Advertisement

                           நான்  இனி நீ – 26

மிதுன் லோகேஸ்வரனோடு பேசிட எண்ணி, அவருக்கு அழைக்க, முதலில் அழைப்பை ஏற்காதவர், பின் அவரே அழைத்தும்விட,

“என்ன அங்கிள் பிசியா??” என்றான் இலகுவாய் கேட்பதுபோல்..

“ஒரு மீட்டிங்.. தட்ஸ் ஆல்… என்ன விஷயம் மிதுன்..” என,

“அப்பா தீப்ஸ் அம்மா எல்லாரும் வந்திருந்தாங்க போல..” என்றவனின் கேள்வி பிடிக்கவில்லையோ, இல்லை அவன் கேட்ட தோரணை பிடிக்கவில்லையோ, ஆனால் மிதுன் அப்போது பேசியதில் என்னவோ ஒன்று லோகேஸ்வரனுக்குப் பிடிக்கவில்லை..

“எஸ்…” என்றுமட்டும் சொல்ல,

“ம்ம் அங்கிள்.. நான்.. அந்த பிரஷாந்தை மீட் பண்ணனுமே.. இன்னும் உங்க எம்ப்ளாயி தானா.. இல்லை..” எனும்போதே,

“அவன் போயாச்சு மிதுன்..” என்றார் லோகேஸ்வரன்.

“ஓ!! ஓகே.. தெரிஞ்சோ தெரியாமையோ ஒரு நல்லது பண்ணிருக்கான்….” என்றவன் “ஓஹோ..!! ஐம் ரியல்லி சாரி.. அனு.. அனுராகா.. ஹவ் இஸ் ஷி??” என,

“யா ஷி இஸ் குட்… அண்ட் மிதுன் இப்போ நம்ம எதுவுமே பேசிக்கவேண்டாமே.. பிகாஸ் அனு எந்த எக்ஸ்ட்ரீம்னாலும் போவா..” என்று லோகேஸ்வரனும் சொல்ல,

“எஸ்.. எனக்குமே ஷாக்தான்.. பட் எல்லாம் போக போக சரியாகிடும்.. நீங்க ஹாஸ்பிட்டல் போறப்போ சொல்லுங்க நான் வர்றேன்..” என,

“இன்னும் டூ ஹவர்ல எனக்கு ஆஸ்திரேலியா பிளைட் மிதுன்.. திஸ் வீக் எண்டு வந்திடுவேன்.. வந்ததும் கண்டிப்பா மீட் பண்ணலாம்…” என்றதும், மிதுனுக்கு அப்படியொரு கோபம்..

“ஓகே அங்கிள்…” என்று பேசிவிட்டு வைத்தவனுக்கு ஒன்றுமே புரியவில்லை..

திடீரென்று அவனின் அனைத்துத் திட்டங்களும் சொதப்புவதாய் இருந்தது. எங்கே எப்படி என்ன ஆனது என்று அவன் யோசிக்கும் முன்னே சில சங்கதிகள் நடந்துவிட, அவனால் தேர்தல் வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. இந்த ஷர்மாவோ இவனிடம் வந்து சேர்ந்த நேரமோ என்னவோ, உடல்நிலை மிக மோசமாய் இருந்தான்..

கண்கள் திறப்பதே இல்லை.. பேசுவதும் ஒன்றோ இரண்டோ வார்த்தைகள் தான்..

ஆக அவனை அத்துணை சிரமத்தில் கண்டுபிடித்து தூக்கியது கூட ஒருபயனும் கொடுதிடவில்லை மிதுனுக்கு..

மனதினுள்ளே இந்த நாகாவும், தர்மாவும் எங்கே இருப்பார்கள் என்ற கேள்வி வேறு.. காரணம் அவர்கள் தீபனுக்காகா உயிரையும் கொடுக்கும் ஆட்கள்.. உயிரை எடுக்கும் ஆட்களும் கூட. அப்படியிருப்பவர்கள் இன்று இருக்கும் இடமே தெரியாது போய்விட்டதும், அதைப்பற்றி தீபனும் ஒன்றும் எண்ணாது இருப்பதும் அவனுக்கு சந்தேகமாய் இருந்தது.

இப்போது அப்பா வேறு சென்று அனுராகாவை பார்த்துவிட்டு வந்தது எல்லாம் சேர்ந்து ஒருவழி செய்தது அவனை.

லோகேஸ்வரன் அவனோடு பேசாது இருப்பது,  அவனை தவிர்ப்பதாகவே பட, போதாத குறைக்கு சக்ரவர்த்தி வேறு சென்று பார்த்துவிட்டு வந்திருக்க, என்னடா இது என்று யோசனைகளை அவனுள் ஓட, வீட்டிற்கு போனான்.

உஷா மட்டுமே இருக்க “ம்மா என்ன என்னென்னவோ நடக்குது போல..” என, ஏற்கனவே கடுப்பில் இருந்தவர்

“ம்ம்ச் இப்போ உனக்கு என்ன வேணும்..” என,

“எல்லாரும் எங்க போயிட்டு வந்தீங்க..” என்றான் ஒன்றும் தெரியாதவன் போல.

“விஷயம் தெரிஞ்சுதானே வந்திருக்க..”

“ம்ம் வந்தேன் சரி.. ஆனா நானும் உங்க பையன் தானே..” என்று மிதுன் வருத்தமாய் கேட்பதுபோல் கேட்க,

‘டேய்…’ என்று உஷா பார்த்தவர் “இது என்னோட முடிவு இல்லை.. அப்பாவோடது.. கிளம்புன்னு சொல்றப்போ நான் என்ன செய்ய முடியும்..” என்றவர்

“மிதுன் உன்னோட மனசுல எதுவும் இருக்கா??” என, “ஒண்ணுமில்லம்மா..” என்கையிலேயே தீபன் வந்துவிட்டான்.

சக்ரவர்த்தி அவனுக்கு வேலைகள் சொல்லிக்கொண்டே இருந்தார். சும்மா விட்டால்தானே இவன் ஏதாவது செய்வான் என்று முழு நேரமும் தொகுதியில் இருக்கும்படி பார்த்துக்கொள்ள சிறு சிறு வேலைகளை கூட அவனையே முன் நின்று பார்க்கும்படி சொல்ல,

கிடைத்த இடைவெளியில் வீட்டிற்கு வந்தவன் “ம்மா.. அப்பா ரொம்ப செய்றார் ம்மா..” என,

உஷா பதில் சொல்லும்முன்னே, மிதுன்  தம்பியைக் காணவும் முகத்தினை அப்படியே மாற்றிக்கொண்டவன் “என்னடா இப்போ ஓகேவா..” என,

‘நீ என்ன கேட்கிறாய்..’ என்று தீபன் பார்க்க “உன்னைத்தான் தீப்ஸ்.. எல்லாம் ஓகே வா” என்று மிதுன் கேட்க,

“ம்ம்ஹும்.. எதுவுமே ஓகேவா இல்லை..” என்று தீபன் சொல்ல,

இப்போது ‘என்ன சொல்கிறாய் நீ..’ என்று மிதுனின் பார்வை மாறியது.

அவன் சாதாரணமாய் கேட்கிறானா இல்லை, வேறு எதையும் மனதில் வைத்துக் கேட்கிறானா என்று மிதுன் சிந்திக்க,

“பிளக்ஸ் வைக்கிறதை கூட அப்பா என்னை போய் நேர்ல பாருன்னு சொல்றார்டா..” என்று தீபன் குற்றப்பத்திரிக்கை வாசிக்க,

“ஆளுங்க இருக்காங்க தானே..” என்றான் மிதுனும்..

“இல்லாமையா.. அப்பா விரட்டிட்டே இருக்கார்..” என்றவன் “ஆமா நீ என்ன இங்க???” என்றான்.

“ஏன் நீ வர்றப்போ நான் இருக்கக் கூடாதா??!!” என, தீபனின் பார்வை வீட்டினை ஒருமுறை சுற்றி வந்தது.

தீபனின் எண்ணம் எல்லாம், இந்த வீட்டினில் யாரோ ஒருவர் தங்களுக்கு எதிராய் செயல்படுவது நன்கு தெரிகிறது.. ஆனால் அது யாரென்று தெரியவில்லை..

யாராக இருக்கும்??!! இதுவே அவனின்  மனதில் ஓடிக்கொண்டு இருந்தது..

அதனால் மட்டுமே அவனின் பேச்சு அளவோடு இருக்க, மிதுனோ தம்பி எதுவும் கண்டுகொண்டானோ என்று அவனைக் காண, சக்ரவர்த்தியும் வீட்டிற்கு வந்துவிட்டார். அவரோடு காதர்.

“காதர்ண்ணா…” என்று தீபனும், மிதுனும் வரவேற்ப்பாய் பார்க்க,

உஷா “எப்படி இருக்க காதர்..” என,

“நல்லா இருக்கேன்ம்மா.. நீங்க எப்படி இருக்கீங்க..” என்று பொதுவாய் கேட்க,

“என்ன காதர் நலம் விசாரிக்கத்தான் வந்தியா என்ன??? விஷயம் இல்லாம வரமாட்டியே..” என்று சக்ரவர்த்தி கேட்டுவிட்டு சிரிக்க,

“இங்க வர்றதுக்கு எனக்கு விஷயம் வேணுங்களா??!!” என்றார் காதர்.

“அதானே… உன்னை இங்கவே இருன்னு சொன்னா நீ கேட்கவேயில்லை..” என்று உஷாவும் சொல்ல,

தீபன் அமைதியாய் நடப்பதை கவனிக்க, காதரோ “இங்க இருக்கிறதுக்கு எனக்கு என்னம்மா கஷ்டமா என்ன.. குடும்பத்தை பார்க்கணுமில்ல..  பேரன் பேத்தி எல்லாம் வந்தாச்சு…” என்றவர்,

“இப்போ வந்ததுகூட உங்க எல்லாரையும் பார்த்துட்டு போகலாம்னுதான்..” என,

“காதர்.. நீ எப்போவேனா வரலாம்.. போகலாம்.. அதுக்கெல்லாம் காரணம் சொல்லனும்னு இல்லை.. இருந்து சாப்பிட்டு போ..” என்று அவரின் முதுகில் தட்டிவிட்டு சக்ரவர்த்தி எழுந்து வெளியே காத்திருக்கும் கட்சி ஆட்களை பார்க்கப் போய்விட,

காதரோ “என்ன தீபன் தம்பி எதுவும் பேசாம அமைதியா இருக்கீங்க..” என,

“ஒண்ணுமில்லை காதர்ண்ணா.. ஒரு யோசனை அதுதான்..” என்றவன், “அப்புறம் சொல்லுங்க லைப் எப்படி போகுது..” என்றான் பொதுப்படையாய்.

“எல்லாம் நல்லபடியா போகுது தம்பி..” என்றவர் “தேர்தல் வேலை எல்லாம் எப்படி போகுது .. இந்த தடவையும் நம்ம அய்யா பதவிக்கு வந்திடனும்..” என,

“கண்டிப்பா.. அப்பா ஜெயிப்பார்..” என்றான் மிதுன்..

மிதுனின் முகத்தினில் நொடிப்பொழுதில் ஒரு மாற்றம் வந்துபோக, தீபன்  “அண்ணாவோட பேசிட்டு இருங்க..” என்றுவிட்டு அவனும் அவனின் அறைக்குச் சென்றுவிட்டான்..

இந்த இடைப்பட்ட வேலையில் மிதுன் மனதினில் வேறொரு திட்டம்.

“அம்மா நீங்க போய் ரெஸ்ட் எடுங்க..” என்று மிதுன் சொல்லவும், உஷாவும் நகர்ந்துவிட, “காதர்ண்ணா நீங்க ஒரு ஹெல்ப் பண்ணனும்..” என்றான்.

‘என்னடா.. அண்ணன் தம்பி இருவருமே உதவி என்கிறார்கள்..’ என்று காதர் யோசித்தாலும், மிதுனிடம் “என்ன தம்பி.. ஹெல்ப்னு எல்லாம் சொல்லனுமா..?? என்ன செய்யணும் சொல்லுங்க.. பண்ணிடலாம்..” என,

“எனக்கு நம்பிக்கையான ஒரு ஆள் வேணும்.. வீட்லயே இருக்கிறது போல. நாங்க யாரும் இல்லைன்னானும் எல்லாம் கவனிக்கிறது போல..” 

“அட இதென்ன பெரிய விசயமா??!!”

“இல்ல காதர்ண்ணா.. யாருக்கும் தெரியக்கூடாது… அப்பா தீப்ஸ் அம்மா இவங்க யாருக்குமே.. சும்மா வேலைக்கு இருக்கிறது போல இருக்கட்டும்.. ஆனா வீட்ல நடக்கிறது ஒவ்வொன்னும் எனக்குத் தெரியவரணும்..” என,

“அப்பாக்கு தெரியாமயா??!!!” என்று இழுத்தார் காதர்..

என்னவோ மிதுனின் இப்பேச்சு அவருக்கு ஏற்புடையதாய் இல்லை..

“அ.. அது.. இந்த எலெக்சன்ல அப்பாவ தோக்கடிக்க நிறைய வேலைகள் நடக்குதுண்ணா.. உங்களுக்கே சொல்லவேண்டியது இல்லை.. யார் எப்போ என்ன செய்வான்னு தெரியாது. சோ இங்க வேலைல இருக்கவங்களே யார் என்ன எப்படின்னு தெரியாம போக வாய்ப்புகள் இருக்கே.. அப்பாக்கிட்ட இதெல்லாம் சொல்லி டென்சன் பண்ண வேண்டியது இல்லை.. ” என,

“ஓஹோ!! சரிங்க தம்பி… ஒரு ஆள் அனுப்புறேன்.. பேசுறது எல்லாம் நீங்க பேசிக்கோங்க.. விஷயம் என் வழியா வெளிய வராது..” என்றுவிட்டு மேலும் சிறிது நேரம் இருந்துவிட்டு போனார்..

ஆனால் இவ்விசயம் அப்படியே தீபனுக்கு காதர் சொல்லிட, அவனோ  “அனுப்புங்க காதர்ண்ணா பார்த்துப்போம்..” என்றுவிட்டான்.

பொதுவாய் இம்மாதிரி வேலைகள் எல்லாம் மிதுன் தீபன் இருவரும் கலந்து பேசித்தான் முடிவு செய்வர்.. யார் யாரை என்ன வேலைக்கு நியமிப்பது என்று. ஆனால் இன்றோ மிதுன் யாருக்கும் தெரியாது சொந்த வீட்டினில் ஒரு ஆள் வைக்கிறான் என்றால்??!!

தீபனுக்கும் இது சரியாய் படவில்லை..

“அனுப்புங்க.. மிதுன் சொல்றதை செய்யட்டும்.. ஆனா இது எனக்கும் தெரியும்னு வேலைக்கு வர்றவனுக்குக்கூட தெரியக்கூடாது.. எதுவா இருந்தாலும் உங்க மூலமா என்கிட்டே வரட்டும்ண்ணா..” என்றுவிட்டான்.

அப்படி வந்தவன் தான் சதீஸ்..

காதர் மறுநாளே அவனை மிதுனைப் பார்க்க அனுப்பிவிட்டார்.. மிதுன் தனியே அவனை விசாரித்தவன், மனதிற்கு திருப்தியாய் இருக்கவும் தான்,    

“சதீஸ் வீட்டுக்கு யார் வந்தாலும் சரி.. எனக்கு அப்டேட்ஸ் வந்திட்டே இருக்கணும்.. ஒரு த்ரீ டேஸ் நான் இங்க இருக்க மாட்டேன்.. ஆனா இங்க என்ன நடக்குதோ எல்லாம்.. எல்லாமே எனக்குத் தெரிய வரணும். புரிஞ்சதா??!!” என,

“ஓகே சார்..” என்றான் அந்த புதியவன்.

“முக்கியமா தீபன்.. அவனுக்கு நீ இங்க எல்லாரையும் வாட்ச் பண்றன்னு தெரியவே  கூடாது.. ஆனா.. அவன் என்ன செய்றான் அவனைப் பார்க்க யார் யார் எல்லாம் வர்றாங்க.. இதெல்லாம் நீ நோட் செய்யணும்..” என,

“ஓகே சார்..” என்றான் திரும்பவும் சதீஸ்..

“விஷயம் லீக் ஆகவே கூடாது.. அப்படி எதுலயாவது மாட்டிக்கிற மாதிரி இருந்தா நீ அடுத்த நிமிஷம் இங்க இருந்து கிளம்பிடனும்..” என்றிட, சதீஸ்க்கு கொஞ்சம் பதற்றமாகவே இருந்தாலும், வந்த வேலையை சரியாய் செய்திட வேண்டும் என்ற எண்ணம் நிறையவே இருந்தது.. 

“ஓகே… உன் வேலையை பார்க்கலாம்.. ஒரு லேப்டாப் அண்ட் மொபைல் கொஞ்ச நேரத்துல உனக்கு வந்திடும்..” என்றுவிட்டு, வீட்டிற்கு உள்ளே அழைத்து வர,   

உஷா என்னவென்று கேட்டதற்கு கூட “ம்மா எலக்சன் நெருங்கிட்டிருக்கு. நாங்க யாரும் சரியா இங்க இருக்கவும் மாட்டோம்.. ஆனா வீட்டுக்கு நிறைய பேர் வருவாங்க போவாங்க. சோ சதீஸ் இங்க மேனேஜ் பண்ணட்டும்..” என்றுவிட்டான்.

“எத்தனை பேர்தான்டா வேலைக்கு வைப்பீங்க..” என்று உஷா முணுமுணுக்க,

“ம்மா எல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான்.. நான் டெல்லி போகணும்.. தீப்ஸ் எப்போ என்ன செய்வான் சொல்லவே முடியாது.. அப்பாக்கு நேரமே போதலை.. அதனால..” என,

“ம்ம் என்னவோ பண்ணுங்க..” என்றார் அவரும்..

உஷாவிற்கு அதற்குமேல் இவர்கள் விசயத்தில் தலையிட்டு பழக்கமில்லை.. குடும்பம் நல்லபடியாய் இருந்திட வேண்டும். அதுதான் பிரதானம். அதற்குமேலே கட்சி விஷயம், ஆட்கள் விசயம் இதெல்லாம் தலையில் போட்டுக்கொள்ள மாட்டார்..

தீபன் மீது கோபம் இருந்தாலும், இப்போது மிதுனைக் கண்டு வியப்பாய் கூட இருந்தது.. அவன் மனதினில் சிறிதும் வருத்தமில்லையா??!! என்று தோன்ற ‘என்ன பிள்ளைகளோ…’ என்று எண்ணிக்கொண்டார்..

தீபனுக்கு, காதர் வந்து சென்றபின்னே மேலும் தெளிவு கிடைத்தது. வீட்டினில் அவனின் ஆள் ஒருவன். ஆனால் அவனின் ஆள் என்று அந்த நபருக்கே தெரியாது.. சிரித்துக்கொண்டான்..

மிதுன் ஏன் இப்படி செய்கிறான் என்று தோன்றினாலும், இதுவும் ஒருவகை நன்மைக்கே என்று தோன்றியது. கண்ணாமூச்சி ஆட்டம்.. அது தீபனுக்கும் பிடித்திருந்தது..

மிதுனின் நடவடிக்கையில் நிறைய வித்தியாசங்கள் கண்டாலும், அவனை அண்ணன் என்ற பார்வையில் மட்டுமே காண்பதால் சந்தேகிக்க முடியவில்லை..

முத்துவை தூக்குவதற்கு எல்லாம் செய்துவிட்டான். சரியான நேரம்.. அதற்கான காத்திருப்பு மட்டுமே..

எதையும் நேரம் பார்த்து செய்தால் வெற்றி நிச்சயம்.. அதற்குத்தான் காத்திருந்தான் தீபன்.. இம்முறை யாரையும் விட்டுவைப்பதாய் இல்லை என்ற முடிவு செய்தாகிவிட்டது.

அது யாராகா இருந்தாலும்..!!

மிதுன் இங்கே இல்லை.. கிளம்பிவிட, அப்பா ஏற்கனவே ஷர்மா விஷயம் கேட்டதினால், முத்து பற்றி சொல்லியும்விட்டான். 

சக்ரவர்த்தியோ “நீ ரொம்ப இதை போட்டு சிந்திக்காத..” என,

“இல்லப்பா.. இவ்வளோ பண்ணிட்டு கடைசில போனா போகட்டும்னு விட முடியாது..” என்று இவனும் சொல்ல,

“இதெல்லாம் பார்த்துக்க ஆள் இருக்குடா.. நீ ஏன் இப்படி அலையுற..” என்றவர், “வா என்னோட தொகுதிக்கு போகலாம்..” என்று அழைத்துச் சென்றுவிட்டார்.

எப்போதும் அப்படி செய்திடமாட்டார். அழைத்தாலும் தீபன் வர மாட்டான்..

ஆனால் இன்று அவனும் கிளம்பிட, சதீஸ் மூலமாய் இவ்விசயம் மிதுனுக்கு போக, ஏற்கனவே ஒருசிலர் அப்பாவிடம் உங்களுக்கு அப்புறம் சின்ன தம்பி வந்தா நல்லாருக்கும் என்று சொன்னதும் இவனுக்கு செய்தி வந்திருக்க, மேலும் மேலும் அவனுள் வன்மம் கூடியது.

“இருடா எல்லாம் மொத்தமா வச்சுக்கிறேன்…” என்று பல்லைக் கடித்தவன், சேட்டிற்கு  அழைத்து “என்ன செய்வீங்களோ தெரியாது.. ஷர்மா கலக்ட் பண்ணிருக்க எவிடன்ஸ்ல ஏதாவது ஒன்னு மீடியாக்கு போகணும்..” என,

“என்ன பேட்டா??!!!” என்று அதிர்ந்தார் பல்ராம்..

“எஸ்.. தீபன் பண்ணிருக்க ஏதாவது ஒரு வேலை.. அல்லது அவன் யாருக்காவது பணம் கொடுத்தது இப்படி ஏதாவது ஒன்னு மீடியாக்கு போகணும்.. வித் எவிடன்ஸ்..” என,

“இப்போ இதே செஞ்சித்தான் ஆகணுமா???” என்றார் பல்ராம்..

“எஸ்…”

“எலக்சன்…” என்று அவர் சொல்லும்போதே,

“ம்ம்ச் எலக்சன்.. அது ஒருப்பக்கம்.. பட் தீப்ஸ்.. அவன்.. அவனை இந்த எலக்சன்ல இருந்தே விலக்கிடனும்.. புரிஞ்சதா… நான் சொன்னதை செய்ங்க..” என்று கத்த,

“சரி சரி…” என்றார் பல்ராம்…

தேர்தல் நேரம், இப்படி செய்தால் கண்டிப்பாய் கொஞ்சம் சலசலப்பு ஏற்படும் தான். ஆனால் மிதுனுக்கு அப்போது வேறுவழி இருக்கவில்லை..

சில விசயங்கள் அப்பாவின் பார்வைக்கு வராமலே கூட தீபன் செய்திருந்தான். அதெல்லாம் வெளியே வந்தால், நிச்சயம் சக்ரவர்த்தி கூட அவனை சடைப்பார் என்று தெரியும்..

ஒவ்வொரு கல்லாய் எறிந்திட வேண்டும்.. அஸ்திவாரம் ஆட்டம் காணும் நேரம் பின் மொத்தமாய் தீபனை வீழ்திடவேண்டும் என்று மிதுன் எண்ணிக்கொண்டு இருக்க,

அங்கே தீபனோ தொகுதியில் இருக்கும் இளைஞர்களின் பாசறை ஆட்களோடு பேசிக்கொண்டு இருந்தான்..

“ண்ணா.. மாஸா ஏதாவது செய்யனும்ணா..” என்று ஒருவன் சொல்ல,

“ம்ம் செய்யலாம். ஆனா தேர்தல் டைம்ல நிறைய ரூல்ஸ் இருக்கு பசங்களா.. அதெல்லாம் பார்க்கணும்..” என,

“அதெல்லாம் பார்த்துக்கலாம்ண்ணா.. ஆனா வெய்ட்டா ஏதாவது செய்யணும்..” என்றதும், சுற்றி இருந்த மற்றவர்களும் ஆமாம் ஆமாம் என்று குரல் கொடுக்க,

“ஒ..!! சரி சரி.. பண்ணலாம்..” என்று சிறிது அமைதியானவன்..

“நம்ம தொகுதி முழுக்க, எத்தனை கோவில் இருக்கு?? சின்னது பெருசு எல்லாம் கணக்கில்லை.. சின்ன செங்கல் வச்சிருந்தா கூட கோவில் தான்.. கணக்கு பண்ணுங்க.. கோவில் கமிட்டின்னு ஆளுங்க இருப்பாங்க இல்லையா எல்லாரையும் கூப்பிட்டு பேசுங்க.. ஒரே நேரத்துல எல்லா கோவில்லையும் ஒரு வாரம் திருவிழா.. சும்மா தொகுதியே அதிரனும்..

ஆகுற செலவு எல்லாம் கட்சியோடது.. நம்மதான் நடத்துறோம்.. ஆனா வெளிப்படையா நம்ம செய்றோம்னு தெரியவும் கூடாது.. ஆனா நம்மளை பத்தி பேச்சு இங்க இருந்துட்டே இருக்கனும்.. பந்தல், ஸ்ட்ரீட் லைட், பாட்டு கச்சேரி.. போட்டிகள் இன்னும் என்னென்னா திருவிழாக்குன்னு செய்யணுமோ அதெல்லாம் செய்ங்க..

ஏரியா பசங்களுக்கு நம்ம கட்சி பேர் போடாம, அதோட கொடி கலர்ல டி ஷர்ட் கொடுத்திடுங்க.. கட்சி சார்பா எல்லாருக்கும் சேலை வேஷ்டி கொடுத்திடலாம்.. பரிசுப் பொருட்கள் வீடு தேடி வும்.. எல்லா நியூஸ் சேனல்லயும் இந்த திருவிழா நீயுஸ் வரணும்.. நாடு செழிக்க, மழை பொழிய எல்லாம் ஒன்னு சேர்ந்து திருவிழா வைக்கிறோம்னு சொல்லுங்க.. ஒருநாள் அப்பாவை கூட்டிட்டு வர்றேன்… எப்படி செஞ்சிடலாமா??!!” என, அடுத்த நொடி

“ண்ணா.. சூப்பர் ண்ணா.. கொண்டாடுறோம்… கோட்டைக்கு போறோம்..” என்று கரகோஷம் ஒழிக்க, தீபன் அங்கிருந்து சந்தோசமாகவே கிளம்பினான்..

பொதுவாய் தேர்தலுக்கு முன்னே இப்படி அதிரடியாய் ஏதாவது செய்வதுதான்.. இம்முறை சொந்த விஷயங்களில் மனம் போனதால் இதைப்பற்றி சிந்திக்க முடியவில்லை. இப்போதோ அதற்கான முடிவினை சொல்லவும் அவனுக்குமே கொஞ்சம் உற்சாகமாய் இருந்தது.

Advertisement