Advertisement

      நான் இனி நீ – சரயு..

“கர்மா….”

மூன்றெழுத்து வார்த்தை தான்.. ஆனால் இவ்வார்தையில் தான் உலகம் சுழலுகிறது.

“காதல்….”

இதுவும் மூன்றெழுத்து வார்த்தை தான்.. இவ்வார்தையில் தான் மனித உணர்வுகள் சுழலுகிறது..

ஆண் பெண் இருவருக்கும் இடையில் இருப்பது மட்டும் காதல் அல்ல.. காதலில் அதுவும் ஒரு வகை. அவ்வளவே.. அப்பா.. அம்மா.. அண்ணன்.. தங்கை.. அக்காள்.. தம்பி.. தலைவன்.. தொண்டன்.. கணவன்.. மனைவி.. பிள்ளைகள்.. நட்பு.. என்று நம்மைச் சுற்றி இருக்கும் உறவுகள் அனைத்துக்கும் இடையில், அனைத்து உறவுகளையும் பிணைத்து வைத்திருக்கும் ஒரு மாயக் கயிறு இக்காதல்..

இதுதான் காதல்.. இன்னதுதான் காதல் என்று யாராலும் ஒரு முடிவில் வரையறுக்க முடியாது. இன்று நமக்கு மிக மிக பிடித்தமாய் ஒன்று இருக்கும்.. நாளை அது பிடிக்காது..

இவர்தான் நமக்கு எல்லாம் என்று நினைத்திருப்போம் ஒருவரை.. ஆனால் காலத்தின் போக்கில் அவரே நம் எதிரியாய்.. அவரே நம் துரோகியாய் உருவெடுப்பார். இவை எல்லாம் கர்மா செய்யும் சித்து விளையாட்டு.

நல்லவனோ.. கெட்டவனோ.. புண்ணியவானோ.. புரட்டு செய்பவனோ அனைவரையும் ஆட்டுவிப்பது கர்மாவும்.. காதலுமே..

“காலம்…”

இதுவும் மூன்றெழுத்து தான்.. ஆறாத காயத்தினையும் ஆற்றும் வல்லமைக் கொண்டது காலம் மட்டுமே..

இதனை நான் எப்படி மறப்பேன்.. என்று நம் மனது சண்டித்தனம் செய்து, பிடிவாதமாய் ஒன்றை நினைத்து நினைத்து வருந்தி, வெந்து நொந்துகொண்டு இருந்தாலும் காலப்போக்கில் அது மாறும். மறையும்.. இதுவே நிதர்சனம்.

இந்த நிதர்சனத்தை சக்ரவர்த்தியின் குடும்பமும் உணரத் தொடங்கியது… உஷா நடந்தவைகளை சக்ரவர்த்தியிடம் மட்டும் சொல்ல, மனைவியை வெறித்துத்தான் பார்த்தார் சக்ரவர்த்தி.

பின் சிறிது நேரம் கழித்து “எக்காரணம் கொண்டும் இது சின்னவனுக்கு தெரியவே கூடாது. உன்னோட என்னோடவே போகட்டும்.. மிதுன் முழிச்சு வந்தா கூட அப்போவும்  இதெல்லாம் எதுவும் யாருக்கும் தெரியக் கூடாது..” என,

“நான்.. நான் இப்படி ஆகும்னு நினைச்சு அப்படி செய்யல.. அவனை ரெண்டு நாள் எதையும் பண்ண விடாம செய்யனும்னு தான்..” என்ற உஷாவிற்கு அப்படியொரு அழுகை.

என்ன இருந்தாலும் தான் பெற்ற மகன்.. முதல் மகன்.. எத்தனை ஆசையாய் வளர்த்தியிருப்பார். உஷா பேச பேச, சக்ரவர்த்தியின் மனதும் ஆடியதோ என்னவோ,

“ஷ்..!! உஷா.. வேணாம்.. இதுல உன்னோட தப்புன்னு எதுவுமே இல்லை.. நீயா அவனை தள்ளிவிட்ட.. இல்லைதானே.. நீயா அவனை கோமாக்கு போக வச்ச.. இல்லைதானே.. இதெல்லாம் எதுவுமே யாரோட தப்புமும் இல்லை.. அவனோட விதி.. நம்மளோட விதி.. அவ்வளோதான்..” என்றார் சமாதானமாய்.

“இல்லைங்க.. அவனுக்கு புத்தி சொல்லி திருத்திடலாம்னு பார்த்தேன்..” என, சக்ரவர்த்திக்கு சிரிப்பு வந்துவிட்டது. விரக்தி சிரிப்பு அது.

லேசாய் சிரிக்கவும் “என்னங்க..” என்று உஷா கேட்க,

“புத்தி சொல்லி திருத்துற அளவு எல்லாம் அவன் எப்பவோ தாண்டிட்டான்.. நேர் வழியா அப்பா உங்களுக்கு அடுத்து நான்தான் வருவேன்னு சொல்லிருந்தா, நான் என்ன வேண்டாம்னு சொல்லிருப்பேனா.. கூடப் பிறந்தவனை கீழ இறக்கிவிட்டு, ஒரு ஸ்டேஜ்ல அவனை இல்லாமையே செய்யனும்னு நினைச்சான்.. உன்னை என்னை அதுக்கு பகடைக் காயா உருட்டினான்.. இங்க பார் அவங்க அவங்க செய்றதுக்கு பலாபலன் தான் நடக்கும்…” என்று சக்ரவர்த்தி உஷாவினை தேற்ற,

இதனையே தான் அனுராகாவும் கூட தீபனுக்குச் சொன்னாள்.

தீபன், மிதுன் மீது ஆயிரம் கோபங்கள் இருந்தாலும் கூட, அவன் இல்லாது போகிட வேண்டும் என்று நினைத்திருக்கவில்லை. சிறிது காலம் அவனை முடக்கி வைத்தனர். அவ்வளவே.

ஆனால் மிதுன் எப்போது கண் விழிப்பான் என்றே தெரியாது இனி ஒவ்வொரு நாளும் நகர, தீபன் சக்ரவர்த்திக்கு வேறு எதனையுமே சிந்திக்க முடியவில்லை. ஒருவித மன அழுத்தம்.

மிதுனின் போக்கு புரியவுமே, தான் விலகி இருக்க வேண்டுமோ என்ற சிந்தனை. அப்படி செய்திருந்தாலாவது இந்நேரம் மிதுன் நன்றாய் இருந்திருப்பானோ என்ற கேள்வி.

இதையே தான் அனுராகாவிடமும் சொன்னான்.

ஆனால் அவளோ “நீ எதுக்குமே பொறுப்பில்ல தீப்ஸ்…” என்று உறுதியாய் மறுத்தால்.

அனுராகா மட்டுமல்ல, காதர், நாகா, தர்மா, புனீத் தேவ் என்று எல்லாரும் இதை தான் சொன்னார்கள்.  இதில் உன் தவறு என்று எதுவுமில்லை.

வேலைகள் ஒருபுறம் இருந்தாலும், தன்னை சுற்றி இருக்கும் அனைவருமே அவனை ஆறுதல் செய்தாலும் கூட, தீபனுக்கு மனதில் ஓர் உறுத்தல் இருந்தது.

புனீத் வீட்டில் ஒரு பிஸ்னஸ் பார்டி என்று அனைவரும் குழுமி இருக்க, தீபன் அனைவரோடும் பேசினான்.. சிரித்தான்.. ஒலிக்கும்  இசைக்கு ஏற்ப அனுராகாவோடு மெதுவாய் நடனம் கூட ஆடினான்.

ஆனால் எதிலுமே ஓர் ஒட்டுதல் இல்லை.

அவன் கண் பார்த்தே அனுராகா கண்டுகொள்ள, நீரஜா கூட அனுவிடம் சொல்லிவிட்டாள் “கண்டிப்பா இதுல இருந்து தீபன் வெளிய வரணும்..” என்று.

“வெளிக்கொணர உன்னால் மட்டுமே முடியும்..” என்று.

கடந்த சில தினங்களாய் அனுராகாவினுள்ளும் இந்தச் சிந்தனை தான். அவளைப் பொறுத்தமட்டில், எப்போதுமே மிதுன் என்பவன் ஒரு பொருட்டே இல்லை. ஆனால் தீபனின் பார்வையில் அப்படி எண்ணிவிட முடியாது அல்லவா..??!!

ஆக, தீபனை இப்படியான ஒரு மன உளைச்சலில் இருந்து வெளிக்கொணர்ந்தால் மட்டுமே இனி அனைவரின் வாழ்வும் நல்முறையில் இருக்கும் என்பது உறுதி.

“ஓகே…” என்று நீரஜவிடம் சொன்னவள், சற்று தள்ளி நின்று தேவ்வோடு பேசிக்கொண்டு இருந்த தீபனிடம் சென்றாள்.

“தீப்ஸ் லெட்ஸ் கோ சம்வேர்.. கம்மான்..” என்று அழைக்க,

“இப்போவா??!!” என்றான் தீபன் சக்ரவர்த்தி.

“எஸ்…”

“மிட் நைட் ஆகப்போகுது ராகா.. உனக்கு போர்ரா இருந்தா வா உன்னை வீட்ல டிராப் பண்றேன்..” என்று கிளம்ப,

“ஒ!! நோ.. போர் எனக்கு இல்லை.. பட் உன்னோட ஜஸ்ட் ரோட் ரைடிங் போகணும் போல இருக்கு..” என,

தேவ் “கிளம்புடா..” என்று சொல்ல, “ம்ம்..” என்று தலையை ஆட்டியவன் “கம்மான்..” என,

“கார்ல இல்லை பைக்ல..” என்றாள் அனுராகா அடுத்து.

“பைக்??!!” என்று தீபன் பார்க்க, “எஸ்…” என்றவள், புனீத்திடம் “உன்னோட பைக் சாவி கொடு..” என,

“ராகா… என்ன பண்ற நீ…” என்று தீபன் கேட்கும் போதே,

“ஷ்..! அமைதியா என்னோட வா..” என்றவள், சாவி வரவும்,

“ம்ம் பிடி.. வா..” என்று அழைக்க, “என்னாச்சு உனக்கு??” என்றான் தீபன் விளங்காது.

“எனக்கு எதுவும் ஆகல.. நீ வா.. எனக்கு உன்னோட தனியா டைம் ஸ்பென்ட் பண்ணனும்..”  என்று பிடிவாதமாய் நிற்க, வேறு வழியே இல்லாது தான் தீபன் கிளம்பிச் சென்றான்..

பைக்கை கிளப்பியதுமே “தீப்ஸ்.. அன்னிக்கு ஒரு ரோட் சைட் ஷாப் கூட்டிட்டு போனியே அங்க போலாம்..” என,

“என்னது??! அங்கயா??” என்றான் தீபன்.

“எஸ்…”

“ராகா ஆர் யூ ப்ளேயிங்.. இங்க இருந்து பிவ்டீன் கிலோமீட்டர் அது.. இப்போவே டைம் பாரு..” என,

‘தோடா…’ என்பது போல் பார்த்துவைத்தாள் அனுராகா.

“இன்னிக்கு என்னாச்சு உனக்கு இவ்வளோ பிடிவாதம் பண்ற நீ..” என்றவன், பைக்கை செலுத்த, அனுராகா இரண்டு புறமும் கால் போட்டு அமர்ந்திருந்தவள், அவனின் இடுப்பினைச் சுற்றி இரு கரம் கோர்த்து, அப்படியே அவனின் முதுகில் சாய்ந்துகொண்டாள்.

“இதுக்குத்தான் பைக் வேணும் சொன்னியா நீ..” என்றவனுக்கு லேசாய் ஒரு முறுவல்.

அனுராகா பதிலேதும் சொல்லாது அமைதியாய் வர, அந்த இரவு நேர நிசப்த பொழுதினை கிழித்துக்கொண்டு தான் பைக் பறந்தது…

சில்லென்று காற்று முகத்தினில் மோத, தன்னுடல் மொத்தமும் சாய்த்து தன் பின்னே அனுராகாவும் இருக்க, தீபனுக்கு மனதில் மெல்ல மெல்ல ஏகாந்தம் சூழ, மனதில் இருக்கும் இறுக்கம் தன்னைப்போல் குறைவதாய் இருந்தது.

“ஹோய் பேபி… என்ன சைலென்ட்டா வர…” என்று தீபன் கேட்கவும் தான், தலையை அவன் முதுகில் இருந்து நிமிர்த்தியவள்,

“எங்கடா உன்னை கூட்டிட்டு போய் ட்ரீட்மென்ட் எதுவும் பார்க்கணுமோன்னு நினைச்சுட்டேன்..” என்றாள் அனுராகா.

“ஹா..!! என்ன சொல்ற.. எதுவும் கேட்கல..” என்று தீபன் சத்தமாய் கேட்க,

“நத்திங்.. முதல்ல அங்க போ…” என்றாள் அனுராகாவும்..

கிட்டத்தட்ட இருபது நிமிடம்… அந்த பைக் பயணம்.. இந்த இருபது நிமிடங்கள் தீபன் மனதில் ஒரு புது தெம்பையும் உற்சாகமும் கொடுக்குமா என்பது தீபனே வியந்துகொண்ட ஒன்று.

ஆனால் நிஜம் அதுதான்..!!

கவலை கவலை என்று அதே சூழலில் உழன்றுகொண்டு இருக்கும் நேரம், சற்றே அதிலிருந்து விடுபட்டு வெளியே வந்தால், கண்டிப்பாக நமக்கு ஒரு தெளிவும் கிடைக்கும், மனதும் சமன்படும்.. லேசாகும்..

அதைதான் அனுராகாவும் தீபனுக்கு கொடுக்க விரும்பினாள்.

கண்டிப்பாக அவன் வெளியூர் அழைத்தால் வரமாட்டான் என்பது திண்ணமாய் தெரியும். அவனுக்கு இங்கே வேலைகள் நிறைய. இப்போது மிதுனின் வேலைகளும் இவன் பொறுப்பில் வந்துவிட, நிறைய நிறைய வேலைகள் இழுத்துக்கொண்டது.

நாகாவும் தர்மாவும் இவனோடு சேர்ந்து வேலைகளைச் செய்ய, காதருக்கு முழுக்க முழுக்க வீட்டினை கவனிக்கும் பொறுப்பினைக் கொடுத்துவிட்டான் தீபன்.

“காதர்ணா.. நீங்க எப்பவும் இங்கவே இருந்துக்கோங்க.. வேற யாரையும் வேலைக்கு சேர்க்கணும்னா சேர்த்துக்கோங்க..” என்று.

வழக்கம் போல் சக்ரவர்த்தி டெல்லிக்கும், சென்னைக்கு அலைய, இங்கே முழுக்க முழுக்க பொறுப்புகள் என்பது அவனது ஆனது. இவை எல்லாம் பழக்கமான வேலை தான் என்றாலும், மிதுனை எண்ணி மனதினில் இருக்கும் உறுத்தல் அது மட்டும் குறைவதாய் காணோம். அனைத்தையும் தாண்டி அந்த உறுத்தலே அவனை முழுதாய் ஆக்கிரமித்துக்கொள்ள, அதை அனுராகாவால் ஏற்றுகொள்ள முடியவில்லை,

மற்றது எல்லாம் சரி..

ஆனால் பிறரின் வருத்தங்களுக்கும், வேதனைக்கும்,  அருகதையே இல்லாத ஒருவனுக்கு தீபன் தன்னை வருத்திக்கொள்வது அவளுக்கு ஏற்புடையதாய் இல்லை.

திருமண ஏற்பாடுகள் எல்லாம் நடந்துகொண்டு இருக்கையில், தீபன் இப்படி தனக்குள்ளே குழம்பித் தவிப்பது யாருக்குத் தான் பிடிக்கும்??!!

அதுவும் இத்தனை இக்கட்டுகள் தாண்டி இருவரும் திருமணம் என்கிற பந்தத்திற்குள் வரப்போகும் நிலையில்..

புனீத் வீட்டினில் பார்ட்டி என்றதுமே அனுராகா முடிவு செய்துதான் வந்திருந்தாள். எப்படியாவது தீபனை தனியே அழைத்துக்கொண்டே செல்லவேண்டும் என்று. அதுதான் இந்தப் பிடிவாதம்.

இதோ அவள் சொன்ன அந்த சாலையோர கடையும் வந்துவிட, வழக்கம் போல கடையை எடுத்து வைத்துக்கொண்டு இருந்தார் அவர்.

“ண்ணா… கடை மூடப் போறீங்களா??” என்று தீபன் கேட்கவும், அவனை அடையாளம் கண்ட அவர்,

“அடடா.. தம்பி நீங்களா??!!” என்றார் சந்தோசமாய்.

பின்னே இந்த சாலை வழியாகத்தானே தீபனின் சைக்கிள் பேரணி நடந்தது. இந்தக் கடைக்காரரின் மகன், மகள் இருவருமே அதில் பங்குபெற்று வீட்டிற்கு சைக்கிள் வேறு கொண்டு வந்தார்களே..

பின்னே தீபன் சக்ரவர்த்தியை மறக்குமா என்ன??!!

தீபன் சிநேகமாய் புன்னகைத்தவன் “க்ளோஸ் பண்ணிட்டாங்க ராகா..” என்றான்.

“தம்பி.. இல்ல இல்ல.. கல்லு சூடாதான் இருக்கு.. என்ன வேணுமோ சொல்லுங்க சுட சுட செஞ்சுத் தர்றேன்…” என்றவர், வீட்டிற்கு கொண்டு போக என்று எடுத்து வைத்தவைகளை எல்லாம் மீண்டும் எடுத்து வைக்க,

அனுராகா கைகளைத் தேய்த்துக்கொண்டு அங்கிருந்த பெஞ்சினில் அமர, “தங்கச்சி சும்மா சொல்லக்கூடாது.. தம்பிக்கு நீங்க சரி ஜோடி..” என்று அவர் புகழ, அனுராகாவின் முகத்தினில் லேசாய் ஒரு செம்மை.. அதையும் விட லேசாய் சிறு வெக்கம்.

‘பார்டா..!!!’ என்று தீபன் உதடு அசைத்தவன்,

“என்ன வேணும்??” என்றான் அனுராகாவிடம்.

அவனிடம் பதில் சொல்லாது, “அண்ணா.. டக்குனு என்ன செய்ய முடியும்??” என்று அவரிடம் கேட்க,

“முட்ட தோசை போட்டுக்கொடுக்கட்டா..” என்றார்.

“தாராளமா..” என்றவள் “அப்படியே ஸ்ட்ராங்கா டீ..” என,

‘இவ என்ன என்னைப்போல மாறிட்டா..’ என்று பார்த்தவன், “உனக்கு எதுவும் வேணாமா??” என்றான் வேண்டுமென்றே அனுராகாவிடம்.

Advertisement