Advertisement

                     நான் இனி நீ – 20

கோபங்கள் வருவது மனித இயல்பு.. ஆனால் அதை எப்படி வெளிப்படுத்துகிறோம் என்பதில் தான் இருக்கிறது நாம் மனிதன் தானா என்ற கேள்வி. முன்கோபம் இருக்கலாம்.. ஆனால் மூடத்தனமும் மூர்க்கத்தனமும் இருக்கக் கூடாதே..

இங்கேயோ தீபனும் சரி, அனுராகாவும் சரி, இதுநாள் வரைக்கும் யாருக்காகவும் அனுசரித்து போகாத ஆட்கள். ஏன் அனுசரித்துப் போகவேண்டும் என்ற நிலையில் இருந்தவர்கள். ஆக சிறு சிறு விஷயங்கள் கூட சண்டையாய் இருப்பின் அவர்களிடம் அது மிகபெரிய பிரதிபலிப்பே கொடுத்தது.  

அப்படியிருக்கையில் இருவரின் கோபங்களும் ஒருவரை ஒருவர் வீழ்த்தவே தயாராய் இருந்தது. இருவரின் பார்வையும் நேருக்கு நேராய் இருக்க, ‘நீ செய்வது துளியும் எனக்கு பிடிக்கவில்லை..’ என்று அவளும்,

‘நான் இப்படிதான்…’ என்று அவனும் இருக்க, சுற்றி இருந்த நண்பர்கள் தான் இவர்கள் இருவரையும் சமாதானம் செய்ய முடியாது தவித்துப் போயினர்.

அதிலும் தீபன் கேட்ட “உனக்கு இவளோட பிரண்ட்ஷிப் தேவையா??!!” என்ற கேள்வி அனுவை இன்னும் உச்ச பட்ச கோபத்திற்கு ஆளாக்கி இருந்தது.

“நான் யாரோட பேசணும் பழகனும் எல்லாம் நீ டிசைட் பண்ண வேண்டியது இல்லை தீபன்..” என,

“நான் அவ்வளோ முட்டாள் இல்லை… நீரஜா உன்னைப் பத்தி பேசுறதா இருந்தாலும், அதுவும் என் முன்னாடி யோசிச்சுதான் பேசணும். அப்படிருக்க நம்ம ரிலேஷன்ஷிப் பத்தி பேச யாருக்குமே எந்த ரைட்ஸும் இல்லை…” என்றவன்,

“உனக்கு வேணும்னா இது நார்மல் ரிலேஷன்ஷிப்பா இருக்கலாம்.. பட் எனக்கு அப்படியில்லை..” என்றவன் பார்வை இப்போது வேறெங்கோ காண,

“என்ன அப்படியில்லை..??!!” என்றாள் அனுராகாவும்..

“நீ தான் பிஸ்னஸ் ப்ளட் ஆச்சே.. கணக்கு போட்டு பாரு..” என்றவன், “டேய்.. சாரி… டோட்டலா மூட் ஆப்.. நான் பார் போறேன்…” என்று கிளம்ப,

அனுராகாவிற்கு பேசிக்கொண்டு இருக்கும்போதே இப்படி தீபன் சொன்னதும்,  அதுவும் நண்பர்கள் முன்னே இப்படி நடந்துகொண்டதும் எல்லாம் சேர்த்து மேலும் மேலும் ஆத்திரம் தான் கூடியது.

என்னை நீ உதாசீனம் செய்வதா என்று..??!!!

அவனைப் பார்த்தவளோ “மூட் ஆப் உனக்கு மட்டுமில்லை… நீ கூப்பிட்டன்னு கிளம்பி வந்தேன் இல்லையா எனக்கும் தான்.. சோ நீ பார்ல என்ன ஆர்டர் பண்றியோ அது தான் எனக்கும்..” என,

புனீத் “டேய் இவங்க ரெண்டு பெரும் நமக்கு கடைசி வரைக்கும் எதுவும் ட்ரீட் வைக்கப் போறதில்லை.. சாப்பாடா இருந்தாலும் சரி. தண்ணியா இருந்தாலும் சரி..” என்று தேவ்விடம் சொல்ல,

நீரஜாவோ “அனு…” என்று இப்போதும் அவளை அதட்ட, “அவ என்னோடதானே வர்றா…” என்றான் தீபனும்.. 

“டேய் என்னடா ரெண்டு பேரும்…” என்று தேவ் அதட்ட,

“பின்ன என்னடா?!! நான் ரிலாக்ஸா இப்படி வர்றதே பெருசு.. அப்டியிருக்கப்போ… ம்ம்ச்…” என்ற எரிச்சலில் மேஜை மீதிருந்த கண்ணாடி கிளாசை தட்டிவிட, அதுவோ உருண்டு விழுந்து சில்லு சில்லாய் உடைந்து போனது.

சத்தம் கேட்டு பேரர் வந்திட, அதுவும் அங்கே தீபன் யார் என்று தெரியும் என்பதால் “டூ மினிட்ஸ்ல கிளீன் பண்ணிடுவோம்..” என்று பணிவாகவே சொல்ல,

“சாரி…” என்றான் கைகள் உயர்த்தி..

“இட்ஸ் ஓகே சார்..” என்று பேரர் சொல்ல, அதன் பின் அங்கே சுத்தம் செய்து கிளம்பவும்,    

அப்போதும் சும்மா இல்லை, “இப்போ சந்தோசமா??!! அவன்கிட்ட என்னை சாரி கேட்க வச்சிட்ட…” என்றான்  அனுராகாவைப் பார்த்து.

“பண்றதெல்லாம் நீ பண்ணிட்டு இப்போ என்னை சொல்றியா??!” என்று அதற்கும் எகிறியவள் “நான் கிளம்புறேன்..” என்று திரும்பிட,

நீரஜாவோ “நீ இரு அனு.. நான் கிளம்புறேன்…” என்றிட்டாள்.

“நீரு..” என்று அனு சொல்லும்போதே, “இல்ல நான் கிளம்புறேன்..” என்றவள் கிளம்பியே சென்றுவிட்டாள்.

அனுராகாவிற்கு இப்படி தன்னுடைய தோழி கிளம்பியது மேலும் ஒரு கோபம் கொடுக்க “இப்போ உனக்கு சந்தோசமா??!!!” என்றாள் அவனைப் பார்த்து.

அவனோ “நான் போக சொல்லலையே..” என,

தேவ் “அனு நான் போய் பேசுறேன் நீருக்கிட்ட…” என்று அவனும் கிளம்பிவிட்டான்..

இவர்கள் இருவரும் ஒருவரை முறைத்துக்கொண்டு நிற்க ‘தெரியாம இவன்கிட்ட ட்ரீட் கேட்டுட்டேன்…’ என்று எண்ணியது புனீத் தான்.

இப்படியாகும் என்று யாரும் நினைக்கவில்லை.. இவர்களின் சண்டை என்பது அவர்களுக்குள் இருக்கும்வரைக்கும் சரி, அது மற்றவர்களை பாதிக்கையில் யார்தான் என்ன சொல்லிட முடியும்.

புனீத் மேலும் சிறிது நேரம் பார்த்தவன் “டேய் தீப்ஸ் நானும் கிளம்புறேன் டா.. நீங்க எப்படி…” என,

“கிளம்புறவங்க எல்லாம் அப்படியே கிளம்புங்க..” என்றான் அவனோ பொதுவாய்.

அனுராகாவிற்கோ ‘நீ சொல்லி நான் கிளம்புவதா..’ என்ற பிடிவாதம் வர,  பட்டென்று இருக்கையில் அமர்ந்துகொண்டாள்.

புனீத் பார்த்தவன் “சண்டை போடாம சீக்கிரம் வீட்டுக்கு போற வழி பாருங்க..” என்றுவிட்டு அவனும் கிளம்ப,

“டேய்.. நீரு தேவ் நீ எல்லாம் வேற ஹோட்டல்ல கூட டின்னர் சாப்பிட்டு போங்க.. என் நேம் சொல்லிடு நான் ஆள் அனுப்பிக்கிறேன்..” என்றிட,

“போதும்டா…!!” என்று புனீத் கிளம்பிவிட்டான்.     

தீபன் இப்போது அவளின் அருகே அமராது, எதிரே அமர, அவளோ பார்வையை திருப்பிக்கொள்ள,  

“ஆமா உன் ஆபிஸ்ல என் ஆள் ஒருத்தன் இருக்கான்.. முடிஞ்சா கண்டு பிடிச்சிக்கோ.. அண்ட் ஒன்திங் உன்னை மானிடர் பண்ண வைக்கல.. உனக்கு எதுவும் பிரச்னைன்னா அது உனக்கு முன்னாடி எனக்கு தெரியனும்னு தான் வைச்சேன் போதுமா.. போ.. போறதுன்னா இப்போ போ..” என்றிட, அனுராகா அவன் சொன்ன வார்த்தைகள் கேட்டு உறைந்துதான் போனாள்.

‘உனக்கு ஒரு பிரச்னைன்னா அது உனக்கு முன்னாடி எனக்கு தெரியனும்…’

இதுவே அவளின் செவிகளில் இன்னமும் ஒலித்துக்கொண்டு இருக்க, இதுநாள் வரைக்கும் அவளின் அப்பா கூட அப்படி சொன்னது இல்லை என்றே தோன்றியது.

எப்போதும் அம்மா தான் அவளுக்கு. அப்பா அவளின் விருப்பங்களுக்கு இதுநாள் வரைக்கும் தடையிட்டது இல்லை. சொல்லப்போனால் அவளின் விசயங்களில் லோகேஸ்வரன் தலையிட்டது இல்லை. அவரைப் பொறுத்தமட்டில் தொழில் மட்டுமே எல்லாம். வீட்டினில் இருக்கும் நேரம் மகள் மனைவியோடு நேரம் செலவழிப்பார்.

இதற்கும், தாராவுமே கூட அனுராகாவின் தனிப்பட்ட விசயங்களில் அத்தனை மூக்கை நுழைக்கமாட்டார். மகளுக்கு தவறாய் ஒன்று நடக்காத வரை, மகள் தவறாய் ஒன்றை செய்யாத வரை தாரா தள்ளித்தான் நிற்பார்..

ஆனால் இதெல்லாம் இல்லாது தீபனின் இந்த உரிமையும், அவனின் இப்பேச்சும் ஏனோ இப்போது அவளுக்கு ஒரு பிடிப்பை கொடுத்தது. அவனை இன்னமும் பிடிக்கவும் செய்தது.

அனுராகா அப்படியே தான் இருக்க ‘என்ன ஒரு ரியாக்சனும் கொடுக்காம இருக்கா..’ என்றுதான் பார்த்தான் தீபன் சக்ரவர்த்தி.

வட்டம், மாவட்டம் ஆரம்பித்து மத்தியில் இருக்கும் ஆட்கள் வரை எத்தனை அரசியல் பிரமுகர்களை பார்த்திருக்கிறான். யாரின் முகம் பார்த்தும் இவர்கள் இதைதான் நினைக்கிறார்கள் என்று சரியாய் யூகிப்பான். இன்றோ கண்ணெதிரே ஒருத்தி அமர்ந்திருக்கிறாள், ஆனால் அவள் என்ன எண்ணுகிறாள் என்று சிறிதும் அவனால் கண்டுபிடிக்கவே முடியவில்லை.  

தீபனின் பார்வை அனுராகாவின் முகத்தினில் இருக்க அவளோ வெகு சாதாரணமாய் “ஒரு ஜூஸ் ஆர்டர் பண்ணு..” என,

“என்னது??!!!” என்றான் புரியாது.

இவள் நிஜமாய் தான் சொல்கிறாளா என்ற கேள்வி அவன் மனதில்.

“ஜூஸ் சொல்லுன்னு சொன்னேன்..” என்றவளோ பேரர் எங்கே என்று பார்க்க, அதற்குள் தீபனே அழைத்துவிட்டான்.

அவளுக்கு ஜூஸ் சொல்ல, “ம்ம் உனக்கும் ஏதாவது சொல்லு..” என்று அனுராகா சொல்ல, “எனக்கு தலை சூடேறி போச்சு.. ஜூஸ் எல்லாம் போதாது..” என்று அவனும் சொல்லிட,

அனுராகவோ “ஒன் லார்ஜ் வெஷ்பர்…” என்று அவனுக்கும் சேர்த்து ஆர்டர் செய்ய, அவனோ அதிசயித்து பார்த்தான்.

அவன் எப்போதும் அருந்தும் மதுவகை அது.. காக்டெயில் ரகம். அதை சரியாய் அவள் சொல்ல, பேரர் செல்லவும்,

“ஹேய் உனக்கு எப்படி தெரியும்..” என்றான் ஒரு சிறுவனின் மகிழ்ச்சி போல.

அவளோ பதிலே சொல்லாது சிரித்துகொள்ள “சொல்லு ராகா..” என்று அவன் திரும்பக் கேட்க, “உன்னோட பீகேவியர்க்கு இதான் உன்னோட வெரைட்டின்னு நினைச்சேன்..” என்றவள்,

“தேங்க்ஸ்….” என்றாள் சன்னக் குரலில்.

“என்னது என்ன சொன்ன??!!” என்று அவன் புரியாது கேட்க, “சொல்லியாச்சு திரும்ப எல்லாம் சொல்ல முடியாது..” என்கையில் பேரர் வந்து இவர்கள் கேட்டதை வைத்துவிட்டு போக, இருவரின் கோபமும் எங்கே போனது என்று தெரியவில்லை

சற்று முன்பு வரை துப்பாக்கி வைத்து சுடுவேன் என்கிற ரீதியில் சண்டை இட்ட ஆட்களா இவர்கள் என்றால் யாரும் நம்பிட கூட மாட்டார்கள்.

தீபனுக்கோ அனுராகாவின் மற்றம் ஒன்றுமே புரியவில்லை.. அவளும் அதை சொல்லவில்லை. மாறாக அவள் இயல்பாய் பேச, அவனோ இப்போதும் பார்வையை அகற்றாது இருக்க,

“உன்னோட ட்ரின்க் இங்க இருக்கு..” என்று அவள் சுட்டிக்காட்ட,

“அதைவிட நீதான் ஹாட் ட்ரின்க்….” என்று அவனும் சொல்ல, “பட் நான் கூல் ஆகிட்டேன்..” என்றாள் இவளோ சிரித்தபடி.

“பார்த்தாலே தெரியுதே…” என்றபடி அவனும் அவனின் காக்டெயில் பருக, அவளோ ஜூஸில் இதழ் பொறுத்த “ஜூஸ் மட்டும் போதுமா…” என்றான்..

“ம்ம் போதும்..” என்றவள், அவனை நேராய்ப் பார்த்து “நீ எப்படி பட்ட ஆளு தெரியுமா??!!” என்றாள்.

“எப்படி??!!!”

“உன்னைப் போல ஒருத்தனை மீட் பண்ணிடவே கூடாதுன்னும் நினைக்க வைக்கிற.. அட் தி சேம் டைம்.. உன்னைப் போல ஒருத்தனை மிஸ் பண்ணிட கூடாதுன்னும் நினைக்க வைக்கிற..” என, பட்டென்று தீபனின் கண்களில் ஒரு பளீச்சிடல்.

“ம்ம் அப்புறம்…!!!”

“அவ்வளோதான்..”

“இதை விட நீ சொல்ற இந்த வோர்ட்ஸ் செம போதையா இருக்கு ராகா..” என்றவன் “இன்னொரு லார்ஜ்…” என்று ஆர்டர் செய்ய,

“ம்ம்ச் தீப்ஸ் போதும்..” என்றாள் கொஞ்சம் அதட்டலாய்..

“ம்ம்ஹும்.. இது சந்தோசத்துக்கு..” என்றவன், இன்னொரு லார்ஜையும் முடிக்க, அவன் அவனாகவே இல்லை..

அனுராகா கூறிய அந்த சிறு விஷயம், அவனுள் அப்படியொரு மாற்றம் கொடுத்திருந்தது. அவள் என்னவோ அவளின் மனதினில் இருந்ததை சொன்னாள். ஆனால் தீபனோ எதோ வரம் கிடைத்தது போல் உளறிக்கொண்டு இருந்தான்..

ஆம் உளறல் தான்….

தீபனுக்கும் அனுராகாவிற்கும் பிடித்த உளறல் அது..

காதல் சொல்லும் உளறல்..!!

காதலிக்க வைக்கும் உளறல்..!!         

இருவரும் கிளம்பி அவரவர் வீடு செல்லும் முன்னே போதும் போதும் என்றாகிப்போனது. வீட்டிற்கு வந்தபின்னே கூட அனுராகாவிற்கு அவனின் நியாபகம் மட்டுமே. ஆனால் வந்ததுமே நீரஜாவிற்கு அழைத்துப் பேச

“அனு ப்ளீஸ்.. கொஞ்சம் என்னை தனியா ரிலாக்ஸ் பண்ண விடு..” என்றுவிட்டாள்.

நீரஜா அப்படி கேட்டதும் தவறுதான்.. தீபன் அப்படி கேட்டதும் தவறுதான் என்று தோன்றியது அனுராகாவிற்கு. ஆனால் இருவருக்காகவும் அனுராகா மற்றவரோடு ஏற்றுக்கொண்டு பேச தயாராய் இல்லை. அவரவர் அவரவர் நிலையில் இருக்கட்டும்.. அதுவே ஒருநாள் சரியாகிவிடும் என்ற நிலையில் இருந்தாள்.     

ஆனாலும் எல்லாமே தன்னால் தானோ என்று இருந்தது. தான் ஏன் இப்படி நடந்துகொள்கிறோம் என்றே விளங்கவில்லை. யாரோ மீதிருந்த கோபத்தினை தீபன் மீது காட்டியிருக்கிறோம் என்று இப்போது நன்கு புரிந்தது..

அவன் என்ன கேட்டுவிட்டான் உனக்கு உன் அலுவலகத்தில் எதுவும் பிரச்னையா என்றுதானே கேட்டான்.. அதற்கு பொறுமையாய் பேசியிருந்தால் என்ன தவறாகியிருக்கும்?? என்ற கேள்வி எழாமல் இல்லை.

“ச்சே ச்சே நீ சரியில்லை அனு..” என்று தன்னை தானே கடிந்தவளுக்கு, தீபனின் வார்த்தைகள் நினைவு வந்தது.

“நீ.. நீ இருக்கப் பார்த்தியா.. ரொம்ப திமிர் டி உனக்கு…” என்றவனோ “ஆனா அந்த திமிர் தான் உன்னை செம்ம பிகர் சொல்ல வச்சுது…” என்று அவளின் செவியின் அருகே உளற,

இப்போதும் அவளுக்கு அவன் சொன்னது எண்ணி செவிகள் கூசியது.

‘ராஸ்கல்…’ என்று அவளின் இதழ்கள் முணுமுணுக்க, பாத் டப்பில் இருந்த நீரின் கதகதப்பை விட, தீபனின் கரங்கள் அவளை அணைத்த கதகதப்பு இன்னமும் அவள் உணர,

‘ச்சே சரியான ராஸ்கல் தான்..’ என்று எண்ணிக்கொண்டு அவனுக்கே அழைப்பு விடுத்தாள்.

வெகு நேரம் அழைப்பு சென்றும் எடுக்கப் படவில்லை என்றதும் ‘தூங்கிட்டானோ..’ என்று விட்டுவிட்டாள்.

உண்மையும் அதுதான்.. தீபன் வீட்டிற்கு வந்து நன்கு உறங்கியிருந்தான். என்னவோ அப்படியொரு அசதி உடலில் இருந்தாலும் மனது மிக மிக மகிழ்ச்சியாய் இருப்பது போலிருக்க, உறங்கிப்போனான்.

யாரோடும் பேசிடவும் அவனுக்கு மனதில்லை.. அவனின் நண்பர்கள், மற்றும் நாகா தர்மா என்று அத்தனை பேரின் அழைப்பையும் ஏற்கவில்லை.

மறுநாள் காலையில் வெகு நேரம் கழித்த தீபன் முழிக்க, நேரம் பார்த்தவன், பின் வேக வேகமாய் தயாராகி வர, கீழேயோ மிதுன் சக்கரவர்த்தி உஷாவோடு பேசிக்கொண்டு இருந்தான்.     

மிதுன் திடீரென்று சென்னை வருவான் என்று உஷாவும் எண்ணவில்லை, தீபனும் எண்ணவில்லை. உஷாவிற்கு சந்தோசம் தான் இருந்தாலும், பிள்ளைகள் இருவரும் இங்கே இருந்தாலும் வீட்டினில் இருக்கப் போவதில்லை என்பதால்,

வழக்கம்போல “என்னடா திடீர்னு..” என்றுதான் கேட்டார்.

தீபன் சக்ரவர்த்தியோ “எதுவும் பிரச்சனையா??!!” என்று அவர்களை நெருங்கியபடி கேட்க,

“அதெல்லாம் ஒண்ணுமில்லை.. வேலை இருந்தது சோ வந்துட்டேன்.. ம்மா.. அப்பா உன்னை அங்க வரச் சொன்னாராமே..” என்றான் பதிலை அம்மாவிற்கு.

தீபனும் இவர்கள் அருகில் அமர, உஷா “என்ன இவ்வளோ லேட்..” என்றபடி   “ஆமாடா.. பட் இங்க சில விசேஷங்கள் எல்லாம் இருக்கு.. அதெல்லாம் முடிச்சிட்டு தான் போகணும்..” என்றார் பெரிய மகனிடம்.

“நைட் தூங்க லேட்டாகிடுச்சும்மா..” என்றவன்  “என்ன விசேசம்??” என்றான்.

“அது நிறைய இருக்கு.. எப்பவும் எலெக்சன் முன்னாடி வீட்ல ஹோமம் செய்வோமே அது செய்யணும்…” என்றவர், “இந்த வருஷம் மிஸ்டர். லோகேஸ்வரன் பேமிலியை இன்வைட் பண்ணலாம்னு இருக்கேன்..” என, தீபனுக்கு முகம் யோசனையில் மாறியது என்றால், மிதுன் சக்ரவர்த்திக்கு நொடியில் ஒரு வெற்றிப் புன்னகை வந்து போனது..

Advertisement