Advertisement

               நான் இனி நீ – 30

காதருக்கு ஒன்றும் விளங்கவில்லை, இத்தனை காலை பொழுதில் சக்ரவர்த்தி ஏன் தன்னை வர சொல்கிறார் என்று. பொதுவாய் தீபன் எதாவது மிக மிக முக்கியமான விசயம் என்றால் மட்டுமே நேரம் காலாம் பார்க்காது அழைத்து வர சொல்வான்..

அப்படியில்லாது, இப்போது இவர் அழைக்க, யோசனையோடு தான் அங்கே வீடு சென்றார்.

அப்படியொரு அமைதி வீட்டினில். அந்த அமைதியே ஒரு திகில் உணர்வு தான் கொடுத்தது காதருக்கு..

“அய்யா…” என்று அவர் ஆரம்பிக்கும் முன்னமே,

“சின்னவனுக்கு போன் போட்டு, அவனை எங்க போறானோ அங்கேயே கொஞ்ச நாள் இருக்கச் சொல்லு..” என, 

“அய்யா.. அது.. சின்ன தம்பி அப்போ வீட்ல இல்லைங்களா…” என்று ஒன்றும் தெரியாதவர் போல கேட்க,   

“காதற்…!!!!” என்றார் அழுத்தம் திருத்தமாய்.

சக்ரவர்த்தியின் முகம் என்றும் இல்லாத வகையில் அப்படியொரு கோபத்திலும் சிந்தனையிலும் இருக்க, காதருக்கு ஏன் இப்படி என்ற கேள்வி மட்டுமே..

அவர் இன்னமும் அப்படியே தயங்கி தயங்கி நிற்க,

“என்ன.. அப்போ.. சின்னவன் சொல்றதை செய்யத்தான் உன் மனசு இடம் கொடுக்குமா??!!! நான் எல்லாம் உனக்கு வேற அப்படிதானே…” என்று ஒரு அதட்டல் போட,

“அய்யா.. அப்படி எல்லாம் இல்லைங்கய்யா…” என்றார் பதறி.   

“நான் பதினஞ்சு வயசுல கொடி பிடிச்சு ஊர்வலம் போனவன்.. சரியா முப்பது வயசு நான் சட்டமன்றம் போகும்போது… இவனுங்க வயசை விட எனக்கு அனுபவம் ஜாஸ்தி.. என்னை அப்பாவா தான் பார்த்திருக்கானுங்க.. அரசியல் வாதியா இல்லை…” என்று சக்ரவர்த்தி சொல்லிக்கொண்டு இருக்க,

காதர் அமைதியாகவே இருந்தார். திடீரென்று சக்ரவர்த்தி அழைத்து பேசுவார் என்று நினைக்கவேயில்லை.

அதிலும் ‘தீபனை அங்கேயே இருக்கச் சொல்…’ என்றதும், குழம்பித்தான் போனார்.

“அந்த தர்மா பையனுக்கு போன் போட்டு ஆர்த்தி பொண்ண நேரா இங்க கூட்டிட்டு வர சொல்லு.. செட்டுக்கு போட்டு வீட்டுக்கு வர சொல்லு..” என,

“இல்லங்கய்யா.. அது தீபன் தம்பி…” என்று காதற் இழுக்க,

“நான் சொன்னதை செய்…” என்றார் அதிகாரமாய்.

வேறு வழியில்லாது தான் காதற் தீபனுக்கு அழைத்து, பேச, அவனோ சரி என்றும் சொல்லவில்லை, இல்லையென்றும் சொல்ல வில்லை. பொதுவாய் பேசிவிட்டு வைக்க, 

“அய்யா.. தம்பி பிடி கொடுக்காம பேசுறாப்ல..” என்று காதற் சொல்ல,

“ம்ம் எல்லாமே எனக்குத் தெரியும்னு நீ காட்டிக்கவேணாம்.. அந்த அனு பொண்ணு கூட அங்கதான் இருக்கு.. இருந்துக்குவான்.. இருக்கணும்..  ஒருவாரம் இல்லை.. தேர்தல் முடிஞ்சு நான் பதவி ஏத்துக்குற வரைக்கும்.. தீபனும் சரி.. மிதுனும் சரி.. நேருக்கு நேர் பார்க்கவும் கூடாது.. இங்க வரவும் கூடாது..” என்ற சக்ரவர்த்தியின் மனதில் என்ன என்ன யோசனைகளோ..

ஆனார் காதற் தான் மலைத்துப் போனார்..

“என்னய்யா இப்படி நிக்கிறா.. எனக்கு இதெல்லாம் தெரியாதுன்னு நினைசீங்களோ… இவனுங்களுக்கே இவ்வளோனா.. நான் இந்த ரெண்டுபேருக்கும் அப்பன்.. ஆளுங்கட்சியா எது வந்தாலும், நான் பதவியில இல்லாம இருந்ததில்ல.. 

இவனுங்களுக்கு கீழ வேலை செய்ய நாலு பேர் இருந்தா.. நான் சொல்றதை செய்ய நானூறு பேரு வருவான்.. அதெல்லாம் யோசிக்காம.. ரெண்டு பெரும் விளையாண்டு இருக்கானுங்க… வெளிய தெரிஞ்சா வெக்கக்கேடு…” என்று உக்கிரமாய் பேச,

“இல்லங்கய்யா.. அது.. தீபன் தம்பி மேல எந்த…” என்று காதற் சொல்லும்போதே,

“தப்பு எது சரி எதுன்னு நான் யாரையும் சொல்ல மாட்டேன்.. அரசியல் வீட்டுக்குள்ள வந்திடுச்சு.. அப்போ அவனவன் தன்னை முன்னிறுத்த தான் பார்ப்பான்.. இயல்பு அதான்.. இத்தனை நாள் நானும் சரி சரின்னு விட்டு வச்சா இவன் பொண்ணை தூக்கிட்டு போய் வைக்கிறான்.. அவன் என்னடான்னா லாரிய அனுப்புறான் போட.. விட்டா என்னையும் சேர்த்து போட்றுவானுங்க போல…” என்றார் இன்னமும் அந்த கோபம் குறையாது.

“ஐயோ… அய்யா… நாங்க எல்லாம் இருக்கோம்.. விட்ருவோமா…” என,

“உன் காலுக்கு கீழ பள்ளம் இருக்கப்போ நீ நேரா நிக்க முயற்சி பண்ணுவியா இல்லை என்னை காப்பாத்த வருவியா??!! யாரை நம்பியும் யாரும் இங்க இல்ல.. புரிஞ்சதா..

அப்புறம் சின்னவன் ஏதாவது கேட்டா, ஆர்த்தி பொண்ணு அங்க வேணாம்.. இங்கயே நானே பத்திரமா ஒரு இடத்துல வச்சிருக்கேன் சொல்லிடு… மீறி விஷயம் போச்சு… எல்லாரயும் சேர்த்து வச்சு தொலைச்சி கட்டிடுவேன்..” என, காதருக்கு வகையாய் மாட்டிக்கொண்ட உணர்வு..

எதுவுமே சொல்ல முடியாத ஒரு நிலையில் நின்றிருக்க, “இனி நான் சொல்றதை மட்டும் நீ செஞ்சா போதும்… ஆர்த்தி பொண்ணு வரவும் சொல்லு.. சேட் வரட்டும்.. அவனுக்கும் இருக்கு..” என்றவர்,

“போ.. போ ஆகவேண்டியதை பாரு..” என, வெகு நாளைக்கு பிறகு சக்ரவர்த்தி தன் இளைய வயதில் எப்படி இருந்தாரோ அப்படியொரு தோரனையை காண்பது போலிருந்தது காதருக்கு.

‘முன்னாடியே அய்யாகிட்ட சொல்லிருக்கனுமோ…’ என்று அவரது மனது எண்ண,

தர்மாவிற்கு அழைத்து ஆர்த்தியை ஒரு இடம் சொல்லி அங்கே கொண்டு வர சொல்ல, “என்னண்ணா.. மாத்தி மாத்தி எல்லாம் சொல்றீங்க…” என்றான் அவன்,

“டேய்.. நீ வேற ஏன்டா.. மேல மேல குழப்பம் ஆகக் கூடாது.. அதான் சொல்றேன்.. தீபன் தம்பிக்கிட்ட சொல்லிட்டேன்.. நீ நான் சொல்றதுபோல செய்..” என, தர்மாவிற்கு எப்போதுமே தீபன் சொல்லியதை செய்து தானே பழக்கம்,

ஆக திரும்ப அவன் தீபனுக்கு அழைக்க, அவனோ “என்னங்கடா ஒரு மனுசன நிம்மதியா டிரைவ் பண்ண கூட விடமாட்றீங்க..” என்று எரிச்சல் உற்றவன்,

“இப்போ என்ன ஆர்த்தியை அங்க சேப்பா வைக்கணும்.. அதானே.. வைங்க.. ஆனா சேட் எக்காரணம் கொண்டும் வேற எதுவும் செய்யக் கூடாது.. நம்ம கைக்கு எவிடன்ஸ் வராம ஆர்த்தி அங்க போய்ட கூடாது.. புரிஞ்சதா…” என,

“ம்ம் சரி…” என்ற தர்மாவிற்கு அப்போதும் கூட மனது ஆறவில்லை.

‘என்னவோ நடக்கப் போகிறது…’ என்று அவனுக்குத் தோன்ற, இருந்தும் சொல்லும் வேலையை செய்வது தவிர அவனுக்கு வேறு வேலை இல்லைதானே..

அதே பழக்கத்தில், இப்போதும் செய்ய, ஆர்த்தியை காதற் சொன்ன இடத்திற்கு அழைத்துச் செல்ல, அங்கேயோ சக்ரவர்த்தி இருப்பது கண்டு தர்மா அயர்ந்து தான் போனான். காதறை திகைத்துப் பார்க்க,

“அவனை திகைச்சு பார்க்கிறது எல்லாம் போதும்…” என்றவர் “ஏம்மா உனக்கென்ன பெரிய சாகசம் பண்றோம்னு நினைப்பா.. ஏதாவது ஒன்னு ஆச்சுன்னா….” என்று ஆர்த்தியை திட்டியவர்,

“சேட்…” என்று குரல் கொடுக்க, நாகா சேட்டினை அழைத்துக்கொண்டு வர, சேட்டிற்கு, ஆர்த்தியை கண்ணில் பார்த்ததும் தான் மனதே நிம்மதியானது.

“ம்ம்ம்… சேட்… தீபன் கேட்ட எவிடன்ஸ்…” என்ற சக்ரவர்த்தி,

“இதோ.. இதோ..” என்று அவரின் பையில் இருந்த பைல்கள், இன்னும் சில பென் ட்ரைவ்கள் என்று எல்லாம் எடுத்துக் கொடுக்க,

“இத்தனை வருஷ பழக்கம்.. நல்லா செஞ்சிருக்க…” என்றார், இத்தனை ஆண்டுகள் உன்னை நான் நம்பியதற்கு நன்றாய் வெகுமதி கொடுத்திருக்கிறாய் என்று..

“இல்லே ஜி…” என்று பல்ராம் விளக்கம் சொல்ல வர, “ம்ம்..” என்று கரம் உயர்த்தியவர், “இனி உன்னோட பேச்சுன்னு எதுவுமில்லை.. போ.. இதோட முடிஞ்சது.. அப்புறம்.. பெரியவனுக்கு கூப்பிட்டு அதை இதை சொன்ன.. உன் கழுத்து இருக்காது..” என்றார் ஓடிவிடு என்பதுபோல்.

சக்ரவர்த்தி பேசுகையில், மற்றவர்களால் எதுவுமே சொல்லவே முடியவில்லை. சொல்வது என்ன அவரின் முகத்தினை நேராக பார்க்கக் கூட முடியவில்லை.

எப்படி இந்த மனிதர் இத்தனை நாள் அமைதியாய் இருந்தார்??!!

இந்த கேள்வி அனைவருள்ளும்…

அவர் அமைதியாய் இருக்கவில்லை. நேரம் பார்த்து காத்திருந்தார் என்பது காதருக்கு இப்போது தான் விளங்கியது.

சேட் விட்டால் போதும் என்பதுபோல் ஆர்த்தியை அழைத்துக்கொண்டு சென்றிட, “காதற்.. சேட் வீட்டுக்கு நம்ம ஆளுங்கள பந்தோபஸ்துக்கு போட்டிரு.. தப்பி தவறி கூட அவன் யாரயோடையும் பேசக்கூடாது..” என்றவர்,

“அவனோடயே இருந்தா மட்டும் போதாது.. அவன் சொல்றதையே செஞ்சா மட்டும் போதாது.. அவனுக்கு எது நல்லதோ அதை சொல்லணும்.. செய்யணும்.. விசுவாசம்ங்கறது சொல்றதை செய்றது இல்லை.. நல்லதை செய்றது.. புரிஞ்சதா…” என்றார் நாகாவையும் தர்மாவையும் பார்த்து.

இருவரும் ஒன்றும் சொல்லாது நிற்க “தீபன் இங்க இல்லைன்னு யாருக்கும் தெரியக் கூடாது.. முக்கியமா தொகுதில.. யார் கேட்டாலும் அவன் வேறொரு வேலையா போயிருக்கான்.. அப்படி இப்படின்னு தான் சொல்லணும்..

நான் அடுத்த ரெண்டு நாள் முழுக்க அங்க தான் இருப்பேன். திருவிழா சின்னவன் எப்படி ஏற்பாடு செஞ்சானோ அதைவிட பெருசா இன்னும் பெருசா ஏற்பாடு பண்ணுங்க.. எல்லாத்துலயும் அவன் பேர் வரணும்.. புரிஞ்சதா.. போங்க…” என்று அவர்களையும் அனுப்பியவர், அங்கிருந்தபடியே டெல்லிக்கு அழைத்தார்.

“ம்ம் என்னாச்சு??!!” என, பதில் என்ன வந்ததோ,

“ஹவுஸ் அரெஸ்ட் இல்ல.. ரூம் அரெஸ்ட்.. அந்த ரூம் தாண்டி அவன் பார்வை எங்கயும் போகக் கூடாது.. மிதுன் என் மகன் தான்.. பசங்க தப்பு பண்ணா, தண்டிக்கிற உரிமை அப்பாக்கு இருக்கு.. வேளா வேளைக்கு நல்லா சாப்பாடு மட்டும் கொடுத்திடுங்க.. அவன்கிட்ட போன் லேப்டாப் எல்லாம் வாங்கிடுங்க.. நான் சொல்ற வரைக்கும் அப்படியே தான் இருக்கணும் எல்லாம்..” என்று பேசி முடித்தவருக்கு இன்னமும் கூட அந்த வேகம் குறையவில்லை.

அவர் இருந்த இடத்தில் இருந்து வெளியே வர, டிரைவர் வந்து வேகமாய் கார் கதவினை திறந்துவிட “வீட்டுக்கு போ..” என்றவர், நிறைய நிறைய யோசித்துக்கொண்டு இருந்தார்.

இப்படியொரு சூழல் வரும் என்று அவன் நினைக்கவும் இல்லை.. சக்ரவர்த்தி என்றால் எத்தனை பெருமையும் பெயரும் இருந்ததோ, அதே அளவு தான் தன் பிள்ளைகளை எண்ணியிருந்தார் சக்ரவர்த்தி.

அனுராகாவினால் அண்ணன் தம்பி இருவருக்குள்ளும் பிரச்னை வரும் என்று நினைத்தார், ஆனால் பிரச்னையின் வடிவமே வேறு என்கையில் அவர் களத்தில் இறங்கிட வேண்டிய சூழல் வந்துவிட்டது.

என்ன இதெல்லாம் உஷாவிற்கு தெரிந்தால் என்ன நினைப்பாரோ.. அதுதான் இப்போது..

அனைவரையும் சமாளித்தவர், மனைவியை எப்படி சமாளிப்பது என, யோசித்துக்கொண்டு இருக்க, அவரின் வீடும் வந்தது.

நடப்பது எதுவும் அறியாத உஷாவோ, எப்போதும் போலவே இவரோடு பேச “ம்ம்… ” என்று மட்டும் சொன்னவர்,

“இப்படி உட்கார்..” என்றுவிட்டு, தீபனுக்கு அழைத்தார்.            

D – வில்லேஜ்… அங்கேயே எதோ ஒரு குடிலில் தான் அவள் இருக்கிறாள் என்று தெரியும். அவன் வந்திருப்பது  அனுராகாவிற்குத் தெரியாது.. தெரிந்தாலும் அவள் எதுவும் செய்யப் போவது இல்லை.

இது உன்னுடைய இடம். நீ வருவது எல்லாம் சாதாரணம். ஆனால் நான் வருவது அப்படியல்ல..

இப்படிதான் இருந்திருக்கும் அவளின் எண்ணம்..!!

தீபனோ அங்கே வந்து இரண்டு மணி நேரம் ஆனது.. அவனின் பிரத்தியேக குடிலில் இருக்க, அட்மினும் அவனோடு இருக்க,

“தேவையில்லாம யாரையும் அலோ பண்ணாதீங்க..” என்று சொல்லிக்கொண்டு இருந்தான்.

“ஓகே சார்.. பட்..” என்று அவர் பழைய நிகழ்வுகள் எண்ணி யோசனையாய் பார்க்க,

“ஐ வில் டேக் கேர்..” என்றவன் அவர் செல்லவும்,

அனுராகாவைப் பார்க்கச் செல்ல வேண்டும் என்று எண்ணிய மனதை இழுத்துப் பிடித்து, வெறுமெனே வாக்கிங் செல்ல, அன்றைய தினம் பார்த்து நல்ல கருமேகங்கள் சூழ்ந்து சூழலே இதமாய் இருக்க, அவனைச் சுற்றி இருக்கும் பிரச்னைகள், அவனுள் இருக்கும் உணர்வுகளின் கலவைகள் என எல்லாம் விடுத்து, சுற்று சூழலை கவனித்தபடி நடந்துகொண்டு இருந்தான்.

எத்தனை தூரம் நடந்தானோ தெரியாது.. அங்கிருந்த கல் பெஞ்சில் சாய்ந்து அமர்ந்தவன், பார்வையை ஓட்டிக்கொண்டு இருக்க, எதிர்புறம் இருந்து அனுராகா நடந்து வருவது தெரிந்தது..

இதயம் தாறுமாறாய் அடித்துக்கொள்ளவும் தொடங்கியது..

‘வர்றா.. வர்றா.. ராகா வர்றா…’ என்று மனது முனுமுனுக்க, ‘ அவளா வரட்டும் தீப்ஸ்…’ என்றது அறிவு..

பார்வை அவளிலேயே லயித்திருக்க, அனுராகாவோ அவன் இருக்கும் பக்கம் திரும்பக் கூட இல்லை.

‘பார்த்தா என்ன செய்வா??!! இங்கிருந்தும் போவாளா??!!’ என்றெண்ண,

“டேய் டேய்.. நீ வந்தது அவளுக்காக தானே.. பின்னே ஏன் நேரம் கடத்துற..” என்றும் தோன்ற,

‘அவ பார்த்தா என்ன பார்க்காட்டி என்ன.. நீ பாரு.. உன்னைத் தவற வேற யாருமே அவமேல பார்வை வைக்க முடியாது..’ என்றும் அவன் மனம் சொல்ல, எழுந்து அவள் பின்னே போக நினைக்கையில் தான் சக்ரவர்த்தியிடம் இருந்து அழைப்பு.

அழைப்பினை ஏற்றவனோ “அப்பா…” என்றான் கொஞ்சம் ஆச்சர்யமாய்..

“அப்பா தான் டா.. அப்பாவே தான்.. ஆனா அப்பன்னு ஒருத்தன் இருக்கேங்கிறது நினைப்புல இருக்கா…” என்று எடுத்ததுமே அவரின் குரல் உச்சத் ஸ்தாயில் இருக்க,

“அப்பா…!!” என்றான் இம்முறை அதிர்ந்து..

உஷாவும் மறுபடியும் தீபன் எதுவோ பிரச்னை செய்து வைத்திருக்கிறானோ என்று நினைத்துப் பார்க்க “இங்க பார் தீபன்.. சொல்றதை மட்டும் கேளு.. உன்னோட விளக்கம்.. பதில் கேள்வி.. இதெல்லாம் இப்போ நான் கேட்கத் தயாரா இல்லை..” என,

தீபனுக்கு ‘எதையோ அப்பா கண்டுகொண்டார்…’ என்று புரிந்துபோனது.

அடுத்தநொடி “சொல்லுங்கப்பா..” என்றவனின் குரலில் பவ்யம் வந்து குடிகொள்ள,

“டேய் டேய்.. இந்த பவ்யம் எல்லாம் நான் நம்புவேன்னு நினைக்காத..” என்றவர் “உன்னோட வோட்ல தான் நான் ஜெயிக்கணும்னு இல்லை.. அதனால நான் சொல்றது வரைக்கும் நீ அங்க இருக்க.. இருக்கணும்.. இருந்தாகணும்…” என,

“அப்பா..!!!!!!” என்றான் சத்தமாய்..

அவனின் அதிர்ச்சியின் அளவு, அளந்து பார்த்தால் கூட அளவிட முடியாது.

“உன்னை அவ்வளோ பெரிய இடத்துல ப்ரீயா மூவ் பண்ண விட்டிருக்கேன்னு சந்தோசப்படு.. நான் சொல்றது புரியும்னு நினைக்கிறேன்.. ஆர்த்தி பொண்ணு அவங்க வீட்டுக்கு போயிடுச்சு.. சேட் கிட்ட இருந்த எவிடன்ஸ் எல்லாம் என் கைல..

அப்புறம் நீ ஹவாலா இன்வெஸ்ட்டர்ஸ் கிட்ட வாங்கி வச்சிருக்கியே பவர், அந்த ப்ராசஸ் எல்லாம் உன்னோட பசங்களுக்கு தெரியுமா எப்படி செய்யனும்னு…” என்று சக்ரவர்த்தி அடுத்த கட்ட வேலைக்குப் போக,

“அது.. அதுப்பா.. நான்.. நான் வர்றேன் அங்க.. வந்து உங்களுக்கு சொல்றேன்..” என,

“ம்ம்ச்… நீ வந்து சொல்ற கதை எல்லாம் நான் அப்புறம் கேட்டுக்கிறேன்.. அங்க உன் கண் முன்னாடி என்ன இருக்கோ அதை மட்டும் பாரு.. இங்க நான் பார்த்துப்பேன்..” என, தீபனின் கண்கள், அவனையும் மீறி அனுராகாவை தீண்டியது..

வந்த வழியே அனுராகா திரும்பச் சென்றுகொண்டு இருக்க, தீபன் அமைதியாய் இருக்க,

“சொல்றது புரியும்னு நினைக்கிறேன்.. இல்லன்னா உன்னையும் ஒரு ரூம்ல வைக்கிற சூழல் கொண்டு வந்திடாத..” என்றவர் வைத்துவிட்டார்.

தீபனுக்கு அப்பாவின் வார்த்தைகளை புரிந்துகொள்ளவே சில நொடிகள் பிடித்தது.

‘உன்னையும் ஒரு ரூம்ல..’

“அப்.. அப்படின்னா.. மிதுன்.. மிதுன் மாட்டிட்டானா…” என்று தீபன் மனம் சரியாய் கணக்கிட, அக்கணக்கில் அவன் மனதில் துளி சந்தோசம் கூட இல்லை.

இவை அனைத்தும் அப்பாவிற்கு எப்படியானதொரு மன கஷ்டம் கொடுக்கும் என்று அவன் நன்கு அறிவானே..

உஷா கணவரின் பேச்சினில் அதிர்ந்து பார்க்க “என்ன பார்க்கிற… நம்ம பசங்களுக்கு நான் ஒரு நல்ல அப்பாவா இருந்து வழி நடத்தனும்னு நினைச்சேன்.. ஆனா என்னையும் இங்க அரசியல் பண்ண வச்சிட்டானுங்க..” என்றார் உணர்வற்ற குரலில்..

Advertisement