Advertisement

தீபன் சக்ரவர்த்தி.. ஒரே நாளில் அவனின் நிலை அப்படியே மாறிப்போனதாய் இருந்தது. ஒருபுறம் வீட்டினில் அனுராகாவை மிதுனுக்கு உறுதி செய்திட, அதை கண்டும் கூட அவனால் தடுக்க முடியவில்லை.

காரணம்.. அனைவரின் முன்னும் அவனின் அம்மாவையும் அப்பாவையும் எதிர்த்தோ, மறுத்தோ பேசிட முடியாத நிலை. வீட்டினில் அத்தனை ஆட்கள். அனைவரும் பெரிய மனிதர்களும் கூட. அவர்கள் அனைவரின் முன்னேயும் தாங்கள் எல்லாம் வேடிக்கை ஆகிடக் கூடாது என்று அவன் கொஞ்சம் பொறுமை காத்து,  

என்ன செய்வது என்று சிந்திக்கையில், “ஷர்மா காணோம்..” என்று நாகாவிடம் இருந்து அழைப்பு வர, அப்படியே ஸ்தம்பித்துவிட்டான்.

அனுராகா ‘ஏதாவது செய்..’ என்று தீபனை காணும் போதெல்லாம், அவனால் எதுவுமே செய்திட இயலாது நின்றது அவனுக்கு எப்படியொரு வேதனை கொடுத்திருக்கும் என்பது அவன் மட்டுமே அறிவான்.

அப்படியிருக்கையில், அவளை அங்கே விட்டுவிட்டு, தான் இப்படி கிளம்பி வந்ததும் கூட அவனால் சகிக்க முடியவில்லை..

அந்த ஷர்மா.. அவன் கையில் இருக்கும் ஆதாரங்கள்.. இப்போது வெளியானால், அவ்வளவு தான்.. அவனின் அப்பாவின் இத்தனை ஆண்டுகால அரசியல் வாழ்வில் பெரும் வீழ்ச்சி ஏற்படும்.

அப்பாவிற்கு தெரிந்து செய்தவை சில, தெரியாது செய்தவையும் பல இருந்தது.

அரசியலில் தர்மம் என்பது வேறு. அரசியல் சூழ்ச்சி என்பதும் அத் தர்மத்தில் ஓர் அங்கமாய் விளங்கும். அப்படி பல சூழ்ச்சிகள் தீபனும் செய்திருக்கிறான். சக்ரவர்த்தியும் செய்திருக்கிறார். இருந்தாலும் அவைகள் எல்லாம் வெளிவராது இருப்பது வரைக்கும் தான் நன்மை.

வெளிவந்தால்.. நிச்சயம் சர்வ நாசம் தான்..

அது தீபனுக்கோ இல்லை சக்ரவர்த்திக்கோ..

இரண்டையுமே அவன் அனுமதியான்..!!

ஆனால் இதுமட்டுமே என்றால் அவன் எப்படியாகினும் சமாளித்து, மீடேரி வென்று வந்திடுவான்..

அனுராகாவின் விசயத்தில்…??! கிளம்புகையில் அவள் பார்த்த பார்வையின் அர்த்தம்??!!!

அர்த்தம் என்ன அர்த்தம்.. அப்பார்வையை இப்போது எண்ணினாலும் அவனுக்கு மனதினில் ஒரு குளிர் பிறந்தது.. அவனை அஞ்ச வைத்தவள் அவள்.. ஆகர்ஷித்தவளும் அவளே..

இவை அனைத்தும் சேர்த்து தீபன் சக்ரவர்த்தி என்ற மனிதனின் மன நிலையை மிக மிக மோசமாய் மாற்றி அமைத்தது..

எதுவும் செய்யத் தோன்றாமல், என்ன செய்வது என்றும் தெரியாமல் அவன் தலையைப் பிடித்து அமர்ந்திருக்க, அவனுக்கெதிரே நாகாவும் தர்மாவும். மிதுன் வேறு விடாது அழைத்துக்கொண்டு இருந்தான்.

பொறுமை இழந்து “என்னதான்டா வேணும்??!!” என்று கேட்க,

“எதுவும் பிராப்ளமா தீப்ஸ்.. வீட்ல என்ன ஒரு முக்கியமான விஷயம் போயிட்டு இருக்கு நீ கிளம்பி போயிட்ட.. நான் வரணுமா??!!” என,

“ம்ம்ச் தேவையில்லை..” என்றவன், “மிதுன்.. எதுக்கும் அவசரப்பட்டு சரின்னு சொல்லிடாதடா..” என்றான் தீவிரமான குரலில்..

“ஹேய்..!! என்னடா நீ.. அப்பா அம்மா சொல்றதுக்கு நான் என்னிக்கு நோ சொல்லிருக்கேன்.. எதுவா இருந்தாலும் நேர்ல வா பேசிக்கலாம்.. ஏதாவது ஹெல்ப் வேணும்னா கூப்பிட்டு..” என்று அவனும் சொல்ல,

“டேய்..!!” என்று பல்லைக் கடித்தவன் “நான் வந்து பாத்துக்கிறேன்..” என்றுவிட்டான்.

ஆனாலும் மனது ஆறவில்லை..

அனுராகா ஒருபுறம்.. மிதுன் ஒருபுறம்.. ஏற்கனவே அவள் மனது இந்நேரம் காயம்பட்டிருக்கும்.. இனி அடுத்து உண்மை தெரிந்தால் மிதுன் மனதும் நோகும்..

வேறு வழியும் இல்லை.

வலிகள் தாங்கினால் தானே வழிகள் பிறக்கும்..!!  

இப்படி எத்தனை நேரம் சிந்தித்துக்கொண்டு இருந்திருப்பானோ, அனுராகா அழைத்து அழைத்துப் பார்த்து ஓய்ந்துப் போனாள்.

அழைப்பினை ஏற்று, அவளோடு பேசிட ஆசைத்தான். ஆனால் உடனே கிளம்பி வா என்பாள். இப்போது அது அவனால் முடியாத ஒன்று. ஷர்மாவை கண்ணில் காணும் வரைக்கும் அவனால் இங்கிருந்து அசையவே முடியாது.

அனுராகாவும் முக்கியம்தான். ஆனால் அவள் விஷயம் பேசித் தீர்த்துவிடலாம்.. அப்படியானதொரு நம்பிக்கை அவனுக்கு இருந்தது. என்ன இருந்தாலும் என் குடும்பம் என்னை புரிந்துகொள்ளும் என்ற நம்பிக்கை இருந்தது.

“வில் கால் யூ லேட்டர்…” என்ற மெசேஜ் மட்டும் தட்டியவனுக்கு நன்கு தெரிந்தது இது அவளை எத்துனை வருந்தச் செய்யும் என்று.

‘ஆ!!!!’ என்று கத்தியது அவனுள்ளம்.. இருந்தும் வெளியில் அமைதிகாட்டி அமர்ந்திருக்க,    நாகாதான்  “இப்படியே இருந்தா எப்படி??!!” என்று கேட்க,

நிமிர்ந்து பார்த்தவனோ “நீங்க ரெண்டு பேரும் என்ன செய்வீங்க தெரியாது.. ஆனா இன்னிக்கு நைட் குள்ள அவன் நம்ம கைல கிடைக்கணும்..  இனி அவனை உயிரோட விட்டு எல்லாம் எந்த யூசும் இல்லை..” என்றிட,

“பேசாம சேட், அந்தாளை தூக்கிடலாமா??!!” என்றான் தர்மா..

தீபனுக்கும் இந்த யோசனை தோன்றியது. ஆனால் சேட் விஷயம் என்றால் உடனே அது சக்ரவர்த்திக்கு தெரிய வந்துவிடும், பின் அதுவும் சொதப்பல் ஆகிவிடும் என்று இருக்க, மனதில் வேறொன்றும் தோன்றியது.

“சேட் இப்போ வரைக்குமா இங்க இருக்கப் போறான்.. வீட்ல பூஜைக்கு கூட வரலை. சோ எல்லாமே பக்கா ப்ளான்ல நடந்திருக்கு.. தென் ஷர்மா கூட இருந்த நம்ம முத்து அவனை எங்கன்னு பார்க்கணும். என் கெஸ் சரின்னா, நேத்து அவன் என்னைப் பார்க்க வந்துட்டு ரிட்டர்ன் ஆகுறப்போ தான் என்னவோ நடந்திருக்கு..” என்று தீபனின் மூளை சரியாய் வேலை செய்தது.

தர்மாவும் நாகாவும் மீண்டும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள, தீபன் மனதில் என்ன யோசனைகள் ஓடியதோ, சட்டென்று இருவரையும் பார்த்தவன்

“நீங்க கொஞ்ச நாள் இங்க இருக்கவேணாம்..” என்றான் கட்டளைப்போல்.

இரட்டையர்கள் இருவரும் அதிர்ந்து பார்க்க “எஸ்.. எங்க போகணும்னு முடிவு பண்ணிக்கோங்க.. பணம் எவ்வளோ வேணுமோ தர்றேன்.. நெக்ஸ்ட் நான் கூப்பிடுறப்போ வந்தா போதும்.. உங்களோட போன் ஆப்ல இருக்கட்டும்.. எந்த ஊர்ல இருக்கீங்களோ, ஏதாவது பூத்ல கால் பண்ணி என்னோட பேசுங்க.. அண்ட் முக்கியமா ஒரு நாளைக்கு ஒருதடவை மட்டும் தான் கால் பண்ணனும்..” என்று அடுத்து அடுத்து சொல்ல,

“நாங்க எப்படி போக முடியும்.. அதுவும் இப்போ..” என்றான் நாகா..

“நோ.. போய்த்தான் ஆகணும்..” என்று தீபன் சொல்ல,

“முடியாது..” என்றான் தர்மாவும்..

“டேய்… சொல்றதை செய்ங்கடா.. இது.. இது எல்லாமே என்னை அழிக்க நடக்குது.. புரிஞ்சதா… இது அப்பாவுக்காக பண்றது இல்லை.. எனக்காக..” என்று கத்தினான் தீபன் சக்ரவர்த்தி.

“எதுவா இருந்தாலும்..” என்று நாகா சொல்லும்போதே, அவன் சட்டையை பற்றியவன் “நீங்க ரெண்டு பேரும் உயிரோட இருக்கணும்னா கிளம்பிப் போறீங்க..” என்றிட, இருவரும் பேசாமல் நின்றனர்..

“டேய்.. ஏன்டா… என்னோட நீங்க எப்பவும் இருக்கணும்னு நினைச்சா இப்போ கிளம்பிப் போயிடுங்க.. நான் சொல்றப்போ வாங்க.. இது எனக்காக நீங்க செஞ்சித்தான் ஆகணும்..” என்ற தீபனின் சொல்லில் அவர்களால் அதற்குமேல் மறுத்திட முடியவில்லை.

தன்னை சுற்றி இருக்கும் ஒவ்வொன்றும் தீபனிடம் இருந்து விலகிக்கொண்டு இருக்க, அவர்களின் முன்னே கார் டிரைவராக பணியாற்றிய ‘காதர்..’ என்பவரை அழைத்தான்.

“காதர் அண்ணா எங்க இருக்கீங்க..” என்ற அவனின் குரலிலேயே,

“சொல்லுங்கத் தம்பி நான் என்ன செய்யணும்..” என்றிட்டார் அவர்.

எப்படியும் ஐம்பது வயதிற்கும் மேல் இருக்கும். பெயருக்கு மட்டுமே முன்னே காரோட்டி.. அடிமட்ட வேலைகள் அனைத்தும் அவருக்கு அத்துபடி. இப்போதும் கூட சக்ரவர்த்தியின் விசுவாசி.. தீபன் மீது ஒரு கரிசனம் என்றுமே அவருக்கு உண்டு.

‘இத்துனூண்டுல என் கை பிடிச்சு தான் எங்கயும் போவீங்க தம்பி…’ என்று எப்போதுமே ஆதுரமாய் சொல்லும் மனிதர். இப்போது இவர்களின் வேலையில் இல்லை என்றாலும் தீபனோடு என்றுமே தொடர்பில் இருப்பவர்.

இந்த நிலையில் அவர்மட்டுமே அவனுக்கு உதவிட முடியும் என்று தோன்றியது தீபனுக்கு.

“நம்ம பசங்க வருவாங்க.. அவங்களை கொஞ்ச நாள் எங்காவது அனுப்பிடுங்க.. பணம் பத்தி பிரச்சனை இல்லை.. சேப்டி முக்கியம்.. ஏற்பாடு பண்ணிட்டு எனக்கு கூப்பிடுங்க.. இது யாருக்குமே தெரியக் கூடாது.. வீட்லயும் கூட..” என,

“அதுக்கென்ன தம்பி.. செஞ்சிட்டா போச்சு.. வேற எதுவும் செய்யனுங்களா??!! ” என்றவரிடம்,

“ம்ம் நிறைய இருக்கு.. இனிமே தான் நிறைய செய்யணும்..” என்றான் மனதினுள் ஒரு தீர்மானம் வந்தவனாய்..

இங்க தீபன் அடுத்தது என்னவென்று யோசித்திட, அனுராகாவோ தன் பொறுமை அனைத்தையும் துறந்திருக்க அவர்களின் வீடே ரணகளமாய் இருந்தது.

தாரா பொறுமையாய் எடுத்து சொல்லி சொல்லிப் பார்க்க, லோகேஸ்வரனோ அவர் பிடியில் தான் உறுதியாய் இருந்தார்.

“ஏன் டாட்.. ஏன்??? ஏன் இப்படி பண்ணீங்க??!!” என்று ஆங்காரமாய் உறுத்து விழிக்க,

“இதுதான் உனக்கு நல்லது அனு..” என்றார் அவருமே திடமாய்.

“அப்படின்னு நீங்களா முடிவு பண்ணிட்டா போதுமா??!! என்னோட லைப் என்னோட விருப்பம்னு ஒன்னு இல்லையா..”

“ஏன் இல்லை.. உன்னோட மேரேஜ்க்கு என்ன வேணுமோ கேள் நீ.. நான் செய்றேன்..” என்றவரை,

“அப்பா… ஸ்டாப் இட்..” என்று கைகளை உயர்த்தி அவரின் பேச்சினை நிறுத்தியவள், “நீங்க அப்பாவா நடந்துக்கல .. பக்கா பிசினஸ் பெர்சனா பீகேவ் பண்றீங்க..” என,

லோகேஸ்வரன், தாராவை பார்த்தவர் “லுக் அனும்மா.. உன்னோட சந்தோசம் எங்களுக்கு எப்பவுமே முக்கியம்..  நீ இவ்வளோ சொல்றயே, உன்னோட தீபன்.. ஐ மீன் நீ சொல்ற தீபன் என்ன பண்ணான்??!! உன்னை அம்போன்னு விட்டுட்டு போனான்.. அவனும் அங்கதானே இருந்தான் எல்லாம் பார்த்துட்டு..” என,

அனுராகா இந்த கேள்விக்கு என்ன சொல்வாள்??!!

உண்மையும் அதுதானே.. விட்டுவிட்டுப் போனானே.. என்று அவளுள்ளம் இப்போதும் குமுறியது..

ஆனாலும் அனுராகா அதனை வெளிக்காட்டாது “தீப்ஸ் பத்தி இப்போ பேச்சில்லை.. எனக்கு இந்த ஏற்பாடு பிடிக்கலை.. அதுமட்டும்தான் டாட் பேச்சு.. ஸ்டாப் திஸ் ஆல் நான்சென்ஸ்..” என்று கத்த,

“ நோ அனும்மா… உனக்கு இன்னும் எது சரி தப்புன்னு புரியலை.. தீபன் உனக்கானவன் இல்லை.. பொறுமையா யோசிச்சுப் பாரு..” என்றுவிட்டு சென்றுவிட்டார்..

“ஐம் கிளியர் டாடி… நீங்க சொல்லலைன்னா மிதுன் கிட்ட நானே சொல்வேன்..” என்று அனுராகா வீடே அதிரும்படி கத்த,

நடந்துகொண்டு இருந்தவர், நின்று திரும்பி அவளின் முகம் பார்த்து “அப்படி ஒன்னு நீ ட்ரை பண்ணா, அடுத்த நிமிஷம் நீ இங்க இருக்கமாட்ட அனு.. உன்னோட கல்யாணம் என்னோட முடிவு அதை புரிஞ்சுக்கோ..” என்று மிரட்டுவதுபோல் பேசிவிட்டுப் போக,

“ம்மா…” என்றாள் அடுத்து தாராவிடம்.

தாராவிற்குமே, லோகேஸ்வரனின் இப்படியான மாற்றங்கள் அதிர்ச்சிதான். மகளின் நிலை உணர்ந்தவரோ

“அனு காம் டவுன்.. சொல்றதை கேளு.. இது ரொம்ப சென்ஸ்டிவ்.. சோ பார்த்து தான் ஹேண்டில் செய்யணும்..” என,

“ம்மா கண்டிப்பா சொல்றேன்.. அப்பா எனக்காக யோசிக்கலை அப்படின்னா நானும்.. நானுமே அவருக்காக யோசிக்க மாட்டேன்.. போயிட்டே இருப்பேன்..” என்றாள் திண்ணமாய்..

“அனும்மா..!!” என்று தாரா அதிர,

“எஸ்… அவர் என்ன என்னை இங்க இருக்கவிடாம செய்றது.. என்னை தேடி அலையறபடி நான் செஞ்சிடுவேன்.. சொல்லிடு..” என்றுவிட்டு அனுராகா போக, வெளியே இத்தனை ஆர்பாட்டங்கள் செய்தாலும், உள்ளே அவளின் காதல் நெஞ்சம் தீபனோடு ஒரு வார்த்தை பேசிடவே போராடியது.      

இரவாகிப் போனது, இன்னமும் அவன் அழைக்கக் காணோம்.. நாளையோ அவர்கள் குழுமத்தின் பார்ட்டி வேறு.. நிச்சயம் லோகேஸ்வரன், மிதுன் தான் தன் வருங்கால மருமகன் என்று அறிவிப்பார் என்பது அனுராகாவிற்கும் தெரியும்.. 

‘கம்மான் தீப்ஸ்.. பிக்கப் தி கால்..’ என்று அவளுக்கு அவளே சொல்லிக்கொண்டு,  அவனுக்கு முயற்சித்துப் பார்க்க, ம்ம்ஹும் எப்பதிலும் இல்லை..

புனீத், தேவ் இருவரிடமும் கூட கேட்டுப் பார்த்துவிட்டாள். அவர்களும் தெரியாது என்றே கூறினார்..

கண்கள் கலங்கி அழுகை வெடித்தது..!!

மனதில் இருக்கும் கொதிப்பெல்லாம், அவள் கண்களின் நீர் வழியே வெம்மையாய் வடிகிறதோ என்னவோ, அவளின் அழுகை தீபனுக்கு எட்டியதோ யார் அறிவார் அவனே அழைத்தும் விட்டான்..

“தீப்ஸ்… எங்க போன நீ..” என்று எடுத்ததுமே அவள் கத்த,

“ஷ்…!! ராகா.. ப்ளீஸ்.. டோன்ட் பீ டூ இமோசனல்.. நடந்தது எனக்குமே ஷாக்தான்..” என்றான், எங்கே தான் பதறிப்போய் பேசினால், அவள் மேலும் பதறுவாள் என்றெண்ணி.

ஆனால் அனுராகாவிற்கோ அவன் மிக மிக இலகுவாய் பேசுவதுப் போலிருக்க, “வாட்??!! கம் அகைன்..” என்றாள் கோபமாய்..

அழுகை நின்று இப்போது ஆத்திரம் வெடிக்கக் காத்திருந்தது.

“ராகா… நான்தான் சொல்றேன் இல்லையா… என்மேல உனக்கு நம்பிக்கை இல்லையா??!!” என,

“அந்த மண்ணாங்கட்டி எல்லாம் அப்புறம்.. நீ உன் அண்ணாக்கிட்ட சொல்றயா?? இல்லை நான் சொல்லவா??!!” என்று நேராய் விசயத்திற்கு வந்தாள்.

“ம்ம்ச் அனுராகா… நான் பார்த்துக்கிறேன் சொல்றேனே..” என்று தீபன் கடிய,

“எஸ்.. நீ பார்ப்ப.. காலைல கூட நல்லா பார்த்தியே  நீ… அப்போவே நீ ஒரு வார்த்தை சொல்லிருந்தா..” எனும்போதே,

“ஐ க்னோ.. எப்போ சொல்லனும்னு..” என்றான் அவளை அடக்கும் பொருட்டு..

தான் சொல்ல வருவதை புரியாது பேசுகிறாளே என்று இருக்க, அவளோ இவன் ஏன் இப்படியாகிப் போனான் என்று இருந்தாள்.

இக்கட்டான சூழல் வருகையில் தான் புரிதல் மிக மிக அவசியம்.. ஆனால் இங்கே இவர்களுக்கு புரிதல் என்றால் அது எத்துனை தூரம் என்று கேட்பர் போலும்.

“ஓகே… நீ எப்போவேனா உங்க வீட்ல சொல்லு.. நாளைக்கு எங்க ஆபிஸ் பார்ட்டி.. உன் அண்ணா தான் வருங்கால மருமகன்னு எங்கப்பா சொல்லப் போறார்… இஸ் தட் ஓகே பார் யூ..” என்றாள் ஆங்காரமாய்..

“ம்ம்ச்..” என்று எரிச்சல் உற்றவனோ, “ஏய், உனக்கு இருக்க எல்லா ***** எனக்கும் இருக்குடி.. பேசுறா… கொஞ்சம் பொறுமையா நான் சொல்றதை கேட்டா என்ன??!! இங்க எனக்கு எக்கச்சக்க பிரச்னை.. உன்னோட அப்பாவை நீ பேசி ஹோல்ட் பண்ண முடியாதா..” என்று அவனும் பொறுமையை விட்டிருக்க,

“மைன்ட் யுவர் வோர்ட்ஸ் தீபன்…” என்றாள் அனுராகாவும் அவளின் பொறுமை கரைந்தது என்று..

“நான் சொல்றதை கேட்க முடியுமா முடியாதா அனுராகா??!!”

“நான் சொல்றதை நீ செய்.. நீ சொல்றதை நான் கேட்கிறேன்…” என்றவள், “நாளைக்கு பார்ட்டி, அப்பா எல்லார் முன்னாடியும் சொல்றதுக்குள்ள நீ உங்க வீட்ல சொல்லி இதெல்லாம் நிறுத்தலை.. எனக்கு தெரியாது.. உன்னை கொன்னாலும் கொன்னுடுவேன்..” என்றவள் வைத்துவிட்டாள்.

இதற்குமேல் அவளுக்கு எப்படி பேசுவது என்று எதுவுமே விளங்கவில்லை.

தீபன் மட்டும் கண்ணெதிரே இருந்திருந்தால் அவனின் நிலையே வேறு அவளிடம்..

இரவுகள் இத்தனை நீளமானதா என்று அனைவருக்குமே தோன்றியது. ஒவ்வொரு நொடியும் மெது மெதுவாய் அடிப்பிரதச்சனம் செய்து நகர்வதாய் இருக்க, மறுநாள் விடியல் என்பது ஒரு திகிலுடனே விடிந்தது.

தாரா எத்தனை சொல்லியும் லோகேஸ்வரன் உறுதியாய் இருந்தார்.

“நீ சொல்லு.. தீபன் பண்ணது சரியா??!! லவ் பண்றாங்கன்னா அப்போ அனுக்கு சப்போர்ட்டா அவன் அங்க இருந்திருக்கணும் தானே..” என்று லோகேஸ்வரன் கேட்க, தாராவிற்கு பதில் சொல்ல முடியவில்லை.

“லுக் தாரா.. எவ்வளோ தலை போற விசயமா இருந்தாலும் கூட, அந்த நேரத்துல நம்ம பொண்ணு அவனுக்கு இரண்டாவது பட்சம் தான்.. அப்படியொருத்தன் நாளைக்கு அவளை எப்படி சந்தோசமா வச்சிப்பான்..?” என்ற அவரின் கேள்வியில் தாராவிற்கு வாய் மூடிவிட்டது.

உண்மை தானே..

எந்த பெற்றோரும் இதனை நினைப்பர் தானே…

தீபனின் சூழ்நிலை இன்று அவனுக்கே எதிரியாகிப்போனது, அவனின் எதிரிகளுக்கு அது சாதகமாகியும் போனது.

தீபன் அவன் வீட்டினில் பேசிடுவான் என்று அனுராகா காத்திருக்க, தீபனுக்கோ வீட்டிற்கே செல்ல முடியாத ஓர் சூழல் உருவாகிப்போனது. மத்திய மந்திரிகளில் மூவர், சக்ரவர்த்திக்கு நெருக்கமான ஆட்கள் குடும்ப சகிதமாய் அவர்கள் வீட்டினில்  வந்து தங்கிட, உஷாவிற்கு விருந்தோம்பல் செய்திடவே சரியாய் இருந்தது.

“ம்மா உன்னோட பேசணும்..” என்று அப்போதும் அவன் நின்றான் தான்.

“டேய் பாக்குற தானே.. வேலைக்காரங்க இருந்தாலும், நான் நின்னு செய்றது போல வருமா.. எப்போவேனா நம்ம பேசலாம்… இப்போ தொல்லை செய்யாத..” என்றுவிட்டார்.

“ம்மா..!!” என்று பல்லைக் கடிக்க, “என்ன ம்ம் இல்லை என்னன்னு கேட்கிறேன்.. நேத்து கிளம்பிப் போனவன் இப்போ வந்து நிக்கிற.. ஏன்டா நீ இப்படி செய்ற…” என,

“ம்மா நல்லா கேட்டுக்கோ.. ஆர்த்தியோட எனக்குக் கல்யாணம் அப்படிங்கிறது கனவுல கூட நடக்காது.. இதுக்குமேல ஏதாவது நீ பண்ணா நான் என்ன செய்வேனோ தெரியாது.. அப்புறம் அனு…” என்று சொல்ல வரும்போதே,

“இதோ இங்க இருக்கானே..” என்ற சக்ரவர்த்தியின் குரல் அவனை பேச்சினை நிறுத்த செய்து திரும்பிப் பார்க்க வைத்தது.

சக்ரவர்தியோடு மந்திரிகள் நிற்க “வாங்க அங்கிள்..” என்று மூவரையும் தனி தனியே வரவேற்க, பேச்சு அப்படியே தேர்தல் பக்கம் திரும்ப, தீபனுக்கு அப்போது தங்கள் விசயமாய் பேசிடவே முடியாத நிலை.

உஷாவோ ‘என்ன இவன் இப்படி சொல்கிறான்..’ என்று பார்க்க, தீபன் கிளம்புகையில் “தயவு செஞ்சு நீங்களா எதுவும் செய்யாதீங்க ப்ளீஸ்..” என்றுவிட்டுத்தான் போனான் மிதுனை தேடி.

மிதுன் வேண்டுமென்றே இவன் கண்களில் படவேயில்லை. எப்படியும் தீபன் தன்னை தேடி வருவான் என்பது அவனுக்குத் தெரியாதா என்ன??!

எத்தனை முறை அழைத்தும் அவனின் அழைப்பையும் அவன் ஏற்கவில்லை. எங்கிருக்கிறான் என்றும் தெரியவில்லை..  தீபனுக்கு பைத்தியம் பிடிக்காத குறைதான்.. வீட்டினில் இருக்கவே முடியவில்லை. மனது ஒரு நிலையில்லாமல் தவித்தது.

காதர் அழைத்துப் பேசினார்.. அடுத்தது என்ன செய்வது என்று..

“நீங்க நேரடியா இறங்க வேணாம். ஆனா வேற நம்பிக்கையான ஆள் வச்சு சேட் இப்போ எங்கன்னு பார்க்க சொல்லுங்க..” என்றான்..

இப்போதைக்கு அதைதானே செய்ய முடியும்..

மாலை வரைக்கும் நேரம் எப்படிப் போனது என்றே தெரியவில்லை. அனுராகா பார்ட்டிக்கு கிளம்பவேயில்லை.

லோகேஸ்வரனோ “எனக்குத் தெரியாது, இன்னும் ஒன் ஹவர்ல நீயும் அனுவும் அங்க வந்திடனும்..” என்றுவிட்டு லோகேஸ்வரன் கிளம்பிட, தாரா என்ன சொல்லியும் அவள் அசையவேயில்லை.

பின் தாரா என்ன நினைத்தாரோ “அனு, நீ இப்படி ரூம்ல அடைஞ்சு இருந்தா உன் கண்ணுக்கு எந்த வழியும் தெரியாது..” என, அம்மாவைத் திரும்பிப் பார்த்தாள்.

“ஆமா.. அங்க மிதுன் கூட நீ பேசலாம் இல்லையா.. உன்னோட விருப்பமின்மையை சொல்லலாம் இல்லையா??!! எப்படியும் தம்பி மேல அக்கறை இருக்கும்தானே..” என்று தாரா சொல்ல,

“ம்மா..!!” என்றாள் கண்கள் மின்ன.

“இங்கபார் அனு.. இப்பவும் எனக்கு தீபன் உனக்கு சரின்னு சொல்ல தோணலை.. ஆனா நீ இப்படி இருக்கிறது என்னால பார்க்க முடியலை. புரிஞ்சதா.. இப்படியே இருந்தா எந்த வாய்ப்பும் கிடைக்காது..” என்றுசொல்ல, அடுத்த பத்து நிமிடத்தில் அனுராகா தயாராகிவிட்டாள்.

அம்மாவின் சொல்கேட்டு தயாராகிவிட்டாளும், என்ன ஒப்பனை செய்தும் கூட அவள் முகத்தினில் ஜொலிப்பு என்பது துளியும் இல்லை..         

அங்கே சென்ற பிறகோ, பெயருக்காகவேனும் சிரிக்க வேண்டிய கட்டாயத்தில் அனுராகா இருக்க, அவளருகே நின்றிருந்த மிதுனோ அப்படியொரு பூரிப்பில் இருந்தான். தன்னைப்போல் ஒரு மிடுக்கு, ஒரு தோரணை அவனுக்கு வந்திட, லோகேஸ்வரன் அறிமுகம் செய்து வைத்தவர்களோடு பேசிக்கொண்டு இருக்க, நொடிக்கொரு முறை அனுராகா மீது தான் பாய்ந்தது அவனின் பார்வை.

அனுராகா, தீபனை வீழ்த்த அவனே எதிர்பாராது அவனுக்குக் கிடைத்த பெரிய துருப்புச் சீட்டு..

வெளி விசயத்தில் எத்தனை வீழ்ந்தாலும் தீபன் எழுந்திடுவான் என்று மிதுனுக்கு நன்குத் தெரியும்..

ஆனால் அவனின் மனது விரும்பிய ஒன்றில் அவன் வீழ்ந்தான் என்றால்??!! அதுவும் அவன் கண் முன்னேயே தன் அண்ணனோடு அவள் வாழ்கிறாள் என்றால்??!!!

கண்டிப்பாய் தீபன் இங்கே இருந்திட மாட்டான் என்பது திண்ணம். ஆக தீபன் என்ற ஒருவன் இனி இங்கே இருந்திட மாட்டான். அப்படிதான் மிதுன் நினைத்தான்.

அனுராகா தக்க சமயம் பார்த்து காத்திருக்க, அங்கே பார்ட்டி ஏரியாவில் இருந்த பாரிலோ பிரஷாந்த், தீபன் சக்ரவர்த்தி முன் அமர்ந்திருந்தான்.    

ஆம் தீபன் அங்குதான் இருந்தான்.. இங்கே எப்படியேனும் மிதுனைப் பிடித்து பேசிடவேண்டும் என்று வந்திருந்தான்.. அவனுக்குத் தெரியும் தானே எப்படியும் மாலை இங்கே மிதுன் இருப்பான் என்று..

தீபன் வந்தது லோகேஸ்வரனுக்கு அதிர்ச்சியாய் இருந்தது. அனுராகா அவனைக் காணும் முன்னே அவனை இங்கிருந்து அகற்றிட வேண்டும் என்றிருக்க, சரியாய் பிரஷாந்த் அவரின் கண்ணில் விழ,

“தீபன் எங்களோட சீப் கெஸ்ட்.. கூட இருந்து கவனிச்சுக்கோ..” என்று சொல்லி பாரினை காட்ட, அதற்கு முன்னேயே வேறொரு ஆளிடம், மிதுன் அவனை பாரில் காத்திருக்க சொன்னதாக சொல்லி அனுப்பிவிட்டார்.

ஆக, அனுராகா வருகையில், தீபன் பாரில் மிதுன் வருவான் என்று காத்திருக்க, மிதுன் வரவில்லை அவனிடம் பிரஷாந்த் தான் வந்தான்.. பிரஷாந்திற்கு இப்படியொரு சந்தர்ப்பம் தானே தேவையாய் இருந்தது.. அவனின் வஞ்சம் தீர்த்துக்கொள்ள..   

“ஹலோ..!! தீபன்…” என்று கரம் நீட்ட, அவனைப் பார்த்தவன் “ஹேய்.. யூ..” என,

“எஸ்… பார்ட்டிக்கு வந்துட்டு என்ன இங்க இருக்கீங்க??” என்றான் பிரஷாந்த்..

பிரஷாந்தை தீபனுக்கு பிடிக்காதுதான்.. ஆனாலும் இது அவனின் பிடித்தமின்மையை காட்டும் நேரமல்லவே.

“என்ன விஷயம்??!” என்று அவன் கேள்விக்கு பதில் சொல்லாது, பதில் கேள்வி கேட்க,

“அட சார் நீங்க.. பழசை எல்லாம் மறந்திடுங்க.. பீல் ப்ரீ..” என்ற பிரஷந்தோ “ஆனா எனக்கு செம ஷாக்..” என்றான் இன்ன விசயம் என்று சொல்லாது.

“என்னது??!!” என்று கண்களை இடுக்கி தீபன் கேட்கும்போதே, பேரர் மதுபானங்கள் கொணர்ந்திட, தீபன் “நோ..” சொல்ல,

“எடுத்துக்கோங்க சார்.. எல்லாமே பார்ட்டிக்காக அரேஜ் பண்ணதுதான்..” என்று பிரஷாந்த் சொல்ல, “ம்ம்ச்..” என்றவன் பெயருக்கு ஒரு கோப்பையை எடுத்துக் கொண்டான். ஆனால் பிரஷாந்த் இரண்டு பாட்டில்கள் எடுத்து வந்து மேஜையின் மீது வைத்தவன்

“ம்ம் இந்த பார்ட்டில நீங்க அனு கூட ஜோடியா நிப்பீங்கன்னு நினைச்சா இப்படி ஒரு ஷாக் கொடுத்துட்டீங்களே..” என,

“ஏய்…” என்றான் தீபன், இருக்கும் ஆத்திரத்தை அடக்கி.

“ஜஸ்ட் என்னோட மனசுல தோணினதை சொன்னேன்.. பட் அனுவும் இப்படி செய்திருக்கக் கூடாது..” என,

“அனு நேம் கூட உன்னோட வாய்ல இருந்து வரக்கூடாது..” என்று தீபன் விரல் நீட்டி அவனை மிரட்ட,

“ம்ம் நீங்க இவ்வளோ லவ் வச்சிருக்கீங்க.. பட் அனு அங்க பார்ட்டி என்ஜாய் பண்ணிட்டு இருக்காங்க..” என்று மீறி பிரஷாந்த் சொன்ன

“டேய் நான் என்ன சொல்லிட்டு இருக்கேன்.. நீ என்ன செஞ்சிட்டு இருக்க..” என்று தீபன் எழுந்தவன், இருக்கும் ஆத்திரத்தை எல்லாம் அவனிடம் காட்டுவது போல், அவன் சட்டையை கொத்தாய் பற்றிட, சடுதியில் அங்கே ஓர் சலசலப்பு..

“தீபன்.. சார்.. ப்ளீஸ்.. என்ன நீங்க….” என்று பிரஷாந்த் அவனைக் கெஞ்சுவது போல் பார்க்க,

“ஓடிடு.. இங்க இருந்த இந்த பாட்டிலை சொறுகிடுவேன்..” என,

“வேணாம் வேணாம்.. ப்ளீஸ்.. ப்ளீஸ் சார்.. உங்களைப் பார்த்து ஒரு உண்மை சொல்லனும்னு தான் வந்தேன்.. நீங்க நினைக்கிறது போல அ.. சாரி மேம்க்கு இந்த அரேஞ்மென்ட்ஸ் பிடிக்காம இல்லை.. அவங்க நினைச்சிருந்தா இப்போ இந்த செக்கன்ட் கூட உங்க அண்ணன் கிட்ட சொல்லிருக்க முடியும்… அதையும் மீறி…” என்றவன் பேச்சினை நிறுத்தி தீபனைப் பார்க்க,

அவனோ ‘நீ இன்னும்மா போகலை..’ என்று பார்க்க,

“ஏற்கனவே அனுராகா என்னோட லவ் அக்சப்ட் பண்றதா இருந்தாங்க.. டூ இயர்ஸ் நான் அவங்களை லவ் பண்ணேன்.. அவங்கப்பா கொடுத்த ப்ரஷர்ல தான் அவங்க என்னை தேடி வந்தப்போ நான் அவங்களை விட்டு போக வேண்டியதா இருந்தது.. அடுத்து அவங்களைப் பார்க்கிறப்போ உங்களோட இருந்தாங்க.. இப்போ என்னடான்னா உங்க அண்ணாவோட..” எனும்போதே, தீபன் அவனை ஓங்கி அறை விட்டிருந்தான்..

அடி விழும் என்று எதிர்பார்த்தே வந்திருப்பான் போல.. அடி வாங்கியும் தாங்கி நின்றவன்

“எல்லாமே உண்மைதான் சார்.. வேணும்னா இப்போவே இந்த செக்கன்ட்டே போய் அனுக்கிட்ட கேட்டுப் பாருங்க..” என்று தூண்டியவன் வந்த வேலை முடிந்தது என்று சென்றுவிட்டான்..

இது முற்றிலும் அவனுக்குப் புதியது அல்லவா..

அனுராகா, போயும் போயும் இந்த பிரஷாந்தின் காதலை ஏற்பதாய் இருந்தாளா??!!!

‘ச்சி ச்சி..’ என்று அவனின் தலை தானாய் ஆட, அனுராகா அவளின் அப்பாவினை எதிர்த்து, தன்னோடு இவனைப் பார்க்கத் தானே கிளம்பி வந்தாள் என்று தோன்ற, அந்த எதிர்ப்பை இப்போது ஏன் காட்டவில்லை என்றும் கேள்வி பிறந்தது.

D- வில்லேஜில் தன் கட்டுபாடுகளை எல்லாம் அவள் ஒவ்வொன்றாய் தகர்த்தது, கேவலம் இவனைக் காணவா??!!!

நினைத்துப் பார்க்கவே சகிக்கவில்லை அவனுக்கு..  

“ராகா..??!!!” என்று அவன் சிந்திக்க, எத்தனை குவளைகள் மதுபானம் உள்ளே போனதோ, அவனே அறியான்..

ஆகமொத்தம் அவன் அவனாய் இல்லை.. அனைத்தையும் இப்போதே அவளிடம்  கேட்டு அறிந்துகொள்ள வேண்டும் என்ற வெறி மட்டும் பிறந்தது.

மது.. மாது… இரண்டுமே ஒருவனை எளிதில் வீழ்த்திடும்.. தடம்புரள வைத்திடும்.. அப்படியிருக்கையில் இரண்டும் ஒரே நிலையில் இருக்குமாயின், தீபன் சக்ரவர்த்தி என்பவனுக்கு சுற்றி இருக்கும் அனைத்தும் மறைந்திட, தான் எப்படி பட்டவன் என்பதும் நினைவில் இருந்து மறைந்திட, தள்ளாடியபடி அனுராகாவை தேடி போனான்.

அங்கே அவளோ, யாருடனோ சிரித்துப் பேசுவது தெரிந்தது..

அவளின் நிலை இப்போது என்னவென்பது அவனுக்கு அப்போது சிந்திக்கும் நிலையில் இல்லை..

அவள் சிரிக்கிறாள்.. சந்தோசமாய் இருக்கிறாள்.. அருகில் மிதுன் இருக்கிறான்.. அப்.. அப்போது??!! நான்??!!

இதுமட்டுமே தீபனுள்..!!

உள்ளம் காந்த வேகமாய் அங்கே சென்றவன் “ஏய் ராகா…” என்று அவளின் கை பிடித்து இழுக்க, தீபன் இங்கே எப்போது வந்தான் என்ற அதிர்ச்சியில் அனு திகைக்க,

“என்னடி.. என்னை இங்க எதிர்பார்க்கலையா??!!” என்றான் குழறலாய்..

மிதுனோ “தீப்ஸ்… என்னடா..” என்று அவனைப் பிடிக்கப் போக,

“நோ…” என்று கைகள் உயர்த்தியவன், “சொல்லு டி நான் வருவேன்னு நினைக்கலையா??!!” என்றான் அவளின் கரத்தினை விடாது.

அதற்குள் அங்கே அனைவரும் என்னவென்று பார்க்க, லோகேஸ்வரன் வந்து “என்ன மிதுன் இதெல்லாம்..” என, தாராவோ “அனு நீ வா நம்ம கிளம்பலாம்..” என்றழைக்க,

தீபனோ “நோ..!!!” என்று சத்தமாய் கத்தினான்.

அனுராகாவிற்கோ, அங்கே அனைவரின் முன்னும் தீபன் இப்படி நடந்துகொள்வது அசிங்கமாய் இருக்க “என்ன தீப்ஸ் நீ இப்படி பண்ற??” என்றாள் அடிக்குரலில்..

“என்ன பண்ணிட்டேன்?? ம்ம் என்ன பண்ணிட்டேன்… உன்னோட பேசணும் வா..” என்று அவளை இழுக்க,

மிதுனோ “தீபன்.. சொல்றதை கேளு.. வீட்டுக்கு போ.. வந்து பேசிக்கலாம்..” என,

“டேய் அண்ணா.. நான் பேசுறதை மட்டும் எல்லாம் கேட்டா போதும்..” என்றவன் “நீ வா..” என்று அனுராகாவைப் பிடித்து இழுக்க, அனுவிற்கு கூட மனதில் ஒரு நிம்மதி வந்தது.

எது எப்படியோ தீபன் வந்துவிட்டான் என்று.

அந்த நிம்மதியில் “பேசலாம் தீப்ஸ்.. நீ முதல்ல ஸ்டெடியா நில்லு.. நான் கூட்டிட்டு போறேன் உன்னை..” என்று அவனோடு கிளம்பிட முயல,

“நீயும் வா..” என்றான் மிதுனைப் பார்த்து..

மிதுன் என்னவென்று புரியாது பார்ப்பது போல் பார்க்க “என்னடா பாக்குற.. இவளுக்கும் எனக்கும் என்னன்னு உனக்குத் தெரியுமா?? இவளுக்கும் பிரஷாந்துக்கும் என்னன்னு உனக்குத் தெரியுமா?? தெரியாதுல்ல.. எனக்கு இப்போதான் தெரியும்..” என்று தீபன் குடி மயக்கத்தில் வார்த்தைகளை விட,

“தீப்ஸ்..!!!” என்றாள் அனுராகா அதிர்ந்து..

அவன் – நெஞ்சம் நோகுதே..!!

அவள் – வஞ்சம் கூடுதே..!!

காதல் – அடேய்..!! சுகர் பேசன்ட்றா நானு..!!              

Advertisement