Advertisement

‘எங்க  போனானுங்க…’ என்று யோசித்துக்கொண்டு இருக்க, தீபனைப் பார்த்தான், அவன் குடிபோதையில் இருப்பது தனக்கு பயன்படும் என்றெண்ணி

“தீப்ஸ்.. எங்க.. நாகாவும் தர்மாவும்??” என, “அ??!!” என்றான் தீபன்..

“எங்கடா அவனுங்க.. எப்பவும் உன்னோடவே இருப்பானுங்க.. இப்போ எங்க..” என,

“யாரு அவனுங்க..” என்றான் தீபன்..

“ம்ம்ச் டேய் தீப்ஸ்… அதான் நாகாவும்.. தர்மாவும்.. எங்க போனானுங்க..” என்கையில்

“அவளே என்னை வேணாம் சொல்லிட்டு போயிட்டா.. அவனுங்க போகாம இருப்பானுங்களா.. போயிட்டானுங்க.. எல்லாம் போயிட்டானுங்க…” என்று இரண்டு கைகளையும் அசைத்து அசைத்து சொல்ல,

“எங்க போயிருக்கானுங்க..” என்றான், அறிந்துகொள்ளும் விதமாய்..

“யார் போனாங்க??!!” என்று தீபன் பதிலுக்கு கேட்க,

“தீப்ஸ்.. இங்கபாரு என்னாச்சு?? ஏன் இப்படி பண்ற நீ..” என்று விசாரிக்க,

“எனக்கு என்னாச்சு?? நான் என்ன பண்றேன்..” என்றான் இவனும்..

மிதுனுக்கோ எங்கே இத்தனை ஆண்டுகள் சேர்த்து வாய்த்த பொறுமை எல்லாம் காணாது போய், எதுவும் பேசிவிடுவோமா என்று நினைக்கையில் உஷா வந்துவிட்டார்.

தீபன் இருக்கும் நிலைக்கண்டு உஷாவிற்கு ஒன்றும் விளங்கவில்லை.

“மிதுன் என்னடா??!!” என,

“ம்மா முதல்ல இவனைப் படுக்க வைக்கணும்..” என்றவன், வீட்டில் வேலை செய்யும் ஆட்களை அழைத்து, தீபனை அவனின் அறைக்கு அழைத்துக்கொண்டு செல்ல சொல்ல,

அவனோ “டேய் அண்ணா.. ரொம்ப பொறுப்பா இருக்கிறதுபோல செய்யாதடா.. ஐ க்னோ.. ரூம் போக எனக்குத் தெரியும்..” என்று வாய் குழற,

உஷாவோ “என்னடா இதெல்லாம்…” என்றார் சின்ன மகனிடம் கோபமாய்..

“ம்மா… மம்மி… மை மம்மி…” என்றவன், அம்மாவைக் கண்டதும், “ம்மா.. அவ என்னை வேணாம் சொல்லிட்டாம்மா..” என,

“என்னடா மிதுன்/??” என்றார் விளங்காது.

அவனோ “ம்ம்ச் இவனை கூட்டிட்டு போங்க..” என்று சொல்ல, தீபன் அவனின் அறைக்கு அழைத்துச் செல்லப் படவும் தான், மிதுனுக்கு மூச்சே வந்தது..

மனதோ ‘சபாஸ்டா தம்பி.. பின்னிட்ட போ…’ என்று தீபனின் செயலுக்கு சபாஸ் போட,

உஷாவோ “மிதுன்??” என்றார் கேள்வியாய்.

“என்னம்மா???”

“என்னாட என்னாச்சு??? இப்படி வந்திருக்கீங்க.. அவன் என்னென்னவோ சொல்றான்..” என, மிதுன் நடந்தவைகளை சொல்ல,

“ஐயோ..!!” என்று அப்படியே அமர்ந்து போனார்.

“ம்ம்ச் ம்மா.. அப்பாக்கு எதுவும் தெரியவேணாம்.. அவன்மேல ரொம்ப மதிப்பு வச்சிருக்கார்.. வருத்தப்படுவார்..” என, அவனுக்குத் தெரியும் எப்படியும் உஷா இதனை சொல்லாமல் இருக்கப் போவதில்லை என்று..

உஷாவோ “என்னடா இதெல்லாம்.. இவன்.. இவன் ஆர்த்தியை விரும்புறான்னு..” எனும்போதே,

“ம்ம்ச் மா.. ப்ளீஸ்.. வேணாம்.. இது.. இது எதுவுமே வேணாம்.. எல்லாத்தையும் கான்சல் பண்ணிடுங்க.. அ.. அனுராகாவும்..” என்றவன் வேண்டுமென்றே பேச்சினை நிறுத்த,

“ஐயோ டேய்.. நீ… நீ எதுவும் நினைச்சு கவலைப் படாத மிதுன்.. நான்.. எல்லாமே.. எல்லாமே என்னால தான்.. நான்தான் தப்பா புரிஞ்சுக்கிட்டேன்.. சின்னவன் ஆரம்பத்துல இருந்தே சொன்னான் இது சரி வராதுன்னு..” என,

“ம்ம்…” என்றான் மிதுன் எதுவும் சொல்லாது வருத்தமாய் முகம் வைத்து தலையை பின்னே சாய்த்துக்கொள்ள,

உஷாவிற்கோ இருந்திருந்து இவர்களுக்கு கல்யாணம் பேசி இப்படியானதே என்று இருந்தது. அதேநேரம் லோகேஸ்வரன், தாரா மீதும் கோபம் கோபமாய் வர,

“நான் போய் அவங்களை என்னன்னு கேட்டு வர்றேன்.. என்ன மனுசங்க இவங்க… ச்சே..” என்று கிளம்ப,

“ம்மா ப்ளீஸ்.. வேண்டாம்..” என்று தடுத்தான் மிதுன்..

“நோ மிதுன்.. இதை இப்படியே சும்மா விடறதா.. ஆர்த்தி வீட்ல வேற என்னடா பதில் சொல்றது..” என,

“ம்மா அங்க என்ன பிரச்சனையோ.. எல்லாம் கொஞ்சம் அமைதியா போவோமே..” என்றவனை கூர்ந்து பார்த்தவர், “மிதுன்.. அம்மாக்கிட்ட மறைக்காம சொல்லு, அனுராகா மேல உனக்கு இன்ட்ரெஸ்ட் இருந்ததா??” என,

“ம்மா..” என்று நிமிர்ந்து பார்த்தவன், அவரின் பார்வையில் இருந்த உறுதி கண்டு “இப்போ அதுபத்தி பேசி நோ யூஸ் ம்மா..” என்றுவிட்டு அவனும் அவனின் அறைக்குச் செல்ல, உஷா தன் இரு பிள்ளைகளின் நிலை எண்ணி ஆடித்தான் போனார்..

இருவரின் இந்நிலைக்கும் காரணம் அனுராகா என்று அவரின் மனது அந்த நொடி முடிவெடுக்க, அதனை அப்படியே சும்மா விடுவதா என்றும் இருக்க, சக்ரவர்த்திக்கு அழைத்துவிட்டார்.      

அனுராகாவின் வீடும் சரி, தீபனின் இல்லமும் சரி எங்கேயும் யாருக்கும் நிம்மதியில்லாது போனது தான் மிச்சம்..

லோகேஸ்வரனோ பார்ட்டியில் அனைவரின் கேள்விகளை சமாளித்து, ஒருவழியாய் அனைத்தும் முடிந்து வீடுவரவே நள்ளிரவு தாண்டிவிட, நேராய் மருத்துவமனைக்குத் தான் சென்றார்.

தாரா லோகேஸ்வரனுக்கு அழைத்துச் சொன்னவர் தான், இப்போது பார்க்கையில் ஒருவார்த்தை பேசிடவில்லை.

எத்தனை சொல்லியும் கேட்கவில்லை என்று மனது கசந்தது.

லோகேஸ்வரனும் எதுவும் பேசினார் இல்லை.. அவருக்குத் தெரியும் இப்போது எதுவும் பேசினால், தாரா உண்டு இல்லை என்று செய்துவிடுவார் என்று..

அனுராகாவிற்கு ட்ரீட்மென்ட் நடந்துகொண்டு இருக்க, உஷா சக்ரவர்த்திக்கு மட்டும் அழைக்கவில்லை, புனீத் தேவ் இருவரையும் கூட வர சொல்ல, என்னவோ ஏதோவென்று தான் வந்தனர் இருவரும்.

புனீத் “ஆன்ட்டி நீங்க போங்க நாங்க பார்த்துக்கிறோம்..” என,

“அவனைப் பார்த்துக்கிறது எல்லாம் இருக்கட்டும்.. தீபன் அனு ரிலேஷன்ஷிப் உங்களுத் தெரியுமா??” என்று உஷா வினவ, இருவரும் மௌனமாய் நின்றனர்.

உஷாவோ “இப்போ வாய் திறக்கப் போறீங்களா இல்லையா??” என,

“தெரியும் ஆன்ட்டி” என்று தேவ் சொல்ல,

“ம்ம் அப்புறம்..” என்றார் உஷா கோபம் தாளாமல்.

“ஆன்ட்டி??!!” என்று இருவரும் புரியாது பார்க்க, “எல்லாரும் பிரண்ட்ஸ் தானே.. அவன் தப்பு பண்றப்போ சொல்லமாட்டீங்களா??!! குடிக்கிறதுக்கும், ஊர் சுத்துறதுக்கும் தான் வாய் பேசுவீங்களாடா ” என்று கடிய,

“ஆன்ட்டி அப்படி எல்லாம் இல்லை..” என்று புனீத் சொல்ல வர, “இனி என்னடா நடக்கணும்.. தீபன் எப்படி இருந்தான்.. இப்போ குடிச்சிட்டு அத்தனை பேர் இருக்க பார்ட்டில சண்டை போட்டு வந்திருக்கான்..” என்றவர் நடந்ததை சொல்லி,

“மிதுன்.. அவன் மனசுல அனுராகா தான் வொய்ப்னு சொல்லி பேசி வேற வச்சு.. ச்சே..” என, இருவரும் தலை குனிந்து நின்றனர்.

“இங்க பாருங்க.. என்ன செய்வீங்களோ எனக்குத் தெரியாது.. தீபன் சரியாகணும்.. முழுசா எல்லாத்துல இருந்தும் வெளி வரணும்… அவன் திரும்ப ஏதாவது அந்த பொண்ணு பின்னாடி போய் பிரச்சனை ஆச்சு, என்ன செய்வேன் தெரியாது..” என, அப்போதும் இருவரும் மௌனமாய் இருக்க,

மிதுனை அழைத்தவர் “அப்பா தீபனை கூட்டிட்டு வர சொல்றார்.. பட் அது பாசிபில் இல்லை.. புனீத் அண்ட்  தேவ் இருக்கட்டும்.. நாளைக்கு வந்து பார்த்துப்போம்..” என,

“ம்மா.. கண்டிப்பா நம்ம போய்த்தான் ஆகணுமா??!!” என்றான் தம்பியை விட்டு வர மனம் இல்லாதவன் போல.

“கண்டிப்பா மிதுன்.. வேற வழி இல்லை.. அடுத்தது என்னன்னு நம்ம பேசி முடிவு செய்யணும்.. அண்ட் இனி எதுக்கும் நான் தீபனை கேட்கப் போறது இல்லை.. இனி நம்ம சொல்றதை அவன் கேட்கட்டும்..” என்றவர், கிளம்பிட, மிதுனுக்கு ஒவ்வொரு வெற்றிக் கனிகளாக கிடைத்துக்கொண்டே இருந்தது.

“பார்த்துக்கோங்க..” என்றுசொல்லி மிதுனும் கிளம்ப, புனீத்தும் தேவ்வும் தீபனைக் காணச் செல்ல, அவனோ கட்டிலில் குப்புறப் படுத்து உறங்கிக்கொண்டு இருந்தான்.

தேவ்வோ “நல்லா தூங்கட்டும் டா.. எழுப்ப வேணாம்..” என,

புனீத்தோ “ஆரம்பத்துலயே சொன்னோமேடா.. கேட்டானா..” என்றிட,

“ம்ம்ச் அதெல்லாம் இப்போ பேசி ஒன்னும் ஆகப்போறதில்லை.. இரு நீருக்கு பேசி அனுக்கு என்னாச்சுன்னு கேட்கிறேன்…” என்றவன் நீரஜாவோடு பேச, அவளுக்கு நடந்தது எதுவுமே தெரிந்திருக்கவில்லை.

தேவ் சொன்னதைக் கேட்டு “போதுமா .. அன்னிக்கே சொன்னேன்.. அப்படி கத்தினான் உன் பிரன்ட்.. இப்போ என்னாச்சு.. அனு.. அவளைப் பத்தி என்னடா தெரியும் உங்களுக்கு.. ச்சேய்…” என்று கத்திவிட்டு வைத்தது தான் மிச்சம்..

தேவ் வேறுவழியில்லாமல் திரும்ப வந்து அமர்ந்துகொள்ள, நண்பர்கள் இருவரும் சிறிது நேரத்தில் உறங்கிட, பொழுது நன்றாய் விடிந்திட,

தீபனின் “ராகா…!!!” என்ற கத்தலில் தான் அடித்துப் பிடித்து கண் விழித்தனர் இருவரும்..

தட்டுத் தடுமாறி எழுந்து  நிற்க, தீபனோ “நான்.. நான் போய் ராகாவ பார்க்கணும்..” என்று கிளம்ப,

“டேய் டேய்.. போதும்.. இரு..” என்று புனீத் இழுத்துப் பிடிக்க,

“ம்ம்ச் நீங்க எங்கடா இங்க..” என்றவன், அப்போதுதான் தான் எங்கிருக்கிறோம் என்று பார்க்க,

“இங்க எப்படி வந்தேன்..” என்றான் இருவரையும் பார்த்து..

“ம்ம் பறந்து வந்த.. ஏன்டா.. எதுக்கு இப்படி பீகேவ் பண்ணிட்டு இருக்க நீ..” என, தீபனுக்கு அரைகுறையாகத்தான் முதல் நாள் நடந்தது நினைவில் வர,

“நான்.. நான் என்னடா பண்ணேன்???” என்றான் முழுதாய் தெரிந்துகொள்ளும் நோக்கில்..

“ம்ம் என்னவெல்லாம் பண்ணக் கூடாதோ எல்லாம் பண்ணி வச்சிருக்க..” என்றவர்கள், உஷா அவர்களிடம் பேசியது, கேட்டது, பின் பார்ட்டியில் நடந்தவைகளை சொன்னது என்று எல்லாம் சொல்ல,

“ஓ!! மை காட்…” என்று தலையில் கை வைத்தவன், “ரா.. ராகா…” என்று வாசலை நோக்கிப் போக,

“எங்கப் போற நீ..” என்று மீண்டும் பிடித்து நிறுத்தினார்கள் இருவரும்.

“விடுங்கடா நான் போய் பேசணும்..”

“நீ பேசின வரைக்கும் போதும்…” எனும்போதே, தீபனுக்குத் தலை வலிக்கத் தொடங்க,

“இல்லை.. இல்லை.. அவளுக்கு என்னாச்சுன்னு தெரியனும்.. கண்டிப்பா அவ.. எதாவது தப்பா பண்ணி வச்சிருப்பா..” என,

“ஆமா நீ அப்படியே எல்லாம் சரியா பண்ணிட்ட..” என்றான் புனீத் திட்டுவதுபோல்.

“டேய்..!!!”

“கத்தாத தீப்ஸ்.. இது ஒன்னும் கட்சி, அரசியல் இப்படி கிடையாது.. பொண்ணு விஷயம்.. எவ்வளோ சென்ஸ்டீவ் தெரியுமா??? அதுவும் அனுராகா.. சும்மாவே அவளுக்கு எதையும் எவ்வளோ ஈசியா எடுத்துக்க தெரியாது.. இப்போ நீ இப்படி பண்ணி வச்சிருக்க..” என, சிறிது நேரம் தீபன் மௌனமாய் இருந்தான்.

மனதை ஒருநிலை படுத்தி முதல் நாள் நடந்தவைகளை அவனே நினைத்துப் பார்க்க, அனுராகா அவனை வேண்டாம் என்று சொன்னது மட்டும் நன்கு நினைவில் வந்தது..

அடுத்த நொடி அவனின் தலை நரம்புகள் வெடிப்பது போலிருக்க, “நோ…!!” என்று தலையை தாங்கிப் பிடித்தவன்,

“தேவ்.. கிவ் மீ சம்திங்..” என, “என்னடா??!!” என்றான் அவனும்..

“ஏதாவது ட்ரிங்க்ஸ் எடுத்துட்டு வா..” என்று கத்த,

“ம்ம்ச் நீ வா ஏதாவது சாப்பிடு முதல்ல..” என,

“நோ.. ஏதாவது கொண்டுவா.. நான்.. நான் என்னை மறக்கணும்..” என,

புனீத் தேவ்விடம் வேண்டாம் என்று கண் காட்ட, அதைப் பார்த்தவனோ “நான் கிளம்பிப் போறேன்..” என்று கிளம்ப,

“இல்லை இல்லை நான் எடுத்துட்டு வர்றேன்..” என்றுசொல்லி தேவ் சொல்ல, திரும்ப அவன் கேட்டது வரவும், மறுபடியும் மதுவின் பிடியில் போனான் தீபன் சக்ரவர்த்தி.

அவனுக்கு அவளின் ‘நீ வேண்டாம்…’ என்ற வார்த்தைகளை அந்த நொடி மறந்திட வேண்டும்..

அதனை கடந்திட வேண்டும்..

அதற்கு முதலில் அவன், அவனாய் இருந்திடக் கூடாது…

அதுமட்டுமே பிரதானமாய் இருந்தது..

காலை எழுந்ததும், வெறும் வயிற்றினில் தீபன் இப்படி குடிப்பது கண்டு,                                                            “ஏன் தீப்ஸ் நீ இப்படி நடந்துக்கிற??!!” என்று புனீத் பொறுக்காது கேட்க,

“டேய்… டேய்… அவ.. அவ என்னைப் பார்த்து நீ எனக்கு வேணாம் சொல்லிட்டா டா..” என்று அப்போதும் அதே பதிலைச் சொன்னான் தீபன் சக்ரவர்த்தி..

“நீ பண்ணதுக்கு யாரா இருந்தாலும் அப்படிதான் டா சொல்வாங்க..” என்று தேவ் பொறுக்காது சொல்ல,

“அப்.. அப்போ அவ பண்ணது சரியாடா..??” என்றான் தீபன்..

அப்போதும் அவன் ஒரு நிலையாய் இல்லை…

மது…!! மது…!!! மது..!! அது மட்டுமே அன்றைய பொழுதில் அவனோடு இருந்தது..

ஷர்மா என்ற ஒருவனைக் கூட அவன் மறந்து போனான்.. கண்ணுக்குத் தெரியாத அந்த எதிரியின் எண்ணமெல்லாம் காணாது போயிருந்தது.. இப்போது அவனின் மனதில் இருந்ததெல்லாம், அனுராகா பற்றியது..

போதை தலைக்கு ஏறவும், மீண்டும் பிரஷாந்த் சொன்னவைகள் எல்லாம் வந்து அமர்ந்துகொள்ள,   

அவள்.. அவனிடம் உண்மையை மறைத்துவிட்டாள்…!!

இதுவே அவனின் வலியாய் இருக்க, அவ்வலியில், அவன் என்னென்னவோ செய்துவிட்டான்..

இறுதியாக, இதோ இப்போது.. தீபனின் ‘தி சோ கால்ட் ப்ரேக் அப் பார்டி..’ அதுவும் நடந்துகொண்டு இருந்தது…

‘என்னை வேணாம் சொல்லிட்டு போயிட்டா…’ என்று அவன் கத்த, நண்பர்கள் இருவரும் இவனை எப்படி சரி செய்வது என்று தெரியாது தான் பார்த்துக்கொண்டு இருந்தனர். 

நேரம் செல்ல, செல்ல, தீபன் நிறுத்துவதாய் இல்லை.. மாதுவை மறந்திட, மதுவை நாடியது அவனுள்ளம்.. ஆனால் அதுவும் அவனுக்கு நிம்மதியளிப்பதாய் இல்லை..

           காதல், உள்ளிருந்து கொல்வதில் சர்வ வல்லமை படைத்தது..!!!

Advertisement