Advertisement

“ராகா…!!!!” என்று தீபன் அதிர்ந்து அழைக்க,

அப்போதும் கூட அவனின் அந்த அழைப்பு அவளுக்கு ஒருவித சிலிர்ப்பை கொடுத்தது தான்.

அடுத்த நொடியே தன்னைத் தானே “ச்சி..” என்று எண்ணிக்கொண்டவள்,

“உனக்கு கேரக்டர்லெஸ் பொண்ணெல்லாம் வேண்டாம்.. சோ நீ எனக்கு வேண்டாம்..” என்று கத்த,

தீபனோ “ஓ!! நோ ராகா…” என்று அவளுக்கு மேலே குரலை உயர்த்த,  அனைவருமே ஐயோ என்றுதான் பார்த்தனர்.

தாராவிற்கு மகள் இவ்வார்த்தைகளை சொல்லவும் கோபம் வந்துவிட்டது.

“என்ன பேச்சு அனு இது.. நீ எப்படின்னு உனக்குத் தெரியாதா?? இல்லை எங்களுக்குத் தெரியாதா…” என,

லோகேஸ்வரனோ “அனு நீ இதெல்லாம் எதுவும் யோசிக்காத..” என்று சொல்ல, அவளோ தீபனைத்தான் ஒரு வெற்றுப் பார்வை பார்த்தாள்.  

எனக்கு உன்னை பிடித்தே இருந்தாலும், என் மனம் உன்னில் நிலைத்தே இருந்தாலும், என்னை அவமானப்படுத்திய நீ எனக்கு வேண்டாம்..    அவ்வளவு தான்.. அதற்குமேல் அவள் வேறெதுவும் சிந்திப்பதாய் இல்லை.

அவன் வேண்டுமெனில் குடித்துவிட்டு ஒன்றும், இப்போது நிலையாய் இருக்கையில் ஒன்றும் பேசலாம்.. அது அவளால் தாங்கிட இயலாது.

ஏற்றுக்கொள்ளவும் முடியாது..!!

அப்படியிருக்க போதும் என்றாகிப்போனது அவளுக்கு. விளக்கம் சொல்லவோ இல்லை விளக்கம் சொல்லி, அவனிடம் திரும்பவும் பழகிட எல்லாம் அவளால் முடியும் என்று அவளுக்குத் தோன்றவே இல்லை…

‘நீ பேசிவிட்டாய்.. நான் முடிவெடுத்துவிட்டேன்…’

இது தான் அவளுக்கு..!!

தீபனே இதை எதிர்பார்க்கவில்ல. சத்தம் போடுவாள்.. கோபிப்பாள் இல்லையோ பேசாமல் இருப்பாள் என்று பார்க்க, அவளோ மீண்டும் ‘நீ வேண்டாம்..’ என்று சொல்ல,

உள்ளே இவர்கள் பேசுவது வெளியே கேட்காது என்றாலும் கூட, இப்படி பெற்றவர்கள் முன்னிலையில் சத்தம் இடுவதும், சண்டை போடுவதும் அசிங்கமாய் இருந்தது..

தீபனே இறங்கி வந்து, கொஞ்சம் தன்மையாய் குரலை மெதுவாக்கி      “நோ ராகா..!!!” என்றான்.

ஆனாலும் அவனின் குரலில் பிடிவாதம் என்பது அப்பட்டமாய் தெரிந்தது.

சக்ரவர்த்திக்கு அனுராகாவின் எண்ணங்களை நன்கு புரிந்துகொள்ள முடிந்தது.. மனிதர்களை படிப்பவர் ஆகிற்றே..!!

அவளோ “அங்கிள் நீங்க கேட்டீங்க நான் சொல்லிட்டேன்..” என,   தீபன் எதோ பேச வர  சக்ரவர்த்தியோ “போதும்டா கிளம்பலாம்..” என்றார்..

ஏன் வந்தார், ஏன் இப்போது கிளம்பலாம் என்கிறார் என்று உஷா காண, அவனோ “இல்லப்பா நான்.. நான் பேசித்தான் ஆகணும்..” என்றான்.

அப்பாவின் முன்னே இப்படி சொல்லிவிட்டாள் என்ற ஆதங்கம் வேறு இருக்க, ‘இப்படி நீ சொல்லலாமா?!!!’ என்ற ஆத்திரம் வேறு வந்தது.

“இதுக்குமேல நீ பேசறதுக்கு ஒண்ணுமில்லை தீபன்..” என்று அவரும் சொல்ல,

“இல்லப்பா அப்படியெல்லாம் விட முடியாது..” என்றவன் “உன்னை அப்படியெல்லாம் விட முடியாது..” என்றான் அனுராகாவிடம்.

அவளும் சுமுகமாய் போகும் எண்ணத்தில் இல்லை. அவனும் அதை அப்படியே விடுவதாய் இல்லை “என்னை எப்படி நீ அப்படி வேணாம் சொல்லலாம்..” என்று திரும்ப ஆரம்பிக்க,

“நீ எனக்கு வேண்டாம்..!!” என்றாள் மீண்டும்..

“ஏய் இன்னொரு தடவ அப்படி சொன்ன தொலைச்சிடுவேன்..” என்று தீபனும் பொறுமையை கை விட,

சக்ரவர்த்திக்கே ‘என்ன இருவரும் இப்படி..’ என்றுதான் பார்த்தார்..

தீபன் இத்தனை நேரம் அவனுக்கு அவனே சொல்லிக்கொண்டு இருந்த அறிவுரைகள் எல்லாம் காற்றில் பறக்க, “இன்னொரு டைம் நீ என்னைப் பார்த்து வேணாம்னு மட்டும் சொல்லிப் பாரு..” என்று விரல் நீட்டி மிரட்ட,

‘என்ன செய்வ..??!!’ என்று பார்த்தவள்,

“என் அப்பா அவரே வந்து என்னன்னு கேட்கிறார், நீ வேண்டாம்னு சொல்வியா??!!” எனவும்,

“உன் அப்பா உன் அப்பாவதானே வந்திருக்கார்.. அப்போ என்னோட பதில் இதுதான்.. இல்லை மினிஸ்டரா பார்க்க வந்து கேட்டாலும் கூட அவர் பையன் எனக்கு வேண்டாம்னு தான் சொல்வேன்…” என்றாள்  ஏளனமாய் ஒரு புன்னகை சிந்தி.

ஏனோ அனுராகாவிற்கு தீபன் பேச பேச, அவனை மறுத்திடவே மனம் வெகுண்டெழுந்தது.

“ஏய்..!!!” என்று தீபன் கத்தியபடி அவளை நெருங்க,  அனுராகாவோ அவளின் கட்டிலோடு பக்கவாட்டில் ஒட்டியிருந்த எமர்ஜென்சி பட்டனை அழுத்திட, வெளியே எமர்ஜென்சி அலாரம் சத்தமிடவும், மருத்துவர்களும், செவிலியர்களும் என்னவோ ஏதோவென்று வந்துவிட்டனர்.

அனுராகாவின் கண்களில் அப்படியொரு துவேசம்..!!

வஞ்சப்புகழ்ச்சி அணி போல இது வஞ்சம் புகுந்த காதல்..!!   

தீபனுக்கோ, போதும் என்று விட்டாகிப்போனது. இவள் எல்லை மீற மீற அவனோ அவளைத் தனதாக்கவே நினைத்தான்.

இருவரின்  பார்வையிலும் உஷ்ணங்கள் தெறிக்க, இரண்டு மருத்துவர்களும், நான்கு நர்ஸ்களும் உள்ளே வந்தவர்கள் “என்னாச்சு??!!” என்று விசாரிக்க,

சக்ரவர்த்தி தான் சுதாரித்து “டாக்டர்ஸ் கூப்பிடனும் சொல்லிட்டு இருந்தேன்.. அனு பொண்ணு உடனே எமர்ஜென்சி பட்டன் அழுத்திடுச்சு..” என்றவர்,

“எப்போ டிஸ்சார்ஜ் பண்ணலாம்னு இருக்கீங்க..” என்று அப்படியே பேச்சினை அவர்களிடம் திருப்பிட, அவருக்கு ஒன்று மட்டும் நன்கு புரிந்தது,

அனுராகா தீபனை இரண்டில் ஒன்று காணாது விடமாட்டாள் என்றும், தீபனும் இதில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்பதும்..!!

இச்சாதாரிகள்..!!

பிண்ணி பிணைவதிலும்…!! கொத்தி சீறுவதிலும்..!!!

மருத்துவர்கள் அனுராகாவின் உடல்நிலைப் பற்றிச் சொல்ல, கவுன்சலிங் செய்திட வேண்டும் என்று சொன்ன மருத்துவரும் அதை திரும்ப சொல்ல,

“என்னது கவுன்சிலிங்கா??!!” என்றான் தீபன்..

“எஸ் சார்..” என,

“அவளுக்கென்ன.. அதெல்லாம் தேவையில்லை..” என்றவன் “நான் பேசினா சரியாகிடுவா..” என்றும் சொல்ல, இப்போ மருத்துவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள,

“நீங்க என்ன ட்ரீட்மென்ட் கொடுக்கணுமோ அதை கொடுங்க…” என்று சக்ரவர்த்தி சொல்ல, அவர்களால் வேறெதுவும் பதில் பேசிட முடியவில்லை.

லோகேஸ்வரன் அத்தனை நேரம் அமைதியாய் இருந்தவர் சக்ரவர்த்தியிடம் “காயம் ஆறிட்டா வீட்டுக்கு ஷிப்ட் பண்ணிக்கலாம்.. அனுக்கு இங்க இருக்க அவ்வளோ பிடிக்கல..” என்றார்.

அதாவது இங்கே இருந்தால், இனி தீபன் அடிக்கடி வருவானோ என்று..!!

அது சக்ரவர்த்திக்கு புரியாது போகுமா??

“அதுக்கென்ன.. காயம் ஆறிட்டா உங்கபொண்ண வீட்டுக்கு கூட்டிட்டு போயிடலாம்..” என்றார், அவளின் மனக் காயத்தினை சுட்டிக் காட்டி. 

மேலும் சில நொடிகள் பேச்சு மருத்துவர்களோடு நீள, அவர்கள் செல்லவும் உஷா “கிளம்பலாம்..” என்றிட,

சக்ரவர்த்திக்குமே இனியும் இருந்தால் இருவரும் அடித்துக்கொள்வரோ என்று இருக்க, “போலாம்..” என்றவர்,

“எது எப்படி இருந்தாலும் முதல்ல நம்ம நல்லா இருந்தா தான் எதுவும்..” என்று அனுராகாவிடம் சொல்லிவிட்டு

“வா தீபன்..” என, அவனோ அசையாது நின்றிருந்தான்..

“தீபன்…” என்று உஷா அதட்ட, சக்ரவர்த்தியோ “டேய்…” என்றவர், “வா… நீ இனி இந்த பொண்ண தொல்லை பண்ணக் கூடாது..” என்று சொல்லி அழைக்க,

“இப்போ போறேன்..” என்று அனுராகாவிடம் சொன்னவன், லோகேஸ்வரனைப் பார்த்த பார்வையில் விட்டால் அவர் பஸ்பம் ஆகியிருப்பார்.

‘உன்னை தனியே பேசிக்கொள்கிறேன்..’ என்றுதான் சொல்லியது அவனின் பார்வை.

லோகேஸ்வரனுக்கு மனதில் என்ன தோன்றியதோ, ஆனால் தீபனோடு எதுவும் பேசவில்லை. அவ்வளவு ஏன் அடுத்து மிதுனோடு கூட எதுவும் பேசவில்லை.. மகள் இப்படி வந்து படுத்திருக்க, தாராவும் பேசாது இருந்திட, அவருக்குமே கொஞ்சம் பொறுமையாய் போவது நல்லது என்று தோன்றியது.

அதிலும் தம்பியின் காதல் தெரியவும், மிதுன் எப்படி எடுத்துக்கொள்வான் என்பது தெரியாது. தெரியாது என்ன தெரியாது, கண்டிப்பாய் அவன் இதற்கு சம்மதிக்க மாட்டான் என்றே நினைத்தார்..  ஆகையால் இப்போது அமைதியாகிவிட, வந்தவர்கள் அனைவரும் கிளம்பிட, அவ்விடமே புயலடித்து ஓய்ந்தது போலிருந்தது.

அவர்கள் கிளம்பிய பின்னும் வெகுநேரம் அனுராகா அமர்ந்த நிலையில் இருக்க, நர்ஸ் வந்து “டிரெஸ்ஸிங் பண்ணனும்..” என்று சொல்ல, அதன்பின்னே தான் அவளுக்கு சுற்றம் புரிந்தது..

மேலும் மேலும் அவளுக்கு நடப்பது எல்லாம் அழுத்தம் கொடுக்க, நர்ஸ் மட்டுமே அவளோடு உள்ளே இருக்க, அவளின் எண்ணங்கள் புரியாத நர்ஸ் “நல்ல ஸ்கின் இப்படி தழும்பு விழறது போல காயம் பட்டிருச்சு..” என்று சொல்ல,

“ஏன் நல்ல ஸ்கின்னா காயம் படக்கூடாதா??!!” என்றாள் அனுராகா.

“இல்லை அதுக்கில்ல.. நல்லா வழுவழுன்னு வச்சிருக்கீங்க.. இப்போ இப்போ பாருங்க காயம்..” என,

ஒருமுறை தீபன் சொன்னது நினைவு வந்தது , “உன்னை பிடிக்கிறப்போ எல்லாம் இறுக்கி இறுக்கி பிடிக்கவேண்டியதா இருக்கு..” என,

“ஏன்??!!” என்றாள் இவள்..

“பின்ன இப்படி வழுவழுன்னு இருந்தா இறுக்கித்தான் பிடிக்க முடியும்.. ஆல்ரடி நான் ஸ்லிப் ஆகினது போதும்.. என் ஹக்கும் ஸ்லிப் ஆகணுமா??” என்றான்..

அது இப்போது நினைவு வர, கண்களை இறுக மூடிக்கொண்டாள். அவன் அப்படி சொன்னது கூட, அவளை அணைத்தபடி தான் சொன்னான். உடல் எல்லாம் சட்டென்று ஒரு உஷணம் பரவுவது போலிருக்க, அனுராகாவிற்கு தீபனின் நினைவு வந்து ஆட்டிப் படைக்கத் தொடங்கியது..

ஆனாலும் அவளின் வைராக்கியம், ‘எது எப்படி இருந்தாலும் சரிதான்.. என்னோட தன் மானம் விட்டு நான் உன்கிட்ட வரவே மாட்டேன் தீப்ஸ்…’  என்று சொல்லிக்கொண்டது..

அவள் கண்களை இறுக மூடி அமர்ந்திருப்பது கண்டு நர்ஸ் “இப்போ பெய்ன் இருக்காதே..” என,

அனுராகாவிற்கு எரிச்சல் வந்தது.

“இனி டிரெஸ்ஸிங் பண்ண நீங்க வராதீங்க..” என, நர்ஸ் திகைத்துப் பார்த்தவள், திரும்பி திரும்பி பார்த்தபடி சென்றாள்.

அங்கே வீட்டிற்குச் சென்ற தீபனோ, தன் தலையை கையில் தாங்கி அமர்ந்துகொள்ள, காரில் வருகையில் உஷா கடிந்துகொண்டே வந்தவர், வீட்டிற்கு வந்ததும்

“இதெல்லாம் தேவையா.. எல்லாம் என்னை சொல்லணும்..” என்று சத்தம் போடா,

சக்ரவர்த்தியோ “இவன் மேல இருக்க தப்பு உனக்குத் தெரியவே இல்லையா..??” என்றார் கை காட்டி.

“அதுக்காக, அவ அப்படி பேசுவாளா.. நீங்க இருக்கப்போவே எமர்ஜென்ஸி பட்டன் ப்ரெஸ் பண்றா.. அப்பப்பா.. நான் கூட என்னவோன்னு நினைச்சேன்..” என,

“அந்த பொண்ணு என்னவோ செஞ்சிருக்கட்டும்.. இவன்தானே பின்னாடி போயிருக்கான்.. அதுவும் அத்தனை பேர் இருக்கிற இடத்துல  அசிங்கப்படுத்திட்டு வந்திருக்கான்.. அப்போ அந்த பொண்ணு அப்படிதான் நடந்துக்கும்.. நம்ம தப்புன்னு சொல்ல முடியாது..” என்றவர்,

“என்னடா இப்படியே உக்காந்துக்கலாம்னு நினைச்சியா… போ.. போய் வேலையை பாரு..” என,

“ப்பா.. ப்ளீஸ்..” என்றான் தீபன்.

“என்னடா… என்னவோ அந்த பொண்ணு வேணாம் சொன்னதும் நீயும் அப்படியே விடப் போறது போல இப்படி உக்காந்து இருக்க.. போ.. போய் வேலையை பாரு.. கொஞ்ச நேரத்துல ஆளுங்க வந்திடுவாங்க…” என்று விரட்ட,

எழுந்து செல்லவே மனமில்லாதவன் போல எழுந்துச் சென்றான்..

அப்பா அம்மா முன்னாடி அனுராகா அப்படி நடந்துகொண்டது அவனால் பொறுக்கவே முடியவில்லை..!!

அப்படித்தானே அன்று அவளுக்கும் இருந்திருக்கும் என்று மனம் சொன்னது.

‘இப்படி செஞ்சிட்டியே தீப்ஸ்.. மேல மேல சிக்கல் பண்ணி வச்சிருக்க…’ என்று எண்ணியபடி கட்சி ஆபிஸ் செல்ல, அங்கேயே எக்கச்சக்க வேலைகள் இருந்தது..

ஆட்கள் நிறைய வந்திருந்தனர்.. எதிலும் மனம் ஒட்டவில்லை.. ஆனால் செய்திட வேண்டுமே..

நாகாவும், தர்மாவும் இல்லாது தீபனுக்கு கொஞ்சம் சிரமமாய் தான் இருந்தது. எது சொன்னாலும் செய்வதற்கு இருவர் இருந்திட, இப்போது அவனே அனைத்தையும் நேரடியாய் கவனிக்க வேண்டிய நிலையில் இருக்க, தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதனைத் தெரிந்துகொள்ளவே அவனுக்கு நேரம் பிடித்தது.

மற்ற நேரமாய் இருந்தால், இதெல்லாம் தூசி என்று தட்டிவிட்டு சென்றிருப்பான், அவன் மனதோ அனுராகாவின் விசயத்தில் சிக்கித் தவிக்க, மற்றது பற்றி சிந்திக்க அவனால் போதிய கவனம் செலுத்த முடியவில்லை..

அதேநேரம் காதர் அழைத்து, நேரில் பார்த்து பேசவேண்டும் என்றுசொல்ல, 

“காதர் அண்ணா.. நீங்க என்னை நேரா பார்க்க வரவேணாம்.. வீட்ல சும்மா எல்லாரையும்  பார்க்க வர்றதுபோல வாங்க..” என,

“அய்யா இருக்காருங்களா??” என்றார் அவர்..

“ம்ம் இருக்கார்..”

“அப்போ சரி.. மிதுன் தம்பி??!!”

“எஸ்.. அண்ணனும் இங்கதான் இருக்கான்.. ஆனா நீங்க வர்றப்போ இருக்கானா தெரியாது.. ” என,

“சரிங்க தம்பி.. நீங்களே ஒரு நேரம் சொல்லுங்க வர்றேன்.. ஆனா எனக்கென்னவோ உங்களுக்கு எதிரா நடந்துக்கிறவன் உங்க வீட்டுக்குள்ள தான் இருக்கான்னு தோணுது.. இல்லன்னா அந்த சேட்டுக்கு இவ்வளோ தைரியம் வராது..”  என,

“ம்ம் இது எனக்கு எப்போவோ தோணிடுச்சு.. அப்புறம் இது எனக்கான எதிராளி அவ்வளோதான்.. அப்பாவையோ இல்லை அண்ணனையும் யாரும் எதுவும் செஞ்சிட போறதில்லை..” என்றும்சொல்ல,

“அதுபத்தி தான் பேசணும் தம்பி.. அப்புறம் முத்து அவனை நம்ம பசங்க பார்த்திருக்காங்க..” என,

தீபனுக்குள் ஒரு பரபரப்பு வந்து அமர்ந்துகொண்டது.

“எங்கண்ணா.. எப்போ??!!” என, அவரும் பதில் சொல்ல,

“ஓஹோ!!!! ராஸ்கல் பணம் வாங்கிருப்பான்…” என்று மேஜையை குத்தியவன், “ஒரு ரெண்டு நாள் ப்ரீயா விட்டு பிடிக்கிறது போல பாலோ பண்ணுங்க.. கண்டிப்பா ஷர்மா இருக்கிற இடம் அவனுக்குத் தெரிஞ்சு தான் இருக்கும்.. சரியான நேரம் பார்த்து தூக்கிடுங்க..” என்றவன்,

“அண்ணா கண்டிப்பா இந்த தடவை மிஸ் ஆகவே கூடாது..” என,

“கண்டிப்பா தம்பி…” என்றவர் “நாகாவும் தர்மாவும் உங்களோட பேசணும் சொல்றாங்க..” என,

“எதாவது பூத்ல இருந்து பேசச் சொல்லுங்க.. நம்பிக்கையான இடமா இருக்கட்டும்.. ரெண்டு நாளைக்கு மேல ஒரே இடத்துல இருக்கவேணாம்..” என்றும் சொல்ல, சரி என்று வைத்துவிட்டார் அவர்.

தீபனுக்கு முத்துவை ஆட்கள் பார்த்துவிட்டனர் என்றதுமே ஒரு புதுவித தெம்பு வந்துவிட்டது.. எப்படியேனும் இரண்டே நாட்களில் அந்த ஷர்மாவை பிடித்துவிட்டு, முதலில் அவனின் கையில் இருக்கும் ஆதாரங்களை எல்லாம் அழித்திட வேண்டும்..

இனி அவன் விசயத்தில் பொறுமை காட்டி பயனில்லை..

அடுத்து அந்த சேட்.. இப்போது அப்பாவிற்கும் அவரின் மீது சந்தேகம் இருப்பது போலிருக்க, அதுவும் சிறிது நிம்மதியளிக்க, கடைசியில் அவன் மனம் அன்று நடந்த பார்டியில் வந்து நின்றது.

நிதானமாய் யோசித்துப் பார்த்தான்.. விடை தெரியாத பல கேள்விகளுக்கு விடை கிடைப்பது போலிருக்க, அந்த பிரஷாந்தை சும்மா விடுவதா என்று இருந்தது தீபனுக்கு..

தீபன் இப்படி ஒவ்வொரு அடியாய் முன்னேற, மிதுனுக்கு அப்பா அம்மா தம்பி என்று அனைவரும் மருத்துவமனை சென்று வந்தது தெரியவும் கொதித்துப் போனான்..

‘அப்பா போனாரா?!?!’ என்று கேட்க,

“ஆமா தம்பி..” என்றுவிட்டு போனார் அப்பாவின் பிஏ.

‘இவ்வளோ நடந்தும் தீப்ஸ்காக அப்பாவே நேரா போயிருக்கார்… ஆனா இதுவரைக்கும் என்னை ஒருவார்த்தை என்ன ஏதுன்னு கேட்கலை..’ என்று எண்ணியவனுக்கு, இதை விட பெரிதாய் எதுவும் செய்ய வேண்டும் போலிருந்தது.

அனுராகா என்பவள் அவனுக்கு ஒரு பகடைக் காய் தான்.. பிடித்தமானவள் அல்ல.. பிரஷாந்த் விஷயம் அவனே எதிர்பார்க்காத ஒன்று.. ஆனால் இப்போது அதை எப்படி தனக்கு சாதகமாய் மாற்றிக்கொள்ள வேண்டும் என்று மிதுன் யோசிக்க, லோகேஸ்வரனுக்கு அழைத்தான்..

அவன் – நீ செய்தது சரியா…??!!

அவள் – எதுவாகினும் நீ எனக்கு வேண்டாம்..

காதல் – சிம்ப்ளி வேஸ்ட்…!! நோ கமன்ட்ஸ்..!!                     

Advertisement