Advertisement

அத்தியாயம் – 1

மூஷித வாகன மோகன ஹஸ்த 
சியாமள கர்ண விளம்பர சூத்ர 
வாமண ரூப மஹேஸ்வர புத்ர 
விக்ந விநாயகா பாத நமஸ்தே.”

பூஜையறையில் இருந்து மலர்களின் வாசத்தோடும், ஊதுபத்தி, சாம்பிராணி  மனத்தோடும், சுந்தரியின் குரலும் கசிந்துகொண்டு வெளியே வந்தது. கண்களை மூடி, உதடுகள் மட்டும் ஜபித்துக்கொண்டு இருக்க, அவரின் முகத்திலோ எண்ணிலடங்கா உணர்வுகள்.

அவ்வுணர்வுகளின் அத்தனை கேள்விகளுக்கும் பதில் அனைத்து வினைகளையும் தீர்த்து, முழு முதர்கடவுளாய் விளங்கும் விக்ன விநாயகரிடம் இருக்கிறது என்ற தீரா நம்பிக்கை சுந்தரிக்கு எப்போதுமே உண்டு. அதன்பொருட்டே தினமும் இறைவனை எண்ணி சில மணி நேரங்களாவது இங்கே பூஜையறையில் இருந்திடுவார்..

ஆனால் இவரின் இரு பிள்ளைகளோ அன்றைய தினத்தில் வழக்கம் போல் தங்கள் வேலையில் இருந்தனர்.

நிரஞ்சனன் டைனிங் டேபிளில் இருக்க, அவனின் பார்வையோ அடிக்கடி பூஜை அறையை தொட்டு மீண்டது. அவனின் பார்வையை கவனித்தபடி வந்த நித்யாவோ “ண்ணா தட்டு பார்த்து சாப்பிடு… இல்லைன்னா உடம்புல ஒட்டாது..” என்றவள் அவனது தட்டில் மேலும் இரண்டு இட்லிகளை வைத்தாள்.

“போதும் நித்யா..” என்றவன் திரும்பவும் பூஜை அறையை பார்க்க,

“இன்னிக்கு சதுர்த்தி, அம்மா அவ்வளோ சீக்கிரம் வெளிய வரமாட்டாங்க..” என்றாள் புன்னகையோடு.

அவளின் புன்னகையின் காரணம் அவனுக்கும் புரிந்ததுவோ என்னவோ, லேசாய் சிரித்துக்கொண்டவன் “வந்தா பேசிட்டு கிளம்பிடலாம்னு பார்த்தேன்..” என்றபடி உண்ண,

“ஹ்ம்ம் நீ இப்படி அடிக்கடி சிரிண்ணா.. அப்போதான் நல்லாருக்கு…” என்றாள் தங்கையும்.

அவள் சொன்னது கேட்டு தன் பார்வையை மட்டும் நிமிர்த்தியவன், பின்னே என்ன எண்ணினானோ வேகமாய் உண்டுவிட்டு கை கழுவி எழுந்திட, ‘அச்சோ… சொதப்பிட்டோம்…’ என்று நாக்கினை கடித்தபடி நிரஞ்சனனிடம்  பாவமாய் ஒரு பார்வை பார்த்து நித்யா நிற்க,

“லூசு.. அதெல்லாம் ஒண்ணுமில்ல..” என்றவன், “அம்மா வந்ததும் சொல்லிடு, இன்னிக்கு நாலு கம்பனியோட ஆடிட்டிங்.. சோ நைட் வர லேட்டாகும்..” என்று விட்டு கிளம்பிவிட்டான்.

நிரஞ்சனன்.. அப்பழுக்கில்லாதவனாய் தன் மகன் இருந்திட வேண்டும் என்று பார்த்து பார்த்து இப்பெயரை சூட்டினார் அவனின் தந்தை குணசேகர். அவனும் அப்படித்தான் இப்போது வரைக்கும். ஆனால் வாழ்வில் எங்கே எப்போது எதில் தவறினான் என்று அவனுக்குமே இதுவரைக்கும் தெரியவில்லை..

சொந்தமாக ஆடிட்டிங் கம்பனி ஒன்று நடத்தி வருகிறான். இந்த வயதில் அது சாத்தியமா என்றால், அவனுக்கு அது எளிதாகவே கிட்டியது.. அறிவாளி.. உழைப்பாளி. அழகனும் கூட.. அதுவும் அவன் சிரிக்கையில் இன்னமுமே அவனின் முகம் பிறரை ஈர்க்கும். முன்னேறவேண்டும் என்ற ஆவல், அவனின் எண்ணத்தில் அளவுக்கு அதிகமாகவே இருக்க அவன் கம்பனி தொடங்கியும் கூட ஆண்டுகள் ஆறு ஆகிவிட்டது.

அவனாய் சொன்னால் மட்டுமே அவனின் வயது அடுத்தவருக்கு தெரியும்.. ஆனால் அதெல்லாம் மூன்றாண்டுகளுக்கு முன்பு. இப்போது முப்பத்தியிரண்டு என்று சொன்னால் ‘அப்படியா??!!’ என்றுகேட்டு மேலும் கீழும் அவனை ஒரு ஆராய்ச்சி பார்வை பார்த்து வேண்டுமானால் செல்லும் வாய்ப்பு அநேகருக்கு உண்டு.

காரணம், வயதிற்கு அதிகமான உழைப்பும்,  அதையும் தாண்டிய கவலைகளும், வாழ்வில் பல நிகழ்வுகளை மறக்க நினைத்து அவனிடமே அவன் தோற்றுப்போன தோல்விகளும் தான். முன்னிருந்ததை விட உடலில் சற்று மெலிவு தெரிவது போலிருந்தது.

அதை சுந்தரியும் நித்யாவும் சொன்னால், “டெய்லி ஜாக்கிங் போறேன்ல.. அதான்..” என்று வழக்கமான சமாளிப்பே அவனிடத்திலிருந்து வரும்..

நித்யா, அவனின் தங்கை, இருபத்தி நான்கு வயது இள மங்கை.. இன்னமும் மூன்று மாதங்களில் அவளின் திருமணம். அதன்பொருட்டு அவளின் முகத்தினில் ஒரு தனிப் பொலிவு ஒன்று சிறிது நாட்களாய் குடிகொண்டு இருந்தது.

அண்ணன் கிளம்பிச் செல்லவும், அலைபேசியில் தன்னுடைய வருங்கால கணவன், அரவிந்தோடு நித்யா பேசிக்கொண்டு இருக்க, சுந்தரி தன் பூஜைகள் எல்லாம் முடித்து வெளி வரவும்,

“அப்புறம் பேசுறேன்…” என்று வைத்தவள், “ம்மா…” என்றபடி அவரின் அருகே சென்றாள்.

“நிரஞ்சன் கிளம்பிட்டானா???” என்றவர் மகளுக்கு உண்ண தட்டு எடுத்து வைக்க, “நீயும் உட்காரும்மா..” என்றபடி அமர்ந்தவள்,

“இப்போதான் போனான்.. நீ வருவன்னு வெய்ட் பண்ணான்..” என்றபடி அம்மாவிற்கும் இட்லிகளை எடுத்து வைத்து, தானும் வைத்துக்கொண்டாள்.

“ம்ம்ம் சரி சாயங்காலம் வரட்டும் பேசிக்கிறேன்..” என்றவரும் உண்ண, “நைட் தான் வருவானாம்.. அதுவும் லேட்டா.. சொல்லிட்டுத்தான் போனான்..” என்ற மகளின் முகத்தினை பார்த்தவர்,

“ஹ்ம்ம் சரி…” என்றுவிட்டு சிறிது நேரம் யோசனையில் இருக்க, “ம்மா எதையும் நினைக்காம சாப்பிடு..” என்று நித்யா சொல்லவும் தலையை ஆமோதிப்பாய் அசைத்தபடி உண்ணத் தொடங்கினார் சுந்தரி.

மனதிற்குள்ளே ஆயிரம் எண்ணங்கள். இன்னும் நான்கே நாட்களில் அவரின் கணவர் அதாவது குணசேகரனுக்கு நான்காம் ஆண்டு திதி. இந்த நான்கு ஆண்டுகளில் முதல் ஒரு வருடம் தவிர, மற்ற மூன்று ஆண்டுகளும் அந்த நாள் நெருங்க நெருங்க மனதில் ஒருவித அலைப்புறுதல்.

முன்பு மனதினில் வருத்தமும் வேதனையும் இருந்தது நிஜம்தான். ஆனால் அடுத்து வந்த வருடங்களில் அந்த வேதனையை தாண்டி இப்போது இன்னமும் ஒரு பெரும் பாரம் வந்து மனதினில் ஒட்டிக்கொண்டது.

நிரஞ்சனனின் வாழ்வு, அதனை எண்ணி எண்ணியே இப்போது சுந்தரி வருந்தாத நாளில்லை. நித்யாவிற்கு அமைய போகும் வாழ்வை எண்ணி அவருக்கு திருப்தியும் மகிழ்வும் இருந்தாலும் அவற்றை எல்லாம் தாண்டி மகனின் வாழ்வு அவரை மிகவும் படுத்தி எடுத்தது.

இதே யோசனைகளோடு உண்டு முடித்தவர், மகளைக் காண, அவளும் உண்டுமுடித்து அவரைத்தான் பார்த்துகொண்டு இருந்தாள்.

“என்னம்மா???”

“இல்ல ராதிகாக்கு போன் செய்யணும்….” என்று யோசனையாய் சொல்ல,

“பண்ணும்மா.. எப்பவும் அப்பா திதி அப்போ நீதானே கால் பண்ணி கூப்பிடுவ.. இப்பவும் கூப்பிடு.. அண்ணி கண்டிப்பா வருவாங்க…” என்று மகள் கொடுத்த ஊக்கத்தில் தன் முன்னாள் மருமகளுக்கு, அதாவது இப்போதும் அவர் மனதில் இந்த வீட்டு மருமகளாகவே இருக்கும் ராதிகாவிற்கு அழைப்பு விடுத்தார்.

“ம்மா… அல்ரெடி லேட்டாச்சு.. இனி நான் அத்துவ ஸ்கூல்ல டிராப் பண்ணிட்டு போகணும்…” என்று ராதிகா சொல்லிக்கொண்டு இருக்க,

“அவன் எப்பவோ ரெடி.. நீதான் லேட்டா தூங்கி லேட்டா எழுந்து இப்போ லேட்டா கிளம்புற..” என்றபடி ராதிகாவின் முன்னே வந்து அம்மா, மகன் இருவருக்குமான மதிய உணவு பையை வைத்தார் ராணி.

“ம்ம்மா… நானும் ரெட்ட்டி….” என்றபடி வந்து நின்றான் நான்கே வயதான அதோஷஜன்.

பாற்கடலில், ஆதிசேஷனை தன் படுக்கையாய் கொண்ட விஷ்ணுவின் நாமம் அதோஷஜன். அதனையே மகனுக்கு வைக்கவேண்டும் என்று ஆசையாய், கொஞ்சம் பிடிவாதமாகவே பெயர் சூட்டினாள் ராதிகா. ஆனால் வீட்டினர் அழைப்பது எல்லாம் ‘அத்து…’ தான்.

“யா யா.. அம்மாவும் ரெட்ட்டி…” என்று அவனைப் போலவே சொன்னவள்,

“போலாமா??!!!” என்று மகனை தூக்கிக்கொண்டு வெளியில் வர, ராணியும் இவர்களின் சாப்பாட்டு பையை எடுத்துக்கொண்டு வெளியே வந்தார்.

கார் கதவினை திறந்தவள் மகனை அமர வைத்து சீட் பெல்ட் போட்டுவிட்டு,   “தேங்க்ஸ் ம்மா..” என்றபடி ராணி கொடுத்தவைகளை வாங்கிக்கொண்டு டிரைவர் சீட்டினில் அமர்ந்து அவளும் சீட் பெல்ட் மாட்டும் நேரம் அவளின் அலைபேசி சிணுங்கியது..

முதல்நாள் இருந்தே மனதில் ஒரு எண்ணம் இருந்துகொண்டே இருந்ததுதான். அதன் பொருட்டே சரியாய் தூங்கவில்லை. அதன்பொருட்டே காலையில் தாமதமாய் எழவும் நேர்ந்தது கண்களை இறுக மூடித் திறந்தவள், அவளின் அலைபேசியை எடுத்துப் பார்க்க, அவள் எண்ணியது போலவே அழைத்தது சுந்தரி தான் எனவும், வேகமாய் அதோசஜனை திரும்பிப் பார்த்தாள்.

“யாடும்மா….” என்றவன் கேட்டதும், வேகமாய் தன் முகத்தில் இருந்த பாவனையை மாற்றியவள்,

“சுந்தரி பாட்டி…” என்றுசொல்ல, “பாட்ட்ட்டி…” என்ற அவனின் சந்தோஷ கூக்குரல் கேட்கையிலேயே அலைபேசியை ஆன் செய்தாள்.

சரியாய் அவனின் ‘பாட்ட்ட்டி’ என்ற அழைப்பு, சுந்தரிக்கும் கேட்க, அவரையும் அறியாது அவரின் முகத்தில் ஒரு சந்தோசம் முளைக்க “குட்டி கண்ணா…” என்றார் அதே மகிழ்வில்.

‘இந்தா பேசு..’ என்பதுபோல் மகனிடம் அலைபேசியை ராதிகா கொடுக்க, “பாட்ட்ட்டி…” என்றான் திரும்பவும் அத்து.

“அத்து குட்டி… ஸ்கூல் கிளம்பியாச்சா??”

“ம்ம்ம்ம்…” என்றவன் அம்மாவைப் பார்க்க, அவளோ புன்னகையோடுதான் காரினை கிளப்பினாள்.

“சரிடா கண்ணா..” என்று ஆரம்பித்தவர், பேரனோடு சிறிது நேரம் பேசிவிட்டு, அவன் பேசுவதை கேட்டு ரசித்தும்விட்டு,  “அம்மாக்கிட்ட கொடு..” என்றுசொல்ல, அந்தச்  சிறுவனும் அழகாய் “ம்ம்…” சொல்லி ராதிகாவிடம் அலைபேசியை நீட்டினான்.

“ஹலோ அத்தை…” என்றவளின் குரல் இயல்பாகவே இருந்ததுவாய் சுந்தரிக்குத்  தோன்றியது.

அதாவது அவரோடு பேச, தன்னை இயல்பாக்கிக் கொள்ள அவளுக்கான அந்த அவகாசம் தான் மகனை அவள் முதலில் பேச வைத்தது. அது சுந்தரிக்கும் தெரியும். ஆக வேறெதுவும் கேட்காது, “ஆபிஸ் கிளம்பியாச்சாம்மா…?” என்றார்.

“ஆமா அத்தை.. இவனை ஸ்கூல்ல விட்டுட்டு அப்படியே போகணும்..”

“ம்ம் சரிம்மா…” என்றவர், சிறிது நேர அமைதிக்கு பிறகு, “வர, வியாழன் மாமாக்கு திதி…” என்றார் வேதனையை மறைக்க முயற்சி செய்து.

“தெரியும் அத்தை நியாபகம் இருக்கு.. எத்தனை மணிக்கு வரணும்..??” என்றாள் அவர் சொல்லாமலேயே.

ராதிகாவின் இந்த வார்த்தைகளை கேட்டதுமே, அவருக்கு ஆச்சர்யம். எங்கே நீ வரவேண்டும், பேரனை அழைத்து வரவேண்டும் என்றெல்லாம் அழுத்தி சொல்லவேண்டுமோ என்று மனதினில் ஒரு எண்ணம் அவருக்கு இருந்தது. ஆனால் இப்போது அது அப்படியே விலகிட, மனது சற்றே நிம்மதியை உணர்ந்து,

“காலைல எழு மணி போல வீட்ல ஒரு ஹோமம் பண்ணிட்டு அப்படியே திதி கொடுத்துடலாம்..” என்றுசொல்ல,

“சரிங்கத்தை, நானும் அத்துவும் வந்திடுறோம்..” என்றாள் வேறெதுவும் சொல்லாது.

இன்னமும் சுந்தரிக்கு நம்பிட முடியவில்லை. என்னடா இவள், மறுப்பேதும் சொல்லாது, சொன்னதுமே சரியென்று சொல்கிறாள் என்று. இருக்காதா பின்னே, போன வருடம் வரைக்கும், அவள் வரும்வரைக்கும் ஒவ்வொரு முறையும் போனில் அழைத்து ‘கிளம்பியாச்சா??’ என்று கேட்டுக்கொண்டே இருப்பாரே.

ஆக ராதிகா சொன்னதை நம்ப முடியாது “நிஜமா ராதிகா..??” என்று கேட்டேவிட்டார்.

“ஆமா அத்தை.. நானும் அத்துவும் கண்டிப்பா வந்திடுவோம்..” என்றவள் “அத்தை.. தப்பா எடுத்துக்க வேண்டாம்.. ஏற்கனவே லேட்டாச்சு.. ” என்று இழுக்க,

“சரி சரி நீ.. நீங்க கிளம்புங்க.. வியாழன் அன்னிக்கு பார்ப்போம்..” என்றவர் சந்தோசமாகவே போனை வைத்துவிட்டார். 

ராதிகா இருபத்தி எட்டு வயது என்றால் யாரும் அப்படியா என்றுதான் கேட்பார். தோற்றமும் சரி, உடல்வாகும் சரி பார்க்கவே பளிச்சென்றுதான் இருக்கும். நான்கு  வயது பையனின் அம்மா என்றால் பிறர் நம்புவது கொஞ்சம் சிரமமே. அனைவருக்குமே நல்லவள் தான்.

ஆனால் வாழ்வு தான் அவளுக்கு நல்லவிதமாய் அமையாது போனதுவோ என்னவோ..

ராதிகாவிற்கும் நிரஞ்சனனுக்கும் விவாகரத்து ஆன சமயத்தில், இந்த திதிக்கு வருவது எல்லாம் அவளுக்குப் பிடிக்கவில்லை தான். ஆனால் மற்ற விஷயம் என்றால் கூட மறுத்திருப்பாள். இந்த ஒரு விசயத்தில் அவளால் மறுப்பை  சொல்ல முடியவில்லை. அதாவது கடினமாய் மறுக்க முடியவில்லை. காரணம் குணசேகரின் மரணம் அவளுக்குமே மனதில் ஒருவித பாதிப்பைக்  கொடுத்திருந்தது.

அவளுக்கும் நிரஞ்சனனுக்கும் திருமணம் நிச்சயம் செய்ததில் இருந்து அவரின் கடைசி மூச்சு வரைக்குமே ‘ராதிகாம்மா…’ என்றதை தவிர அவர் வேறொன்றும் சொன்னதில்லை..

ராதிகாவும் சரி, நிரஞ்சனனும் சரி நல்லவர்கள் தான். வீட்டிற்கு நல்ல பிள்ளைகள். மற்றவர் வீட்டிற்கு நல்ல மருமகள், நல்ல மருமகன். இரு பக்கத்து உறவுகளுக்கும் இவர்களும் நல்ல உறவு.. நட்புக்களுக்கு நல்ல நண்பர்கள்.. ஆனால் இவர்களுக்குள் இருந்த உறவு???

ஒருவரை ஒருவர் பிடித்திருக்கிறதா என்று தெரியும் முன்னமே திருமணம்.. ஒருவரை ஒருவர் புரியும் முன்னமே பிள்ளை.. ஒருவரை ஒருவர் நன்கு அறிந்துகொள்ளும் முன்னமே விவாகரத்து. இவர்களின் விவாகரத்து சற்றே வித்தியாசமானதும் கூட.

‘டைவர்ஸ் ஆயாச்சு.. இனி நீ யாரோ நான் யாரோ…’ என்று அல்லாது, அவ்வப்போது இருவரும் சந்திக்கும் வாய்ப்புகளும் நிகழும். மாதம் ஒருமுறை அதோஷஜனை, நிரஞ்சனனின் குடும்பத்தினருக்கு காட்டவேண்டும் என்ற நீதிமன்ற உத்திரவுபடி  மாதம் ஒருமுறை அத்துவும் அங்கே சென்று வருவான்.

ராதிகாவிற்கு, எப்போதுமே அவளின் மகனுக்கு அப்பாவும் வேண்டும் என்ற எண்ணத்தில் மாற்றமில்லை. அதேபோல அப்பாவழி பாட்டி, அத்தை என்ற உறவுகள் வேண்டும் அதிலும் அவளுக்கு எவ்வித மாற்றமும் இல்லை.  ‘எனக்கும் அவருக்கும் ஒத்துவரவில்லை நாங்கள் விலகிவிட்டோம்.. அவ்வளவுதான்..’ இது மட்டுமே அவள் மனதில் இப்போதும்.

நிரஞ்சனனும் அதுபோலவேதான் இருந்தான். அவளை எதற்கும் கட்டாயப் படுத்தவில்லை. மாதம் ஒருமுறை மட்டுமே மகனைப் பார்க்க முடியும் என்பது வருத்தமே என்றாலும், அதனை மனமுவந்து ஏற்றுக்கொண்டான். வேறு வழியும் அப்போது இருக்கவில்லை. இல்லை இந்த மூன்று ஆண்டு காலத்தில் மகனை வைத்து மனைவியை நெருங்க முயன்றானா அதுவும் இல்லை.

வருடத்திற்கு ஒருமுறை குணசேகரின் திதிக்கு மட்டும் சுந்தரி  ராதிகாவை  வீட்டிற்கு அழைப்பார். முதலில் தயங்கினாலும் அவர் வற்புறுத்துகையில் அவளால் மறுக்க முடிவதுமில்லை. அங்கே போனால் அவனைப் பார்க்கவேண்டுமே. பொது இடங்களில் எதிர்பாரா சந்திப்புகள் நிகழ்கையில் இருவருமே அதனை பெரியதாய் காட்டிக் கொள்ளாது கடந்துவிடுவர்.

ஆனால் ஒரே வீட்டில், அதுவும் குடும்ப சகிதமாய் இருக்கையில், சந்திக்கையில் கொஞ்சம் இருவருக்குமே திணறல் ஏற்படும்தான். அதாவது அதோஷஜன் எப்படி மாதம் ஒருமுறை அங்கே செல்கிறானோ, ராதிகாவும் வருடம் ஒருமுறை அங்கே செல்லும் நாள் இது.

முன்னே தயங்கினாள், பிறகு ‘எப்படின்னாலும் அத்து மாசம் ஒரு நாள் அங்க போகணும்.. அது இந்த நாள் போனா என்ன?? அவன் இருக்கட்டும்.. நான் கிளம்பிடுவேன்…’ என்று எண்ணிக்கொள்ள, இந்த முறை சுந்தரி அழைக்கவும், மறுப்பேதும் சொல்லாது சரி என்றுவிட்டாள்.

ராதிகாவிற்கு தன் கணவனைத் தவிர்த்து மற்ற அனைவரோடுமே நல்ல பழக்கம் தான். ஆனால் இப்போது அனைவரோடும் பேச்சினை குறைத்துக் கொண்டாள். எதற்கு தேவையில்லாத மன கஷ்டம் அனைவர்க்கும். பிள்ளை மட்டும் அனைவருக்கும் பொது.. அவ்வளவே என்ற எண்ணம்.

நிரஞ்சனனோ இவள் அளவிற்கு இல்லாமல், முழுதாகவே மாமனார் குடும்பத்தினரோடு பேச்சினை நிறுத்திக்கொண்டான். அங்கேயும் தான் யார் இருக்கிறார்கள். ராதிகா அவளின் அப்பா அம்மா. பெரியவர்கள் இவனை எங்காவது பார்க்க நேர்கையில் சங்கடமாக உணர, தயங்கிப் பேச, அவனே சொல்லிவிட்டான் “நீங்க பேசலைன்னாலும் நான் தப்பா நினைக்க போறதில்லை..” என்று..

ஆக இப்படித்தான் இவர்களின் வாழ்வு ஒருவித விசித்திர சூழலில் ஒவ்வொரு நாளும் நகர்ந்துகொண்டு இருந்தது. 

Advertisement