Advertisement

உஷா எப்போதும் உணவுப் பொழுதுகளில் மட்டும் வருவதால், அடுத்து இப்போது வரமாட்டார் என்கின்ற எண்ணத்தில் தான் மிதுன் இத்தனை பேசியது. உஷாவோ கீழே சென்றவர், பின் என்ன தோன்றியதோ, இந்த மிதுனுக்கு சிறிதேனும் எடுத்துச் சொல்வோம், யோசிக்க வைப்போம் என்று நினைத்தவர் மீண்டும் மேலேறி வர, அவன் அறையின் கண்ணாடிக் கதவு முழுதாய் மூடாது போயிருக்க, உள்ளே மிதுன் பேசிக்கொண்டு இருந்தது அனைத்தும் உஷாவின் காதுகளில் விழ, ஆடித்தான் போனார்.

அவன் குரலில் தான் எத்தனை கொடூரம்..

என் பிள்ளையா இவன்??!!

அதற்கான தகுதியுண்டா.. அவரின் மனது இப்படித் துடிக்க,

“உஷா.. உஷா.. போதும்.. யோசி.. இவன் என்னவோ செய்யப் போறான்..” என்று அவரே தன் மனதிற்கு கடிவாளம் இட்டவர்,

‘கண்டைனர் லாரி நம்பர் எதுக்கு..’ என்று யோசித்தவர், அப்படியே சத்தமே இல்லாது கீழே வந்துவிட்டார்.

மனது அடித்துக்கொண்டது.. ‘பாவி.. பாவி..’ என்று அர்ச்சிக்க, அப்போதுதான் புரிந்தது தீபனின் சைக்கிள் பேரணியில் எதுவோ பெரும் ஆபத்து விளைவிக்கப் போகிறான்..  என்று.

‘அடக் கடவுளே..’ என்று நெஞ்சில் கை வைத்தவர், வேகமாய் இதனைச் சொல்ல, தீபனுக்குத் தான் அழைத்தார்.

ஆனால் அடுத்த நொடி, அலைபேசியை அமர்த்தியவர் “ம்ம்ஹும்… வேற ஏதாவது செய்யணும்..” என்று யோசிக்க,

அடுத்து தீபனே அழைத்துவிட்டான் “என்னம்மா கால் பண்ணி கட் பண்ற..” என்று..

“இல்லடா.. ஜஸ்ட் போன் பார்த்துட்டு இருந்தேன்.. விரல் பட்டிருச்சு..” என்று இலகு குரலிலேயே சொல்ல,

“ஓ.. ஓகே.. வேற எதுவுமில்லையே..” என்றான்.

“இல்லடா.. அனுவோட பேசத்தான் போன் எடுத்தேன்..” என்று உஷா பேச்சினை மாற்ற,

“சரி சரி பேசுங்க.. ஆனா என்னைப் பத்தி பேசக்கூடாது..” என்று மிரட்டுவது போல் சொல்ல,

“ஓ!! உனக்கு அப்படி வேற எண்ணம் இருக்கா..போடா..” என்று அம்மா சொல்ல,

“ஹா ஹா..” என்று சிரித்துவிட்டு வைத்தான் தீபன் சக்ரவர்த்தி.

அவனின் அந்த சிரிப்பு உஷாவினுள் கேட்டுக்கொண்டே இருந்தது. மிதுனின் இப்போதைய இந்தத் திட்டத்தை சொன்னால் தீபனிடம் இந்த சிரிப்பு இருக்காது. என்ன செய்வது??!!! வெகுவாய் யோசித்தார்.

அங்கே மேலே மோகனுக்கு மூளைச் சலவை செய்துகொண்டு இருந்தான் மிதுன்.. இரவு எட்டுமணிக்குத்தான் மோகன் கிளம்புவான். பின் இன்னொருவன் வருவான். காலை எட்டு மணி வரைக்கும் அவன். பொதுவாய் அந்த நேரம் முழுவதும் மிதுன் உறக்கத்தில் தான் இருப்பான். ஆக அவன் காண்பது பேசுவது எல்லாம் மோகனிடம் மட்டும் தான்.

இன்னும் இரண்டே நாட்களில் தீபன் ஏற்பாடு செய்திருக்கும் சைக்கிள் பேரணி. யாருக்கும் எந்தவித ஆபத்தும் இல்லாது அது நல்ல முறையினில் நடந்திட வேண்டும்.

இதுவே உஷாவிற்கு.. அதற்கு இந்த மிதுன் இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்கள் உறக்கத்திலேயே இருந்தால் ஒன்றும் ஆகிடாது என்று எண்ணினார். எப்படியும் இந்த இரண்டு நாட்கள் தீபன் அதிகம் வீட்டுப்பக்கம் வரப்போவது இல்லை. சக்ரவர்த்தி தேர்தல் முடிவின் போது தான் இங்கே வருவார். ஆக மிதுனை மீண்டும் உறக்க நிலையில் வைத்தால் யாரும் எதுவும் கேள்வியும் கேட்கப் போவதில்லை என்று நினைக்க,

‘கடைசியில் என்னையும் இப்படி மாற்றிவிட்டானே..’ என்று அழுகை முட்டியது.

இரவு வரைக்கும் பொறுத்தவர், இரவு நேர பணியாள் வரவும், மோகன் ஒரு பீதி கலந்த முகத்துடனே கீழிறங்கி வர,

அவனை அழைத்த உஷா “நாளைக்கு இருந்து நீ இங்க வரவேண்டாம் ..” என, திடுக்கிட்டு பார்த்தான்.

அவன் கரங்களில் இரண்டாயிரம் ருபாய் நோட்டு ஒரு கட்டினைக் கொடுத்தவர், “எடுத்துட்டு எங்கவேணா போ.. இல்ல இந்தபக்கம் யார் கண்லையும் படக்கூடாது.. இங்க நடக்கிற எதுவும் வெளியவும் போகக் கூடாது.. எல்லாம் தாண்டி நாளைக்கிருந்து நீ இங்க வரவே கூடாது..” என,

மோகன் பதிலே சொல்லவில்லை, விட்டால் போதுமென்று ஓடாத குறையாய் சென்றுவிட்டான். பார்க்கத்தான் அப்படி முரட்டுத் தோற்றம் போல, இப்படியொரு விசயத்திற்கே அவன் ஆடிப்போயிருப்பது நன்கு புரிந்தது உஷாவிற்கு.

மிதுனுக்குத் தேவையான மாத்திரைகள் வேளா வேளைக்குப் பார்த்து எடுத்து வைத்து அனுப்புவது எல்லாம் உஷாதான். இந்த சில நாட்களாய்.. ஆக மாத்திரைகளை மாற்றிக் கொடுத்தாலும் எவ்வித சந்தேகமும் வேறு யாருக்கும் வரப்போவது இல்லை.

என்ன மிதுன் ஏதாவது கண்டு கேட்டால்.. பார்த்துக்கொள்வோம் என்று எண்ணினார்.

வழக்கமான இரவு உணவு, பால், மாத்திரை எல்லாம் வேலையாள் மேலே கொண்டுச் செல்ல, உஷாவும் உடன்செல்ல, மிதுன் உண்ணும் வரைக்கும் அமைதியாகவே அங்கே அமர்ந்திருந்தார்.

உண்டு முடிக்கவும், இரண்டு நிமிடங்கள் கடக்கவும் உஷா அவனின் மாத்திரைகளை நீட்ட, அதனை வாங்கிப் பார்த்தவன், மீண்டும் உஷா முகம் பார்க்க, அவனின் கைகளில் மாத்திரைகள் அப்படியே இருந்தது.

‘கெஸ் பண்ணிட்டானோ…’ என்று நினைத்தாலும் உஷா எதையும் காட்டிக்கொள்ளாது, அங்கே இரவு நேர காவலுக்கு என்று வந்தவனிடம் “இந்த ரெண்டு மாத்திரையும், காலைல எழுந்ததும் கொடுத்திடனும்..” என்று சொல்லி இரு மாத்திரைகளை கொடுக்க, அது வழக்கமாய் கொடுக்கும் மாத்திரைகள் என்பதால்,

மிதுன்னுக்கும் வேறெதுவும் நினைக்கத் தோன்றவில்லை. ஆனால் கையில் இருக்கும் மாத்திரைகளில் இரண்டு புது மாத்திரைகள் இருக்க, அதையே பார்த்துக்கொண்டு இருந்தான்.

உஷா அதனைப் பார்த்தவர் “உனக்கு ப்ரெஷர் நார்மலா இல்லை. அதான் டாக்டர் வேற டேப்ளட்ஸ் கொடுத்திருக்கார்..” என,

“ஓ..!!” என்று உதடு குவித்தவன், ஒன்றும் சொல்லாது அதனை வாயில் போட்டு விழுங்க,

“சாப்பிட்டிட்டு உடனே தூங்கக் கூடாது.. கொஞ்ச நேரம் நடக்க வை..” என்று அங்கிருந்தவனிடம் சொல்லிச் சென்றார் உஷா.

மிதுனுக்கு உஷாவின் இந்த மாற்றங்கள் எல்லாம் புதிதாய் இருந்தாலும், இப்போதைக்கு தேவையில்லாது எதையும் பேசி தான் எதையும் கெடுத்துக்கொள்ள கூடாது என்பதில் உறுதியாய் இருந்தான்.

அம்மா கொடுத்த மாத்திரைகளை உண்டுவிட்டு, சிறிது நேரம் நடந்தவன், உறக்கம் வரவும் படுத்துறங்கிவிட, உறங்குகையில் நாளை எப்போது வரும், அந்த மோகன் என்ன செய்தி கொண்டு வருவான், எப்படியாவது தான் இதில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணங்களே அவனுள்.

உறங்கிய பிறகு என்ன நடந்தது என்று அவனுக்கு ஒன்றுமே தெரியாது..!!

உறக்கம்… உறக்கம்… உறக்கம் மட்டுமே…              

இரண்டு நாட்கள் கழித்து…               

“Oh.!! Yuva…” அனைவரின் வெள்ளை நிற டீஷர்ட்டிலும் நீல நிற எழுத்துக்களாய் இவ்வர்தைகள் இடம் பெற்றிருக்க, முதல் வரிசையில் தீபன் சக்கரவர்த்தி அவனருகே சற்று தள்ளி அனுராகா, இருவருக்கும் இரு பக்கமும் நாகாவும் தர்மாவும்.

கிட்டத்தட்ட லட்சம் பேர். அனைவரும் இளைஞர் இளைஞிகிகள்.. சென்னை மாநகரின் பிராதான சாலையின் ஒரு பக்கம் முழுவதும் நின்றிருந்தனர். அனைவரிடமும் சைக்கிள்.

அந்தச் சைக்கிள் இனி அவர்களின் சொந்தம்..!!

இன்கம்டாக்ஸ் விசயத்தில் அனுராகா ஏற்பாடு செய்தது, மேற்கொண்டு பல கோடி கொடுத்து தீபன் இத்தனை சைக்கிள் வாங்கியிருந்தான். அனைத்தும் புது மாடல்.

முதல் வரிசையில் இவர்களுடன், அந்த ஆண்டிற்கான இளைஞர் சாதனையாளர் விருது வாங்கியவர்கள் எந்தெந்த துறையில் இருக்கிறார்களோ அவர்களை எல்லாம் அழைப்பு விடுத்து, வெளியூர் ஆட்களுக்கு முதல்நாளே சென்னை வர வசதி செய்துகொடுத்து, தங்கவும் ஏற்பாடுகள் எல்லாம் செய்து கொடுத்திருந்தான்.

இங்கே வந்து திரும்பி அவரவர் வீடு செல்வது வரைக்கும் அனைத்துமே தீபன் சக்ரவர்த்தியின் பொறுப்பு.    

அதன்பின்னே திரைத்துறை பிரபலங்கள்.. நாற்பது வயது தாண்டி யாரும் அங்கில்லை..

பின் அவர்களின் கல்லூரி மாணவ மாணவியர், பின் பொதுவில் யார் யார் எல்லாம் விருப்பம் இருக்கிறது என்று தெரிவித்திருந்தார்களோ அவர்கள் எல்லாம். அனைவருக்கும் அவரவர் பெயர் பொறிக்கப்பட்ட சைக்கிள் கொடுக்கப்பட்டிருக்க,  கூடியிருந்த அனைவரின் முகத்திலும் ஒரு புது மலர்வு. புத்துணர்ச்சி..

ஆங்காங்கே காவல் துறையினர் குழு குழுவாய் பந்தோபஸ்த்திற்கு நிற்க, ஒவ்வொரு நூறடி தூரத்திலும், மருத்துவ வாகனம் நிறுத்தப்பட்டு இருந்தது.

இதோ இன்னும் சிறிது நொடிகளில் தீபனின் இந்த மாபெரும் சைக்கிள் பேரணி ஆரம்பிக்கப் போகிறது..

அனைத்து நேசனல் மீடியாக்களும் வந்து குழுமியிருக்க, எந்த எந்த சேனல்கள் எல்லாம் தீபனைப் பற்றி அவதூறு செய்திகளை பரப்பிக்கொண்டு இருந்தனவோ இன்று இப்போது அதே சானல்களே தீபன் சக்ரவர்த்தியின் இம்முயற்சியை பாராட்டி ஒளிபரப்பு செய்துகொண்டு இருந்தது.

வான்வெளி கேமராக்கள் ஐந்து சுற்றி சுற்றி படம் எடுத்துக்கொண்டு இருக்க, அவ்விடமே இளையவர்கள் கூட்டத்தாலும், நேர்மறை எண்ண அலைவரிசைகளாலும் நிரம்பி வழிந்தது.          

“அச்சத்தை விடு லட்சியம் தொடு
வேற்றுமை விடு வெற்றியைத் தொடு
தோழா போராடு மலைகளில் நுழைகின்ற நதியெனெ
சுயவழி அமைத்து, படை நடத்து
அட வெற்றிக்கு பக்கத்தில்
முற்றத்தில் சுற்றத்தை நிறுத்து
நல்லவர் யாவரும் ஒதுங்கிக் கொண்டால்
நரிகளின் நாட்டாமை தொடங்கிவிடும்
வாலிபக் கூட்டணி வாளெடுத்தால்
வலப்பக்கம் பூமி திரும்பி விடும்…”

என்ற பாடல் ஒலித்துக்கொண்டு இருக்க, அனைவரின் கரகோசத்தோடு சந்தோசக் கூச்சலும் சேர்ந்து ஒலிக்க, இளம் வயதில் விவசாயம் செய்து சாதனைப் படைத்த ஒரு பெண்மணியை அழைத்து கொடி அசைக்கச் சொல்ல, அப்பெண்மணி முகத்தினில் அப்படியொரு பெருமை.

இந்நிகழ்வில் நடக்கும் ஒவ்வொரு விசயமும் படமாக்கப் பட்டது. வெளியே செய்தியாய் பரப்பப்பட்டது..

“நான் நேர்ல வரக்கூடாதா..” என்று சக்ரவர்த்தி கேட்க, “நீங்களும் அம்மாவும் வீட்ல உட்கார்ந்து டீவில பாருங்க..” என,

“டீவில பார்க்க நான் டெல்லில இருந்து வரணுமா டா..” என்றார் தாங்கலாய்.

அவருக்கு மகன் தன்னை வரவேண்டாம் என்கிறானே என்று ஒரு சிறு வருத்தம். அதுவே இப்படி பேச வைக்க,

“ப்பா.. நீங்க வந்தா இது அரசியல் ஆகும்.. நீங்கன்னா நீங்க மட்டும் வர முடியாது. உங்களோட பத்து பேரு வருவாங்க.. அவங்களோட இருபது பேர் வருவாங்க.. இப்படியே கூட்டம் பெருசாகும்.. அவங்களை சரியா ட்ரீட் பண்ணலைன்னா அது ரொம்ப பிரச்னை வரும்.. வேண்டாம்.. வந்திருக்க யங்ஸ்டர்ஸ் தான் முக்கியம்..” என்றவன்,

“நீங்களும் அம்மாவும் சேர்ந்து பார்த்தா நான் ரொம்ப சந்தோசப் படுவேன்..” என, வேறு வழியில்லாது டெல்லியில் இருந்து வந்திருந்தார் சக்ரவர்த்தி.

அங்கே அனுராகாவின் வீட்டினில் கூட, தாராவும் லோகேஸ்வரனும் தான் அமர்ந்து பார்த்துக்கொண்டு இருந்தனர். இத்தனை பெரிய ஏற்பாடாய் இருக்கும் என்று லோகேஸ்வரன் நினைக்கவில்லை. ஏதோ ஒரு நூறு இருநூறு ஆட்கள் வருவர் என்று எண்ணியிருந்தார்.

ஆனால் இப்படியொரு மாபெரும் கூட்டத்தினை அவர் எதிர்பார்க்கவில்லை…

டிவியில் பார்க்கவே பிரமிப்பாய் இருக்க, “நல்ல அரேஞ்ச்மன்ட்ஸ் போல..” என்று அவரையும் மீறி சொல்ல, தாரா எதுவும் சொல்லவில்லை.

மகளின் முகத்தினில் தெரியும் பூரிப்பையும், புன்னகையையும் தான் பார்த்துக்கொண்டு இருந்தார்.

இந்த புன்னகை இப்போதெல்லாம் அனுராகாவின் முகத்தினில் நிரந்தரமாய் குடிகொண்டு இருந்தது. அது தீபன் சக்ரவர்த்தியினால் என்று நன்கு புரிந்திருந்தது தாராவிற்கு.

இதற்குமேல் அவருக்கு என்ன வேண்டும்??!!

எவன் ஒருவன் மகளுக்கு ஏற்றவன் இல்லை என்ற எண்ணம் பெற்றவர்களுக்கு இருந்ததோ, இன்று அவனையே ‘இவனை விட வேராரும் இவளுக்கு பொருத்தமாய் இல்லை..’ என்று எண்ண வைத்திருந்தனர் இருவருமே..

கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம்.. நேரலை.. இந்த சைக்கிள் பேரணி முடிவதற்கும் இரண்டு மணி நேரம் ஆனது. எப்படி எப்படி எல்லாம் இருந்திட வேண்டும் என்று தீபன் திட்டம் போட்டிருந்தானோ, அவை அனைத்தும் அப்படியே கனகச்சிதமாய் நடந்துகொண்டு இருக்க,

சைக்கிள் பேரணி முடிந்து வந்திருந்தவர்கள் அனைவருக்கும் விருந்தும் பரிமாறப் பட்டது.

ஒரே இடத்தினில் இத்தனை பேருக்கும் உணவு என்பது சற்று சிரமமான விசயமாய் இருக்க, கூட்டத்தினை கடைசியில் ஐந்து பிரிவுகளாய் பிரித்து, வெவ்வேறு இடங்களில் உணவுகள் பரிமாறப்பட, வந்திருந்தவர்கள் அனைவர்க்கும் மனதும் நிறைந்தது, வயிறும் நிறைந்தது.

அனுராகாவும் தீபனும் கூட, ஆட்களோடு ஆட்களாய் அமர்ந்து உண்ண,

“ப்ரோ சும்மா சொல்லக் கூடாது பக்கா அரேஞ்ச்மேன்ட்ஸ்… கண்டிப்பா நாங்க இந்த அளவுக்கு எதிர்பார்க்கல..” என்றனர் வந்திருந்தவர்களில் ஒருசிலர்.

“இவ்வளோ நல்ல அமைஞ்சதுக்கு காரணம் நாங்க இல்ல.. எங்களோட இன்விடேஷனை அக்சப்ட் பண்ணி இவ்வளோ தூரம் வந்து, அழகா கோ ஆபரேட் பண்ண நீங்க எல்லாரும் தான் இதுக்கு ரீசன் ..” என, அங்கே அப்படியொரு கரகோஷம்..

எங்கேயும் தீபன்.. நான்.. எனது.. என்.. என்னுடைய என்ற வார்த்தைகளை உபயோக்கிக்கவே இல்லை.. எங்கேயும் நாம்.. நாங்கள்.. இப்படித்தான் சொன்னான். அதுவே அனைவர்க்கும் அவன் மீது நல் எண்ணம் கொடுக்க, பலர் வந்து அவனோடு செல்பிக்கள் எடுத்துக்கொள்ள, அனுராகா அவனுக்கான இடம் விட்டு தள்ளி நின்று இதனை எல்லாம் பார்த்து ரசித்தாள்.

“நீ வா…” என்று தீபன் அழைத்தமைக்கு கூட,

“நோ தீப்ஸ்.. நமக்கான டைம் நிறைய இருக்கு.. யூ என்ஜாய் திஸ் மொமன்ட்..” என்றுசொல்லி சற்று ஒதுங்கிக்கொண்டாள்.

ஆகமொத்தம் எங்கும் இந்த செய்திகள் தான்.. புகைப்படங்கள் தான். சோசியல் மீடியா அனைத்தும் இவர்கள் தான் நிரம்பி இருந்தனர்.

ஒருவழியாய் அனைத்தும் முடிந்து இவர்கள் வீடு வரவே மாலை ஆகிட, கண்டிப்பாய் உடலில் சோர்வே இல்லை. மனதினில் அப்படியொரு உற்சாகம்.. நேராய் தீபனின் இல்லம் தான் வந்தனர்.

சக்ரவர்த்தியோ “சாதிச்சுட்ட தீபன்…” என்று மகனின் முதுகை தட்ட,

உஷாவோ “சுத்தி போடணும்…” என, பேச்சுக்கள் எல்லாம் சந்தோசமாகவே சென்றது.

உஷாவின் முகத்தினில் இப்போது தான் ஒரு நிம்மதி.. சிறிது நேரம் இருந்துவிட்டு அனுராகா கிளம்புவதாய் சொல்ல,

“ம்மா… நாளைக்கு மதியம் அப்பா அம்மா நீ எல்லாம் லஞ்ச் இங்கதான்.. ஈவினிங்  ஒரு சின்ன பார்டி போல வச்சுக்கலாம்.. சின்னதா ஒரு செலேபிரேசன்.. அப்பா அம்மாக்கிட்ட சொல்லிடு.. நானும் இன்வைட் பண்றேன்..” என்று சக்ரவர்த்தி அனுராகாவிடம் சொல்ல,

“சரி அங்கிள்..” என்று சந்தோசமாகவே கிளம்பிச் சென்றாள்.

தர்மா தான் சென்று அனுராகாவை அவளின் வீட்டினில் விட்டு வர, வீடு சென்ற பின்னும் கூட அனுராகாவிற்கு அப்படியொரு சந்தோசம். லோகேஸ்வரனோடும் தாராவினோடும் அமர்ந்து வெகு நேரம் பேசிக்கொண்டு இருந்தாள்.

சொன்னதுபோலவே சக்ரவர்த்தி நாளைய பார்டிக்கு இவர்களை அழைப்புவிடுக்க, “இனி என்ன மேரேஜ்க்கு ஒன் மன்த் தான் இருக்கு.. வொர்க்ஸ் ஆரம்பிச்சிடலாம்..” என்று லோகேஸ்வரன் சொல்ல, அனுராகாவின் முகத்தினில் சந்தோசப் புன்னகை..

மறுநாளைய பொழுது அனைவர்க்கும் அழகாகவே விடிந்திருந்தது.

அனுராகா மற்றும் அவளின் பெற்றோர் எல்லாம் தீபன் சக்ரவர்த்தியின் வீட்டிற்கு வந்திருக்க, பேச்சுக்கள் சந்தோசமாகவே சென்றுகொண்டு இருந்தது. உஷாவின் முகத்திலும் மலர்ச்சி இருந்தாலும், அடிக்கடி அவரின் பார்வை மாடிப்பக்கம் போய்வர

“என்னம்மா…” என்றான் தீபன்.

“ஒண்ணுமில்லடா..” என,

“எப்பவும் வர்ற ஆள் வரலையா??!! வேற யாரோ வந்த மாதிரி இருக்கே..” என்றான் தீபன்.

“அந்த மோகன் வர்றதில்லைடா.. நான் தான் காதர் கிட்ட சொல்லி வேற ஆள் அனுப்பச் சொன்னேன்..” என,

“ஓ!! ஓகே..” என்றவன் “நீ போய் பார்க்கணும்னா பார்த்துட்டு வாம்மா..” என,

“கொஞ்ச நேரம் போகட்டும்..” என்றவர் சிறிது நேரம் கழித்து மிதுனின் அறைக்குச் செல்ல, அங்கே அப்போதுதான் மிதுன் எழுந்து அமர்ந்திருந்தான்.

சக்ரவர்த்தியோ தீபனிடம் “ரொம்ப சந்தோசமா இருக்கு தீபன். உனக்கு என்ன வேணும் அப்பாக்கிட்ட கேளு.. என்ன செய்யணும் நான்.. சொல்லு உனக்காக நான் அதை பண்றேன்…” என்று கேட்க,

அவனோ அமைதியாய் அனுராகாவின் முகம் பார்த்தான்.

“என்னை ஏன் தீப்ஸ் பார்க்கிற..” என்றாள் அவளும் புன்னகையோடே.

“ம்ம் இன்னொரு நாள் இதைப் பத்தி பேசலாம்ப்பா…” என்று தீபனும் சொல்ல,

“என்னடா நாள் எல்லாம் பாக்குற.. பெருசா எதுவும் கேட்கப் போறியா??” என்று சொல்லி சக்ரவர்த்தி சிரிக்க,

“எதுவா இருந்தாலும் நான் கேட்கிறதை நீங்க கொடுக்கணும் ப்பா..” என்றான் தீபனும்.

“அடேங்கப்பா…” என்றவர், “நீ கேட்டு நான் எதையும் இல்லைன்னு சொன்னது இல்லை. என்ன.. இதுவரைக்கும் எதையும் நீ கேட்டது இல்லை.. இந்த பொண்ண கல்யாணம் பேசுங்கன்னு சொன்னது தவற..” என,

அனுராகாவின் முகத்தினில் அப்படியொரு செம்மை..!!      

உஷா முதல் நாள் இருந்தே மிதுனுக்கு எந்த மாத்திரைகளையும் கொடுக்காது விட, மிதுனைப் பொறுத்தவரைக்கும் உறக்கம் முடிந்து எழுந்து அமர்ந்தது போல் தான் இருந்தது.

ஆனால் அவன் எத்தனை நாட்கள் உறக்க நிலையில் இருந்தான் என்பது அவனுக்குத் தெரியவில்லை..!!

எழுந்து கண்களை மூடி சிறிது நேரம் அமர்ந்திருந்தவன், அவனின் எதிரே வேறு யாரோ புதியவன் இருக்க யோசனையாய் பார்த்தான்.

அதற்குள் உஷா அங்கே வந்துவிட எதுவும் கேட்காதவன் “பிரெஷ் அப் ஆகனும்..” என்றுமட்டும் சொல்ல, உஷா அங்கிருந்தவனைக் காண,

“வாங்க சார்…” என்று அவன் அழைத்துக்கொண்டு சென்றான்.

பத்து நிமிடத்தில் மிதுன் மீண்டும் வந்துவிட, சரியாய் அவனுக்கான உணவும் வந்து இருந்தது. உணவினைப் பார்த்தவனின் பார்வை சட்டென்று கடிகாரம் பார்க்க, அதுவோ மதியம் என்று சொன்னது.

‘இவ்வளோ நேரமா தூங்கினோம்…’ என்றவனுக்கு உண்டால் மட்டுமே எதையும் தெளிவாய் யோசிக்கும் நிலை.

ஆக வைத்திருந்த உணவினை உண்டுவிட, அதன் பின்னே தான் ஒரு தெளிவு பிறந்தது.

“ரொம்ப தூங்கிட்டே இருக்காத..” என்றுமட்டும் உஷா சொல்லிவிட்டுச் செல்ல,

“ரொம்ப தூங்கினேனா??!!” என்றெண்ணியவன் எதிரில் இருப்பவனிடம் “யார் நீ..” என்றான்.

“உங்களுக்கு ஹெல்புக்கு வந்திருக்கேன் சார்..”

“ஹெல்புக்கா??!! நேத்து நீ இல்லையே…”

“சார் நான் வந்து இன்னிக்கோட மூணு நாள் ஆச்சு.. நீங்க புல்லா தூங்கிட்டே இருந்தீங்க..” என்றவன் சொல்ல,

“வாட்??!!” என்றான் அதிர்ந்து.

“ஆமா சார்…”

“அப்.. அப்போ மோகன்??!!” என,

“யார் சார் அது??” என்று பதிலுக்கு அவன் கேட்க,

“ஏய்.. ஏய்…” என்று பதறி எழுந்தவன், “உன்னை யார் அனுப்பினா??” என்று விசாரிக்க,

“பார்த்து சார்..” என்று அவனைப் பிடித்தவன் “காதர் அண்ணா தான் அனுப்பினார்..” என, நொடியில் புரிந்துபோனது மிதுனுக்கு..

ஏமாந்துவிட்டோம்.. ஏமாற்றப்பட்டுவிட்டோம்…. இதுவே அவன் மனதில் ஓட,

“ஓ… நோ…!!” என்றவனுக்கு இவர்களை சும்மா விடுவதா என்று ஆத்திரம் கிளம்பியது.

“என்.. என்னை வெளிய கூட்டிட்டு போ..” என்று அடிக்குரலில் சீர,

“இல்ல சார் அம்மா சொல்லாம வெளிய வரக்கூடாது…” என்று அவன் சொல்ல,

“டேய்..!!! நான் சொல்றேன்ல.. வெளிய கூட்டிட்டு போ…” என்றான் ஆங்காரமாய்.

“இருங்க சார்.. அம்மாட்ட கேட்டுட்டு வர்றேன்..” என்று அந்த புதியவன் வெளியே வர, அதே வேகத்தில் மிதுனும் அவனின் பின்னேயே வெளி வர,

“சார்…” என்று அவனைப் பிடித்து நிறுத்தும் முன்பே, மிதுன் வேகமாய் படியிறங்கப் போக,

“சாரி நில்லுங்க சார்…” என்று பின்னே வந்தவன் கத்தும் போதே, வேகமாய் இறங்குகிறேன் என்று இறங்கியவன் படிகளில் உருளத் தொடங்கியிருந்தான்.

உடலில் ஏற்கனவே இருந்த தள்ளாட்டம், தளர்ச்சி எல்லாம் ஒன்று கூடி மிதுனை மேலும் நிதானம் இழக்கச் செய்ய, படிகளில் உருண்டுகொண்டு இருந்தான்.

சத்தம் கேட்டு அனைவரும் வந்து பார்க்கையில் மிதுன் கீழே விழுந்திருக்க, உடல் முழுவதும் ரத்தம். காயம் எங்கே, ரத்தம் எங்கிருந்து வருகிறது என்பது எல்லாம் அறிய முடியவில்லை.

“சார் வேண்டாம்னு சொல்ல சொல்ல வேகமா வந்தார் சார்..” என்று பின்னே வந்தவன் பதறிப் போய் சொல்ல, அவன் முகத்தினில் அப்பட்டமாய் ஓர் பயம்.                             

அனுராகா திகைப்பில் இருக்க, தீபனுக்கும் கூட வார்த்தைகள் இல்லை அந்நேரம். கண் முன்னே ரத்த வெள்ளம். சக்ரவர்த்தி உஷா எல்லாம் ஸ்தம்பித்து நின்றிருக்க, தாராவும் லோகேஸ்வரனும் கூட ஆடித்தான் போயினர்.

கண் முன்னே இப்படியொரு காட்சி எனில் யாரால் தான் இயல்பாய் இருக்க முடியும். அந்த நொடி என்ன செய்வது என்றுகூட யாருக்கும் ஒன்றும் தோன்றவில்லை.

தீபன் சற்று சுதாரித்தவன் “மிதுன்..” என்று அருகே செல்ல, அவனிடம் எவ்வித அசைவும் இல்லை.

உஷாவின் கண்களில் இருந்து நீர் வழிய, அதன் பின் வேக வேகமாய் எல்லாம் நடந்தது.

மிதுன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, யாராலும் ஒரு அமைதியில் இருந்திட முடியவில்லை..

மருத்துவர்கள் பரிசோதனை செய்து, “நல்ல அடி… நாளைக்கு ஈவ்னிங் வரைக்கும் பாப்போம்…” என்றுவிட்டனர்.

நாளை என்பது இரண்டு நாட்கள் ஆகிய பின்னும் மிதுன் கண் விழிக்கவில்லை. தலை பகுதியில் அடி அதிகமாய் இருக்க, என்ன முயன்றும் எவ்வித மருத்துவமும் பலன் அளிக்கவில்லை.

தீபன் முழு நேரமும் மருத்துவமனை வாசம் தான். இந்த மிதுன் எப்படி வேண்டுமானாலும் எண்ணியிருக்கட்டும், ஆனால் தீபன் அப்படியில்லையே.

அன்றைய தினம் இரவு அவன் அங்கிருக்க, நர்ஸ் வந்தவர் “சார் லேசா மூவ்மென்ட் தெரியுது..” என்று சொல்ல,

“நிஜமாவா??!!” என்று கேட்டபடி தான் எழுந்து போனான்.

மிதுனிடம் லேசாய் ஓர் அசைவு.. கண்களில் மட்டும்.. உதடுகள் எதையோ பேச முற்பட,

“மிதுன்.. டேய்.. அண்ணா..” என்று நிஜமாய் பதறித்தான் அழைத்தான் தீபன் சக்ரவர்த்தி.

இடையில் நடந்திருந்த அனைத்துமே காணாது போயிருக்க, அந்த நொடி இந்த மிதுன் கண் விழித்து சரியாகி வந்து நேருக்கு நேர் நின்று எதிர்க்கட்டும் என்று தான் தோன்ற,

“என்னடா…” என்றான் ஆதுரமாய்.

“எ… என்ன.. எ… கொன்னுடு..” என்று இதழ் அசைக்க, தீபனுக்கு ஒன்றும் விளக்கவில்லை.

“மிதுன் என்னடா??!!” என்றவன், அவனின் அருகே நெருங்கிக் கேட்க,

“நீ போடுற இந்த உயிர் பிச்சை எல்லாம் எனக்கு வேணாம்.. கொன்னுடு…” என,

“மிதுன்…” என்றான் தீபன் அதிர்ந்து..

“உன்கிட்ட தோத்து போனவனா நான் இருக்க விரும்பல..” என்றவனுக்கு பேசிக்கொண்டு இருக்கும் போதே, உடல் தூக்கிப் போட

“டாக்டர்…” என்று கத்திவிட்டான்.

மருத்துவர்கள் வேகமாய் வந்து பரிசோதிக்க, எப்பயனும் இல்லை.

“மார்னிங் கண் விழிச்சா பெட்டர்..” என்றுவிட,                

“பாரின்ல ட்ரீட்மென்ட் பண்ணலாமா??” என்றான் தீபன்.

“சார் எங்க போனாலும் இதே ட்ரீட்மென்ட் தான்.. பாரின் டாக்டர்ஸ் வேணும்னா வர சொல்லலாம்..” என்று, அடுத்த இரண்டு நாட்களில் அவர்களும் கூட வர, இப்படியே ஒருவாரம் கடந்துவிட்டது.

மிதுனிடம் எவ்வித அசைவும் இல்லை…     

கோமா என்றார்கள்..

அனைவருக்கும் திக்கென்று இருக்க “என்ன சொல்றீங்க..” என்றார் சக்ரவர்த்தி.

“எஸ் சார்.. கோமா.. நாளைக்கே கூட சரியாகலாம்.. இல்ல ஒரு மாசம் ஆகலாம்.. ஒரு வருஷம் கூட ஆகலாம்.. டைம் டியூரேசன் இல்ல..” என, யாருக்கும் பேச்சே வரவில்லை.

எப்படி இப்படி?!!

ஏன் இப்படி??!!

இதுவே அனைவருள்ளும்.

உஷாவிற்கு அழுகை வந்ததுதான். ஆனால் அதிகம் இல்லை. கடைசி கடைசி என்று மகனின் கொடூர முகத்தினைக் கண்டவர் அல்லவா..

இவன் நல்முறையில் இருந்து தினம் தினம் இவனால் பிறர் அவதிப்பட, இப்படி இருப்பதே மேல் என்ற எண்ணம் வந்தது.

சக்ரவர்த்தி தான் புலம்பித் தள்ளினார்.

இதற்கிடையில், தேர்தலில் அமோக வெற்றிப்பெற்று, மீண்டும் மந்திரியாகி இருந்தார். ஆனால் அந்த மகிழ்ச்சியைக் கூட அவரால் அனுபவிக்க முடியவில்லை. முடியவில்லை என்பதனை விட, இப்போது அது பெரிதாய் தோன்றவில்லை.

பிறரின் பார்வைக்காக வெளியே தைரியமாய் இருப்பதுபோல் இருந்தார்.

மருத்துவமனையில் எப்படியான மருத்துவ வசதிகள் எல்லாம் இருக்குமோ அதுபோல தயாரானது மிதுன் சக்ரவர்த்தியின் அறை. எப்போதும் உடன் இருக்க ஒரு மருத்துவர் அமர்த்தப் பட, வீட்டில் சில நாட்கள் அப்படியொரு அமைதி நிலவியது.

தீபனுக்கு மிதுன் சொன்ன வார்த்தைகளை ஜீரணிக்கவே முடியவில்லை. இவன் மனதில் இப்படியொரு குரோதம் வர தான் அப்படி என்ன செய்தோம் என்று யோசித்து யோசித்தே மௌனியாகிப் போனான்.

அவன் மனதில் இருப்பவைகளை அனுராகாவிடம் மட்டுமே பகிர்ந்துகொள்ள, இப்போது அனுராகாவிற்கு தீபனை சரி செய்வதே வேலையாய் இருந்தது.

அவன் – இதுவோ என் விதி??

அவள் – இதுவும் கடந்து போகும்..

காதல் – நம்ம என்ன சொல்றது??!! யோசிப்போம்….            

Advertisement