Advertisement

                              நான் இனி நீ – 34

“யாருமில்லா தனியரங்கு… நீயும் நானும் தனியுலகில்…” இது மிக மிக பொருத்தம் தீபனுக்கும், ராகாவுக்கும். அதனை இப்படித்தான் சொல்லிட வேண்டும்.

சுற்றிலும் இயற்கை.. இயற்கை.. இயற்கை மட்டுமே..  அதனோடு அவர்கள்.. அவர்களின் காதல்.. அவர்களின் ஸ்பரிசம்.. அவர்களின் சிருங்காரம்.. அவர்களின் ஏகாந்தம்..

இங்கே யார் அவன், யார் அவள்.. இருவரும் அறிந்திடவில்லை.. நீயென்பது நானாகிய பின்னே, நாம் என்பது மட்டுமே அர்த்தமாகும்.. அவ்வர்த்தம் அனுராகாவிற்கும் சரி, தீபன் சக்ரவர்த்திக்கும் சரி அந்த நொடி மிக மிக நன்றாகவே புரிந்தது.

இனி அவனின்றி அவளில்லை…!!

அவளின்றி அவனில்லை..!!   

இப்படி இருந்துகொள்ள வேண்டும் என்றெண்ணி  இங்கே வரவில்லை. ஆனாலும் ரசவாதம் என்பது இயற்கை தானே. அதிலும் காதல் ரசவாதம், இயற்கையோடு இணைந்திருக்கும் இவ்வேளையில், நிகழாதிருந்தால் தான், பெரும் காதல் குற்றம்.

இரண்டு மிகப் பெரிய மரங்களுக்கு இடையில் இருந்த மர வீட்டினில், அந்நள்ளிரவு வேலையில், சிறய லாந்தர் வெளிச்சம் மட்டுமே இருக்க, காற்றோ சில்லென்று வீசிக்கொண்டு இருக்க, காற்றில் மிதந்து வரும் பல மலர் வாசமும்,  இரவு நேர பூச்சிகளின் ரீங்காரமும், இவனை அனைத்தையும் தாண்டி அவர்களின் காதல் பரிபாஷைகளும், மோக முத்தங்களும்  அங்கே பெரும் ஒலியாய் இருந்தது, பேரானந்தமாய் இருந்தது. முத்தங்கள் தான் எத்தனை.. அதன் வகை தான் எத்தனை..

இதழ்கள் என்னும் படிவழியில்,

இதயத்துக்குள் இறங்கியது..

காதல் காதல் காதல்..

யாருமில்லா தனியரங்கில்…

தீபன் கூட கேட்டான் “உன்ன ரத்தக் காட்டேரின்னு நினைச்சேன்.. ஆனா இப்படியொரு ராட்சசி ஆகிட்டயே..” என்று.

சொன்னவன் கரங்களும் அப்போது சும்மாயில்லை, அவன் கரத்தினுள் இருந்தவளும் “ யூ மேட் மீ டு பீகேவ் லைக் திஸ்..” என,

“லவ் யூ ராகா…” என்றான் அவனின் அந்த ப்ரத்தியேக, அவளின் மச்ச முத்தத்தில்..

இது இரவின் ஏகாந்தம் எனில், விடியலோ வேறொரு அழகினைக் காட்ட, “வாவ் தீப்ஸ்..!!!” என்று மகிழ்ச்சிக் கூத்தாடிக்கொண்டு இருந்தாள் அனுராகா.

அவர்கள் இருந்த மரவீட்டில் இருந்து பார்த்தால், சுற்றிலும் பச்சை பசுமை மட்டுமே. தூரத்தில் ஒரு அருவி விழுவதும் தெரிய, “அங்க போலாமா..??” என்று அனு கேட்க,

“ம்ஹும்..” என்றான் மறுப்பாய் புன்னகைத்தபடி.

“ப்ளீஸ் ப்ளீஸ் போலாம்… செமையா இருக்கு இந்த லொக்கேசன்.. நீ ஏன் இங்க முன்னமே என்னை கூட்டிட்டு வரல..” என்றவள் “போலாம் தீப்ஸ்..” என,

“நோ பேபி நோ… அங்க சேப் இல்ல.. ஒரு லிமிட் தாண்டி நம்ம வேற எங்கயும் போகக் கூடாது..” என்று தீபனும் சொல்ல,

“ஹேய்… திங் பண்ணி பாரு தீப்ஸ்.. நீயும் நானும் அந்த பால்ஸ்ல ஹக் பண்ணிட்டு நின்னா எப்படி இருக்கும்…” என்று அவனின் ஆசைகளை தூண்டிவிட

“அதுக்கேன் அங்க போகணும்.. இங்கவே ஹக் பண்ணிக்கலாம்..” என்று தீபன் கை நீட்ட,  

உம்மென்று முகம் தூக்கி வைத்துக்கொண்டவள் “போடா ராஸ்கல்..” என்று அவனின் கைகளை தட்டிவிட்டு அப்படியே சம்மனம் இட்டு அமர்ந்துகொண்டாள்.  

“வாட் ஹேப்பன்…” என்றவன், அவளை இடித்தபடியே அமர “இவ்வளோ தூரம் வந்தாச்சு…” என்று அவள் இழுக்க,

“வந்தது பெருசில்ல, நம்ம பாதுகாப்பு முக்கியம்.. அதில்லைன்னா இங்கயும் நான் கூட்டிட்டு வந்திருக்க மாட்டேன்..” என்றவன் “உனக்கு பயமா இல்லையா ராகா??” என,

“ஏன் பயம்??” என்றாள் கேள்வியாய்.

“இல்ல இப்படித் தனியா.. என்ன ஏதுன்னே தெரியாத ஒரு பிளேஸ்ல.. என்னோட.. எப்போ வேணா என்ன வேணாலும் நடக்கலாம்.. அதெல்லாம் பயமில்லையா???” என்று தீபன் கேட்க,

“ஹ்ம்ம்..” என்று யோசித்தவள் “இனி ஆக என்ன இருக்கு தீப்ஸ்??” என்றாள் கேலியாய் முகம் வைத்து.

அவள் செய்த பாவனை அவனை அவள்பால் மேலும் ஈர்க்க, அவளை இறுக அணைத்தவன் “சரியான டைட்டன் ராகா  நீ..” என, அதனைக் கேட்டு சத்தமாய் சிரித்தவள் “ம்ம் நேத்து நீ எத்தன டைம் ராஸ்கல் சொல்லுன்னு கேட்டத் தெரியுமா??” என்று கேட்க,

“இதெல்லாம் நீ கவுன்ட் பண்ணியா??” என்றான் அவனும் உல்லாசமாய்.

“ச்சே ச்சே.. கவுன்ட் பண்ணாலும் சொல்லமாட்டேன்..” என்று பிகு செய்தவள், “இரு தீப்ஸ் போட்டோ எடுக்கலாம்..” என்று அவளின் அலைபேசி கொண்டு பல பல புகைப்படங்களும், பின் செல்பிகளும் எடுக்க,

“என்னாச்சு உனக்கு.. சரியே இல்ல.. போட்டோஸா எடுத்திட்டு இருக்க..” என்று அவனும் கேட்க,

“தோணுது எடுக்கிறேன்..” என்றாள்.

ஆனாலும் அவளுக்கு ஏனோ புகைப்படங்கள் எடுக்கையில் எல்லாம் அவளினுள்ளே ‘என்னாச்சு அனு உனக்கு??’ என்ற கேள்வி வந்துகொண்டு தான் இருந்தது.

‘எதோ நடக்கப் போகிறது..’ என்பது மட்டும் அவளுக்கு திண்ணமாய் உணர முடிந்தது.

அது அவளுக்கா.. இல்லை தீபனுக்கா.. இல்லை இருவருக்குமேவா??!! அது தெரியவில்லை. எது எப்படி இருந்தாலும், அவனோடு இருக்கும் இத்தருணம் அவள் இன்றியமையாததாய் மாற்றிக்கொள்ள விரும்பினாள்.

இதற்குமேலொரு இன்பம் உண்டா, அது அனுராகாவிற்குத் தெரியாது. ஆனாலும் இந்த நொடியில் அவள் அவனோடு இன்னும் இன்னும் என்று உருகிப்போகவே எண்ணம்கொண்டாள். மனதில் எழும் கலக்கத்தை அவனிடம் சொல்லவும் இஷ்டமில்லை அவளுக்கு..

திடீரென அனுராகாவின் முகம் யோசனைக்குப் போகவும், “என்னாச்சு??!” என்று தீபன் கேட்க,

“ஹ்ம்ம் எவ்வளோ நேரம் இப்படியே இருக்க?? பாத் பண்ணனும்..” என்றாள், சட்டென்று முகம் மாற்றி.

மற்ற நேரமாய் இருந்தால், தீபன் அவளை கண்டுகொண்டு இருப்பான். ஆனால் இப்போதோ, அவனால் வேறெதுவும் நினைக்கக் கூட முடியவில்லை.

எப்படியும் மதியத்திற்கு மேலே கிளம்பிட வேண்டும்.. மாலையில் எப்போது வேண்டுமானாலும் தாரா வந்திடுவார், அனுராகாவை அவரோடு அனுப்பிவிட்டு அவனுமே மறுநாள் கிளம்பிட வேண்டும் என்ற எண்ணத்தில் தீபன் இருக்க, அனுராகாவும் இப்போது குளிக்கவேண்டும் என்று சொல்ல “இதோ அங்க ரூம் இருக்கே..” என்று ஒருப்பக்கம் கை காட்ட,

“ம்ம்ஹும்.. எனக்கு ஸ்விம் பண்ணனும் உன்னோட..” என்றாள்.

“வாட்..!!” என்று கேட்ட தீபனுக்கே சிறு அதிர்ச்சி தான்.

“எஸ் தீப்ஸ்.. உன்னோட ஸ்விம் பண்ணனும்..” என, “உனக்கு என்னதான் ஆச்சு பேபி…” என்று தீபன் கொஞ்சம் வியப்பாய் கேட்க,

“ம்ம் தெரியலை.. பட் தோணுது..” என்று அவளும் தோல் குலுக்கி சொல்ல, “நல்லா தோனுச்சு உனக்கு.. என்னை ஒருவழி பண்ணிடுவ போல நீ..” என்று தீபன் சொல்லிச் சிரிக்க, அவன் சிரிப்பை மௌனமாய் பார்த்து இருந்தாள் அனுராகா.

அவளின் மௌனம் கண்டு “ராகா..!!” என்று தீபன் அழைக்க,

“ம்ம்” என்றவளின் கண்களில் பிடிவாதம் தெரிய, “சரி வா..” என்று தீபன் எழ, “பால்ஸ்க்கு போறோமா??!!” என்றாள் ஆவலாய்.

“அப்போவே நோ சொல்லிட்டேனே..” என்றவன், அவர்கள் இருக்கும் மரவீட்டின் பின் புறம் செல்ல அனுராகாவும் அவனோடு செல்ல, பின்பக்கம் ஒருவர் மட்டுமே நுழையும் அளவு ஒரு கதவு இருக்க, “என்ன தீப்ஸ்??” என்றாள் புரியாது.

அந்த கதவினை ஒட்டி கீழே வரைக்கும் நீண்டிருந்த ஒரு சரிவுப் பலகையைக் காட்டி “இதுல மெதுவா கால் நீட்டி உட்கார்..” என,

“வாட்டர் ரைட்ஸ் போலவா??!” என்றாள், இன்னும் வியப்பாய்.

“ம்ம் அதே தான்..”

“பட் தண்ணி எங்கயும் இல்லையே..”

“இருக்கு டி.. நீ உட்கார்..” என்று அவளை சரியாய் கால்களை நீட்டி அமரவைத்து, அவனுமே அவளின் பின்னே அமர்ந்து, கால்களை முன்பக்கம் நீட்டி, அவளை தன்னோடு பின்னே சேர்த்துக்கொள்ள

“தீப்ஸ்.. மண் தரை தான் தெரியுது…” என்றாள் அனுராகா, கொஞ்சம் திகில் கலந்த குரலில்.

“ஒரு சேஞ்சுக்கு சேண்ட்ல ஸ்விம் பண்ண போறோம்..”

“தீப்ஸ்.. வேணாம்..” என்று சொல்லும்போதே, பின்னிருந்து ஒரு அழுத்தம் கொடுக்க “ஓ!! நோ..” என்று கண்களை மூடி அனுராகா கத்திக்கொண்டு இருக்க, இருவரின் உடலுமே அப்பலகையில் சரிந்து கீழே வர, அனுராகா தீபனின் கரத்தினை இறுகப் பற்றியவள், கண்களையும் இறுக மூடிக்கொள்ள, அடுத்த இரண்டாவது நொடி இருவருமே நீருக்குள் இருந்தனர்.

‘தொப்பென்று..’ நீரில் விழுந்தபின்னே தான் அனுராகா கண் திறக்க, நம்ப முடியாது சுற்றி சுற்றி பார்க்க, அவர்களை சுற்றிலு நீர் நிறைந்து இருந்தது. அப்போதுதான் அவளுக்குப் புரிந்தது தரை தளத்திற்கு கீழே தாங்கள் இருக்கிறோம் என்று.

“தீப்ஸ்.. இதென்ன..” என்று நீரில் அலவளாவிய படி கேட்க,

“அண்டர் வாட்டர் ஸ்விம்மிங் பூல்…” என்றான், அவள் முகம் காட்டும் வித வித பாவனைகளைப் பார்த்து.

“ரியல்லி… வாவ்.. நான் எக்ஸ்பெக்டே பண்ணல.. எப்படி இப்படி எல்லாம்..” என்றவள் சுற்றி சுற்றி நீந்தி வர,  அவன் நீந்தாமல், வெறுமெனே சாய்ந்திருப்பது கண்டு “கம்மான் ஜாயின் வித் மீ..” என்றாள் அனுராகா.

மூவர் நீந்தலாம்.. மேற்பகுதி நீரைக் காட்டிலும் அடியில் இருந்த நீர் ஜில்லென்று இருக்க அனுராகாவோ அவளுக்குத் தெரிந்த நீச்சல் வித்தை எல்லாம் செய்துகொண்டு இருக்க தீபனோ அதனை பார்த்தபடி தான் இருந்தான்.

முதல்நாள் அவளை நீச்சல் குளத்தில் தானே பார்த்தான்.. அன்றைய தினத்திற்கும் இன்றைக்கும் தான் எத்தனை வேறுபாடுகள். இருவரின் செயல்களும், இருவரின் உறவிலும்..

நீர் பரப்பிற்கு மேலே பக்கவாட்டு பகுதி முழுவதும் மூங்கில் பலகைகளால் சுவர்போல் எழுப்பியிருக்க, அதில் சாய்ந்து தீபன் நிற்க “கம்மான் தீப்ஸ்..” என்று மறுபடியும் சொன்னவள், நீந்தியபடி அவன்முன்னே போய் உள்ளிருந்து எழ, இதற்குமேல் அவன் சும்மாயிருந்தால் தான் அது நன்றாய் இராது.

இங்கே இவர்களின் ஜாலங்கள் எனில், அங்கே டெல்லியில் முதல் நாள் இரவில்                                    மிதுன் சக்ரவர்த்தி பெறும் யோசனையில் இருந்தான். ஒன்று இதில் அப்பா இல்லை தீபன், இல்லை இருவருமே சம்பந்தப் பட்டிருக்க வேண்டும் என்று அவனுக்கு ஊர்ஜிதமானது. இல்லையெனில் இத்தனை நாட்கள் அவர்கள் தன்னை தேடாது, தொடர்புகொள்ளாது இருந்திருக்க மாட்டார்கள் என்று தோன்றியது.

அரசியல் எதிரிகள் எனில், தேர்தல் நெருங்கும் இந்த காலத்தில் யாரும் இப்படி துணிந்து செய்திட மாட்டார்கள். அவர்களின் முழு கவனமும் தேர்தல் வேலையில் இருக்கும். அப்படியானால்??!! இதில் நிச்சயம் அப்பாவும் இருந்திட வேண்டும் என்று தோன்ற,

“அப்பா..!!!” என்று உச்சரித்தவன் முகத்தில் அப்படியொரு குரோதம்..

“தீபன கார்னர் பண்ணதுக்கு பதிலா உங்களைப் பண்ணிருக்கணும் பா.. அப்போ ஆட்டோமெட்டிக்கா எல்லாமே என் கைக்கு வந்திருக்கும்..” என்று முனுமுணுத்தவன், ஒரு முடிவிற்கு வந்துவிட்டான்.

அப்பவாவது.. மகனாவது.. என்று..

ஒருவனைத் தாக்கியும் பார்த்தாகிற்று.. எவ்வித பிரயோஜனமும் இல்லை. நாற்காலியில் கட்டப்பட்டு அமர்ந்திருப்பது தான் மிச்சம்.. இனி என்ன செய்வது என்று யோசித்தவனுள் மனதில் சட்டென்று ஒரு யோசனை.

இருந்தும் இதை செய்யலாமா என்றொரு தயக்கம். ஏனெனில் இப்போது தாக்கிக்கொள்ள போவது தன்னை..

இரண்டொரு நாள் போகட்டுமா என்று பார்த்தான். பின் எது செய்வதாகினும் அது இன்றே இப்போதே என்ற உறுதி கிளம்ப, அன்றைய இரவு உணவிற்காக காத்திருந்தான் மிதுன் சக்ரவர்த்தி. அப்போது மட்டுமே அவனின் கட்டுக்கள் அகற்றப்படும்.

நேரம் பார்த்து காத்திருக்க, உணவினை கொண்டு வந்தான் ஒருவான்.. இன்னொருவன் அவனின் கட்டுக்களை அவிழ்ந்த, கை கால்களை உதறியபடி மிதுன் எழுந்து நிற்க, இருவரும் என்னவென்று பார்க்க “ரெஸ்ட் ரூம் போகணும்..” என,

உணவினை மேஜையில் வைத்தவன், ரெஸ்ட் ரூம் கதவினைத் திறந்துவிட்டு, உள்ளே ஒருமுறை பரிசோதித்து பின் வர, மிதுன் உள்ளே போகவும், வெளிவாக்கில் கதவினை சாத்தி நின்றான்.

ஆம் தாழிடுவது எல்லாம் இல்லை. வெளியே இவர்களில் கதவினை சாத்திப் பிடித்து மட்டும் நிற்பர். உள்பக்கம் சாத்திக்கொண்டு அவன் ஏதேனும் செய்தால்??!!

உள்பக்கம் அவன் கதவு சாத்த முயன்றால், இனி எப்போதும் ரெஸ்ட் ரூம் கதவுகள் திறந்து விடப்பட மாட்டாது என்று முன்னமே சொல்லியிருந்தனர்.

ஆனால் இப்போதோ இருபது நிமிடங்கள் கழிந்தும் கூட மிதுன் உள்ளிருந்து வெளி வரவில்லை. அறையில் இருந்த இந்த இரண்டு பாதுகாவலர்களும் ஒருமுறை யோசித்து, குரல் கொடுத்துப் பார்க்க, சத்தமே இல்லை.

பின் யோசிக்காது, கதவினை திறந்து பார்க்க, மிதுன் சக்ரவர்த்தியோ கையில் கண்ணாடி வைத்து கீறி ரத்தம் வழிய சரிந்து கிடந்திருந்தான். பத்து நிமிடத்திலேயே இவர்கள் உள்ளே வந்திடுவர் என்று எண்ணியிருக்க, அவர்கள் இப்போது வர, அரை மயக்க நிலையில் இருந்தான் மிதுன் சக்ரவர்த்தி.

பாத்ரூம் ஜன்னலில் சொறுகப்பட்டு இருக்கும் கண்ணாடி ஒன்றினை உருவி, அதன் முனைகொண்டு கையினைக் கிழித்திருந்தான். முதலில் அதிக ஆழமில்லாது கிழித்தான். பின் இன்னொன்றும்.. ரத்தம் அதிகமாக வெளியேறினால் தான் தன்னை மருத்துவமனை அழைத்துச் செல்வர் என்று தெரியும். மனதை திடப்படுத்தியே இதனைச் செய்ய, இதோ மிதுன் எண்ணியதும் நடந்தது.

அன்றைய இரவிலேயே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, அந்த காவலாளிகளுக்கு என்ன செய்வது என்று விளங்காது, அவர்களுக்கு ஹெட் என்று இருப்பவனிடம் விஷயம் சொல்ல, அவனுமே பயந்து தான் போனான்.

மிதுன் சக்ரவர்த்தியின் உயிருக்கு எதுவும் எனில், சக்ரவர்த்தி தன்னை உண்டு இல்லையென்று அல்லவா ஆக்கிடுவார்.

“வெளிய நியூஸ் வரவே கூடாது.. பீ சேப்.. மேஜர் ட்ரீட்மென்ட் முடியவும், எவ்வளோ சீக்கிரம் முடியுமோ வீட்டுக்கு ஷிப்ட் பண்ணிடலாம்.. டாக்டர்ஸ் டீம் நான் அரேஜ் பண்றேன்..” என்று அவன் சொல்ல, மருத்துவர்களோ கண்டிப்பாக இரண்டு நாட்கள் மருத்துவமனையில் இருந்திடவேண்டும் என்று சொல்லிவிட,  மறுநாள் மாலைப் போலத்தான் மிதுன் கண் விழித்தான்.

அவன் கண் விழித்தபின்னே தான், அந்த ஹெட் மற்றும் அவனோடு இருந்தவர்களுக்கு நிம்மதியாக அப்போதுதான் தான் அவன் சக்ரவர்த்திக்கு அழைத்துச் சொல்ல, அவருக்கு அப்படியொரு கோபம் வந்தது.

“நைட்டே ஏன்டா சொல்லலை..” என்று அவர் எகிற,

“ஒரே டென்சனா போச்சுங்கய்யா.. தம்பி இப்படி பண்ணுவார்னு நினைக்கல..” என,

“நல்லா வந்து சேர்ந்தீங்கடா.. நைட்டே சொல்லிருந்தா, நைடோட நைட்டா அவன இங்க கொண்டு வந்திருப்பேன்.. இப்போ எவன் எவன் பார்த்து தோலைச்சானோ..” என்று கத்தியவர், “நான் சொன்னது என்ன நீங்க செஞ்சது என்ன??” என,

“தப்புதாங்கய்யா.. மன்னிச்சுக்கோங்க..” என்றுமட்டுமே அவர்களால் சொல்ல முடிந்தது.

“ச்சே.. அவன் யாரோடவும் தேவையில்லாம வாய் திறக்கக் கூடாது. டாக்டர்ஸ் ஏதாவது சொன்னா என் பேரு சொல்லு.. நான் வேற ஏற்பாடு செய்றேன்..” என்று திட்டிவிட்டு வைத்தவர், டெல்லியில் அவரின் நம்பிக்கைக்கு பாத்திரமான மற்றொருவரை அழைக்க,

அதற்குள் மிதுன், கண் விழிக்கையில் அருகில் இருந்த மருத்துவரிடம் திக்கி திணறியேனும் பேசி அவரின் அலைபேசியை வாங்கியிருந்தான்.

முதலில் பல்ராம் சேட்டிற்குத் தான் அழைக்கவேண்டும் என்று நினைக்க, பின்  அது வேலைக்கு ஆகாது என்றெண்ணியவன், எதிர்க்கட்சி ஒன்றில் அவனுக்கு சற்றே பழக்கமான ஒருவனை பிடித்தான். ஒருசிலரின் அலைபேசி எண்கள் எதற்கும் இருக்கட்டும் என்று மனனம் செய்திருப்பான் மிதுன். அது இப்போது அவனுக்கு உதவியாய் இருக்க, அவன் எண்ணியது போலவே அன்றைய இரவு  நேர செய்திகளில் பரபரப்பாய் பேசப்பட்டது

குடும்ப அரசியலா?? குடும்பத்தில் அரசியலா??!! என்று.

இவைகளை எல்லாம் பார்த்து சக்ரவர்த்தி திகைத்துப் போக “என்னடா நடக்குது…” என்று காதரிடம் கேட்க,

“ஒண்ணுமே புரியலைங்க அய்யா.. நியூஸ் சேனல் எல்லார்க்கிட்டயும் சொல்லிருந்தோமே.. நமக்கு சாதகமா தான் எல்லாம் போடணும்னு..” என்று அவரும் சொல்ல,

“நல்லா சொன்னீங்க..” என்றவர் “யாரை அனுப்பி என்ன செய்வியோ தெரியாது.. எல்லா நியூசும் மாறனும்.. நாளைக்கு பேப்பர்ல எவனும் எதுவுமே எழுதக் கூடாது..” என்று ஆணைகள் பிறப்பிக்க,

நாகாவும் தர்மாவும், இதற்குமேல் இங்கே தீபன் இல்லாதிருப்பது சரியில்லை என்று அவனுக்கே அழைத்துவிட்டனர்.

மாலை பொழுதின் ஆரம்பத்தில் தான் தீபனும் அனுராகாவும் D – வில்லேஜ் வந்திருக்க, அப்போதுதான் தீபன் வாய் திறந்தான் “இன்னிக்கு நைட் உன்னோட மாம் வருவாங்க..” என்று.

சத்தமிடுவாள் என்று பார்க்க அவளோ “ஓ!!” என்றவள், அதற்குமேல் எதுவும் சொல்லவில்லை.

“ராகா.. ஆர் யூ ஓகே..” என,

“யா தீப்ஸ்.. எப்படியும் கிளம்பித்தானே ஆகணும்.. லெட் சி..” என்றாள்.

அதற்குமேல் அவனும்  எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை. எதுவென்றாலும் தாரா வரட்டும் என்று இருக்க, சற்று நேரத்தில் சென்னையில் இருந்து அழைப்புதான் வந்தது உடனே வருமாறு.

நாகாவும் தர்மாவும் நடந்தவைகளை அனைத்தும் சொல்ல, “வாட்??!! என்னடா பண்ணிட்டு இருக்கீங்க நீங்கல்லாம்.. முன்னாடியே நமக்கு எவனும் சொல்லலையா??!” என்று தீபன் கத்த,

“நியூஸ் இங்க எதுவும் லீக் ஆகல.. எல்லாமே டெல்லியில இருந்து..” என,

“எங்கயா இருந்தா என்ன??!! எவ்வளோ பணம் கொடுத்திருப்போம் ஒவ்வொருத்தனுக்கும்..” என்று தீபன் எகிற,

“நீங்க வாங்க..” என்று வைத்துவிட்டனர்.         

அதன் பின்னே என்ன, தீபனும் அனுராகாவும் அவசர அவசரமாய் கிளம்பும் நிலை. இடையில் போன் பேசிக்கொண்டே இருந்தான்.. காதரோடு.. பின் அப்பாவோடு.. என்ன செய்திட வேண்டும் என்று நாகாவிடமும் தர்மாவிடமும் சொல்லிக்கொண்டே இருக்க,

“நீ பேசு..” என்று அனுராகா தான் அவனின் பொருட்களையும் எடுத்து வைக்க,   இப்படியாகும் என்று அவர்கள் இருவருமே நினைக்கவில்லை. தாரா வரவும், அனுராகாவை எப்படியும் அவரோடு சமாதானம் செய்து அனுப்பிட தீபன் நினைத்திருக்க, நடந்ததோ முற்றிலும் வேறு.

ஆனால் தீபன் சக்ரவர்த்தி முகத்தினில் தெரியும் அவசரம் கூட அனுராகா முகத்தினில் இல்லை..

“ராகா.. பீ சேஃப்… எது நடந்தாலும், நீ எதுவும் மூவ் பண்ணனும்னு யோசிக்கக் கூட கூடாது. எல்லாத்தையும் விட எனக்கு நீ முக்கியம்..” என,

“கிளம்பு தீப்ஸ்.. பார்த்துக்கலாம்..” என்றவள், எடுத்து வைத்துக்கொண்டே “எனக்குமே எல்லாத்தையும் விட நீ முக்கியம் தீப்ஸ்.. சோ அதை மனசுல வச்சு நீ எதுவும் பண்ணு..” என்றாள் ஒருவித ஆழ்ந்த குரலில்.

அவள் குரலின் பேதம் உணர்ந்து அவளைப் பார்க்க அனுராகா அவனினை ஏறிட்டும் காணவில்லை. அனைத்தையும் எடுத்து வைத்தவள் “ஓகே போலாம்..” என, அவள் மனதினில் ஏதோ ஒரு உறுத்தல்.. அனைத்தையும் தாண்டி தீபன் சக்ரவர்த்திக்கு எதுவும் ஆகப் போகிறது என்று.

“பிளைட் தானே…” என,

“நோ ராகா… மீடியா ஈசியா கேட்ச் பண்ணுவாங்க.. தேவையில்லாத விசயங்கள் வரும்.. நீ மீடியா முன்னாடி ஒரு டாக் ஆகறது எனக்கு கொஞ்சம் கூட இஷ்டமில்லை..” என்றவன்,

“கார் தான்..” என, இருவரும் கிளம்பிவிட்டனர்.

என்ன இருவரும் சென்னை சென்று சேரும் முன்னம் அடுத்தடுத்த செய்திகள் வெளிவந்து கொண்டு இருந்தன..

‘பிரபல தெனிந்திய மாடல் மர்ம மரணம்…’

‘மந்திரியின் மகனுக்கும் இவருக்கும் ஏற்கனவே தொடர்பு இருந்ததா..’

‘தொடர்பு பழக்கதிலா… இல்லை மரணத்திலுமா…’ என்று செய்திகள்..

அந்த குறிப்பிட்ட மாடல் வேராரும் இல்லை.. முன்னே தீபன் கொடுத்த ப்ரேக் அப் பார்ட்டிகளில் இந்த மாடலும் ஒன்று..

அப்போது எடுத்திருந்த புகைப்படங்கள் எல்லாம் இப்போது வெளி வந்தது..

யார் செய்கிறார்கள்.. எங்கிருந்து இதெல்லாம் வெளிவருகிறது என்று எதையும் யூகிக்க முடியவில்லை..

காரில் செல்லும்போதே தீபனுக்கு ஒவ்வொன்றும் தெரியவர நாகாவிற்கு அழைத்தவன் “வாட் தி ஹெல் கோயின் ஆன்..” என்று கத்த,

“எதுவுமே ஒன்னும் பண்ண முடியலை.. தொடர்ந்து நியூஸ் வந்துட்டே இருக்கு வித் போட்டோஸ்..” என்று அவனும் சொல்ல,

“எவனா இருந்தாலும் சரி.. நாளைக்கு விடியும்போது அவன் இருக்கக் கூடாது..” என்றான் தீபன் சக்ரவர்த்தி..

அவன் – சூழ்நிலை சூழ்ச்சிகள்..

அவள் – எதுவென்றாலும் மீண்டிடுவோம்..

காதல் – இவங்களுக்குன்னே வருவானுங்களோ…!! 

Advertisement