Advertisement

                        நான் இனி நீ – சரயு… 

திருமணம் என்றாலே அது திருவிழா தான்..

யார் வீட்டுத் திருமணம் என்றாலும், யாரின் திருமணம் என்றாலும் அது அவரவருக்கு திருவிழாக் கோலம் தான்.. மாபெரும் பண்டிகை தான்.

அதிலும் அரசியல் பலமும், தொழில் துறை பலமும் ஒன்றிணைந்து தங்கள் வாரிசுகளுக்கு நடத்தும் திருமணம் எனில்??!!

கேட்டிடவா வேண்டும்..

“எங்க பசங்க கல்யாணம் எப்படி செய்யனும்னு எங்களுக்கு ஒரு விருப்பம் இருக்கும்.. சோ இதுல நீங்க ரெண்டு பெரும் தலையிடக் கூடாது..” என்று இருவரின் பெற்றோர்களும் சொல்லிவிட,

அனுராகாவும், தீபன் சக்ரவர்த்தியும் வேடிக்கைத்தான் பார்த்தனர் பல விசயங்களில்.

அதற்காக அவர்கள் சும்மாவெல்லாம் இல்லை. அவர்களுக்கும் நிறைய நிறைய வேலை இருந்தது. தங்களின் நட்புக்களுக்கு அழைப்பு விடுப்பது, பார்டி வைப்பது, ஷாப்பிங் செய்வது, தங்களுக்கு என்று இருக்கும் தனிப்பட்ட வேலைகளை எல்லாம் சற்று ஜரூராய் முடிக்கவேண்டியும் கூட இருந்தது.

“இதெல்லாம் நான் பார்த்துக்க மாட்டேனா..” என்று தாரா கேட்டதற்குக் கூட,

“ம்மா… எனக்கு பதிலா நீ சைன் பண்ண முடியுமா??” என்பாள் அனுராகா.

அங்கே தீபனின் நிலையும் அதுதான். என்ன அவன் சொன்னால் போதும், செய்வதற்கு ஆட்கள் இருக்க, உஷா வீட்டினையே ஒரு தேவலோகம் போல மாற்றி இருந்தார்.

“ம்மா இதெல்லாம் பண்ணிடலாம்.. அடுத்து கிளீன் பண்றப்போ இருக்கு…” என,

“அதெல்லாம் ஆள் சொல்லியாச்சு.. நீ சும்மா மட்டும் இரு..” என்றுவிட்டார்.

என்ன தான் வேலைகள் இருந்தாலும் கூட, இந்த இருவரும் பல நேரம் சும்மா இருப்பதாய் தான் தோன்றியது இருவருக்கும்.

விளைவு “நீ ப்ரீயா இருக்கியா..??” என்று கேட்டு, இருவரும் சந்தித்து பின் இருவரும் ஷாப்பிங் என்று ஊர் சுற்ற, கடைசியில் அதுவும் கூட அலுத்துப்போனது.

“என்ன தீப்ஸ் நம்ம இப்படி ஆகிட்டோம்..” என்பாள் அனுராகா.

“ஆமால்ல.. பேசாம வீட்ல சொன்னது போல பர்ஸ்ட் பிக்ஸ் பண்ண டேட்லயே மேரேஜ் பண்ணிருக்கலாமோ..” என்று தீபன் கேட்க, அவனை பலமாய் முறைத்தாள் அனுராகா.

ஏனெனில் திருமண தேதியை தீபன் பிடிவாதம் செய்து மாற்ற வைத்திருந்தான். முதலில் அடுத்த மாதம் திருமணம் என்கிற முடிவினில் இருக்க

“அட்லீஸ் ஒரு டூ மன்த்ஸ் கேப் விடுங்க…” என்றான் தீபன் சக்ரவர்த்தி.

அனுராகா கூட “சிலது எல்லாம் அதோட ப்ளோல விடனும் தீப்ஸ்..” என்று சொல்லிப் பார்க்க,

“நோ ராகா.. நம்ம மேரேஜ் நான் கொஞ்சம் ரிலாக்ஸ்டா, ஒவ்வொரு விசயத்தையும் அவசரம் இல்லாம ரசிச்சு அனுப்பவிக்கணும்.. வேலை செய்ய ஆயிரம் பேர் வரலாம். ஆனா நமக்கு மனசுல ஒரு நிம்மதி இருக்கணும்..” என, அதற்குமேல் அவளால் எதுவும் சொல்ல முடியவில்லை.

அனுராகாவின் பெற்றோர்களையும் வீட்டிற்கு அழைத்திருந்தவன், தன் பெற்றோரையும் அமர வைத்து இதனை சொல்ல,

அப்போதுதான் அவர்களும் “அப்போ மேரேஜ் எங்களோட ப்ளான் படிதான் நடக்கும்..” என்றுவிட்டனர்.

அதிலும் சக்ரவர்த்தி மகனை தனியில் அழைத்து “உனக்கு சொல்ல வேண்டியது இல்லை தீபன்.. மிதுனோட நிலைக்கும் உன்னோட வாழ்க்கைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதை நல்லபடியா மனசுல பதிய வச்சுக்கோ.. உன்னோட தனிப்பட்ட உணர்வுகளுக்கு, முடிவுகளுக்கு கண்டிப்பா நானும் அம்மாவும் மதிப்புக் கொடுப்போம். ஆனா அதுவே உன்னோட வாழ்கைய பாதிக்கிற விஷயமா இருந்தா நிச்சயமா நாங்க சம்மதிக்க மாட்டோம்.

அனுராகா முழுக்க முழுக்க உன்னை மட்டுமே விரும்பி, தன்னோட வாழ்கைய உன்கூட இணைச்சுக்கிறா.. அப்போ அந்த பொண்ண நீ எவ்வளோ நல்லபடியா பார்த்துக்கனுமோ அப்படி பார்த்துக்கணும்.. மிதுன்காக வருத்தம் எல்லாம் வேண்டாம்.. அவன் குணமாகி வரணும்னு இருந்தா கண்டிப்பா வருவான்…” என்று வாழ்வின் நிதர்சனத்தை எடுத்துச் சொல்லியிருந்தார்.

இப்படி ஆரம்பித்த திருமண வேலைகள் தான். ஆனால் நாள் செல்ல செல்ல தீபனுக்கே தள்ளிப் போட்டது தவறோ என்று பட, அதனை அனுராகாவிடமும் சொல்ல, அவள் முறைக்காது என்ன செய்வாள்??!!

“ஓகே ஓகே கூல் பேபி… இனி எதுவும் போஸ்ட்போன் பண்றது இல்லை ஓகேவா…” என,

“போஸ்ட்போன் பண்ண இனி என்ன இருக்கு..” என்றாள் நக்கலாய்.

அவ்வப்போது இவர்களோடு நீரஜா, புனீத் தேவ் இவர்களும் பங்குகொள்ள, அனுராகா தீபன் இருவருக்கும் திருமணத்திற்கு முந்தய நாட்கள் மிக மிக இனிமையாகவே நகர்ந்தது எனலாம்.

நிச்சயம், வீட்டில் யாரிடமும் சொல்லாது நடந்தபடியால், திருமணத்திற்கு சரியா பதினைந்து நாட்கள் முன்னர், ‘ப்ரீ வெட்டிங் பார்ட்டி..’ என்று லோகேஸ்வரன் ஏற்பாடு செய்திருக்க, தொழில் துறை ஆட்கள் ஆரம்பித்து, அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள், சொந்தபந்தங்கள் நட்புக்கள் என்று அதுவே ஒரு திருமணம் போன்றுதான் இருந்தது.

“ம்மா இது எதுக்கு..” என்று அனுராகா கேட்டதற்குக் கூட

“தோணிருக்கு பண்றார்.. சிலது எல்லாம் கேள்வி கேட்காத…” என்றுவிட்டார் தாரா.

லோகேஸ்வரன் தனிப்பட்ட முறையில் எப்படியோ, ஆனால் இந்த திருமண விசயத்தில் அவரின் ஆர்வமும் பங்கும் மிக மிக அதிகம்.

உஷாவும் சக்ரவர்த்தியும் கூட இதனை எதிர்பார்க்கவில்லை என்றுதான் சொல்லிட வேண்டும். அவர்கள் என்ன அனுராகாவிற்கே கூட ஆச்சர்யம் தான்.

“ம்மா.. டாடி என்ன இப்படி சேஞ் ஆகிட்டார்…” என,

“அனு… வாட் எவர் இட் இஸ்.. அவர் உன்னோட டாடி.. ஒரு சில விசயங்கள்ல அவருக்கு வேற தாட்ஸ் இருக்கலாம்.. பட் உன்னோட மேரேஜ்னு வர்றப்போ அவர் அதெல்லாம் பார்க்க மாட்டார்..” என,

லோகேஸ்வரன் கூட இப்போதெல்லாம் அனுராகாவிடம் பிஸ்னஸ் தாண்டியும் வேறு விசயங்களும் பேசத் தொடங்கியிருந்தார். மகள் தீபனுக்காக அனைத்தையும் துறக்க தயாராய் இருந்தது, ஒரு அப்பாவை அவர் மனதினில் ஒரு அடி விழ வைத்ததுதான்.

வெளியில் காட்டிக்கொள்ளவில்லை, ஆனால் உள்ளே ஒரு உறுத்தல் இருந்தது நிஜம்.

அதன் வெளிப்பாடு தான் இதெல்லாம்…!!

ப்ரீ வெட்டிங் பார்ட்டி, மெஹந்தி, சங்கீத் என்று அடுத்து அடுத்து ஒவ்வொன்றாய் அரங்கேற, ஆட்டம் பாட்டம் கும்மாளம் கொண்டாட்டம் தான்.

‘தி கிராண்ட் வெட்டிங்…’ தான் அவர்களுடையது..

மூன்று நாட்கள் திருமணம்..

“வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து

நாரண நம்பி நடக்கின்றான் என்று எதிர்

பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்

தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீ நான்…”

முதல் நாள் மாலை பெண் அழைப்பு, சீர் வைத்தல், நலங்கு எல்லாம்.. பெண் வீட்டு ஆட்கள் சீர் வைத்தது ஒருபுறம் என்றால், மாப்பிள்ளை வீட்டுச் சார்பாக எதிர் செய்தனர்.

சீர் அடுக்குவதில் உஷாவிற்கும், தாராவிற்கும் ஒரு போட்டியே நிகழ்ந்தது எனலாம்.

“நாளை வதுவை மணம் என்று நாள் இட்டு

பாளைக் கமுகு பரிசு உடைப் பந்தற் கீழ்

கோளரி மாதவன் கோவிந்தன் என்பான் ஓர்

காளை புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான் …”   

இரண்டாவது நாள் மாலை மாப்பிள்ளை அழைப்பு, வானவேடிக்கை, இசை கச்சேரி, நடனம் என்று கலை கட்டியது. தீபன் சக்ரவர்த்தி முகத்தினில் அப்படியொரு பெருமிதம்.. அது அவனின் பார்வையில் தெரிய, நடையிலோ அப்படியொரு நிமிர்வு..

“இந்திரன் உள்ளிட்ட தேவர்-குழாம் எல்லாம்

வந்திருந்த என்னை மகட் பேசி மந்திரித்து

மந்திரக்கோடி உடுத்தி மணமாலை

அந்தரி சூட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்

நால்-திசைத் தீர்த்தம் கொணர்ந்து நனிநல்கி

பார்ப்பன சிட்டர்கள் பல்லார் எடுத்துஏத்தி

பூப்புனை கண்ணிப் புனிதனோடு என்தன்னைக்

காப்பு-நாண் கட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்

கதிர்-ஒளித் தீபம் கலசம் உடன் ஏந்திச்

சதிர்இள மங்கையர் தாம்வந்து எதிர்கொள்ள

மதுரையார் மன்னன் அடிநிலை தொட்டு எங்கும்

அதிரப் புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான் …”        

மூன்றாவது நாள் அதிகாலை ஐந்து மணி முஹூர்த்தம்..!!

திருமணத்திற்கு நெருங்கிய சொந்தங்கள், நட்புக்களுக்கு மட்டுமே அழைப்பு இருக்க, வேறு எவ்வித அமளி துமளியும் இல்லை..

தீபன் சக்ரவர்த்தி பட்டு வேட்டி சட்டையிலும், அனுராகா திருமணத்திற்கே உரித்தான மஞ்சள் நிற நூல் புடவையிலும் இருக்க, அய்யர் மந்திரங்களைச் சொல்ல சொல்ல, தீபனும் அனுராகாவும் திரும்பச் சொல்லி, அவர் செய்யச் சொல்லும் அனைத்து சம்பிரதாயங்களையும் எவ்வித பிசகும் இல்லாது, நிறைந்த மனதுடனும், ஸ்ரத்தையுடனும் செய்துகொண்டு இருந்தனர்.

முப்பத்து முக்கோடி தேவர்களையும் சாட்சியாக அழைத்து, உற்றார் உறவினர்கள் மத்தியில், என்னின் சரிபாதி நீ என்று இருவருமே சங்கல்பம் செய்துகொள்ள, காண்போரின் கண்களுக்கு அப்படியொரு விருந்தாய் இருந்தது ஒவ்வொன்றும்.  

இருமனம் சங்கமித்ததால் நிகழும் திருமணம் அல்லவா இது.. ஆக அதுவே ஒரு தனி அழகினைக் கொடுத்தது.

“மத்தளம் கொட்ட வரி-சங்கம் நின்று ஊத

முத்து உடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தல்கீழ்

மைத்துனன் நம்பி மதுசூதன் வந்துஎன்னைக்

கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீ நான்

வாய்நல்லார் நல்ல மறை ஓதி மந்திரத்தால்

பாசிலை நாணல் படுத்துப் பரிதி வைத்து

காய் சின மா களிறு அன்னான் என் கைபற்றி

நீ வலஞ் செய்யக் கனாக் கண்டேன் தோழீ நான்

இம்மைக்கும் ஏழ்ஏழ் பிறவிக்கும் பற்று ஆவான்

நம்மை உடையவன் நாராயணன் நம்பி

செம்மை உடைய திருக்கையால் தாள் பற்றி

அம்மி மிதிக்கக் கனாக் கண்டேன் தோழீ நான்…”

அய்யர் “கெட்டி மேளம்…” என்று சொல்லவும், மங்கள் வாத்தியங்களும் மேல தாளங்களும் முழங்க,

‘மாங்கல்யம் தந்துனானே…’ என்று அய்யர் சொல்லவும், அனைவரும் ஆசிவாதித்து கொடுத்திருந்த மங்கலத் தாலியை எடுத்து தீபன் கைகளில் கொடுக்கப் பட, அதனைக் இரு கரம் ஏந்தி வாங்கிக்கொள்ளும் போது அவனுள் ஒரு சொல்லப்படா உணர்வு மின்னல்.

ஒருவித நிறைவு..!!!

அதைவிட நிறைவு, அவன் கரம் ஏந்திய தாலியை தலை குனிந்து அனுராகா ஏற்றுக்கொள்கையில், மூன்று முடிச்சிட்டு அவன் அதை சூடுகையில், வார்த்தைகள் இல்லை இருவருக்கும்.

அனுராகாவோ சில நொடிகளில் தீபனின் முகத்தினை நிமிர்ந்து பார்க்க, இருவரின் கண்களிலும் ஒரு பளிச்சிடல்.. இருவரின் இதழ்களும் மந்தகாசப் புன்னகையில் அழகாய் வளைந்திட, இதனைக் கண்ட இருவரின் பெற்றோருக்கும் மனது நிறைந்து தான் போனது.

பின் மாலை மாற்றி, ஹோம குண்டம் வலம் வந்து, அம்மி மிதித்து, அருந்ததிப் பார்த்து, பின் தீபன் மெட்டி அணிவிக்க, ஒவ்வொன்றையும் மனதினில் ஆழப் பதிந்துக்கொண்டாள் அனுராகா.

“வரிசிலை வாள் முகத்து என்னைமார் தாம் வந்திட்டு

எரிமுகம் பாரித்து என்னை முன்னே நிறுத்தி

அரிமுகன் அச்சுதன் கைமேல் என்கை வைத்துப்

பொரிமுகந்து அட்டக்கனாக் கண்டேன் தோழீ நான் 

குங்குமம் அப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து

மங்கல வீதி வலஞ் செய்து மா மண நீர்

அங்கு அவனோடும் உடன் சென்று அங்கு ஆனைமேல்

மஞ்சனம் ஆட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்…” 

திருமணத்திற்கு பிறகு செய்யும் சாங்கியங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாய் நடந்துகொண்டு இருக்க, இன்னொரு புறம் திருமண விருந்தும் தாறுமாறாய் நடந்தேரிக்கொண்டு இருந்தது. விருந்தின் மொத்த பொறுப்பினையும், காதர், நாகா தர்மா ஏற்றுக்கொண்டு இருந்தார்கள்.

சொந்தங்கள் நட்புக்களுக்கு திருமண விருந்தென்றால், அங்கே சக்ரவர்த்தி அவரின் தொகுதியில், இந்த மூன்று நாட்களுக்கும் மூன்று வேலை உணவும் நான்கு திருமண மண்டபங்களை எடுத்து மக்களுக்கு உண்ண அழைப்பு விடுத்திருந்தார்.

ஒவ்வொரு நாளும் அன்றைய தின விசேசம் வேறு அங்கே ஒளிப்பரப்புச் செய்யபட, தொகுதி வேறொரு திருவிழா கோலம் கொண்டிருந்தது.

ஆகச் சிறந்த திருமணம்..!!

அனைவரும் மெச்சிக்கொண்ட திருமணமாய் அமைந்திட, வந்தவர்கள் மனதும் வயிறும் நிறைந்திட, அனைவரின் மனதுமே உளமார இவர்களை வாழ்த்திச் சென்றனர்.

சென்னையில் இவை அனைத்தும் என்றால், இரண்டு நாட்களில் டெல்லியில் ஒரு ரிஷப்சன் ஏற்பாடு செய்திருந்தார் சக்ரவர்த்தி.

இங்கே ஒருவகை கோலாகலம் என்றால், அங்கே இன்னொரு வகையான கொண்டாட்டம். முழுக்க முழுக்க அங்கே இருக்கும் அரசியல் பிரமுகர்களுக்காக நடத்தப்பட்ட ரிஷப்சன் இது.  அலங்காரத்தில் இருந்து உணவு முறையில் இருந்து, ஒலிக்கப்படும் இசையில் இருந்து எல்லாமே அங்கே வேறாய் இருந்தது.

மனதில் இருக்கும் உற்சாகமும், மகிழ்ச்சியும் உடல் சோர்வினைப் பற்றி நினைத்திடக் கூட விடவில்லை இருவருக்கும். டெல்லி ரிசப்சன் முடிந்து  அதற்கு மறுநாளே விமானம் ஏறிவிட்டனர்.

தேன்நிலவு..

அனுராகா சொன்னது எல்லாம் ஒன்றே ஒன்றுதான் ‘நீயும் நானும் மட்டுமா இருக்கணும்.. அப்படி ஒரு இடம் பாரு…’ என,

தீபன் சக்ரவர்த்தி அனுராகாவை அழைத்துக்கொண்டு வெளிநாடு செல்லவே விரும்பினான். ஆனாலும் அவளும் உலகம் சுற்றியவள் ஆகிற்றே.

பொதுவாய் இருவருக்குமே இந்த நீர் நிலையில் மிகவும் பிடித்தமாய் இருந்தது. அத்தனை ஏன் அனுராகாவை தீபன் முதன்முதலில் பார்த்தது நீச்சல் குளத்தில் தானே.

ஆக, நீர் சார்த்த ஓர் தேனிலவு இடமாய் தான் செல்லவேண்டும் என்று தீபன் முடிவு செய்ய, அப்படி அவன் தேர்வு செய்த இடம் கரீபியன் கடல் பகுதியில் கடலுக்கு அடியில் இருக்கும் ஒரு தேனிலவு ரிசார்ட்.

தலைக்கு மேலே ஆகாயம் என்பது மாறி, தலைக்கு மேலே கடல்… கடல் மீன்கள் நீந்திச் செல்ல, அனுராகாவும், தீபனும் அருகருகே ஒரு வாட்டர் பெட்டில் படுத்திருக்க, இருவரின் பார்வையும் மேலே தான் இருந்தது.

சுற்றிலும் நீலம்… அந்த இரவு நேர மெல்லிய நீல நிற விளக்கொளியில் தலைக்கு மேலே இருக்கும் கண்ணாடி தடுப்புகளுக்கு அந்தப்பக்கம் வண்ண வண்ணமாய் மீன்கள்..

அதில் தான் எத்தனை வகை.. எத்தனை வண்ணம்.. கூட்டம் கூட்டமாய் சில.. குட்டி குட்டியாய் சில.. ஜோடி ஜோடியாய் கூட சில நீந்திக்கொண்டு இருக்க,

“தீப்ஸ்… திஸ் இஸ் ஜஸ்ட் அமேஸிங்…” என்று அவனை மெச்சிக்கொண்டு இருந்தாள் அனுராகா..

ஸ்வீட் ஹனிமூன் மட்டுமல்ல, இது ஒரு த்ரில் ஹனிமூனும் கூட..

அவர்களின் அறையினில் மெல்லிய வெளிச்சம் மட்டுமே.. சுற்றிலும் ஒரு குளுமை

இது புதுவித தனிமை அவர்களுக்கு..

கழுத்தில் மஞ்சள் சரடு தாலி மட்டுமே அணிந்து, போர்வைக்குள் தன்னுடல் முழுவதையும் மறைத்து, அவனின் மார்பில் இப்போது அனுராகா தலை சாய்த்திருக்க, தீபன் சக்ரவர்த்தியின் கரம் தானாய் அவளின் கேசம் கோதிக்கொண்டு இருக்க, பக்கவாட்டில் மிக மிக மெல்லிய சத்தத்தில் புல்லாங்குழல் ஓசை இசைத்துக்கொண்டு இருந்தது.

“தீப்ஸ்…” என்றாள் மெதுவாய்..

“ம்ம்….” என, இப்போது அழைத்தவள் அமைதியாய் இருக்க,

“என்ன ராகா…” என்றான் இப்போது அவன்.

“இந்த பிளேஸ் எப்படி சூஸ் பண்ண??”

“ம்ம்.. நீதானே சொன்ன நீயும் நானும் மட்டும் இருக்கணும்னு.. அதான் தேடி தேடி பெக்கூலியரா இருக்க ப்ளேசஸ் பார்த்தேன்..” என,

“ம்ம் இங்க வர வரைக்கும் கூட ஐ டிண்டின்ட் திங்… இவ்வளோ சூப்பரா இருக்கும்னு..” என்று அவளும் சொல்ல,

“இதுவே நீ எத்தனை தடவ சொல்வ ராகா…” என்றான் சிரித்தபடி.

“ம்ம்ச் போடா…” என்றவள்,  “நெக்ஸ்ட் நேரா அந்த வுட்டன் ஹவுஸ் போறோம் ஓகே வா…” என,

“ம்ம் அடுத்து…” என்றான்..

“தென் கோவா போறோம்..” என,

“அப்புறம்…” என்றான் தீபன்.

“அ…!!!” என்றவள் அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு திரும்பவும் அமைதியாகிவிட,  மீண்டும் சிறிது நேரத்தில் “தீப்ஸ் …” என்றாள்.    

“இப்போ என்ன??” என்றான்.

“எப்படி உன்னால அப்படி ஒரு டிசிசன் எடுக்க முடிஞ்சது…” என்று அவள் கேட்க,

“ஏன் ராகா??” என்றான்.

“நான் எதிர்பார்க்கவே இல்லை..” என்றவள் நிமிர்ந்து அவன் முகம் பார்க்க, அவனோ எதுவுமே சொல்லாது புன்னகை பூக்க,

“சொல்லு தீப்ஸ்.. இப்போ வரைக்கும் இந்த கேள்விக்கு நீ ஆன்சர் பண்ணல..” என,

“நீதானே சொன்ன உனக்காக நிம்மதி, அமைதி உனக்குள்ள தான் இருக்குன்னு.. உனக்குள்ள தான் பதில் இருக்குன்னு.. அதான் யோசிச்சேன்.. இது மட்டும் தான் தோணிச்சு.. எல்லாம் தாண்டி.. நான் என் ராகாவோட ஒரு அமைதியான குடும்ப வாழ்வு வாழணும்னு நினைக்கிறேன்..” என,

அவன் முகத்தினில் இருந்த புன்னகை, இப்போது அவளின் முகத்திலும் ஒட்டிக்கொள்ள எம்பி அவன் கன்னத்தில் அவள் முத்தமிட, பதிலுக்கு அவனும் அவளை தன் மீது இறுக்கமாய் சாய்த்துக்கொள்ள,

“ம்ம் வேற என்ன ப்ளான் தீப்ஸ்..” என்றாள் அடுத்து.

“D வில்லேஜ் கான்சப்ட் போல எல்லா பிக் சிட்டீஸ்லயும் எஸ்டாப்ளிஸ் பண்ணனும்.. அந்த அந்த ஸ்டேட், அந்த அந்த கல்ச்சர், அவங்க லைப் ஸ்டைல் இதெல்லாம் ரிசம்பில் பண்றதுபோல இருக்கணும் ஒவ்வொரு பிளேசும்…” என,

“கிரேட்…” என்று அப்போதும் மெச்சிக்கொள்ள,

“வேற கொஸ்டீன் ஏதும் இருக்கா??” என்றான்.

“ம்ம்ஹும்…” என்றவள், “இப்போ கூட நமக்கு மேரேஜ் ஆகிடுச்சுன்னு பிலீவ் பண்ண முடியல தீப்ஸ்..” என,

“அப்பப்போ இதை எடுத்து கண்ணுல ஒத்திக்கோ.. சரியா..” என்று அவன் கட்டிய தாலியை எடுத்துக் காட்ட,

‘தோடா…!!’ என்று அவள் பார்த்து வைக்க,

“நீதானே சொன்ன பிலீவ் பண்ண முடியலைன்னு…” என்று அவன் கேட்க,

“அதுக்கு.. நான் ரொம்ப டிபிக்கல் பார்மல் வொய்ப் எல்லாம் இல்லை..” என்றாள் சிலிப்பிக்கொண்டு.

அதனைக் கேட்டு தீபன் “ஹா ஹா…” என்று சத்தமாய் சிரிக்க,  “ஹெலோ.. என்ன என்ன சிரிப்பு…” என்று இவள் எகிற,

“இப்போ கூட நீ என் கண்ணுக்கு ராட்சசி மாதிரி தான் தெரியுற… வொய்ப் போல தெரியலை..” என்று அவன் சொல்லி முடிக்கும் முன்னம்,

“யூ.. ராஸ்கல்…” என்று எழுந்து அமர்ந்தவள், அவனை வசமாய் அடிக்க,

“ஹேய்.. ஹேய்.. அழகான ராட்சசின்னு சொன்னேன்…” என்று அவள் கை பிடித்து அவன் சமாதானம் செய்து சாந்தப் படுத்த,

“அதானே பார்த்தேன்..” என்றாள் பிகுவாய்.

“நீ பார்க்காததா…” என்று தீபன் வேண்டுமென்றே சீண்ட,

“வேண்டாம் தீப்ஸ்…” என்று விரல் நீட்டி மிரட்டியவள், அவன் பார்வையில் “ராஸ்கல்…” என்று முணுமுணுத்து திரும்பிப் படுத்துக்கொள்ள,

“மேடம் உங்களோட இந்த டெக்னிக்ஸ் எல்லாம் எனக்கு தெரியாதா என்ன??” என்று கேட்டபடி தீபன் அவளை பின்னிருந்து அணைத்துக்கொள்ள,

“நான் திரும்பவே மாட்டேன்..” என்றாள் அனுராகா..

“நீ திரும்பாத..” என்றவன், அவளை அப்படியே அணைத்துத் தன் மீது திருப்பிக்கொள்ள, அனுராகாவின் கேசம் மொத்தமும் இப்போது தீபனின் முகத்தினை மறைத்திட,  தீபனின் கரங்கள் அவளை இறுக சுற்றிக்கொள்ள,  அவன் இதழோ, தேடி தேடி அவளின் கழுத்து மச்சத்தில் மூழ்கத் தொடங்க,

ராகமும், தீபமும் மட்டுமே அங்கே இசைந்து கொண்டிருந்தது.. இழைந்து கொண்டிருந்தது.. இனிமை சுகித்துக்கொண்டிருந்தது…!!

அவன் – நான் இனி நீ..!!

அவள் – நான் இனி நீ..!!

காதல் – அப்பாடி..!! லைட்ஸ் ஆஃப்..!!

Advertisement