Advertisement

                           நான் இனி நீ – 33

சக்ரவர்த்தி, உஷாவிடமும் சொல்லிவிட்டார், அனுராகா தான் தீபனுக்கு என்று. உஷாவிற்கு அப்படியொன்றும் இதில் எகோபத்திய விருப்பம் இல்லை என்றாலும், இத்தனை தூரம் போனபின்னே மறுப்பதும் சரியில்லை என்று “சரி…” என்றுவிட்டார்.

அதன்பின்னே தான் லோகேஸ்வரன், தாராவினை வரச் சொன்னது.

இதற்கு நடுவில் உஷா, தீபனோடு பேச “ம்மா…” என்றவன் குரல் கேட்டவருக்கோ அப்படியொரு கோபம் வந்தது.

“பேசாதடா  நீ.. அப்பா புள்ளயா நீ?? நான் பெத்துக்காம நீங்க எல்லாம் வந்துட்டீங்களா.. அவர் சொன்னா எங்கயோ போய் உக்காந்துப்பியா??” என்று கடிய,

“ம்மா..!!” என்றான் இப்போது கம்மிய குரலில்.

“என்ன நொம்மா..?? உன்னோட ப்ரியாரிட்டில எப்பவுமே நான் இருந்ததில்ல..” என, இப்படியொரு வார்த்தைகளை பெற்றவளிடம் இருந்து கேட்கையில், ஒரு மகனுக்கு எப்படியிருக்கும்.

முன்னே இப்படி உஷா சொல்லியிருந்தால் “ம்மா நீயா எதுவும் திங் பண்ணிக்காத..”  என்று சொல்லி கடந்திருப்பான்.

அதன் பின்னே அதனை மறந்தும் போயிருப்பான்.

ஆனால், இப்போதோ அனுவின் வார்த்தைகள் கொடுத்தத் தாக்கம், அம்மாவையும் வேறொரு கோணத்தில் பார்க்க வைத்தது. அவரின் வார்த்தைகளை ஆழ்ந்து நோக்கவேண்டும் என்று தள்ளியது.

“ம்மா… எப்பவுமே யூ ஆர் மை மாம்…” என்றவனின் குரலும் கரகரத்துப் போக,

“என்னவோ.. எடுத்து சொல்ற நிலை எல்லாம் நீயும் பெரியவனும் தாண்டிட்டீங்க. சொல்றதும் இப்போ மரியாதையில்லை. ஒன்னுமட்டும் சொல்லிக்கிறேன்.. கல்யாணம்னு பண்ணி வச்சா, வர்ற பொண்ணோடவாது நல்லபடியா வாழு..

உனக்கு எங்க பொண்ணு செட்டாகும்னு இருந்தேன்டா.. நீ கொடுத்த ப்ரேக் அப் பார்டிக்கு யார்கிட்டயும் நிக்க மாட்டேன்னு நினைச்சேன்.. ஆனா உன்னையும் ஒருத்தி பெருசா நினைச்சு வந்திருக்கான்னா அது ரொம்ப பெருசு..” என,

“ம்மா நீ என்னை டோட்டல் டேமேஜ் பண்றம்மா…” என்றான் தீபன் சக்ரவர்த்தியும்.

இவர்கள் பேசுவதை பார்த்துக்கொண்டு தான் இருந்தாள் அனுராகாவும்.. அம்மாவிடம் பேசும்போது, அவன் முகத்தில் தெரியும் குறும்பும், நொடிப்பொழுதில் வந்துபோன சின்ன வருத்தமும், அவளின் கண்களில் அப்படியே விழுந்து வைக்க, கன்னத்தில் கை வைத்து பார்த்துக்கொண்டு இருந்தாள்.

செல்லமாய் அவளின் தலையை ‘அந்தப்பக்கம் பாரு..’ என்று தள்ளியவன், உஷாவினோடு பேச, அனுராகா திரும்பவும் அவனைப் பார்த்து நன்றாகத் திரும்பி அமர்ந்துகொண்டாள்.

‘ஏய் போ டி…’ என்று வாய் அசைத்தவன், “ம்மா..” என்று பேச, அனுராகாவோ சத்தம் வராது சிரித்துக்கொண்டு இருந்தாள்.

ஒருவழியாய் உஷாவோடு பேசிவிட்டு வைத்தவன் “நீ என்ன இவ்வளோ சேட்டை பண்ற..?” என்று அனுவிடம் கேட்க,

யோசிக்காது அவளிடம் இருந்து பதில் வந்தது “நான் இப்படில்லாம் இருந்ததே இல்லை தீப்ஸ்..” என்று.

அவள் என்னவோ சாதாரணமாய் தான் சொன்னாள், அவனுக்குத்தான் எப்படியோ போனது. சிறு சிறு விசயங்களில் கூட, அனுராகா அவளின் நாட்களில் இயல்பாய் இருந்ததில்லையோ என்று எண்ணியவன்,

“இனிமே எப்பவும் இப்படியே இரு..” என்றவன், “ரவுண்ட்ஸ் போலாமா..” என,

“ம்ம்…” என்று எழுந்துவிட்டாள்.

அன்றைய காலை வரைக்கும் கூட, சண்டைகள் இருந்தது. இப்போது திடீரென அனுராகா அப்படியே வேறொரு மனநிலைக்குப் போய்விட, வேறெதுவும் பேசி தீபனும் அதனை கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை. அவனுக்குத் தெரியும், எப்படியும் இரண்டொரு நாளில் அப்பா அழைத்திடுவார் என்று.

அதற்குள் அனுவையும் சென்னை செல்வதற்கு தயார் செய்திடவேண்டும் என்று நினைத்தவன்,

“ஒருவேளை உன்னோட அம்மா அப்பா இங்க வந்தா என்ன செய்வ ராகா??!!” என,

“அப்படி எதுவும் நீ பண்ணி வச்சிருக்கியா..” என்றாள் அத்தனை நேரமிருந்த அமைதி மாறி.

“ஜஸ்ட் தோணிச்சு கேட்டேன்..” என்று தீபன் தோள் குலுக்க, அவனின் கரத்தோடு பிணைத்திருந்த கரத்தினை விலக்கியவள், தள்ளி நடக்க,

“இப்போ எதுக்கு இது??!!” என்று பார்த்தான்.

தூரத்தில் எங்கேயோ நாட்டுபுற பாடல் கேட்டுக்கொண்டு இருந்தது. சத்தம் வரும் திசை நோக்கி அனுராகா நடக்க, அவளினைத் தொடர்ந்து தீபனும் நடக்க, எங்கிருந்து இப்படியொரு மௌனம் வந்து குடிகொண்டது என்று இருவருக்கும் தெரியவில்லை.

ஆனால் அனுவின் முகம் பார்த்தால், எதையோ யோசிக்கிறாள் என்று தோன்ற, தீபனும் விட்டுவிட்டான்.

இங்கே தங்குதல் என்பது நிரந்தரமல்ல..

அனுராகாவை தனியே விட்டு அவன்மட்டும் செல்வது என்பதும் உசிதமல்ல..

எது எப்படியாகினும் தீபன் கிளம்புகையில், அனுராகாவும் அவனோடு கிளம்பிடவும் வேண்டும்.

அவளே யோசித்து ஒரு முடிவிற்கு வரட்டும் என்றெண்ணி அமைதியாய் தீபன் நடந்து வர, அவனுக்கு முன்னே நடந்துகொண்டு இருந்தவள்,

“என்ன சாங் இதெல்லாம்..” என்றாள் மெதுவாய்.

ஏதாவது சொல்வாள் என்று பார்த்தால், அனுராகா இதனைக் கேட்க, அவளை புரியாத பார்வை ஒன்று பார்த்தவன் “பாரின் ஆட்கள் நிறைய வந்திருக்காங்க.. சோ, அவங்களுக்கு இங்க ஸ்பெசல் ஷோ  போடுவாங்க… அதுக்கான ப்ராக்டீஸ் போயிட்டிருக்கும்..” என,

“என்ன ஷோ..??” என்றாள் கொஞ்சம் ஆர்வமாய்.

“ம்ம் கூத்து.. எட்டுக்கட்டி பாடுறது. டிராமா இப்படி.. இன்னும் நிறைய ஒவ்வொரு நாள் ஒவ்வொன்னு..”

“ஓ..!! அப்.. அப்போ நம்மளும் பாக்கலாமா.. நான் இதெல்லாம் பார்த்ததில்ல தீப்ஸ்..” என, அவள் முகத்தில் நிஜமாய் ஆவல் தெரிய ,

“ஓகே..!! டன்.. மேடம்கு சிறப்பு வரவேற்பு கொடுக்க வச்சிருவோம்…” என்று அவனும் சொல்ல, அனுராகா வேறு எதைப்பத்தியும் பேச விரும்பவில்லை என்பது அவனுக்கு நன்கு புரிந்தது.

சரி, சக்ரவர்த்தி அனுராகாவின் பெற்றோரிடம் பேசிவிட்டு சொல்லட்டும், பின் அதனைப் பற்றி இவளிடம் பேசுவோம் என்று எண்ணிக்கொண்டவன், அவனும் அத்தோடு அந்த பேச்சினை விட்டான்.

இருவரின் பெற்றோர்களும் சந்திக்கையில், சக்ரவர்த்தி மட்டுமே பேசினார்.. உஷா அமைதியாகவே இருந்துகொள்ள, தாராவும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.

“என் பையன் எனக்கே யோசிக்க டைம் கொடுக்கலை. ரெண்டுபேருமே வளர்ந்த பசங்க.. அவங்களுக்குத் தெரியாததும் இல்லை. நமக்கு புரியாததும் இல்லை. நீங்க என்ன சொல்றீங்க??” என்று லோகேஸ்வரனிடம் கேட்க,

“இவ்வளோ தூரம் ஆகிடுச்சு.. சோ.. எங்களுக்கும் அப்ஜக்சன் எதுவுமில்லை..” என்றவர் தாராவினைப் பார்த்து “என்ன தாரா..” என,

அவரோ “எனக்கு என் பொண்ணு நல்லாருக்கணும்.. அவ்வளோதான்..” என்று சொல்ல,

உஷாவோ பட்டென்று “இதெல்லாம் நீங்க முன்னமே யோசிச்சு இருக்கணும்..” என்றுவிட்டார்.

தாராவிற்கு அப்போதும் லோகேஸ்வரன் மீது கோபம் குறையவில்லை. இது கோபம் என்பதனை விட, அப்பா என்கிற பொறுப்பில் இருந்து அவரும் இறங்கி, அம்மா என்ற பொறுப்பினை தன்னையும் சரிவர செய்ய விடாது செய்துவிட்டார் என்ற ஆதங்கம்.

அதிலும் உஷா இப்படிச் சொல்லவும், தாராவிற்கு மிகுந்த அவமானமாய் போய்விட்டது. அடுத்து அப்படியே வாய் மூடிக்கொள்ள,

“சரி.. அப்போ எலக்சன் முடியவும் மறுநாளே நிச்சயம் வச்சுக்கலாம்.. கல்யாணம் அடுத்த மாசத்துல நல்ல நாள் பார்த்துடலாம்..” என்று உடனே உடனே  முடிவு செய்ய,  மறுப்பாய் இவர்களும் ஒன்றும் சொல்லவில்லை.

‘அனு எப்போ வருவா..’ என்று கேட்க தாராவிற்கு வார்த்தைகள் நா வரைக்கும் வந்து நின்றுபோனது.

ஆனாலும் தெரிந்துகொள்ளத் தோன்ற “ஒருவார்த்தை பசங்களோடவும் சொல்லிட்டா இட் வில் பீ குட்..” என்று லோகேஸ்வரனைப் பார்த்து பொதுவாய் சொல்ல, சக்ரவர்த்தி மறுநொடியே மகனுக்கு அழைத்துவிட்டார்.

“பேசி முடிச்சிட்டோம்டா.. சந்தோசமா…” என,

“நீங்க என்ன பேசினீங்கன்னு எனக்குத் தெரியாது.. சந்தோசமான்னு கேட்டா என்ன அர்த்தம்ப்பா…??” என்று அவனும் கேட்க,

‘இவன நான் இப்படி வளர்த்து வச்சுட்டேனே..’ என்று எண்ணியவர் “டேய்..!!” என்று பல்லைக் கடிக்க,

“ஹா ஹா.. ப்பா.. சும்மா.. ரொம்ப சந்தோசம்…” என்றவன், “ப்பா.. அனுவோட அம்மாவ மட்டும் இங்க வர சொல்ல முடியுமா..” என்றான், அனுராகா இதனைக் கவனிக்கவில்லை என்று ஊர்ஜிதம் செய்துகொண்டு.

“ஏன்டா…?”

“நான் சொன்னேன் சொல்லுங்கப்பா.. அதுவரைக்கும் பிக்ஸ் பண்ணது எதுவும் அனுக்குத் தெரியவேணாம்.. அவளைக் கேட்காம இதையும் டிசைட் பண்ணிட்டாங்கன்னு பீல் பண்ணுவா.. சோ.. நாளைக்கு நைட் இங்க இருக்கிறது போல வரசொல்லுங்க அப்படி இல்லன்னா அடுத்த நாள் கூட ஓகே..” என,

“ம்ம் சரி..” என்றவர், மகன் சொன்னதைச் சொல்ல,

‘இதுகூட உங்களுக்குத் தோணலை தானே…’ என்பதுபோல் பார்த்து வைத்தார் தாரா லோகேஸ்வரனை.

அனுராகாவும், தனக்குத் தெரியாது தன்னைச் சுற்றி என்னவோ நடக்கிறது என்று யூகித்துதான் வைத்திருந்தாள். அவளுக்குத் தெரியும்தானே, தீபன் சும்மா இருக்க மாட்டான். லோகேஸ்வரனும் சும்மா இருந்திட மாட்டார் என்று.

எதுவென்றாலும், யார் என்றாலும், எந்த விஷயம் என்றாலும் என்னிடம் வந்து கேட்கட்டும் பின் பார்ப்போம் என்று அவளுமே எண்ணிக்கொள்ள, இங்கே இருக்கும் நாட்களை தீபனோடு மகிழ்ச்சியாய் அனுபவிக்க எண்ணினாள்.

தீபன் சக்ரவர்த்தி மட்டுமே அவளுக்கு இப்போது பிரதானமாகிப் போனான்.

ஒருவன் மீது இத்தனை பிடிப்பு வருமா??!! என்று அவளுக்கே ஆச்சர்யமாகிப் போனது. இதற்கு அவனுமே அவளைக் காயப்படுத்தியவன் தான்.

ஆனால் அந்த காயங்கள் எல்லாம் இப்போது எங்கோ காணாது போயிருந்தது. இவனோடு மட்டும் தான் தன்னால் இயல்பாய் பொருந்திப் போக முடியும் என்பதனை நன்கு உணர்ந்துபோனாள் அனுராகா.

இது ஒன்று போதாதா..?!!

இவன் மீது இத்தனை காதல் எப்படி சாத்தியம்??! இக்கேள்விக்கு பதில் என்பது அவர்கள் வாழ்ந்து பார்ப்பதில் தான் இருக்கிறது. இதையே தீபனும் சொன்னான்.

“உன்ன எப்படி தீப்ஸ் நான் இவ்வளோ லவ் பண்ணேன்..” என,

“ம்ம் அப்போ என்னோட லவ் உனக்குத் தெரியலையா??” என்று இவனும் கேட்க,

“ம்ம்ச் நான் கேட்டதுக்கு பதில் சொல்லு தீப்ஸ்..” என்று ராகா பிடிவாதம் செய்ய,

“தெரியலை.. எனக்கும் தெரியலை.. நான் ஏன் உன்னை இவ்வளோ லவ் பண்றேன்னும்.. ஒருவேளை நம்ம வாழ்ந்து பார்த்தா தான் புரியுமோ என்னவோ..” என்ற தீபனின் முகத்தினில் கூட அதே பாவனை தான்.

வாழ்ந்துவிட வேண்டும்.. இவளோடு..!! இவளை விட்டுவிடக் கூடாது..

விடும் நிலை வந்தால், அவன் இருந்திட மாட்டான். அவன் இல்லை எனும் நிலை வருமாயின், அவளை தனியே விட்டும் போய்விட மாட்டான். வாழ்வாகினும் சரி இல்லை எதுவாகினும் சரி அவளோடு மட்டுமே. எதுவென்றாலும் அவளை தன்னோடு இருத்திக்கொள்ள வேண்டும்.

அவளிடமே சொன்னவன் தானே “ஒன்னு என்னோட வாழ்ந்திடு.. இல்லை கொன்னுடு..” என்று.

இதெல்லாம் மனதினில் ஓட, அனுராகா அங்கே இருந்த கட்டிலில் சாய்ந்திருந்த, தீபன் அவனாகவே சென்று அவள் மீது சாய்ந்துகொள்ள,

“தீப்ஸ்..!!” என்றபடி அவளும் அணைத்துக்கொண்டாள்.

நேரம் செல்ல செல்ல, இருவரின் மௌனமும் கூடிக்கொண்டே தான் போனது.. மதிய உணவு வர, அதனை உண்டவர்கள்,   இப்படியே மாலை வரை ஓட்ட, தீபனின் யோசனையோ தாரா இங்கே வந்தால், அனுராகா எப்படி நடந்துகொள்வாள் என்பதிலேயே இருந்தது.

அனுராகா அவனை கவனித்து கவனித்துப் பார்த்தவள் “தீப்ஸ்.. நீ யோசிக்கிறது எதுவா இருந்தாலும் பரவாயில்ல.. இப்போ கிளம்பலாம்..” என,

“நான் என்ன பெருசா யோசிச்சிட போறேன்..” என்றபடி அவனும் கிளம்ப,

“ஹா.. ஹா.. நீல்லாம் யோசிக்கிறதே பெருசு தீப்ஸ்…” என்று அவனைக் கிண்டலடித்தபடி அனுராகாவும் கிளம்ப,

“ம்ம் பேசு பேசு..” என்றவன் சிரித்துக்கொண்டான்.

“எப்போ ஷோ ஸ்டார்ட் பண்ணுவாங் ..??”

“சரியா சிக்ஸ்க்கு..”

“எப்போ முடியும்..” என, அவளை முறைத்தவன் “ஒன் ஹவர் தான்..” என,

“அப்புறம் என்ன செய்றது??!!” என்றாள்.

“திரும்ப ஒரு ரவுண்ட்ஸ் போய்ட்டு ரூம்கு வரலாம்..”

“ம்ம்ச் போரிங்..” என்று அனுராகா முகம் சுளிக்கவும், தீபனுக்கு புரிந்துபோனது, இனி அனுராகாவை இங்கிருந்து கிளப்புவது அத்தனை கடினமில்லை என்று.

எத்தனை நாட்கள் இங்கே எந்த வேலையையும் செய்யாது உண்டுவிட்டு இருக்க முடியும்.. காதல் கூடல்களும் எத்தனை நாட்களுக்கு.. இது இவர்களின் நிஜ வாழ்வு அல்லவே..

அவளைப் பார்த்தவன் “ஓகே என்ன பண்ணலாம்.. சாய்ஸ் இஸ் யுவர்ஸ்..” என,

“எங்காவது கூட்டிட்டு போ.. யாருமே இருக்கக் கூடாது.. நீயும் நானும் மட்டும்.. புதுசா ஒரு இடம் போவோம்… எங்காவது..” என்றவளின் முகத்தினில் புதிய பாவனைகள்.

“இங்க மட்டும் என்ன ராகா.. யாரும் நம்மள டிஸ்டர்ப் பண்ணலயே..” என்றவன் அவளின் முகம் நிமிர்த்தி தன்னிடம் நெருக்கிப் பார்க்க,

“டிஸ்டர்ப் இல்ல.. பட் என்னவோ.. நீயும் நானும் மட்டுமா இருக்கணும் போல இருக்கு.. எப்படி இருந்தாலும் நம்ம கிளம்பித்தான் ஆகணும்.. அங்க போனா என்னென்ன நடக்கும் எனக்குத் தெரியல.. ஜஸ்ட் ஜஸ்ட் உன்னோட இருக்கற இந்த டேஸ்.. எனக்கு மட்டுமே சொந்தமா வேணும்போல இருக்கு தீப்ஸ்.. ” என்றவளின் குரலில் அப்படியொரு மென்மை.

“ம்ம்ம்..” என்று யோசித்தவன், “இங்க தள்ளி இருக்க ஹில்ஸ்ல ட்ரைபள்ஸ் இருக்காங்க.. அங்க போலாமா??” என,

“நான் சொன்னது சுத்தி யாருமே இருக்கக் கூடாதுன்னு..” என்று அவள் குரல் மாற,

“அடாடா.. அங்க நிறைய ப்ளேசஸ் இருக்கும்மா.. கூட்டிட்டு போறேன்.. பட் நாளைக்கு ஈவ்னிங் திரும்பிடணும்..” என்றான் கண்டிப்பாய்.

“டன்.. டன். அப்போ இப்போவே பேக் பண்ணிடலாமா??” என்றவளின் முகம் அப்படியே மாறிப்போனது.

சுற்றுலா செல்லும் சிறுமிபோல அனுராகா குதிக்க, “ஜஸ்ட் டூ செட் ட்ரெஸ் தென் தேவையான திங்க்ஸ்.. போதும்.. வந்து பார்த்துப்போம்..” என்றவன் அவளை கூத்துப் பார்க்க அழைத்துச் செல்ல, அனுராகா என்னவோ புகைப்படங்களாய் எடுத்துத் தள்ளினாள்.

வழக்கத்திற்கு மாறாக அவனோடு மேலும் நெருக்கம் காட்ட அவனுக்குப் புரியவில்லை. திடீரென்று ஏன் இவள் இப்படி செய்கிறாள் என்று.

அனுராகாவின் மனதில் ஏதோ ஒன்று இருக்கிறது என்பது மட்டும் புரிந்தது. அது என்னவென்பது அவளாய் சொன்னால் தானே தெரியும்.

“என்ன ராகா..??” என்று கேட்டதற்குக் கூட, தீபனின் இதழ்களில் அழுந்த இதழ் பதித்தவள் “என்னை என் போக்குல விடு..” என,

முடிவே செய்துவிட்டான் ‘எதுவோ மனசுல வச்சிட்டு பண்றா..’ என்று..

கூத்துப் பார்க்க கிளம்பும் முன்னமே, D – வில்லேஜ் அட்மினை அழைத்து, தாங்கள் பக்கத்தில் இருக்கும் மலை பிரதேசம் செல்லப் போவதை சொல்லி அதற்கான ஏற்பாடுகள் செய்யச் சொல்லிவிட்டே தீபன் கிளம்ப, கூத்து முடிந்து அடுத்த ஒரு இரண்டு மணி நேரத்தில், தீபன் சொன்ன இடத்திற்கு நெருங்கியிருந்தார்கள் அனுராகாவும் தீபனும்.

“இங்க நம்ம முன்னமே வந்திருக்கலாம் தீப்ஸ்..” என,

“நீ முன்னமே கேட்கலையே..” என்றான் அவன்.

மலைவாழ் மக்கள் வாழும் இடம்தான்.. ஆனால் அவர்களின் வாழ்வு முறைகள் எதுவுமே மாறாது இருந்தது. பூர்வ குடிகள் எப்படி அவர்களின் வாழ்வை தொடங்கியிருந்தார்களோ அப்படியே இப்போதும் இருக்க, மிஞ்சிப் போனால் ஒரு பத்து குடும்பம் இருந்தது அவ்வளவே.

அனைவருக்குமே இவனைத் தெரிந்தும் இருக்க, அவர்களின் பார்வையில் தீபன் மீது மரியாதை தெரிய

“எப்படி தீப்ஸ்??” என்றாள்.

“D வில்லேஜ்ல இருக்க எல்லா கைவினைப் பொருளும் இவங்க செய்றது தான்.. கூத்து நடந்தப்போ ஒரு பானம் கொடுத்தாங்களே அதெல்லாம் இவங்க ப்ரிபரேசன் தான்.. இவங்கள்ல சிலர் நேரடியா அங்க வந்து வேலை செய்றாங்க..” என,

“ஓ..!! குட் ஐடியா..” என்றாள் மெச்சுதலாய்.

தீபனோ அவன் போட்டிருந்த பர்முடாஸ் பாக்கெட்டில் கை விட்டபடி “ஐடியா இல்லை ராகா.. பிராயச்சித்தம்..” என,

“வாட்??!” என்றாள் விளங்காது.

“அரசியல்.. நியாயங்கள் மட்டுமே கடைபிடிக்கிற விஷயம் இல்லையே.. பண்ற அநியாயத்துக்கு எல்லாம் இது ஒருவகை பிராயச்சித்தம்.. இது ஈக்குவளைஸ் பண்ணாது.. பட் இது மாதிரி இன்னும் கொஞ்சம் இருக்கு.. சில நேரம் எனக்குள்ள எழற கில்டினஸ்க்கு ஆறுதல் சொல்றமாதிரி..” என,

“ஓ..!! இப்படி நினைக்கிற அளவுக்கு நல்லவனா டா நீ??” என்று அனுராகாவும் சொல்ல,

“அடிப்பாவி.. எது சொன்னாலும்.. நீ என்னை கெட்டவன்னு தான் நினைப்ப போல..” என்றான் சிரித்தபடி தீபன் சக்ரவர்த்தி.

ஆனால், இப்போது அவன் பேசிய வார்த்தைகள் நிஜம்.. தான் செய்வது தவறு என்பது தெரிந்தும் சில நேரங்களில் அவன் சில காரியங்கள் செய்யும் நிலை. அரசியல் தர்மத்தில் அது சரி, மனித தர்மத்தில் அது தவறு.. அப்படியிருக்கையில் இப்படியான ஆட்களுக்கு செய்யும் உதவிகள் அவனுக்கு ஒரு சிறு ஆறுதல்.

“உன்னை நல்லவன்னு யார் வேணா சொல்லிக்கட்டும்.. பட் கெட்டவன்னு நான் மட்டும் தான் சொல்லிக்க முடியும்.. வேற யாரும் சொன்னா, அப்புறம் அனுராகா நிஜமா கெட்டவளா மாறிடுவா..” என்றாள் சீரியசாக.

இப்படியே அனுராகாவும், தீபனும் பேசியபடி ஒரு காட்டுப் பாதையில் வர, சுற்றிலும் மரங்களும், இருளும் தான். அவர்களுக்கு வழிக்காட்டவென இருவர் பின்னே வர, அனுராகா முடிந்தமட்டும் தீபனை ஓட்டிக்கொண்டே தான் நடந்தாள்.

“நீதானே கேட்ட தனியா இருக்கணும்னு.. இப்போ பயப்படுற..” என,

“கால்ல என்னென்னவோ உரசுது தீப்ஸ்..” என்று அவளும் சொல்ல, “ம்ம் இதோ வந்துட்டோம்..” என்றவன் ஓரிடத்தில் நிற்க, பின்னே வந்தவர்களை காணோம்.

“எங்க இவங்க??” என்று அனுராகா காண்கையிலேயே, அந்த இருட்டிலும், கையில் இருந்த மெல்லிய லாந்தர் வெளிச்சத்திலும் லாவகமாய் மரமேறியவர்கள்,  ஏணி போன்ற ஓர் அமைப்புடைய ஏறு பலகை ஒன்றை இறக்கிவிட,

“இதோ அங்கதான் ஸ்டே..” என்று மேலே கை காட்டினான் தீபன் சக்ரவர்த்தி.

இரண்டு மரங்களுக்கு இடையில் இருந்த ஒரு மர வீடு.. இருந்த மெல்லிய வெளிச்சத்தில் அதுமட்டும் தான் தெரிந்தது. ஆனால் மரங்கள் இரண்டும் பெரும் சுற்றளவை கொண்டதாய் இருக்க, “தீப்ஸ்..!!!” என்றாள் கண்கள் விரித்து.

“ஹவ் இஸ் இட்..??!!”

“நான்.. நான்.. ஐ டிட்ன்ட் எக்ஸ்பெக்ட் திஸ் தீப்ஸ்..” என்றவளுக்கு முகத்தினில் இன்னமும் ‘வாவ்..!!!’ பாவனை தான்.

“எப்போவாது இங்க வருவேன்.. சுத்தி யாரும் இல்லாம.. நான் மட்டுமே.. இப்போ நீயும் நானும்..” என,

அதற்குள் மேலே ஏறியவன் ஒருவன் இறங்கிவிட, மேலேயே ஒருவன் நின்றுகொண்டான்.

தீபன் முதலில் அனுராகாவை மேலே ஏற்ற, பின் தீபன் ஏற, கீழே ஒருவன் அந்த பலகையை பிடித்து நின்றுகொண்டான்.

தேக்கு மரத்தால் அந்த சிறு மர வீட்டினை வடிவமைத்திருந்தார்கள் போலும்.. உள்ளே ஒரு அரை.. அதில் விரிப்புகள், நீர், பழங்கள், பின் சில உணவு வகைகள்   எல்லாம் புதிதாய் இருக்க,

“எப்படி தீப்ஸ்??!!” என்றாள் வியப்பாய்.

“நான் வர்றப்போ இங்க ஸ்டே பண்ணுவேன்.. நான் வர்றேன்னு தெரிஞ்சதும் இதெல்லாம் ரெடி பண்ணிருக்காங்க.. கூட நீ வருவன்னு தெரியாது..” என,

“ஓ..!!” என்றவள், சுற்றி சுற்றி பார்த்தாள்.

இவர்களோடு வந்தவர்கள், சிறிது நேரத்தில் தீபனிடம் சொல்லிக்கொண்டு கிளம்பிவிட,   இருள் சூழ்ந்து தான் இருந்தது. லாந்தர் விளக்கு மட்டுமே.

செல்போன் டார்சினை கூட அமர்த்திவிட்டான் தீபன்..

அப்படியும் தரையில் இருந்து முப்பது அடிக்கு மேலே இருக்கும்.. அப்படியானால் இந்த மரத்தின் உயரம் தான் என்ன??!!

இதெல்லாம் அனுராகாவிற்குத் தோன “மார்னிங் பாரு ராகா..” என்றான் தீபன் சக்ரவர்த்தி..

“பார்க்கணும்.. பார்க்கணும்… இங்க ஒன் டே எல்லாம் போதாது போல..” என்றவள் அவனை இறுக அணைத்துக்கொண்டாள்.

இப்படி தீபன் அனுராகாவோடு சல்லாப்பித்துக்கொண்டு இருக்க, மறுநாள் விடியல் என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதம்..

மிதுன் அவனின் திட்டத்தினை தெள்ளத் தெளிவாய் வகுத்துவிட, நேரம் பார்த்துக்கொண்டு இருந்தான். இரண்டொரு நாட்கள் காத்திருக்கவேண்டும் என்று நினைத்தவன், ஒரு முயற்சி செய்து பார்ப்போமே என்று அப்போதே முயன்று பார்க்க, அவனின் நல்ல நேரமோ என்னவோ சரியாய் நடந்தேறியது அனைத்தும்.

விஷயம் அப்படியே சக்ரவர்த்திக்கு வர “டேய்.. நான் என்ன சொன்னேன்.. நீங்க என்ன பண்ணி வச்சிருக்கீங்க…” என்று சத்தம் போட,

“மன்னிச்சுக்குங்க அய்யா..” என்ற பதில் தான் வந்தது.

அடுத்தது என்ன என்று சக்ரவர்த்தி சிந்தித்து ஒரு முடிவிற்கு வருவதற்குள், “சக்ரவர்த்தியின் நாற்காலி ஆட்டம் காணுகிறதா??!!”

“தூண்களாய் இருந்த இரு பிள்ளைகளும் இப்போதேங்கே…?!”

“குடும்ப அரசியலா??!! இல்லை குடும்பத்தில் அரசியலா…?!”

என்கிற தலைப்புகளில் செய்தி சானல்கள் தங்கள் இஷ்டத்திற்குச் செய்திகளை பரவ விட, இதனை சக்ரவர்த்தி சுத்தமாய் எதிர்பார்க்கவில்லை.

செய்தி சானல்கள் ஒலிபரப்பு செய்யும் அளவிற்கு வந்திருக்கிறது, ஆனால் தனக்கு ஏன் விஷயம் வரவில்லை என்று அவர் யோசித்துப் பார்க்க எதுவும் விளங்கிடவில்லை..!!

எதுவோ ஒன்று பெரிதாய் நடக்கப் போவது போல் தோன்றியது அவருக்கு..

அவன் – நானும் நீயுமா..

அவள் – நீ நான் மட்டுமே..

காதல் – தனிமை.. அது தரும் இனிமை..லாலாலா…

Advertisement