Advertisement

                           நான் இனி நீ – 21

அன்றைய இரவு மிதுன் சக்ரவர்த்திக்கும் சரி, தீபன் சக்க்ரவர்த்திகும் சரி  உறக்கம் என்பது கிஞ்சித்தும் இல்லை.. இருவரின் சிந்தனைகளும் ஒரே விசயத்தைப் பற்றியது தான். ஆனால் அதற்கான தீர்வு மட்டும் வெவ்வேறு வழியில் இருந்தது..

தீபனின் எண்ணமோ ‘அப்பா இடத்துக்கு மிதுன் வரணும்னு நினைக்கிறானா இல்லை அப்பாக்கு அடுத்து வரணும்னு நினைக்கிறானா…??!!’ என்ற யோசனையில் இருக்க, தீபனுக்கு இதில் தவறுகள் இருப்பதாய் தெரியவில்லை.

ஏனெனில் கடந்த ஒருசில வருடங்களாகவே மிதுன் தன்னை முன்னிறுத்திக் கொள்வதை விரும்புகிறான் என்று தீபன் கண்டுகொள்ள, ‘அவனுக்கு ஆசை இருந்தா வரட்டும்…’ என்றே எண்ணிக்கொண்டான்..

தீபனுக்கு எப்போதும் பதவியின் மீது பற்றில்லை. அவன் எதிர்நோக்குவது எல்லாம் இப்போது எப்படி இருக்கிறானோ அதனோடு சேர்த்து அவனுக்கான ஒரு அமைதியான அழகான வாழ்வு அவ்வளவே.

அவனுக்காக ஒருத்தி.. சகலமும் நீ என்று சொல்லுபடியான ஓர் உறவு.. அப்படியான ஒருத்தியோடு ஒரு வாழ்வு..!! 

அதுவும் இப்போது அனுராகாவோடு என்பதில் ஐயம் சிறிதுமில்லை அவனுக்கு..

அதைமீறி, அவனுக்கு பதவியோ, அரசியலோ அதிலெல்லாம் நாட்டமில்லை. ஆனால் அவனை ஒருவன் வீழ்த்திவிட்டு முன்னே வரவேண்டும் என்று நினைக்கிறான் என்றால்??!!! அதுவும் உடன் பிறந்தவனே என்கையில்??!!!

இது தெரியும் நேரம் தீபனின் மாற்றம் என்னவாக இருக்கும் என்பது இந்த நொடி தீபன் சக்கரவர்த்திக்கே தெரியாத ஒன்று..

தீபனுக்கு இப்போதிருக்கும் பிரச்னைகள் எல்லாம், ஷர்மாவிடம் மற்றும் சேட்டிடம் இருக்கும் ஆதாரங்கள் அவன் கைகளுக்கு வரவேண்டும். நிறைய நிறைய சிக்கியுள்ளது அவர்களிடம்.

சேட் எந்த நொடி வேண்டுமானாலும் இவர்களின் ‘ஹவாலா..!!’ விசயங்களை வெளியில் சொல்லலாம். அப்பாவை நேரடியாய் பகைத்துகொள்ள மாட்டார் என்றாலும் கூட, அவரை ஆட்டுவிப்பவனின் உந்துதலில் எதுவும் செய்ய வாய்ப்புள்ளது. எப்படியாவது அந்த சங்கதிகளை எல்லாம் தங்கள் வசம் கொண்டு வந்திடவேண்டும் என்று தீபன் எண்ணியிருக்க அதற்கு சக்ரவர்த்தியே தடையாய் இருப்பது தான் சங்கடம்.

அடுத்து தீபன் செய்திருந்த, பல ‘அன் அபிசியல்’ வேலைகளின் ஆதாரங்கள் ஷர்மாவிடம்.. ஷர்மா இவன் கையில் இருந்தாலும், அவன் சேகரித்து வைத்திருக்கும் ஆதாரங்கள் எல்லாம் எங்கே என்று இன்னமும் புலப்படவில்லை.. அவன் மனைவி மக்கள், அவனின் தொடுப்பு என்று அனைவரையும் பகடை காயாக்கி பார்த்துவிட்டான் சேட்டும் சரி, ஷர்மாவும் சரி இருவரும் மசிவதாய் இல்லை.

ஒன்று இவர்களிடம் இருக்கும் ஆதாரங்கள் எல்லாம் தீபனிடம் வரவேண்டும்.. இல்லையெனில் இவர்களை அம்பாய் எய்தவன் யாரென்று அறிந்துகொள்ள வேண்டும்.. இரண்டில் ஒன்று ஏதேனும் நடந்தே தீர வேண்டும்..

உயிர் பலி என்ற ஒன்று மட்டும் தான் இப்போது வரைக்கும் இல்லை… அதுவும் கூட தீபன் மனிதனாய் இருக்கும் வரைக்குமே..

மிதுனோ ‘எப்படியும் இந்த எலெக்சன் முடிஞ்சு ரிசல்ட் வர்றதுக்குள்ள அப்பா வாயாலேயே எனக்கு அடுத்து நீ தான்னு சொல்ல வச்சிடணும்’ என்ற முடிவினில் இருந்தான்.

மிதுன் முடிவே செய்துவிட்டான். வீட்டினில் பூஜை நடக்கும் அன்றே ஷர்மாவினை தீபனின் கஸ்டடியில் இருந்து வெளிகொணர்ந்திட வேண்டும் என்பதும், அதே தினத்தில் உஷாவை வைத்து மிதுன், அனுராகா நிச்சய ஒப்புதல் செய்திட வேண்டும் என்றும்.

ஒரே தினத்தில் இரண்டு  விசயங்கள்..!!

இரண்டுமே தீபனை நிலைகுலைய செய்யும் என்று நன்கு தெரியும். ஷர்மா என்பவன் தீபனின் பிடியில் இருக்கும் வரைக்குமே அவனின் ஆட்டம். அதே போல் அனுராகா… அவளின் காதல்.. அவள்மீது தீபனுக்கு இருக்கும் பிடித்தம்.. மோகம்.. ஆசை எல்லாம் எல்லாமே தீபனை ஒன்றும் இல்லாது செய்ய்துவிடும் என்று மிதுன் நன்கு அறிந்துகொண்டான்.

பெண்ணாசை…!! யாரை வீழ்த்தும்.. யாரை வாழ்த்தும் என்று யாருக்குத் தெரியும்..

மிதுனோ.. தீபனோ.. இருவருமே அனுராகா பற்றி இன்னும் சரியாய் அறியவில்லை.. அதுமட்டுமே நிஜம்..

மிதுன் எப்போது எப்போது என்று அந்த பூஜைக்கான நாளும் குறித்தாகிவிட்டது. மிதுனின் ஆட்களோ எப்படியேனும் ஷர்மாவினை கண்டுபிடித்திட வேண்டும் என்று தேடிக்கொண்டு இருந்தார்கள். அவன் ஏற்பாடு செய்திருந்த மாவட்ட செயலாளர்கள் விருந்தோ தடபுடலாய் நடந்துகொண்டு இருந்தது..

சக்ரவர்த்தியும் இல்லை.. தீபனும் இல்லை..

ஆம்..!! தீபன் வரவில்லை..

அவனுக்கு அதில் மனம் செல்லவில்லை.. அப்பா முன் நின்று நடத்தும் ஒன்றை இப்போது அவரில்லாது செய்வது அவனுக்கு பிடித்தமாய் இல்லை. மிதுனோ எது சொன்னாலும் ‘நான் செய்கிறேன்.. நான் பார்த்துக்கிறேன்..’ என்க,

“சரி.. நீயே பார்த்துக்கோ…” என்று தீபன் அவனுக்குக் கொடுக்கப்பட்ட வேலையில் தன்னை ஆழ்த்திக்கொண்டான். 

அங்கே அந்த பண்ணை வீட்டினில், வந்திருந்த ஆட்கள் முக்கால்வாசிப் பேர் கேட்டது “தம்பி இல்லைங்களா??!!” என்பதுதான்.

“என்ன இருந்தாலும் தீபன் தம்பி இருந்தா அந்த உற்சாகமே வேற…” என்று மிதுன் காதுபடவே சிலர் சொல்ல, அதுவே மிதுனை மேலும் மிருகமாக்கியது..

எத்தனை பாட்டில் உள்ளே இறக்கினானோ தெரியவில்லை, ஆனால் மனதில் இருந்த வெறி மட்டும் இன்னமும் அடங்கவேயில்லை..

“தீபன்… தீபன்.. தீபன்….. எப்போ பார்.. எங்க பார் நீ தான்டா.. உனக்கு அண்ணன் நான்… நீ என்ன செய்றியோ அதுக்கு ஈக்குவலா நானும் தான் எல்லாம் செய்றேன்.. என்னை எவனும் கண்டுக்கிறது இல்லை…. அப்பால இருந்து அல்லக்கை வரைக்கும் எல்லாருக்கும் நீ தான் முக்கியமா போயிட்ட…” என்று கத்தியபடி கையில் இருந்த ஒரு பாட்டிலை சுவற்றின் தூக்கி எறிந்தான்..

என்ன செய்தும் அவனின் ஆத்திரம் மட்டும் அடங்குவதாய் இல்லை..

மிதுனின் இந்த வெறி யாரை பலி தீர்க்குமோ..??!!!!

அடுத்து வந்த நாட்கள் அண்ணன் தம்பி இருவருமே சந்திக்கும் வாய்ப்புகள் அமையவில்லை. இதற்கு இருவரும் வீட்டினில் தான் இருந்தனர். அதாவது இரவு உறங்கும் நேரத்தில். இதற்கு முன்னே அப்படியிருக்க நேர்ந்தால் யாரேனும் ஒருவர் மற்றவரை தேடி வந்து பேசுவது இயல்பாய் இருந்தது.

இப்போதோ மிதுனுக்கு அதில் விருப்பமில்லை.. தீபனுக்கோ அந்த நியாபகமே இல்லை..

தொகுதி ஆட்களோடு பேச்சு வார்த்தை, பணப் பட்டுவாடா, யாருக்கு என்ன வேலை அது இதென்று பிரித்து செய்யவே நேரம் போய்விட்டது..

அன்றும் அப்படித்தான் இருக்க, அவனுக்கே சற்று ஓய்வு வேண்டும் என்று தோன்ற, நண்பர்களுக்கு அழைத்து சந்திக்கலாம் என்றுவிட்டான்.. புனீத் கெஸ்ட் ஹவுசில் சந்திப்பது என்று முடிவாகிட, தேவ் மற்றும் புனீத் இருவருமே அவனுக்காக காத்துக்கொண்டு இருக்க,

சொல்லாமல் கொள்ளாமல் அங்கே வந்திறங்கினாள் ஆர்த்தி.

ஆர்த்தி…!!

கல்லூரி காலத்தில், பலரின் கனவு கன்னி.. இப்போதும் கூட அவளைக் காண்போருக்கு அப்படித்தான்.. இவர்களின் கூட்டத்தில் ஒருத்தி.. அப்பா புகழ் பெற்ற வைர வியாபாரி. ஆக வசதிக்கு பஞ்சமேயில்லை.. மூன்று மாதங்களாய் ஆர்த்தி இங்கில்லை.. ‘வேர்ல்ட் டூர்…’ சென்றிருந்தாள்.

இவள் எங்கே இங்கே வந்தால் என்றுதான் பார்த்தனர் தேவ் மற்றும் புனீத்..

நிஜமாகவே அவளை எதிர்பார்க்கவில்லை என்பது ஒருபுறம் இருக்க, இவள் இருக்கும்போது தீபன் வேறு வந்துவிட்டால் என்ன செய்வது என்றுதான் முழித்தனர் இருவரும்.

ஆம்… தீபனுக்கும் இவளுக்கும் எப்போதுமே ஆகாது.. சண்டைகள் என்றில்லை, ஆனால் என்னவோ தீபனுக்கு ஆர்த்தி மீது அப்படியொன்றும் அபிப்பிராயம் இல்லை. ஆனால் ஆர்த்திக்கோ, தீபன் இருக்கையில் அவனைத் தவிர வேறெதுவும் கண்களுக்குத் தெரியாது.  

‘இவ என்னடா சும்மா சும்மா இப்படி பார்த்துட்டு இருக்கா…’ என்று கல்லூரி நாட்களிலேயே கடுப்படிப்பான் தீபன்..

இப்போதோ சொல்லவும் வேண்டுமா…

“ஹேய்..!!!! என்ன ரெண்டுபேரும் இப்படி முழிக்கிறீங்க??!! என்னங்கடா எனக்குத் தெரியாம எதுவும் இங்க நடக்குதா என்ன??!!” என்று இருவரின் தோளையும் செல்லமாய் தட்டி ஆர்த்தி கேட்க,

“ஹா..!!! வா.. வா ஆர்த்தி.. திடீர்னு உன்னை பார்க்கவும்..” என்று தேவ் இழுக்க,

“ஹா ஹா ஹா…!! திடீர்னா… நான் சொல்லிட்டுத் தானே போனேன் த்ரீ மன்த்ஸ்ல வருவேன்னு…” என்றவள்,

“எங்க நம்ம ப்ரேக் அப் ராஜா…??!! எலெக்சன்னு அலையுறானா??! இல்ல…” என்று சந்தேகமாய் கேட்க,

“அதெல்லாம் இருக்கட்டும் நீ எப்படி இருக்க?? எப்படி இருந்தது ட்ரிப்…” என்று புனீத் கேட்க,

“எவ்ரிதிங் இஸ் பைன்..” என்றவள், “எப்படி சரியா கெஸ் பண்ணி இங்க வந்துட்டனா??!!” என்றாள் ஒரு பெருமித புன்னகையோடு.

அப்போதும் கூட இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள “அட என்ன உங்க ரெண்டு பேர் முழியும் சரியில்லையே…” என்று ஆர்த்தி கேட்கயிலேயே, தீபனின் கார் சத்தம் கேட்க,

“தீப்ஸ் தானே…” என்றவள் முன்னே செல்ல, அதற்குள் தீபனும் கார் விட்டிறங்கி வந்துகொண்டு இருக்க, இவளைக் கண்டதுமே அவனுக்கு ‘வந்துட்டாளா…’ என்றுதான் தோன்றியது..

“ஹாய் தீப்ஸ்…” என்றபடி ஆர்த்தி அவனை நெருங்க, “ஹாய் ஆர்த்தி..” என்றவன், தள்ளி நின்றிருந்த நண்பர்களை ஒரு பார்வை பார்த்தான்.

‘ஒரு வார்த்தை சொல்றது இல்லையா…’ என்று..

“வா தீப்ஸ்… இப்போதான் ஆர்த்தியும் வந்தா…” என்று தேவ் அவனுக்கான பதிலை சொல்ல,

“ம்ம்…” என்றவன் அப்படியே அங்கே அமர்ந்திட, ஆர்த்தியோ “என்ன தீப்ஸ்.. உன்னைப் பார்த்தா சம்திங் ராங்கா இருக்கே…” என,

“அப்படியா??!!” என்று கேட்டுவைத்தான் வெறுமனே..

“அட… என்ன மென் நீ… இப்படி இருக்க… நீ எங்களோட பழைய தீப்ஸ் இல்லைபோலவே…” என்று ஆர்த்தி கேட்க,

“ம்ம்ச்… டேய்.. நான் கிளம்புறேன்…” என்று எழுந்துவிட்டான் தீபன் சக்ரவர்த்தி.

“ஹேய் கூல் கூல்… ஓகே.. நான் எதுவும் பேசலை..” என்றவளோ “ஜஸ்ட் உங்களுக்கு எல்லாம் ஸ்மால் கிப்ட்ஸ் வாங்கினேன்…” என்று இவர்களுக்கு வாங்கி வந்திருந்த பரிசு பொருட்களை நீட்ட, தேவ் புனீத் இருவருமே நன்றிகள் சொல்லி வாங்கிக்கொள்ள,

தீபனோ வெறுமெனே வாங்கி அப்படி வைத்துவிட, ஆர்த்தியின் முகம் வாடினாலும் அவளும் அதை வெளிக்காட்டிக்கொள்ள வில்லை..

தீபனும் அதற்குமேல் அவளை கண்டுகொள்ளவில்லை..

“என்னடா எப்படியோ  இருக்க…” என்று புனீத் கேட்கையில், சரியாய் அனுராகா அழைத்துவிட தீபன் அதை ஏற்கவில்லை.

தேவ் பார்த்துவிட்டு “இன்னும் சரியாகலையா…” என, இவர்கள் பேசுவதைப் பார்த்தவளோ “என்ன போய்ட்டு இருக்கு இங்க??” என,

தீபன் அவளைப் பார்த்தவன் “எது போயிட்டு இருந்தாலும் உனக்கு அது தேவையில்லாதது…” என்றும் சொல்ல,

“டேய் தீப்ஸ்…” என்று புனீத் கடிய, “ம்ம்ச்.. இவக்கிட்ட எத்தனையோ டைம்ஸ் சொல்லிட்டேன் என்னோட விசயங்கள்ல இன்ட்ரெஸ்ட் காட்டாதன்னு..” என்றான் அடக்கப்பட்ட எரிச்சலில்..

ஆர்த்தியோ “ஹெலோ…!! நான் தேடி பிடிச்சு உன்னை வந்து எதுவும் கேட்கலை.. என் முன்ன நீங்க பேசினா நான் கேட்கத்தான் செய்வேன்.. பட் இப்படியொரு ஆட்டியூட் உனக்கு ஆகாது தீப்ஸ்… ஒருநாள் இல்லைன்னா ஒருநாள் எல்லாத்துக்கும் சேர்த்து நீ ரொம்பவே பீல் பண்ணுவ தீப்ஸ்…” என்றவள்

“நான் வர்றேன்…” என்று கிளம்பிவிட, “ஏன்டா அவ நார்மலா ஏதாவது சொன்னா கூட இப்படி நடந்துக்கிற நீ…” என்று தேவ் கடிய,

புனீத்தோ “உனக்கு பொண்ணுங்கக்கிட்ட எப்படி பிஹேவ் செய்யணும்னே தெரியலை..” என, திரும்ப திரும்ப அனுவிடம் இருந்து அழைப்பு வந்தது.

அதை திரும்ப திரும்ப தீபனும் தவிர்த்துக்கொண்டே தான் இருந்தான்.

Advertisement