Advertisement

அத்தியாயம் – 10

ஆகிற்று மேலும் பத்து நாட்கள்.. ராதிகாவும் அத்துவும் அவர்கள் வீடு திரும்பியிருக்க, நிரஞ்சனன் இல்லம் இப்போது பெரும் அமைதியை சூடியிருந்தது. சுந்தரி வாய்விட்டே சொல்லிவிட்டார்,

“வீட்ல ராதிகாவும், அத்துவும் இருந்தது வீடே நிறைஞ்சு இருந்துச்சு..” என்று.

நித்யாவிற்கே தெரிந்தது, தானும் இங்கிருந்து திருமணம் முடிந்து சென்றுவிட்டால், அம்மாவும் அண்ணனும் ஒரே வீட்டினில் இருந்தாலும் ஆளுக்கு ஒரு திசையில் முகம் பார்த்து அமர்ந்திருப்பர் என்று.

கவலையாய் தான் இருந்தது. ஆனால் அவளால் என்ன செய்திட முடியும்..??!

நிரஞ்சனனிடம் ஒரு முறை கேட்டும் பார்த்தாள் “நீ ஒன்ஸ் அண்ணியோட பேசி பாரேண்ணா..” என்று.

அவனோ “என்ன பேச??” என,

“இல்லை.. அவங்களும் ஒன்னும் நிம்மதியா இருக்கிறதுபோல இல்லைண்ணா.. ரெண்டு பேர் மனசுலயும் அன்பிருக்கு தானே.. ஒன்ஸ் மனசு விட்டு பேசினா கிளியர் ஆகுறதுக்கு சான்ஸ் இருக்குல்ல.. அத்துக்காக கூட நீங்க யோசிக்கலாமே..” என்று நித்யா சொல்ல,

“ம்ம் அது எப்பவோ பேசிருக்கணும் நித்தி.. இது டூ லேட்.. வேண்டாம்.. அன்னிக்கு இங்க வரணும்னு சூழ்நிலை. இல்லைன்னா நீ இப்படி யோசிச்சு கூட இருக்க மாட்ட தானே.. நிம்மதியா இரு.. இது நீ சந்தோசமா இருக்க வேண்டிய நேரம்..” என்று அண்ணனாய் அறிவுரை சொல்லிவிட்டுச்  செல்ல,

அவன் மனதிலுமே ஒரு தாக்கம் இருந்தது தான். வெளிக்காட்டிக்கொள்ள வில்லை அவ்வளவே.

எங்கே தான் எதுவும் முகத்தில் காட்டினால், நிச்சயம் அம்மாவும் தங்கையும் வருந்துவர் என்றெண்ணி தன் உணர்வுகளை அடக்கியவனுக்கு ‘ஒருமுறை அப்போதே பேசியிருக்க வேண்டுமோ..’ என்றும் தோன்றியது.

அனைவருமே சொன்னார்களே, நேரம் எடுத்துக்கொள்ளுங்கள்.. பிள்ளை இருக்கிறது.. பெரிய பிரச்னைகள் என்று எதுவுமே இல்லை.. நிதானமாய் பேசி ஒரு முடிவிற்கு வாருங்கள் என்று..

யார் கேட்டது??!!

ராதிகா மாத்திரையை விழுங்கிப் படுக்க, இவனோ மறுபேச்சே இல்லாது வக்கீல் வைத்து அனைத்தும் தயார் செய்து கை எழுதும் போட்டுக் கொடுத்துவிட்டான்.

ஆம்!!! அனைத்தும் செய்தது நிரஞ்சனன்தான்..

அவள் உயிரை விட துணிந்துவிட்டாள் என்றதுமே, போதும் என்ற முடிவிற்கு வந்துவிட்டான்..

‘நீ கேட்டது இதுதானே.. இந்த வாங்கிக்கோ.. நிம்மதியா இரு.. என் பிள்ளைக்கு யார் இருந்தாலும் இல்லைன்னாலும் அம்மா இருக்கணும்..’ என்று விவாகரத்து கொடுத்தே விட்டான்.

ஆனால் அப்போதும் அவள் எதிர்பார்த்தது ஒன்றே ஒன்றுதான் ‘எனக்காக.. நம் பிள்ளைக்காக.. ஒரே ஒரு முறை நாம் முயற்சி செய்து பார்ப்போம்..’ என்று அவன் சொல்வானா என்றே..

‘உன் பிள்ளைக்கு அம்மா வேண்டும் என்று எண்ணும் நீ, ஏன் உன் மனைவிக்கு நீ வேண்டும் என்று எண்ணவில்லை, எனக்கு என் மனைவி வேண்டும் என்று எண்ணவில்லை..’ இதை எண்ணி எண்ணியே ராதிகாவின் மனது மரத்துப் போனது.

அப்படித்தான் இப்போது வரைக்கும் எண்ணியிருந்தாள். ஆனால் இப்போதோ அடியாழத்தில் அமிழ்ந்து இருந்தது எல்லாம் சிறிது சிறிதாய் வெளி வரத் தொடங்கியது.

மீண்டும் அவனோடான சந்திப்பு.. நெருக்கும்.. பேச்சு.. ஸ்பரிசம்.. பார்வைகள்.. என்று அந்த ஒரு நாள் கொடுத்த தாக்கம் நிறைய நிறைய..

சாதாரண காய்ச்சல் என்பதால், சீக்கிரமே சரியாகிவிட, அன்றைய தினம் இரவே ராணியும், மணிவண்ணனும் வந்திட, ராதிகா விட்டால் போதுமென்று அத்துவை தூக்கிக்கொண்டு கிளம்பிவிட்டாள்.

நிரஞ்சனனுக்கு மகனை அனுப்பவே மனதில்லை.. அவனை தூக்கி வைத்துக்கொண்டும், மடியில் அமர்த்திக்கொண்டுமே இருக்க, சுந்தரி தான் “நிரஞ்சன்…” என்று அவன் தோள் தொட, பின்தான் கொடுத்தான்.

“பை ப்பா..” என்று சந்தோசமாய் அத்து கை அசைத்து, அவன் கன்னத்தில் இதழ் பதிக்க,

‘என் மகன் என்னோட தான் இருப்பான்.. கொடுக்க முடியாது..’ என்று சத்தம் போட்டு கத்த வேண்டும் போலிருந்தது.

‘சொன்னா என்ன செஞ்சிடுவா??!!’ என்ற தினுசில் தான் ராதிகாவைப் பார்க்க, அவளோ மகன் அவனின் அப்பாவிடம் காட்டும் நெருக்கம் கண்டு அரண்டு போய் நின்றிருந்தாள்.

இதுவே தொடருமாயின்??!! இதையே அத்து தினம் வேண்டும் என்றால்??! அவள் என்ன செய்வாள்.

நினைக்கவே கூடாது என்றெல்லாம் எண்ணியிருந்த விஷயங்கள் அவளுள் பூதாகரமானது.. அதற்கேற்ப மறுநாள் இருந்தே அத்து “ம்மா ப்பா வீட்டுக்கு..” என்று கேட்கத் தொடங்கியிருந்தான்..

“என்னது??!!” என்று ராதிகா, ராணி, மணிவண்ணன் எல்லாம் அதிர்ந்து நோக்க,

“ம்மா அங்க ஜாலிம்மா…” என்று வாசலை கை காட்டினான் மகன்.

ராதிகா அதிர்ச்சியில் எச்சில் விழுங்க, மணிவண்ணனோ “அத்து குட்டி வா தாத்தா பார்க் கூட்டிட்டு போறேன்..” என்று அவனை வெளியே அழைக்க,

“ம்ம்ஹும் அப்பாட்ட…” என்று கை காலை உதற,

“அ.. அப்பா… அப்பா.. ஊர்ல இல்லைடா..” என்றாள் வேகமாய் ராதிகா..

பொய்தான்.. அதுவும் தான் பெற்றமகனிடம்.. அதுவும் அச்சிறுவனிடம்.. தன்னை எண்ணியே இகழ்ச்சியாய் இருந்தது. ஆனாலும் வேறு வழியில்லையே.. அதோஷஜனோ அம்மாவின் சொல்லை உண்மை என்று அப்படியே நம்பியவன்,

எப்போ வருவார் என்று கேட்பதற்கு “எப்போ..??” என்று கைகளை அசைத்துக் கேட்க,

“அ.. எப்படியும் ஒன் வீக் ஆகும்..” என்று ராதிகாவும் சொல்ல, “ம்ம்…” என்று முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டான் அத்து..

அப்பாவை தேடும் மகன். அப்பாவின் அருகாமைக்கு ஏக்கம் கொள்ள, அடுத்து வந்த தினங்களும் அத்துவிற்கு  அனைத்திலும் பிடிவாதம் வந்தது. உண்பதற்கு, உறங்குவதற்கு, பள்ளிச் செல்ல, என்று அனைத்திற்கும் முரண்டு பிடித்து அழத் தொடங்க, ராணியோ “இதெல்லாம் சரியில்லை ராதிகா.. அவன் சின்ன பையன்..” என்று மனம் கேளாது சொல்ல,

“நானும் தான் வேற என்ன செய்வேன் ம்மா..” என்றாள் அழுகையோடு.

அவளுக்குமே மகனின் தேவை எதுவென்று புரிந்தாலும், தைரியமாய் எதையும் செய்யும் நிலையில் அவள் மனமில்லை.. எங்கே அதோஷஜன் அப்பாவிடம் தான் இருப்பேன் என்று சொல்லிடுவானோ என்று பயம். நிரஞ்சனன் என் மகன் என்னுடன் தான் இருப்பான் என்றுவிட்டால், அதுவே அவளை மௌனியாக்கி விட,  கொஞ்சம் கொஞ்சமாய் அத்துவை சமாதானம் செய்யத் தொடங்கினாள் ராதிகா. 

“அப்பா..” என்று ஆரம்பிக்கும் முன்னமே, கதை சொல்லியோ, இல்லை வேறு விளையாட்டு பொருட்கள் என்று அதில் அவன் கவனம் திருப்பியோ, இல்லை வெளியே அழைத்துச் சென்றோ என்று மேலும் மேலும் மகனோட தன் நேரத்தை நீட்டிக்கொள்ள, அவள் வேலையிலும் அவளுக்கு டென்சன் கூடியது.

சுலேகா போட்டு வாட்டி எடுத்தார் என்றுதான் சொல்லவேண்டும். அதற்கு காரணமும் இருந்தது. அன்று காய்ச்சல் என்று ராதிகா சொல்லாமலே விடுப்பு எடுத்திட, மதியத்திற்கு மேலே சுலேகாவே ராதிகாவை அழைக்க, மருத்துவமனையில் இருந்ததினால் அவளால் எடுத்துப் பேச முடியவில்லை.

மருத்துவமனையில் இருந்து திரும்பி நிரஞ்சனன் வீடு வரவுமே, ராதிகா சுலேகாவிற்கு அழைத்துப் பேச, அவரோ “எவ்வளோ அசால்டா அன்சர் பண்றீங்க ராதிகா.. பீவர்னு கிட்ஸ் போல ரீசன் சொல்லிட்டு.. இதுதான் நீங்க வேலை பாக்குற லட்சணமா..” என்று ஏகத்துக்கும் கத்த,

ராதிகாவின் முகம் அப்படியே மாறிவிட்டது. அலுவலகமாய் இருந்திருந்தாலோ, இல்லை அங்கே அவளின் அப்பாவின் வீட்டில் இருந்திருந்தாலோ, ராதிகா இருந்த மன நிலையில் ‘உன்னால் என்ன செய்ய முடியுமோ செஞ்சிக்கோ..’ என்றுதான் சொல்லியிருப்பாள்.

ஆனால் இங்கே நிரஞ்சனனும், சுந்தரியும் அவள் முகம் பார்த்து அமர்ந்திருக்க, அவளால் ஒன்றும் சொல்ல  முடியவில்லை.

“என்ன ராதிகா சைலெண்டா இருந்தா என்ன அர்த்தம்??!! ஆன்சர் மீ..” என்று சுலேகா கத்த,

“மேம்.. நான் ஹாஸ்பிட்டல் போய்ட்டு இப்போதான் வந்தேன்..” எனும்போதே,

“உங்க கதை எல்லாம் நான் கேட்கத் தயாரா இல்லை.. நேத்து மீட்டிங்ல என்னவோ எல்லாம் பண்ணிடுவேன் அப்படிங்கறது போல சொன்ன டாஸ்க் எல்லாம் ஓகே ஓகே சொன்னீங்க.. இன்னிக்கு ஆளே வரலை.. இதுலையே  தெரியலை..” என்று சுலேகா இதுதான் வாய்ப்பு என்று சத்தம் கூட்ட,  ராதிகாவின் முகம் அப்படியே இறுகி கறுத்துப்போனது.

நிரஞ்சனனுக்குப் புரிந்தது எதுவோ பிரச்சனை என்று. அன்றே நித்யா சொன்னாள் தானே ‘அண்ணிக்கு வேலைல எதுவோ பிராப்ளம் போல..’ என்று.

இப்போதோ, ராதிகா, பதில் சொல்ல முடியாத நிலையில், முகம் கறுத்து இறுகிப்போய் அமர்ந்திருக்க, அதைக் காண பொறுக்காதவன் அவளிடம் போன் கொடு என்பது போல் கை நீட்டினான்.

‘ஆங்..!!!’ என்று ராதிகா பார்க்க, சுந்தரி கூட என்ன செய்யப் போகிறான் என்றுதான் பார்த்தார்.

“ம்ம்…” என்று நிரஞ்சனன்  சொல்ல, அவளையும் அறியாது அவளின் கரம் போன் கொடுக்க நீள, அதனை வாங்கியவன் “ஹலோ…” என்றான் அழுத்தமாகவே.

சுலேகாவோ பேசிக்கொண்டே இருக்க, திடீரென கேட்ட ஆண் குரலில் கொஞ்சம் திகைத்தவர் “ஹ.. ஹலோ..” என்று சொல்ல,

“நான் நிரஞ்சனன்.. ஹோப் யூ க்னோ மீ..” என்றவனின் தொனியில், இதற்குமேல் நீ வாய் திறந்தால், அவ்வளோதான் என்ற செய்தி இருக்க,

“யா..!! யா..!!” என்று சுலேகா திணற,

“ராதிகா இஸ் நாட்வெல்.. ஹெர் பேரன்ட்ஸ் ஆர் நாட் ஹியர்.. சோ இன்பார்ம் பண்ண முடியலை.. எதுவா இருந்தாலும் அவங்க ஆபிஸ் வந்தப்புறம் பேசி கிளியர் பண்ணிக்கோங்க ட.. இப்போ அவங்க ரெஸ்ட் எடுக்கணும்..” என்றான் ‘நீ பேசியது போதும்..’ என்று சொல்லும் விதமாய்.

அவன் பேசிய தொனியே சுலேகாவிற்கு இப்போது தான் பேசினால் அது சரியில்லை என்பதை உணர்த்த, ஏற்கனவே ராதிகாவும் ‘என்னை மென்டல் டார்ச்சர் செய்றீங்கன்னு கம்ப்ளைன்ட் பண்ணுவேன்..’ என்று சொல்லியிருக்க,

“யா ஓகே.. அவங்க சரியாகிட்டு வந்தா போதும்.. டேக் கேர்..” என்று சொல்லி வைத்துவிட்டார்.

‘அவ்வளோதான்..’ என்பதுபோல் பார்த்தவன் போனை டேபிள் மீது வைத்துவிட்டு “ம்மா நான் கிளம்புறேன்..” என்றுவிட்டு கிளம்பியும்விட்டான்.

நிரஞ்சனன் கிளம்பிய பிறகு வெகு நேரம் கழித்தும் கூட, ராதிகாவிற்கு அதிர்ச்சி நீங்கவில்லை. அவனா பேசியது??!! வேலைக்குச் செல்வதற்கு தனக்கு சாதகமாய் ஒரு வார்த்தை அன்று வீட்டினர் முன் வாய் திறக்காதவன் இன்று இப்போது இப்படி பேசுகிறான்??!!

இதில் எது அவனின் நிஜம்..??!

முதலில் இப்போது ஏன் அவன் இப்படி பேசினான்??!

ஒன்றுமே விளங்கவில்லை.. யாரிடம் அவள் கேட்க முடியும்.. அவனைத் தவிர. கேட்டுவிடவும் முடியுமா என்ன??!!

ஆனால் அன்று நிரஞ்சனன் பேசுகையில் அமைதியாகிவிட்ட சுலேகா, அதன்பின் வந்த நாட்கள் எல்லாம் ராதிகாவை போட்டுப் பாடாய் படுத்தினார். ராதிகாவும், தனக்கு ப்ரோமோசன் வரும் இந்த நேரத்தில், சுலேகாவோடு எந்த பகையும் வேண்டாம் என்று பொறுத்துப் போக,

அன்றைய தினத்தில் யாருக்கு நேரம் சரியில்லையோ “தென் ராதிகா.. இப்போ நீங்க எங்க இருக்கீங்க???” என்று சுலேகா அவர்களின் டீம் மீட்டிங்கில் வினவ,

“வொய் மேம்..” என்றாள் புரியாது.

“நாம ட்ரைனிங் கொடுக்கப் போற சப் ஆபிஸ் உங்களோட ஏரியாலதான் இருக்கு.. சோ உங்களை அலாட் பண்ணா இட் வில் பி ஈசி பார் யூ.. பட் நீங்க அங்கதான் இருக்கீங்களா இல்லை உங்க ஹஸ்பன்ட் வீட்ல இருக்கீங்களான்னு தெரியலை.. சோ க்லாரிபை பண்ண..” என்று கூலாக சுலேகா கேட்க,

‘ஹஸ்பன்ட் வீடா??!!’ என்றுதான் பார்த்தனர் மற்ற நால்வரும்.

அனைவருக்குமே  அவள் ‘டைவர்சி..’ என்று தெரியும்..

இப்போது திடீரென்று சுலேகா இப்படி சொல்லவும், மற்றவர்கள் கேள்வியாய் பார்க்க, அவளோ ‘இவ்வளோதான் உனக்கு மரியாதை..’ என்பதுபோல் பார்த்து “எனக்கு வொர்க் அலாட் பண்றது மட்டும்தான் மேம் உங்களோட டியூட்டி.. நான் எங்க இருக்கேன்.. எப்படி வருவேன் போவேன் எல்லாம் கேட்கறதுக்கு இல்லை.. அது என்னோட பிரச்னை..” என்றாள் வெளிப்படையாய் முறைத்தே.

ராதிகாவின் பார்வையில் தெரிந்த உஷ்ணம் கண்டு, மற்றவர்கள் பார்வையை திருப்பிக்கொள்ள, சுலேகாவோ “யா.. என்னோட வேலை இல்லைதான்.. பட் வொர்க் நீங்க சரியா பண்ணலைன்னா நான் க்வெஸ்டின் பண்ணுவேன்.. உங்க ஹஸ்பன்ட் போன் வாங்கிப் பேசுவார்.. சோ இதெல்லாம் எனக்கும் தேவையில்லை இல்லையா..” என,

ராதிகாவிற்கு மிகுந்த அவமானமாய் போய்விட்டது. வேண்டுமென்றே தான் சுலேகா இன்று அனைவரின் முன்னமும் இப்படி பேசுகிறார் என்று தெரிந்தாலும், இவ்விசயத்தில் அவளால் இறங்கியும் பேசிட முடியாது இல்லையா. இருவரும் தனிப்பட்டு பேசுகையில் அவள் துணிந்து பேசிடுவாள்.

‘என் பெர்சனல் லைப்ல நான் என்ன செய்றேன்னு உங்களுக்குச் சொல்ல வேண்டியது இல்லை..’ என்று.

ஆனால் சுற்றி ஆட்கள் இருக்க, அனைவரின் முன்னும் அவள் தன் குடும்ப வாழ்வை பற்றி பேசிடவும் விரும்பவில்லை.

பல்லைக் கடித்து “அந்த ட்ரைனிங்கு என்னைத்தான் அலாட் பண்றீங்க அப்படின்னா.. ஐ வில் கோ.. வேறெந்த கவலையும் உங்களுக்கு தேவையில்லை..” என,

“தென் ஓகே.. நாளைக்கு அபிசியல் மெயில் வந்திடும்.. யூ ப்ரோசீட்..” என்று இலகுவாய் சுலேகா சொல்லிவிட்டுச் செல்ல, டீம் ஆட்கள் மற்றவர்கள் அவளை அப்போதும் ஒருவித கேள்வி தாங்கிய பார்வைதான் பார்த்துவிட்டு போயினர்..

‘ச்சே…’ என்றானது அவளுக்கு..

இதற்கு அவன் அன்று பேசாமலே இருந்திருக்கலாம் . எப்போதும் போல்.. பிரச்சனை என்பது சுலேகாவோடு முடிந்திருக்கும். இப்போது அனைவருக்கும் அவரவர் மனதில் ஆயிரம் கற்பனைகள் தறிகெட்டு ஓடும்..

“ஓ!!! காட்… இதெல்லாம் எனக்குத் தேவையா??!! இத்தனை வருஷம் இருந்ததுபோல இருந்துட்டு போகவேண்டியது தானே.. இப்போ என்ன புதுசா கரிசனம் எல்லாம்..” என்று நிரஞ்சனனை எண்ணித்தான் நொந்துகொள்ள முடிந்தது.

அங்கே நிரஞ்சனனோ அவனின் ஆபிஸில் வேலையாய் இருக்க,  மாலை நெருங்கும் நேரம், அதோஷஜன் படிக்கும் பள்ளியில் இருந்து அழைப்பு வர, இன்கம்டாக்ஸ் விசயமாய் தான் பேச அழைக்கிறார்களோ என்று அழைப்பை எடுக்க

“சார்.. அதோசஜன்க்கு ஹை பீவர்.. அவங்க அம்மா நம்பர்க்கு கால் பண்ணா எடுக்கவேயில்லை.. ” என்று தகவல் வர, அடுத்த நொடி நிரஞ்சனன் வேறெதுவும் யோசிக்கவேயில்லை.

அடித்துப்பிடித்து பள்ளிக்குச் சென்றுவிட்டான். அங்கே சென்றுபார்த்தால் அத்துவின் உடல் அத்தனை சூடாய் இருந்தது.

“ மதியம் வரைக்கும் நல்லாத்தான் சார் இருந்தான்..” என்று அவனின் கிளாஸ் மிஸ் சொல்ல,

“ஓகே..” என்றவன், மகனைத் தூக்கிக்கொள்ள, கண்கள் கூட திறந்திட முடியாத நிலையில் இருந்த அத்து அந்நிலையிலும் ‘ப்பா…’ என்று அவனின் ஸ்பரிசம் உணர்ந்து சொல்ல, நிரஞ்சனன் மனது நிறைந்து தான் போனது..

“அப்பாதான்டா.. ஒண்ணுமில்ல…” என்றுசொல்லி நேராய் அவனை எப்போதும் காட்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றவன், போகும் வழியிலேயே மணிவண்ணனுக்கு அழைத்து விஷயம் சொல்ல, அவரும் ராணியும் அங்கே கிளம்பிவிட்டனர்.

நித்யா எதார்ச்சையாய் அந்நேரம் அண்ணனுக்கு அழைக்க, அவளிடமும் விஷயத்தை சொல்ல, “நாங்க வரணுமாண்ணா..” என,

“வேண்டாம் நித்யா.. அம்மாக்கிட்ட சொல்லாத.. ரொம்ப டென்சன் ஆவாங்க.. ராதிகாவோட அப்பா அம்மா வர்றாங்க.. டாக்டர்ஸ் பாத்துட்டு ஒன் டே நைட் அத்து இங்க அட்மிட் பண்ண சொல்றாங்க.. பார்த்துக்கலாம்..” என,

“விஷயம் மட்டும் அம்மாக்கிட்ட சொல்லிடறேனே..” என்று நித்யா கேட்கவும், “ம்ம் ஓகே..” என்று வைத்தவன், மகனிடம் போய் அமர்ந்துகொண்டான்.

எதனால் இப்படி திடீரென்று காய்ச்சல் வந்தது என்று தெரியவில்லை. ஊசி போட்டிருந்தார்கள். நேரம் செல்ல செல்ல சூடும் குறைவதாய் இல்லை. நிரஞ்சனனுக்கு கவலையாய் போனது. மறுபுறமோ ‘இவ என்னதான் செஞ்சு தொலையுறா.. அன்னிக்கு அப்படிதான் மழைல வாட்ச்மென் கிட்ட உக்காந்து இருக்கான்.. இன்னிக்கு இப்படி…’ என்று ராதிகாவை போட்டு வாட்டத் தொடங்க, சரியாய் அப்போது ராணியும் மணிவண்ணனும் வந்திட,

“இதுதான் நீங்க என் மகனைப் பார்த்துக்கிற லட்சணமா..” என்று கத்தியே விட்டான்.

இருவரும் திகைத்து ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள “அன்னிக்கு மழைல வாட்ச்மென் கிட்ட இருக்கான்.. இன்னிக்கு அவங்கம்மா கால் எடுக்கலைன்னு ஸ்கூல்ல இருந்து போன் பண்றாங்க.. என்னதான் செய்றா உங்க பொண்ணு.. அவ என்னவோ பண்ணட்டும்.. அது எனக்குத் தேவையே இல்லை. ஆனா என் பையன் எனக்கு முக்கியம்..” என்று அவன் கோபத்தில் வார்த்தைகளை விட,

மீட்டிங் முடிந்து வெகு நேரம் கழித்துத்தான் சைலண்டில் இருந்த தன் போனை எடுத்துப் பார்த்தாள் ராதிகா..

அத்துவின் பள்ளிக்கூடம்.. அப்பா அம்மாவின் அழைப்பு.. பின் நிரஞ்சனனின் அழைப்பு என்று வரிசையாய் இருக்க,

‘இத்தனை கால்ஸா??!!’ என்று பார்த்தவளுக்கு உள்ளம் திடுக்கிட வேகமாய் அத்துவின் பள்ளிக்கு அழைத்து என்னவென்று கேட்க, அவர்களோ விஷயம் சொல்ல, அடுத்து யோசிக்காது நிரஞ்சனனுக்கு அழைத்தும் விட்டாள்.

“அ.. அத்து.. எப்படி இருக்கான்..” என்று அவள் கேட்கையிலேயே,

“அவனைப் பார்க்க வர்றேன்னு வந்த.. கொன்னுடுவேன்.. இனி என் மகனை எப்படி பார்த்துக்கணும்னு எனக்குத் தெரியும்..” என்று நிரஞ்சனன் அவளிடமும் எகிற,

“ப்ளீஸ்.. நான்.. எ.. எனக்கு ஒரு மீட்டிங்..” எனும்போதே,

“போதும்.. உனக்கு எப்பவும் உன் வேலை.. மீட்டிங்.. மண்ணாங்கட்டி இதெல்லாம் தானே முக்கியம்.. அதான் என்னைத் தூக்கிப் போட்டு போன.. இப்போ அதே வேலையை என் மகன்கிட்ட காட்ட ஆரம்பிக்குற..” என்று நிரஞ்சனன் வாயை விட, ராதிகாவிற்கு ஏற்கனவே அங்கே அலுவலகத்தில் இருந்தது எல்லாம் சேர்ந்து அழுகையை கொடுத்தது. 

பதிலே சொல்லாது ராதிகாவின் விசும்பல் மட்டும் கேட்க “ச்சே..” என்று முனங்கியவன், வைத்துவிட்டான்..

ராணியும் மணிவண்ணனும் பதிலே சொல்ல முடியவில்லை. ஒவ்வொரு சந்தர்ப்பமும் இப்படியா அமையவேண்டும் என்று நினைக்க, ராதிகா அடுத்த சில நொடிகளில் தன்னை சமாதானம் செய்துவிட்டு அப்பாவிற்கு அழைக்க “நாங்க ஹாஸ்பிட்டல தான் இருக்கோம்..” என்றார் இறங்கிய குரலில்..

“ப்பா.. அவரு..” என,

“ம்ம் எல்லாரும்தான் ம்மா..” என்று மணிவண்ணன் பொதுவாய் சொல்ல, நிரஞ்சனன் ஏகத்துக்கும் முறைத்தான்.

மகளுக்கு அறிவுரை சொல்லும் நேரத்தில் சொல்லவில்லை.. அதட்டும் நேரத்தில் அதையும் செய்யவில்லை. அவள் என்ன செய்தாலும் சரி சரி என்று விட்டதனால் தான் இப்போது இப்படியெல்லாம் என்று எண்ணினான்.

‘அதற்கு என் மகனா பலியாடு..’  என்றெண்ணியவனின் பார்வை அத்துவின் மீது செல்ல, மெதுவாய் அவனின் தலையை வருடிவிட, “ப்பா..” என்றான் அப்போதும் முனகலாய்.    

Advertisement