Advertisement

     நான் இனி நீ – 25

லோகேஸ்வரனோடு, தாரா பேசுவதையே நிறுத்தியிருக்க, அனுராகா கண் விழித்துப் பார்த்ததோடு சரி, அம்மாவோடும் சரி அப்பாவோடும் சரி யாரினோடும் பேசிடவில்லை.

அதிலும் அவள் கண் விழிக்கவே இரண்டு நாட்கள் ஆகிட, தாரா ஆடித்தான் போனார். லோகேஸ்வரனுக்கும் மகள் இப்படி கிடப்பது கண்டு கஷ்டமாய் இருந்தாலும் இன்னமும்கூட அவர் மனதில் தன் முடிவு சரியென்றும், அனுராகாவின் முடிவு தவறென்றும் தான் இருந்தது..

உடலில் ஆங்காங்கே சிராய்ப்புகள், சில இடங்களில் அழுத்தமான கீறல்கள், இது போக அவளின் மன அழுத்தம்.. உள்ளே சென்றிருந்த மது,   எல்லாம்.. எல்லாம் சேர்த்து அவளை அத்தனை சீக்கிரம் எழுந்து அமரச் செய்திடவில்லை.

இரண்டாவது நாள் காலையில் கண்களைத் திறந்தாள். ஆனால் யாரோடும் பேசவில்லை.. அப்பா அம்மாவினைக் கண்டவள் மீண்டும் கண்களை மூடிக்கொண்டாள்.

அடுத்து அடுத்து அனுராகா, கண் விழித்துப் பார்க்கையில் எல்லாம் தாராவே அங்கிருக்க, அவளும் வீம்பாகவே கண்களை மூடிக்கொண்டாள்.

கண்கள் திறந்து யாரையும் காணவும் இஷ்டமில்லை. யாரோடும் பேசவும் விருப்பமில்லை. மனது எதிலும் லயிக்கவில்லை..

‘தீபன்…’ இந்த ஒருவனிலேயே அவளின் சகலமும் நின்றுவிட்டது..

உறங்கிக்கொண்டு இருந்தாலும் கூட, அடிமனதில் அவனின் எண்ணங்களே.. வெறுமெனே கண்கள் மூடியிருந்தாலோ, இணைந்திருக்கும் இமைகளுக்குள்ளே அவனோடான நடந்த நிகழ்வுகள்.

அவனின் தீண்டல்கள் கூட இன்னமும் உணர முடிந்தது…

அவ்வெண்ணங்கள் வர வர, அவளால் உணர்வுகளை கட்டுப்படுத்தவே முடியவில்லை..  

அதிலும் சமீபத்தில் நடந்தவைகள் தான் திரும்ப திரும்ப அவளின் மனதில்..!!

வைத்தியங்கள் எல்லாம் உடலுக்குத்தான்.. மனதிற்கு அல்ல..

ஆக, மனம் எதெல்லாம் நினைக்கக் கூடாதோ அதெல்லாம் நினைத்தது.

டாக்டர் வந்தவர் கூட “ரொம்ப ரெஸ்ட்லெஸ்ஸா இருக்காங்க.. கவுன்சலிங் அரேஞ் பண்ணலாமா??!!” என்று தாராவிடம் கேட்க, அப்போதும் வெறுமெனே தான் பார்த்துப் படுத்திருந்தாள்.

‘யார் பேசினாலும் என் மனம் சரியாகுமா??!! மன நோயாளியா நான்.. ஆம்!!! என் மனது நோய்கொண்டது.. காதல் நோய்..!!!’

அவளுள்ளம் அதைத்தான் சொல்லியது..

காதல் நோயாளிக்கு யார் வைத்தியம் செய்திட முடியும்??!

செல்லுபடியாகுமா என்ன??!!

தாரா மகளின் முகம் பார்த்தவர் “வேற பிராப்ளம் இல்லையே??” என,

“நோ நோ..!! ஷி இஸ் குட்.. பட் சம்திங் இஸ் ஈட்டிங் ஹெர்.. அதனால சொன்னேன்..” என்று டாக்டர் சொல்ல,

“ம்ம் ஓகே டாக்டர்..” என்று சொன்னாலும், அந்த அம்மாவின் மனது ஆறவில்லை..

பிரஷாந்த் விஷயம் தெரிந்ததுவுமே அப்போதே லோகேஸ்வரனிடம் கொஞ்சம் பிடிவாதமாய் பேசியிருக்கவேண்டுமோ என்று நினைத்தார்.. 

ஆனால் லோகேஸ்வரன் வந்தவரோ வேறு சொன்னார்..

அனுராகா பேசிடவில்லை என்றாலும் அவர் பேசினார்.. பிஸினஸ் மென் அல்லவா..!!

பணம் என்பதனைத் தாண்டி, பேச்சு தானே அவர்களின் வெற்றிப் படி. 

“என்ன அனும்மா.. இப்போ ஓகே வா..” என்று மகளின் முகம் பார்க்க, அவளோ கண்களை மூடிக்கொண்டாள்.

“எங்களோட பேச பிடிக்கலை.. எங்களைப் பார்க்கப் பிடிக்கலை.. ம்ம் எல்லாம் ஓகே.. இப்போ அப்படிதான் இருக்கும்.. பட் உனக்குள்ள நல்லா யோசிச்சுப் பார்.. நீ செலெக்ட் பண்ண ரெண்டு பேருமே தப்பான சாய்ஸ்..” என, பட்டென்று விழிகள் திறந்துப் பார்த்தாள் அனுராகா..

என்ன சொல்கிறார் என்று..

“எஸ் பேபி… திங்… பிரஷாந்தை நீ லவ் பண்ணல.. பட் அவனோட லவ் அக்சப்ட் பண்ணலாம்னு ஒரு தாட் உனக்கு வந்தது.. நான் தப்பே சொல்லலை.. பட் வாட் ஹி டூ?? அவன் முன்னாடி ஒரு ப்ரோபோசல் வைக்கவும் அவன் உன்னைப் பத்தி நினைக்கவேயில்லை.. அதுதான் அவனுக்கு பெருசா தெரிஞ்சது.. போயிட்டான்…

தென் தீபன் சக்ரவர்த்தி..!!! உனக்கும் அவனுக்கும் எப்படி எல்லாம் செட் ஆச்சுன்னு ஸ்டில் ஐம் வொண்டரிங்…” என,

அவளுக்கு எரிச்சலாய் இருந்தது..

தீபன் பற்றி அப்பா பேசுவது அவளுக்குத் துளியும் பிடிக்கவில்லை..  அவன் செய்தது எல்லாம் இருக்கட்டும், ஆனால் அவர்.. அவளின் விருப்பம் தெரிந்தும் அதை மீறினார் அல்லவா?!!!

ஆக இதைச் சொல்ல அவருக்கு எவ்வித உரிமையும் இல்லை என்றே நினைத்தாள்.

திரும்பவும் இமைகளை மூடிக்கொள்ள, “எனக்கு புரியுது அனும்மா.. பட் யோசி.. உன்னோட நிக்க வேண்டிய ஒரு சிச்சுவேசன்ல வாட் ஹி டூ??!! உன்னை விட்டுப் போனான்.. போனதும் இல்லாம பார்ட்டில அத்தனை பேர் முன்னாடி உன்னை அப்படி பேசினான்…

இஸ் தட் ஓகே பார் யு??!! உன்னோட ரேஞ் என்ன.. அவன் பேசினது என்ன??!! உன்மேல அவனுக்கு இருக்க மரியாதை அண்ட் நம்பிக்கை இவ்வளோதானா.. யோசி டா…” என,

அனுராகாவின் இதயம் படபடவென அடித்துக்கொண்டது..

தாரா அதுவரைக்கும் பேசாதவர், “லோகேஷ் இப்போ இதெல்லாம் பேசனுமா??!!” என,

“அவளுக்கு புரியலைன்னா புரியவைக்கணும் தாரா.. கண்டிப்பா யோசிப்பா..” என,

தாராவிற்கும் லோகேஸ்வரன் சொன்னது சரியென்று பட்டாலும், அனுவின் விருப்பம், அவளின் வாழ்வு, அவளின் இப்போதைய மனநிலை தான் பிரதானமாய் இருந்தது. 

“அனும்மா…” என்று அவளின் கை பிடிக்க, அவளின் உடல் இறுகுவது நன்கு உணர முடிந்தது..

எது எப்படி இருந்தாலும், தீபன் அப்படி நடந்துகொண்டதை அவளால் ஜீரணிக்கவும் முடியவில்லை. அதனை மறந்திடவும் முடியவில்லை.. ஏதோ, ஏதோ அவளை நடத்தை சரியில்லை என்பதைப் போல் அவன் பேசியது இப்போதும் கூட அவளின் உடலில் ஓர் அதிர்வைக் கொடுத்தது.

அந்த வார்த்தை அவன் சொல்லவில்லை..

ஆனால் அவன் பேசியதின் உட்பொருள் அதுவென்பதாய் தான், அவள் நினைத்தாள்..!!  

அங்க தீபனின் நிலையோ சொல்லிடவே வேண்டாம்..

சக்ரவர்த்தி மகனைக் காண நேராகவே வந்துவிட்டார். உஷா போய் எல்லாம் சொல்ல சக்ரவர்த்திக்கு இந்த தீபனுக்கு ஒரு பெண்ணின் பின்னால் போகவும் தெரியுமா என்று இருந்தது..??

அவனது நட்புக்களில் பெண்களும் இருக்கிரார்கள் என்பது தெரியும்.. கும்பலாய் அவ்வப்போது பார்ட்டி, சுற்றுலா என்று செல்வார்கள் என்பதெல்லாம் தெரியும்..

ஆனால் இவ்வளவு தூரம் நடந்திருக்கும் என்பது கொஞ்சம் ஆச்சரியமாய் தான் இருந்தது.   

அங்கே பண்ணை வீட்டில் அப்போது தான் தீபன் கொஞ்சம் தெளிந்து அமர்ந்திருக்க, அப்பா இங்கே வருகிறார் என்ற செய்தி வரவுமே வேகமாய் குளித்து, உடை மாற்றி நல்ல பிள்ளை போல் வந்து அமர்ந்துகொண்டவன் நண்பர்களை அனுப்பிவிட்டான்.

“இருக்கோம்டா..” என,

“இல்லை.. நான் பார்த்துக்கிறேன்..” என்றவன், “அ.. அனுராகா.. அவ எங்க இருக்கான்னு விசாரி..” என்று தேவ்விடம் சொல்ல,

“டேய் வா டா..” என்று தேவ், புனீத்தை கிளப்ப,

“விசாரிச்சு சொல்ற..” என்றான் தீபன் முடிவாய்.

“முடியாதுன்னா…”

“முடியாதுன்னா உன் முட்டியை பேத்துடுவேன்.. எனக்குத் தெரியாது.. நான் விசாரிச்சா..” என்று எதுவோ சொல்ல வந்தவன், “ம்ம்ச் கேட்டு சொல்லு..” என,

“இவனெல்லாம் திருந்தவே மாட்டான்டா..” என்றபடி தான் நண்பர்கள் கிளம்பினர்.      

சக்ரவர்த்தி சிறிது நேரத்தில் வந்தவர், பார்த்த பார்வையில் தீபன், மௌனமாய் இருக்க, அவருக்கு இவன் ஏன் இப்படி ஆகிப்போனான் என்றிருந்தது. இந்த இரண்டு நாட்களில் தீபன் ஆளே மாறிப்போனதாய் தான் இருந்தது.

ஒரு பெண்… அதுவும் வெகு குறுகிய காலமே பழகிய ஒருத்தியாள் தன் மகன் இப்படி மாறிப்போவானா??!!

இந்த கேள்வி அவருள்..

அவன் அத்தனை பலவீனமானவனா??? இல்லை அவள் அத்தனை வசீகரியா??!!

அனுராகாவை இரண்டொரு முறை பார்த்திருக்கிறார் தானே.. ஆனால் கவனித்துப் பார்த்ததில்லை. உஷா சொல்கையில் கூட, இதெல்லாம் பெண்கள் விஷயம் என்று இருந்துவிட்டார்.

ஆனால் இப்போது தீபனின் நிலைக் கண்டு, அனுராகாவை பார்க்கவேண்டும் என்று தோன்றியது சக்ரவர்த்திக்கு.

தீபனுக்குமே மனதில் இப்போது ஒரு குற்றவுணர்வு, அப்பா எப்படியானதொரு பொறுப்பை தன்னிடம் விட்டிருக்க, தானோ என்ன செய்துகொண்டு இருக்கிறோம் என்று.

உஷாவோ “என்னங்க நீங்க இப்படி அமைதியா இருக்கீங்க..” என,

“ம்ம் நம்ம போய் அந்த பொண்ண பார்த்துட்டு வரலாம்..” என்று சக்ரவர்த்தி சொல்ல,

“அப்பா…” என்றான் தீபன் அதிர்ந்து..

அவனை விட அதிர்ந்தது உஷா..!!

“என்னங்க…??!!” என,

“இவன் பண்ணது தப்பு.. அந்த பொண்ணுமேல தப்பு சரி எல்லாம் நம்ம சொல்லவே முடியாது.. இவனைச் சொல்லலாம் அவ்வளோதான்…” என்றவர்,

“இதுதான் உனக்கு நான் சொல்லிக் கொடுத்ததா??!!!” என்று மகனைப் பார்த்துக் கேட்க, தீபனால் எதுவும் சொல்லிட முடியவில்லை..

தான் நடந்துகொண்டது சரியில்லை என்பதனை விட, அனுராகாவிடம் அப்படி நடந்தது மிக மிக சரியில்லை என்று அவனுக்குப் புரிந்தது. அவன் பேசிய வார்த்தைகளின் வீரியம் அவனாலேயே தாங்கிக்கொள்ள இயலவில்லை என்கையில் அவள் எப்படித் தங்குவாள்??!!!

‘ராகா…’ என்று அவனின் இதயம் ராகம் பாட ஆரம்பிக்க,

“தீபன்…” என்றார் சக்ரவர்த்தி.

அவரின் குரலில் நிமிர, “உனக்கு என்னாச்சு??!!” என,

“அவனை ஏன் கேட்கறீங்க..” என்று உஷா ஆரம்பிக்க, “ம்ம்ச் நான் பேசுறேன்ல..” என்று ஓர் அதட்டல் போட்டார்.

அந்த அதட்டல்  தீபனுக்குமானது என்று அவனுக்குத் தெரியாதா என்ன??!!

நான் பேசுகிறேன் நீ பதில் சொல்லாது இருந்தால் என்ன அர்த்தம் என்ற தொனி அவரினது..

“ப்பா..!!” என்றவன் அடுத்து என்ன சொல்ல என்று விளங்காது பார்க்க,

“ஒரு கார்பரேட் பார்ட்டில போய் குடிச்சிட்டு கலாட்டா பண்ற அளவுக்கு உனக்கு புத்தி மழுங்கிடுச்சா…?? அப்படி என்னடா உனக்கு?? அப்படி என்ன உன்னை ஆட்டிப் படைக்குது.. எனக்கு எதுவுமே தெரியாதுன்னு நினைச்சியா??!! தொகுதில இருக்கவன் கிட்ட எங்க கல்யாண வேலை நீங்கதான் பார்க்கணும் சொல்லிருக்க, அந்த கன்றாவிய எங்கக்கிட்ட சொல்லனும்னு உனக்குத் தோணலையா??!!” என்று ஒரு வழி செய்துவிட்டார்.

சக்ரவர்த்தி எப்போதுமே இப்படித்தான். பொறுமையாய் இருப்பது போலவும், அமைதியாய் இருப்பது போலவும் தெரியும் ஆனால் விஷயம் என்று வருகையில் அவரைப் போல் யோசிக்கக் கூட யாராலும் முடியாது.

இத்தனை ஆண்டுகால அரசியல் வாழ்வில் எத்தனைப் பார்த்திருக்க மாட்டார்..

“பதில் பேசு தீபன்…” என,

“இல்லப்பா.. நா .. நான் பண்ணது தப்புதான்..” என்று அவனும் சொல்ல,

“தப்புன்னு சொல்லிட்டா.. ஒத்துக்கிட்டா??!! சரியாகிடுமா.. உன் முன்னாடிதானே அன்னிக்கு உங்க அம்மா சொன்னா..” என்றவர்,

“என்ன ஷர்மாவ காணோமா??!!” என்று அடுத்தது கேட்க, “ப்பா!!!!” என்றான் இவன்..

“அவனே தப்பிச்சானா?? இல்லை கடத்திட்டாங்களா..”

“கிட்னாப்பிங் ப்பா.. அவனோட இருக்கச் சொன்ன முத்துவையும் காணோம்..” என,

“ம்ம் பொண்ணு விஷயம் பேசினா பேச்சு வரலை.. இது கேட்டா மட்டும் வருது.. அந்த பொண்ண எப்படி நீ பேசி லவ் பண்ண??!!” என்று அடுத்து அப்படியே அந்த விசயத்திற்குத் தாவ,

மீண்டும் மகன் பேச்சிழக்க, உஷாவோ “என்னங்க நீங்க.. அவனை கண்டிச்சு வைப்பீங்கன்னு பார்த்தா இப்படி பேசிட்டு இருக்கீங்க.. எதுக்கும் எதுக்கும் கம்பேர் பண்ணிட்டு இருக்கீங்க..” என,

“அவன் பண்ண குளறுபடிக்கு இப்படிதான் பேசணும்..” என்றவர் “சேட் விஷயம் நீ கண்டுக்காதது போல இரு.. நான் பார்த்துக்கிறேன்..” என்றார் கொஞ்சம் யோசனையுடனே..

சேட் விசயத்தில் தீபன் இவ்வளவு பிடிவாதமாய் இருக்க, சக்ரவர்த்தி விசாரிக்காது இருந்திருப்பாரா என்ன?!?!!

ஆனாலும் கூட அந்த சேட், யார் சொல்லி இப்படி செய்கிறார் என்பதுதான் அவருக்குத் தெரியவில்லை. ஏனெனில் சந்தேகத்திற்கு இடமளிப்பது போல யாரும் பல்ராமோடு பேசுவதுமில்லை. அவரும் யாரையும் அணுகுவதுமில்லை..

“ஷர்மா கைல நிறைய எவிடன்ஸ் சிக்கிருக்குப்பா.. எலெக்சன் வரைக்கும் அதெல்லாம் வெளிய வராம இருக்கணும்..” என,

“டேய்.. இதெல்லாம் துக்கடா விஷயம்.. எவ்வளோ பார்த்திருப்பேன்…. என்ன ஆதாரம் வேணாலும் அவன்கிட்ட இருக்கட்டும்.. அதுக்காக நீ எத்தனை நாளைக்கு இப்படி டென்சனா சுத்துவ..??! அதெல்லாம் தூக்கிப் போடு..

இந்த ஷர்மா.. அவன்கிட்ட இருக்க ஆதாரம் இதெல்லாம் பார்த்தா நான் அரசியல் பண்ண முடியாது.. புரிஞ்சதா??!!” என்றவர் “போலாமா??!!” என,

“ம்ம்..” என்றான் சிறுவன் போல..

அனுராகாவைக் காணப் போகிறோம் என்பதே அவனைச் சரி சொல்ல வைத்தது அப்போது.    

காணப் போகிறோம் என்றதுமே ஒரு தயக்கம் வேறு.. அவளை எப்படி எதிர்கொள்வது என்று..

இருந்தாலும் மனம் சண்டித்தனம் செய்ய, கிளம்பிவிட்டான்.. அதுவும் அவள் மருத்துவமனையில் இருக்கிறாள் என்று தெரிந்ததும் ஐயோ என்றுதான் ஆனது

‘என்ன செஞ்சு வச்சிருக்காளோ…’ என்ற ஒரு படபடப்போடு தான் உடன் போனான்..

அதுவும் உஷாவிடம் “ம்மா நீ அங்கேவந்து அவளை எதுவும் சொல்லக் கூடாது..” என்றுவேறு சொல்ல,

“நான் வரவேயில்லை.. அப்பா பையன் என்னவோ செய்ங்க..” என்று அவரும் சொல்ல,

சக்ரவர்த்தியோ “அது முறையா இருக்காது..” என்று அழைத்துச் சென்றார்.  

மத்திய மந்திரி அங்கே மருத்துவமனைக்கு வருகிறார் என்றதுமே ஓர் பரபரப்பு.. இதற்கு சக்ரவர்த்தி அவரின் பிஏ விடம் மட்டும் சொல்லித்தான் விசாரிக்கச் சொன்னார். ஆனால் விஷயம் அங்கே மருத்துவமனையில் கசிந்துவிட்டது.

கட்சி ஆட்கள் இல்லை.. முன்னே பின்னே கார்கள் இல்லை. சயரன் வைத்த காரில் வரவில்லை.. யாருக்கும் தெரியாது வந்துவிட்டுச் செல்லவேண்டும் என்றே அவர் நினைக்க, இங்கேயோ  மருத்துவமனை பணியாளர்கள் எல்லாம் வரவேற்ப்பில் நிற்க, தலைமை மருத்துவரே முன்னே வந்து அழைத்துச் செல்ல, கொஞ்சம் சங்கடமாய் தான் போனது.

பெண் விஷயம்.. வெளியில் போனால் பேச்சுக்கள் எப்படி எப்படி வருமென்று கணிக்கவே முடியாது.

லோகேஸ்வரனுக்கு செய்தி செல்லவும், இவர்கள் வருவதற்கு முன்னமே அவர் அங்கே வந்திட, ஒருவேளை மிதுன் சொல்லி வருகிறார்களோ என்று எண்ணினார்.

ஆனால் வந்தது மிதுன் இல்லை.. தீபன்…

உஷாவிற்கு வரவே இஷ்டமில்லை. இவர்கள் யாரையும் காண விருப்பமில்லை. ஆனால் சக்ரவர்த்தியின் வார்த்தைகளுக்காக வந்திருக்க, இருந்தாலும் இறுக்கமாய் தான் இருந்தார்.

தாராவும், லோகேஸ்வரனும் சம்பிரதயாத்திற்கு வரவேற்க, இவர்களின் சத்தம் கேட்டுத்தான் கண் விழித்தாள் அனுராகா.

கண் விழித்ததும் எதிரே கண்டது தீபன் சக்ரவர்த்தியைத்தான்..

கண்களில் ஒரு பரிதவிப்போது அவளைப் பார்த்துக்கொண்டு இருக்க, அனுராகாவிற்கு இதயம் வேகமாய் துடிக்கத் தொடங்க, அந்த படபடப்பு அவள் முகத்தினில் தெரிய, கூடவே சேர்ந்து கோபமும் ஏறியது.

தன் உணர்வை அடக்க, கைகளை இறுக்கி அவள் மடக்க, ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டு இருந்த கையை மடக்கிட, சட்டென்று அவ்விடத்தில் ஓர் வலி.

தீபனுக்கோ அவளை நேர்கொண்டு பார்க்கவே முடியவில்லை. மனம் கூசியது. யாரோ என்னவோ சொன்னால், அவளை நீ அப்படிதான் அனைவரின் முன்னும் கேள்விக் கேட்பாயா??!!!

அவன் நெஞ்சம் இப்போது கேட்டது இதை..

ஆனாலும் பார்வை எல்லாம் அவளின் மீது, அவள் உடம்பில் வெளியில் தெரிந்த காயங்கள் மீது.. அதன் மீது ஒட்டாப்பட்டிருந்த பிளாஸ்திரிகள் மீது..

கழுத்தில் கூட சின்னதாய் ஒரு பிளாஸ்திரி இருந்தது.. அதுவும் அவனின் விருப்பப் பகுதியில், அவனின் வேம்பயர் முத்தமிடும் இடத்தினில் இப்போது ஒரு பிளாஸ்திரி இருக்க, கண்கள் அங்கேயே நிலைத்து அவனுக்கு..

அனுராகாவோ தீபன் என்ற ஒருவன் அங்கே இருப்பதைக் கூட பொருட்படுத்தவில்லை. வந்தவர்களை வா என்றும் கேட்கவேயில்லை. இருந்தும் அவனின் பார்வையை உணர முடிந்தது.

ஏன் பார்க்கிறான்?? எதைப் பார்க்கிறான்..?? அவளால் புரிந்துகொள்ள் முடியாதா என்ன??

அவனிட்ட முத்தங்கள் இப்போதும் அவள் உணர்ந்திட முடிந்ததாய் இருக்க, அந்த காயம், அந்த பிளாஸ்திரி அதையும் தாண்டி அவ்விடத்தில் ஒரு குறுகுறுப்பு அந்த நொடியிலும் அவள் உணர,

‘ச்சே…’ என்றானது அவளுக்கு..   

 சக்ரவர்த்தி அவளின் முகத்தினைப் பார்த்தவர், “இப்போ எப்படி இருக்கு??” என்று விசாரிக்க, அதன்பின்னே தான் மற்றவர்களின் பக்கம் பார்வை போனது அவளுக்கு.

இப்படி சக்ரவர்த்தியே நேரில் வந்து நிற்ப்பார் என்று எதிர்பார்க்கவில்லை. படபடப்பையும் தாண்டி, என்னவோ அவளுள் செய்ய, அவளால் இயல்பில் இருந்திட முடியவில்லை..

மூச்சு விடுவது கூட முடியாதது போலிருக்க, அவளின் முகம் பார்த்தே தாரா “அனு.. அனு ரெஸ்ட் எடுக்கட்டுமே.. நம்ம  அங்க சோபால உட்கார்ந்து பேசலாமே..” என,    உஷாவின் முகத்தினில் அப்பட்டமாய் கோபம் தெரிய,

தீபனோ அவள் தன்னைக் காண மாட்டாளா என்றுதான் பார்த்து நின்றிருந்தான்.

ஆனால் சக்ரவர்த்தி விடுவாரா என்ன??!! இன்று ஒரு முடிவு தெரியவேண்டும் என்றுதானே வந்திருக்கிறார்.

எது எப்படியோ அது இன்றோடு தெரிந்திட வேண்டும்.. தெளிந்திட வேண்டும்..

சூழ்நிலை மொத்தமும் சக்ரவர்த்தி கையில் எடுத்துக்கொள்ள,  “என்னம்மா நீ.. முதல்லையே ஒரு வார்த்தை சொல்றதுக்கு என்ன??” என,

‘இவர் என்ன சொல்லச் சொல்கிறார்..’ என்று அனுராகாப் பார்க்க, “அதுப்பா…” என்று தீபன் சொல்ல வர,

“டேய் டேய்.. நீ எதுவும் பேசக்கூடாது.. வாய் மூடிட்டு நில்லு.. இந்த பொண்ண பார்க்கத்தான் கூட்டிட்டு வந்தேன்.. நீ பேசணும்னு கூட்டிட்டு வரலை..” என்றவர் ,

“சொல்லும்மா.. அவன்தான் சொல்லலைன்னா நீயாவது அப்போ சொல்லிருக்க வேண்டியதுதானே..” என,

அவளுக்குத் தோன்றியது, அங்கே தான் மௌனமாய் இருந்திருக்கக் கூடாதோ என்று.

சில நேரங்களில், மௌனங்கள் பிரச்னைகளுக்கு பிள்ளையார் சுழி போடும்..!! என்பது அவளுக்கு அப்போது விளங்க,

“சாரி அங்கிள்..” என்றாள் மெதுவாய்.

இத்தனை நாள் யாரோடும் எவரோடும் பெற்றவரோடும் பேசாதவள், இன்று இப்போது வாய் திறக்க, தாராவிற்கு மனதினில் அப்படியொரு வலி.

“ம்ம் சரி சொல்லு உனக்கு என்ன தோணுது??!!” என்றார் அடுத்து.

இவர் எதைக் கேட்கிறார் என்று அவளுக்குப் புரியவில்லை, அப்போதும் தீபன் “அப்பா..” என,

“உன்னை வாய் திறக்கக் கூடாதுன்னு சொன்னேன்..” என்று போட்ட அதட்டலில், அனுராகாவிற்கு தூக்கி வாரிப் போட்டது.

“எ.. எதுப்பத்தி..” என்று அவள் கேட்க,

“இதோ இவனைத்தான்.. இவனைப் பத்தித்தான்…” என்றார் மகனைக் கை காட்டி.

அவருக்கு இன்னமுமே ஆறவில்லை, அவள் என்னவோ செய்திருக்கட்டும், ஆனால் மகன் அப்படி குடித்துவிட்டு கலாட்டா செய்தது தவறு என்றுதான் இப்படிக் கேட்டார். எதுவென்றாலும் முடிவு அனுராகாவிடம் இருந்து வரட்டும் என்று.

அதாவது முடிவெடுக்கும் அதிகாரம் அவளுக்குக் கொடுத்தார்..

அவனைக் கை காட்டவும், அவளின் பார்வை தன்னைப்போல் அவனிடம் சென்றுவர “நத்திங் அங்கிள்..” என்றாள் தலையை இடம் வலமாய் ஆட்டி.

“அப்போ.. இவனைப் பத்தி நினைக்க ஒன்னுமே இல்லைன்னு அர்த்தமா..” என,

தீபனோ ‘இல்லை சொல்லு..’ என்பதாய் அனுராகாவைப் பார்க்க, அவளோ முகம் இறுக “இனி எதுவுமில்லைன்னு அர்த்தம்..” என்றாள் அழுத்தம் திருத்தமாய்.

‘பொய்க்காரி.. மோசக்காரி…’

இந்த வார்த்தைகள் தான் இப்போது அவளுக்கு நினைவு வந்தது.. அத்தனை பேரின் முன்னும் தீபன் சொன்னது..

தாளவே முடியாத ஓர் வலி கொடுக்க, அப்போதும் கூட அவளின் உள்ளம் நடுங்கத்தான் செய்தது.

அந்த வார்த்தைகள்… அதன் வீரியம்.. அது ஏற்படுத்திய காயம் அதற்கு எத்தகைய மருந்துப்போட்டாலும் ஆறுமா??!! இல்லையே..

இதுவரைக்கும் பொய் சூழல் அனுராகாவிற்கு வந்தது இல்லை..!!

அப்படி சொல்லித்தான் அவளுக்கான காரியங்கள் சாதித்துக்கொள்ள வேண்டும் என்ற சூழ்நிலையும் அவளுக்கு இல்லை..!!

அப்படியிருக்க, இவனிடம் இப்படி நான் பேச்சு வாங்கிட வேண்டியதே இல்லை என்றுதான் நினைத்தாள்.

அனுராகாவின் பதில் சக்ரவர்த்திக்கே அதிர்ச்சியாய் இருந்ததுவோ என்னவோ, அமைதியாய் அவளின் முகம் பார்க்க, உஷா தான் “இதுக்குத்தான் வேணாம் சொன்னேன் கேட்டீங்களா??!!” என,

தீபனோ அவளின் முகத்தினையே பார்த்திருக்க, தாராவோ “ப்ளீஸ்.. அவளே ரொம்ப முடியாம இருக்கா..” என்றுசொல்ல,

லோகேஸ்வரன் “இன்னொரு நாள் பேசிக்கலாமே..” என்றார்.

அனுராகாவோ, அனைவரின் பேச்சும் காதில் விழுந்தாலும், சக்ரவர்த்தியை நேருக்கு நேரே பார்த்தவள் “இனி எதுவுமே இல்லை அங்கிள்..” என்றாள் அழுத்தம் திருத்தமாய்..

Advertisement