடு.. லேட்டாச்சு.. உனக்கு ரொம்ப பசிக்கும்..” என்றவள் ஊட்டத் தொடங்க, எவ்வித படுத்துதலும் இன்றி அதோஷஜன் உண்டுவிட,

“ரொம்ப பசிச்சா மட்டும் தான் இப்படி சாப்பிடுவான்.. இல்லன்னா ஒரே அடம்…” என்று மகனின் வாயை துடைத்து ராதிகா கொஞ்சிக்கொள்ள, நிரஞ்சனன் இதனை ஒருவித ஆசையோடு பார்த்துக்கொள்ள,

சுந்தரிக்கோ ‘இப்படியே இவர்கள் ஒன்றாகிப் போனால்…’ என்ன என்று தான் தோன்றியது.

அடுத்து நிரஞ்சனன் உண்டு, பின் சுந்தரியும் ராதிகாவும் உண்ண, அதுவரைக்கும் அத்து விளையாடிக்கொண்டு இருந்தவன், பின் உறக்கம் வருகிறது என,

“அவனை உறங்க வை ராதிகா…” என்று சுந்தரியும் சொல்ல, நிரஞ்சனன் மகனைத் தூக்குவதற்கு முன்னம், ராதிகா தூக்கியவள், சுந்தரியின் அறைக்குள் போய் மகனை உறங்க வைக்கத் தொடங்கிவிட்டாள்.

முன்னே இங்கே வந்தால், வரவேற்பை ஓடு தான் அவளின் புழக்கம். அதற்குமேல் இல்லை. ஆனால் இன்றோ அதெல்லாம் எங்கோ யாருக்கோ நடந்தது போலே அவள் நடந்துகொள்ள, சிறிது நேரத்தில் கணபதியும், சியாமளாவும் வந்துவிட்டனர்.

“இன்னம் இந்த பசங்க வரலையா..” என்ற சியாமளா, மகனுக்கு அழைக்க, அரவிந்தும் ‘வந்து கொண்டு இருக்கிறோம்..’ என்று சொல்ல,

ராதிகா அங்கே இல்லாததைப் பார்த்த சியாமளா “அந்த பொண்ணு இல்லையா??!!” என்றார் சுந்தரியிடம். பெண்கள் இருவரும் டைனிங் டேபிளில் அமர்ந்துகொள்ள, நிரஞ்சனன் மட்டுமே கணபதியோடு ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தான்.

“பேரன் தூங்கனும்னு சொல்லவும், தூங்க வச்சிட்டிருக்கா…” என்று சுந்தரி சொல்லவும்,

“ஓ!!!” என்றவர், “காலைல வந்ததுமே உங்கக்கிட்ட ஒருவிசயம் பேசணும்னு நினைச்சேன்.. அந்த பொண்ணு இருந்ததுனால பேச முடியலை…” என, சுந்தரிக்கோ திக்கென்றது.

“என்ன… என்னது அண்ணி??!!” என,

“இல்ல.. என் தங்கச்சியோட பெரிய மச்சான் மக ஒருத்தி இருக்கா.. அவளுக்கும் டைவர்ஸ் ஆகிடுச்சு.. புருஷன் சரியில்லன்னு இவங்க வீட்லயே திரும்ப கூட்டிட்டு வந்து டைவர்சும் வாங்கிட்டாங்க.. இதாகி மூணு வருஷம் ஆச்சு.. இப்போதான் இன்னொரு கல்யாணத்துக்கு சரின்னு சொல்லிருக்கா.. அதான் நிரஞ்சன்க்கு பேசலாமான்னு கேட்கலாம்னு நினைச்சேன்…” என,

சுந்தரிக்கோ என்ன சொல்வது என்றே தெரியவில்லை. இதுவும் ஒரு சிக்கலான நிலைதானே.. கேட்பவர்கள் பெண் எடுக்கப் போகும் மாப்பிள்ளை வீட்டினர் இல்லையா. ஆக நோகாது தானே பதில் சொல்லிட வேண்டும்.

சுந்தரியே மகன் இன்னொரு திருமணம் செய்தால் என்ன என்று கேட்டவர் தான். ஆனால் அவன் அப்படி செய்யப் போவதில்லை என்று உறுதியாய் தெரியவும், ராதிகாவோடு இணைந்து வாழ்ந்தாலே போதும் என்றிருந்தது.

இப்போதோ இவர்கள் இப்படி சொல்ல, முகத்தில் எதையும் காட்டாதவர் “அ.. அது.. அவங்க வீட்ல எதுவும் பேசினீங்களா..” என,

“இல்ல.. இங்க பேசி உங்களுக்கு சரின்னாதான் பேசலாம்னு இருக்கோம்..” என,

“ம்ம் நல்லது.. நான் நிரஞ்சன் கிட்ட பேசிட்டு சொல்றேன்..” என்றுவிட்டார் சுந்தரி.

அதற்குமேலே அப்போது அவரால் வேறெதுவும் சொல்ல முடியவில்லை. யோசித்து தானே பேசவேண்டும். அதனால் அப்படிச் சொல்லிட, அத்து உறங்கிவிட்டான், ஆட்கள் வந்திருக்கும் போது, அதுவும் நித்யா வருங்கால மாமனார் மாமியார் என்கையில் தான் இப்படி அறைக்குள் அமர்ந்திருப்பது சரியில்லை என்றெண்ணி ராதிகா, வெளி வர, அப்போதுதான் இவர்கள் இதைப் பேசிக்கொள்ள, அவர்கள் மெதுவாக பேசினாலுமே, அவளின் காதுகளில் நன்கு விழுந்து வைத்தது..

‘நிரஞ்சனனுக்கு இன்னொரு திருமணமா..??!!!!!’

இதைக் கேட்டு அவளுக்கு இதயம் தாறுமாறாய் துடிக்கத் தொடங்கியது என்றால், சுந்தரி மகனிடம் கேட்டு சொல்கிறேன் என்று சொன்னதை கேட்டு ரத்தம் கொதித்தது.

அவனுக்கும் தனக்கும் இடையில் ஒன்றுமில்லை என்றான பின்னே, அடுத்து அவனின் வாழ்வு யாரோடு அமைந்தால் என்ன??!!

அப்படித்தானே ராதிகா எண்ணியிருக்க வேண்டும்.

அதைவிட்டு அவளால் அதைப் பற்றி நினைக்கவும் முடியாது, உள்ளம் தடுமாற, “நோ.. நோ…” என்று தனக்கு தானே சொல்லியவள், திரும்பவும் அறைக்குள்ளே சென்று அமர்ந்துகொண்டாள்.

இதே வீட்டில் இன்னொருத்தி வந்தால், தன்னால் இப்படி வர முடியுமா?? ஊக்கமாய் உரிமையாய் இப்படி கட்டிலில் மகனைப் படுக்க வைத்து அவனோடு தானும் இப்படி இருக்க முடியுமா??!!

இப்படி அவளுக்குள்ளே பல கேள்விகள்…

அப்படியொன்று மட்டும் நடந்துவிட்டால், பின்னே அத்துவிற்கும் இந்த வீட்டிற்குமான உறவு கூட விட்டுப் போய்விடும் என்றே தோன்றியது அவளுக்கு..

‘ம்ம்ஹும்…’ என்று அவளே தலையை ஆட்டிக்கொள்ள, காலையில் சுந்தரி, தாரைவார்த்துக் கொடுப்பது பற்றி பேசியது நினைவு வந்தது.

‘என்கிட்டே அப்படி கேட்டுட்டு, இப்போ இன்னொரு பொண்ணு பேசணும்னு மகன் கிட்ட கேட்பாங்கலாமா??!!!’  என்று, அவரின் மீதும் கோபம் வர, அனைவரும் கிளம்பட்டும் என்று பல்லைக் கடித்துக்கொண்டு காத்திருக்க,

சிறிது நேரத்திலேயே அரவிந்தும், நித்யாவும் வந்திட, வெளியே பேச்சுக் குரல்கள் கேட்க, சுந்தரி தான் பின்னே வந்து அழைத்தார் “வாம்மா ராதிகா.. உள்ளயே எவ்வளோ நேரம் இருப்ப…” என்று.

அவருக்கு இருந்த அவசரத்தில் அவளின் முக மாற்றத்தினை கவனிக்கவில்லை. சொல்லிவிட்டு சென்றுவிட, ராதிகாவும் வெளியே வர, நித்யாவோ “அண்ணி.. இங்கதான் இருக்கீங்களா…” என்று வந்து அவளின் அருகே நின்றுகொண்டாள்.

அவளின் முகத்தினில் அப்படியொரு மகிழ்வு.. நொடிக்கொரு முறை அவளின் பார்வை அரவிந்த் பக்கம் சென்றுவந்தது. அவனுமே அப்படிதான் இருந்தான். நிரஞ்சனன் இதெல்லாம் பார்த்து, மனைவியின் முகம் பார்க்க, அவளோ வேறெதுவோ யோசனையில் இருப்பது தெரிந்தது.

‘இப்போ என்னத்த யோசிக்கிறா..’ என்று நிரஞ்சனன் பார்க்க, அனைவரும் சொல்லிக்கொண்டு கிளம்ப, அரவிந்த் கூட செல்கையில் “வர்றேன் சிஸ்டர்…” என்று ராதிகாவிடம் சொல்லிவிட்டே சென்றான்.

“ம்ம்..” என்று அவளும் தலையை அசைக்க, அவளுக்கு என்னவோ ஒரு இனம் புரியாத உணர்வு..

மனதில் பெரும் அழுத்தமாய் வந்து அமர்ந்துகொண்டது. இன்னது என்று அவளால் சொல்லிடவே முடியவில்லை. ஆனால் சிறிது நேரத்திற்கு முன்னே இருந்த அந்த மன அமைதி இப்போதில்லை. கண்கள்  இங்கே அங்கே என்று அலைபுற, அது இதென்று யோசித்தவள்,

“அத்தை காலைல கேட்டீங்கல்ல.. தாரைவார்த்து கொடுக்கிறதுக்கு..” என்றால் பட்டென்று..

‘இப்போ என்ன திடீர்னு..’ என்று நிரஞ்சனன் பார்க்க, இது எதுவும் தெரியாத நித்யாவோ குழப்பமாய் பார்க்க,

“ஆமா…” என்றார் சுந்தரி.

“எனக்கு சம்மதம்…” என்றவள் “நான் வர்றேன்…” என்றவள் கிளம்பியும் விட்டாள்.     

Advertisement