Advertisement

தீபன் ஏதோ ஒன்று நினைத்து அனுராகவிடம் பேச, அது எதிலோ போய் முடிந்தது. அவளின் மனதிற்குள் இத்தனை இருக்கின்றதா??!! இத்தனை வேதனைகளா, ஏக்கங்களா??!! இப்படியொரு கோணத்தில் அவன் யோசிக்கவில்லை இதுநாள் வரை.

‘பிடிவாதக்காரி.. ஆத்திரக்காரி..’ இதெல்லாம் தான் அவன் எண்ணியிருந்தான்.

ஆனால் அதன் காரணங்கள் வேறாய் இருக்கும் என்று இப்போது தான் புரிந்தது.. இன்னும் முழுதுமாய் அவள் எதையும் சொல்லிடவில்லை. ஆனால் கேட்டது இதுவே போதும் என்றாகியது அவனுக்கு..

இப்போது வாழ்வைப் பற்றிய வேறொரு கண்ணோட்டம்..

அனைத்தும் அனுராகாவை முன்னிட்டு, அனுராகாவை முன்னிருத்தி..!!

எதுவோ ஒன்று, அனைத்தையும் மீறி அவளுக்கு தான் பெரிதாய் தெரிந்திருக்கிறோம்… இதுவே தீபனின் மனதில்..

இந்த நம்பிக்கைக்காக அவன் அவளுக்கு என்ன செய்திட வேண்டுமோ அதை செய்திட வேண்டும்.. எப்படி அவளோடு இருந்திட வேண்டுமோ, அப்படி இருந்திட வேண்டும்..!!

மொத்தத்தில் அவன், அவளாக வேண்டும்..

அதாவது நான் என்பது நீயாகிட வேண்டும்…

தீபன் சக்ரவர்த்தியின் மனதினில் இப்படியெல்லாம் எண்ணங்கள். குளித்து முடித்து வந்த பின்னும், உண்ட பின்னும் கூட இதுவே மனதில் ஓடியது..

அனுராகா கூட சொல்லிவிட்டாள் “ஹேய்.. தீப்ஸ்.. ரொம்ப சென்டியா பீல் பண்ணாத.. ப்ரீயா விடு..” என்று.

அவனோ அதற்கு ஒரு பதிலாய் ஒரு புன்னகை மட்டுமே..

“டேப்லட்ஸ் சாப்பிட்டியா?? ஆயின்மென்ட் போட்டியா..” என்று விசாரிக்க, அவளோ வித்தியாசமாய் பார்த்து வைத்தாள்.

“என்ன ராகா??!!”

“வாட் ஹேப்பன்??!! திடீர்னு ஏன் இப்படி மாறிட்ட..” என,

“ஹலோ இங்க வந்ததுல இருந்து இதெல்லாம் டெய்லி கேட்கிறேன்…” என்று தீபன் குரலை உயர்த்த,

“அப்கோர்ஸ்… பட் இப்படி ஐயோ பாவமேன்னு கேட்கலை..” என்றவள் “தீப்ஸ்.. நமக்குள்ள சிம்ப்பதி இருக்கக் கூடாது.. எனக்கு அது பிடிக்காது.. நான் உன்னை அடிச்சா நீயும் என்னை அடிக்கலாம்…” என்று அவள் சொல்லும்போதே,

“அப்போ நான் கடிச்சா, நீ கடிப்பியா??!!” என்று பாவனையாய் கேட்க,

“போடா..!! ராஸ்கல்…!!” என்றுவிட்டு எழுந்து போக, அப்போதும் கூட அவனின் பார்வை அவளை தொடர்ந்து சென்றது.

சண்டைகளும் சட்டென்று வந்துவிடுகிறது.. கோபமாய் முகம் திருப்பிச் சென்றாலும் பின் அதெல்லாம் ஒன்றுமே இல்லை எனும் வகையில் இதோ இப்படி இலகுவாய் பேசவும் வந்துவிடுகிறது. அனுராகாவும் ஒரு அளவிற்கு மேல் எல்லாம் பிகு செய்வது இல்லை..

அது அவளால் முடிவதும் இல்லை..

அவன் அப்படியே அமர்ந்திருக்க, அனுராகா உடை மாற்றி வந்தவள் “தீப்ஸ்.. எங்காவது போலாமா.. போர் அடிக்குது..” என,

“ம்ம்.. எங்க போலாம்.. ஆனா எல்லாமே இங்க உள்ள மட்டும்தான்..” என்று அவனும் சொல்ல,

‘இவனொருத்தன்.. அப்பா பேச்சை மீறவே மாட்டான்…’ என்று அவனுக்கு கேட்கும்படியே சொல்ல,

“ஆமா..!! அப்படித்தான் என்னவாம் இப்போ…??!!” என்று தீபன் நெஞ்சை நிமிர்த்த,

“அப்போ..!! எல்லாத்துக்குமே உங்கப்பாக்கிட்ட நீ பெர்மிஷன் கேட்டியா??!!” என்று அனுராகா இடுப்பினில் கை வைத்து, முகத்தினில் ஒரு கேலிச் சிரிப்பினை ஒட்டிக்கொண்டு தலையை ஆட்டி அவள் கேட்ட,

“ஏய் லூசு.. போ டி..” என்று அவன் விரட்ட, “சொல்லு சொல்லு தீப்ஸ்..” என்றாள் இப்போதும் அப்படியே.

“ம்ம்ச் போறியா நீ.. எதை எதை கம்பேர் பண்ணிட்டு…”

“ஹா ஹா.. தீப்ஸ் நீ வெக்கப்படுற..” என்று அனுராகா சத்தமாய் சிரிக்க, “ஏய்.. போயிடு டி..” என்று தீபன் விரட்ட,

“ஹா ஹா ஹா தீப்ஸ்.. எனக்கு உன்னைப் பார்க்க பார்க்க சிரிப்பா வருது..” என்றவளை, “சிரிச்ச கொன்னுடுவேன்..” என்று மிரட்ட, அவளோ இன்னமும் சிரிக்க,

“வா வா கிளம்பு…” என்று அவளை குடிலை விட்டு வெளியே இழுத்துச் சென்றான்..

அந்த நேரத்திற்கு இருவரும் சமாதானம் ஆகிவிட்டாலும், இன்னமும் அவள் ஆர்த்தி விசயத்தில் சமாதானம் ஆகிடவில்லை என்பதும், தான் பிரஷாந்த் விஷயம் சொன்னால், அதை அனுராகா எப்படி எடுத்துக்கொள்வாள் என்பதும் தீபனுக்கு யோசனையாகவே இருந்தது.

சொல்லப்போனால் அனுராகவின் நிலை இப்போது அவனின் அம்மாவின் நிலை தான் என்று உணர்ந்தான்.

‘இதென்ன வீடா.. வேலைக்காரங்களோட இருக்கிறதுக்கு நான்மாட்டும் ஏன் இங்க இருக்கணும்..’ என்பார் உஷா..

குடும்பம் என்ற சூழலை அவர் மிகவும் எப்போதுமே எதிர்பார்ப்பார். ஏதாவது முக்கிய தினங்களில் கூட, சக்ரவர்த்தியோ, இல்லை அண்ணன் தம்பி இருவருமேவோ வீட்டினில் இருந்திட முடியாத சூழல் இருந்திருக்கிறது.

‘இதுக்கு கூட உங்கனால வீட்ல இருக்க முடியலைன்னா அப்புறம் என்னடா நீங்க எல்லாம் வாழ்றீங்க..’ என்பார் உஷா..

இப்போது யோசித்துப் பார்த்தால், அது உண்மை என்றே புரிந்தது.

அப்போது எரிச்சலாய் இருக்கும்.

“ம்மா சும்மா சும்மா கண்ட்ரோல் பண்ணாத.. எப்போ பார் வீட்டுக்கு வா வான்னா என்னர்த்தம். அப்போ இந்த வேலை எல்லாம் யார் செய்றது??” என்பான்.

அப்போதெல்லாம், உஷாவின் மனநிலை என்னவாக இருந்திருக்கும் என்பது இப்போது தீபனால் யூகிக்க  முடிந்தது.

அம்மாவின் நியாபகமும் அதிகம் வந்தது..

“என்ன தீப்ஸ் சைலன்ட் ஆகிட்ட…” என்று அனுராகா கேட்க,

“ம்ம்.. அம்மா நியாபகம்…” என்றவனின் பார்வை வேறெங்கோ இருங்க, அவனோடு இணைந்து நடந்துகொண்டு இருந்தவள், நின்று அவன்முன்னே வந்து அவன் முகம் பார்க்க,

“என்ன ராகா..??!” என்றான்.

“நீ ஏன் ஆன்ட்டியோட கூட பேசலை..??!!”                                   

“ம்ம்ம்.. அப்பாதான் எல்லாம் முடியுற வரைக்கும் யாரோடவும் பேசக்கூடாது சொல்லிட்டார்.. அம்மாக்கிட்டயும் அதையே தான் சொல்லிருப்பார்…” என ,

“இதெல்லாம் ஒரு லைப் அ??!!” என்றாள் பட்டென்று.

“ராகா??!!”

“என்னோட பிராப்ளம் விடு.. அது எப்போவுமே சரியாகாது.. திடீர்னு எங்கப்பா வந்து என்னோட அன்பா அக்கறையா பேசினா கூட எனக்கு அது ஒட்டுமா தெரியலை. பட் நீ அப்படி இல்லை..  நீ எவ்வளோ கமிட்மெண்ட்ஸ் இருந்தாலும் அப்பா அம்மா அண்ணன்னு ஒரு செண்டிமெண்ட் அட்டாச்மென்ட் உன்கிட்ட பார்த்திருக்கேன் தீப்ஸ்..” என,

“ம்ம்…” என்றான் அதை ஒப்புக்கொள்ளும் வகையில்.

“பட்… இப்போ எல்லாரையும் விட்டு தள்ளிவந்து நீ இருக்க.. அண்ணனோட பிராபளம் அதெல்லாம் ஓகே.. அதுக்காக அம்மாவோட கூட பேசிடக் கூடாத  நிலை அப்படின்னா.. தின்க் தட் இது என்னமாதிரி வாழ்க்கைன்னு..”

“நீ சொல்றது சரிதான் ராகா.. சின்னதுல இருந்து ஒரு பரபரப்புக்குள்ளவே இருந்து பழகியாச்சு.. இப்போ அதில்லாம இருக்க முடியலை.. அதைவிட்டு வெளிய வரணும்னு நினைச்சாலும் இது புலி வால் பிடிச்ச கதை.. நம்ம அசந்தோம்னா அவ்வளோதான்..” என்று தீபனும் விளக்க,

“ம்ம்..!! வாட் எவர்.. என்னால இதைமட்டும் அக்சப்ட் பண்ணிக்கவே முடியலை..” என்றாள் அனுராகாவும் முடிவாய்.

“ம்ம் புரியுது..” என்றவன், “ஆர்த்தி விஷயம். உன்னால எப்பவுமே சரின்னு சொல்ல முடியாது.. அதனால தான் பிரஷாந்த் விசயம் உன்கிட்ட சொல்லலை…” என்று தீபன் பேச்சினை மாற்றினாலும், இதனையும் சொல்லிடலாம் என்ற முடிவிற்கு வந்துவிட்டான்.

“நீ தப்பா எதுவும் பண்ணியா??!!” என்றுதான் அனுராகா கேட்டாள்.

“அவன் பண்ணது தப்பு சரிக்கு எல்லாம் தாண்டினது.. முதல்ல உன்னை யூஸ் பண்ண நினைச்சான்.. அதுவும் லவ் அப்படிங்கறதை சொல்லி.. தென் என்னை வச்சு உன்னை அசிங்கப் படுத்த நினைச்சான்.. எது எப்படி இருந்தாலும் அவன் உன்னை கார்னர் பண்ண நினைச்சது பெரிய தப்பு.. யாருக்கு எப்படியோ என்னைப் பொருத்தவரைக்கும் அது மிக பெரிய தப்பு… சோ..”

“சோ..!!!”

“உங்கப்பா அவனோட ப்ரோபைல் க்ளோஸ் பண்ணார்.. இந்தியா குள்ள எங்கயும் அவனால் ஜாப் போக முடியாது.. ஆனா எனக்கு இதுமட்டும் போதும்னு படல..”

“என்ன பண்ண நீ??!!” என்று கேட்கையில் அனுராகாவிற்கு திக் திக் என்றானது.

எதுவும் பெரிதாக செய்துவிட்டானோ என்று..!!

“என்னை காயினா வச்சு உன்னை அவன் அசிங்கப்படுத்தினான்.. பண்ண வச்சான்.. சோ.. பொண்ணுங்கள வச்சு பிஸ்னஸ் பண்றான் அப்படின்னு ஒரு சீன் கிரியேட் பண்ணி, ஆல்ரெடி போலீஸ் தேடிட்டு இருந்த நெட்வொர்க் கூட இவனை ஜாயின் பண்ணி தூக்கி உள்ள போட்டாச்சு…” என,

“ஆ..!!!” என்றுதான் பார்த்தாள் அனுராகா..

இதற்கு அவனை கொன்று கூட இருக்கலாம்.. நிம்மதியாய் உயிர் போயிருக்கும்.. அதுதான் அவளுக்குத் தோன்றியது.

ஆனால் இது எத்தனை பெரிய அசிங்கம்.

அதனை செய்பவர்களுக்கு சாதாரணம். ஆனால் அதில் சம்பந்தமே இல்லாதவர்களுக்கு??!!

“தீப்ஸ்..!!!” என்று அதிர்ந்து பார்க்க,

“என்ன பாக்குற??? இதுக்கு அவனை போட்டிருக்கலாம் அப்படின்னு சொல்ல வர்றியா.. நிமிசத்துல சாகுறது எல்லாம் தண்டனையா??!! இப்போ அவன் படுவான்.. ஒவ்வொரு செக்கண்டும்…” என, அனுராகா, அப்படியே அங்கிருந்த கல் பெஞ்சில் அமர்ந்து போனாள்.  

அவனுக்கும் தெரியும்.. இது அவளுக்கு அதிர்ச்சியாய் தான் இருக்கும்.. இருந்தும் அப்போதிருந்த மனநிலையில் தீபன் அவனை உயிரோடு விட்டது பெரிது.. இப்போதும் அவனுக்கு அதுதான் சரியெனப்பட, அவளருகே அமர்ந்தவன்

“நீ இதெல்லாம் திங் பண்ணாத.. இங்க நம்ம ரொம்ப நாள் எல்லாம் இருக்க முடியாது.. இன்னும் ஃபோர் ஆர் பைவ் டேஸ்.. சோ அதுவரைக்கும் ஹேப்பியா இருப்போம்..” என,

“நான் எங்கயும் வரமாட்டேன்..” என்றாள் பிடிவாதமாய்..

“ம்ம் ஓகே.. இரு.. எத்தனை நாள் இங்க இருக்கணுமோ இரு..” என்றவன், “நான் அப்பாவோட பேசிட்டு வரட்டுமா??!!” என, அவளின் தலை தானாக சரி எனச் சொல்ல, எழுந்து தனியே போனான் சக்ரவர்த்தியோடு பேச.

அவரை அழைப்பில் பிடிக்கவே முடியவில்லை. அவரின் இரண்டு எண்களும்  அழைப்பு எடுக்கப்படவில்லை.  மாற்றி மாற்றி அழைத்துப் பார்க்க, பின் அவரின் பிஏவிற்கு அழைத்துப் பேச, அடுத்த ஐந்தாவது நிமிடம் சக்ரவர்த்தியே தொடர்பில் வந்தார்.  

“என்ன தீபன்.. என்ன விஷயம்??!!”

“என்னப்பா… போன் பண்ணா எடுக்கவேயில்லை.. இதெல்லாம் என்னப்பா…” என,

“ம்ம்ச் என்ன விஷயம் சொல்லுடா.. இங்க ஆளுங்களோட இருக்கேன்..” என்று அவரும் சொல்ல,

“நீங்க வைங்க நான் அம்மாவோட பேசிக்கிறேன்…” என்று தீபன் வைக்கப் போக, அப்போது புரிந்தது அவன் மந்திரியோடு பேசிட நினைக்கவில்லை, அப்பாவினோடு பேச நினைக்கிறான் என்று.

“சொல்லு தீபன்..” என்ற அவரின் குரல் மாற்றம் கண்டு,

“இன்னும் எத்தனை நாளைக்கு இதெல்லாம்??” என,

“எலக்சன் முடியட்டும்.. நேரா வச்சு பேசிடலாம்…” என்று அவரும் சொல்ல,

“அதுவரைக்கும் அம்மாவோட பேசாம, வீட்டுக்கு வராம இருக்கனுமா…” என்றான் எரிச்சலாய்.

“ஏன் உனக்கு அங்க என்ன அசௌகரியம்??!!”

இக்கேள்வி கேட்கையில், அவரின் குரலில் என்ன இருந்தது என்று அவனால் கண்டுகொள்ளவே முடியவில்லை.

“எதுவுமில்லப்பா.. ஆனா…” என்று எதுவோ சொல்லவந்தவன் பின் அதைவிட்டு “ராகாவோட பேரன்ட்ஸ் கிட்ட பேசுங்க..” என,

“திடீர்னு என்ன??!!” என்றார்.

“பேசுங்கப்பா… இனி பேரன் பேத்தி எல்லாம் வரணுமா உங்களுக்கு.. அப்புறம் தான் பேசுவீங்களா…” என்று தீபன் பட்டென்று கேட்டுவிட,

“டேய் டேய்…” என்றவர், சுற்றி ஆட்கள் இருக்கவும் “எப்போ கூப்பிட்டு என்ன பேசுற…” என்றபடி தனியே எழுந்து போகும் நிலை.

“பின்ன பேசுங்க…  மத்தது எல்லாம் நீங்க எப்போவேனா பஞ்சாயத்து பண்ணுங்கப்பா. ஆனா இது பேசுறீங்க.. அப்புறம் அம்மாவ என்னோட பேசச் சொல்லுங்க.. சொல்றீங்கப்பா நீங்க…” என்று முதல் முறையாய் அவருக்கு கட்டளை இட்டு அழைப்பைத் துண்டிக்க,

சக்ரவர்த்தியோ ‘பட்டுன்னு என்ன பேசிட்டான்..’ என்று தனக்கு தானே முணுமுணுத்துக்கொண்டார்.

‘அப்பாக்கிட்ட பேசற பேச்சா இதெல்லாம்..!!’ என்று இருந்தாலும், இன்னும் எத்தனை நாள் அவன் அங்கே இருப்பான் என்றும் இருக்க உஷாவிற்கு அழைத்து “சின்னவன் உன்னோட பேசனும்னு ஒரே சண்டை.. பேசிடு..” என,

“அதை என்னோட அவன் பேசிருக்கலாம் தானே.. சண்டை கூட உங்களோடதான் போடணுமா என்ன??” என்று அவர் ஒரு சண்டை போட்டு பின் மகனுக்கு அழைத்தார்.     

இவர்களின் விஷயம் இப்படியெனில்,  மிதுனுக்கு அங்கே இது ஒருவகை மெண்டல் டார்ச்சராய் இருந்தது. அவனின் முயற்சிகள் எல்லாம் எதுவும் வெற்றியடையவில்லை. இப்போது முற்றிலும் புதிய ஆட்கள் அவனின் பாதுகாப்பிற்கு. அவர்கள் பேசுவது ஹிந்தியும் அல்ல, ஆங்கிலமும் அல்ல, தமிழும் அல்ல..

என்னவோ ஒரு புதிய மொழி..!!

ஒருவேளை வந்தவர்களில் ஒருவனை இவன் தன் வசம் செய்ய நினைத்தது எதிராளிக்குத் தெரிந்துபோனதோ என்று யோசித்தான்..

இவன் என்ன சொன்னாலும் இப்போது இருப்பவர்களுக்கு அது புரியவே இல்லை. மூன்று வேலையும் உணவு வந்தது.. பின் அவ்வப்போது காபி, டீ, ஜூஸ் என அதுவும் நேரம் தவறாமல் வந்தது..

ஒவ்வொரு நாளும் கடந்து போவதற்குள் மிதுன் சக்ரவர்த்திக்கு அப்படியொரு மன அழுத்தம் கொடுத்தது..

இவன் எத்தனை பேருக்கு இப்படியானதொரு மன அழுத்தம் கொடுத்திருப்பான்..??!!

அதை தான் அனுபவிக்கையில், கொடூரமாய் இருந்தது..

அவன் அந்த ஆட்களோடு என்ன பேசிட முயன்றாலும், சைகை மொழி என்றாலும் கூட அவர்கள் மௌனமாய் இருக்க, மிதுன் சக்ரவர்த்தியின் பொறுமை முற்றிலும் தொலைந்து போக, அறையினுள்ளே, அவனுக்கு ஜூஸ் கொண்டு வந்தவனை ஒரு தள்ளு தள்ளிவிட்டான்.  

அவனோ சுதாரித்து எழும் முன்னம், மிதுன் அவன் மீது பாய்ந்து அவனைத் தாக்க, வெளியில் இருந்தவன், உள்ளே சத்தம் கேட்டு வரவும் நடப்பது கண்டு, வேகமாய் மிதுனை பின் வாக்கினில் இழுத்து, கைகளை மடக்கிப் பிடிக்க,

“டேய் விடுங்க டா.. விடுங்க என்னை..” என்று மிதுன் திமிற, அவனால் அதற்குமேல் முடியவே இல்லை.

இருந்த இருவரும் பயில்வான்கள் போலிருக்க, மிதுனால் இம்மியளவு கூட நகர்ந்திட முடியவில்லை.

“ஏய்… லீவ் மீ…” என்று அவன் முடிந்தமட்டும் கத்த, ம்ம்ஹும் எவ்வித பிரயோஜனமும் இல்லை.

‘தாக்குதல் நடந்தால், அவனை கட்டிப்போடுங்கள்..’

இது அவர்களுக்கு வந்திருந்த உத்தரவு.. அதன்படி இப்போது மிதுனை இருக்கையில் வைத்து கட்டிட, அவன் அத்தனை கோபமாய் பேசுவது எல்லாம் அவர்கள் காதினில் விழுந்தது போல் கூடத் தெரியவில்லை.

இத்தனை நாள் இல்லாத அளவிற்கு மிதுனின் ஆக்ரோசம் அதிகமாகியது அவனை கட்டிப்போடவும்..

‘மிதுன்…!! இதை நீ சும்மா விடுறதா.??!! நோ…!!’ என்று கத்தியது அவனுள்ளம்..

‘காம் டவுன்… காம் டவுன்…’ என்று கண்களை மூடியவன், யோசனையில் பளிச்சென்று ஒரு யோசனை..

ஆனால் அதற்கு இன்னமும் ஓரிரு நாள் காத்திருக்க வேண்டும்.. இருப்போம்.. இருப்போம் என்று தனக்குள் சொல்லிக்கொண்டான்..

தீபனிடம் பேசியபின் தாராவிற்கு அப்படியொரு வேதனை. அம்மா என்கிற ஸ்தானத்தில் இருந்து தான் இறங்கிப் போனதாய் நினைத்தார். எப்படியாவது அனுராகாவை அழைத்து வரவேண்டும் என்று அவர் கிளம்ப, சரியாய் அப்போதென பார்த்து லோகேஸ்வரன் வீட்டிற்கு வர, அவ்வளோதான், லோகேஸ்வரனை உண்டு இல்லை என்று ஆக்கிவிட்டார்.

“அனு தன்னைப்போல வருவா.. இருக்கிற இடம் தெரிஞ்சு போச்சுத்தானே.. இன்னும் நாலு நாள்ல அவளுக்கே அங்க போர் ஆகிடும்..” என,

“நீங்க எல்லாம் என்ன ஒரு அப்பா லோகேஷ்..!!” என்று முகத்தின் முன்னே தாரா கேட்க,

“அனு பத்தி உனக்கு சரியா தெரியலை… அவ்வளோதான்..” என்று அவரும் சொல்ல, தாராவின் மூளை வேகமாய் யோசித்தது.

இப்படியெல்லாம் பேசினால் இவர் வழிக்கு வரமாட்டார் எனத் தெரியும். ஆக,      அவரின் பங்குகள் எல்லாவற்றையும் வேறு யாருக்கேனும் கொடுத்திடுவேன் என்று தொழில் முறை மிரட்டல் வைத்தார். லோகேஸ்வரன் நக்கலாய் பார்க்க,  அவரின் பெயரில் இருக்கும் சொத்துக்கள், பினாமி கணக்குகள் என்று அனைத்தையும் தானம் செய்துவிடுவேன் என்ற பேச்சு வைத்தார்.

“செய்யமாட்டேன்னு  நினைக்காதீங்க லோகேஷ்..” என,   

“ஆர் யூ மேட்…!!” என்று லோகேஸ்வரன் குரலினை உயர்த்த,

“எஸ்.. அப்படித்தான் வச்சிக்கோங்க.. பட் எனக்கு என் பொண்ணு இங்க வந்தாகணும்.. நம்ம போய் கூப்பிடாம அவ இங்க வரமாட்டா..” என்று சப்தமிட,

“வராம எங்க போயிடுவா??!!” என்றார் லோகேஸ்வரன் அசால்ட்டாய்.

“லோகேஸ்…!!!”

“ஷ்..!!! நீயும் அனு மாதிரி புரியாம பேசாத தாரா.. இதெல்லாம் வந்து பார்த்துக்கலாம்.. இப்போ என்னோட வா..” என,

“முடியாது…” என்றார் தாரா பிடிவாதமாய்..

“மினிஸ்டர் பெர்சனலா பேசணும்னு சொல்லி கூப்பிடும்போதே தெரியலையா.. கண்டிப்பா அனு விசயமாத்தான் இருக்கும்..” என,

“ம்ம்.. யாரோ ஒருத்தர்.. அவர் பேசறார்.. ஆனா அது உங்களுக்கு இப்போ வரைக்கும் தோணலை..” என்ற தாராவிற்கு, எப்படியோ அனுராகா வீடு வந்தால் போதும் என்று இருந்தது.

“இப்போ அதெல்லாம் பேச டைம் இல்லை தாரா.. ரெடியாகு..” என,

“வர்றேன்… ஆனா என் பொண்ணு லைப்க்கு ஒரு நல்ல சொல்லுயூசன் கிடைக்காம திரும்ப நானும் இங்க வரமாட்டேன்..” என்றவர் கிளம்பச் செல்ல, லோகேஸ்வரன் நெற்றியைத் தேய்த்துக்கொண்டு அமர்ந்துவிட்டார்.

அவருக்கு இப்போது நன்கு புரிந்திருந்தது, மிதுன் பேச்சினை கேட்டிருக்கக் கூடாதோ என்று. எப்படியும் அனைத்துமே சக்கரவர்த்திக்கு தெரிந்திருக்கும் என்றும் இப்போது தெரிந்தது. அனைத்தையும் மீறி… அனுராகா அங்கே அவர்களின் மருமகள் ஆகினால்… அதுவே பெரிய லாபம் தானே.. அதைமட்டுமே யோசித்தார்..

அவன் – உனக்காக பெண்ணே..!

அவள் – நமக்காக எனச் சொல்..!!

காதல் – சொல்றதை சட்டுபுட்டுன்னு சொல்லித் தொலைங்கடா..!!     

Advertisement