Advertisement

அத்தியாயம் – 11

யார் என்ன சொல்லியும் நிரஞ்சனன் கேட்பதாய் இல்லை. மருத்துவமனையில் இருந்து மகனை தான் தான் அழைத்துச் செல்வேன் என்பதில் பிடிவாதமாகவே இருந்தான். அத்துவின் அந்த அரைத்தூக்க ‘ப்பா…’ என்றதொரு அழைப்பு, நிரஞ்சனனை வேறெதுவும் சிந்திக்கவே விடவில்லை.

என் மகனுக்கு நான் அப்பா.. மற்றது எல்லாம் பின்னே தான்..!!

ஆனால் ராதிகாவோ, அத்துவிற்கு இப்படியானது கண்டு மனம் துடிக்க, நிரஞ்சனனின் இந்த மாற்றம் கண்டு பயம் வேறு அதிகரிக்க, அவளையும் மீறி கண்ணீர் வடிந்தது.

நிரஞ்சனன் அலைபேசியில் கோபமாய் பேசவும், தன் அப்பாவோடு பேசியவள், அடுத்து சுந்தரிக்கும் அழைத்து விசயம் சொல்ல, அப்படியே நித்யாவோடு கிளம்பி அவரும் வந்துவிட்டார். ராதிகாவும் மருத்துவமனை வந்திட, அவளால் மகனின் அருகே கூட செல்ல முடியவில்லை.

நிரஞ்சனனின் பார்வை அவளைத் தள்ளி நிற்க வைத்தது..

மனதை இறுக்கிப் பிடித்தவள், ‘நீ உன் பையனுக்கு அம்மா..’ என்று சொல்லிக்கொண்டவள், கட்டிலின் மறுபுறம் சென்று அமர்ந்து அத்துவின் கன்னம் தொட்டு “அத்து..” என்று மெதுவாய் அழைக்க, அவனோ அசைவில்லாது படுத்திருக்க,

“குட்டி.. அம்மா வந்திருக்கேன்டா.. பாருடா..” என்று அழவே தொடங்கிவிட்டாள்.

என்னவோ இந்த சூழலை ராதிகாவால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. இதற்கு முன்னே அதோஷஜனிற்கு காய்ச்சல் வந்ததே இல்லை என்றெல்லாம் இல்லை. அப்போதெல்லாம் ராதிகா  மட்டுமே அவனோடு இருப்பாள். அம்மாவைத் தவிர யாரையும் தொடக்கூட விடமாட்டான்.

ஆனால் இன்றோ அவள் பேசுவது கூட கேட்காது படுத்திருக்கிறான் என்றே அந்த தாய் மனம் எண்ண, “கண்ணா.. அத்து.. பாருடா..” என்றாள் திரும்ப.

அனைவரும் மௌனமாய் இதனைப் பார்த்துக்கொண்டு இருக்க, நிரஞ்சனனோ கோபத்தைக் அடக்க வழி தெரியாது முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டு அமர்ந்திருக்க,  சுந்தரி தான் “ராதிகா குழந்தை அவன்.. ஊசி போட்டதுல தூங்குறான்.. நீ ஏன் இவ்வளோ கலங்குற.. குழந்தைன்னா காய்ச்சல் வரத்தான் செய்யும்..” என்று அவளை சமாதானம் செய்ய,

“இல்லத்தை.. இவனுக்கு முடியலைன்னா, என்னைத் தவற யாரையும் கிட்ட கூட விடமாட்டான்.. என் கைலயே தான் தூங்குவான்..” என்று ராதிகா சொல்ல, அப்போது அவளையும் அறியாது அவளின் பார்வை கணவன்பக்கம் தான் சென்று வந்தது.

நிரஞ்சனன் கூட அப்போது அவளின் முகத்தினை தான் பார்த்துக்கொண்டு இருந்தான். அவளின் உணர்வுகளை புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால் ஏற்றுகொள்ள முடியவில்லை. காரணம் மகன் மீதிருந்த பாசம்.. தன்னோடு இருந்திருந்தால் இத்தனை கோபம் அவனக்கு இருக்குமா தெரியாது.

ஆனால் தன்னோடு இல்லாத தன் மகன், தன்னை காய்ச்சலிலும் கூட தேடுவது, உணர்வது கண்டு நிரஞ்சனன் மனதும் வெகுண்டது..

‘இப்படியொரு நிலையில் என்னையும் என் பிள்ளையையும் வைத்துவிட்டாளே..’ என்று..

இதனை சொன்னால், ‘அவள் கேட்டாள் என்று நீதானே விவாகரத்து கொடுத்தாய்..’ என்று அனைவரும் அவனையே திரும்பக் கேட்பர்.

ஆக, இது ஒரு முடிவே இல்லாத நீல் தொடராய் தான் அவனுக்குத் தெரிந்தது. அத்து பெரியவன் ஆக ஆக, இது போன்றதொரு சூழல் அடிக்கடி உருவாகும் என்றும் தோன்றியது. உண்மையும் அதுதானே..

நித்யாவும் வந்து “அண்ணி அழாதீங்க அண்ணி..” என,

“ஆபிஸ்ல மீட்டிங்.. அன்னிக்கு என்னோட லீட் கிட்ட உங்கண்ணா பேசினது வச்சு இன்னிக்கு அந்த லேடி என்னை எல்லார் முன்னாடியும் அப்படி பேசிட்டா… போன் வேற சைலனட்ல இருந்தது நித்யா..” என,

‘இத்தனை நடந்ததா..’ என்று பார்த்தனர் ராதிகாவின் பெற்றோர்.

ஆம்.. இதுவரைக்கும் ராதிகா அன்று நிரஞ்சனன் வீட்டில் நடந்தவைகளை வாய் திறக்கவே இல்லை. எங்கே தன்னையும் மீறி ஏதாவது சொல்லிவிடுவோம் என்று தனக்கு பாயந்தே எதுவுமே சொல்லாமல் இருந்துவிட்டாள்.

ராணி கேட்டதற்குக் கூட “ம்மா… ப்ளீஸ் இதுபத்தி பேசவேண்டாம்.. அதுவும் அத்து முன்னாடி இதெல்லாம் பேசவே வேண்டாம்..” என்றிட, சிறுவன் வேறு அவ்வப்போது அப்பா அப்பா என்று சொல்லிக்கொண்டு இருக்க, அவர்களும் வாய் மூடும் நிலை.

இப்போதோ அனைத்தையும் விடுத்து, ராதிகா அனைவரின் முன்னமும் பேச, “வேலைன்னு இருந்தா டென்சன் எல்லாம் வரத்தானே செய்யும் ராதிகா..” என்றார் சுந்தரி.

“ம்ம்..” என்று ராதிகா சொல்ல,

சுந்தரியோ மகனிடம் “அத்து முதல்ல முழிக்கட்டும்.. சும்மா சும்மா கத்தாதடா..” என்று மகனை அடக்க,  மணிவண்ணன் ஒன்றை நன்றாய் கவனித்தார்.

அது, ராதிகாவின் அருகில் அவளின் மாமியார், நாத்தனார் இருக்க, கட்டிலில் சிறுவன் படுத்திருக்க, இந்தப்பக்கம் நிரஞ்சனன் இருக்க, தானும் ராணியும் தான் தள்ளி நிற்கிறோம் என்று புரிந்தது. மகளை அவளின் குடும்பத்தோடு பார்க்க அவருக்கு மனம் நிறைந்தது தான்..

இதுவே ஒரு நல்லதற்கு வழி விடுமாயின், யார் வேண்டாம் என்று சொல்வார்கள். இருவருமே வாழ வேண்டியவர்கள் தானே.. ஏற்கனவே ஒன்றாய் வாழ்ந்தவர்களும் கூட. இப்போது மகனுக்காக என்று யோசித்தால் கொஞ்சம் நன்றாய் இருக்கும் என்றே எண்ணினார்.

ராணியும் என்ன நினைத்தாரோ, “வீட்டுக்கு போய், டிபன் செஞ்சு எடுத்துட்டு வர்றோம்..” என, ராதிகாவோ ‘என்னை விட்டு போகிறீர்களா..’ என்றெல்லாம் பார்க்கவில்லை,

“ம்மா அத்துக்கு இட்லியோட விட்டு சாப்பிட பால் மட்டும் எடுத்துட்டு வா..” என, மகள் அங்கே பொருந்திப் போனாள் என்று புரிந்துபோனது.

“ம்ம் சரி..” என்று ராணியும், மணிவண்ணனும் கிளம்ப,

நிரஞ்சனனோ “அத்துக்கு மட்டும் கொண்டு வாங்க.. நாங்க கடைல வாங்கிக்கிறோம்..” என,

“இல்லை மாப்…” என்று மணிவண்ணன் எதோ சொல்ல வரும்போதே,

“அத்து முழிச்சிடுவான்.. எல்லாருக்கும் செஞ்சு கொண்டு வரணும்னா லேட் ஆகிடும்.. அவனுக்கு மட்டும் கொண்டு வாங்க.. கடைல நான் வாங்கிட்டு வந்திடுறேன்..” என்றவன் சொல்லிக்கொண்டே கிளம்பியும் விட்டான்.

ராணி மகளின் முகம் பார்க்க “போ ம்மா.. அவன் முழிச்சா பசிக்கும்.. அதுக்கும் அழுவான் பாவம்..” என, கணவன் மனைவி இருவரும் கிளம்ப, நிரஞ்சனன் இரவு உணவு வாங்கப் போனவன், சிறிது நேரத்தில் வந்தும் விட்டான்.

“ம்மா சாப்பிடுங்க..” என்று கொடுக்க,

“எல்லாருமே உக்காந்துப்போம் நிரஞ்சன்.. அப்புறம் அத்து முழிச்சிட்டா ஒருத்தர் மாத்தி ஒருத்தர் பார்த்துக்கலாம்..” என,

“இல்லம்மா.. சாப்பிட்டிட்டு நீங்க எல்லாம் கிளம்புங்க.. நான் மட்டும் அத்துவோட இருக்கேன்..” என்றவனோ ராதிகாவை ஒரு பொருட்டாய் கூட  நினைக்கவில்லை என்றுதான் தோன்றியது ராதிகாவிற்கு.

‘என்ன தெரியும்.. கண்ணு முழிச்சதுமே என் மகன் அம்மான்னு கேட்டா என்ன சொல்லுவாங்களாம்..’ என்று மனதினுள்ளே சடைத்தவள்,

“அத்தை நீங்களும் நித்யாவும் சாப்பிடுங்க.. நான்.. நைட் அத்துக்கூட இருந்துக்கிறேன்..” என,

நிரஞ்சனனோ “நித்யா எல்லாருக்குமே எடுத்து வை..” என்று வந்து அமர்ந்துவிட்டான்.

இரண்டு பெஞ்ச் பக்கவாட்டில் இருந்ததால், அப்படியே சேர் போட்டு உண்பதற்கு எதுவாய் அமர்ந்துவிட, ராதிகாவோ மகனை விட்டு நகரவேயில்லை. நித்யா அம்மாவிற்கும் அண்ணனுக்கும் எடுத்து வைக்க,

“என்னண்ணா எல்லாமே இட்லி இது ஒன்னு மட்டும் தோசை..” என்று சாதாரணமாய் வினவ,

“ம்ம்..” என்று ராதிகாவைப் பார்த்தவன் “அவளுக்கு ஹோட்டல் இட்லி சேராது..” என்றான் முனுமுனுப்பாய்.

நித்யா கேட்கும்போதே, ராதிகாவிற்கு என்ன தோன்றியதோ, என்ன சொல்லப் போகிறானோ என்று செவிகளைத் தீட்ட, அவன் முனுமுனுப்ப அப்படியே தெள்ளத் தெளிவாய் அவளின் காதுகளில் விழ, சட்டென்று நெஞ்சடைத்துப் போனது அவளுக்கு..

‘என்னை இத்தனை தெரியுமா??!!’

இந்த கேள்வி முதல் முறையாய் அவளின் மனதினுள்..

“என்னைப் பத்தி உங்களுக்கு என்னதான் தெரியும்.. சொல்லுங்க.. என்னதான் தெரியும்.. என் மனசுல என்ன இருக்குன்னாவது தெரியுமா.. நானும் மனுசி தான் ஜடம் கிடையாது..” என்று அவள் சண்டை போட்டுக்கூட இருக்கிறாள் தானே..

அப்போதெல்லாம் அமைதியாய், உன் கோபங்களுக்கு எல்லாம் நான் பதில் சொல்லவேண்டியதில்லை என்ற ரீதியில் நிரஞ்சனன் கடந்திருக்க, இப்போதோ அவன் சொன்ன இந்த வார்த்தைகள் ராதிகாவைப் போட்டு பாடாய் படுத்தியது.

நித்யாவும், சுந்தரியும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொள்ள, மேற்கொண்டு எதுவும் கேட்காதவர்கள் “வாம்மா நீயும் வந்து சாப்பிடு..” என்று சுந்தரி அழைக்க,

“இருக்கட்டும் அத்தை. அத்துக்கு ஊட்டிட்டு அப்புறம்..” எனும்போதே, நிரஞ்சனன் லேசாய் திரும்பிப் பார்க்க,  “நானும் நித்யாவும் அடுத்து சாப்பிட்டுக்கிறோம்..” என்றிருந்தாள். 

சுந்தரியும், நிரஞ்சனனும் உண்டு முடிக்க, அடுத்து நித்யாவும், ராதிகாவும் உண்ண, ராதிகாவிற்கு ஒவ்வொரு வாய் தோசை உள்ளே போகும்போது நிரஞ்சனன் சொன்னது தான் காதில் கேட்டது.

தொண்டை அடைக்க, இருமல் வர, புரையேறி விட “ம்ம் அண்ணி பார்த்து..” என்று நித்யா தண்ணீர் பாட்டிலை கொடுக்க, “தேங்க்ஸ் நித்யா..” என்றவள் அடுத்து நிரஞ்சன் பக்கம் திரும்பவேயில்லை.

திரும்பினால் தானே அது இதென்று மனது போகும்.. பலவீனமாகும்.. தேவையே இல்லை.. ‘ராதி.. நீ ஒரு ஸ்ட்ராங் மாம்..’ என்று தனக்கு தானே சொல்லியும்கொள்ள,  சரியாய் அவள் உண்டு முடிக்கவும், அத்துவும் எழுந்துவிட்டான்.

அப்போதென பார்த்து நிரஞ்சனன் அங்கே இருக்க, கண் விழித்ததும் “ப்பா…” என்றவன், அவன் தூக்கவும், “ம்ம்ஹும் அம்மாட்ட..” என, ராதிகாவின் முகம் பட்டென்று மலர்ந்துவிட்டது.

‘பார்த்தாயா..’ என்று நிரஞ்சனனை ஒரு பார்வை பார்த்தவள் வந்து “அத்துக்குட்டி..” என்று தூக்கிக்கொள்ள, அவனோ “ம்மா..” என்று அப்படியே தொத்திக்கொள்ள, நிரஞ்சனனுக்கு காண பொறுக்கவில்லை.

“அத்து இங்க பாருடா..” என்று மகனை அழைக்க, ராதிகாவிற்கு சிரிப்பு கூட வந்துவிட்டது.

இத்தனை நேரம் கத்தியது என்ன, இப்போது மகன் திரும்பியும் பார்க்கவில்லை என்றதும் வந்து கெஞ்சுவது என்ன என்று. அவள் முகத்தில் இருந்த சிரிப்பு எதை உணர்த்தியதோ,

“அத்து…!!” என்று நிரஞ்சனன் திரும்ப அழைக்க “ம்ம்ஹும் அம்மாட்ட..” என்றான் ராதிகாவின் கழுத்தினை இறுக கட்டிக்கொண்டு.

அது இன்னமும் ராதிகாவிற்கு சிரிப்பினை கொடுக்க, அதனை அடக்கி நின்றிருந்தாள். நிரஞ்சனனோ “நீ உங்கம்மா கிட்டயே இரு.. என்னை திரும்பி மட்டும் பாரு..” என,

திரும்பிப் பார்த்த சிறுவனோ அழகாய் முறுவலிக்க, அப்படியே இப்போது ராதிகா புன்னகைத்தது போலவே இருந்தது நிரஞ்சனனுக்கு.

ராதிகாவிற்கு எப்போதுமே அத்து சிரிப்பது நிரஞ்சனன் சிரிப்பது போலவே இருக்கும். இப்போதோ நிரஞ்சனனுக்கு அவள் சிரிப்பது போல் தெரிய, அத்துவோ தன் அப்பா அம்மா இருவரையும் பார்த்து புன்னகைத்துக்கொண்டு இருக்க,  நர்ஸ் வந்து அவனை பரிசோதித்துப் பார்த்தவர்,

“பீவர் நல்லாவே கம்மியாகிடுச்சு.. டாக்டர் ரவுண்ட்ஸ் வர்றப்போ செக் பண்ணிட்டு சொல்வார்..” என்றுவிட்டு போக,

“ம்ம்மா வீட்டுக்கு..” என்றான் சிறுவன்.

நிரஞ்சனன் மகனை தன்னோடு அழைத்துக்கொண்டு போகவேண்டும் என்று காத்திருக்க, அவனோ அம்மாவுடன் கிளம்ப “இருடா குட்டி.. டாக்டர் வந்து சொல்லட்டும்…” என்று ராதிகா சொல்ல,

“ம்ம்..” என்றபடி அத்து ராதிகாவிட்டு நகரவேயில்லை.

நித்யா, சுந்தாரி அழைத்தமைக்கு கூட, “ம்ம்ஹும்..” என்றுவிட்டான். நிரஞ்சனனோ ‘ரொம்ப பண்றடா நீ..’ என்பதுபோல் பார்க்க, ராணியும் மணிவண்ணனும் வந்துவிட்டனர்.

அவர்களிடமும்  சிறுவன் செல்லாது ராதிகாவுடனே இருக்க, “அத்துக்குட்டி சமத்தா சாப்பிட்டா தான் டாக்டர் வந்து வீட்டுக்கு போகச் சொல்வாங்க..” என்றபடி ராதிகா ஊட்ட, என்ன நினைத்தானோ அடம் செய்யாது அமைதியாய் உண்டும் முடித்துவிட்டான்.

ஆனால் அவன் உண்டு முடிக்கும் மட்டும், அத்து மற்றும் ராதிகாவின் குரல் தான் அவ்வறையில் ஒலித்துக்கொண்டு இருந்தது. மகன் கேட்பதற்கு எல்லாம் பொறுமையாய் பதில் சொல்லி, அவனுக்கு விளையாட்டுக் காட்டி, அந்த இரண்டு இட்லிகளை அவனுக்கு உள்ளே தள்ளுவதற்குள் ராதிகாவிற்கு அவள் உண்டது செரித்திருக்கும்.   

பசி அடங்கி, காய்ச்சல் குறையவும் அத்துவிற்கு சற்று தெம்பு வந்திட, மருத்துவர் வந்து பார்த்தவர் “வீட்டுக்கு கூட்டிட்டு போலாம். நாளைக்கு ஒன்ஸ் திரும்ப கூட்டிட்டு வாங்க.. நார்மல் பீவர்தான்..” என்றுவிட்டு செல்ல, அனைவரும் கிளம்ப, நிரஞ்சனனுக்கு தான் மனது காய்ச்சல் கண்டது.

மகனை தன்னோடு அழைத்துச் செல்ல அவனின் எண்ணங்கள் துடிக்க, அவனோ ராதிகாவை விட்டு இம்மியளவு கூட நகரவில்லை. நித்யாவும் சுந்தரியும் “ஒருதடவ வாடா ..” என்றதற்கு கூட தலையை ஆட்டிவிட்டான்.

ராதிகாதான் “சரி ப்ளையிங் கிஸ் கொடு அத்து..” என, அப்போதும் அவளைத் தொத்தியபடியே தான் கொடுத்தான்.

நிரஞ்சனனுக்கும் அப்படியே கொடுக்க, அவனுக்கோ மகனை அணைத்து இறுக முத்தமிட வேண்டும் போல ஆசையாய் இருந்தது. நிரஞ்சனன் காரில் சுந்தரியும் நித்யாவும் ஏறிவிட, ராதிகாவின் காரில் மணிவண்ணனும் ராணியும் ஏறிவிட,

ராதிகாவும் மகனைத் தூக்கிக்கொண்டு காரில் ஏறப்போனவள் என்ன நினைத்தாளோ, திரும்பிப் பார்க்க, நிரஞ்சனன் இவர்களைத் தான் பார்த்துகொண்டு நின்றான்.

அவன் கண்களில் அப்படியொரு ஏக்கம். ஒருமுறையாவது மகன் தன்னைத் திரும்பிப் பார்க்க மாட்டானா என்று. கார் அருகே நின்றவன் அப்படியே நிற்க, ராதிகா அத்துவின் காதில் என்னவோ சொல்ல, அவனும் சரி என்று தலை ஆட்டுவது தெரிந்தது.

இரண்டு காருக்குள் இருந்தவர்களும், இக்காட்சிகளைப் பார்த்துக்கொண்டு இருக்க, ராதிகா அத்துவை தூக்கிக்கொண்டு நிரஞ்சனன் அருகே வந்தவள் “அத்து..” என, அவனும் திரும்பி நிரஞ்சனனைப்  பார்த்து புன்னகைத்தவன்,

“ப்பா..” என்று அவனிடம் செல்ல, அவனுக்கு அப்போது தோன்றிய உணர்வினை சொல்ல வார்த்தைகளே இல்லை..

“அத்துக்குட்டி..” என்று சொல்லி, அப்படியே தூக்கிக்கொண்டவன், இறுக மகனைக் கட்டிக்கொள்ள,

இக்காட்சி பார்ப்பதற்கு மனதை நிறைத்தாலும், அந்த சூழலின் கணம் தாங்காது, ராதிகா அவளின் பார்வையை வேறுபுறம் திருப்பிக்கொள்ள, நிரஞ்சனனுக்குப் புரிந்தது ராதிகா தான் மகனிடம் ‘அப்பாவிடம் போ..’ என்று சொல்லியிருக்கிறாள் என்று.

அப்பாவும் பிள்ளையும் இரண்டு நிமிடம் கொஞ்சிக்கொள்ள, “பை ப்பா..” என்ற சிறுவன் மீண்டும் அம்மாவிடம் பாய, மகனைத் தூக்கிக்கொண்டவள், நிரஞ்சனனை ஒரு பார்வை பார்த்துவிட்டு பின் தன் காருக்குச் சென்று, காரினையும் கிளப்பிச் சென்றும்விட்டாள்.

இவர்களின் இந்த விசித்திர விவாகரத்து வாழ்கையில் இன்னும் இன்னும் என்ன என்ன விசித்திரங்கள் நடந்திடப் போகிறதோ..!!     

Advertisement