Advertisement

                           நான்  இனி நீ – 37

மிதுனுக்கு ஒன்று புரியவில்லை. தான் இப்படி பிடிவாதமாய் இருப்பதன் மூலம், தன் குடும்பத்தினர் மொத்தமாய் தன்னை வெறுக்கத் தொடங்கிவிட்டனர் என்று. இப்படி செய்தால், ஏதாவது ஒரு வழியில் தன்னை அவர்கள் சமாதானம் செய்ய எண்ணுவார்கள், அப்பாவும் தம்பியும் இல்லை என்றாலும் கூட, அம்மா வந்து பேசுவார் என்று பார்க்க, உஷாவோ அவன் இருந்த அறைப் பக்கம் எட்டியும் பார்க்கவில்லை.

அவனுக்குத் தெரியும், உஷாவை எதிலாவது சிக்க வைத்தால், தன்னைப்போல் அப்பாவும் தம்பியும் வழிக்கு வருவர் என்று.

ஆனால் அவனே நினைக்காத ஒன்று.. இதில் அனுராகாவின் பங்கு.

என்னதான் உறக்க நிலை என்றாலும், இருபத்தி நான்கு மணி நேரமும் அப்படி இல்லை தானே. அவ்வப்போது அறையினுள் மட்டுமல்ல, வீட்டினுள்ளும் நடமாடினான். ஆக ஓரளவு நடப்பது எல்லாம் அவனுக்குப் புரிந்து தான் இருந்தது.

தீபன் சரணடைவது சற்று அதிர்ச்சியைக் கொடுத்தது.

இப்படியொரு கோணத்தில் அவன் நினைத்துப் பார்க்கவில்லை. யாரிடமும் வெளியே தொடர்பு கொள்ள முடியவில்லை. இருந்தும் அவன் என்ன எதிர்பார்த்தானோ அதுதான் நடக்கிறது என்பது புரியவும், அமைதியாய் அவனுக்கான நேரம் வரும் என்று காத்திருந்தான். அனுராகா உள்ளே வந்தது, தீபன் சரணடைந்தது இதற்கு பின்னே நிச்சயம் ஏதேனும் ஒரு வலுவான காரணம் இருக்கும் என்றெண்ணினான்.

நடக்கும் இத்தனை களேபரங்களில் இருந்து வெளிவர, அப்பா நிச்சயம் தன்னிடம் பேசுவார் என்று பார்க்க, சக்ரவர்த்தியோ, மிதுன் என்ற ஒருவன் இருக்கிறான் என்பதுபோலவே நடந்துகொள்ள வில்லை.

அவனை இருபத்தி நான்கு மணி நேரமும் கண்காணிக்க ஆட்கள் மாறிக்கொண்டே இருந்தனர். யாரின் அலைபேசியாவது ஐந்து நொடி கிடைத்தால் போதும் அவனுக்கு. ஆனால் அவன் உண்பது உறங்குவது கூட மற்றவர்கள் தீர்மானிப்பதாய் இருக்க,   இதுவும் ஒருவகை நரக வேதனை தான் மிதுன் சக்ரவர்த்திக்கு.

‘இதுவா டா.. இதுக்காடா நீ ஆசைப்பட்ட.. சொந்த வீட்ல.. நீ ராஜாவா சுத்தி வந்த வீட்ல இப்போ ஒரு கைதி மாதிரி.. இதெல்லாம் என்னடா மிதுன்…’ என்று அவனின் மனது கத்தி கூச்சல் போட,

‘பொறு மனமே பொறு.. பொறுமை காப்பது எல்லாம் ஒருநாள் நிச்சயம் பலன் தரும்.. அவசரப்பட்டு ஏதாவது செஞ்சு உள்ளதையும் கெடுத்துக்காத…’ என்று அறிவு அறிவுரை சொல்ல, மிதுன் சக்ரவர்த்திக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமாய் நகர்ந்தது.   

உஷாவோ அப்படியே இறுகிப்போனார். ஒருநாள் முழுவதும், வருமான வரித்துறையினர் செய்த சோதனையும், அவர்கள் உஷாவிடம் கேட்ட கேள்விகள், இத்தனை ஆண்டுகளில் நடந்திடாத இவ்விசயம், இதெல்லாம் அவருக்கு ஒருவித மன உளைச்சல் கொடுத்து இருந்தது.

போதாத குறைக்கு தீபன் வேறு தனக்கு பொறுப்பேற்று சரணடைந்தது.

ஒரு மகன் அப்படி, இன்னொரு மகன் இப்படி.  மிதுனை வீட்டினில் நேருக்கு நேர் சந்திக்கும் நிலை வந்தால் கூட அவர் அமைதியாய் தான் கடந்து போகிறாரே தவிர, அவனோடு பேசுவதுகூட இல்லை. சக்ரவர்த்தியோ டெல்லிக்கும் சென்னைக்கும் மாறி மாறி சென்று வந்துகொண்டு இருக்க, இவர்களுக்கு இடையில் மிகவும் அவதிப்பட்டு போனார் உஷா.

அவருக்கு இருந்த ஒரே ஆறுதல் என்பது அனுராகா மட்டும்.   அனுராகா தினமும் அவரை வந்து பார்த்துக்கொண்டு தான் இருந்தாள்.

“நீங்க வொர்ரி பண்ணிக்காதீங்க ஆன்ட்டி.. எல்லாம் சரியாகும்..” என,

“என்ன சரியாகும்.. இல்ல எப்படி சரியாகும்?? இதெல்லாம் பசங்களுக்கு வேண்டாம் சொன்னாலும் யாரும் கேட்கலை.. ரெண்டு பசங்களும் என்னோட ரெண்டு கண்ணு போலன்னு சொல்லிட்டு இருப்பார். இதோ ஒருத்தன் சொந்த வீட்டையே கொளுத்த பாக்குறான். இன்னொருத்தன் என்னிக்குமே நான் சொன்னதை கேட்டதில்ல..” என்று அவரும் சொல்ல,

“அப்படி எல்லாம் இல்லை.. தீப்ஸ்க்கு நீங்கன்னா ரொம்ப பிடிக்கும்.. என்ன இதெல்லாம் பார்த்து பழகினதுனால இதுல இருந்து வெளிய வர முடியலைப் போல..” என்றவள் முகத்தினில் ஒரு யோசனை இருப்பதைப் பார்த்து

“என்ன யோசனை அனு..” என்றார் உஷா.

“இல்ல டூ டேஸ் ஆச்சு.. டாக்குமென்ட்ஸ் எல்லாம் சப்மிட் பண்ணியாச்சு.. நம்ம ப்ளான் படி நாளைக்கு நைட் குள்ள தீப்ஸ் வெளிய வரணும்.. அதான்.. யோசிச்சிட்டு இருக்கேன்..” என்றாள் அனுராகாவும்.

எந்த ஒரு சைக்கிள் கம்பெனிக்கு பணம் கைமாறி இருக்கிறது என்று ஒரு முப்பது கோடிக்கான கணக்கினை தூண்டித் துருவினார்களோ அதையே அனுராகா ஒரு பிஸ்னஸ் டீலிங்காக மாற்றிவிட்டாள்.

உஷா, தீபன் சக்ரவர்த்தி பெயரில் கொடுத்திருந்த பவர் பத்திரத்துக்கு இன்னும் முப்பது ஆண்டுகள் ஆயுட்காலம் என்று மாற்றி,

இதை அடிப்படையாக வைத்து, தீபன் தான் அந்த சைக்கிள் கம்பனிக்கு பணம் கொடுத்திருப்பதாகவும், அதுவும் கணக்கில் வராத பணமில்லை, மொத்தமாய் சைக்கிள்கள் வாங்கவென கொடுத்த பணம் என்றும் தனியாய் ஒரு பத்திரம் தயார் செய்து,

அதில் அந்த சைக்கிள் கம்பனியின் முதலாளிலையும் கையெழுத்து போடச் சொல்லி எல்லாம் எல்லாம் பக்காவாகத் தயார் செய்து வைத்திருந்தாள்.

அதிலும் இந்த பிஸ்னஸ் டீலிங் நடந்தது சுமார் ஆறு மாதங்கள் முன்னம்.  அனைத்து ஆதாரங்களையும் தீபன் சார்பாக, அனுராகா ஏற்பாடு செய்திருந்த வக்கீல் குழு சமபித்திருக்க,  

“சைக்கிள்கள் வாங்கவென்று இத்தனை கோடி பணம் கொடுத்திருப்பது சரி. ஆனால் அந்த சைக்கிள்கள் எங்கே..” என்ற கேள்வி வர,

வேறு வழியே இல்லை, அந்த சைக்கிள் கம்பனியின் சொந்தக்காரரே வந்து  “இன்னும் ஒருமாத கால அவகாசம் இருக்கிறது… அதற்குள் நாங்கள் கொடுத்து விடுவோம்..” என்று சாட்சி சொல்லும் நிலை.

விசாரணைகள் நடந்தபடி தான் இருந்தது.  மேற்கொண்டு மேற்கொண்டு என்ன கேள்விகள் வந்தாலும், அதெல்லாம் ஒருபுறம் வக்கீல் குழு பார்த்துக்கொள்ள, சக்ரவர்த்தியும் சும்மா இருப்பாரா? அப்படி சும்மா இருந்தால், இத்தனை ஆண்டுகால அவரின் அரசியல் வாழ்வு என்பது ஒன்றுமில்லை என்பதுபோல் தானே ஆகும். 

ஆனால் அவருக்குமே அவரின் கட்சி தலைமையில் இருந்தும், உடனிருக்கும் ஆட்களிடம் இருந்தும், கட்சியினுள்ளேயே அவருக்கு இருக்கும் எதிர்பாட்களிடம் இருந்தும் ஏகப்பட்ட அழுத்தம். அனைத்தையும் தாண்டி அவர் மகனுக்காக என்றும் பார்க்கவேண்டி இருந்தது.  

நேரம் என்பது இதுதானோ என்னவோ??!!

நாம் என்னதான் பலம் வாய்ந்தவர்களாக இருந்தாலும், ஆள் பலம், பண பலம், பதவி பலம் என்று சகல சம்பத்துக்களும் இருந்தாலும், நேரம் என்பது நமக்கு சாதகமாக இல்லையெனில் நடப்பது எதுவும் நம் கையினில் இல்லைதானே.

மூன்று நாட்கள் என்று இவர்கள் போட்ட கணக்கு, நான்கானது.. ஐந்தானது.. பின் ஒரு வாரம் ஆனது.. இப்படியே பத்து நாட்கள் ஆகிப்போனது.

ஆம்..!! தீபன் சரணடைந்தும் பத்து நாட்கள் ஆகிப்போனது.     

“என்னதான்டா செய்றீங்க.. பத்து நாள்டா.. பத்து நாள்.. இத்தனை பேர் இருந்தும்,   எல்லாமே கொடுத்ததும் ஏன்டா எவனும் பேச மாட்டேங்கிறான்..” என்று நாகாவிடம் கத்திக்கொண்டு இருக்க,

“அதுதான் எங்களுக்கும் தெரியலைங்கய்யா…” என்றான் அவனும்.

“என்ன தெரியலை… மூனே நாள் தான் அப்படின்னு சொன்னீங்க.. இப்போ அவன் வெளிய வருவான்னு பேச்சே இல்லையே.. விசாரிச்சது எல்லாம் போதாதா..” என்று கத்தியவர், அவரின் செல்வாக்கை பயன்படுத்த,

ஒருபக்கம் இவர்களுக்கு சாதகமாகவும் செய்திகள் வந்தது, பாதகமாகவும் செய்திகள் வந்தது.

“இவ்வளோ டிலே ஏன் ஆகுது.. த்ரீ டேஸ் சொன்னோம்.. டென் டேஸ் ஆச்சு.. என்ன பண்றீங்க நீங்க எல்லாம்..” என்று அனுராகா அவள் அமைத்திருந்த வக்கீல்கள் குழுவிடம் கேட்க,

“மேம்… லீகல் அண்ட் இல்லீகல் என்ன என்ன செய்யணுமோ எல்லாமே பண்ணியாச்சு.. உள்ள இருக்க ஆட்கள் சிலர் நமக்கு பாசிட்டீவ் மூவ்ஸ் தான் கொடுக்குறாங்க..” என்று அவர்களும் பதில் சொல்ல,

“வாட் நான்சென்ஸ்.. இன்னும் மூவ் பண்ணிட்டு தான் இருக்கீங்களா.. த்ரீ டேஸ்ல இதெல்லாம் முடிக்கணும்னு சொன்னேனே…” என்று கத்தினாள்.

அனுராகாவிற்கு இதுவே ஒரு பெரும் மன அழுத்தம் கொடுப்பதாய் இருந்தது. இந்த பத்து நாட்கள் என்பது அவளுக்கு அப்படியொரு கொடிய நாட்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

மனதினில் எந்நேரமும் ஒரு யோசனை, அடுத்தது என்ன? யார் என்ன செய்வார்கள்? எப்படியான தகவல்கள் வருகிறது? என்று மனதில் அமைதியில்லாது ஒரு கணக்கிடல் இருந்துகொண்டே இருக்க,

“அங்கிள் நான் தீப்ஸ பார்க்கணும்.. ப்ளீஸ் அரேஞ் பண்ண முடியுமா??” என்று சக்ரவர்த்தியிடம் கேட்டேவிட்டாள்.

அவருக்குமே மகனைக் காண வேண்டும் என்றுதான். ஆனால் அவரின் வக்கீல்களும், கட்சி தலைமையும் கூடாது என்றுவிட்டனர்.

‘சார் மீடியா ஆட்கள் யார் என்ன கேட்டாலும் எங்கள் பக்கம் இருக்க நியாயம் கண்டிப்பா ஜெயிக்கும்.. ஜோடனை வழக்கு எல்லாம் எத்தனை நாளைக்கு செல்லும்னு மட்டும் சொல்லிடுங்க…’ என்று வக்கீல்கள் சொல்லிட, அவரால் தீபனை நேரில் கூட சென்று பார்க்க முடியாத நிலை.

உஷாவும் கேட்டார் “நான் போயி பார்க்கலாமா??” என்று.

அதற்கும் மறுப்பே வந்தது..!!

அனுராகாவினாலோ பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை. ஆக சக்ரவர்த்தியை தொடர்புகொண்டு கேட்டேவிட்டாள். தீபன் சரண்டர் ஆகிட வேண்டும் என்பது தீபனே எடுத்த முடிவாக இருந்தாலும், அதற்கு ஒருவிதத்தில் அனுராகாவும் அமோதித்தாள் தானே.

“நீ இதை பண்ணு தீப்ஸ்.. பார்த்துக்கலாம். எல்லாம் பக்காவா ரெடி..” என்று இவளும் சொன்னாள் தானே.

சக்ரவர்த்தி கூட இதனை சொல்கையில் “அதெல்லாம் வேண்டாம்.. நான் பார்த்துக்கிறேன்..” என்றார்.

ஆனால் தீபன் தான் விடாது இதனை செய்திட, இப்போது நாட்கள் தான் நகர்கிறதே தவிர அவர்கள் எதிர்பார்த்த விஷயம் எதுவும் நடப்பதாய் காணோம்.

உண்மையாய் நடப்பது ஒன்றேன்றால், செய்தித் தாள்களிலும், சானல்களிலும் அதனை எப்படி எப்படி திரித்துக் கூறுகிறார்கள் அந்த கண்றாவியை எல்லாம் பார்க்கவும் முடியவில்லை.

வீட்டிலும் சரி, அலுவலகத்திலும் சரி, ஒருவித டென்சனில் தான் அனுராகா அலைந்துகொண்டு இருக்க,

தாராவோ “அனு.. நீ இவ்வளோ டென்சன் ஆக வேண்டியது எல்லாம் இல்லை.. சீக்கிரம் சரியாகிடும்..” என, “ம்மா.. ப்ளீஸ்..” என்றாள் அடக்கப்பட்ட குரலில்.

இந்த மிதுன் சக்ரவர்த்திக்கு ஆரம்பத்திலேயே லோகேஸ்வரன் உறுதுணையாய் இல்லாது இருந்திருந்தால் இதெல்லாம் நடந்தே இருக்காது தானே. அப்படித்தான் அனுராகா நினைக்க, தாராவோ வேறு சொன்னார்,

“அனு… டாடிக்கிட்ட பேசி பாரு.. மே பி அவருக்கு வேற சோர்ஸ் ஏதாவது தெரிஞ்சிருக்கலாம்..” என்று.

“வாட்??!! டாடிக்கிட்டயா??!!” என்று கேட்டவளின் முகத்தினில் அப்படி ஒரு கோபம்.

“எஸ் அனு.. நீ பேசி பாரு..”

“நோ வே.. ஏன் மம்மி அவர் பண்ணது எல்லாம் போதாதா??!! அந்த மிதுனோட…” என்று அனுராகா சொல்லும்போதே,

“அதனால தான் சொல்றேன்.. ஏதாவது கிளிக் ஆகலாம் இல்லையா.. மிதுனோட பியூச்சர் ப்ளான்ஸ் எதுவும் டாடிக்கு தெரிஞ்சிருக்கலாம் இல்லையா??” என்று தாராவும் சொல்ல,

“மாம்…” என்றாள் கொஞ்சம் திகைப்பாய்.

இந்த வழியில் அனுராகா சிந்திக்கவே இல்லை தானே..!!

“எஸ்… அனு.. கண்டிப்பா உன் டாடிக்கு ஏதாவது ஒரு ஹின்ட் தெரிஞ்சிருக்கலாம்.. இல்லன்னா இவ்வளோ நாள் அவர் சைலென்ட்டா இருக்கற பெர்சன் இல்லை. நீ பேசிப் பாரு..” என, அனுராகா அடுத்த நொடி வேறெதுவும் யோசிக்கவேயில்லை.

லோகேஸ்வரனைத் தொடர்புகொள்ள, அவரோ முக்கியமான மீட்டிங்கில் இருப்பதாக தகவல் வர,

“ஓ..!!!! ஷிட்…” என்று பல்லைக் கடித்து பொறுமையை இழுத்துப் பிடித்தாள்.

“ரிலாக்ஸ் அனு…” என்று தாரா சாமாதானம் செய்ய,

“மாம்.. எப்படி என்னால ரிலாக்ஸ் ஆக முடியும்???” என்றாள் அப்போதும் கோபமாகவே.

யார் மீது கோபம், எதன் மீது கோபம்.. ஏன் கோபம் இதெல்லாம் எதுவும் விளங்கவில்லை.

தீபனை நேரில் கண்டால் மட்டுமே அனுராகா இயல்பாய் இருப்பாள்..!! இருக்கவும் முடியும்.. எங்கே மகள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிடுவாளோ என்ற கலக்கம் பிறந்தது தாராவினுள்.         

இங்கே இப்படி எனில், உஷாவோ சக்ரவர்த்தியிடம் சண்டையே போட ஆரம்பித்துவிட்டார்.

“ஒருத்தனை படுக்க வச்சாச்சு.. இன்னொருதனை உள்ள போக வச்சாச்சு..” என்று.        

ஓரளவு இந்த பண கைமாற்றம் பிரச்சனை முடிவிற்கு வரும் நிலையில் இருக்க, அப்பாடி தீபன் வெளி வந்துவிடுவான் என்று சக்ரவர்த்திக்கு அப்போது தான் செய்தி வந்திருக்க,

அவரே அனுராகாவிற்கும் அழைத்து சொன்னார் “நாளைக்கு வந்திடுவான்ம்மா..” என்று.

பின் உஷாவிடமும்,   “நாளைக்கு நைட்டு குள்ள தீபன் இங்க இருப்பான்.. அதுக்கு நான் பொறுப்பு..” என்றார் சமாதானமாய் உஷாவிடம்.

அரசியல் வாதிகளின் வாக்குகள் எல்லாம் காற்றில் எழுதப்பட்ட வார்த்தைகள் தானே. 

அதுபோலவே தான் ஆனது மறுநாள். அந்த மாடலின் மரணம், பெரும் செய்தியாக பூதாகாரம் கொண்டது. வழக்கு சிபி சிஐடி விசாரணைக்கு என்று செல்ல,  இதனை அனுராகா மட்டுமல்ல சக்ரவர்த்தியும் கூட சிறிதும் நினைத்துப் பார்க்கவில்லை.

“இவரின் மரணத்தில், அமைச்சர் சக்ரவர்த்தியின் இளைய மகன் தீபன் சக்ரவர்த்திக்கு தொடர்பு இருப்பதாக வெளிவந்த செய்திகளின் அடிப்படையில், காவல்துறை விசாரணை செய்த நிலையில்.. சாட்சியங்கள் கலைக்கப்படவும், வழக்கு திசை மாறவும் வாய்ப்புள்ளதால், சிபி சிஐடிக்கு வழக்கு மாற்றம்…” என்ற செய்திகள் வர,

“டேய் என்ன இதெல்லாம்..” என்றார் காதரிடம் சக்ரவர்த்தி.

“அய்யா.. தம்பி இன்னிக்கு வெளிய வந்துடும்னு சொன்னாங்க இப்போ….” என்று அவர் தயங்க,

“இப்போ என்ன இப்போ.. எவடா இவ??!! யாரோ செத்தா அதுக்கு என் மகன் பொறுப்பாவானா? யார் கேஸ் போட்டிருக்கா.. அவன பிடி..” என்றவர் முற்றிலும் பொறுமையை கைவிட்டார்.

அனுராகாவோ உறைந்தே போனாள். அவன் வந்துவிடுவான் என்று நினைத்திருந்த வேளையில், இப்படி செய்திகள் வர, புனீத்திற்கு அழைத்து “யார் இந்த மாடல்.. ஃபேக் நியூஸ்னு நினைச்சேன்.. பட் இப்படி டைவர்ட் பண்றாங்க.. அந்த மாடல் பத்தின பெர்சனல் டீடெய்ல்ஸ் வேணும் புனீத்..” என,

“நம்ம நினைக்கிறது போல இல்லை அனு.. இஸ்யு ரொம்ப பெருசாகிட்டே போகுது.. இப்போ நம்ம டீடெய்ல்ஸ் கலெக்ட் பண்றோம் தெரிஞ்சா அது இன்னும் பெரிசாகும்..” என்று அவனும் சொல்ல,

“வாட் தி ஹெல்..!! என்ன வேணாலும் ஆகட்டும்.. என்ன என்னையும் வந்து அரெஸ்ட் பண்ணுவாங்களா?? பண்ணட்டுமே.. பட் தப்பித் தவறி கூட தீப்ஸ் பேரு பொண்ணு விசயத்துல வெளிய தப்பா வரக்கூடாது..” என்று அடிக்குரலில் சீர,

“ஷ்..!! அனு… ப்ளீஸ் காம் டவுன்.. இது.. இதெல்லாம் நடக்கிறது தான்..” என்றான் புனீத் சமாதானமாய்.

“அது யாருக்கு வேணா நடக்கட்டும்.. புரியுதா உனக்கு.. இங்க.. என்னோட தீபனுக்கு நடக்கக் கூடாது.. மைன்ட் இட்.. டூ வாட் ஐ சே..” என்று அனுராகா புனீத்திடம் கத்த,

“ஓகே.. ஓகே.. கூல் டவுன்.. கூல் டவுன்.. நான் அரேஞ் பண்றேன்.. நீ தேவையில்லாம வேற யாரோடவும் எதுவும் பேசிடாத..” என்றவன் அவளிடம் பேசிவிட்டு முதல் வேலையாய் நீர்ஜாவிற்கு அழைத்து

“நீரு நீ போய் அனுவோட இரு.. அவ எங்க போனாலும் சரி.. யாரைப் பார்த்து பேசினாலும் சரி.. நீ அவளோடவே இரு..” என்று அனுப்பி வைத்தான்.

ஆனால் யார் வந்தாலும், யார் உடனிருந்தாலும், அவளுக்கு தீபன் வந்து அவள் முன்னே நிற்பது போலாகுமா என்ன?!!

ஒவ்வொரு முறையும் செய்திகள் ஒவ்வொரு விதமாய் வந்தபடி இருந்தது. தீபனும் அந்த மாடலும் எடுத்துக்கொண்டது போல புகைப்படங்களும், பின் சமீபத்தில் அவர்கள் இருவரும் காரில் செல்வது போலவும், திரும்ப தீபன் மட்டும் வருவது போலவுமான படங்கள், பின் இருவையும் கையில் மதுக் கோப்பையுடன் இருப்பது போல, இன்னும் இன்னும் என்று நிறைய படங்கள், செய்திகள் என்று வெளிவர,      

நீரஜாவும், தாராவும் வந்து என்ன சொன்னாலும் அவள் மனது சமாதானம் ஆகிடவில்லை. லோகேஸ்வரனையும்  தொடர்புகொள்ளவே முடியவில்லை.

இதற்குமேல் தாங்காது  என்று, காரினை எடுத்துக்கொண்டு நேராய் சக்ரவர்த்தி இல்லம் நோக்கித்தான் போனாள்.

வெளியே கட்சி ஆட்கள் நிறைய பேர் இருக்க, ஒருபக்கம் கோசங்கள் வேறு.. யாரையும் சட்டை செய்யவில்லை அனுராகா.. காரினை நிறுத்தியவள், உள்ளே போக, அங்கே ஹாலிலோ மிதுன் ஒய்யாரமாய் அமர்ந்திருந்தான்.

அவன் என்னவோ வெறுமெனே தான் அமர்ந்திருந்தான், உடலில் பலமில்லை. உறக்க மருந்து அடிக்கடி உடலில் செலுத்தப்பட, எப்போதுமே ஒருவித சோர்வு நிலையில் தான் இருந்தான். அனுராகா உள்ளே நுழையவும், அவளைப் பார்த்ததும் அவனின் முகத்தினில் வந்துபோன ஒரு ஏளன புன்னகை அனுராகாவின் பொறுமையை மொத்தமாய் வீழ்த்த,

“யூ.. ப்ளட்டி ராஸ்கல்…” என்று சொல்லியபடி, அவனை நெருங்கியவள், சராமாரியாய் அவனை அறைய,

அனுராகா காரில் விரையவும், அவசரமாய் நீரஜாவும் தாராவும் மற்றொரு காரில் பின்னேயே வந்திருக்க, அங்கே மிதுனைக் கண்காணிப்பவர்களும், பின்னே வந்த தாராவும், நீரஜாவும், தடுப்பதற்குள் அனுராகா அடி வெளுத்திருந்தாள் மிதுனை.

மனதில் இருக்கும் பலம்.. அந்நேரம் மிதுனுக்கு உடலில் இல்லை.. ஆக, அவனால் தன்னைக் காத்துக்கொள்ள முடியாது போக, அனைவரும் சேர்ந்து அனுராகாவை பிடித்து நிறுத்தவே பெரும்பாடாய் போனது.

சக்ரவர்த்தி அப்போது சிறிது நேரம் முன்னர் தான் அவரின் அறைக்கு சென்றிருக்க, வேலையாள் இன்டர்காமில் இதனை சொல்லி அழைக்க, வேகமாய் கீழே வந்தார். உஷாவும் வெளிவந்துவிட,

சக்ரவர்த்தியைப் பார்த்தும் கூட அனுராகாவின் வேகமும் கோபமும்  தீரவில்லை.

“நீங்க என்ன செய்வீங்களோ ஏது செய்வீங்களோ எனக்குத் தெரியாது… ஒன்னு தீபன் இங்க வரணும்.. இல்ல நான் இன்னும் ஒரு மணி நேரத்துல அவனைப் போய் பார்க்கணும்.. இதுல ஏதாவது ஒன்னு நடக்கலன்னாலும், இதோ இவன் உயிரோடவே இருக்க மாட்டான்…” என்று மிதுன் சக்ரவர்த்தியைக் காட்டிச் சொல்ல,

சுற்றி நின்றிருந்த அனைவருக்குமே அதிர்ச்சி தான். சக்ரவர்த்தி உஷா உட்பட..!!

அவன் – என்னதான் நடக்கிறதோ..??!!

அவள் – என்னவென்று நான் சொல்ல..??!!

காதல் – எல்லாம் சொல்றமாதிரியா நடக்குது….??!!!                                    

Advertisement