Advertisement

தீபன் அப்போது அண்ணின் முகம் பார்க்கவில்லை. பார்த்திருந்தால் கூட எதுவும் யூகித்து இருப்பானோ என்னவோ. ஆனால் உஷாவின் முகம் பார்த்தவன்

“என்னம்மா திடீர்னு..” என,

“கேள்வி மேல கேள்வியா கேட்காத தீபன்.. நீங்க ரெண்டு பேரும் ஒரே நேரத்துல வீட்ல இருக்கிறதே பெருசு.. சொல்லுங்க என்ன சமைக்க சொல்லட்டும்..” என்று உஷா பேச்சினை மாற்ற,

“ம்மா நான் என்ன கேட்டேன் நீ..” எனும்போதே

“தீப்ஸ்.. அம்மா அவங்க விருப்பத்துக்கு செய்யட்டுமேடா…” என்றான் மிதுன்.

“தாராளமா.. யார் வேணா சொன்னா.. பட் அவங்களை இன்வைட் பண்ணனும் சொன்னதும் தான்…” என்று தீபன் இழுக்க,

“அதுனால என்னடா..” என்ற மிதுனோ

“ம்மா டேட் மட்டும் குறிச்சு சொல்லுங்க.. ஹோமம் பண்ற எல்லா ஏற்பாடும் நான் செய்றேன்.. யார் யாரை இன்வைட் செய்யணும் சொல்லுங்க நானே அரேஞ் பண்ணிடறேன்…” என்றான் மூத்தவனாய்.

தீபனுக்கு இதுபோன்ற விசயங்களில் எல்லாம் எப்போதும் அதிக நாட்டமில்லை என்பதால் முதலில் எல்லாம் இப்படியான வேலைகளை அண்ணன் பொறுப்பில் விட்டுவிடுவான். வருபவர்களை வரவேற்பதோடு நின்றுவிடுவான். எப்படியும் குறைந்தது அன்றைய தினம் மட்டும் இருநூறு பேராவது வருவர். அனைவர்க்கும் அங்கே தான் சாப்பாடும் கூட.

பூஜைக்கு என்று இல்லையென்றாலும், இவர்களின் வீட்டு அழைப்பு என்பதால் பூஜை தினத்தில் காலையில் இருந்து மாலை வரைக்கும் ஏதாவது ஒரு நேரத்தில் ஆட்கள் வந்து தலை காட்டிவிட்டுத் தான் போவர்.

ஆனால் இன்றோ, உஷா அனுராகாவின் வீட்டில் அழைப்பு விட வேண்டும் என்றதும் தீபனுக்கு அதை அப்படியே சாதாரணமாய் விடவும் முடியவில்லை. அதிலும் மிதுன் தான் அழைக்கிறேன் என்பதையும் ஏற்றுகொள்ள முடியவில்லை.

ஏற்கனவே அம்மா, மிதுனுக்கு அனுராகாவை பேசவேண்டும் என்று சொல்லியிருக்க, இப்போது இந்த பூஜைக்கு அழைப்பது எல்லாம் சேர்த்து தீபன் மனதில் வேறெதுவும் இருக்கும் என்ற எண்ணம் ஆணித்தரமாய் விழ, அமைதியாய் யோசித்தபடி இருந்தான்.

“தீப்ஸ் என்னடா??!!” என்று மிதுன் கேட்க,

“ஹ்ம்ம் என்ன என்னடா??!!” என்றான் அப்போதும் கூட யோசனையாய்..

“என்ன திடீர்னு யோசனக்கு போயிட்ட.. கொஞ்சம் உன்னோட ஸ்ட்ரெஸ் எல்லாம் கம்மி பண்ணிக்கோ எப்போ பாரு யோசனை.. அலைச்சல்.. வேலை அது இதுன்னு…” என,

“ம்ம்ச் சரி அதெல்லாம் விடு.. அங்க எப்படி இருக்கு நிலவரம்..” என்றான் தீபன் காரியத்தில் கண்ணாய்.

“எல்லாமே பக்காவா போயிட்டு இருக்கு..” என்ற மிதுன் உஷா அங்கிருக்கிறாரா என்று பார்க்க, அவரோ சமையல் செய்யும் ஆளிடம் பேசிக்கொண்டு இருக்க,

பின் தீபனிடம் திரும்பியவன் “அப்பா சேட் கிட்ட பேசிட்டார் தீப்ஸ்.. அவர்னால இனி எந்த தொல்லையும் உனக்கு இருக்காது.. சோ நீயும் சேட் ஷர்மா இவங்களை விட்ரு…” என, கண்களை இடுக்கி ஒரு பார்வை பார்த்தான் தீபன் சக்ரவர்த்தி.

“என்ன தீப்ஸ்….”

“சேட்னால எனக்கு தொல்லைன்னு யார் சொன்னது??!!” என்றான் டைனிங் டேபிளில் இருந்த பழத்தட்டில் இருந்த ஆப்பிளை எடுத்தபடி.

மிதுனின் முகம் இப்போது யோசனைக்கு மாற “என்னடா அண்ணா பாக்குற…” என்றான் இப்போது ஆப்பிளை கடித்தபடி.

“நீ என்ன சொல்ற தீப்ஸ்.. எனக்கு எதுவும் புரியலை.. இத்தனை நாள் நடந்தது எல்லாம்…” என்று மிதுன் கேட்க,

“சேட்டுக்கு எதிரி நானா இல்லை நம்மலா அப்படின்னு எனக்குத் தெரியாது. எப்படியிருந்தாலும், சேட் இவ்வளோ தைரியமா இருக்கார்னா அப்போ அவருகூட நம்மளுக்கு நெருக்குமான ஒருத்தர் இருக்கார்னு அர்த்தம்…” என்கையில் மிதுன் தன்  முகம் மாறாது காத்திட வெகுவாய் சிரமப்பட்டுவிட்டான்.

ஆனால் தீபனோ அண்ணனை தவிர பார்வையை வேறெங்கும் திருப்பவில்லை.. வாயில் ஆப்பிள் மென்றபடி இருக்க ‘நான் சொல்றது சரிதானே..’ என்ற ரீதியில் தீபன் ஒரு புன்னகை சிந்த,

“அப்.. அப்படியெல்லாம் இருக்காது டா…” என்றான் மிதுன் வேகமாய்.

“அதெப்படி நீ சொல்ற…” என்று இவனும் அதே வேகத்தில் கேட்க,

“ஹேய் தீப்ஸ்.. என்னடா.. உனக்கும் சேட்டுக்கும் முட்டிக்கிட்டா நீ லாஸ்ட்ல என்னை குறுக்கு விசாரணை செய்ற..” என்று மிதுனும் படபடக்க,

“அடடா..!! ஆரம்பிச்சுட்டீங்களாடா ரெண்டுபேரும்..” என்று மீண்டும் வந்தார் உஷா அங்கே.

அவ்வளோதான் இருவரும் கப்சிப் என்றாகிட, மிதுன் கொஞ்சம் உஷாராகிவிட்டான். வெளியே காட்டிக்கொள்ளவில்லை என்றாலும் மனதிற்குள்ளேயோ தீபன் எதுவும் கண்டுவிட்டானா என்ற எண்ணம் வண்டாய் குடைந்தது.

எதை வைத்து இப்படி சொல்கிறான்??!! எதுவும் யூகித்து இருப்பானோ என்று அவனுள்ளே சிந்தனை ஓட, சுற்றி நடப்பவை எல்லாம் அவனின் கவனத்தில் இருந்து தள்ளிப்போனது.   

தீபன் எப்போதும் போலவே தான் மிதுனோடு பேசினான். ஆனால் திருடனுக்கு தேள் கொட்டிய கதை இப்போது மிதுனுக்கு.. வெளியே எதையும் காட்டிக்கொள்ளவும் முடியவில்லை. இதெல்லாம் ஒன்றுமில்லை என்று விட்டுவிடவும் முடியாத நிலை.

“ம்மா.. நான் கொஞ்சம் வெளிய போயிட்டு வர்றேன்…” என்றவன் உஷாவின் பதிலை எதிர்பார்க்காது அப்படியே கிளம்பிட,

“டேய் சாப்பிட்டு போ..” என்று அவர் சொல்லும்போதே அவன் வாசல் நெருங்கியிருந்தான்..

“என்னடா தீபா.. இப்போல்லாம் இவன் உன்னாட்டம் ஆகிட்டான்…” என,

“ம்மா இதெல்லாம் ஓவர்…” என்று தீபனும் சொல்ல,

“சரி சரி அதெல்லாம் விடு.. எதோ பொண்ணு கூட நம்ம பார்ம் ஹவுஸ் போனியாம்.. அப்பா சொன்னார்டா.. யாரது??!! இல்ல இதுவும் ப்ரேக் அப் பார்ட்டில முடியுமா…” என்று உஷா கேட்க,

“ம்மா…!!!!!!!” என்று ஆடித்தான் போனான் தீபன் சக்ரவர்த்தி.

அண்ணன் கேட்டபோது, அப்பா கேட்டபோது எல்லாம் சங்கடமாய் இல்லை. ஆனால் அம்மா சர்வ சாதாரணமாய் கேட்கையில் கொஞ்சம் வெட்கமாய் கூட போய்விட்டது தீபனுக்கு..

“ச்சே…” என்று முகம் சுருக்கினாலும் “இப்ப்டியாம்மா கேட்ப நீ..” என்றவன் எழுந்துபோக,

“டேய் டேய்.. உன்னை என்னவோன்னு நினைச்சேன்டா.. எதுவா இருந்தாலும் அம்மாக்கிட்ட சொல்லிடு..” என,  சட்டென்று நின்ற தீபன் திரும்பி உஷாவினைப் பார்த்து,

“பூஜைக்கு அவளும் வருவா.. அப்போ நேர்லயே காட்டுறேன்…” என,

“அப்போ இது சீரியஸ் ரிலேஷன்ஷிப் தானாடா..” என்றார் உஷா கொஞ்சம் ஆச்சர்யமாய்.

“ம்மா…!!!!” என்று இப்போது சத்தமாய் சொன்னவன் “அது அவளே வந்து சொல்லுவா…” என்றுவிட்டு ஓடாத குறையாய் சென்றுவிட்டான்.

உஷாவின் முகத்தினில் புன்னகை நிறைந்து இருந்தது. வெளியில் காட்டிக்கொள்வது இல்லையென்றாலும் தீபன் சக்ரவர்த்தியை எண்ணி அவருக்கு நிரம்பவும் வருத்தங்கள் இருந்தது. மிதுன் பற்றி அவர் என்றுமே வருந்தியதோ நிறைய யோசித்தோ இல்லை. இப்போது வரைக்கும் மிதுன் சமத்து பிள்ளையே வீட்டில்.

தீபன் சக்ரவர்த்தி தான் யார் சொல்வதற்கும் அடங்காமல் சுற்றியவன். அப்படியொருவனை தன் பின்னால் சுற்ற வைத்தது யாராய் இருக்கும் என்ற சிந்தனைக்கு போய்விட்டார்..

சிறிதும் கூட அது அனுராகாவாய் இருக்கும் என்ற எண்ணமில்லை. இருவருக்கும் இடையில் எதுவோ சரியில்லை என்பதுவரைக்கும் மட்டுமே அவருக்கு.

தீபன் மனதில் பூஜை அன்று அனைவரின் முன்னிலும் அவர்களின் காதலை சொல்லிடவேண்டும் என்ற முடிவே வந்திட, உஷாவோ அதே பூஜை அன்று, முறைப்படி மிதுனுக்கும் அனுராகாவிற்கும் பேசி தட்டு மாற்றிட வேண்டும் என்ற முடிவு வந்திருந்தது.

இப்போது தீபனும் இப்படி சொல்ல “ரெண்டு பசங்களுக்கும் கூட பேசி முடிச்சிடலாம்..” என்று சந்தோசித்தார். 

தீபன், அனுராகா தான் என் வருங்கால மனைவி என்று அனைவரின் முன்னும் சொல்லும்போது ஒவ்வொருவரின் மனநிலை எப்படி இருக்கும் என்பது யார் அறிவரோ??!!

அம்மா மற்றும் தம்பியின் முடிவுகள் அறியாத மிதுனோ ஷர்மாவை இந்த தீபன் எங்கே மறைத்து வைத்திருக்கிறான் என்ற தேடலில் இறங்கியிருந்தான்.

என்ன இருந்தாலும் விஷயம் தீபனுக்கு வராமல் போய்விடுமா என்ன??!!

நாகா வந்து “அண்ணன் ஷர்மா பத்தி விசாரிக்கிறார்..” என்று சொல்கையில்

“நான் பார்த்துக்கிறேன்…” என்று சொல்லிவிட்டான் தான்.. ஆனால் மிதுன் தன்னிடம் நேரடியாய் கேட்காது இப்படி மறைமுகமாய் விசாரிப்பது என்றும் இல்லாத விசயமாய் இருக்க,

மிதுனிடம் நேரடியாகவே கேட்டுவிட்டான் தீபன் “உனக்கு ஷர்மா பத்தி தெரியணும்னா என்கிட்டே தானே கேட்கணும்…” என்று.

“கேட்டா மட்டும் நீ சொல்லிடுவியா டா..” என்றவன் “இது அப்பா விசாரிக்க சொன்னார்.. சோ செய்றேன்..” என்றிட,

தீபன் அடுத்து சக்ரவர்த்திக்கு அழைத்துவிட்டான் “அப்போ எவன் நம்மளை என்ன செஞ்சாலும் சரி.. அவனை நீங்களே காப்பாத்துவீங்க அப்படிதானே..” என்று எடுத்ததுமே கேட்டிட,

“டேய் டேய் தீபா என்னடா…” என்று சக்ரவர்த்தி சொல்ல,

“எனக்கு நிஜமா நீங்களும் இவனும் செய்றது ஒன்னும் சரியா இல்லைப்பா.. இப்பவும் சொல்றேன்.. சேட் ஷர்மா வெறும் அம்புதான்.. எய்தது வேற யாரோ.. அந்த யாரோ யாருன்னு கண்டுபிடிக்காம நான் இவங்க ரெண்டு பேரையும் விடறதா இல்லை..” எனும்போதே மிதுனுக்கு அத்தனை ஆத்திரம் வந்தது..

‘நோ நோ மிதுன்.. எல்லாம் கூடி வர்ற டைம்ல நீ எதுவும் கெடுத்துக்காத.. தீபனை டவுன் பண்ற ஒரே ஒரு விஷயம் அனுராகா.. பூஜை அன்னிக்கு தீபனுக்கு மொத்தமா பதிலடி கொடுத்திடு.. அதுக்கு அப்புறம் அவன் வேற எதையுமே யோசிக்கமாட்டான்…’ என்று பொறுமை காத்திட,

தீபனோ அப்பாவிடம் இன்னமும் கோபித்துக்கொண்டு தான் இருந்தான்.

“அப்போ நான் சொல்றதுல நம்பிக்கை இல்லையாப்பா..” என,

“அப்படியில்லை தீபன்.. உனக்கு தெரியாதது எதுவுமில்லை.. நம்ம கூட இருக்கவங்க எல்லாருமே நமக்கு சாதகமானவங்கன்னு சொல்லவும் முடியாது, எதிரிங்கன்னும் சொல்லிட முடியாது. அரசியல் இதுதான்.. அதுபோல இதையும் நினைச்சு விடேன்டா..” என்று அவரும் சொல்ல,

“ப்பா எல்லாம் சரி.. ஆனா கண்ல விழுந்த தூசியை எடுக்கத்தானே செய்வீங்க.. இதுவும் அதுபோலன்னு நினைச்சு விடுங்கப்பா..” என்றான் பிடிவாதமாய்.

“அதுக்கில்ல தீபன்…”

“ப்பா நீங்க பேசினதுக்காக நான் அந்த ஷர்மாவ ஒன்னும் செய்யலை.. பட் அவன் உண்மையை சொல்லிட்டா விட்டுடறேன்..” என்று கொஞ்சம் இறங்கி வர, மிதுனோ அவன் முன்னேயே இருந்தாலும் மனதிற்குள் வேறுமாதிரியான திட்டங்கள் தீட்டிக்கொண்டு இருந்தான்.

முடிவாய் ஷர்மாவின் முடிவினை எழுதிவிட்டான்.. இனி ஒருநாள் கூட அவன் உயிரோடு இருந்திட கூடாது என்பது.. தீபன், நாகா தர்மா இவர்கள் மூவருக்கு மட்டுமே அவன் இருக்குமிடம் தெரியும் என்று மிதுனுக்கு நன்கு தெரியும்.. இவர்கள் மூவரையும் கண்காணிக்க என்று மிதுன் வைத்திருந்த ஆட்களோ

“அப்படி எதுவுமில்லை..” என்று சொல்ல, மிதுனுக்கு எப்படியாவது ஷர்மா இருக்குமிடம் கண்டுபிடித்து அவனை இல்லாமல் செய்திடவேண்டும் என்ற வெறியே கிளம்பிவிட்டது.

தீபன் இதை மிதுனுக்காக சொன்னானா இல்லை தன்னைப்போல் சொன்னானா தெரியாது. ஆனாலும் சொன்னான் “ப்பா.. அந்த யாரோ வெளிய வரணும்னா அவனுக்கு கொஞ்சம் பயம் காட்டினா போதும்.. தன்னப்போல வருவான்.. வரட்டும் நான் பார்த்துக்கிறேன்.. அதுவரைக்கும் நீங்க எதுவுமே சொல்லக் கூடாது..” என்று உறுதியாய் சொல்லி வைத்திட,

மிதுன் அமைதியாகவே இருக்க “என்னடா உனக்கும் தான்…” என்றான் மிதுன்.

“ம்ம்..” என்றுமட்டும் பதில் சொன்னவன் “நீயும் பார்த்து இரு தீப்ஸ்..” என்று சொல்வது போல் சொல்லிட “கண்டிப்பா டா..” என்று இவனும் சொல்லிக்கொள்ள,

இருவரின் கவனத்தையும் திருப்பியது, தீபனின் அலைபேசியில் மிளிர்ந்த ‘டைட்டன் காலிங்…’

அப்பாவோடு பேசிவிட்டு அலைபேசியை அங்கிருந்த டேபிளில் வைத்திருக்க, தீபன் பார்க்கும் முன்னமே மிதுன் பார்த்திட, தீபன் வெகு சகஜமாய் “ஓகே டா.. பை..” என்று சொல்லி,

“ம்ம் சொல்லு ராகா…” என்று பேசியபடி நகர்ந்திட, மிதுனின் வன்மம் கூடிக்கொண்டே போனது.

அனுராகாவோ “சார் ரொம்ப பிசி…” என,

“அப்படியெல்லாம் இல்லை..” என்றவன் “ஹேய் ராகா.. எங்க வீட்ல ஒரு பூஜை.. உங்களை எல்லாம் அம்மா இன்வைட் பண்ணுவாங்க..” என,

“ரியல்லி..” என்றாள் சந்தோசமாய்.

“எஸ்.. அன்னிக்கு நம்ம விஷயம் சொல்லிடலாம்னு இருக்கேன்..” என்று அடுத்த நொடி, அவளின் சந்தோசம் மறைந்து

“என்ன சொல்ற??!!” என்ற கேள்வியே வர,

“எஸ்..” என்றான் உறுதியாய்..

“பட் தீப்ஸ்.. இது.. இது அவ்வளோ சரின்னு எனக்கு தோணலை.. நமக்குள்ளயே இன்னும் எதுவும் சரியா செட்டாகல.. அப்படியிருக்கப்போ..”  என்று அனு சொல்லும்போதே,

“செட் உனக்கு மட்டும்தான் ராகா இன்னும் ஆகலை .. பட் நான் பிக்ஸ் ஆகிட்டேன்..” என்றான் அப்போதும் உறுதியான குரலில் தீபன்..

அவன் அப்படி சொன்னது அவளுக்கு சந்தோசம் தான்.. ஆகினும் என்னவோ மனம் முரண்டியது. அத்துனை அவசரம் எதற்கு என்று.. இருவருக்குள்ளும் இன்னும் கூட சரியான புரிதல் இல்லை என்பது அவளின் கருத்து. அப்படியிருக்க வீட்டினில் சொல்லி இனி அதுவேறா என்றே எண்ணினாள்.

அனுராகா அமைதியாய் இருக்க, “ராகா..!!” என்றான் ஆழ்ந்த குரலில்..

“ம்ம்…”

“என் அம்மாக்கிட்ட சொல்லிட்டேன்.. உன்னை அன்னிக்கு இன்ட்ரோ செய்றேன்னு..” என,

“யார கேட்டு தீப்ஸ் அப்படி சொன்ன??!” என்றாள் இவளும்.

அவளுக்கு அப்படிதான் கேட்கத் தோன்றியது.. ஆனால் தீபனுக்கோ அது சுருக்கென்று இருக்க, முயன்றே சுல்லேன்று வந்த வார்த்தைகளை அடக்கி,

“சொல்லிட்டேன்.. எனக்கு இப்போவே சொல்றது தான் பெட்டர்ன்னு தோணுது.. லவ் பண்றோம்னு சொல்லிடலாம்.. மேரேஜ் நீ எப்போ சொல்றியோ அப்போதான்..” என்றிட,

அவனின் குரலின் மாற்றங்கள் புரிந்தாலும், அனுராகாவிற்கு கொஞ்சம் திடுக் திடுக் என்றுதான் இருந்தது.

அவளுக்கு அன்றைய தினம் எண்ணி, ஒரு படபடப்பு. ஆனால் தீபனுக்கோ அவளின் தயக்கம் சிறிதும் பிடிக்கவில்லை.. என்னோடு பழகும் ஒருத்திக்கு அதை வெளியில் சொல்வதில் என்ன அத்தனை தயக்கம் என்ற கேள்வி அவனுள்..

நான் என்ன அவ்வளோ மட்டமா??!! இல்லை அவள் தன்னை அப்படி நினைக்கிறாளா??!! மனது இதை நினைத்தாலும்,

“என்ன ஓகே வா…” என்று தீபன் திரும்பக் கேட்க,

“ம்ம்..” என்றாள் முழுமனதாய் இல்லாது..

தீபன் அனைவரின் முன்னும் சொல்லும் முன்னே தாராவிடம் மட்டுமாவது சொல்லிடவேண்டும் என்பது அனுராகாவிற்கு இப்போது. ஆனால் அம்மா அப்பா இருவருமே ஊரில் இல்லை. வெவ்வேறு நாடுகளில் இருக்க, இது போனில் பேசும் விசயமும் இல்லை என்று அவளுக்கு நன்கு புரிய, தாராவின் வருகைக்கு காத்திருந்தாள்.

அடுத்து வந்த இரண்டு நாட்களும் பெரும் அமைதியில் கடந்தது. ஆம் அப்படியொரு அமைதி.. யாரும் யாரோடும் பேசிக்கொள்ளவில்லை. அவரவர் வேலை என்று அதிலேயே கவனமாய் இருக்க, தீபன், ராகா இருவரும் ஒருவரை ஒருவர் நினைக்க நேரமிருந்தாலும் பேசும் எண்ணம் வரவில்லை.

அனுராகாவிற்கு நிஜமாகவே நிறைய நிறைய வேலைகள்.. கிட்டத்தட்ட ஐந்திற்கும் மேலான மீட்டிங் அவளுக்கு இருந்தது. வேலை வேலை வேலை என்று இருக்க, தீபனோ அவனும் வேலையில் கவனம் செலுத்தினாலும், அனுராகா வேண்டும் என்றே தான் தன்னோடு பேசுவது இல்லை என்று எண்ணினான்..

காதலிக்கும் மனம் சில நேரம் சாத்தான் புகுந்தது போல்தானே..

அது தீபனுக்குள் நன்கு வேலை செய்ய “நீயே நோ சொன்னாலும் நீதான் எனக்கு…” என்ற பிடிவாதம் மேலும் ஆழமாய் வேர்விட்டது.

அனுராகா இதைப்பற்றி நீரஜாவிடம் சொல்ல “உன்னால எத்தனை நாளைக்கு அவனோட பழக முடியும்னு நினைக்கிற??!!” என்றாள் எதையும் மறைக்காது.

“ஹேய்..!! நீரு என்ன இப்படி சொல்ற..”

“உண்மைதான்.. எனக்கென்னவோ உனக்கும் அவனுக்கும் செட்டே ஆகாதுன்னு தோணுது..” என்று நீரஜா சொல்ல,

“ச்சே ச்சே.. தீபன் தவற வேற யாரும் எனக்கு செட் ஆகமாட்டாங்கன்னு எனக்கு தோணுது …” என்றாள் உறுதியாய்.

“அப்படியா??!!!” என்று நீரஜா கேட்டுவிட,

“ம்ம்ச் நீரு.. எஸ்.. ஐ லவ் ஹிம்… என்ன எங்களுக்குள்ள எல்லாமே ஒரு ஸ்மூத்னஸ் வர இன்னும் நாள் ஆகும்.. அதுக்கான டைம் அண்ட் ஸ்பேஸ் ரெண்டு பேருமே கொடுத்துக்கனும்..”

“ம்ம்ம் இதெல்லாம் நீ சொல்ற.. பட் தீபனுக்கு இதெல்லாம் புரியுமான்னு யோசி..” என்று அத்தோடு நீரு முடித்துக்கொள்ள, அனுராகாவின் மனம் ஒருநிலையில் இல்லை.

என்னவோ ஒரு தவிப்பு சொல்லாமல் கொள்ளாமல் வந்து அமர்ந்துகொண்டது.

தாராவிற்கு அழைத்தவள் “ம்மா நீ இங்க வா..” என்றும்கூட சொல்லிவிட்டாள்.

எதுவாகினும் அம்மாவிடம் சொல்லிவிட்டால், மனதில் இருக்கும் குழப்பங்கள் மறையும் என்பது அவளின் முடிவாய் இருக்க, சக்ரவர்த்தி இல்லத்தில் நடக்கும் பூஜைக்கான நாளும் நேரமும் கூட குறிக்கப்பட்டு விட்டது.

மிதுன் அந்த வேலையில் இறங்கிட, தீபனோ அனுராகாவோடு பேசவேயில்லை. அவனுக்குள் ஒருவித இறுக்கம் வந்து அமர்ந்துகொண்டது.

பேசியிருந்தால், ஒருவேளை அவளின் குழப்பங்கள் எல்லாம் இவனுக்கும் புரிந்திருக்குமோ என்னவோ, ஆனால் இப்போதோ அவள் தயங்கியதே மனதில் பெரும் விஸ்வரூபம் எடுத்தது அவனுக்கு..

நாள் செல்ல செல்ல அவனுக்குள் இப்போது ஒரு எரிச்சல்.. எங்கும் எதிலும். இதற்கு அனுராகா இரண்டொரு முறை அழைத்துவிட,

“வேலை இருக்கு ராகா..” என்றுவிட்டான்.

அன்றும்கூட அப்படிதான் அவள் அழைக்க “ராகா.. நான் கட்சி ஆபிஸ்ல இருக்கேன்..” என,

“ம்ம் ஓகே தீப்ஸ்..” என்று அவள் வைத்ததும், அலைபேசியை பார்த்தே சிறிது நேரம் அமர்திருக்க, அவர்களின் வேறொரு தோப்பு வீட்டினில் இருந்து மேனேஜர் அழைத்தார்.

“சுத்தி பந்தல் போடவா.. இல்லை எப்படி தம்பி..” என்று கேட்டு,

தீபனுக்கு எதுவும் விளங்கவில்லை..

“என்ன சொல்றீங்க??!!” என,

“மாவட்ட செயலாளர்கள் விருந்துக்கு தம்பி..” என,

“அது இன்னமும் முடிவு பண்ணலையே..” என்றான் தீபன்.

இதுவும் கூட அவனின் பொறுப்பே.. தேர்தலுக்கு முன்னே அனைவரையும் அழைத்து ஒரு விருந்து போல் வைத்து, இன்னாருக்கு இன்ன வேலை, இவ்வளவு பணம் என்று அங்கேதான் முடிவு செய்வர்.

எப்போதும் சக்ரவர்த்தி, மற்றும் கட்சியின் அனைத்து முக்கிய நபர்களும் அன்று அங்கே இருப்பர்.

இப்போதோ அவனுக்கே தெரியாது அங்கே ஏற்பாடுகள் ஆரம்பிக்க, போனை வைத்தவன் நேராய் அங்கே சென்று,        

“இதெல்லாம் செய்ங்கன்னு யார் சொன்னா..” என்று தீபன் கேட்கையில், அங்கே வேலைக்கு என்று வந்தவர்கள் எல்லாம் அமைதியாய் இருக்க,

“உங்களைத்தான்.. யார் சொன்னா??!!” என்று அடுத்த கத்தலுக்கு,

“நான்தான் தீப்ஸ்…” என்று அமரிக்கையாய் பதில் வந்தது மிதுனிடம் இருந்து.

திரும்பிப் பார்த்தவன் கேள்வியாய் நோக்க “என்னடா.. மாவட்ட செயலாளர்களுக்கு எல்லாம் எப்பவும் நம்ம பார்ம்ல விருந்து கொடுப்போம் தானே.. அதுக்கான ஏற்பாடு தான்..” என,

“வழக்கம் தான்.. ஆனா இன்னும் எதுவுமே டிசைட் பண்ணலையே..” என்று மிதுன் சொல்ல,

“பண்ணியாச்சுடா.. அப்பாக்கு டைம் இல்லை.. சோ என்னை பார்த்துக்க சொல்லிட்டார்..” என,

“எப்போ சொன்னார்??!!” என்றான் நெற்றி சுருக்கி..

“டூ டேஸ் பேக்…” என்றவன் அங்கிருந்தவர்களிடம் வேலையை பாருங்கள் என்று சைகை செய்ய,

“அப்பா இங்க இல்லாதப்போ.. இதை ஏன் செய்யனும்னு.. அவருக்கு எப்போ டைமோ அப்போ செய்யலாம்…” என்று தீபனும் சொல்ல,

“அப்பா இல்லைன்னா என்னடா.. நம்ம இருக்கோம்தானே.. நான் எல்லாருக்கும் சொல்லிட்டேன்.. நாளைக்கு நைட் எல்லாரும் வந்திடுவாங்க.. நீ ஒன்னும் வொர்ரி பண்ணிக்காத.. இதை நான் பார்த்துக்கிறேன்..” என்று மிதுன் சொல்லிவிட்டு போக,

தீபனுக்கு ஆச்சர்யமாய் இருந்தது அவன் சொன்னதை கேட்டு..

அப்பா அல்லாது.. அப்பாவின் முடிவினை கேட்காது என்று எதுவும் மிதுன் இதுநாள் வரைக்கும் செய்ததில்லை.. இன்றோ??!!

‘இவனுக்கு என்னாச்சு…’ என்றுதான் பார்த்தான் தீபன்.. 

மிதுன்… அவனின் இந்த செயல்கள்.. எல்லாம் சாதாரணமாய் இருந்தாலும் அதனை காய் நகர்த்தலின் பின்னும் ஒரு அசாதாரணம் இருந்துகொண்டே தான் இருக்கிறது என்பது தீபன் மனது லேசாய் உணரத் தொடங்கியது..

ஏன் இப்படி செய்கிறான்??!!!  என்ற கேள்வி வரவுமே,

“சரி பண்ணட்டும்…” என்றும் அவனே சொல்லிக்கொள்ள, இருந்தும் “அப்பா இல்லாம எப்படி…” என்ற தயக்கம்..

திரும்பவும் கூட ஒருமுறை மிதுனிடம் சொன்னான்,

“அப்பா நின்னு செய்றது வேற.. நம்ம செய்றது வேற மிதுன்..” என்று,

“ஏன்??!! நீ அரேஜ் பண்றப்போ கூட அப்பா லாஸ்ட் மினிட்ல தான் வருவார்.. இப்போ நான் பண்றேன்.. அப்பா வந்தா சந்தோசம்தான்.. வரலைன்னா அப்பா இடத்துல இருந்து நானே பார்த்துக்கிறேன்..” என,

‘அப்பாவின் இடத்தில் மிதுனா?!!!’ என்று பார்த்தான் தீபன்..

அவன் – காதல் என்றானபின்னே தயக்கங்கள் எதற்கு??!!

அவள் – தயக்கங்கள் எல்லாம் தகர்த்தெரியவே ஆசை

காதல் – தயக்கமோ, மயக்கமோ… நல்லா பண்றீங்கடா நீங்க!!!

Advertisement