Advertisement

நான் இனி நீ – 36

செய்தியாளர்கள் சந்திப்பு முடிந்ததுமே, சக்ரவர்த்தி செய்த முதல் வேலை, வீட்டினில் மனைவி மக்களோடு தனியே அமர்ந்து பேச்சு வார்த்தை நடத்தியதுதான். இத்தனை ஆண்டுகளில் எத்தனையோ அரசியல் பேச்சு வார்த்தைகள் செய்திருப்பார், ஆனால் இன்றோ, தான் அருமை பெருமையாய் நினைத்திருந்த மகன்களில் ஒருவன் தன் குடும்பத்திற்கே எதிராய் இருக்க, அவரால் அத்தனை எளிதாய் எதையும் ஆரம்பிக்க முடியவில்லை.

தீபன் எந்தவொரு சூழ்நிலை வீட்டினில் வந்துவிடக் கூடாது என்று எண்ணினானோ அதுதான் இப்போது நடந்துகொண்டு இருந்தது.

மீடியாக்களில் ஒருபக்கம் இவர்களுக்கு சாதகமாகவும், இன்னொருபக்கம் பாதகமாகவும்  செய்திகள் வந்தபடி இருக்க, தொகுதி முழுவதும் தீபன் சொன்னது அப்படியே நடந்தேரிக்கொண்டு இருந்தது.

தர்மாவிடம் சொல்லியிருந்தான் “மீம்ஸ் கிரியேட் பண்ற டீம், மீடியால ஆட்ஸ் போடற டீம் இதுக்கு முன்ன இருந்ததுவிட இப்போ இன்னும் அதிகமா வொர்க் பண்ண சொல்லு. இந்த மூணு நாள் யார் சோசியல் மீடியா ஒப்பன் பண்ணாலும் நம்ம கட்சி பத்தி, அப்பா பத்தி அவங்க கண்ல பட்டுட்டே இருக்கணும்.   வொர்க் பண்றவங்களுக்கு எலெக்சன் முடியவும் அவங்களுக்கு எங்க வேணுமோ அங்க ஜாப் வாங்கிக் கொடுத்திடலாம்…” என்று.

வெளிவேலைகள் எல்லாம் அவனின் எண்ணம் படி நடந்துகொண்டு இருக்க, இந்த மிதுனோ அவனின் பிடிவாதத்தில் தான் இருந்தான்.

இது வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தால் கூட சரி, நீ கொடுத்து எனக்கு வேண்டாமா நானே தட்டிப் பறிப்பேன் என்ற பிடிவாதத்தில் இருந்தால், யார்தான் என்ன செய்திட முடியும்??!!  

சரி அப்படியே என்றாலும், இப்போது அப்பாவினையும் எதிரியாய் பாவித்துவிட்டானே, அதுதான் தீபனால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. இருந்தும் அப்பா பேச அழைத்திருப்பதால் அவரே பேசட்டும் என்று மௌனமாய் இருக்க,

மிதுனோ “சோ..!! இப்போதான் உங்களுக்கு என்னோட பேசணும் தோனிச்சாப்பா?” என, அவனின் குரலிலோ முகத்திலோ துளியும் மரியாதை என்பது இல்லை.

சக்ரவர்த்தியோ மிதுன் முகத்தினை கூர்ந்து பார்த்தவர் “என்னை அப்பான்னு சொல்ல உனக்கு எப்படிடா வாய் வருது..” என்று கேட்க,

“ஹா ஹா .. மகனை ரூம்ல வச்சு அர்ரெஸ்ட் பண்ணவருக்கு இதுவே பெருசு…” எனும்போதே,

தீபன் “டேய்..!!” என்று குரலை உயர்த்திக்கொண்டு எழுந்துவர, “தீபன்..” என்று அதட்டிய சக்ரவர்த்தி,  “மிதுன்… நீ ரொம்ப பேசுறடா…” என்றார்.

“நீங்க பண்ணது மட்டும் நியாயமா ப்பா…” என்றான் அவன்.

“நான் பண்ணது நியாயம்ங்கிறதுனால தான் இந்நேரம் நீ உயிரோட இருக்க. கைல கட் பண்ணிட்டு படுத்து இருந்தியே.. அப்படியே விட்டிருந்தா என்னடா செஞ்சிருப்ப நீ..” என்று சக்ரவர்த்தியும் குரலை உயர்த்த,

“வெரி சிம்பிள்… நான் இருந்தாலும் இல்லைன்னாலும் என்னோட ப்ளான்ஸ் வொர்க் அவுட் ஆகும்.. ஷர்மா சேட் இவங்களை எல்லாம் உங்க கஸ்டடில கொண்டு வந்துட்டா, எனக்கு ஹெல்ப் பண்ண யாருமே இல்லைன்னு நினைச்சீங்களா..? இதெல்லாம் சும்மா சாம்பிள்தான்…” என,

 “டேய்..!!!” என்று சக்ரவர்த்தி கத்த,

“எப்பவும் உங்களோடவே தான் இருந்தேன். ஆனா என்னிக்குமே நான் உங்களுக்கு பெருசா தெரிஞ்சதே இல்லை. இதோ இவன்.. இவன் என்னிக்குமே அவனோட இஷ்டத்துக்கு தான் இருப்பான். ஆனா அவன் தான் எப்பவும் உங்களுக்கு பர்ஸ்ட்..” என்று தீபனைக் காட்டிக் கூற, உஷா இதனை எல்லாம் வேதனையாய் பார்த்துக்கொண்டு இருந்தார்.

பிள்ளைகளுக்கும் அரசியல் வேண்டாம் என்று எத்தனையோ முறை சக்ரவர்த்தியிடம் சொல்லியிருப்பார் உஷா..

அப்போதெல்லாம் “அவனுங்களா விரும்பி செய்றானுங்க விடும்மா..” என்றிடுவார்.

ஆனால் இப்போது…!!

“புரிஞ்சுதான் பேசுறியா…” என்று சக்ரவர்த்தி அப்போதும் பெரிய மகனுக்கு புரிய வைக்கும் நோக்கில் பேச,

“எனக்கு எதுவுமே புரியவேணாம்… நீங்களா இனி எனக்கு எதுவும் கொடுக்கவேணாம். எனக்கு என்ன தேவையோ அதை எப்படி எடுக்கனும்னு எனக்கே தெரியும். இந்த மகனைத் தானே தலையில தூக்கி வச்சு ஆடுனீங்க.. கண்டிப்பா இவனாலத்தான் ப்பா உங்க பதவிக்கு ஒரு வேட்டு இருக்கு..” என்று மிதுன் பேசிக்கொண்டே போக,

“ஏய்.. இதுக்கு மேல பேசின யாருக்காகவும் நான் பார்க்கமாட்டேன்..” என்று தீபன் மிதுனின் கழுத்தினை பிடித்துவிட, உஷாவிற்கு அப்படியொரு அழுகை.

எப்படியிருந்த பிள்ளைகள்.. இன்று இப்படி..

அவரால் இதெல்லாம் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை. ஆனால் மிதுன் மீது இருக்கும் தவறும், அவன் செய்த தவறை தீபன் தனக்கு சாதகமாய் பயன்படுத்திக் கொண்டதும், இவை அனைத்தையும் தாண்டி எந்த சூழலிலும் கணவரை விட்டுக் கொடுக்க முடியாது என்பதும் அவரைப் போட்டு படுத்த

“தீபன்..!!” என்று ஈனஸ்வரத்தில் அழைத்தவர், ஆண்கள் மூவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு எழுந்து சென்றுவிட்டார்.

தீபனுக்கு நன்கு புரிந்தது அம்மாவின் மனம் இப்போது எப்படியானதொரு வேதனை கொண்டிருக்கும் என.

வீட்டினுள் ஏற்கனவே ஒட்டுதல் இல்லை என்று வாடியவர், இப்போது பிளவு என்பது கண்கூடாய் தெரிய அவரால் இதனைத் தாங்கிக் கொள்ளவே முடியாது அல்லவா..

ஆனால், அம்மாவிற்காக என்று மிதுனை ஒன்றும் செய்யாது விட்டால், அவன் மொத்தமாய் அல்லவா நாசம் செய்துவிடுவான்..

மிதுனின் குரூர பார்வை மாறவேயில்லை. அப்படியிருக்க சக்ரவர்த்தியும் தான் என்ன செய்ய முடியும்.

“தீபன்.. எலெக்சன் முடிஞ்சு.. வோட் ரிசல்ட்ஸ் வர வரைக்கும் இவன் எங்க இருக்கான்னு யாருக்குமே தெரிய கூடாது.. இந்த வீடு தாண்டி.. இவன் எங்கயும் போகவே கூடாது. இது உன்னோட பொறுப்பு..” என்று சொல்லி சென்றுவிட்டார்.

மறுபடியும் சொந்த வீட்டிலேயே மிதுன் சக்ரவர்த்தி அறைச் சிறையில் வைக்கப் பட, உஷாவோ “என்னால இதெல்லாம் பார்த்துட்டு இங்க இருக்க முடியாது..” என்றுசொல்லி,

அவருக்கென்று இருக்கும் தனி பங்களா சென்றுவிட, வீட்டினில் தீபன் சக்ரவர்த்தி, மிதுன் சக்ரவர்த்தி, வேலையாட்கள் இவ்வளவே.

இவன் தெளிவாய் இருந்தால் சமாளிப்பது கடினம் என்று முக்கால்வாசி நேரம் மிதுனை உறக்கத்தில் தான் வைத்திருக்கும் நிலை.

‘இவ்வளோ கீழ இறங்க வச்சிட்டானே..’ என்று தீபன் எண்ணாத நிமிடமில்லை.

மறுநாள் தொகுதியில் ஆங்காங்கே சிறு சிறு கூச்சல் குழப்பங்கள் இருந்தாலும், ஓரளவு அமைதியாகவே இருந்தது. வீட்டினில் பாதுகாப்பு ஏற்பாடுகள் நிறைய செய்திருந்தான் தீபன். வழக்கமாய் வேலைக்கு வரும் ஆட்களை எல்லாம் நிறுத்திவிட்டு, இருவரை மட்டும் இங்கேயே இருக்கச் சொல்லியிருந்தான்.

நாகா, தர்மா, காதர் இவர்களுக்கு தொகுதியிலும், வெளி வேலைகளிலும் சரியாய் இருக்க, தீபனால் மிதுனை விட்டு எங்கேயும் போக முடியாத நிலை.

தேர்தல் முடியும்வரைக்குமாவது அவனைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டுமே. நல்லவேளை அவனுக்கு உதவியாக தேவ்வும், புனீத்தும் வந்துவிட்டனர்.

இது அனுராகாவின் ஏற்பாடு.

“நீங்கல்லாம் என்ன பிரண்ட்ஸ்.. அவன் அவ்வளோ ப்ராப்ளம்ஸ்ல இருக்கான். நீங்க ஹாயா உங்களோட வேலையை பார்த்துட்டு இருக்கீங்க.. உங்களுக்கு ஒரு இஸ்யூன்னா தீப்ஸ் இப்படியா இருப்பான்..” என்று கேட்க, அவர்கள் வந்துவிட,

“என்னடா இப்படி வந்திருக்கீங்க..” என்றான் தீபன்.

“வேற என்னடா செய்ய சொல்ற..??” என்ற புனீத், தீபனோடு நிலவரம் என்னவென்று விசாரிக்க, அவர்களின் பேச்சு மறுநாள் முழுவதம் செல்ல,

அங்கே அனுராகாவோ தீபன் அவளுக்கு ஏற்பாடு செய்துகொடுத்துவிட்டுப் போயிருந்த கிரிமினல் லாயர்களோடு பேசிக்கொண்டு இருந்தாள். அவளின் முன் ஐவர் இருந்தனர். அனைவருமே ‘தி பெஸ்ட்..’ என்று சொல்லும் வகையிலான ஆட்கள்.

அவள் கேட்டிருந்ததும் அப்படியான ஆட்களைத் தானே. நீரஜா கூட சொன்னாள் ‘இதெல்லாம் உனக்கு தேவையில்லாத விஷயம் அனு.. நீ இதுல இறங்க வேண்டாம்..’ என்று.

அனுராகாவோ ‘என்னோட தீப்ஸ்க்கு ஒண்ணுன்னா நான் தான் இறங்கனும்..’ என்றுவிட, இதோ அவளின் முன்னம் வக்கீல்கள் குழு.

“நீங்க எப்படி டீம் பார்மெட் செய்வீங்களோ ஐ டோனோ.. பட் இந்த இஸ்யூஸ் எல்லாம் நெக்ஸ்ட் என்ன லெவல்க்கு போகும்.. எங்க இருந்து சோர்சஸ் வருது.. கோர்ட்ல கேஸ் ஆனா இதுக்கான ரிசல்ட்ஸ் எப்படியிருக்கும்.. இது.. இதெல்லாம் கம்ப்ளீட் ரிப்போர்ட் எனக்கு வேணும்.

ஒவ்வொரு செக்கண்டும் இதோட அடுத்த மூவ்ஸ் என்ன என்னன்னு நீங்க பைண்ட் அவுட் பண்ணி அதுக்கு நம்ம என்ன செய்யனும்னு சொல்லணும்..” என்றவள்,

“அண்ட் நீங்க யாரும் இதுல எந்த எதிக்ஸ் பார்க்கவேண்டாம்.. ஜஸ்ட் உங்களோட பேமண்ட் எவ்ரிடே உங்க அக்கவுண்ட்ல கிரெடிட் ஆகிட்டே இருக்கும். நான் என்ன கேட்கிறேனோ, நான் என்ன சொல்றேனோ.. அதெல்லாம் நீங்க எனக்கு செஞ்சு கொடுக்கணும்…” என, அவள் சொன்ன வேலை அப்படியே நடக்கத் தொடங்கியது.                                

அனுராகா  அவர்களை அலுவலகத்தில் வைத்தும் சந்திக்கவில்லை, ஒரு பொது இடத்தினில் வைத்து பேசி முடிக்க, அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நாளும் லட்சங்களில் தான் சம்பளம் என்று பேசியிருந்தாள். அவர்களிடம் பேசிவிட்டு கிளம்ப, தீபனிடம் இருந்து ஒரு மெசேஜ்

“இஸ் எவரிதிங் ஓகே??” என்று .

“யா.. தேர்??” என்று இவளும் கேட்க, இப்படியே ஒரு பத்து நிமிடம் அவர்களின் சம்பாசனை.  மறுநாளும் கூட இப்படித்தான். மிதுன் சக்ரவர்த்தி உறக்கத்தினில் இருக்க, தீபனுக்கு இந்த சூழல் மிக மிக கடினமாய் இருந்தது.  அனுராகாவும், தீபன் சக்ரவர்த்தியும் அலைபேசியில் பேசுவது என்பது கூட அரிதாகிப் போனது இந்த மூன்று தினங்களில். மறுநாள் விடிந்தால் தேர்தல். அதற்கு மறுநாள் அவர்களின் நிச்சயம்.

தாரா இதனை சொல்லவுமே அனுராகாவிற்கு அப்படியொரு எரிச்சல்.

“ஹவ் செல்பிஷ்…??” என்று கேட்க,

“இது ஃபுல் அண்ட் ஃபுல் மினிஸ்டரோட முடிவு…” என,

“மாம்.. அங்க சிச்சுவேஷன் எதுவுமே சரியில்லை.. அப்படியிருக்கப்போ..” என்று அனுராகா பேசவர, தாராவின் பார்வை கண்டு  தீபனுக்கே அழைத்துவிட்டாள்.

அவளுக்குத் தெரியும் இப்படியான நேரங்களில் நாம் தோள் தான் கொடுக்க வேண்டுமே தவிர நெருக்கடி அல்ல.

சந்தோசமாய் நிச்சயம் செய்துகொள்ளும் தருணமா இது??!!

திடீரென்று அனுராகாவிடம் இருந்து அழைப்பு என்றதுமே, எடுத்தவன் “வாட்  ஹேப்பன்??” என,

“தீப்ஸ், நம்ம எங்கேஜ்மென்ட் பத்தி உனக்குத் தெரியுமா??” என்றாள் எடுத்ததுமே.

‘ஓ!! காட்…’ என்று நெற்றியைத் தேய்த்தவன் “யா ராகா..” என,

“என்ன நினைச்சிட்டு இருக்கீங்க எல்லாரும்.. எல்லாம் தெரிஞ்சிட்டு நீயே இப்படி பண்ணலாமா..” என்று அனுராகா கேட்க, “நான் வேற என்னதான் செய்ய ராகா..” நிஜமாகவே அவனுக்குத் தெரியாது.

அவனின் குரலில் அப்படியொரு வலி.. ஒருவித கவலை.. எல்லாம் தெரிய,

“தீப்ஸ்…” என்று அனுராகா சொல்ல,

“எஸ்.. எப்போ என்ன நடக்கும்னு எனக்கு நிஜமா தெரியலை. அட்லீஸ்ட் நமக்கு எங்கேஜாவது ஆகணும்னு நினைச்சேன்.. ஒவ்வொரு விசயத்துக்கும் நேரம் நாள் பார்த்துட்டு இருந்தா எதுவுமே முடியாது ராகா.. ட்ரை டூ அண்டர்ஸ்டாண்ட் மீ..” என்றவனின் பேச்சிலும், தொனியிலும் தெரிந்த உணர்வு கண்டு அனுராகா அப்படியே அமைதியாகிப் போனாள்.

“ராகா…!!” என்று அவனின் குரலில் ஒரு பிசிறு தட்ட,

“ம்ம்..” என்றாள் இவளும்.

“அட்லீஸ் எனக்கு இதாவது ஒரு சின்ன சந்தோசம் கொடுக்கும்னு நினைக்கிறேன்..” என, அனுராகாவின் கண்களில் கண்ணீர் நிரம்பியது.

“ஓகே தீப்ஸ்.. பார்த்துக்கலாம்.. எதுவா இருந்தாலும்.. என்ன நடந்தாலும்.. தப்பு சரி.. இதெல்லாம் தாண்டி.. நான் இருப்பேன் எப்பவும் உன்னோட…”  என்றவள் வைத்துவிட்டாள்.

மனது என்னவோ அவளுக்கு அப்படி கனத்துப் போனது…

விடிந்தால் தேர்தல்.. அதற்கு மறுநாள் நிச்சயம் எனில், அது நடக்குமா நடக்காதா என்பது இப்போது வரைக்குமே சந்தேகம் தான்.

இங்கே வீட்டினிலோ லோகேஸ்வரன், தாரா இருவரும் நிச்சயத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்ய, மௌனமாய் தான் அனுராகா வேடிக்கைப் பார்த்தாள். அவளின் எண்ணமெல்லாம் தீபனுக்கு எதுவும் நேர்ந்துவிடக் கூடாது என்றே இருந்தது.

நாளை தேர்தலை எப்படியாவது நல்லபடியாய் முடித்துவிட்டால் போதும் என்று தீபன் நினைத்துக் கொண்டு இருக்கும் வேளையில் நாகா அழைத்துவிட்டான்.

“என்ன நாகா…” என்று தீபன் ஒரு சலிப்புடனே கேட்க,

“அம்மா இருக்க வீட்ல ரெய்ட்.. அம்மா நேம்ல இருக்க காலேஜஸ் முழுக்க இப்போ ரெய்ட்..” என, தீபன் அப்படியே எழுந்து நின்றுவிட்டான்.

அவனின் பார்வை மிதுன் மீது செல்ல, அவனோ தூக்க மருந்தின் உதவியால் நன்கு உறங்கிக்கொண்டு இருந்தான்.    

Advertisement