Advertisement

                          நான் இனி நீ – 23

சக்ரவர்த்தியின் இல்லம் விழாக்கோலம் பூண்டிருந்தது. அரசியல் வட்டாரத்து பெரிய மனிதர்கள், செல்வந்தர்கள், தொழில் அதிபர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள், புகழ்பெற்ற சினிமா நட்சத்திரங்கள் என்று ஒவ்வொருவராய் வந்து சென்றுகொண்டு இருக்க,

சக்ரவர்த்தியும், உஷாவும் தம்பதி சமேதராய் ஹோமத்தில் இருக்க, மிதுனும், தீபனும் தான் வந்தவர்களை வரவேற்றுக்கொண்டும், உபசரித்துக்கொண்டும் இருந்தனர்.

அண்ணன் தம்பி இருவரும் வெவ்வேறு நிறங்களில் ஒன்றுபோல் குர்தாவும், வேஷ்டியும் அணிந்திருக்க, சக்ரவர்த்திக்கு எப்போதும்போல் தன்னிரு பிள்ளைகளைக் கண்டு பெருமையே.

நேரம் செல்ல செல்ல, பூஜையும் முடிய, ஆட்கள் ஒவ்வொருவராய் வந்தபடியும், சக்ரவர்த்தியிடம் ஓரிரு வார்த்தைகள் பேசியபடியும் செல்ல, ஆர்த்தியின் குடும்பமும், அனுராகாவின் குடும்பமும் அங்கே வந்துவிட,

தீபன் அப்போது பார்த்து தேவ்வோடும், புனீத்தோடும் நின்று பேசியபடி இருக்க, ஆர்த்தி வந்தவள் நேராய் அவர்களோடு இணைந்துகொள்ள, அனுராகாவின் கண்கள் தீபனைத் தேடியபடிதான் இருந்தது உள்ளே வருகையில்.

தாராவிற்கோ ஒவ்வொரு நொடியும் என்னாகுமோ என்ற பதற்றம் இருந்துகொண்டே இருக்க, அனுராகாவைத் தான் பார்த்துகொண்டு இருந்தார். அவளின் பார்வையும், தேடலும் தாராவிற்கு ஒரு வருத்தம் நிஜமாகவே கொடுத்தது.

அவரைப் பொருத்தவரைக்கும் தீபன் தன் மகளுக்குப் பொருத்தமில்லை தான். இருந்தாலும் அதற்காக மிதுனுக்கு பேசவும் அவர் தயாராய் இல்லை. லோகேஸ்வரன் மகள் மனைவி இருவரையும் பார்த்தவர் “வாட் ஹேப்பன்???” எனும்போதே, மிதுன் வந்துவிட்டான்

“ஹாய் அங்கிள்.. வாங்க வாங்க..” என்று ஆர்ப்பாட்டமாய் ஒரு வரவேற்பு கொடுத்தபடி,

“ஹாய் மிதுன்..” என்று இவரும் சொல்ல, தாரா பெயருக்கு ஒரு புன்னகை சிந்த, அனுராகாவோ மிதுன் என்ற ஒருவன் அங்கிருக்கிறான் என்பதனையே கண்டுகொண்டாள் இல்லை.

தன் அலைபேசியில் தீபனுக்கு அழைக்க, லோகேஸ்வரன் “அனு..” என,

“ஹா..!! டாட்..” என்று நிமிர்ந்தவள், அங்கே மிதுன் இருப்பது கண்டு, “ஹாய்..” என்று சம்பிரதாயமாய் ஒற்றை வார்த்தை உதிர்த்துவிட்டு, மீண்டும் அலைபேசியில் பார்வை பதித்துவிட்டாள்.

இவர்கள் வந்த நேரம் ஹோமம் முடிந்திருக்க, சக்ரவர்த்தி உள்ளே மற்ற ஆட்களோடு பேசிக்கொண்டு இருக்க, உஷா இவர்களைப் பார்த்துவிட்டு நேரே இங்கே வந்திட,

அனுராகாவிற்கோ ‘எங்கே இவன்…’ என்று உள்ளமும் கண்களும் தீபனைத் தேடியது.

அவனோ வசமாய் ஆர்த்தியின் பெற்றோர்களிடம் மாட்டியிருக்க, அனுவின் அழைப்பு வரவுமே “எக்ஸ்கியூஸ் மீ..” என்றவன், சற்று தள்ளி வந்து

“வந்தாச்சா..” என,

அவளோ “எங்க இருக்க நீ??!!” என்றாள் பல்லைக் கடித்து.

மிதுன், உஷா, லோகேஸ்வரன் தாரா எல்லாம் ஒன்றாய் நின்றிருக்க, அனுராகா போன் பேசும் பாவனையில் அவளும் தள்ளி வந்துவிட்டாள்.

“இங்கதான் இருக்கேன் ராகா..” என்றவன், மாடியில் இருந்து இறங்கி வர, அனுராகாவின் பார்வை அவனைத் தாங்கித் தான் நின்றது.

தீபனின் பார்வையும் அவளில் ஆழ்ந்திட, அனுராகாவின் உள்ளக் குழப்பம் எல்லாம் அவனைக் கண்டு தீர்வது போலிருக்க, மெதுவாய் ஓர் புன்னகை செய்ய, அவனோ இறங்கி வந்தவன் வரவேற்பாய் அவளை அணைத்து விடுவித்து

“முகமே சரியில்லை.. நான் இருக்கேன் தானே.. சந்தோசமா இரு..” என,

“ம்ம்..” என்று தலையை மட்டும் ஆட்டிக்கொண்டாள்.    

ஆனாலும் அவளின் முகம் தெளியவில்லை. உடுத்தியிருக்கும் உடையோ, அணிந்திருக்கும் அணிகலனோ எதுவும்.. எதுவுமே அவளுக்கு பொழிவினை கொடுக்கவில்லை. மாறாக அனுராகாவின் கண்கள் ஒவ்வொரு நொடியும் தீபனின் முகம் பார்க்க,

“என்ன ராகா??!!” என்றான் கேள்வியாய்.

“என்னவோ தெரியலை தீப்ஸ்.. மனசு ஒரு நிம்மதியா இல்லை..” என,

“இப்போ என்ன உனக்கு?? நான் வீட்ல சொல்லனும்னு சொல்றியா இல்லை வேணாம்னு சொல்றியா??” என, சடுதியில் அவனின் முகமும் குரலும் மாறிப்போனது.

அவனுக்கு நாம் இத்தனை சொல்லியும் இப்போதும் குழப்பமாய் வந்து நிற்கிறாளே என்று இருக்க, அவளுக்கோ உள்ளுணர்வு எதுவோ நடந்திட போகிறது என்று சொல்லிக்கொண்டே இருந்தது.

இருவரும் மனதில் இருப்பதை வெளிப்படையாய் சொல்லாது ஆளுக்கொன்றாய் நினைத்தபடி இருக்க “சொல்லு ராகா…” என்றான் அழுத்தமாய்.

“எ.. என்ன தீப்ஸ்??!!” என,

“நான் வீட்ல பேசவா வேணாமா??!!” என்று அவனும் கேட்க,

“எ.. எனக்குத் தெரியலை.. ஆனா என்னவோ நடக்கப் போகுதுன்னு தோணுது..” என்று சொல்ல,

“என்ன நடக்கும்??!!” என்றான் அவளின் முகத்தினை கூர்மையாய் பார்த்து.

“தெரியலை..” என்றவளின் பதிலும் அழுத்தம் திருத்தமாய் இருக்க,

“ம்ம்ம் ஓகே..” என்றவனோ அமைதியாய் இருக்க,

“என்ன ஓகே..??!!” என்றாள் திரும்ப.

“நத்திங்..” என்றவன் “நீ என்னவோ மனசுல வச்சிட்டு இப்படி பீகேவ் பண்ற.. உனக்கு ஏன் என் மேல நம்பிக்கை வரலை அனுராகா..” எனும்போதே, அங்கே ஆர்த்தி வந்துவிட்டாள்.

“தீப்ஸ்.. நீ இங்க என்ன செய்ற..” என்றபடி,

“ஷ்…!!!” என்று தன் எரிச்சலை அடக்கியவன், “என்ன ஆர்த்தி..” என்றான்.

அவளோ “ஹூ இஸ் ஷி..??” என்று அனுராகாவினைப் பார்த்து கேட்க, அனுராகாவின் பார்வையோ யாரிவள் என்றுதான் கேட்டது அவனிடம்.

“திஸ் இஸ் ஆர்த்தி, அண்ட் திஸ் இஸ் அனுராகா..” என, பொதுப்படையாய் அறிமுகம் செய்து வைக்க, இரு பெண்களும் ஒருவரை பார்த்து ஒரு முறுவல்.

அவ்வளவே. அனுராகாவிற்கு அதற்குமேல் சிந்திக்கவெல்லாம் மனதில்லை. ஆனால் ஆர்த்தியோ அனுராகாவையும் தீபனையும் ஒரு ஆராய்ச்சி பார்வை பார்க்க,

தீபனோ ஆர்த்தியை நகட்டும் பொருட்டு “ஆர்த்தி, நீ அங்கிள் ஆன்ட்டி எல்லாம் ப்ரே பண்ணியாச்சா??!!” என,

அவளோ “எல்லாரும் ஒண்ணா குடும்பமா நின்னு ஆரத்தி எடுத்துக்கலாம்னு ஆன்ட்டி சொல்லிட்டாங்க தீப்ஸ்..” என்று அவளும் சொல்ல, தீபனுக்கோ எரிச்சலாய் இருந்தது.

அனுராகா ஒருபுறம் இப்படி இருப்பது, போதாது என்று இப்போது ஆர்த்தி வேறு வந்து நின்று பேச, கடுப்புடனே நின்றிருந்தான்.

மிதுனுக்கு இதனையெல்லாம் காண காண மனது கொதித்தது தான். ஆனால் சரியான நேரம் பார்த்து காத்திருந்தான். இன்னும் சில மணி துளிகள்.. இப்போது ஏதாவது பேசப்போக அனைத்தும் சொதப்பிவிட்டால் என்னாவது என்று இருக்க,

உஷாவிடம் “ம்மா நீங்க உள்ள கூட்டிட்டு போங்க.. நான் வந்திடுறேன்..” என்றவன், வேலை இருப்பது போல் நகர்ந்து சென்றுவிட்டான்.

உஷாவிற்கு அப்போதும் கூட தீபனுக்கும் அனுவிற்கும் இடையில் ஏதாவது இருக்கும் என்பதனை கணிக்கவே முடியவில்லை. காரணம், ஆர்த்தி வந்தபின்னும் கூட அவன் பேசிக்கொண்டு தானே இருந்தான்.

தீபனையும் ஆர்த்தியையும் பார்த்தவர், “ஆர்த்தி போய் உன் அப்பா அம்மாவை கூட்டிட்டு வா.. எல்லாம் ஆரத்தி எடுத்துக்கலாம்..” என,

“ஓகே ஆன்ட்டி..” என்று அவள் செல்ல,

அனுவிடம் வந்தவரோ “அனும்மா எப்படி இருக்க??” என்று விசாரிக்க, முன்னே எப்படியோ, இப்போது அவள் விரும்பும் தீபனின் அம்மா அல்லவா, முயன்று ஒரு சிரிப்பை வரவழைத்து “ஐம் குட் ஆன்ட்டி..” என்றவள், அப்போதும் தீபனோடு இணைந்தே நிற்க,

“வாங்க எல்லாம் போய் ஒண்ணா நின்னு சாமி கும்பிட்டுக்கலாம்..” என்று அனுராகாவின் பெற்றோரையும் அழைத்துச் சென்றார்.

அனுராகா அமைதியாகவே தான் இருந்தாள். அவளுக்கு எதுவும் பேசிடத் தோன்றவில்லை.

தீபனோ அவளின் அமைதியை, விருப்பமின்மை என்று எடுத்துகொள்ள, அவனுக்கு ‘என் மீது இவளுக்கு நம்பிக்கை இல்லையா??!!’ என்ற கேள்வி பிறக்க, கூடவே சேர்ந்து ஒரு கோபமும் பிறந்தது.

பெண் என்பவளின் பாவனைகளுக்கு தாமாக ஓர் அர்த்தம் எடுத்துக்கொண்டால் அதற்கு அவள் பதில் சொல்லிட வேண்டும் என்று எந்த நியாயமும் இல்லையே??!!

அவள் மனதில் என்ன இருக்கிறது என்பது அவள் மட்டுமே அறிவாள்.. சில நேரங்களில் நம்பிக்கைகள் எல்லாம் தாண்டி சூழ்நிலை கொணர்ந்து நிறுத்தும் நிலையில் நாம் அனைவருமே பொம்மைகளே..

அந்த அந்த நேரத்து நிகழ்வுகள் தானே நம் முடிவுகளை தீர்மானிக்கிறது..!!

சக்ரவர்த்தி, உஷா தம்பதியினர் தம் இரு பிள்ளைகளோடும், ஆர்த்தி அவளின் குடும்பத்தினரோடும், அனுராகா அவளின் குடும்பத்தினரோடும் அனைவரும் ஒன்றாய் நின்று, ஹோமத்தில் வைத்திருந்த கும்பத்தை வணங்கி ஆரத்தி எடுத்துக்கொள்ள, உஷாவிற்கு பெரும் நிம்மதியாய் இருந்தது.

தான் எடுத்த முடிவு சரிதான் என்று அவர் இருக்க, பெரியவர்கள் அனைவாரும் சற்று உள்ளே தள்ளியிருந்த ஒரு பெரிய அறையினில் அமர்ந்து பேசிக்கொண்டு இருக்க,

தீபன், மிதுன் வந்தவர்களை கவனிக்கச் சென்றிட, அனுராகா புனீத் தேவ்வோடு இருந்தாள்.

மிதுன் வழக்கம் போல எதிலும் பட்டும் படாமல் இருப்பது போலிருக்க, தீபனோ அனுராகாவின் மீதிருக்கும் கோபத்தினை யார் மீது காட்டுவது என தெரியாமல் இருக்க, ஆர்த்தியோ நொடியும் அவனை விட்டு நகர்ந்தாள் இல்லை.

“ம்ம்ச்.. ஆர்த்தி.. ஏன் இப்படி பீகேவ் பண்ற நீ..” என்று எரிந்துகூட விழுந்தான்.

“உங்க வீட்டுக்கு வர்றளை இப்படித்தான் ட்ரீட் பண்றதா…” என்று பதிலுக்கு அவளும் கேட்க, தீபனின் பார்வை சற்று தள்ளி இருந்த அனுராகாவைத் தான் தொட்டது.

‘ஒருத்தி இப்படி பின்னாடியே சுத்திட்டு இருக்கா, இவ எனக்கென்னவோன்னு போய் உக்காந்திருக்கா… இதுல நான் அம்மாக்கிட்ட வேற சொல்லிருக்கேன்..’ என்றெண்ணும் போதே,

“தம்பி அம்மா உங்கக்கிட்ட பேசணும் சொல்றாங்க..” என்று வந்து வேலையால் அலைபேசியை நீட்ட,

“ஹலோ மா..” என்றான் யோசனையாய்.

“என்னடா என்னவோ சொன்ன நீ அன்னிக்கு?? இப்போ என்ன அமைதியா இருக்க..” என்று உஷா கேட்க,

“ம்மா.. ஒரு டென் மினிட்ஸ் வந்திடுறேன்.. கண்டிப்பா உங்க மருமகளை இன்ட்ரோ கொடுப்பேன்.. ஆனா அதுக்கப்புறம் நீ அது இதுன்னு சொல்லாம இருக்கணும்..” என்றான் மிதுன், அனுராகா விஷயத்தை மனதில் வைத்து.

“நான் ஏன்டா எதுவும் சொல்லப் போறேன்.. கொஞ்சம் சீக்கிரம் வா..” என்று வைத்துவிட, தீபன் அனுவை அழைத்துக்கொண்டு செல்வோம் என்று அவளை நோக்கிப் போனான்.

நடப்பது அனைத்தையும் தள்ளி நின்று கவனித்துக்கொண்டு இருந்த மிதுனோ, இரண்டொரு நொடி கழித்து ஆர்த்தியை அழைத்தவன் “ஆர்த்தி, அப்பா தீபனை கூப்பிடுறார்னு சொல்லிட முடியுமா ப்ளீஸ்.. கமிஷ்னர் கிளம்பிட்டாரு.. நான் போய் சென்ட் ஆப் பண்ணிட்டு வரணும்..” என,

“அதுக்கென்ன ண்ணா.. நான் அவனை கூட்டிட்டே போறேன்..” என்று அவளும் சந்தோசமாய் தீபனிடம் போய்

“அங்கிள் உன்னை வரச் சொல்றார் தீப்ஸ்..” என,

“நான் வர்றேன் நீ போ..” என்றான்.

“ம்ம்ச் உடனே வர சொல்றார் தீப்ஸ்..” என்றவள், அவனின் கரம் பிடித்து இழுக்காத குறையாய் இழுத்துக்கொண்டு செல்ல, அவனோ அனுராகாவை திரும்பிப் பார்க்க, அவளோ அப்போதும் எனக்கென்ன என்றுதான் இருந்தாள்,

‘என்ன இவ…’ என்று பார்த்தவனுக்கு உள்ளூர ஒரு கசப்பு தோன்றியது நிஜமே. 

ஆர்த்தி தீபனை அழைத்துக்கொண்டு சென்ற அடுத்த இரண்டாவது நிமிடத்தில் மிதுன் அங்கே வந்தவன் “அனுராகா, லோகேஸ்வரன் அங்கிள் உன்னை வர சொல்றார்..” என,

“ஆ..!!” என்று நிமிர்ந்தவள், “எ.. எங்க இருக்காங்க..” என்றாள்.

“இப்படியே உள்ள போனா ரைட் டேர்ன் பண்ணி நேரா போனா ஒரு ரூம் வரும்..” என, அவளோ புரியாது பார்க்க,

“ஓ!! சாரி.. எங்க வீடு உனக்கு பழக்கமில்லை இல்லையா..” என்றவன் “வா என்னோட..” என்று அழைத்துச் சென்றான்.          

தீபனின் கரம் பிடித்து ஆர்த்தி நிற்க, அடுத்து மிதுனோடு அனுராகா அங்கே அந்த அறையினுள் நுழைய, அங்கிருந்த பெரியவர்களில் உஷாவிற்குத்தான் சந்தோசம் பிடிபடவில்லை..

‘பார்த்தீங்களா??!!’ என்று சக்ரவர்த்தியைப் பார்க்க, தாராவோ தன் மகளை குழப்பமாய் பார்க்க,

அனுராகா “டாட் வர சொன்னீங்களா..” என, தீபனோ “அப்பா வர சொன்னீங்களா..” என்றும் கேட்க,

“நான்தான் உன்னை அப்போவே கூப்பிட்டேனே..” என்றார் உஷா.

“ம்மா..” என்று தீபன் எதுவோ சொல்ல வர,  “அப்பா அம்மா சொன்னது உண்மையாகிடுச்சா??!!” என்றான் சிரித்தபடி மிதுன் சக்ரவர்த்தி.

தீபனுக்கும், அனுராகாவிற்கும் என்னவென்பது சிறிதும் புரியவில்லை என்றாலும், அனுராகாவோ தன் அப்பா முகம் பார்க்க,  தீபனோ “என்னம்மா??!!” என்றான் திரும்பவும் உஷாவிடமே..

ஆர்த்தியோ “தீப்ஸ்… ஆன்ட்டிக்கு நம்ம விஷயம் தெரியும்..” என்று மெதுவாய் சொல்ல,

‘என்ன விஷயம்??!!’ என்பதுபோல் அனுராகா இம்முறை தீபனைப் பார்த்தாள்.

தீபனுக்கு எதுவும் சுத்தமாய் விளங்கிடவில்லை. என்ன நடக்கிறது இங்கே??!! எதுவும் புரியவில்லை. அப்படியொரு பாவனை தான் அவன் முகத்தினில் இருந்தது.

ஆர்த்தியை புரியாமல் தீபன் பார்க்க, மிதுனோ “டேய் தீப்ஸ்… என்கிட்டே கூட நீ சொல்லலை பார்த்தியா.. ஆர்த்தி தான் நீ லவ் பண்ற பொண்ணுன்னு..” என்று சொல்ல, அனுராகா, தீபனோடு சேர்ந்து தாராவிற்கும் அதிர்ச்சி.

மகள் முகத்தினை அதிர்ந்து பார்க்க, அனுராகாவோ தீபனை புரியாது பார்த்தாள்.

தீபனோ “அப்படின்னு யார் சொன்னா??!!” எனும்போதே,

லோகேஸ்வரன் “சோ ஒரே மேடையில ரெண்டு கல்யாணமா..??” என, சக்ரவர்த்தியும் உஷாவும் “அப்படி பண்ணிட்டா சந்தோசம் தானே..” என்றனர் ஒருசேர,

தீபனுக்கோ என்ன முட்டாள்தனம் செய்கிறார்கள் என்று இருந்தது. அனுராகாவோ தான் நினைத்தது போல் எதுவோ நடக்கப் போகிறது என்று நினைத்தவள்

“டாட், நான் உங்களோட பேசியே ஆகணும்..” என,

“அதுக்கு முன்னாடி அப்பா உனக்கு ஒரு சர்ப்ரைஸ் வச்சிருக்கேன் அனு..” என்றவர், மிதுன் முகத்தினை பார்த்து முறுவலித்து, “இதோ…. மிதுன் சக்ரவர்த்தி.. உனக்காக நான் பார்த்திருக்க மாப்பிள்ளை..” என, அனுராகா அப்படியே ஸ்தம்பித்துப் போனாள்.

தீபனின் நிலையை சொல்லிடவும் வேண்டுமா??!!!

அனுராகா திகைத்துப் பார்த்தவள், மெதுவாய் பார்வையை திருப்பி தீபனைப் பார்க்க, அவனோ அவள் அடுத்து என்ன செய்திடப் போகிறாளோ என்று பார்த்தவன் ‘எதுவும் பேசாதே..’ என்று தலையை மறுப்பாய் ஆட்டினான்.

அது அவளுக்கு இன்னமும் வலி தர, “ம்மா…” என்றாள் தாராவைப் பார்த்து,

அவரோ என்ன சொல்வது, இல்லை என்ன செய்வது என்று தெரியாது அவளைப் பார்க்க, மீண்டும் அவளின் பார்வை தீபனைத் தான் சென்றடைந்தது. ‘ஏதாவது செய்..’ என்பதுபோல்.

அவனோ சுற்றி இத்தனை பேர் இருக்கையில், இப்போது இவைகளை மறுத்துப் பேசினால் கண்டிப்பாய் அது பார்ப்பவர்களுக்கு பிரச்னை என்று வெளிக்காட்டி, இன்னும் விரும்பாத நிகழ்வுகள் நடந்திடும் என்று யோசித்தவன்

“ம்மா வீட்ல இத்தனை பேர் வச்சிட்டு இப்போவே இதெல்லாம் பேசணுமா??!!” என்றான் உஷாவினைப் பார்த்து.

“நல்ல நாள்டா இன்னிக்கு.. அதான் இன்னிக்கு ஆரம்பிச்சுட்டா நல்லதுதானே..” என்கையில், சரியாய் நாகாவிடம் இருந்து தீபனுக்கு அழைப்பு வந்துவிட்டது.

“ஷர்மா இங்க இல்லை..” என்று அவன் சொல்ல,

“என்னது??!!” என்று தீபனின் குரல் அவனையும் அறியாது உயர்ந்திட, அனைவரும் அவன் முகம் பார்க்க,  சட்டென்று சுதாரித்தவன்,

“எப்படி என்னாச்சு??!!” என்று விசாரிக்க,

“நீங்க இங்க வந்தா கொஞ்சம் நல்லது..” என்று நாகாவும் சொல்ல,

“இப்போவா??!!” என்றவனோ, அனுராகவைப் பார்த்தான். அவள் அவனைத் தவிர வேறு யாரையும் பார்த்தாள் இல்லை. அவளின் பார்வை வெறித்து நிலைப் பெற்று நின்றிருந்தது அவனிடம்.

அவளின் நிலை அறிந்து, இப்போது செல்வது உசிதமில்லை என்பது அவனுக்குத் தெரியும்.. இருந்தாலும்..!!!

“எஸ்.. நீங்க வந்துட்டா நல்லது..” என்று நாகா சொல்கையில் தீபனுக்கு வேறெதுவும் யோசிக்கவும் முடியவில்லை.

“ஓகே..” என்றவன், சக்ரவர்த்தியிடமும் உஷாவிடமும் “கொஞ்சம் இம்பார்ட்டன்.. நான் போயித்தான் ஆகணும்.. ப்ளீஸ்ப்பா அண்ட் ம்மா.. நான் வர்ற வரைக்கும் எந்த முடிவுக்கும் வர வேண்டாம்..” என்று சொல்லிவிட்டுப் போக,  

அவர்களோ அவன் ஆர்த்தி விசயமாய் தான் சொல்கிறான் என்று எண்ணினார்.

மிதுனுக்கு சந்தோசம் தாங்கவில்லை.. இத்தனை நாள் இல்லாது இப்போது ஒவ்வொன்றாய் அவன் எண்ணியது போல் அப்படியே நடந்திட, இப்படியொரு நாளைத்தானே நான் எதிர்பார்த்தேன் என்று ஆனந்த கூத்தாடியது அவனுள்ளம்..

தீபன் அங்கில்லை..

அனுராகா செய்வது அறியாது நின்றிருக்க, மிதுன் எதுவுமே தெரியாதது போல் வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருந்தான்.

ஒரே நேரத்தில் இரண்டு பிள்ளைகளுக்கும் திருமணம் என்கையில் எந்த பெற்றவர்களுக்குத் தான் சந்தோசம் இருக்காது. அப்படியொரு பூரிப்பு தான் சக்ரவர்த்தி, உஷா தம்பதியினர் முகத்தினில்.

சக்ரவர்த்தி “இப்போ உறுதி செஞ்சுடலாம்.. எலக்சன் முடியவும் கல்யாணம் வச்சுக்கலாம்..” என,

லோகேஸ்வரன் “நாளைக்கு எங்க ஆபிஸ் பார்ட்டி, நான் லீகலா என்னோட மருமகன் மிதுன்னு எல்லாருக்கும் இன்ட்ரோ கொடுக்கணும்..” என,

“அதுக்கென்ன தாராளமா செய்ங்க..” என்றார் அவரும்..

அனுராகாவோ ‘என்ன இதெல்லாம்..’ என்று தாராவைப் பார்க்க, அவரோ ‘இப்போ எதுவும் பேசாதே..’ என்று மகளை அடக்கினார்.

ஆர்த்தியின் பெற்றவர்களோ “அப்போ.. தீபன் வரவும் மத்தது பேசிக்கலாம் இல்லையா..” என,

உஷாவோ “கண்டிப்பா அதுக்கென்ன.. நாங்களே முறைப்படி உங்க வீட்டுக்கு வருவோம்…” என்றுசொல்ல,

அனுராகாவின் மனதில் ‘இப்படியொரு நிலைல என்ன விட்டுப் போய்ட்டான்..’ என்று தீபன் மீது அப்படியொரு காந்தல் விளைந்தது.  

‘அப்.. அப்போ.. நான் அவனுக்கு முக்கியமே இல்லையா??!!’ என்று தோன்ற, “தீப்ஸ்…” என்று அவளின் இதழ்கள் சத்தமில்லாது உச்சரிக்க, கண்களோ ஆவேசமாய் சிவந்து நின்றது.   

Advertisement