Advertisement

                           நான் இனி நீ – 31

எல்லாம்.. எல்லாமே சக்ரவர்த்தியும் ஆளுமைக்குள் வந்திருந்தது.. தீபனின் பொறுப்புகள் ஆகட்டும்.. மிதுனின் பொறுப்புகள் ஆகட்டும்.. எல்லாமே.

மகன்கள் செய்திருந்த பல அண்டர்கிரவுண்ட் வேலைகளும் கூட அவரின் பார்வைக்கு வந்திருந்தது.

“ஏன்டா இதெல்லாம் செஞ்சாதான் நான் பதவியில இருக்க முடியும்னு எவன் சொன்னது..” என்று அவ்வப்போது கேட்டு நாகாவையும், தர்மாவையும் வறுத்து எடுத்தார்.

அவர்களும் தான் என்ன செய்வர், அவர்களின் வேலை தீபன் சொல்வதை செய்வது அதுமட்டுமே.

ஆனால் திரும்ப திரும்ப சக்ரவர்த்தி சொன்னார் ‘விசுவாசம் என்பது சொன்னதை செய்வது அல்ல, நல்லதை செய்வது..’ என்று.

அவ்வப்போது உஷாவிடமும் “பாரு.. என்னென்ன பண்ணிருக்கானுங்கன்னு..” என்று அடிக்கடி சொல்லிக்கொள்வார்.

“ஆரம்பத்துலயே சொன்னேன் பசங்களை இதுல இழுக்காதீங்கன்னு.. நீங்க கேட்கலை.. இப்போ பசங்களை நீங்க இழுத்து பிடிக்கிற நிலைமை..” என்றார் சாதாரணமாய்.

“வேறென்ன செய்ய… ஒரு இட விஷயம் பஞ்சாயத்து.. சின்னவன் இப்போ வேணாம்னு சொல்லிருந்தான். ஆனா பெரியவன் யாருக்கும் தெரியாம பண்ணிருக்கான். சும்மா இல்ல நாலு சி வாங்கிருக்கான்.. வாங்கி என்ன செஞ்சான்..?? என் பேரைச் சொல்லித்தானே எல்லாம் செய்றான்.. அப்போ மத்த விபரமும் எனக்குத் தெரியனும்ல…” என்று அவர் கேட்டது சரிதான்.

தீபன் பொதுவாய், அத்தனை எளிதாய் அப்பாவின் பெயரை உபயோகிக்க மாட்டான். ஆனால் மிதுன் அப்படியில்ல. ஆரம்பத்தில் பெருமையாய் சொல்லிக்கொள்வான் மினிஸ்டர் சக்ரவர்த்தியோட மகன் அப்படி என்று. பின் நாள் செல்ல செல்ல, அதை வைத்தே அனைத்தும் செய்துகொண்டான்.

இப்போது அப்பாவிற்கு அடுத்து தான் என்ற எண்ணம் வந்துவிட்டது.

வந்தது தப்பில்லை.. அதை நியாயமாய் அல்லவா பெற்றிட வேண்டும்…  

சக்கரவர்த்தி நினைக்க நினைக்க கோபமாய் வந்தது. எல்லாத்தையும் பொறுத்துக்கொண்டார். அனைத்தையும் அவர், காதர், நாகா, தர்மா, இன்னும் இரண்டு பேர் வைத்து செய்துகொண்டு இருந்தார்.

அனைவரும் நம்பத் தகுந்த ஆட்களே..!!

ஆக எல்லாமே சட் சட் என முடிந்துகொண்டு இருந்தது..

தொகுதி வேலைகள் ஆகட்டும், மிதுனும் சேட்டும் செய்து வைத்திருந்த சூழ்ச்சிகள் ஆகட்டும், இன்னும் என்ன என்ன இருக்கிறதோ, அனைத்தையும் சக்ரவர்த்தி தூண்டித் துருவிக்கொண்டு இருந்தார்.

தொகுதியில், தீபன் ஏற்பாடு செய்திருந்த கோவில் திருவிழாக்கள் அப்படியொரு கொண்டாட்டமாய் முடிந்திருந்தது. இதனை வாய்ப்பாய் கொண்டே பண பட்டுவாடாக்கள், பரிசுப் பொருட்கள் என்று எல்லாம் எல்லாம் விநியோகம் செய்ய, தொகுதியே அந்த ஒருவாரமும் வாழ்ந்தது என்று தான் சொல்லிட வேண்டும்.

சக்ரவர்த்தி நேரிலேயே போய் நின்று எல்லாம் பார்க்க, அங்கே இருந்தவர்கள் அசந்து போனார்கள்.

போதாத குறைக்கு உஷாவை வேறு அழைத்துக்கொண்டு போனார் ஒருநாள். அவ்வளோதான் அங்கிருந்த பெண்களுக்கு எல்லாம் ஏக குஷி..

சக்கரவர்த்தி மற்றும் உஷா முன்னிலையில் தொகுதியில் இருந்த ஏழை பெண்களுக்கு திருமணம் வேறு நடந்தது. அனைத்தும் கட்சி செலவுகள்.

ஆக மொத்தம், சக்ரவர்த்தி தான் ஒரு சக்ரவர்த்தி என்பதனை நிருபணம் செய்துகொண்டு இருந்தார்.

இவை அனைத்துமே தீபனுக்கு செய்திகளாய் வந்துகொண்டு தான் இருந்தது. அனுராகாவின் அலுவலக ஆளினை வைத்து எப்படியோ காதரை பிடித்துவிட்டான்.

“என்ன காதர்ண்ணா… என்னை இப்படி கழட்டி விட்டீங்க..” என்று அவன் சிரித்தபடி கேட்டாலும்,

“ஐயோ.. தம்பி..” என்று பதரியவர், “அப்பா சொல்லை எப்பவும் மீற முடியாது..” என,

“அப்பாவுக்கு ஒண்ணுன்னா.. அப்பா சொல்லைக் கூட நான் கேட்க மாட்டேன்.. அங்க வந்து நிப்பேன்….” என்றான் தோரணையாய்.

அதாவது, அவருக்கு எதாவது ஒன்றேன்றால், உங்களை எல்லாம் சும்மா விடமாட்டேன் என்று சொல்லாமல் சொல்வதாய் இருந்தது.  நாகாவையும் தர்மாவையும் கூட தீபன் சக்ரவர்த்தி விட்டுவைக்கவில்லை.

“என்னடா.. கட்சி மாறிட்டீங்க…” என்று கிண்டல் செய்தான்.

“ம்ம்ம் உங்கப்பாக்கு நீங்களே பரவாயில்ல..” என்று சலித்துக்கொண்டார்கள் இரட்டையர்கள்.

“அட.. அவ்வளோ படுதுறாரா..” என்று தீபன் நகைக்க,

“பின்ன.. எப்போ பார் பஞ்ச் டியலாக் தான் அவர் வாய்ல வருது.. இல்ல அவர் பேசறதே அப்படியான்னு தெரியலை..” என்று நாகா சொல்ல, தீபனுக்கு இன்னமும் சிரிப்பு.

தொகுதியில் ஆகட்டும், அவன் அப்பாவை சுற்றி ஆகட்டும், அங்கே மிதுன் சுற்றி ஆகட்டும், எல்லாம் என்ன என்ன நடக்கிறது என்று செய்திகளாய் மட்டுமல்ல, புகைப்படங்களாகவும், விடியோக்களாகவும் அவனுக்கு வந்தபடி இருந்தது..

மிதுன் “ரூம் அர்ரெஸ்ட்…” இதை கேள்விப்பட்டு தீபனுக்கு வியப்பாய் தான் இருந்தது.

வியப்பு என்பதனை தாண்டி, அப்பா எப்படி இப்படியொரு யோசனைக்குச் சென்றார் என்று இருந்தது.

தன்னை இங்கே அனுராகாவின் பொறுப்பில் விட்டு, அந்த மிதுனை தனிமையாக்கி என்று யோசித்தான். ஆம்..!! மிதுனுக்கு இப்படியான பலவீனங்கள் எதுவுமில்லையே.

‘அனுராகா…’ என்று பெயர் சொன்னாளே இவன் உருக்கிக் கொண்டு அல்லவா இருக்கிறான்.   

இதெல்லாம் நினைக்க நினைக்க மேலும் சிரிப்பு பொங்கி வந்தது. என்னவோ எப்போதுமில்லாத ஒரு ரிலாக்ஸ் தீபன் உணர்ந்துகொண்டு இருந்தான். இது நிதர்சனம் அல்ல, சாஸ்வதம் அல்ல அதுவும் அவன் அறிவான்.

இருந்தாலும், அவன் அப்பாவைப் பற்றியும் அவனுக்குத் தெரியும்.  அவரின் இந்த விவேகம், அவனை அதிசியக்கத்தான் வைத்தது.

D – வில்லேஜில், ராகாவோடு அவனின் நாட்கள் ஒவ்வொன்றும் காதல் கொண்டாட்டமாய் தான் இருந்தது.

ஆம்..!! ஒரே குடிலில் தான் தங்கியிருந்தார்கள்.. அதுவும் ஒன்றாய்..

நிறைய நிறைய பேசினார்கள்.. இதுவரைக்கும் பேசாத பேச்சுக்கள் எல்லாம். மனம் விட்டு பேசினார்கள். எதனால் அவர்களுக்குள் இத்தனை பெரியதொரு பிரச்னைகளும், பிளவும் வந்தது என்று ஆற அமர ஆலோசித்து கதைத்தார்கள்.

பிரஷாந்த் பற்றி, ஆர்த்தி பற்றி, மிதுன் பற்றி என்று நிறைய நிறைய…

சில சில வாக்கு வாதங்கள் ஏற்பட்டதுதான்.. இருந்தும் ஒரே இடத்தில் இருப்பதனால், இதற்குமேலும் எதையும் பிணக்கு செய்துகொள்ள விரும்பாததினால் பின் அவர்களே சமாதானமும் ஆகும் நிலை.

வேறு வழியும் இல்லை.

அதிலும் ஆர்த்தி பற்றிய விசயம் வருகையில், அவளை தீபனே அன்று அழைத்துக்கொண்டே சென்றது பற்றி கூறவும், அனுராகாவிற்கு கோபம் வந்துவிட்டது. அப்படியொரு கோபம். எளிதாய் எடுத்துக்கொள்ளா விட்டாலும், கோபிக்கமாட்டாள் என்றெண்ணி தான் சொன்னான் தீபன்.

ஆனால் அனுவோ “ச்சி வெக்கமா இல்லை..” என்று பட்டென்று கேட்க,

“ராகா??!!” என்று பார்த்தான்.

“பின்ன..” என்று ஆங்காரமாய் அனுராகா கேட்க,

“அவ பாதுகாப்பா வீட்டுக்கு போயாச்சு..” என்றான் இறங்கி வந்து.

“அது அடுத்து.. எப்படி உனக்கு புத்தி இப்படி போச்சு தீப்ஸ்…” என்றவள் “அதெப்படி உங்களுக்குள்ள பிராப்லம்னா அதுக்கு பொண்ணுங்கள உடனே டைஸ் மாதிரி உங்க இஷ்டத்துக்கு உருட்டுவீங்களா..??” என,

தீபன் இதனை எதிர்பார்க்கவில்லை.

தீபன் சக்ரவர்த்தி, எப்போது என்ன செய்வான் என்று தெரியாது என்றால், அவனையே அதிர்ந்து பார்க்கச் செய்பவள் அனுராகா அல்லவா..

இப்போது அப்படிதான் ஆனது.

“இது அப்படி இல்ல அனு…” என்று அவன் சொல்லும்போதே “வாட் எவர்.. இது தப்பு.. அவளை பார்க்கக் கூட உனக்கு பிடிக்காது.. ஆனா, உன்னோட பாதுகாப்புக்காக அவளை நீ ட்ரம்ப் கார்ட் போல யூஸ் பண்ணிருக்க..” என, அயர்ந்து தான் போனான் தீபன்..

“பதில் சொல்லு தீப்ஸ்.. அப்போ உனக்கும் மிதுனுகும் என்ன வித்தியாசம்.. மிதுன் என்னை வச்சு உன்னை கார்னர் பண்ணான்.. இப்போ நீ ஆர்த்தி வச்சு அவனை கார்னர் பண்ண ட்ரை பண்ணிருக்க..” என்று கத்த, தீபன் சக்ரவர்த்தி பதிலே சொல்லவில்லை.

ஒருவகையில் அவள் சொல்வது சரிதானே..!!

அந்த நேரத்தில் அவனுக்கு வேறு வழியும் தெரியவில்லை. அதிலும் அவனாய் திட்டம் தீட்டி எதிலும் ஆர்த்தியை விழ வைக்கவில்லை. அவளாகத்தானே வந்தாள்.

இதை அனுராகாவிடம் சொல்லவும், அவளுக்கு மேலும் கோபம்.

“அப்.. அப்போ.. அவளா உன்னைப் பார்க்க வந்தா, நீ இப்படி பண்ணுவியா..” என,

“ஹேய்..!! நான் தப்பா எதுவும் பண்ணல டி…” என்று தீபனும் கத்த,

“நீ பண்ணது தப்புதான் தீப்ஸ்…” என்றுவிட்டு போனாள் அனுராகா.

அவளால் இதனை சகித்துக்கொள்ளவே முடியவில்லை..

“நான் உன்னையும் தான டி, இங்க ஹோல்ட் பண்ணி வச்சிருந்தேன்..” என்றான் பின்னோடு வந்து.

“நானும் அவளும் ஒண்ணா..??!!” அடுத்தநொடி அம்பு போல் வந்தது அவளிடம் இருந்து வார்த்தைகள்.

‘இப்படி சிக்கிட்டியே தீப்ஸ்…’ என்று அவனே நொந்துகொண்டான்.

“பதில் சொல்லு தீப்ஸ் .. நானும் அவளும் ஒண்ணா.. என்னை நீ இங்க ஹோல்ட் பண்ணது எனக்காக மட்டும்.. வேற விசயத்துக்காக இல்லை.. ஆனா உங்க அண்ணன் தம்பி இஸ்யூல நீ இப்படி பண்ணிருக்க..

சப்போஸ் அவளுக்கு ஏதாவது ஆகிருந்தா என்ன செஞ்சிருப்ப? ஆர் இந்த நியூஸ் வெளிய வந்திருந்தா என்ன செஞ்சிருப்ப? ஆன்சர் மீ…” என்று கேட்க, அவனிடம் பதில் இல்லை.

அவள் சொல்வது எல்லாம் நிஜம்தானே…!!

விஷயங்கள் வெளியே போய்விடக் கூடாது என்பதற்காகத் தானே இத்தனை போராட்டமும், ஓட்டமும்.

தீபன் என்ன சொல்லியும் அனுராகா இறங்கி வரவேயில்லை.. கடைசியில் “எனக்கு அப்போ வேற வழி தெரியலை ராகா..” என்று அவன் குரல் இறங்கி சொல்கையில்,

“ரிட்டர்ன் அங்க போகவும், நான் ஆர்த்தியோட பேசணும்…” என்றாள்.

“என்ன பேச போற நீ..?? அதெல்லாம் எதுவும் தேவையில்லை..” என்றான் தீபனும் வேகமாய்.

“நீ அவக்கிட்ட பேசுறதோ, இந்த ஒரு விசயத்துக்காக, நெஸ்ட் அவளோட நீ நல்லவிதமா பீகேவ் பண்றதோ என்னால எப்பவும் ஏத்துக்க முடியாது தீப்ஸ். உனக்கு அவளை பிடிக்காதுன்னா அதே அளவுல நீயும் நிக்கணும்.. அண்ட் நான் ஒன்னும் தீப்ஸ் பண்ணதுக்கு சாரின்னு எல்லாம் போய் கேட்கப் போறதில்ல.

அவன்தான் அப்படி சொன்னான்னா, உனக்கு எங்க போச்சு உன்னோட அறிவு?? உன்னையே பிடிக்காதவன் எப்படி போனா என்ன?? ஹெல்ப் கேட்டா பண்ணிடுவியா நீ.. எங்க போச்சு உன்னோட செல்ப் எஸ்டீம்னு கேட்பேன்..” என்று அனுராகா அடுக்கிக்கொண்டே போக,

தீபனுக்கு ‘அப்பாடி..!!!’ என்றாகிப் போனது.

பேசாது அவனின் அப்பாவிடமே போய் நின்று விடுவோமா என்று கூட தோன்றிவிட்டது இவனுக்கு.   

இதற்கு இப்படியெனில்,   அடுத்து பிரஷாந்த் பற்றிய பேச்சு வருகையிலும், தீபனை விட, அனுராகா தான் கொந்தளித்தாள்.

“பிளட்டி இடியட்… அவனை எல்லாம்.. அவனை எல்லாம் சும்மாவே விடக்கூடாது தீப்ஸ்..” என்று சொல்லிக்கொண்டவள், திடீரென ஒரு எண்ணம் வந்து,

“நீ இன்னமுமா சும்மா விட்டிருப்ப…??” என, தீபன் அதற்குப் புன்னகையே பதிலாய் கொடுக்க, அவனது மனதோ ‘சிரிச்சே சமாளிடா…’என்று சொன்னது.

“சொல்லு தீப்ஸ்.. என்ன பண்ண நீ..” என்றாள்.

“ஒண்ணுமில்ல ராகா.. நான்தான் இந்த பேச்சே வேண்டாம் சொல்றேனே.. ஆனா நீ விடறதே இல்லை..” என,

“அப்படியில்ல.. இனி நமக்குள்ள எதுவுமே கிளாஷ் வர்றதுபோல இருக்கக் கூடாது தீப்ஸ்..” என,

“அப்.. அப்போ என்மேல உனக்கு கோபம் எல்லாமே போயிடுச்சா..” என்றான் இவனும்.

‘நான் அப்படி சொன்னேனா..??!!’ என்பதுபோல் அனுராகா பார்க்க,

“சொல்லு ராகா.. எனக்குத் தெரியும்.. உன் மனசுல இன்னமும் கோபம் இருக்கு..” என,

“ம்ம்ச் லீவ் இட்…” என்றாள் ஒருவித சலிப்புடன்.

கூடல், ஊடல் எல்லாம் இப்போது அவர்களுக்குள் சர்வ சாதாரணமாகி இருந்தது. அதெல்லாம் ஒரு விசயமே அல்ல என்பதுபோல் தான் அங்கே இருந்தனர். எப்போதாவது இப்படியான சீரியஸ் பேச்சுக்கள் வந்துவிடும்.

பொதுவாய் தீபன் அதனை தவிர்க்கவே நினைப்பான்..

ஆனால் அனுராகா விடமாட்டாள்..

“நீ அவாய்ட் பண்றது பார்த்தா எனக்கு டபுட்டா இருக்கு..” என்பாள்.

அன்றும் அப்படிதான் தீபன் இப்பேச்சினை எடுக்க விரும்பவில்லை. காரணம், அவளின் பார்வையில் இனியும் தான் கீழ் இறங்குவது அவனுக்குப் பிடித்தமில்லை.

அரசியில் மற்றும் தொழில் வாழ்வில் ஆயிரம் இருக்கும்.. நல்லதுகளும், கெட்டதுகளும்… அடுத்தவருக்கு செய்கையில் அதெல்லாம் ஒன்றுமில்லை என்று தோன்றும். அதுவே தனக்கென்கையில், அதுவும் தான் விரும்பும் ஒருத்தியின் முன் என்கையில் யாருக்குமே அதனை ஏற்றுகொள்ள முடியாது தானே.

“என்ன டபுட்..??!!” என்று தீபன் முகம் சுருக்கும் போதே,

“நீ என்னவோ பண்ணிருக்க தீப்ஸ்..” என்றாள் ராகா யோசனையாக.

“இந்த பேச்சை விடுன்னு சொன்னேன்..” என்று அவன் சொல்கையில் இப்போது அவனின் குரலும் மாறிப்போனது.

“ஏன்.. ஏன் விடனும்??? இவ்வளோ நேரம் கேசுவலா பேசிட்டு தானே இருந்தோம்.. அதைப்போல இதையும் எடேன்…” என,

“முடியாது டி..” என்றான் அதட்டலாய்.

“சோ.. என்னவோ இருக்கு..” என்று அவள் திரும்பவும் ஆரம்பிக்க,

“ச்சே… மனுசனை நிம்மதியா இருக்க விடறியா நீ.. அப்படியென்ன பிடிவாதம் உனக்கு.. அவன் என்னவோ ஆகிட்டுப் போறான்.. உனக்கென்ன..” என்று எகிற,

“நான்.. நார்மலா தானே கேட்டேன்..” என்றாள் குரலை தழைத்தி. ஆனால் அதில் அப்படியொரு அழுத்தம் இருக்க,

“நான் ஒரு வாக் போயிட்டு வர்றேன்..” என்று எழுந்துவிட்டான்.

அனுராகாவிற்கு அப்போதே புரிந்துபோனது. எதையோ பெரிதாய் இவன் செய்து வைத்திருக்கிறான் என்று. இல்லையெனில் பிரஷாந்தின் காதல் பற்றியெல்லாம் பேசியபோது வராத கோபம் இப்போது வருகிறது எனில்..??!!!

இந்த கோபம் எதற்கு?? செய்த தவறினை மறைக்கவா..??

அனுராகா அவன் பின்னே எழுந்து எல்லாம் போகவில்லை.  அவர்களின் குடிலிலேயே இருந்துகொண்டாள். வெளியேவும் வரவில்லை. உண்ணவும் இல்லை. தீபனும் அடுத்து அங்கே வரவில்லை.

D – வில்லேஜ் முழுக்க உலாத்திக்கொண்டு இருந்தான்.

நிறைய வெளிநாட்டவர்கள் வந்திருந்தார்கள். எப்போதும் இருப்பர் தான். ஆனால் இன்று குழுவாய் அதிகம் பேர் இருந்தார்கள். ஆண்கள் பெண்கள் என்று.. சலசலவென்று ஏதாவது பேசிக்கொண்டு, அனைவரும் அங்கிருக்கும் வயல் வேலை செய்ய கிளம்பிக்கொண்டு இருந்தனர்.

அதெல்லாம் அவர்களுக்குப் புதிது. ஆக, புதிதாய் ஒன்றை செய்யப் போகும் உற்சாகமும் சந்தோசமும் ஒரு அறியாமையும் எல்லாம் கலந்து கட்டி அடித்தது. இவர்களை வேடிக்கைப் பார்த்து அமர்ந்துகொண்டான்.

மனது எழுந்து அனுராகாவிடம் செல்லவே சம்மதம் சொல்லவில்லை…

‘காதல்…’

இது வந்தபின்னே அவன், அவனாய் இருக்கவில்லை என்பது அவனுக்குத் தெரியும். நிறைய மாற்றங்கள், தடுமாற்றங்கள். எல்லாம் தாண்டி எப்படியேனும் அவளுடன் இணைந்திட்டால் போதும் என்று தான் இருந்தான்.

ஆனால் அனுராகா இப்போது சண்டையிடும் விஷயங்கள் எல்லாம், அவள் சரியாகவே சொன்னாலும் கூட, அவன் சார்ந்த சூழலில், வேலைகளில் இதெல்லாம் சகஜம். தன்னைக் காத்துக்கொள்ள இதெல்லாம் தீபன் செய்தே ஆகவேண்டும்.

அப்படியிருக்க, எதிர்காலத்தில், திருமணம் ஆகிய பின்னும், இது மாதிரி விசயங்களுக்கு குடும்பத்தில் சண்டை வருமாயின், அதிலும் அப்போது சூழல் இதைக் காட்டிலும் தீவிரம் ஆகலாம். அப்போதும் இப்படியெல்லாம் என்றால் அவனால் என்னதான் செய்திட முடியும்??

இதெல்லாம் மனதினில் ஓட, அப்படியே அமர்ந்து போனான்..

அங்கே அனுராகாவோ, வேறுவிதமாய் யோசித்துக்கொண்டு இருந்தாள். சூழ்நிலை சாதாகமாக இருக்கும் வரைக்கும் தான் எல்லாமே நன்றாய் நடக்கும். நாம் போடும் திட்டங்கள் படி நடக்கும். அது அப்படியில்லை எனில் எத்தனை நாளைக்கு தீபன் இப்படி ஓடிக்கொண்டே இருப்பான்.

அவனுக்கென்று ஒரு ஆசுவாசம் வேண்டாமா??!!

அரசியல் வாழ்வில் இதெல்லாம் சாதாரணம் என்று அவளுக்கும் தெரியும். தொழிலில் முன்னேறவே, லோகேஸ்வரன் எத்தனை அடிமட்ட வேலைகள் செய்திருக்கிறார் என்பது அவள் அறியாததா..??!!

ஆகினும்… தீபன் மீது அப்படியான கறைகள் படிவதில் அவளுக்கு சம்மதம் இல்லை.

பெரியதாய் எதிலாவது அவன் மாட்டிக்கொண்டால், அவளால் அதெல்லாம் தாங்கிக்கொள்ளவே முடியாது.. இதெல்லாம் புரிந்துகொள்ளாது இவனுக்கு கோபம் வேறு.

‘எல்லாத்துலயும் எதோ ஒன்னு செஞ்சு வச்சிருக்கான்.. இதெல்லாம் ஒண்ணா சேர்ந்து பெரிய பிரச்சனை ஆச்சுன்னா…’ என்று அவளுக்கு அவனைப் பற்றின கவலைகள் ஜாஸ்தியாகிப் போனது.

உஷா பொறுத்துப் பார்த்தவர் “நான் பசங்களோட பேசணும்…” என்று சக்ரவர்த்தியிடம் சொல்ல,

“இப்போ வேணாம்..” என்றார்.

“இதையே தான் இத்தனை நாளா சொன்னீங்க.. அரசியல்வாதிங்க பேச்சை நம்பக் கூடாதுன்னு சொல்றது சரியாதான் இருக்கு.. அன்னிக்கு எப்போ பேசணுமோ என்கிட்ட சொல்லுன்னு சொன்னீங்க தானே.. ” என்று உஷாவும் கேட்க,

 “எலக்சன் வரைக்கும் பொறுத்துக்கோ…” என்றுவிட்டார் சக்ரவர்த்தி ஒரே பேச்சாக.

காதர் கூட “ஐயா… நீங்க ரொம்ப பார்க்கிறீங்களோ தோணுது.. எல்லாம் சரியாதான் இருக்கு.. அம்மா பேசணும்னு சொன்னா பேச விடுங்களேன்..” என,

“இத்தனை விசயம் எனக்குத் தெரியாம என் புள்ளைங்க மறைச்சு வச்சிருக்கானுங்க.. ஒருத்தான் நல்லதுக்கு மறைச்சான்.. இன்னொருத்தன் நேரம் வர வரைக்கும் இருக்கட்டும்னு மறைச்சான்.. ஆனா மறைச்சது தப்புதானே.. என் பசங்க என்ன செய்றாங்கன்னே தெரியாம நான் மந்திரி பதவியில இருந்து என்னத்த கிழிக்க போறேன்….” என்று அவரும் சொல்ல,

“இல்லைங்கய்யா.. இன்னும் பத்து நாள் தான் இருக்கு எலக்சன்க்கு.. இப்பவும் தம்பிங்க ரெண்டு பேரும் இங்க இல்லைன்னா நல்லாருக்காதே..” என்று காதர் சொல்ல,

“வராம எங்க போயிட போறானுங்க.. ஆனா இப்போவே வேணாம்.. எலக்சன் அன்னிக்கு வர வைப்போம் போதும்..” என்றுவிட்டார்.

தீபனுக்கு எப்படியோ, மிதுனுக்கு இப்போது உஷா பேசினால், எல்லாம் தெரிந்துவிடும் அப்பாதான் இதனை எல்லாம் செய்திருக்கிறார் என்று.

அது அவன் இங்கே வந்து சேரும் வரைக்கும் அவனக்குத் தெரிவதில் சக்ரவர்த்திக்கு விருப்பமில்லை..

ஆனால், மிதுன் அவரின் மகனல்லவா, அவனின் மூளை வேறுவிதமாய் யோசித்து.

நன்கு தெரிந்து வைத்துக்கொண்டான் அங்கே அவனோடு இருப்பது இருவர் மட்டுமே. இரண்டு நாட்களுக்கு ஒருமுறை ஆட்கள் மாறுகிறார்கள் என்று தெரியும். அதையும் அவர்களின் பேச்சினை வைத்து புரிந்துகொண்டான்.

இவனோடு யாரும் பேசிட மாட்டர், ஆனால் முதல் இரண்டு நாள் கழித்து அவர்களின் பேச்சினை மிதுன் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினான்.

அறைக்குள் இவன் இருக்க, அவர்கள் வெளியே இருந்து பேசுவர்.. உன்னிப்பாய் தான் கவனிக்க முடியும்.. முதலில் இதுவே ஒரு எரிச்சல் கொடுத்தது.

இருந்தும் “நோ மிதுன்… கண்டிப்பா உனக்கு ஏதாவது க்ளூ கிடைக்கும்..” என்று அவனுக்கு அவனே தைரியம் சொல்லிக்கொள்ள, அடுத்து அடுத்து, அவர்கள் உள்ளே வந்து உணவு வைக்கும் போதோ இல்லை ஏதாவது கேட்க வரும்போதோ, மெதுவாய் பேச்சினை ஆரம்பித்தான்.

அவனுக்கு உதவி செய்வான் என்று ஒருவனைத் தேர்ந்தெடுத்தும் வைத்திருந்தான்..

‘நூல் விட்டுப் பார்ப்பது…’ அதை மிதுனுக்கு சொல்லியா கொடுக்க வேண்டும்?!!

அவன் – மோகத்தில் முகம் திருப்பாதே..

அவள் – தேகம் புரிந்தால் போதுமோ??

காதல் – சித்தாந்தம் பேசுவாங்களோ??!!!         

Advertisement