Advertisement

நான் இனி நீ – 41

உஷாவிற்கு தீபன் அனுராகாவிடம் நேரில் சென்று பேசிய வந்தபிறகுதான் மனது அமைதி கொண்டது. எங்கே மீண்டும் இருவரும் முறுக்கிக்கொண்டு வெவ்வேறு திசையினில் நிற்கப் போகிறார்களோ என்ற எண்ணம் வெகுவாய் தோன்றிவிட, மனதளவில் கொஞ்சம் ஆடித்தான் போனார்.

ஒரு அம்மாவாய், அவருக்கு மிதுனின் விசயம் பேரிடியாய் இருந்தது. அதிலும் இப்போதெல்லாம் அவன் பெரும் அமைதியாய் இருக்க, உஷாவிற்கு ‘அவனே சற்று யோசிக்கட்டும்..’ என்றுகூட தோன்றியது.

மனதில் ஒரு நம்பிக்கைக் கூட ‘தன் பிள்ளை தடுமாறினாலும் தவறாய் போய்விட மாட்டான்..’ என்று.

இது எந்த அம்மாவிற்கும் இருக்கும் ஒன்றுதானே..!!

அதிலும் இப்போது சக்ரவர்த்தியோ டெல்லி சென்றுவிட, தீபன் பொதுவாய் வீட்டினில் இருந்தாலும் அவனுக்கு நிறைய வேலைகள் இருந்தது. இந்த சைக்கிள் பேரணி வேலை என்பது முழுக்க முழுக்க அவன் மட்டுமே செய்வதால் எப்போது வருகிறான், எப்போது செல்கிறான் என்றெல்லாம் சொல்லவே முடியவில்லை.

நாகாவும் தர்மாவும், தீபன் சென்று அனுராகாவிடம் பேசிவிட்டு வந்த பின்னர் தான் அவன் சொல்லும் வேலைகளை உருப்படியாய் செய்யத் தொடங்கினர்.

“பார்த்தியா இவனுங்களை.. அப்பா சொல்றதை கூட செய்யமாட்டானுங்க.. இப்போ இப்படி ஆகிட்டாங்க..” என்று அனுராகாவிடமும் சொல்ல,

“சொல்றமாதிரி சொல்லிருந்தா கேட்டிருப்பாங்க..” என்று புன்னகைத்தாள் அவள்.

“அதெப்படி.. அவனுங்களுக்கு புரியாத வார்த்தை எல்லாம் சொல்லி திட்டினதுனாலயா..” என்று தீபனும் சிரிக்க,

“ஓ!! காட் .. இதெல்லாமா சொல்லிருக்காங்க..” என்றவள், “ஆனாலும் தீப்ஸ்.. இவனுங்களுக்கும் சீக்கிரம் பொண்ணு பார்த்து மேரேஜ் பண்ணி வச்சிடு..” என,

“அடப்பாவி..!!!” என்று பார்த்தான் தீபன் சக்ரவர்த்தி.

“பின்ன…. நம்ம எங்க போனாலும் அப்போவும் எல்லாம் இவனுங்களை கூட்டிட்டு சுத்த முடியாது..” என்றவள், என்ன நினைத்தாளோ, காரில் வருகையில் தர்மாவிடம் கூட சொன்னாள்.

“சீக்கிரம் நீங்க ரெண்டு பேரும் மேரேஜ் பண்ணிக்கோங்க..” என, தர்மாவோ தீபனைக் காண,

“எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைப்பா..” என்றான் இரண்டு கைகளையும் உயர்த்தி.

தீபன் வெளியே இலகுவாய் இருப்பது போல் காட்டிக்கொண்டாலும், வீட்டிற்கு வந்ததுமே அவனுள் ஒரு இறுக்கம் பரவிக்கொள்ளத்தான் செய்தது.

காரணம் மிதுன்..!!

அவனை எத்தனை நாட்களுக்கு இப்படியே அரை மயக்க நிலையிலேயே வைத்திருக்க முடியும்??!!

அவன் என்ன செய்கிறான், என்ன செய்கிறான் என்று கண்காணிப்பதே பெரும் அவஸ்தை கொடுத்தது. ஆட்கள் மாற்றி மாற்றி அவனின் காவலுக்கு என்று வைத்து, இரண்டு நாட்களுக்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனைச் செய்து, என்று எப்போதுமே மிதுன் இவர்களை எல்லாம் ஒருவித பதற்றத்தில் தான் வைத்திருந்தான்.   

உஷாவிற்கு மிதுன் மீது கோபம் இருந்தாலும் கூட, மருத்துவர்கள் வந்து செல்கையில் எல்லாம்  அவரின்  பார்வையும், முகமும் காட்டும் பாவனை  தீபனை நிம்மதியிழக்கச் செய்தது.

உஷாவினை சற்று கூர்ந்து கவனித்துப் பார்த்ததில், அவர் முகத்தினில் முன்பிருந்த அந்த உற்சாகம் இப்போதில்லை. அனுராகாவிடம் மட்டுமே அவர் நல்ல முறையில் பேசுகிறார். இவர்களின் திருமண பேச்செனில் அவரின் முகத்தில் ஒரு மலர்வு வந்து போகிறது.

மற்ற நேரமெல்லாம் அமைதியாய் இருக்கிறார். வீட்டில் முன்பானால் ஏதேனும் வேலைகள் சொல்லிக்கொண்டு இருப்பார் வேலையாட்களை.. இல்லையேல் தோழிகளை காண என்றோ இல்லை சும்மாவேனும் கூட காரில் வெளியே சென்று வருவார்.

ஒரு மத்திய அமைச்சரின் மனைவிக்கு வேலைகளா இருக்காது.. ஆனால் இப்போதோ.. வீடே கதி… அதிலும் உணர்வுகளற்ற முகத்துடன். யாரும் ஏதேனும் கேட்டால் மட்டுமே பதில் என்கிற நிலையில் இருக்க, 

அனுராகா கூட தீபனிடம் சொல்லித்தான் வைத்திருந்தாள் “ஆன்ட்டியோட கொஞ்சம் டைம் ஸ்பென்ட் பண்ணு தீப்ஸ்..” என்று.

அவனுக்குமே மனதினில் உறுத்தல் இருந்துகொண்டே தான் இருந்தது. அம்மாவின் எண்ணங்கள் எப்படியிருக்கும் என்று இதுவரைக்கும் அப்பாவும் கேட்கவில்லை. தானும் அப்படி இருந்திட முடியாது என்றெண்ணினான். தனக்கு அவன் எத்தனை தீங்கிழைத்தாலும், அம்மாவிற்கு அவனும் மகன் என்ற எண்ணம் வர, அப்போதுதான் தீபன் வீட்டிற்கு வந்திருக்க, உஷாதான் உணவு எடுத்து வைத்தார். அதுவும் கூட தீபனே சென்று “ம்மா எனக்கு சாப்பாடு போடு..” என்று சொல்லவும் தான் எழுந்து வந்தார்.

முன்னெல்லாம் இப்படி அழைத்தால் “நீ கண்ட நேரத்துக்கு வருவ, அப்போல்லாம் நான் எழுந்து வந்து சாப்பாடு போடணுமா??!!” என்று ஏதாவது பேசுவார்.

இன்றோ “ம்ம்..” என்றவர் வேறெதுவுமே சொல்லாது வந்து பரிமாற, “நீ சாப்பிட்டியாம்மா..” என்றான்.

அவ்வார்த்தைகள் கேட்டு, ஜக்கில் இருந்த நீரை ஊற்றிக்கொண்டு இருந்த உஷாவின் கை அப்படியே நிற்க, பார்வையோ தன் இளைய மகனை டக்கென்று பார்க்க,

“ம்மா என்னம்மா..” என்றான்.

“இல்ல ஒண்ணுமில்ல..” என்றவர், “நீ சாப்பிடு…” என,

“ம்மா நீ சாப்பிட்டியா??!!!” என்றான் அழுத்தமாய்.

“ம்ம் ஆச்சு..”

“அப்பாக்கிட்ட பேசினியா??!!” என்று அடுத்த கேள்விக்கு போக,

“ம்ம்ச் டேய் உனக்கு இப்போ என்ன வேணும்.. சாப்பிடனும்னா சாப்பிடு.. இல்லையா எழுந்து போ.. சும்மா என்னை கேள்வி கேட்டுட்டே இருக்காத..” என்று எரிந்து விழ,

“ம்மா.. என்னம்மா..” என்றவன், அவரின் கை பற்றி அமர வைக்க,

“என்னாச்சு உனக்கு.. எல்லாம் புதுசா பண்ற..” என்றார் கேள்வியாய்.

“புதுசோ பழசோ. நீ என் அம்மா.. அது மாறாது..” என்று அவனும் சொல்ல,

“ம்ம்..” என்று ஒரு வெறுமை கலந்த ஒலி மட்டுமே அவரிடம் பதிலாய் இருந்தது.

“என்னம்மா?? வர வர நீ ரொம்ப டல்.. முன்னாடி இப்படி இல்ல..” என்று நிஜமாகவே தீபன் வருத்தமாய் சொல்ல,

“முன்ன நடக்காதது எல்லாம் இப்போ நடக்குதே.. அப்போ எப்படி நான் அதேமாதிரி இருக்க??” என்று உஷாவும் அசராது கேட்டார்.

இதற்கு அவன் என்ன பதில் சொல்வான்.. அவன் போக்கில் அவன் இருந்தான். இதுநாள் வரைக்கும் பேர் புகழ் பதவி என்று எதற்கும் ஆசைப்பட்டது கிடையாது. அவன் விரும்புவது  எல்லாம் அனுராகா என்ற ஒருத்தியை மட்டுமே.

ஆனால் காலம் அவனைச் சுற்றி போட்ட சதிராட்டம், அவனுமே தன் வாழ்வில் தான் நிலைத்து நிற்க பல சூழ்ச்சிகள் செய்யும் நிலை.

வேறு வழியும் இல்லையே..!!

ஒரு மௌனத்தினூடே தீபன் உண்டுகொண்டு இருக்க, உஷாவும் அமைதியாகவே அமர்ந்திருந்தார். தீபன் உண்டு முடிக்கும் வரைக்கும் காத்திருந்தாவர்

“டாக்டர் வந்துட்டு போனார்…” என,

“ம்ம் என்ன சொன்னார்ம்மா..” என்றான் கொஞ்சம் யோசனையோடு.

இதுநாள் வரைக்கும் மருத்துவர் வந்து செல்வது பற்றியெல்லாம் உஷா சொன்னதில்லை, இப்போது சொல்ல, தீபனும் என்னவென்று கேட்க,

“அவனுக்கு ப்ரெஷர் கொஞ்சம் ஜாஸ்தியா இருக்காம்.. இப்படியே நார்மல் பெர்சன செடேசன்லேயே வைக்கக் கூடாது.. வேற மாதிரி ஹெல்த் இஸ்யூஸ் கொண்டு வரும்னு சொல்லிட்டு போறார்..” என, இது தீபன் எதிர்பார்த்து இருந்தது.

எத்தனை நாளைக்கு மிதுனை இப்படி வைத்திருக்க முடியும்??!!

யாரின் ஆயுள் வரைக்கும்??!

அவனினதா, இல்லை இவனினதா??!! சாத்தியமா இது??!!

“ம்ம்ம்…” என்றபடி வந்து மீண்டும் அமர்ந்தவன், “நீயே சொல்லும்மா என்ன செய்யலாம்..” என்றான் உஷாவின் முகம் பார்த்து.

“என்ன?? என்னைக் கேட்டா??!!” என்று உஷா படபடக்க,

“ம்மா.. ரிலாக்ஸ்.. நான் உன்னோட பேசணும்னு தான் வந்தேன்..” என்றவன், அவரின் கைகளை பிடித்து இறுகப் பற்றிக்கொண்டவன் “நம்ம இன்னம் எத்தனை நாளைக்கு அவனை இப்படி வச்சிருக்க முடியும்?? பாசிபிள் இல்லைதானே.. விஷயம் வெளிய போகாம இருக்கிற வரைக்கும் சரி.. போச்சுன்னா.. மறுபடியும் பிரச்னைகள் தான்..” என்றான் நிறுத்தி நிதானமாய்.

“இதெல்லாம் நீ உன் அப்பாக்கிட்ட பேசு தீபன். என்கிட்டே வேணாம்.. அவன் விசயத்துல என் மனசு அப்படியே நின்னு போச்சு…” எனும்போதே உஷாவிற்கு கண்கள் கலங்கிப் போனது..

“ம்மா..!!” என்று அவரின் கன்னம் வருடியவன், “நீ பேசுறியா??” என்றான்.

 “யார்க்கிட்ட..?” தெரிந்துகொண்டே உஷா கேட்க,

“மிதுன்கிட்ட ம்மா.. நீ பேசு.. தொடர்ந்து வேணாம்.. அப்பப்போ.. நம்ம யாருமே அவனைக் கண்டுக்கலன்னு அதுவே அவனுக்கு மனசுல நெகடீவ் தாட்ஸ் கொடுக்கும்.. சோ நீ பேசு.. அப்பப்போ.. சப்பிடுறப்போ நீ கூட இரும்மா..” என, உஷாவின் முகத்தினில் எவ்வித உணர்வுகளும் பிரதிபலிக்கவில்லை.

அமைதியாகவே இருக்க, “என்னம்மா.. அவன் பண்ணது எல்லாம் இருக்கட்டும்.. அதெல்லாம் ஒரு சைட்.. பட் இது உனக்காக.. அட்லீஸ்ட் உன் முகத்துல அந்த பழைய ப்ரிஸ்க் வரணும்.. அதுக்காக..” என,

“அவனோட என்னை என்னடா பேச சொல்ற..” என்றார் உஷா.

குரலில் ஒரு நிமிர்வு தன்னைப்போல் வந்திருக்க, “என்னவேனா பேசும்மா.. உன்னோட இஷ்டம்..” என்றான் மகனும்.

“ம்ம் சரி.. பாக்குறேன்..” என்றவர் அடுத்து எழுந்து சென்றுவிட, வெகுநேரம் தீபனும் யோசனைகளின் பிடியில் அமர்ந்திருந்தான்.  

இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த கட்டுக்காவல்??!!

இதுவும் ஒருவகை சுயநலச் செயலாய் தான் அவனுக்குத் தோன்றியது. மிதுன் தங்களை எதிர்க்க வேண்டுமென்றால் எதிர் நின்று எதிர்க்கட்டும். அவனை இப்படி வீட்டினில் முடக்கி வைத்து, தாங்கள் வெளியே நிமிர்வாய் அலைவது நினைக்கவே கோழைத்தனமாய் இருந்தது.

யோசித்தபடி இருந்தவன், பின் மருத்துவருக்கு அழைத்துப் பேச, “கொஞ்சம் ப்ரேக் விடுங்க தீபன்.. மிதுனுக்கும் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ண டைம் கொடுங்க.. ரொம்ப ரெஸ்ட்ரிக்ட் பண்ணவேண்டாம்…” என,

அடுத்து சக்ரவர்த்தியிடமும் பேசினான் “ப்பா.. டாக்டர் இப்படி சொல்றார்..” என்று சொல்லி, அவன் மனதில் இருப்பதையும் சொல்ல,

“எனக்கு மட்டும் என்ன ஆசையாடா அவனை இப்படி பண்ணனும்னு.. எப்படி இருந்தான்.. நான் எவ்வளோ பெருமை பட்டேன்..” என்று சக்ரவர்த்தியும் நிஜமாகவே வருந்த,

“சரிப்பா.. என்ன செய்யலாம்..” என்றான் அப்பாவிடம்.

இனி மிதுன் விசயத்தில் அவன் முடிவுகள் எடுப்பதாய் இல்லை. அப்பா என்ன சொல்கிறாரோ அதுதான்.

“நான் யோசிச்சு சொல்றேன் டா..” என்ற சக்ரவர்த்தி அடுத்த ஒருமணி நேரத்திலேயே அழைத்தும் விட்டார்.

“ஸ்லீபிங் டோஸ் நைட் மட்டும் கொடுக்கச் சொல்லு.. தூங்கி எழட்டும்.. பகல்ல வீட்டுக்குள்ளையே அவன் என்ன செய்யணுமோ செய்யட்டும்.. இப்போ இருக்க ஆளுங்கள மாத்திடலாம்.. அம்மாவ பேச சொல்லு அவனோட.. புதுசா யாரையாவது அவனோட பேச்சுத் துணைக்கு போடலாம்..” என, சரிப்பா என்றவன் அவர் சொன்னதுபோலவே அனைத்தையும் செய்தான்.              

இதோ அப்படியும் மூன்று நாட்கள் கடந்துவிட, மிதுனுக்கு முதலில் தன்னைச் சுற்றி நடக்கும் மாற்றம் புரிய நேரம் பிடித்தது. அறைக்கே வராது இருந்த உஷா இப்போது வருகிறார். அவனோடு பேசுவது இல்லை என்றாலும், உணவு கொண்டு வந்து வைத்துவிட்டுப் போவது அவர்தான்.

மிதுனின் காவலுக்கு என்று இருக்கும் இருவர் போய் இப்போது ஒருவன் இருந்தான். புதியவன். அவன் பெயர் கூடத் தெரியாது. மிதுனுக்கு அனைத்தும் செய்வது அவன்தான்.

இரண்டு நாட்களுக்கு ஒருமுறை ஆட்கள் சுழற்சி முறையில் மாறுவர். அப்படித்தான் மிதுனும் நினைத்திருக்க, இவனே மூன்றாவது நாளும் வர, கேள்வியாய் அவனைக் கண்டான்.

“என் பேரு மோகன் சார்..” என,

“ம்ம்…” என்று சொல்லிக்கொண்டவன் வேறெதுவும் கேட்கவில்லை.

இவன் எப்படி என்று ஆழம் பார்க்க எண்ண, சில பொதுவான பேச்சுக்கள் மட்டுமே. அதுவும் கூட வீட்டில் இருப்பவர்களைப் பற்றி அல்ல, வெளி உலகம் பற்றி.

அப்படி பேசும்போதுதான் மோகன் சொல்லித் தெரிந்தது தீபனின் இந்த சைக்கில் பேரணி.

‘என்னை இப்படி படுக்க வச்சிட்டு நீ பாராட்டு வாங்கப் போறியா டா..’ என்று உள்ளம் கொதித்தவன், மேலோட்டமாய் என்று என்ன எப்போது என்று மட்டும் விபரங்கள் தெரிந்துகொள்ள, அடுத்து வந்த இரண்டு நாட்களும் கூட எப்போதும் போலவே போனது.

உஷாவும் மூன்று வேலையும் அவனின் அறைக்கு உணவு கொண்டு வர, மருத்துவர்கள் வந்தால் உடன் வந்திருந்து பார்க்க, என்று இருக்க, மிதுனும் தானாக எதுவும் பேசவில்லை.

உடல் மெலிந்து, முகமே முன்னிருந்த பொலிவில் இல்லாது எப்போதும் யோசனையாகவே இருப்பவனைக் காண உஷாவிற்கு எண்ணத் தோன்றியதோ, அன்று அவன் உண்டு முடிக்கும் வரைக்கும் அங்கேயே இருந்தார்.

“நான் பார்த்துக்கிறேன் மேடம்..” என்று மோகன் சொன்னதற்குக் கூட, “இல்ல இருக்கட்டும்..” என்று சொல்லிவிட்டார்.

மிதுன் ஆச்சர்யமாய் அம்மாவின் முகம் பார்க்க “தட்டு பார்த்து சாப்பிடு..” என்றுமட்டும் உஷா சொல்ல, அங்கே பெருத்த மௌனம்.

மிதுன் உண்டு முடிக்கவும், வேலையாளை அழைத்து அனைத்தையும் சுத்தம் செய்யச் சொல்லிவிட்டு, உஷாவும் கீழே சென்றுவிட,

மோகன் “சார் வேற எதுவும் வேணுமா??!!” என்றான் சிரித்த முகமாகவே.

அவனை ஆழ்ந்து பார்த்தவன், ‘வேண்டாம்..’ என்று தலையை ஆட்டி, நக்கலாய் ஒரு புன்னகை செய்ய,

“என்ன சார்?” என்றான் மோகன்.       

 “ஹா ஹா உன்ன நினைச்சா எனக்கு சிரிப்பா இருக்கு..” என்று மிதுன் மேலும் சிரிக்க,

மோகன் கேள்வியாய் பார்க்க,  “என்ன?? புரியலையா?? சொந்த மகன் எனக்கே இந்த நிலைமைன்னா உன்ன நினைச்சு பாரேன்..” என்று மிதுன் சொல்ல,

எதிரில் இருப்பவனுக்கு குழப்பம் ஒருபுறம், பயம் ஒருபுறம் எழுந்தது.  என்ன சொல்கிறான் இவன் என்று. அப்போதும் அவன் அமைதியாய் இருக்க,

“என்னைப் பார்த்துக்கணும்னு தான் வந்திருக்க.. ஆனா பாரேன் இந்த வேலைல உன் உயிருக்கு உத்திரவாதம் இல்லையே..” என்று மிதுன் பேச,

“இல்ல.. அப்.. அப்படில்லாம் இல்ல சார்..” என்றான் மோகன்.

“அப்படியில்லன்னு உனக்கு நல்லாத் தெரியுமா..?? இதுக்கு முன்ன  இரண்டு இரண்டு பேர் மாத்தி மாத்தி எனக்கு காவல் இருந்தாங்க.. ஆனா இப்போ  நீ திடீர்னு புதுசா வந்திருக்க.. அந்த ரெண்டு பேருக்கும் என்னாச்சுன்னாவது தெரியுமா உனக்கு??”

“ம்ம்ஹும்.. மினிஸ்டர் வீட்ல வேலைன்னு சொன்னாங்க.. அதான்..” பார்ப்பதற்கு அஜானுபாகுவாய் இருந்தாலும், மோகனின் கண்களில் மிதுன் எதிர்பார்த்த குழப்பம் மிக நன்றாய் தெரிந்தது.

“வேலைதான்.. ஆனா இந்த வேலை முடிஞ்சதும்  நீ உயிரோட இருக்க மாட்ட..”

“சார்..!!!”

“நல்லா பாரு.. சொந்த மகன்.. நானே.. அவங்க சொல்றதை கேட்கலைன்னு தினமும் பாதி நேரம் இன்ஜக்சன் இல்லை மாத்திரை கொடுத்து படுக்க வச்சிடுறாங்க.. நீயல்லாம் எம்மாத்திரம்..”

“அப்படில்லாம் இல்ல சார்..” என்றான் தைரியம் கூட்டி.

“அப்படியா??!!” என்ற மிதுன், அவனை ஆழம் பார்க்க, “ஆமா சார்.. அப்படியெல்லாம் இல்ல.. நீ.. நீங்க சும்மா என்னை டென்சன் பண்ணவேண்டாம்..” என,

“ஓ..!! சரி அப்போ இன்னொரு கதை சொல்லவா??!!” என்றான் மிதுன்.

“கதையா??!!”

“எஸ்.. கதை தான்… எல்லாமே கதை தான்.. முடிவு மட்டுமே இனி மிச்சம் இருக்கிற ஒரு கதை. ஆனா அந்த முடிவு யாரோடதுன்னு முடிவு பண்றது இப்போ உன் கைல..” என,

“நானா..??”

“எஸ்…”

“யா.. யாரோட முடிவு…” என்று திக்கினான் மோகன்.

“நான்.. அப்புறம் தீபன்.. அப்புறம்…” என்று மிதுன் இழுக்க,

“அ.. அப்புறம்…??!!!” என்று கேட்டவனுக்கு நா வரண்டது..

“நீ…. உன்னோட முடிவும் கூட..” என

“நானா??!!” என்று அதிர்ந்தான் அவன்.

“எஸ்.. நீயே தான்.. நான் சொல்றதை செய்யலைன்னா உன்னோட முடிவுங்கிறது உறுதி…” என்ற மிதுனின் கண்கள் சாத்தானின் சிரிப்பைத்தான் சிந்தியது.

“சார்..??!!!” என்று அவன் பயந்து எழுந்துவிட,

“ஹா ஹா.. என்ன பயந்துட்டியா??!!” என்றவன் “நான் சொல்றதைக் கேட்டா நீயும் தப்பிக்கலாம்.. நானும் தப்பிப்பேன்..” என,

“இல்ல சார்.. இது.. இதெல்லாம் ..” என்று மோகன் இழுக்கும் போதே,

“சரி உனக்கு உயிர் வாழ விருப்பம் இல்லை போல..” என்றவன் மெதுவாய் கட்டில் விட்டு எழ, மோகனும் கூட பயத்தில் எழுந்துவிட்டான்.

“ஈசி.. கூல்.. கூல்.. வேற ஒன்னும் நீ செய்யவேண்டாம்..” என்றவன் அவனின் அருகில் வந்து “நாளைக்கு நீ வர்றப்போ எனக்கு ஒரு கண்டெய்னர் லாரி டிரைவர் போன் நம்பர் மட்டும் கொண்டு வா.. மத்தது எல்லாம் நான் பார்த்துக்கிறேன்..” என,

“எ.. எதுக்கு??!!” என்றான் மோகன் திக்கித் திணறி.

“ஹா ஹா..” என்று சிரித்தவன் “அது நாளைக்குத் தெரியும்.. செல் போன் இருக்கா உன்கிட்ட..” என்று அடுத்துக் கேட்க,

“இல்ல.. கீழே வாங்கி வச்சுப்பாங்க..” என்று அவன் சொல்ல, “ம்ம் நாளைக்கு வர்றப்போ நீ அந்த போனையும் மேல கொண்டு வர்ற..” என்றவன்,

“இது நீ செய்யலைன்னா.. நாளைக்கு நைட் நீ திரும்ப உன்னோட வீட்டுக்கு போக மாட்ட..” என்றவனின் முகத்தில் தான் எப்படியானதொரு வெறித்தனம்.       

Advertisement