Advertisement

அத்தியாயம் – 12

நாட்கள் அதன் போக்கில் நகர்ந்து மாதமும் கூட தொட்டிருந்தது. அவரவர் வேலையில் ராதிகாவும் சரி, நிரஞ்சனனும் சரி தங்களை மூழ்கடித்துக் கொண்டனர். காரணம் மற்றவரின் நினைவும், கடந்த காலமும் மனதில் வலம் வராது இருக்க. அவர்களின் அன்றாடம் இந்நினைவுகளால் ஸ்தம்பிக்கிறது இருக்க, என்ன செய்திட முடியுமோ அதனை செய்துகொண்டு இருந்தனர்.

அதாவது மனதிற்குள்ளே அவர்களோடே அவர்கள் போராடிக்கொண்டு இருந்தனர்.  என்னதான் வேலை வேலை என்று இருந்தாலும், வீட்டுச் சூழல் என்று வருகையில், சில விஷயங்கள் தவிர்க்க முடியாது தானே போகிறது.

அதிலும் இப்போதெல்லாம் நிரஞ்சனன் அடிக்கடி சென்று மகனைப் பார்க்கவும் தொடங்கியிருந்தான். அன்று காய்ச்சல் வந்தபோது, அடுத்து எப்படி இருக்கிறான் என்று பள்ளியில் சென்று பார்த்தவன், பின் அடிக்கடி அதனையே வழக்கமாக்கிக் கொண்டான்.

‘நீ என்ன மாதம் ஒருநாள் மட்டும் என் மகனைக் காட்டுவது.. நான் நினைத்த நேரத்தில் எல்லாம் அவனைப் பார்ப்பேன்..’

இப்படித்தான் இருந்தது நிரஞ்சனன் எண்ணம்..!!

என்ன அது ராதிகாவிற்கும் தெரிந்து அவள் ஒன்றும் சொல்லாது, ஏன் யாரிடமும் கூட எதுவும் சொல்லாது அமைதியாய் இருந்தது தான் விந்தையிலும் விந்தை.

மகன் வந்து “ம்மா.. அப்பா பார்த்தேன்..” என்று சொல்லும்போது, முதலில் அதிர்ந்தாள் தான்.

‘எதேர்சையா ஸ்கூல்ல பார்த்திருப்பாங்க..’ என்று எண்ணிக்கொண்டு இலகுவாய் விட்டுவிட்டாள்.

ஆனால் அடுத்த சில நாட்களில் “ப்பா நானும் கேக்கு சாப்டோம்…” என்று அத்து சொல்கையில், அது எதேர்சையான நிகழ்வு என்று எடுத்துக்கொள்ள முடியவில்லை.

சுந்தரியிடம் கேட்கலாமா என்றால், அதுவும் யோசனையாய் இருந்தது. இங்கே வீட்டினில் அப்பா அம்மாவிடம் சொல்லலாமா என்றால், அவர்களும் எப்படி எடுத்துக்கொள்வர் என்று தெரியாது.

நிரஞ்சனனிடமே “அத்துவ மீட் பண்றீங்களா??!!!” என்று கேட்டால், “அவன் என் மகன்..” என்று சொல்லி வாய் அடைத்துவிடுவான். 

ஒரு பத்திரத்தில் வாக்கியம் அமைத்து எழுதி, இருவரும் கை எழுத்துப் போட்டுக்கொண்டால், அது வாழ்க்கை ஆகுமா??!!

அது வாழ்வின் பிடிப்பினை கொடுக்குமா??!!

அதுவும் மகன் என்று வருகையில், தாய் பாசமும், தந்தை நேசமும் எந்த சட்ட திட்டத்திற்கும் கட்டுப்பட்டு நிற்குமா என்ன?!!

இப்போது இப்படியொரு போராட்டம் தான் நடந்தேறிக்கொண்டு இருந்தது. முன்னேயாவது நிரஞ்சனன் அமைதியாய் இருந்தான். மாதம் ஒருமுறை மட்டுமேனும் கூட மகனோடு இருந்தால் போதுமென்று. ஆனால் இப்போதோ அவனின் ஆசைகள் அவன் சொல் பேச்சினை கேட்பதை நிறுத்தியிருந்தது.

ஒரு அப்பாவாய் அவனின் ஆசைகள், நியாயமானதே.. அதை யாரும் இல்லை என்று சொல்லிட முடியாது.

அத்துவிதம் ‘அம்மாவிடம் சொல்லாதே..’ என்றும் சொல்லவில்லை.. ‘அம்மாவிடம் சொல்..’ என்றும் சொல்லவில்லை.

சொன்னால் சொல்லிக்கொள்ளட்டும். ராதிகா கேட்டால் பார்த்துக்கொள்வோம் என்ற திண்ணம் வந்திருந்தது. அதோஷஜனிற்கோ அப்பாவை அடிக்கடி சந்திப்பது எண்ணி அப்படியொரு சந்தோசம். அதிலும் அவன் ஏதாவது வாங்கிக்கொடுத்து விட்டாலோ, கையில் அதனை வைத்தே தான் சுற்றிக்கொண்டு இருப்பான்.

பொதுவாய் எப்போதும் ராதிகா தான் அத்துவை அழைத்து வருவாள். அத்து ஏதாவது கையில் வைத்திருந்தால், அவளுக்குத் தெரிந்துவிடும், நிரஞ்சனன் வந்துவிட்டு சென்றிருக்கிறான் என்று. சிறுவர்களுக்கு எப்போதும் மதியத்திற்கு மேல் வகுப்புகள் இருக்காது. விளையாட்டு தான் அப்பள்ளியில்.

அதிலும் நிரஞ்சனனை அங்கே தெரியும் என்பதால், பள்ளி விடும் நேரத்திற்கு முன்னமே வந்து மகனைப் பார்த்துவிட்டும் சென்றுவிடுவான்.    

அன்றும் இப்படியானதொரு சந்திப்பு நிகழ்ந்திருக்க, நிரஞ்சனன் ஒரு ரிமோட் கார் வாங்கிக் கொடுத்திருக்க, ராதிகா மகனை அழைக்க என்று வந்தவள், அவன் கையில் இருப்பதைப் பார்த்து, சட்டென்று கோபம் வந்துவிட்டது.

“அத்து என்ன இது..” என்று கேட்க,

“ரிமோட் கார்ம்மா..” என்றான் சந்தோசமாய்.

“யார் கொடுத்தா??!!” என்றாள் தெரிந்துகொண்டே..

“அப்பா ம்மா..” என்றான் அதைவிட சந்தோசமாய்.

காரை நிறுத்திவிட்டு, அவன் கையில் இருப்பதை வாங்கிப் பார்த்தாள். எப்படியும் ஆயிரங்களில் தான் அதன் விலை இருக்கும் என்று பார்த்தாலே தெரிந்தது. இதுவரைக்கும் ராதிகா அதிக விலை போட்டு எல்லாம் அத்துவிற்கு பொம்மைகள் என்று வாங்கிக்கொடுக்க வில்லை.

அது தேவையும் இல்லை என்ற எண்ணம்..

விளையாடுவதற்கு நிறைய வாங்கிக் கொடுப்பாள். ஆனால் அதெல்லாம் விலை கூடுதலாக இல்லை. எல்லாம் ஒரு அளவே. என்ன இருந்தாலும் சிறுவன். பணம் காசின் அருமை எல்லாம் அவனுக்குத் தெரியப் போவது இல்லை. இந்த வயதில் அவனுக்கு என்ன தேவையோ அதுமட்டுமே போதும். இப்படி யோசித்துத்தான் அவனுக்கு வாங்கிக்கொடுப்பாள்.

ஒற்றைப் பிள்ளை.. அவன் எதுக்கேட்டாலும் செய்திட வேண்டும் என்றமாதிரி எண்ணமெல்லாம் அவளிடம் இல்லை.

மகனை சரியாய் வளர்க்க வேண்டும்.. அதுமட்டுமே..

அப்படியிருக்க, இப்போது நிரஞ்சனன் இத்தனை விலைபோட்டு அவனுக்கு வாங்கிக்கொடுத்திருக்க, கோபம் கோபமாய் வந்தது. சின்ன விஷயம் தான். யாரேனும் கேட்டால் கூட சிரிப்பர்.. ஆனால் மனதில் அழுத்தி அழுத்தி வைத்திருக்கும் அழுத்தங்கள் எல்லாம் ஒரு சிறு பொறியில் தானே பட்டென்று உடைத்துக்கொண்டு வெளிவரும்.

அப்படியாகிப்போனது ராதிகாவிற்கு…!!

ஆனால் அதை மகனிடம் காட்ட முடியாதே.  பொறுமையாகவே வீட்டிற்கு வர, அத்துவோ வந்ததும் அந்த ரிமோட் கார் வைத்து விளையாட, அமைதியாய் பார்த்துக்கொண்டு தான் இருந்தாள்.

உடைமாற்ற, சிற்றுண்டி உண்ண வைக்க என்று அன்று அவன் நிறைய படுத்தியும்விட்டான். பொழுது முழுவதும் அக்காரோடு தான். ராணி கூட கேட்டார்,

“என்ன ராதிகா.. இப்போ ஏன் இதை வாங்கிக்கொடுத்த.. விலை வேற ஜாஸ்தி போல இருக்கே..” என,

“நான்…” என்று அவள் என்னவோ சொல்ல வருகையில், பட்டென்று எதோ சத்தம் கேட்க, அம்மா மகள் இருவரும் திரும்பிப் பார்க்க, ரிமோட் கார் டைனிங் டேபிள் மேலிருந்து கீழே விழுந்து உடைந்திருந்தது.

அத்து நின்று அதனைப் பார்த்தவன் “ம்மா…” என்று ராதிகாவை அழைக்க,

“என்னாச்சு அத்து…” என்று கேட்டபடி எழுந்து செல்ல, அவனோ உதட்டைப் பிதுக்கி  அழத் தொடங்கியிருந்தான் “ம்மா கார் பொம்ம..” என்று.

மகன் அழவுமே, “ஒன்னுமில்லடா குட்டி.. இதோ சரி பண்ணிடலாம்..” என்று சொன்னவள், முடிந்த ஆளவு, செல்லோடேப் போட்டு ஒட்டிக் கொடுக்க, அதுவோ முன்னே போல நகரவில்லை.

அத்துவும் அம்மா என்னவோ செய்து கொடுத்திருக்கிறாள் என்று வைத்து விளையாட முயற்சிக்க, ம்ம்ஹும் எப்பலனும் இல்லை.

“ம்மா… ம்மா..” என்று அத்து திரும்ப அழ, ராணியோ மகளை முறைத்தார்.

“என்னை ஏன்ம்மா முறைக்கிற..” என்று ராதிகா கேட்க,

“பின்ன.. இத்தனை விலை போட்டு வாங்கிக்கொடுத்து.. பாரு முழுசா ஒருமணி நேரம் வைக்கல அவன்..” என்று ராணியும் கடிய,

“நான் ஒன்னும் வாங்கிக்கொடுக்கல..” என்றாள் முணுமுணுப்பாய்.

“பின்ன??!!!”

“அத்துவோட அப்பா வாங்கிக்கொடுத்திருக்கார்..” என்ற, திக்கென்று பார்த்தார் ராணி.

ஒரு அப்பா, மகனுக்கு வாங்கிக்கொடுப்பதை ஏன் என்றும் கேட்க முடியாது, வாங்கித் தாராதே என்றும் சொல்ல முடியாது. யாரால் சொல்ல முடியும்??! அப்படி சொல்லும்படியா இருக்கிறது இவர்களின் விவகாரம்.

ஊர் உலகத்தில் விவாகரத்து வாங்கியவர்கள் எல்லாம் இப்படியா இருக்கிறார்கள். அவரவர்களுக்கென ஒரு வாழ்வு என்று பார்த்துக்கொண்டு, வாழ்க்கை ஓட்டத்தில் பயணம் செய்துகொண்டு தானே இருக்கிறார்கள்.

அத்தனை ஏன் ராணி கூட சொன்னார் தானே.

‘உனக்குன்னு ஒரு வாழ்க்கை வேணாமா ராதி.. நாங்க இருக்கிற வரைக்கும் சரி.. அப்புறம் உனக்குன்னு ஒரு பாதுகாப்பு வேணாமா. அத்து சின்ன பையன்.. ஊர் உலகத்துல இப்போ குழந்தையோட எல்லாம் கல்யாணம் பண்ணிக்கிறது இல்லையா..’ என,

‘ம்மா.. நான் இங்க இருக்கணும்னா இனி இந்த பேச்சு யாரும் பேசக்கூடாது.. புரிஞ்சதா..’ என்று சொல்லி ஒரேதாய் வாய் மூடிவிட்டாள்.

அவள் வயது பெண்கள் எல்லாம் குடும்பம் கணவன் மனைவி என்றிருக்க, அதிலும் சொந்தத்தில் சித்தி, மாமா பிள்ளைகள் என்று எல்லாருமே திருமணமாகி குடும்பமாய் இருக்க, இப்போது ராதிகா மட்டும் தனித்து இருப்பது கண்டு பெற்றவர்களுக்கு வேதனை தான்.

சொன்னாலும் கேட்கப் போவதில்லை. இப்போது சூழ்நிலையும் முன்னைப் போல் இல்லை. கூர்ந்துப் பார்த்தால், இருவருக்கும் ஒருவரின் மீதிருக்கும் அன்பும் பிடிப்பும் இன்னமும் அப்படியே இருப்பது நன்குத் தெரிகிறது.

ஆனால் ??!!!!

இதை சொன்னால், மறுபடியும் வேதாளங்கள் மரமேறிக் கொள்கின்றன..

மகள் சொன்னதைக் கேட்டு ராணி அமைதியாகவே இருக்க, அம்மா எதுவும் சொல்வாரோ என்று ராதிகா நிமிர்ந்து பார்க்க, ராணியின் பார்வையில் அப்படியொரு வேதனை தெரிந்தது.

அத்துவோ ஒரு பக்கம் அழுதுகொண்டு இருக்க, இன்னொருபுறம் ராணி இப்படியொரு பார்வை பார்க்க, ராதிகா திணறித்தான் போனாள். யாரை சமாதானம் செய்வது என்று.

“ம்மா… ம்மா கார் பொம்ம…” என்று அத்து வந்து அவள் மீது ஏற,

“அதான் பிஞ்சு போச்சே டா.. உன்னோட மேக்னடிக் பஸில் எடுத்துட்டு வா விளையாடலாம்..” என்று ராதிகா சொல்ல,

“ம்ம்ஹும்.. போ.. அப்பாட்ட..” என்றான் பட்டென்று.

“அத்து..!!!” என்று ராதிகா அதட்ட, அவனோ கை கால்களை உதறிக்கொண்டு சத்தமாய் அழ, ராதிகாவின் பொறுமை ஓடிவிட்டது.

“ஏன்டா சொல்ற பேச்சே நீ கேட்கமாட்டியா.. எல்லாத்துக்கும் இப்போ என்ன புதுசா அடம் பண்ற நீ..” என்று அவளும் கோபமாய் திட்ட, அதோஷஜனோ இன்னமும் சத்தம் கூட்டி அழ,

இக்காட்சிகளை பார்க்க சகிக்காது ராணி எழுந்து அறைக்குள் சென்றுவிட்டார். ராதிகாவை பெற்றவராய் அவரின் மனம் தவித்தது.

மகனை அவள் அதட்டுவது போல் கூட தாங்கள் மகளை அதட்டியிருந்தால், இந்நேரம் அவளும் அவள் கணவனோடும், சிறுவன் அவன் தந்தையோடும் சந்தோசமாய் வாழ்ந்திருப்பர் என்று எண்ணினார். அதை செய்யாமல் விடுத்து, இப்போது அவளும் நிம்மதியில்லாது, பிள்ளையும் அப்பா பாசத்திற்கு ஏங்கி என்று,  இதை எல்லாம் காணப் பொறுக்கவில்லை ராணிக்கு.

இப்படியெல்லாம் சூழ்நிலை வரும் என்று யார் அறிவார்..??!!

ஆனால் மணிவண்ணன் சொன்னார்தான்.. ‘டைவர்ஸ்ங்கறது லேசுபட்ட முடிவு இல்லை.. அதுவும் இப்போ நீ சொல்றதுபோல பையனுக்கு அவன் அப்பா அவங்க குடும்பம் எல்லாம் வேணும்.. எனக்கு என் புருஷன் வேணாம்ங்கறது எல்லாம் சுலபமா கடந்து வர விஷயமில்ல….’ என்று.

ராதிகா தான் பிடிவாதமாய் இருந்துவிட்டாள்.

அத்துவின் அப்பா என்றால், அது நிரஞ்சனன் மட்டுமே.. இன்னொரு திருமணம் செய்து வேறொரு ஆடவனை எல்லாம் அப்பா என்று அவளால் அடையாளம் காட்டவே முடியாது..

இப்போது வரைக்கும் கூட அப்படித்தானே.                           

ராதிகா சமாதானம் செய்ய செய்ய, அத்துவின் அழுகை கூடியதே தவிர குறையேவேயில்லை.

“அத்து.. சொல்றதை கேட்பியா மாட்டியா…” என்று ராதிகா ஏகத்துக்கும் குரலை உயர்த்த,

உள்ளே எழுந்து போன ராணி வேகமாய் வந்தவர் “நீ கேட்டியா??!! நீ கேட்டியா ராதிகா.. யோசி யோசின்னு சொன்னோமே நீ கேட்டியா.. இல்லை உன் புள்ளைக்கிட்ட கேட்டுத்தான் டைவர்ஸ் வாங்கினியா…” என்று மனத்தாங்கல் தாளாமல் கேட்டுவிட,

“ம்மா…!!!” என்றாள் ஸ்தம்பித்து.

நிஜமாய் இப்படியொரு வார்த்தைகளை அவள் அம்மாவிடம் இருந்து எதிர்பார்க்கவேயில்லை. இத்தனை ஆண்டுகளாய் ஒரு சொல் சொல்லியது இல்லை. ஆனால் இன்று சொல்லவும் அதிகம் வலித்தது. ஏற்கனவே மனதில் ரணங்கள் அதிகம். இப்போது அம்மாவும் இப்படி சொல்ல, ராதிகாவின் கண்களில் இருந்து பொல பொலவென கண்ணீர் வந்திட, அப்படியே ராணியைப் பார்த்தபடி நின்றுவிட்டாள்.

பாட்டியின் குரல் ஓங்கி ஒலிக்கவும், அம்மாவின் கண்களில் கண்ணீர் வரவும், அத்துவிற்கு என்ன தோன்றியதோ இன்னமும் ராதிகாவைக் கட்டிக்கொண்டு அழ, அவளையும் அறியாது அவளின் கரங்கள் மகனைத் தழுவிக்கொள்ள, அவன் பொம்மைக்காக அழுகிறான், அவள் எதற்காக அழுகிறாள் என்பதே தெரியாது அழ, ராணி இதனைப் பார்த்து தாங்கவே இயலாது மணிவண்ணனுக்கு அழைக்க, அவரோ “அவளை கொஞ்சம் ப்ரீயா விடு..” என்று சொன்னவர்,

“நான் வந்து பேசுறேன்..” என்றும் சொல்ல,

யார் வந்து பேசினாலும் இது சரியாகும் என்று ராணிக்குத் தோன்றவில்லை.

“நீங்க வந்து பேசுங்க.. நான் இப்போ சம்பந்தியம்மா கிட்ட பேசுறேன்..” என்றவர்,    சுந்தரிக்கு அழைத்துவிட்டார்.

அவருக்குமே தெரியவில்லை. தான் இப்படி செய்வது சரியா என்று..!!

ஆனால் இதனை யாரிடம் சொல்ல முடியும்??!!

ஒன்று நிரஞ்சனனிடம் ராதிகா சொல்லவேண்டும்.. அது நடக்காது.. சரி பெரியவர்கள் எத்தனை நாளைக்கு பார்த்துக்கொண்டு சும்மா இருப்பர். அதுவும் நாள் செல்ல செல்ல கணவன் மனைவி இருவரின் வேதனையும் அதிகம் ஆகும் போது, பெற்றவர்கள் சும்மா இருந்திட முடியுமா என்ன??!!

சுந்தரிக்கு, திடீரென்று ராணியிடம் இருந்து அழைப்பு என்றதும் என்னவோ ஏதோவென அழைப்பினை ஏற்க, ராணி சொன்னவைகளை கேட்டு அவருமே கொஞ்சம் திடுக்கிட்டுத்தான் போனார்.

ஏனெனில் நிரஞ்சனன் சொல்லவேயில்லை மகனைச் சென்று அடிக்கடி காண்பதை.

இப்போது ராணி சொல்லித்தான் தெரியவர “எனக்கு இது தெரியாதே..” என்று அவரும் சொல்ல,

“எங்களுக்கும் எதுவும் தெரியலை. இவ வாயே தொறக்கல.. இப்போ அம்மா பையன் ரெண்டுபேரும் அழுதுட்டு இருக்காங்க.. என்னனு சொல்றது.. எனக்கு மனசே ஆரல..” என்று ராணியும் சொல்ல,

“ம்ம் நான்.. நான் வந்து பேசட்டுமா..” என்றார் சுந்தரி.

ஆனால், என்ன பேசிட என்று அவருக்கும் கிஞ்சித்தும் விளங்கவில்லை.

“என்ன??!! என்ன பேசுவீங்க… இப்போல்லாம் எது சொன்னாலும் அழறா.. பார்க்க முடியலை.. யோசிச்சுப் பார்த்தா நம்மதான் தப்பு பண்ணிட்டமோன்னு இருக்கு..” என,

“என்னது??!!!” என்றார் சுந்தரி திகைத்து.

“ஒன்னு இவங்க டைவர்ஸ்னு சொல்லவும், நம்ம சம்மதிச்சு இருக்கக் கூடாது.. அப்படியே ஆனா பிறகு, ரெண்டு பேருக்கும் ஒரு வாழ்க்கை அமைச்சு கொடுத்து இருக்கணும்.. எதுவுமே இல்லாம அவங்க போக்குல விட்டதுதான் தப்பா போச்சு..” என்று ராணி சொல்ல,

சுந்தரியோ “நான் எத்தனையோ தடவை சொல்லிட்டேன்.. எனக்கு கல்யாணம் ஆகி பொண்டாட்டி புள்ளை எல்லாம் இருக்குன்னு சொல்லிடறான்..” என்றார் சுந்தரியும்.

இரு அன்னைகளுக்கும் எப்படி இதனை கையாள்வது என்று புரியவில்லை. சிறிய பிள்ளைகளா அடித்து வழிக்குக் கொண்டுவர.

சுந்தரி அமைதியாய் இருந்தவர் “நான் ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்க கூடாது..” என,

“சொல்லுங்க..” என்றார் ராணியும்.

“இல்ல.. நாளைக்கு நித்யா மாப்பிள்ளை வீட்ல இருந்து வர்றாங்க.. பேசி முடிக்கிறப்போ ராதிகா அத்து எல்லாம் யாருமே இல்லை. என்ன இருந்தாலும் அத்து எங்க வீட்டுப் பையன். ராதிகாவையும் எங்க வீட்டு பொண்ணா தான் நினைக்கிறோம். நாளைக்கு அவங்க வர்றப்போ இவங்க ரெண்டுபேரும் இருந்தா நல்லாருக்கும்னு நான் நினைக்கிறேன்..” என,

“ராதிகா சம்மதிக்கணுமே…” என்றார் ராணி.

“நாளைக்கு அத்து இங்க வர்ற நாள்தான்.. நீங்க எப்படியாவது ராதிகாவையும் அனுப்பி வைங்க.. மத்தது நான் பார்த்துக்கிறேன்.. வேற யாருக்கும் சொல்லிக்க வேணாம்…” என்று சுந்தரி சொல்ல,

“ம்ம் சரி..” என்ற ராணிக்கு எப்படியாவது மகள், பேரனின் மனதில் நிம்மதியும் அமைதியும் மகிழ்வும் வந்தால் சரியென்று தோன்றியது.

இருவரும் என்ன செய்கிறார்கள் என்று ஹால் வந்து பார்க்க, அத்து அழுது அழுது, ராதிகாவின் மடியிலேயே படுத்திருக்க, ராதிகா மகனின் முதுகினில் தட்டிக்கொடுத்த படி, எங்கோ பார்வையை வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.

“ராதிகா…” என்ற ராணியின் குரலில் மீண்டவள், மீண்டும் அம்மா எதுவும் சொல்வாரோ என்று திகைத்துப் பார்க்க,

“அத்துவோட பாட்டி போன் பண்ணாங்க.. நாளைக்கு அத்து அங்க வர நாளாமே.. உன்னை கொண்டு வந்து விட சொன்னாங்க..” என,

“ம்மா..!!” என்றாள் புரியாது.

“நித்யா வர முடியாதுபோல.. அதான் நீ கொண்டு போய் விட்டுட்டனா, அப்பா கூட போயி கூட்டிட்டு வந்துப்பார்.. உனக்கும் நாளைக்கு லீவ் தானே. போய்ட்டு வந்திடு..” என, அப்போது இருந்த மன நிலையில் அவளால் வேறெதுவும் சிந்திக்க முடியவில்லை,

‘பையனை யாருக்கும் தெரியாம பார்க்க முடியும். ஆனா வந்து கூட்டிட்டு போக முடியாதாமா..’ என்ற ஒன்றை தவிர.

மனது நிரஞ்சனன் வந்து மகனை அழைத்துச் செல்லவேண்டும் என்று எண்ணியதா??!! இல்லை அவனைக் காணவேண்டும் என்று எண்ணியதா??!!

எக்கேள்விக்கும் பதிலே இல்லை ராதிகாவிடம்.

நாளை மகனை கொண்டு சென்று விடுகையில், சுந்தரியிடம் சொல்லி இது போல் எல்லாம் வாங்கிக்கொடுக்கக் கூடாது என்று சொல்லச் சொல்லவேண்டும் என்று எண்ணியவள், மகன் அடுத்து முழித்து பொம்மை என்று கேட்தற்கு கூட ‘நாளைக்கு அப்பா பார்க்க போலாம்…’ என்று சொல்லி சமாதானம் செய்து வைத்தாள்.

மறுநாள் அவளுக்கு முன்னமே அத்து எழுந்து அம்மாவை எழுப்பிட ‘இவ்வளோ அவசரமா டா…’ என்று சொல்லிக்கொண்டே அவனையும் தயார் செய்து, தானும் கிளம்பியவள்

“இவனைக் கொண்டு போய் விட்டுட்டு வந்திடுறேன்..” என்று சொல்லிவிட்டுச் செல்ல, எங்கே ராதிகாவைக் கண்டதுமே,

நிரஞ்சனன், நித்யா இருவருக்குமே ஒரு அதிர்ந்த பார்வை தான். அவள் வருவாள் என்று இருவருமே எதிர்பார்க்கவில்லை போல. அதுவும் அன்று  அரவிந்த் வீட்டில் இருந்து வருகையில்..

‘என்ன இப்படி ஒரு பார்வை..’ என்று ராதிகா பார்க்க, அத்து எப்போதோ “அப்பா..!!!” என்றபடி அவனின் அப்பாவிடம் சென்றிருக்க, சுந்தரி தான் “வா.. வா ராதிகா..” என்று வரவேற்க,

“இல்ல.. அது.. அத்தை.. நான் கிளம்புறேன்..” என்றாள் வேகமாய்.

நித்யா அம்மாவின் முகம் பார்க்க “கிளம்பலாம்.. பொறு.. உனக்கும் லீவ் தானே..” என்றவர், அவளை பேச நிறுத்த,

நிரஞ்சனனோ ‘என்ன செய்றாங்க இந்த அம்மா..’ என்று பார்க்க, வெளியில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்க,

நித்யா “ம்மா அவங்க எல்லாம் வந்துட்டாங்க போல..”  எனவும், ராதிகா “யார்??!!” என்று பார்த்தாள்.

“மாப்பிள்ள வீட்ல இருந்து வர்றாங்க ராதிகா.. நல்லவேளை நீயும் இந்த நேரம் இங்க இருக்க..” என்ற சுந்தரி இதெல்லாம் ஒன்றுமே இல்லை என்பதுபோல் சொல்ல, ராதிகாவிற்கும் சரி, நிரஞ்சனனிற்கும் சரி தர்ம சங்கடமாய் போனது. 

Advertisement