Advertisement

                           நான் இனி நீ – 22

அனுராகாவிற்கு எப்படி அப்படியொரு கோபம் வந்தது என்று அவளுக்கே தெரியவில்லை. ஆனால் கோபம் தாண்டி தீபனை அந்த நொடி கொன்றுவிடும் ஆத்திரம் தான் வந்தது அவளுக்கு.

அவனைத் தேடி, அதுவும் இந்த நேரத்தில் வந்திருக்கிறாள்  அவன் என்னடாவென்றால் ‘ம்ம்ச்.. ரொம்பத்தான் என்மேல லவ் இருக்கிறது போல…’ என்று  சலிப்பாய் சொல்ல, ஆத்திரம் தலைக்கேறிவிட்டது.

காரணம்.. அனுராகா இதுநாள் வரைக்கும் யாருக்காகவும் இறங்கி வந்ததேயில்லை. அவளின் அப்பா அம்மாவிற்காக கூட… அப்படியிருக்க, தீபன் சக்ரவர்த்தியின் மீதுகொண்ட நேசத்திற்காக அவள் இத்தனை தூரம் வந்திருக்க அவனோ இப்படிச் சொல்ல, கழுத்தை நெரித்துவிட்டாள்.

“ஏய் ஏய் ராகா…” என்று தீபன் அவளின் கரம் பற்ற,

“என்ன சொன்ன நீ..?? என்ன சொன்ன நீ?? அப்போ நீ என்னோட லவ் பீல் பண்ணவே இல்லையா??? லவ் இல்லாமத்தான் இவ்வளோ தூரம் வந்தேனா??!!” என்று கேட்டுக்கொண்டே அவள், அவனின் தலை முடியை பிடித்து உலுக்க, அவளையும் அறியாது ஒரு வேகத்தில் அவன் மீது எறியும் அமர்ந்திருக்க, 

“ஏய் விடு டி.. என்ன பண்ற நீ??? கல்யாணத்துக்கு அப்போ நான் சொட்டை தலையா இருந்தா பரவாயில்லையா..” என்று அவன் சிரித்தபடி அவளின் கோபத்தினை ஏந்திக்கொள்ள, அவனின் கரமோ அவளை இடையோடு இறுகப் பற்றிக்கொண்டது.

“ம்ம் முழுசா மொட்டை தலையா இருன்னு அப்படியே செஞ்சிடுவேன்..” என்றவளுக்கு இன்னமும் கோபம். மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க, “எப்படி நீ அப்படி சொல்லலாம்??!!” என,

“ராகா.. நான் ஒன்னு சொல்லவா??!!” என்றவனின் குரலே மாறிப்போக,

“என்ன??!!” என்றாள் கடுப்பாக.

அவனின் மீது ஏறி அமர்ந்திருக்கிறோம், அவன் தன்னை அனைத்திருக்கிறான், வெகு நெருக்கத்தில் இருக்கிறோம் என்பதெல்லாம் அந்த நேரத்தில் அவள் உணரவில்லை. விட்டால் இன்னும் அவனை அடித்திருப்பாளோ என்னவோ??!!

அப்படித்தான் இருந்தது அவளின் மனநிலை.

தீபனுக்கோ அனுராகாவின் இவ்வித செயல்கள் எல்லாம் அவனை வேறுவித  மாற்றங்களுக்கு ஆளாக்க பார்வையோ அவளின் மீதே மேய,

“என்னடா சொல்லித் தொலை..” என்றாள், இவளும்..

“இல்ல.. டைட்டனோட வெய்ட் இப்போதான் புரியுது..” என்று சொல்லி ஒரு மார்க்கமாய் சிரிக்க, அவன் என்ன சொல்கிறான் என்று பார்த்தவளோ, அதன் பின்னே தான் உணர்ந்தாள்  தான் எப்படி இருக்கிறோம் என்று..

“ச்சி ச்சி ராஸ்கல்…” என்றவள் நகரப் போக,

“நீதான் டி ராட்சசி…” என்றவனோ அவளை இறுக கட்டிக்கொள்ள,

“விடுடா நீ.. போன் பண்ணா எடுக்கமாட்ட.. பேசமாட்ட. அவாய்ட் பண்ணுவ நீ.. இப்போ என்ன??” என்று அவள் திமிர,

“பேபி, சத்தியமா நீ ரொம்ப சோதிக்கிற…” என்றான் அவளின் அசைவுகளை சொல்லி.

“ச்சி ச்சி…” என்று அவளோ அவனின் தோளில் அடிக்க,

“ராகா…” என்றவனின் ஆழ்ந்த அழைப்பும், அணைப்பும், பார்வையும் அவளை அமைதியடையச் செய்ய,  இருவருக்கும் அந்த நேரம் அவர்களின் பிணக்குகள் கூட மறந்துபோனது.

அவளின் கேசம், அவன் முகம் நிறைத்திருக்க, அவனின் நெற்றியோடு முட்டித்தான் அமர்ந்திருந்தாள், அப்படித்தான் அவனும் அவளை அமரச் செய்திருக்க, தீபனோ, கார் சீட்டினை மேலும் பின்னே தள்ளிட, அனுராகா மொத்தமாய் அவன்மீது சாய்ந்த நிலை. 

“தீப்ஸ்…” என்றாள் மெதுவாய்.

அவளுக்கே அவள் குரல் கேட்கவில்லை. அவனோடு பேசவேண்டும் என்று வந்தவளுக்கு, என்ன பேசவந்தோம் என்று மறந்துவிட, அவனின் பெயர் மட்டுமே உச்சரிக்க முடிந்தது.

“சொல்லு ராகா..” என்றவனோ அவள் கழுத்து மச்சத்தினை இதழ்களால் தேட, தன்னைப்போல் அவளின் உடலில் ஒரு கூச்சம் பரவ, அதை அவனாலும் உணர முடிந்தது..

“தீப்ஸ்…” என்று திரும்ப அழைக்க,

“ம்ம்..” என்றவனோ அவனின் பிரத்தேயக வேம்பயர் முத்தம் கொடுக்க, அனுராகாவோ இன்னும் இன்னும் அவனின்பால் உருக்கிக்கொண்டு இருந்தாள்.

“உன் முன்னாடி வெஸ்பர் எல்லாம் எம்மாத்திரம்…” என்று அவளின் காதில் தீபன் சொல்ல,

“எம்மாத்திரம்…??!!” என்றாள் கேள்வியாய்.

“சொல்லித்தான் காட்டணுமா???” என்றவனின் தொனியும் சரி, தோரணையும் சரி அப்படியே மாறிப் போகிட, அனுராகா அவனின் முகம் பார்த்தவளோ,

“நீ ஏன் என்னை அவாய்ட் பண்ண??!!” என,

“ம்ம்ச் இப்போ இது தேவையா??” என்றவன், “நீ என்னை தேடி வந்தது எனக்கு எப்படி ஒரு பீல் கொடுக்குது தெரியுமா???” என்றவனோ தன் இரு கரம் கொண்டு இன்னமும் இறுக அணைத்து, முத்தமிட தொடங்க, அனுராகாவிற்கு விலகவும் முடியவில்லை, விலகாமல் இருக்கவும் முடியவில்லை..

முத்தமிட்டவன், அவளிடம் இருந்து வாங்காதும் விடவில்லை, அவளும் கொடுக்காது விடவில்லை. இருவரின் நிலையும் அனைத்தும் மறந்துகொண்டு இருக்க, சட்டென்று கடந்து சென்ற ஒரு காரின் சப்தம்தான் இருவரையும் மீட்டு எடுத்தது.

அப்போதும் இடைவெளி அதிகமில்லை, இருந்தும் அந்த மாயை விடுபட,  காரினுள்ளா  இப்படி என்றாகிப்போனது இருவருக்கும். வேண்டுமென்றே எதுவும் செய்யவில்லை. தன்னால் ஆனது..  பேசவேண்டும் என்று வந்தவளும் பேசவில்லை. பேசாமல் இருந்தவனும் இப்போது பேசவில்லை.

மாறாக இருவர் மனதிலும் ஒரு அமைதியும் நிம்மதியும்..

அந்த நள்ளிரவு நேர அமைதியையும் தாண்டி இருவரின் அருகாமையும் மற்றவர்க்கு கொடுத்த அமைதி சொல்லில் வடிக்க இயலாது.. தீபன் கண்கள் மூடி அப்படியே சாய்ந்திருக்க, அவனின் மீது சாய்ந்திருந்த அனுராகாவும் மௌனத்தை குத்தகைக்கு எடுத்துக்கொண்டாள். காரினுள் மெல்லிய பாட்டுச் சத்தம். அது இப்போதுதான் அவர்களின் செவிகளுக்கே எட்டியது.

இத்தனை நேரம் பாடல் ஒன்று ஒலித்துக்கொண்டு இருந்ததா என்றே இருவரும் அறியிலார்.

“ஒரு பொழுது ஓர் ஆசை.. சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்..

ஒரே வீணை ஒரே ராகம்….”

என்ற வரிகள் கசிந்துகொண்டு இருக்க, இருவரின் மனதுள் அவ்வரிகளில் லயித்து, பின் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள, தீபன் மேலும் அனுராகாவை இறுக அணைத்துக்கொண்டான்.

“தீப்ஸ்…” என்று அவனின் நெஞ்சை வருடியவளோ, நிமிர்ந்து முகம் பார்க்க, மெல்லிய வெளிச்சத்தில் அவன் முகத்தில் தெரிந்த ஓர் அமைதி அவளை பார்த்துக்கொண்டே இருக்கச் செய்ய,

“ம்ம் சொல்லு ராகா..” என்றான் கொஞ்சம் தன்னை நிதானம் செய்து.

“இப்போவாது நான் பேசுறத கேட்கிற மைன்ட் செட்ல இருக்கியா நீ..” என,

அவள் முகத்தினை தன் முகத்தருகே இழுத்து, அவள் கண்களில் என்ன தேடினானோ தெரியவில்லை. ஆனாலும் அந்த பார்வை அவனின் தேடலை உணர்த்த, “என்ன தீப்ஸ்..” என,

“இப்போ இவ்வளோ பேசற நீ.. அன்னிக்கு ஏன் அவ்வளோ தயங்கின.. நான் வீட்ல பேச போறேன்னு சொன்னப்போ..” என்று இவனும் கேட்க,

தன் முகத்தினைப் பற்றியிருந்த அவனின் கரங்களை விலக்கியவள், அவனை விட்டும் விலகி அமர்ந்து, “சோ இதான் ரீசன்ல..” என்றாள் பார்வையையும் அவன் புறமிருந்து விலக்கி.

அது தீபனுக்கு புரிந்ததுவோ என்னவோ “என்னைப் பார்த்து பேசு..” என,

“உன்னைப் பார்க்கனும்னு.. உன்னோட பேசணும்னு தான் வந்தேன்.. பட் நீ… என்னை புரிஞ்சு வைச்சது இவ்வளோதான் இல்லையா??” என்றவளோ கைகளை உயர்த்தி,

“நீ என்னையே புரிஞ்சுக்காதப்போ நான் சொல்ற விசயம் மட்டும் புரியும்னு எனக்குத் தோணலை தீப்ஸ்..” என்றுவிட்டாள், இதற்குமேல் தான் எதுவும் பேசப்போவது இல்லை என்பதுபோல்..

“ஓ..!!!” என்றவன் “அப்போ நம்மளும் இங்க இருந்து கிளம்பப் போறது இல்லை..” என்று அவனும் சொல்ல,

“எஸ்.. நானா தேடி வந்தப்புறம் உனக்கு இவ்வளோ பிடிவாதம் பேசுன்னு. அன்னிக்கு நான் என்ன சொல்ல வர்றேன்னு கூட கேட்கலை..” என்று அன்றைய சண்டையை அனுராகா இப்போது ஆரம்பிக்க, அவளின் மனதோ ‘அனு இப்போ இதெல்லாம் முக்கியமில்லை, உன் அம்மா சொன்னதை சொல்லிடு.. அதுதான் முக்கியம்…’ என்று உணர்த்த,

“ஓகே.. நான் சொல்லிடுறேன்.. தென் உன்னோட விருப்பம்..” என்றவள், தாரா சொல்லியதைச் சொல்ல,

அப்போதும் அவன் “ஓ!!!” என்றுமட்டும் தான் சொன்னானே தவிர வேறெதுவும் சொல்லவில்லை.

ஆனால் அவன் என்னவோ சிந்திக்கிறான் என்பது அவன் முகம் பார்த்தே தெரிய, அனுராகாவும் அமைதியாகவே இருந்தாள்.

இரண்டொரு நமிடம் கடந்திருக்கும் “சொல்லு ராகா.. நம்ம எங்க செட்டில் ஆகலாம்.. இங்கயா இல்ல எங்க சொல்றியோ அங்க.. எதுவா இருந்தாலும் எனக்கு ஓகே..” என்று தீபன் சொல்ல,

“என்னது??!!!” என்றாள் புரியாது..

“எஸ்.. வாழ்ந்து பார்த்திடலாம்.. உங்க அம்மா சொன்னாங்கதானே.. என்னால எப்போ உன் முகத்துல சந்தோசம் வருதோ அப்போதான் கல்யாணம் அப்படி இப்படின்னு.. அப்போ நம்ம ஒண்ணா வாழ்ந்துப் பார்த்தா தானே என்னால நீ ஹேப்பியா இருக்கியா இல்லையான்னு தெரியும்… ஐம் ரெடி.. மேரேஜ் பத்தி எல்லாம் எனக்கு அவசரம் இல்லை..” என்று அவன் இரு கைகளையும் விரித்து வெகு இயல்பாய் சொல்ல,

அவன் பேச பேச அனுராகாவின் கண்கள் அப்படியே விரிந்தது.

ஆச்சர்யம்.. அதிர்ச்சி.. ஆனந்தம்.. ஆவல்.. இது எல்லாமே அவள் முகத்தினில் தெரிய

“என்ன டைட்டன்.. ஆர் யூ ரெடி..” என,

“ராஸ்கல்…” என்று சொல்லி, அவனின் தோளில் அடித்தவளுக்கு, அவளையும் மீறிய ஒரு முறுவல்.

எங்கே எகிறப் போகிறானோ என்று எண்ணியிருந்தவள், அவனின் இப்பதிலை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை..

“ஹேய்.. என்ன ??!! நான் நிஜமாத்தான் சொல்றேன்.. உங்க அம்மா சொன்னது போல நடக்கனும்னா இது ஒன்னு தான் வழி..” என,

“போதும் தீப்ஸ்…” என்றாள் சலுகையாய்.

“ட்ரூ ராகா…”

“ம்ம்ச் நான் எவ்வளோ சீரியஸா சொல்லிட்டிருக்கேன்..” என்றவளின் முகத்தினில் கலவரம் இல்லை.

மாறாகா ஒரு தைரியம் இருந்தது..

அம்மாவாகினும் சரி.. அப்பாவாகினும் சரி.. யார் என்ன சொன்னாலும் அனைவரையும் சரி செய்து தீபன் கரம் பிடிப்பேன் என்ற தைரியம்.

அதே தைரியத்தில் “ம்ம் விடு.. நான் பார்த்துக்கிறேன்.. அம்மா அப்படி சொல்றப்போ சடனா ஒரு டென்சன்.. அப்படியே உன்னைப் பார்க்க கிளம்பி வந்துட்டேன்.. பட் இப்போ ஐம் ஆல்ரைட்..” என,

“ம்ம் இதை போய் அப்படியே சொல்லு.. உங்களோட பேசினது டென்சன் ஆச்சு.. பட் அவனோட இருந்தது எனக்கு தைரியம் கொடுத்ததுன்னு..” என்றவன்,

“இப்போ மேடம் ஹேப்பியா??!!” என்று சிரித்தபடி கேட்க, “ஹ்ம்ம்…” என்று தலையை ஆட்டியவள்,

“இன்னொரு விசயமும் உன்கிட்ட சொல்லணும் தீப்ஸ்..” என்றாள், பிரஷாந்தின் காதலை தான் ஏற்றுகொள்ள இருந்ததை சொல்லிடவேண்டும் என்று.

ஆனால் அவளின் நேரமோ இல்லை அவனின் நேரமோ, தீபனுக்கு தர்மாவிடம் இருந்து அழைப்பு வந்துவிட்டது.

“யா.. வந்திடுவேன்…. கிளம்பியாச்சு.. அனுராகா வீட்டு கிட்ட ஒரு கார்ல வெய்ட் பண்ணு.. நான் ஜாயின் பண்ணிக்கிறேன்..” என்றவன்,

“சாரி பேபி… கிளம்பனும்… இதுக்கு மேல நம்ம இப்படி இருக்கிறதும் சரியில்லை.. சோ..” என, அனுராகாவிற்கு சரி என்று சொல்ல மனதும் இல்லை.

ஆனால் சரி என்று சொல்வதைத் தவிர வேறு வழியும் அவளுக்கு அப்போது இல்லை.

ஏனெனில் அடுத்து அடுத்து தீபன், கட்சி ஆட்களோடு அலைபேசியில் பேசத் தொடங்கிட, அவளுக்கு இந்த பிரசாந்த் விஷயம் மட்டும் மனதினில் உறுத்திக்கொண்டே இருந்தது.

‘சொல்லிட வேண்டும்..’ என்பது மட்டும் உறுதியாய் இருக்க, அதற்கான நேரம் மட்டுமே அமைவதாய் இல்லை..

ஏனெனில் அனுராகா நன்கு அறிவாள், பிரஷாந்திற்கும் அனுராகாவிற்கும் இடையில் என்ன இருந்தது என்று தீபனுகுத் தெரியாது என்பது. அவள் அவனின் காதலை ஏற்றுகொள்ள இருந்தது, அனுராகா, நீரஜா, பிரஷாந்த் பின் அனுவின் அப்பா அம்மாவிற்கு மட்டுமே தெரிந்த ஒன்று.

அனுராகா தவிர மற்ற யாரும் வந்து தீபனிடம் சொல்லப்போவதும் இல்லை..

எது எப்படியோ, இந்த ஒன்றுமட்டும் அவனிடம் பகிர்ந்திட வேண்டும் என்று அவள் எண்ணினாள் ஆனால் அதுவோ முடியாதுப் போக, இதோ அனுவின் இல்லமும் வந்துவிட்டது.

தர்மாவும் அங்கே தீபனுக்காக ஒரு காரில் காத்திருக்க “டோன்ட் வொர்ரி.. நான் பார்த்துக்கிறேன்.. பூஜை அன்னிக்கு வா.. அம்மாக்கிட்ட மட்டும் நம்மைப் பத்தி சொல்றேன்.. ஒகே வா…” என்றுசொல்லி அவளிடம் இருந்து விடைப் பெற்றவனுக்கு,

மனதிலோ ‘அண்ணனுக்கு பார்க்கவேண்டும் என்று சொல்லியவளை, தான் விரும்புவதாய் சொன்னால் என்னாகும்..?? அம்மா என்ன நினைப்பார்??’ என்ற கேள்வி எழாமல் இல்லை.

ஆனால் ஆசை யாரை விட்டது..

‘ராகா இஸ் மைன்..’ என்று அவனின் உள்ளம் சொல்ல, யார் என்ன நினைத்தாலும் சரி, அது அம்மாவாக இருந்தாலும் சரி, அண்ணனாக இருந்தாலும் இல்லை அவனின் அப்பாவாகவே இருந்தாலும் சரி, அனுராகாவை தனக்கு சொந்தமாக்கிக்கொள்வேன் என்ற ஒருநிலைக்கு தீபன் அந்த நொடி வந்துவிட்டான்.

எதிர்த்து நிற்பது யாராகா இருந்தாலும் சரி என்ற நிலை…!!

அது அவளின் பெற்றோராக இருந்தாலும் சரி என்றுகூட..!!                                

மறுநாள் அழகாய் விடிந்திட, தீபன் எப்போது வந்தான், எப்போது சென்றான் என்பதுகூட உஷாவிற்குத் தெரியவில்லை. மிதுனைப் பார்த்தவரோ “என்னடா இவன் இப்படி செய்றான்??” என,

“ம்மா இன்னிக்கு இருந்து தொகுதில பிரச்சாரம்.. பூஜை முடியவும் மறுநாள் இருந்து அப்பா அங்க வரணும்.. சோ அவனுக்கு வேலைன்னு கிளம்பிட்டான்..” என்று அவனும் சொல்ல,

“ம்ம் என்னவோடா.. பேசாம உங்க ரெண்டு பேர் கல்யாணத்தையும் ஒண்ணா செஞ்சிடலாம்னு தோணுது.. ரொம்ப உங்களை சுத்த விட்டா பின்ன எல்லாமே கை மீறி போயிடுமோன்னு இருக்கு..” என்றவர், “இரு இதோ வர்றேன்..” என்று உள்ளே சென்றிட,  

சரியாய் அதே நேரம் அங்கே ஆர்த்தி வந்தாள். உஷாவை காணவென..

மிதுன் இருப்பதைப் பார்த்தவளோ “என்ன அண்ணா?? நீங்க வெளிய போகலையா??” என,

“கிளம்பிட்டே இருக்கேன்..” என்றவனுக்கு  ஆர்த்தியைக் கண்டதும் மனதினில் புதிதாய் ஓர் திட்டம்.

அன்றைய காலையில்தான் உஷாவும் சொல்லியிருந்தார் தீபன் அவன் மனதில் இருக்கும் பெண்ணை பூஜைக்கு அழைத்து வருகிறான் என்று. அது யார் என்று மிதுனுக்கு தெரியாதா என்ன??!!

அதை அப்படியே நடந்திட விட்டும் விடுவானா என்ன??!!

ஆர்த்தி சரியாய் வந்தது, அவனுக்கு பழம் நழுவிப் பாலில் விழுந்த கதையாகிப் போனது. மிதுனுக்கு இதுவும் தெரியும். ஆர்த்திக்கு தீபன் மீது ஒரு ஈர்ப்பு இருப்பது.

“ம்மா…” என்று தாராவை அழைத்தவன் “ஆர்த்தி வந்திருக்கா..” என,

உஷாவும் வேகமாவி வந்திட, “ ஹாய் ஆன்ட்டி எப்படி இருக்கீங்க??” என்று அவரை நலம் விசாரித்தவள்  “என்னோட ஸ்மால் கிப்ட்…” என்று அழகிய வைர நெக்லஸ் ஆர்த்தி உஷாவிற்கு பரிசளிக்க,

“ஓ!! ஆர்த்தி பொண்ணு.. எப்போ வந்த நீ??! இப்போதான் இங்க வர தெரிஞ்சதா..” என்றார் சிறுவயதில் இருந்து பழகிய உரிமையில்.

அவளோ “தீப்ஸ்க்கு தெரியுமே ஆன்ட்டி.. உங்கக்கிட்ட சொல்லலையா??!!” என,

“அவன் எங்க வீட்ல இருக்கான்.. இருந்தாலும் இதெல்லாம் சொல்வானா என்ன??!” என்றவர்,

“சொல்லுடா எப்படி இருக்க??!” என,

மிதுனோ  “ஆர்த்திக்கு என்னம்மா சந்தோசமா இருப்பா.. வேர்ல்ட் டூர்லாம் போயிட்டு வந்திருக்கா..” என்றபடி அம்மாவை ஒருபார்வை பார்த்துக்கொண்டே “தென் ஆர்த்தி வீட்ல பூஜை இருக்கு..” என்று ஆரம்பித்தவன் பின்

“ம்ம்ச் நான் ஒரு முட்டாள்.. தீப்ஸ் உன்கிட்ட இதுவரைக்கும் சொல்லாம இல்லை இன்வைட் பண்ணாம இருந்திருப்பானா..” என்று சொல்ல,

“அண்ணா..!!!” என்று சலுகையாய் சிரித்தவள் “சார் ரொம்ப பிசி போல.. கண்டுக்கவே இல்லை..” என்றாள் வழக்கம் போல.

ஆனால் அது அந்த நேரத்தில் உஷாவிற்கு மனத்தில் ஒரு அறிகுறியாய் தோன்ற, அப்படி தோன்றிட வேண்டும் என்றுதானே மிதுனும் இப்படி திசை திருப்பியது..

“என்னடா சொல்றா இவ..” என,

“ம்மா.. தீப்ஸ், ஆர்த்தியோட டைம் ஸ்பென்ட் பண்ணலையாம். அதான் பீல் பண்றா..” என்றவன் “அப்படிதானே ஆர்த்தி..” என, அவளோ மௌனமாய் இருக்க,

“அவனுக்கு வேலைடா..” என்றார் உஷா.

“என்ன வேலையா இருந்தா என்ன ஆன்ட்டி..” என்றவள், மிதுனை நன்றியோடு பார்க்க, அவனோ “ஓகே மா.. இனிமே உங்கபாடு ஆர்த்தி பாடு தீப்ஸ் பாடு.. பார்த்து எதுனா நல்லதா செய்ங்க..” என்று கிளம்பிட,

உஷாவிற்கு ‘தீபன் சொன்ன பெண் இவளோ..’ என்று தோன்றியது.

ஆனாலும், தீபன் அப்படியொன்றும் ஆர்த்தி மீது ஆர்வம் காட்டியது இல்லை என்று நன்கு தெரியும்.

அவர் யோசனையாய்ப் பார்க்க ‘இருந்தும் இந்த காலத்து பசங்க மனசுல என்ன இருக்குன்னு யாருக்குத் தெரியும்..’ என்றும் தோன்றியது.

ஆர்த்தியோ “எப்போ பூஜை..” என்று விசாரிக்க, உஷாவோ அவளிடம் தீபன் பற்றி விசாரிக்க, பேச்சுக்கள் நீண்டு,  ஆர்த்தி அதிக உரிமையோடு தீபன் பற்றியும், அவனை நன்கு தெரியும் என்பதுபோலும் பேச, உஷாவிற்கு தீபனுக்கு ஆர்த்தி நல்ல பொருத்தம் தான் என்ற முடிவிற்கே வந்துவிட்ட நிலை.

Advertisement