Advertisement

நான் இனி நீ – 35

அனுராகாவும் தீபனும் சென்னை சென்று சேர்வதற்குள் ஏகப்பட்ட பரபரப்புச் செய்திகள், அவனுக்கோ அழைப்புகள் வந்தவன்னம் இருக்க, “தீப்ஸ் நான் டிரைவ் பண்றேன்…” என்றவள் காரினை அவளே தான் செலுத்தினாள்.

தீபனுக்கோ ஏகப்பட்ட டென்சன்.. தேர்தலுக்காக என்று ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து இவன் செய்திருக்க, கடைசி நேரத்தில் இப்படியான குளறுபடிகள் எல்லாம் இவர்களுக்கு பாதிப்பு கொடுக்கும் தானே.

நெற்றியை தேய்த்தபடி தீபன் யோசித்துக்கொண்டு இருக்க “தீப்ஸ்…” என்றாள் அனுராகா.

“ம்ம்..” என்றவன் அப்போதும் யோசனையாகவே இருக்க,

“இதெல்லாம் யூசுவல் திங்க்ஸ் தானே தீப்ஸ்.. அதுக்கேன் இவ்வளோ டென்சன்..” என,

“எலெக்சன் நெருங்கிட்டு இருக்கு.. இவ்வளோ தூரம் எல்லாம் பண்ணி கடைசியில அது ஒண்ணுமில்லன்னு ஆகிடக் கூடாது.. எல்லாம் மீறி இந்த எலக்சன்ல ஒவ்வொரு மூவும் நான் டிஸைட் பண்ணது நான்.. எதுவும் எங்கயும் பெய்லியர் ஆகிடக் கூடாது.. முக்கியமா அப்பா.. உடைஞ்சு போயிடக் கூடாது…” என்றான்.

“எதுவும் அப்படி ஆகாது தீப்ஸ்..” என்றவள், ஆதரவாய் அவனின் கரம் பற்ற, அவனும் இறுகப் பற்றிக்கொண்டான்.

இருந்தும் அவன் டென்சன் தீரவில்லை. அனுராகா அவனோடு பேசியபடியே தான் காரோட்டினாள். அவள் சொன்ன அனைத்துக்கும் “ம்ம்…” என்ற பதில் மட்டுமே அவனிடம் இருக்க,

“ஃபீல் ப்ரீ தீப்ஸ்..” என்றாள், அவனின் தோளைத் தட்டி..

“பெரிய விசயம் இல்லைத்தான். பட் டைமிங் சரியில்ல..” என்றவன் தேவ்விற்கு அழைத்து “நீயும் நீருவும் வந்து ராகாவ பிக்கப் பண்ணிட்டு போங்க..” என,

“ஆல்ரடி அனு மெசேஜ் பண்ணிட்டா டா..” என்றான்.

“ஓ..!!! ஓகே..” என்றவன் அலைபேசியை வைக்க, “தீப்ஸ்.. இப்போ நீ என்னைப் பத்தி யோசிக்கக் கூடாது.. உன்னோட வேலைகள் என்னவோ அதை மட்டும் பாரு.. ஐ க்னோ வாட் ஐ டூ.. ஓகே வா..” என,

இப்படியேதான் பேச்சுக்களோடு இருவரும் சென்னை சென்று சேர, தீபன் சொன்ன இடத்தினில் தேவ் மற்றும் நீரஜா காத்திருக்க, இன்னொரு புறம் நாகாவும் தர்மாவும் தீபனுக்காக காத்திருக்க, கார் விட்டு இறங்கிய அனுராகா நின்று தீபனைப் பார்த்தாள்.

அவனும் கார் விட்டு இறங்க அனுராகா ஒருமுறை அவனை இறுக அணைத்து விடுவிக்க, தீபனோ அவள் அனுப்ப மனமில்லாது தான் நின்றான். ஆனால் அவனுக்கு வேறு வழிகள் இல்லையே..

“எல்லாமே சரியாகும் தீப்ஸ்..” என்றவள், நீரஜாவோடும் தேவ்வோடும் கிளம்ப, நாகாவும் தர்மாவும் வந்து தீபனிடம் நிற்க,

அவ்வளோதான் அடுத்து தீபன் சக்ரவர்த்தியின் மூளைக்குள் சைத்தான் புகுந்துவிட்டது..

அரசியில் எனும் சைத்தான்..!!

“நாளைக்கு மதியம் குள்ள மிதுன் இங்க இருக்கனும்…” என,

“மிதுன் ஹாஸ்பிட்டல்ல..” என்று தர்மா சொல்லும்போதே, “எங்க இருந்தாலும்… அவன் நாளைக்கு இங்க இருக்கணும்..” என்றவன் அடுத்து நேராய் சென்று நின்றது அப்பாவின் முன்னம்.

சக்ரவர்த்தி முகத்தினில் எதிர்க்கட்சி ஆட்கள் இதனை செய்திருக்கிறார்கள் என்பதனைவிட இதற்கு பின்னணியில் மிதுன் இருக்கிறான் என்பது தான் லேசாய் வருத்தம் இருப்பது போல் தெரிய,

“ப்பா பார்த்துக்கலாம்…” என்றான் தீபன்.

சக்ரவர்த்தியோடு, காதர் மற்றும் இன்னும் கட்சி முக்கிய ஆட்கள் சிலர் இருக்க, “நாளைக்கு ஈவ்னிங் ஒரு ப்ரெஸ் மீட் அரேஞ் பண்ணிடுங்கப்பா.. நான் மிதுன் உங்களோட இருப்போம்.. நீங்க பேசுங்க..” என்று தீபன் அவனின் திட்டங்களை விவரிக்க,

மறுநாள் அனைத்து சேனல்களிலும் சக்ரவர்த்தியின் செய்தியாளர் சந்திப்பே ஒளிபரப்பாகிக் கொண்டு இருந்தன.. அவரின் இரு பக்கமும், இரு பிள்ளைகள்.

ஆம்..!! தீபன் சக்ரவர்த்தி ஒருபுறம் எனில், இன்னொருபுறம் மிதுன் சக்ரவர்த்தி.

மிதுன் சக்ரவர்த்தி அழைத்து வரப்படவில்லை, வரவழைக்கப் படவில்லை. கொண்டு வரப்பட்டான். பிடிவாதம் செய்பவனை அப்படிதானே கொண்டு வர முடியும்..

தீபன் சென்னைக்குச் சென்ற, அன்றைய இரவே தர்மா டெல்லி கிளம்பிச் செல்ல, மிதுனோ அவனோடு வர மறுக்க, தீபனிடம் கேட்டமைக்கு “கூட்டிட்டு வா சொல்லல.. தூக்கிட்டு வான்னு தான் சொன்னேன்..” என, பின் என்ன மயக்க மருந்து செலுத்தப்பட்டு, மறுநாள் காலை பொழுதிலேயே மிதுன் இங்கிருந்தான் சென்னையில். அவர்களின் வீட்டில்.

அவன் மயக்கம் தெளியும் முன்னமே, இங்கே மருத்துவர்கள் வந்து பரிசோதனை செய்து, வைத்தியம் செய்திருக்க, இதோ மாலை தீபன் சொன்னதுபோல் செய்தியாளர்கள் சந்திப்பு நடந்துகொண்டு இருந்தது.       

‘இதெல்லாம் எனக்கு துக்கடா விசயம்டா..’ என்பதுபோல் செய்தியாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லிக்கொண்டு இருந்தார் சக்ரவர்த்தி.

இன்னும் தேர்தலுக்கு மூன்று நாட்களே..!!

அப்படியொரு நெருக்கடியான நிலையில் இப்படியான பேட்டி தேவையா?? அதுவும் பிரச்னைகள் எல்லாம் பெரிய அளவில் பூதாகரம் அடைந்திருக்க, துணிச்சலாய் நின்றிருந்தார் மனிதர்..

அப்படி நிற்க வைத்திருந்தான் தீபன் சக்ரவர்த்தி..

“ப்பா நீங்க எதுவும் வொரி பண்ணிக்க வேணாம்.. இனி நான் பார்த்துக்கிறேன்..” இவைதான் தீபன் சொன்னது.

முதல் நாள் இரவு மகன் வந்ததுமே சக்ரவர்த்தியோ “அம்மாவை ஒருதடவ பார்த்து பேசிடு தீபன்..” என,

தீபன் உஷாவினைப் பார்க்கப் போக, அனைத்தும் அறிந்த உஷாவோ  “இப்படி பண்ணிட்டானே டா இவன்..” என்று மிதுனை எண்ணி வருந்த,

“ம்மா உனக்கு அவனை பார்க்கனுமா?? டெல்லி போறியா நீ??” என்றான்.

மிதுன் கைகளை அறுத்துக்கொண்டான் என்று பெற்ற அன்னையாய் மனம் துடித்தாலும், அப்பாவையும் தம்பியையும் பதவிக்காக பொதுவெளியில் இப்படி அவதூறி பரப்பியிருக்கும் மகனைக் காண அவருக்கு அந்நேரம் விருப்பமில்லை.

“நான் அவனைப் பார்க்கலை..” என்றுவிட்டார்.

சக்ரவர்த்தி என்ன செய்வது என்று அந்த நேரம் எதுவும் புரியவில்லை. மனிதர் மிகவும் ஆடிப்போனார். மற்றவர் செய்ததைக் காட்டிலும் மகன் செய்தது தான் அவரால் ஏற்றுகொள்ள முடியவில்லை. மிதுன், தீபன் இருவரையும் தேர்தல் முடியவும் ஒன்றாய் அமர வைத்து பேசி என்ன என்று பார்த்துக்கொள்ளலாம் என்று இருந்தார்.

அவரின் இத்தனை ஆண்டுகால அரசியல் வாழ்வில் ஆயிரம் எதிரிகளைப் பார்த்திருப்பார். எத்தனையோ நம்பிக்கைத் துரோகிகளை கண்டிருப்பார்.. ஆனால் பெற்ற மகனே இப்படி காலடியில் குழி தோண்டுவான் என்று எண்ணவில்லை.

அவனின் செயல்கள் எல்லாம் தெரியவரவும் முதலில் கோபம் வந்ததுதான் ஆனாலும் அரசியலில் அப்பா மகன் என்பது எல்லாம் இல்லை என்று நன்கு தெரிந்தவர் ஆகையால் “பேசிக்கலாம்..” என்றுதான் காதரிடம் கூட கூறியிருந்தார்.

இப்போதோ.. அனைவரின் முன்னமும் அவர்.. மற்றவர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லிக்கொண்டு.

‘அமைச்சர் வாழ்க…’ என்ற கோசங்கள் கேட்டுக்கொண்டு தான் இருந்தது..

தீபன் சென்னை வந்ததுமே  வந்ததுமே அப்பா அம்மாவினோடு பேசிவிட்டு, பின் தர்மாவை டெல்லி அனுப்பிவிட்டு முதலில் காதரை அழைத்து “தொகுதி இப்போ வேற மாதிரி திருவிழா பார்க்கணும்.. சின்ன பசங்க இதுல இறங்க வேணாம். தனி தனியா க்ரூப் ரெடி பண்ணுங்க காதர்ணா.. எங்க எங்க போராட்டம் செய்யணுமோ செய்யட்டும். முக்கியமா லேடீஸ்.. அப்பாவோட பேர்.. அப்பாவோட புகழ்.. தொகுதி சார்ந்த நலத் திட்டங்கள் எல்லாமே வெளிய பேச விடுங்க..

அப்புறம் தொகுதில முக்கியமா ஒரு பத்து ஆட்டோவாது எரியணும்.. யாரோடதுன்னு கேட்டு பணம் கொடுத்திடுங்க.. எதிர்க்கட்சி சதின்னு ஒரு நூறு பேராவாது கோசம் போட்டு ஊர்வலம் போகணும். இதுக்கு மேல என்னென்ன செய்யணுமோ செய்ங்க.  இது முதல் நாள்… ரெண்டே நாள்ல மொத்தமும் அடங்கணும்.. எலெக்சனுக்கு முதல் நாள் கண்ட்ரோல் மாறிடும்.. சோ அதுக்குள்ள எல்லாம் எல்லாமே முடியனும்…” என்று சொல்லியிருந்தான்..

“தம்பி நாளைக்கு ப்ரெஸ் மீட்டுன்னு வேற சொல்றீங்க.. இப்போ..” என்று காதர் இழுக்க,

“ண்ணா… போராட்டம் நடந்தா தானே.. அப்பா அவங்களை சமாதானம் செய்ய முடியும்.. சாமதானம் செய்யனுமா பப்ளிக்கா பேசணும்.. ப்ரெஸ் மீட் அதுக்குதான். மீடியால சொல்றது போல அப்பாக்கு எதிரா அவர் பசங்க இல்லை, அவருக்கு பக்கபலமா கூட நிக்கிறோம்னு காட்டனும்..  கன்டன்ட் கிடைக்கிற வரைக்கும் வெய்ட் பண்ண கூடாது.. க்ரியேட் பண்ணனும்.. புரிஞ்சதா…” என்று சொல்லி அவரை அனுப்பி,

பின் நாகாவிடம் “எல்லா நேசனல் மீடியாவும் நாளைக்கு வரனும்.. தொகுதில நடக்குற சின்ன சின்ன விசயங்கள கூட கவர் அப் பண்ண சொல்லு.. எந்த சேனலுக்கு என்ன வேணுமோ அதை பண்ணிடலாம்..” என்று ஆளுக்கு ஒரு வேலையை பிரித்துக் கொடுத்துவிட்டு, திரும்ப வீடு வர விடியற்காலை நான்கு மணி.

உறக்கம் வருமா தெரியாது..!!

இருந்தும்  கண்கள் மூடிப் படுத்திருந்தான்.

முதல் நாள் வரைக்கும் அவனின் பொழுதுகள் எப்படி இருந்தது, இன்று எப்படி ஆனது??!!

இதுதான் அவனின் வாழ்க்கை. இதிலிருந்து பின்வாங்கிட முடியாது என்பது திண்ணமாய் உணர முடிந்தது.

ஆனால் ராகா??!!

அவளுக்கு இப்படியான வாழ்வு பொறுந்துமா.. அதிலும் அவள் விரும்பும் வாழ்வு என்னவென்று நன்கு அறிந்தபின்னே இப்படியான ஒரு சூழலில் அவளை கொணர்ந்து வைக்க முடியுமா?? மனம் என்னென்னவோ யோசிக்க, சிறிது நேரத்திலேயே அடுத்தடுத்து அழைப்புகள் வந்தபடி இருக்க, தீபனுக்கு வேலைகள் சூழ்ந்துகொண்டது.

மறுநாள் விடியல் செய்திகளே அவர்களின் தொகுதியில் நடக்கும் களேபரங்கள் தான். லைவ் ஓடிக்கொண்டே இருக்க, சிறிது நேரம் தொகுதி ஆட்களோடு பேசியவன், ஒருமுறை எங்கே சென்றும் நேரில் பார்த்துவிட்டு வந்தான். அதன் தீபன் எங்கேயும் போகவில்லை வீட்டினில் இருந்தான் மிதுனோடு.

மயக்க நிலையிலேயே விமானம் மூலம் மிதுன் இங்கே வந்திருக்க, முழு நேரம் அவனோடு தான் இருந்தான் தீபன். மருத்துவர்கள் வந்து அவர்கள் செய்ய வேண்டியது எல்லாம் செய்துவிட்டுச் செல்ல, உஷாவினை அழைத்தான், அவரோ வெறுமனே அறையினுள் எட்டிப்பார்த்தவர் பின் சென்றுவிட, மதியம் போலவே மிதுன் கண் விழிக்க, எதிரே தீபன் அமர்ந்திருப்பது கண்டு கண்கள் சுருங்கியது.

மயக்கம் அடைந்தது மட்டுமே அவனுக்குத் தெரியும். அதற்குமேல் என்ன நடந்ததோ தெரியாது இல்லையா..

சுற்றி சுற்றி பார்வையை சுழற்றிவிட, இருப்பது அவனின் அறையில் என்று புரியவும், மனதினில் ஒரு தைரியம் வரப்பெற்றது. எங்கே தீபன் தன்னை தனி இடத்திற்கு அழைத்து வந்துவிட்டானோ என்றே எண்ணியவனுக்கு.

இப்போது அது இல்லை என்று தெரியவும், இன்னும் புத்தியைக் கூர்மையாக்கினான். மிதுன் விழித்துவிட்டான் என்று தெரியவுமே தீபன் எழுந்து அவனின் அருகே வந்தவன்,

“எப்படி இருக்க மிதுன்..?” என, அவனின் இக்கேள்வியில் என்ன இருக்கிறது என்று விளங்கவில்லை.

அதிலும் தீபன் பார்த்த அந்தப் பார்வை, உன்னை என்றோ நான் கண்டுகொண்டேன் என்பதை அப்பட்டமாய்ச் சொல்ல,

“என்ன மிதுன் பாக்குற… டேய் அண்ணான்னு சொன்னவன் இப்போ இப்படி மயக்க மருந்து கொடுத்து தூக்கிட்டு வர வச்சிருக்கான்னு பாக்குறியா?!” என்றபடி அவனின் கைகளில் ஏறிக்கொண்டு இருந்த ட்ரிப்ஸ் நாளங்களை தீபன் வெறுமெனே பிடித்து பார்க்க,

‘எதுவோ செய்துவிடப் போகிறானோ…’ என்று பார்த்தான் மிதுன்.

மிதுனுக்கு பதவியாசை எத்தனை இருக்கிறதோ அத்தனை உயிர் பயமும் உண்டு.. அதானால் தானே இத்தனை நாள் அவனை ஒரு அறைக்குள் வைத்திருக்க முடிந்தது. எதுவும் முடியவில்லை எனும்பச்சத்தில் தானே, அதிலும் தன்னை எப்படியும் காப்பாற்றி விடுவர் என்கிற தைரியத்தில் தானே மிதுன் தன் கரத்தினை காயம் செய்தது.

ஆனால் அவனுக்குத் தெரியாததா?? தீபன் சக்ரவர்த்தி சில நேரம் ஈவு இறக்கம் இல்லாதவன் என்று.

Advertisement