Advertisement

அத்தியாயம் – 13

அடுத்து என்ன செய்வது என்று யோசிப்பதற்குள், அரவிந்த், அவனின் அப்பா கணபதி, அம்மா சியாமளா வீட்டினுள்ளே வந்திருக்க, சுந்தரியும் நித்யாவும்  சென்று அவர்களை வரவேற்க, மகனை தூக்கி வைத்து நின்றிருந்த நிரஞ்சனனும் சரி, திகைத்து நின்றிருந்த ராதிகாவும் சர், ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள,

சட்டென்று நிரஞ்சனன் சுதாரித்து “வாங்க.. வாங்க..” என்று வந்தவர்களை வரவேற்க, ராதிகாவோ முள்ளின் மீது நிற்பதாய் உணர்ந்தாள்.

வந்தவர்கள், நிரஞ்சனன் கையில் இருந்த சிறுவனையும், சற்று தள்ளி நின்றிருந்த ராதிகாவையும் யார் என்பதுபோல் கேள்வியாய்ப் பார்க்க, நிரஞ்சனன் சொல்லவா முடியும் இவள் என் மனைவி என்று.

ஆனால் சுந்தரி சொல்லிவிட்டார் “என் பேரன்.. இவ  ராதிகா.. என் மருமக.. பேசி முடிக்கிறப்போ இவங்க இல்லை இல்லையா.. அதான் இன்னிக்கு வர சொல்லிருந்தேன்..” என்று.

நிரஞ்சனன் ‘அப்போ எல்லாம் தெரிஞ்சு தான் வந்தாளா??!!’ என்று பார்க்க,

ராதிகாவோ ‘ஐயோ!! இதை என்கிட்டே சொல்லவேயில்லையே..’ என்று பார்த்தாள்.

சுந்தரியோ இருவரையும் கண்டுகொள்ளவே இல்லை. “உக்காருங்க..” என்றவர், நிரஞ்சனனை ஒரு பார்வை பார்க்க, பின்னே தான் இருக்கும் சூழல் உணர்ந்து அவன் அரவிந்தோடு பேச சியாமளா மற்றும் கணபதியின் முகத்தினில் கேள்விகள் தெரிந்தாலும்,

“வா ம்மா இப்படி வந்து உக்கார்..” என, ராதிகாவோ தயங்கி தயங்கி நின்றாள்.

அவர்களுக்குத் தெரியும் தானே.. இவர்களின் விஷயம். ஒத்துவரவில்லை சட்டப்படி பிரிந்துவிட்டார்கள் என்று. ஆனால் இப்போது மகன் மருமகள் என்று வந்து நிற்கவும் அவர்களுக்கு கேட்கவும் முடியவில்லை கேட்காது இருக்கவும் முடியவில்லை.

சுந்தரியும் “வா ராதிகா..” என, அத்துவோ அவனின் அப்பாவோடு இருக்க, அவளுக்கு இங்கிருந்து இப்படி ஓடிவிடலாம் போலத்தான் இருந்தது.

சுந்தரியும், நித்யாவும் இருவர் அமரும் சோபாவில் அமர்ந்திருக்க. கணபதியும் சியாமளாவும் இன்னொரு இருவர் அமரும் சோபாவில் அமர்ந்திருக்க, அரவிந்த் நிரஞ்சனனோடு மூவர் அமரும் இருக்கையில் இருக்க, இப்போது நிரஞ்சனன் அருகில் மட்டுமே அவள் சென்று அமர முடியும்.

ஆனால் அது எப்படி முடியும்??!!!

நிரஞ்சனனுக்கும் உள்ளே ஒருவித பதற்றம் இருக்கத்தான் செய்தது.. வெளியில் காட்டாமல், பார்வையை ராதிகா மீது திருப்பாமல் அவன் கழுத்தை அரவிந்த் பக்கமே திருப்பியிருக்க, இவனாவது எதும் சொல்லமாட்டானா என்று தவிப்பாக பார்த்தாள் ராதிகா.

அவன் பார்த்தால் தானே..

அத்துதான் அம்மாவினைக் கண்டவன் “ம்மா பா…” என்று கைகளை நீட்ட, மகனின் கைகளை பற்றிக்கொண்டவள் நிரஞ்சனன் அருகே பட்டும் படமால் அமர்ந்துகொள்ள, தவிப்பாய் இருந்தது அவளுக்கு.

‘கடவுளே… என்ன இது…’ என்று..

சுந்தரி மீண்டும் அரவிந்த் குடும்பத்தினரை அறிமுகம் செய்துவைக்க, சம்பிரதாயமாய் அனைவரையும் பார்த்து ஒரு புன்னகை சிந்தினாள். அவ்வளவே.   

அதோசஜனுக்கு தெரிந்து இப்போதுதான் முதல்முறையாய் அப்பா அம்மா அருகருகே அமர்ந்திருப்பது கண்டு அவனுக்கு என்னதான் குஷித் தோன்றியதோ, “ம்மா.. அப்பா…” என்று அவனும் மாறி மாறி இருவரிடமும் செல்ல, தன்னைப்போல் இருவரும் ஒட்டி உரசி அமரும் நிலைக்குத்தான் தள்ளப்பட்டனர்.

நித்யாவும் சரி சுந்தரியும் சரி, மாப்பிள்ளை வீட்டினர் முன்னா இந்த அத்து இதெல்லாம் செய்யவேண்டும் என்று பார்க்க,

நிரஞ்சனனோ “அவனுக்கு பசிக்குதுன்னு நினைக்கிறன்.. உள்ள போய் ஊட்டிவிடு..” என்று ராதிகாவை நேருக்கு நேர் காணாது, பக்கவாட்டில் மட்டும் திரும்பி மெதுவாய் சொல்ல,

‘இவன் என்னிடமா சொல்கிறான்..’ என்றுதான் பார்த்தாள்.

“ம்மா.. பா…” என்று அதோஷஜன் அவளை இழுக்க, சுந்தரி கூட “ஹாட்பாக்ஸ்ல இட்லி இருக்கு ராதிகா.. எடுத்து வச்சு ஊட்டிவிடு..” என, விட்டால் போதும் என்பதுபோல் ராதிகா மகனைத் தூக்கிக்கொண்டு சென்றுவிட்டாள்,

ஹால் விட்டு சமையல் அறை வந்து நிற்கவும் தான் அவளுக்கு மூச்சு விடவே இயல்பாய் வந்தது போலிருந்தது. நிரஞ்சனன் கூட அப்படித்தான் உணர்ந்தான். சொல்லப்போனால் இப்போதுதான் அவனின் உடல் இறுக்கம் தளர்ந்து இருக்கையில் சாய்ந்து அமர,

சியாமள அனைத்தையும் கவனித்தவர், “இவரோட பிரண்ட் மகனுக்கு இன்னிக்கு எங்கேஜ்மென்ட்.. அப்படியே மருமகளையும் உங்களையும் பார்த்துட்டு போகலாம்னு வந்தோம்.. நாங்க கிளம்பவும் அரவிந்தும் வர்றேன் சொல்லிட்டான்..” என்று பேச்சினை ஆரம்பிக்க,

நித்யாவின் முகத்தினில் அழகாய் வந்து ஒரு முறுவல் அமர்ந்துகொண்டது.

அரவிந்தும் “அப்பா அம்மாதான் பங்க்சன் போறாங்க.. நான் நித்யாவ கூட்டிட்டு லஞ்ச் வெளிய போலாமா …” என்று பொதுவாய் அனைவரையும் பார்த்து கேட்க,

நித்யாவோ அம்மா மற்றும் அண்ணன் முகம் பார்க்க, இவை எல்லாம் உள்ளே டைனிங் ஹாலில் இருந்த ராதிகாவிற்கும் கேட்டது.

மகனுக்கு ஊட்டிக்கொண்டு இருந்தாலும், காதில் விழுபவைகளை வைத்து, மனது தானாய் அவளின் திருமணம் நிச்சயிக்கப்பட்ட சமயத்திற்கு சென்றது.

அவளுக்கும் நிரஞ்சனனுக்கும் திருமணம் பேசி முடிக்கையில், நிச்சயத்திற்கும் திருமணத்திற்குமான இடைப்பட்ட காலம் என்பது வெறும் இருபது நாட்களே.  குணசேகரின் உடல்நிலையை மனதில் வைத்து இத்தனை அவசரமாய் நாள் குறித்து இருந்தனர்.

ஏற்கனவே அவருக்கு இருமுறை ஹார்ட் அட்டாக்.. இன்னொருமுறை எதுவும் ஆனால், ஒன்றும் சொல்லமுடியாது என்று மருத்துவர்கள் சொல்லிட, நிரஞ்சனன் திருமணத்தை சீக்கிரமே நடத்திட எண்ணினார் குணசேகரன்.

ராதிகாவும் அப்போதுதான் படிப்பினை முடித்திருக்க, வேலைக்குச் செல்லவேண்டும் என்று இருந்தவளை, திடீரென்று திருமண பந்தம் அணைத்துக்கொண்டது. அந்த வயதுக்கே உரிய கனவுகள் ஆசைகள் எல்லாம் அவள் மனதிலும் தோன்ற, நிச்சயத்திற்கும் திருமணத்திற்கும் இடையில் இருந்த இருபது நாட்கள் என்பது அவளுக்கு பெரும் யுகமாக தோன்றியது.

அதிலும் தோழிகள் எல்லாம், நிரஞ்சனன் புகைப்படம் பார்த்து ‘ராதிகா.. சும்மா சொல்லக் கூடாதுடி.. செமையா இருக்கார்…’

‘அப்புறம் மீட் பண்ணீங்களா…’

‘உனக்கு போன் பண்ணாரா??!!’

‘என்ன டி ஒரே ட்ரீம்ஸ் தானா.. எப்போ பார் போன் தானா…’ என்றெல்லாம் கேட்க, இதெல்லாம் எதுவுமே இல்லை என்று அவர்களிடம் சொல்லிட முடியுமா என்ன..

அது இதென்று மழுப்பியவள், ஒருவேளை இவனுக்கு தன்னை திருமணம் செய்யப் பிடிக்கவில்லையோ என்ற எண்ணம் வர, மனதில் தைரியம் வரவழைத்து, தன்னிடம் இருந்த நிரஞ்சனன் எண்ணிற்கு அழைத்தேவிட்டாள்.

அவனுக்கோ ராதிகாவே அழைத்தது ஒருப்பக்கம் அதிர்ச்சி என்றால், சந்தோசமாகவும் இருந்தது.

“நான் எதிர்பார்க்கவே இல்லை…” என்ற அவனின் குரலில் என்ன இருக்கிறது என்று உணர முடிந்தாள்,

அதற்குள்ளோ “சாரிம்மா.. அப்பாக்கு ஹெல்த் கண்டிசன் சரியில்ல.. சோ மேரேஜ் வொர்க் எல்லாம் நான்தான் பார்க்கிறேன்..” என்று வெளிப்படையாய் சொல்லிட,

‘ச்சே நம்மதான் தப்பா நினைச்சிட்டமோ…’ என்று எண்ணியவள் “இட்ஸ் ஓகே.. அதனால என்ன.. உ.. உங்களுக்கு டிரஸ் எடுக்கணுமாம்.. அதான் அம்மா கேட்க சொன்னாங்க…” என்று பேச்சினையும் மாற்றிவிட்டாள்.

சரியாய் திருமணத்திற்கு பத்து நாட்கள் முன்னர்தான் இப்பேச்சு.. தினம் தினம் இல்லையென்றாலும் கூட, அடிக்கடி பேசிக்கொண்டனர் அடுத்து.. ராதிகா வீட்டில் இருப்பதால், சதா சர்வ காலமும் அவளுக்கு நிரஞ்சனன் மீதான எண்ணங்கள் கூடிக்கொண்டே போனது.

ஆனால் நிரஞ்சனன் சூழல் அப்படியில்லை.. திருமண பொறுப்புகள் முக்கால்வாசி அவன்தான் பார்த்தான். இதுபோக அவனின் அலுவல் வேறு.. அதை தாண்டி அவனால் அதிகம் வேறெதுவும் சிந்திக்கவும் முடியவில்லை. அதெல்லாம் ராதிகாவிற்கு கடந்த சில ஆண்டுகளில் அதுவும் அவனை விட்டு விலகிய பின்னே தான் புரிந்தது.

இருந்தாலும், திருமணத்திற்கு முன்னும் பின்னுமான அந்த நாட்கள் என்பது யாருக்குமே ஒரு சுக நினைவுகள் கொண்டிருந்தால் இனிமைதானே.. அந்தவொரு ஏமாற்றம் அவளுக்கு இப்போதும் இருந்தது.

‘ஒரே ஒரு முறை என்னை காண வந்திருக்கலாம்.. ஒரே ஒருமுறை என்னோடு ஆசையாய் பேசியிருக்கலாம்..’ என்ற எண்ணங்களூடே, அத்துவிற்கு ஊட்டியும் முடித்திருந்தாள்.

சரியாய் அவள் ஊட்டி முடிக்கவும், நித்யா வந்தவள் “அண்ணி..” என,  ‘இப்போ என்னவோ…’ என்றுதான் பார்த்தாள் ராதிகா..

“அ.. அவரோட வெளிய போறேன்.. கொஞ்சம் டென்சனா வேற இருக்கு..” என, அவளின் முகத்தினைப் பார்த்தாள் ராதிகா..

படபடப்பு பரபரப்பு எல்லாம் கலந்து கட்டி இருந்தாலும், அதையும் தாண்டிய ஆவல், ஒரு செம்மை அதுவே நித்யாவை இன்னும் அழகாய் காட்டிட, தான் இப்படி இருந்தோமா என்ற கேள்வி அவளுள்..??!!!

எச்சில் விழுங்கிக்கொண்டாள்..

“அண்ணி..!!!” என்று திரும்ப நித்யா அழைக்க,

“என்ன நித்யா??!!” என்றாள் முகத்தினில் எதுவும் தோன்றாது.

“இல்ல.. வந்து.. இந்த ட்ரெஸ் ஓகே வா…” என, இவர்கள் எல்லாம் வீட்டிற்கு வருகிறார்கள் என்று சேலையில் இருக்க, அதனைப் பார்த்த ராதிகாவோ “குர்தி போல போட்டுக்கோ நித்யா ஈசியா இருக்கும்.. சேரி கட்டிட்டு உனக்கு கொஞ்சம் கம்பர்டபிலா இருக்காது..” என்று சொல்ல,

“நானும் அதான் நினைச்சேன்…” என்றவள், “வாங்களேன்.. வந்து எது போடுறதுன்னு சொல்லுங்கண்ணி.. எனக்கு ஒண்ணுமே தோணலை…” என்று அழைக்க,

‘நானா??!!!’ என்றாள் ராதிகா..

“ம்ம் வாங்க வாங்க..” என, கை கழுவி, அத்துவிற்கு வாய் துடைத்துவிட்டு, “நீ அப்பாக்கிட்ட போ..” என்று சொல்லி நித்யாவோடு ராதிகா அவளின் அறைக்குச் செல்ல, நித்யாவோ

“இதை போடவா.. அதை போடவா..” என்று ஒரு வழி செய்து, பின் அரவிந்த் அன்று அணிந்து வந்திருந்த நிறத்திற்கு ஏற்றார் போல ஒரு குர்தி எடுத்தவள் “இது ஓகே வா…” என்று கேட்க, அவளின் கண்களில் ஆயிரம் ஜாலங்கள்..

பார்க்க பார்க்க அழகாகவும் இருந்தது.. ஆசையாகவும் இருந்தது ராதிகாவிற்கு..

“ம்ம்.. சூப்பர்….” என, “ஓகே அண்ணி… மாத்திட்டு வந்திடுறேன்..” என்றவள், குளியல் அறைக்குச் செல்ல, அவள் சென்ற அடுத்த நொடி நிரஞ்சனன் “நித்யா…” என்று அறை வாசலில் நின்று அழைக்க, பதில் சொல்வோமா என்று யோசிப்பதற்குள் திரும்பவும் அழைத்திருந்தான்.

“அ.. நித்யா.. ட்ரெஸ் மாத்துறா.. வந்திடுவா…” என்று ராதிகா சொல்லவும், நிரஞ்சனன் அடுத்து உள்ளே வந்தவன்,

“வெய்ட் பண்ணிட்டு இருக்காங்க.. சீக்கிரம்..” என்றான் பொதுவாய்.

அவன் நித்யாவிற்கு சொன்னானா இல்லை ராதிகாவிடம் சொன்னானா என்பது யாருக்கும் விளங்கவில்லை. இருந்தாலும் சொன்னவனும் வெளியே போகவில்லை. அப்படியே நிற்க, நித்யா வந்தவள் “இதோண்ணா… கிளம்பியாச்சு…” என,

“ம்ம் இந்தா…” என்றான் அவள் கையில் கொஞ்சம் பணம் திணித்து..

“என்னண்ணா??!!!”

“வெளிய போறதானே.. கைல கொண்டு போ..” என,

“என்கிட்டே இருக்குண்ணா…” என்றாள் நித்யா.

“இருந்தா… இதுவும் வச்சுக்கோ.. அரவிந்த்க்கு ஏதாவது வாங்கணும்னா வாங்கி கொடு…” என, இவர்கள் பேசுவதை எல்லாம் அதிசயமாய் பார்த்துக்கொண்டு இருந்தாள் ராதிகா.

அவளுக்கு நிஜமாய் நிரஞ்சனன் வந்து பணம் கொடுத்து இப்படி பேசியது அதிசயமே..

“தேங்க்ஸ் ண்ணா… தேங்க்ஸ் அண்ணி…” என்ற நித்யா, கிளம்பிச் செல்ல, ராதிகா இன்னமும் அங்கேயே சிலை போல் நிற்க, நிரஞ்சனன் பார்த்தவனோ வெளியே ஒருமுறை எட்டிப் பார்த்து “அவங்க எல்லாம் கிளம்பப் போறாங்க..” என,

“நீ.. நீங்க.. நீங்க ஏன் என்னை இப்படி எல்லாம் பார்க்க வரலை..??!!!” என்று கேட்டிருந்தாள் ராதிகா..

கேட்டே ஆகவேண்டும் என்று கேட்கவில்லை. அவளையும் மீறி அவ்வார்த்தைகள் வெளிவர, ஆடித்தான் போனான் நிரஞ்சனன்..

அவள் கண்களில் தெரிந்த ஆசை.. ஏக்கம்.. நானும் உன் தங்கை போல்தானே அப்போது கனவுகளில் இருந்திருப்பேன் என்ற செய்தி. அதையும் தாண்டிய அவளின் கலங்கிய கண்கள், நிரஞ்சனன் இதயத்தை நேரடியாய் தாக்க

“ராதி…!!!!” என்றான் அதிர்ந்து.

பல வருடங்கள் கழித்தான அவனின் இவ்வழைப்பு, அவளுள் மட்டுமல்ல, அவனுள்ளும் பல உணர்வுகளை கிளப்பியது..

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி நிற்க, சுந்தரி வந்துவிட்டார் “நிரஞ்சன்…” என்று அழைத்தபடி.

இருவருமே வேகமாய் தன் பார்வையை விலக்கிட, “அவங்க கிளம்புறாங்கடா..” என்று சுந்தரி சொல்ல, “இதோ வர்றேம்மா…” என்றவன் வேகமாய் முன்னே செல்ல, ராதிகா அடுத்து வந்தாள்.

அரவிந்தும், நித்யாவும் ஏற்கனவே கிளம்பியிருக்க, கணபதியும் சியாமளாவும் கிளம்புகையில் பொதுவாய் வருகிறோம் என்று சொல்லிச் செல்ல, அவர்கள் சென்றபின்னேயோ வீடே அமைதியை சூடிக்கொண்டது.

அத்துவின் பேச்சுக்குரல் மட்டும் கேட்டபடி இருக்க, ராதிகாவிற்கோ இப்படி தான் கேட்டுவிட்டோமே என்று தோன்ற, சங்கடமாய் உணர்ந்தாள். நிரஞ்சனன் தன்னை என்ன நினைப்பான் என்றும் இருந்தது அவளுக்கு.

அவளுக்குத் தெரியவில்லை.. தான் அப்படி கேட்டதில் இருந்து நிரஞ்சனன் ஒருவித குற்ற உணர்வில் தவிக்கிறான் என்று. மகனை தன்னோடு வைத்திருந்தவன் சிந்தனை எல்லாம் அப்போது மகனிடத்தில் இல்லை.

சுந்தரி இருவரையும் பார்த்தவர், “நிரஞ்சன்.. பாங்சன் முடிச்சிட்டு இவங்க திரும்ப இங்கதான் வருவாங்களாம்.. கல்யாண விஷயம் எல்லாம் பேசணும் சொன்னாங்க..” என,

“ஓ!!!” என்றான்.

அப்போதுதான் ராதிகா சுதாரித்தவள் ‘அவர்கள் வருவதற்கு முன்னமே கிளம்பிவிட வேண்டும்…’ என்றெண்ணி “அ.. அத்தை.. அத்து இருக்கட்டும்.. நா.. நான் கிளம்புறேன்..” என,

“இரு ராதிகா உன்கிட்ட ஒரு விஷயம் கேட்கணும்..” என்றார் சுந்தரி ஒருவித அழுத்தக் குரலில்.

“எ.. என்ன??!!!” என்று கேட்டவளுக்கு வார்த்தையே வரவில்லை.

நிரஞ்சனன் இருவரும் பேசட்டும் என்று எழுந்து போகப் பார்க்க “இருடா உன்னோடவும் தான்…” என்றார் கறாராய்.

“என்னம்மா??!!” என்றவனுக்கோ, மனது வேகமாய் அடித்துக்கொண்டது.

“சம்பந்தியம்மா கேட்கிறாங்க, யார் தாரைவார்த்து கொடுப்பாங்கன்னு..” என, இருவரும் புரியாது தான் பார்த்தனர்.

“உங்கப்பா இருந்திருந்தா, அவரும் நானும் நின்னு நித்யாவ தாரைவார்த்து கொடுத்திருப்போம்.. அவருமில்லை. எங்க ஸ்தானத்துல இருந்து அண்ணன் அண்ணி செய்யலாம்.. ஆனா??!!!” என்று சுந்தரி இழுக்க, இருவருக்கும் தூக்கிவாரிப் போட்டது. என்ன இதெல்லாம் என்று.

இருவரின் விவாகத்தையே ரத்து செய்தவர்கள், இவர்கள் ஜோடியாய் நின்று நித்தியாவை தாரைவார்த்துக் கொடுப்பதா??!!

இது சாத்தியமா??!!

முதலில் இதற்கு மனம் சம்மதிக்குமா??!!

திகைப்போடு இருவரும் காண “நீங்களும் நிற்க முடியாது இல்லையா.. அதனால சம்பந்தியம்மா அவங்க அண்ணா அண்ணியை நிற்க சொல்வோமான்னு கேட்கிறாங்க..” என, இருவர் முகத்திலும் எவ்வித உணர்வும் இல்லை.

“ஆனா எனக்கு இதுல விருப்பமில்லை நிரஞ்சன்.. நித்யா நம்ம வீட்டு பொண்ணு.. அவளுக்கு நம்ம செய்றது போல யார் செஞ்சாலும் வராது.. சாஸ்திரத்துக்கு அடுத்தவங்கள நிக்க வச்சா அவங்களும் அதை சம்பிரதாயமா தான் செய்வாங்க.. மனசார உள்ளன்போட செய்யனும்னா அது நம்ம வீட்டாளுங்க தான் செய்யணும்…” என,

“ம்மா.. அது.. நான் வேணா சித்தப்பா சித்திக்கிட்ட பேசவா??!!” என்றான் நிரஞ்சனன்.

“ஏன்டா.. அண்ணன் அண்ணின்னு நீங்க ரெண்டு பேரும் குத்து கல்லாட்டம் தானே இருக்கீங்க…” என,

“அத்தை… நா.. நாங்க எப்படி??!!” என்றாள் ராதிகா விதிர் விதிர்த்துப் போய்.

“ஏன்… ஏன் பண்ணா என்ன??!! உனக்கு இவனைத் தவற நாங்க எல்லாம் வேணும்னு தானே நினைக்கிற.. அப்போ நித்யாக்கு ஒரு விசயம்னா நீ செய்ய மாட்டியா…” என,

நிரஞ்சனன் “ம்மா.. என்ன பேச்சு இது…” என்றான் கடிந்து.

சுந்தரிக்கோ கண்களில் நீரே வந்துவிட்டது “உங்கப்பா இருந்தா இதெல்லாம் நான் ஏன் கேட்கப் போறேன்… யாரோ வந்து என் பொண்ணுக்கு தாரைவார்த்து கொடுக்கணுமாம்.. நம்ம எல்லாம் வேடிக்கைப் பார்த்து தள்ளி நிக்கனுமாம்.. அப்போ எனக்கு எப்படிடா இருக்கும்..” என,

“அதில்லம்மா…” என்றான் சமாதானமாய்..

“அப்போ.. உன் பையனுக்காக ரெண்டு பேரும் ஒண்ணா ஒரே இடத்துல நிப்பீங்க.. என் பொண்ணுக்குன்னா எதுவும் செய்யமாட்டீங்க அப்படிதானே…” என்று சுந்தரி இல்லாத கணக்கை சொல்ல,

‘ஐயோ!!!’ என்று பார்த்தனர் இருவரும்.

“ம்மா..!!!” என்று நிரஞ்சனன் குரலை உயர்த்த,

“ம்மா, உன் அம்மாவை என் இடத்துல வச்சு பாரு.. பொண்ணுக்கு ஒரு நல்லது நடக்குறப்போ, இதெல்லாம் நியாயமான ஆசை தானே. நான் கேட்டதுல என்ன தப்பு… நீயே சொல்லேன்..” என்று அவளின் கைகளைப் பற்றிக்கொள்ள, அவளால் என்னத்தான் சொல்லிட முடியும்.

“அத்.. அத்தை ப்ளீஸ்.. இமோஷன் ஆகாதீங்க…” என,

“என்னால முடியல ராதிகா.. நான் வேற யாரைப் போய் கேட்பேன்.. நீயோ இவனோ அவங்கவங்களுக்கு ஒரு வாழ்கையை அமைச்சிட்டு இருந்தா கூட இதை நான் கேட்டிருக்க மாட்டேன்.. இல்லை உங்க மாமா இருந்திருந்தா இதெல்லாம் அவசியமே இல்லை…” என,

என்றுமில்லாத திருநாளாய் சுந்தரி இப்படியெல்லாம் பேசியது இருவரின் மனதிலும் சம்மட்டி வைத்து அடித்தது போலிருந்தது.

உண்மையும் தான் குணசேகரன் இருந்திருந்தால், இச்சூழல் எல்லாம் வந்தே இருக்காது. அவ்வளவு ஏன், அவர் இருந்திருந்தால் நிரஞ்சனன் ராதிகா இருவரின் பிரிவே நேர்ந்திருக்காதே. கணவன் மனைவி இருவரும் அமைதியாய் இருக்க,

“நான் சொல்றதை சொல்லிட்டேன்….” என்ற சுந்தரி எழுந்து சென்றுவிட, அத்து ஒருபுறம் அமர்ந்து விளையாடிக்கொண்டு இருக்க, நிரஞ்சனன் ராதிகா இருவரும் மௌனத்தில் ஆழ்ந்திருந்தனர்.      

Advertisement