Advertisement

நான் இனி நீ – 24

பார்ட்டியில் இருந்தவர்கள் அத்தனை பேரும் வேடிக்கைப் பார்க்க, தீபன் குடித்துவிட்டு வந்து ரகளை செய்ய, அனுராகா செய்வது அறியாது நின்றிருந்தாள்.

தாரா மகளை “நீ வா நம்ம கிளம்பலாம்..” என்று அழைக்க,

“போயிடுவியா நீ??!!” என்று அதற்கும் தீபன் கத்த,

“தீப்ஸ்.. எதுவா இருந்தாலும் நம்ம நாளைக்கு பேசிக்கலாம்..” என்றாள், மற்றது எல்லாம் விடுத்தது..

“ஏன்… ஏன்??!!  இன்னிக்கு பேசினா என்ன?? எனக்குத் தெரியனும்.. இன்னிக்கே இப்போவே தெரியனும்..” என்று தீபன், அவளை நெருங்கி நிற்க, அனுராகாவின் கால்கள் தன்னைப்போல் பின்னே நகர

“தீபன் என்னடா நீ… முதல்ல கிளம்பு..” என்றான் மிதுன் சக்ரவர்த்தி.   

“முடியாது… என்ன செய்வ??!!” என்று அவனின் முன்னேயும் எகிற, லோகேஸ்வரனுக்கோ அவமானமாய் போய்விட்டது.

இந்தியா முழுவதும் இருந்து, அவரின் குழுமத்து ஆட்கள் வந்திருக்க, வெளிநாட்டவர்கள் கூட பலர் வந்திருக்க, இப்போது பார்த்து இப்படியா என்று தோன்ற, பெரும் அவமானமாய் உணர்ந்தார்.

பிரஷாந்தை அவர் பார்த்த பார்வையிலேயே தெரிந்தது, இனி அவனுக்கு இங்கே இடமில்லை என்று. அதற்குமேல் அவன் அங்கே இருக்கவும் செய்வானா என்ன?!!! மனதில் இருந்த வஞ்சத்தை வாய்ப்பு கிடைத்ததும் அழகாய் தீர்த்துக்கொண்டான். என்ன தீபன் இப்படி நடந்துகொள்வான் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.

தீபன் சக்ரவர்த்தியை இழுத்துக்கொண்டு வேறொரு அறைக்குச் செல்வதற்குள் போதும் போதும் என்றாகிப்போனது அவர்களுக்கு..

மிதுனுக்கு தான் நினைத்தது நடப்பது ஒருபுறம் மகிழ்ச்சி என்றாலும், தீபன் இப்படி நடந்துகொள்வான் என்று நினைக்காததால், இது பெருமகிழ்ச்சி கொடுத்தது.

நிச்சயம் இவ்விசயம் வீட்டிற்குச் செல்லும், அப்பா அம்மா முன்னிலையில் தீபனின் நிலை??!!!

‘அட அட….’ நினைக்கவே அவனுக்கு அப்படி ஜில்லென்று இருக்க, லோகேஸ்வரன் “என்ன மிதுன் இதெல்லாம்..” என்று கேட்க, தாராவோ, மகளின் கை பிடித்து அங்கே அந்த அறைக்குள் நிற்க,

லோகேஸ்வரன் கேட்ட கேள்வியை கண்டு “அது உங்க பொண்ணுக்கிட்ட கேட்கணும் என்ன இதெல்லாம்னு..” என்று கேட்டான் தீபன் சக்ரவர்த்தி.

அவனுக்கு அனுராகா பற்றி தவறான எண்ணமெல்லாம் எதுவுமில்லை.. ஒருவனின் காதலை ஏற்றுகொள்வதாய் இருந்தவள், அதை தன்னிடம் சொல்லவில்லை. அவனைக் காண அப்பாவையே எதிர்த்து கிளம்பி வந்தவள், அதுவும் தன்னோடு, அப்படியிருக்க, தனக்காக ஏன் இதுவரைக்கும் அவள் எதுவும் செய்திடவில்லை ??!!!

அந்த ஆத்திரமும் வேகமும் தான் அவனுள்..

நேற்றிலிருந்து இன்றுவரைக்கும்…. அவளால் அவளின் அப்பாவினை எதிர்த்து வர முடியவில்லையாமா??!!

அப்போது அவனுக்கு அப்படித்தான் தோன்றியது..

தான் பேசவில்லை என்றபோது கூட நடுஜாமத்தில் கிளம்பி வந்தவள், இத்தனை பெரிய விஷயம் நடக்கையில், நீ ஏதாவது செய் என்றுதான் சொன்னாளே தவிர, அவள் என்ன செய்தாள்??!!

இதோ இப்படி அலங்காரம் செய்து கிளம்பி வந்து அனைவரின் முன்னிலும் நின்றது அவனுக்குப் பொறுக்க முடியவில்லை.

தீபன் லோகேஸ்வரனிடம் வர, மிதுன் இடையில் வந்தவன் “தீப்ஸ் இதெல்லாம் சரியில்லைடா.. அப்பாக்கு தெரிஞ்சா எவ்வளோ கஷ்டப் படுவார்..” என,

“ஏய்… நிறுத்துடா… நிறுத்து..” என்றவன்,  “உனக்கு இவளைத் தெரியுமா??!!” என்று அனுராகாவை நோக்கிக் கை நீட்ட,

“தீப்ஸ்…” என்று பல்லைக் கடித்தான் மிதுன்..

“தெரியுமா??!! தெரியாதா…” என்றவன், “அதுசரி.. தெரிஞ்சா நீ ஏன் இப்படி சிரிச்சிட்டு நிக்கப் போற.. இதோ.. இதோ.. என்னைப் போல தான் நின்னிருப்ப…” என்றவன்,

“அப்படிதானே…” என்று அனுராகாவைப் பார்த்து கோணலாய் சிரிக்க,         அனுராகாவோ “டோன்ட் யூ க்னோ ஹவ் டூ பீகேவ்..” என்று சீறினாள்.

“ஏய்.. நான் இப்படிதான்டி.. நான் கேட்டதுக்கு பதில் சொல்லு..” என்று அவன் அப்போதும் தான் என்ன பேசுகிறோம் என்று புரியாது தான் பேசிக்கொண்டு இருந்தான்.

“உனக்கு என்ன பதில் வேணும்??…” என்று கேட்டவளின் பார்வை முற்றிலுமாய் மாறியிருக்க,

“ஏன் என்ன சொல்லணும்னு உனக்குத் தெரியாதா??!!” என,

“ம்ம்ச்.. உன்னோட இப்போ பேச முடியாது போ..” என்றாள் வெளியே கை நீட்டி.

அவளுக்குத் தெரியவில்லை, இந்தவொரு சூழலை எப்படி கையாள்வது என்று. எப்படியாவது மிதுனிடம் சொல்லி, பின் அப்பாவிடம் பேசி அனைத்தையும் சரி செய்துவிடலாம் என்று எண்ணியிருக்க, அனைத்தையும் நாசம் செய்துவிட்டு, இப்போது அவளையே இகழ்ந்து பேசுவதோடு தீபன் கேள்வியும் கேட்க, அவளுக்குமே இறுக்கம் கூடியது,

இவனுக்குத் தான் பதில் சொல்வதா என்று…?!!

“நான்… நான் போகனுமா…” என்று அவளின் கைகளைப் பற்றியவன், “நான் போகனுமா??!!” என்று அவள் முகத்தின் முன்னே சத்தமாய் கத்த,

“மிதுன் உங்களுக்காக பார்த்துட்டு இருக்கேன்.. இல்லைன்னா நடக்கிறதே வேற..” என்று லோகேஸ்வரன் சொல்ல,

மிதுனோ “சாரி அங்கிள்… நான்.. நான் அவனைக் கூட்டிட்டு போறேன்..” என்றுசொல்லி, தீபனிடம் செல்ல,

“யாரும்.. யாரும் கிட்ட வரக்கூடாது.. வந்தீங்கன்னா அவ்வளோதான்…” என்றவன், அனுவின் கை பிடித்து அப்படியே பின்னே முறுக்கியவன்,

“சொல்லு.. சொல்லு டி.. எத்தனை டைம் நம்ம வெளிய போயிருப்போம்.. எவ்வளோ நேரம் தனியா டைம் ஸ்பென்ட் பன்னிருப்போம்.. அப்போல்லாம் என்கிட்டே உனக்கு சொல்லத் தோணலையா??!! அவனுக்காக எல்லாத்தையும் தாண்டி வந்த நீ.. அப்.. அப்போ எனக்காக எதுவும் செய்யத் தோணலையா??” என்றவனோ நிறுத்தாது

“நீ நீ.. இதோ இங்க வந்து இப்படி இப்படி எல்லாரோடவும் சிரிச்சுட்டு இருக்க.. நா.. நான் நான் பாரு எப்படி நிக்கிறேன்னு…” என்று தன்னைத் தானே சுட்டிக்காட்ட,

அனுராகாவிற்கு அவமானமாய்ப் போனது.. அனைவரின் முன்னும் இப்படி செய்கிறானே என்று..

என்னதான் விரும்புகிறார்கள் என்றாலும், சில விஷயங்கள் மற்றவர்கள் முன் பேசிடவோ, கேட்கவோ கூடாது. அதுவும் அவளின் தரம் தாழ்வது போல் அவன் செய்வது எல்லாம் யாரால் தான் ஏற்றுக்கொள்ள முடியும்..?!

தீபனா இப்படி என்று அவளின் மனது எண்ணினாலும், கண்களை இறுகப் மூடித் திறந்தவள், அவளின் பலம் மொத்தமும் திரட்டி, அவனின் பிடியில் இருந்து வெளிவந்தவள்,

“இப்போ அதுக்கு என்ன??!!” என்றாள் ஆங்காரமாய்..

மிதுனோ “அனு, அவன்தான் ஸ்டெடியா இல்லை.. நீயும் ஏன் பதிலுக்கு பதில் பேசுற..” என்று இடையில் வர, அனுராகா அவனைப் பார்த்த பார்வையில் தன்னைப்போல் மிதுனின் வாய் மூட,  

“சொல்லு தீபன்.. என்ன வேணும் உனக்கு இப்போ…” என்றாள்.

“நீ.. நீ பொய்க்காரி.. எல்லாத்தையும் மறைச்சிட்ட.. நீ.. நீ எனக்காக எதுவும் செய்யலை..” என்று அவன் சப்தமிட,  

“சொல்லிட்டல்ல.. அப்போ கிளம்பு..” என்றாள் திமிராகவே.

“வாட்??!!!!”

“எஸ் கிளம்பு…. உனக்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாது போ..” என,

தாராவோ “அனும்மா..” என,

அவளின் அம்மாவையும் அப்பாவையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, “கிளம்பு.. போ..” என்றாள் வெளியே கை நீட்டி..

“ஏய்… என்ன??!! என்ன சொல்ற நீ??!!” என்று தீபன் அவளின் தோள்களைப் பிடித்து உலுக்க,

“எஸ்… எனக்கு நீ வேணாம்..” என்றாள் அழுத்தம் திருத்தமாய், அவனின் கண்களைப் பார்த்து.

“ராகா??!!!!!”

“டோன்ட் கால் மீ லைக் திஸ்.. எப்போ நீ என்னை எல்லார் முன்னாடியும் அவமானப்படுத்தனும் நினைச்சியோ.. அப்படியொருத்தன் எனக்கு வேண்டவே வேணாம்..” என்று திடமாய் மறுத்தவள், அவனின் கரங்களை விலக்கி,

தானும் விலகி நின்று, “எல்லாம் சொன்னாங்க.. நீ எனக்கு செட்டாக மாட்டன்னு.. பட், கொஞ்ச நேரம் முன்னாடி நீ இங்க வந்தப்போக்கூட நான் அப்பாடி என் தீப்ஸ் வந்துட்டான்னு நினைச்சேன்.. ஆனா நீ…” என்று அவன் முன்னே விரல் நீட்டியவள்,

“நல்லா பண்ணிட்ட… வெரி குட்..” என்று மெதுவாய் கை தட்டியவள்,

“சோ இப்போ நான் சொல்றேன்.. நீ எனக்கு செட்டாகவே மாட்ட..” என்றுவிட்டு, அவள்பாட்டில் நடந்து சென்றுவிட்டாள்.

“ஏய்.. ராகா.. நில்லுடி…” என்று தீபன் பின்னே போக விளைய, மிதுன் அவனை இறுக்கமாய் பிடித்துகொண்டான்..

“தீப்ஸ்.. மானத்தை வாங்காதடா..” என்று அவனைப் பிடிக்க, “விடு டா.. டேய்.. விடு.. அவ போறா.. என்னைவிட்டு போறாடா…” என்று கத்த, 

தாரா மகளின் பின்னே வேகமாய் செல்ல, லோகேஸ்வரன் ஆபிஸ் பணியாளர்கள் இருவரை அழைத்து மிதுனோடு இருக்கச் சொல்ல, தீபனை வீட்டிற்கு அழைத்துச் செல்லவே பெறும்பாடாய் போனது. 

அனுராகாவின் மனதில் அப்படியொரு போராட்டம்… போர்களமாய் தான் இருந்தது அவளுள்ளம்..

எப்படி??? எப்படி அவனால் இப்படி பேசிட முடிந்தது..???!!

அவன் அங்கே வந்து நின்றதுமே அவள் மனது அப்படியானதொரு நிம்மதியை உணர்ந்ததே.. அது அவனுக்குத் தெரியவில்லையா??!!

தீபன், நிதானத்தில் இல்லை, குடித்திருக்கிறான் அவன் சுயநினைவு இல்லாது பேசுகிறான் என்பதெல்லாம் அப்போது அவளுக்கு எதுவும் மனதினில் நிலைக்கவில்லை. அவன் பேசிய வார்த்தைகள்..

அவனிடம் மறைத்து, அனைத்தும் செய்தது போல் அவன் பேசியது, அவன் அண்ணனிடம் பிரஷாந்திற்க்கும் இவளுக்கும் என்னன்னு தெரியுமா??!! என்று கேட்டது.. இதெல்லாம் இதெல்லாம் அவளுக்கு சகித்துக்கொள்ளவே முடியவில்லை.

உடலே கூசுவதாய் இருந்தது..

‘ஐயோ….’ என்று அரற்ற, அழுகை நின்று இப்போது கண்மண் தெரியாத ஆத்திரம்..

விளைவு, வீட்டினுள் நுழையும் போதே, கண்ணில் பட்ட பொருட்கள் எல்லாம் சின்னாபின்னமாகியது..

“ராஸ்கல்…. ராஸ்கல்… இப்படி பண்ணிட்டான்…” என்றபடி, ஹாலில் இருந்த கண்ணாடி மேஜையை அப்படியே இரு கரத்தினால் இழுத்துப் போட, அதுவோ உருவே தெரியாது உடைந்து சிதறியது.

உடைந்து சிதறிய சில்லுகள் எல்லாம் இவள் மீதும் தெறிக்க, மனக்காயம் மீறி இப்போது உடல் காயம் ஆக, ஆனாலும் அவளின் அந்த ஆத்திரம் தீரவில்லை.

தாரவோ “அனு.. ஏன் இப்படி பண்ற நீ…” என்று அவளை அதட்டியபடி பின்னேயே வர,

“ராஸ்கல்….. டேய்…!!” என்று அப்படியொரு கத்தல் அவளிடமிருந்து.

முகத்தை மூடிக்கொண்டு அப்படியே சரிந்து அமர, சுற்றிலும் சிதறியிருந்த கண்ணாடி சில்லுகள் அவளுடலை பதம் பார்த்தது.

“ஐயோ அனு…” என்று தாரா அருகே வர, வீட்டில் இருந்த வேலையாட்கள் எல்லாம் வேடிக்கைப் பார்க்க, ரூமாவும் கூட தாராவிற்கு உதவியாய் வர,

“நோ..!!! நோ…. யாரும் வரக்கூடாது…” என்று வீடே அதிரும்படி அனுராகா சப்தமிட்டாள்.

பிரஷாந்த் அவளை மறுத்து செல்கையில், அவள் உணர்ந்தது ஒரு அவமானம் மட்டுமே.. ‘அவன் தன்னை வேண்டாம் என்று சொல்லி செல்வதா…??!! ச்சே…’ என்றுதான் உணர்ந்தாள்..

ஆனால் இப்போது??!! அனுராகா உணர்ந்தது, காதலின் பெரும் வலி..

“ஐயோ…!!!!” என்று அனுராகா கதற, தாராவோ “ரூமா போ போய் கார் எடுக்கச் சொல்லு, ஹாஸ்பிட்டல் போகணும்..” என,

அனுராகாவோ “நோ.. நான் எங்கவும் வரமாட்டேன்..”  என,

“நீ வந்துதான் ஆகணும்..” என்று தாரா கட்டாயப்படுத்த,

அனுராகா அவரை வெறித்துப் பார்த்தவள், வேகமாய் எழுந்து ஹாலில் இருக்கும் மிச்ச பொருட்களை எல்லாம் தள்ளிவிட, அவள் உடலில் இருந்து வழியும் ரத்தம் வீடு முழுவதும் பரவ,

“அனு.. அனு.. நான் சொல்றதை கேளு..” என்றபடி தாரா அவளை நெருங்க முயற்சிக்க,

“நீங்க யாரும் கேட்டீங்களா.. நீங்க கேட்டீங்களா??!!” என்றவள், ஹாலின் ஒரு ஓரத்தில் இருந்த அவளின் அப்பாவின் மினி பாரினுள் செல்ல, “கடவுளே!!!” என்று தலையில் அடித்தபடி

தாரா “அவளைப் பிடிங்க..” என்று வேலையாட்களிடம் சொல்ல, உள்ளே பாட்டில்கள் உடையும் சத்தம் கேட்டது..

அந்த சத்தத்தில் அனைவரும் அப்படியே நிற்க “டேய் போங்கடா.. போய் அவளைப் பிடியுங்க..” என்று தாரா சொல்ல, இருவர் உள்ளே செல்ல, “யாரும் வந்தீங்கன்னா.. ஐ வில் கில் யூ..” என்றபடி ஒரு பாட்டிலை உடைத்து அவர்கள் முன்னே காட்டி மிரட்ட,

தன்னைப்போல் அவர்கள் அதே இடத்தில் நகராது நிற்க, தாரா உள்ளே வந்தவர் “அனு அம்மா சொல்றதை கேளு ப்ளீஸ்..” என்று கெஞ்சாத குறையாய் சொல்ல,

“நோ.. நோ வே… வொய் ஷுட் ஐ??” என்றவள், அருகில் இருந்த மற்றொரு மதுபான பாட்டில்லை திறந்தவள், அப்படியே குடிக்க, “அனு!!!” என்று தாரா அதட்ட,

“எஸ்.. எஸ்.. அனு தான்.. இனி பார்ப்பீங்க, நீ அப்பா… தென் அவன்.. தீபன்.. எல்லாம் எல்லாரும் பார்ப்பீங்க.. வேற அனுவ… நான் நான் அப்படியா??!!” என்றவள், மீண்டும் குடிக்க,

“அனு திஸ் இஸ் நாட் குட்..” என்ற தாரா, மகளின் அருகே சென்று அவளின் கையினில் இருந்த பாட்டிலை பிடுங்கி வீச,

அவளோ கோணலாய் சிரித்தபடி வேறொரு பாட்டிலை எடுக்கவும், தாரா பொறுமை காத்தது போதும் என்று பளாரென்று அறைந்துவிட, அடி வாங்கிய அதிர்ச்சி ஒருபுறம் இருந்தாலும், “ம்மாம்…” என்றாள் வலி நிறைந்த குரலில்.

“என்ன அனு நீ…” என்றவர், தள்ளி நின்றிருந்த அட்களிடம் கண் காட்ட, அவர்களோ அனுராகாவை வந்து இருபுறமும் பிடித்துக்கொள்ள,

“ஏய்.. டோன்ட் டச்.. டோன்ட் டச் மீ..” என்று அனுராகா திமிர,

“இன்னொரு அடி வேணுமா உனக்கு??” என்று தாரா சொல்லியபடி, “கூட்டிட்டு வாங்க..” என்றுசொல்லி முன்னே நடக்க, அனுராகாவை மருத்துவமனையில் சேர்ப்பதற்குள் போதும் போதும் என்றானது.

மிதுன் தீபனை கூட்டிக்கொண்டு வீட்டிற்க்குச் செல்லவில்லை. நேராய் அவர்களின் பண்ணைக்கு அழைத்துச் சென்றவன், உஷாவை அழைத்து இங்கே வரும்படி சொல்ல,

“இந்த நேரத்துல என்ன மிதுன்??” என்றார் அதிர்ச்சியாய்.

“ம்மா ப்ளீஸ் எதுவும் கேட்காம வாங்க..” என்றவன் வைத்துவிட, தீபனோ அப்போதும் உளறிக்கொண்டு தான் இருந்தான்..

‘என்னை வேணாம் சொல்லிட்டு போயிட்டா…’ என்று அவ்வப்போது கத்திக்கொண்டு இருக்க, மிதுன் அப்போது தான் கவனித்தான், நிழல் போல தீபனை பின் தொடரும் நாகாவையும், தர்மாவையும் காணவில்லை.

இத்தனை களேபரங்கள் நடக்க, அவர்கள் எங்கே என்று தேடினான்.

எங்கேயும் அவர்கள் இல்லை. அழைத்துப் பார்த்தான். அவர்களின் எண்கள் எதுவும் உபயோகத்தில் இல்லை என்று வர, மிதுன் மனது வேறொரு சிந்தனைக்குச் சென்றது.

Advertisement