Advertisement

நான் இனி நீ – 19

அனுராகவிடம் இப்படியொரு மாற்றம் வரும் என்று பிரஷாந்த் எதிர்பார்க்கவேயில்லை. அடித்திருக்கிறாள்… அதை உணர சில நொடிகள் பிடித்தது அவனுக்கு..

அதிர்ந்து நோக்கினாலும், அவன் மனதினில் அந்த நொடி வன்மம் வந்து அமர்ந்துகொள்ள “அனு…!!!” என்றவனின் முகத்தினில் இப்போது புன்னகை..

உள்ளத்தில் பகை வைத்து, உதட்டில் உறவாட எண்ணிவிட்டான்…

ஆனால் அடித்தபின்னும் கூட அனுராகாவின் கோபம் குறையவில்லை.. எப்படியான வார்த்தைகள் அது..

‘வேறு எவனும் கிடைத்துவிட்டானா??!!’ என்று சொல்லாமல் சொல்கிறான்.. அதன் அர்த்தம் அதுதானே..

‘என்ன தைரியம் இவனுக்கு..’ என்றுதான் பார்த்தாள்.

ஆனால் அவனோ , “என்ன அனு.. உனக்கு ஏன் இவ்வளோ கோபம் வருது…” என்று இயல்பாய் கேட்க,

“என்ன பிரஷாந்த் ??!! நடிக்கிறியா??!!” என்று சரியாய் அனுராகா யூகித்து கேட்க,

“ஓ..!!! காட்… நான் ஏன் நடிக்கணும்.. அதுவும் உன்கிட்ட..” என்றான் ஆச்சர்யமாய்..

அனுராகா கண்கள் இடுக்கிப் பார்க்க, “பிலீவ் மீ அனு…” எனும்போதே, “இனப்…” என்று கைகள் உயர்த்தியவள்,

“இவ்வளோதான் மரியாதை.. பார்ட்டி இன்சார்ஜ் நீங்க பார்க்கறீங்க அவ்வளோதானே.. உங்களுக்கு என்ன தேவையோ இங்க ரிசப்சன்ல சொன்னா செய்வாங்க… ஓகே வா..” என்று சாதாரணம் போலவே சொன்னாலும், அவளின் குரலில் முழுக்க முழுக்க ஆளுமை மட்டுமே இருக்க,

பிரஷாந்தின் மனதோ ‘இருக்கு டி உனக்கு…’ என்றுதான் எண்ணியது..

இரண்டு நிமிடம் அமைதியாய் இருந்தவன் “ஓகே அனு தேங்க்ஸ்..” என்றவன் கிளம்பிட, அப்படியே தலையை பிடித்து அமர்ந்துகொண்டாள் அனுராகா.

அடிப்பாள் என்று அவளும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவன் சொன்ன வார்த்தைகள் அவளை அப்படி செய்ய வைத்தது.

ஆழ மூச்சுக்களை எடுத்துவிட்டு, தன்னை சமன் செய்துகொள்ள முயல அவளின் பிஏ, உள்ளே வரவும் “இந்த பார்டி இன்சார்ஜ் எல்லாம் நீங்க யாரும் இங்க ஹேண்டில் பண்ண கூடாதா என்ன??!! இதுக்காக பிரஷாந்த் அங்க இருந்து வரணுமா..” என்றாள் சாதாரணமாய் கேட்பதுபோல்.

“மேம்.. எப்பவும் பார்டி செலிபிரேட் செய்றாங்களோ அங்க பிரான்ச் ஸ்டாப்ஸ் தான் இன்சார்ஜ் எடுப்பாங்க.. பட் பிரஷாந்த் எப்படி இதுல வந்தார் தெரியலை..” என,

“ஓ..!!!” என்றவள் அவளின் அப்பாவின் எண்ணிற்கு அழைக்கப் போக, “ச்சே இதெல்லாம் ஒரு விசயம்னு இதை அப்பா வரைக்கும் கொண்டு போகனுமா…” என்று தோன்றவும்,  

“அப்பாவோட பிஏக்கு கால் பண்ணி கொடுங்க..” என்றாள் யோசனையாய்.

பிரஷாந்த்.. அத்தனை சீக்கிரம் இங்கே கால் வைக்க முடியாது என்றே எண்ணியிருந்தாள். அப்படியிருக்க அவன் வந்தது அவளால் நம்ப முடியவில்லை.. அப்பாவிற்கு இதெல்லாம் தெரிந்துதான் நடக்கிறதா என்ற எண்ணம்.. லோகேஸ்வரனுக்கு தெரிந்திருந்தால் கண்டிப்பாய் இவனை இங்கே வர விட்டிருக்கவே மாட்டார்..

அப்படியிருக்க??!! என்று அவள் யோசிக்கும்போதே “மேம்…” என்று பிஏ போனை நீட்ட, அவளின் அப்பாவின் பிஏவோடு பேசியவளுக்கு சாதகமாய் எந்த செய்தியும் கிடைக்கவில்லை.

‘போர்ட் மெம்பர்ஸ் எல்லாம் லாஸ்ட் இயர் பார்ட்டி பிரஷாந்த் நல்லா ஆர்கனைஸ் பண்ணதுனால இந்த வருசமும் அவரையே பண்ண சொல்லி முடிவு பண்ணாங்க..’ என்றிட,

“ஓகே…” என்றுமட்டும் சொல்லி வைத்துவிட்டாள்.

ஆனாலும் அவளுக்கு பிரஷாந்த் இங்கிருப்பதில் சுத்தமாய் உடன்பாடில்லை.. முடிந்த அளவு அவனை நெருங்கவிடாது இருக்க வேண்டும் என்ற முடிவு பிறக்க, “இனி பிரஷாந்த் எப்போ இங்க வந்தாலும் நீங்களே பார்த்துக்கோங்க.. என்னை பார்க்கணும் சொன்னா பாசிபிள் இல்லை சொல்லிடுங்க..” என்றுவிட்டாள்.

ஆனால் அவளுக்கும் உள்மனது சொல்லியது, இதெல்லாம் இதோடு முடியப்போவதில்லை என்று..  மேலும் சிறிது நேரம் அங்கே இருந்தவள், பின் நீரஜாவைப் பார்க்கக் கிளம்பிவிட்டாள்.      

அங்கே டெல்லியிலோ சக்ரவர்த்தி, பல்ராம் சேட்டினை அழைத்து தீபனோ சமரசமாய் போகும்படி சொல்ல, சேட் அனைத்திற்கும் தலையை தலையை உருட்டினார்.

“தீபன் கிட்ட நான் பேசிக்கிறேன் சேட்.. நீங்க எப்பவும் என்ன செய்வீங்களோ அப்படியே செய்ங்க.. அரசியல்ல இப்படி நம்மளோட இருக்கிறவங்க கூடவே சண்டை வர்றது எல்லாம் சகஜம்தானே.. அதுக்காக நீங்களும் ஆள் அனுப்பியிருக்க வேணாம்..” என,

சேட்டோ பதில் சொல்லாது மிதுன் முகம் பார்த்தார்.

இப்போது சக்ரவர்த்தியும் மகனைப் பார்க்க “அது.. நானும் அதைத்தான் ப்பா வர்றப்போ அவர்க்கிட்ட கேட்டேன்..” என்று மிதுன் சொல்ல,

“எது எப்படியோ.. ஆனா தீபன் மேல ஒரு துரும்பு பட்டிருந்தா கூட நான் இப்படி பேசிட்டிருப்பேனா தெரியாது..” என்ற சக்ரவர்த்தி, “அவன் எல்லாத்தையும் விட முக்கியம்.. என் மகன் அப்படிங்கிறதுக்காக சொல்லலை.. ஆனாலும் சேட் இனிமே எதுவா இருந்தாலும் என்னோட இல்லை மிதுனோட வச்சிக்கோங்க.. தீபன் பக்கம் உங்க பார்வை கூட போகக்கூடாது..” என்று வெளிப்படையாய் மிரட்டாது மிரட்ட,

“அதுக்கென்ன சக்ரவர்த்தி ஜி.. நீங்க சொல்லிட்டா சரி..” என்று பல்ராம் சேட் இருக்காராம் கூப்ப,

“ம்ம் நல்லது…” என்ற சக்ரவர்த்தி, “பார்த்துக்கோ மிதுன்..” என்று சொல்லி கிளம்பிவிட, அவர் கிளம்பிய சிறிது நேரம் வரைக்குமே அங்கே அமைதி தான் நிலவியது.. 

மிதுன் சக்ரவர்த்தி குறுக்கும் நெடுக்குமாய் நடந்தவன் சேட் முகம் பார்க்க, அவரோ தீவிர யோசனையில் இருப்பது தெரிந்தது. 

“சேட் அப்பா சொன்னதை கேட்டீங்க தானே… பின்ன என்ன இவ்வளோ யோசனை..” என்று மிதுன் சொல்ல,

“அதுக்கில்ல பேட்டா… ஆனா..” என்று சேட் இழுக்க,

“எல்லாமே தப்பா பண்ணது நீங்கதானே சேட்…” என்று மிதுன் சொல்லும்போதே, பல்ராம் சேட்டிற்கு உள்ளே நடுக்கம் தொடங்கியது.

“அதெல்லாம் இல்ல பேட்டா.. இப்படியாகும் நானே நினைக்கல..” என்று கைகள் பிசைய…

“நினைச்சிருக்கணும்…” என்றான் மிதுன் அழுத்தம் திருத்தமாய்..

“இல்லை மிதுன்… தீபன் தனியா இருக்கான்னு நீங்க நியூஸ் சொன்னதுமே நான் சரியாதான் ப்ளான் பண்ணி எல்லாரையும் அனுப்பினேன்.. ஆனா, பதிலுக்கு அவனும் அங்க ஆளுங்களை இறக்குவான்னு நினைக்கல..” என,

“ம்ம்.. நல்ல சந்தர்ப்பம்… உங்கனால அந்த ஷர்மானால எல்லாம் போச்சு.. பேசாம என் தம்பிக்கு பதிலா உங்க ரெண்டுபேரையும் நானே போட்டுத்தள்ளிட்டா நல்லது போல…” என்று மிதுன் கோபத்தினை அடக்காது சொல்ல,

“அய்யோ..!! பேட்டா…” என்று பல்ராம் அஞ்சி எழுந்தே விட்டார்..

அந்த மனிதருக்கு, அன்று தீபன் வந்து துப்பாக்கி காட்டி மிரட்டியதில் இருந்து எப்போது என்ன நடக்கும் என்ற பயம் இருந்துகொண்டே தான் இருந்தது.. பணம் மட்டுமே குறிக்கோளாய் வைத்து, பல அரசியல் பிரமுகர்களுக்கு அவர் அடிமட்ட வேலைப் பார்ப்பது அனைவரும் அறிந்ததே..

இப்போது வரைக்கும் அதில் எவ்வித பிரச்னையும் இருந்ததில்லை. ஆனால்  என்று இந்த மிதுன் சக்ரவர்த்தி கையினில் வகையாய் மாட்டினாரோ அன்றிலிருந்து ஆரம்பித்தது எல்லாம்..

அவனிடம் கூட்டு சேர்ந்து அவர் தீபனை அழிக்க எண்ணவில்லை.. வகையாய் மாட்டிக்கொண்டு வேறு வழியில்லாது மிதுன் சொல்வதை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் என்பதே நிஜம்..

“என்ன சேட்… என்ன?? உயிர் பயமா… அப்போ உங்க பையன்.. அவனை யோசிக்க வேணாமா நீங்க..” என்று மிதுன் சிரிக்க,

“இல்ல இல்ல பேட்டா..  நெக்ஸ்ட் டைம்.. எல்லாம் சரியா பண்ணிடலாம்..” என்று சேட் சொல்ல,

“ம்ம்.. பண்ணனும்.. அடுத்த டைம் சரியா மட்டும்தான் செய்யணும்.. இல்லை.. பாரின்ல இருக்க பையன்.. அடுத்து எங்க இருக்கான்.. ஏன்.. இருக்கானான்னே தெரியாம பண்ணிடுவேன் உங்களுக்கு…” என,

“இல்லை… இல்லை…” என்றார் பல்ராம் சேட்.

ஆனாலும் அவரின் முகத்தினில் அந்த யோசனை இருக்க, “இன்னும் என்ன??!!” என்றான்.

“இல்லை நீங்க தீபன்கிட்ட ப்ரீயா பேசினாலே எல்லா பிரச்னையும் தீர்ந்திடுமே..” என்று சேட் சொல்ல,

“பிரச்னையா??!! எனக்கும் தீபனுக்குமா… ஹா ஹா ஹா..” என்று சிரித்தவன் “அப்படி யார் சொன்னா??!!” என, சேட் விழித்தார்.

“இப்போ வரைக்கும் எந்த பிரச்னையும் இல்லை.. இனியும் நான் அவனோட நேரடியா பிரச்னை செய்ய போறதில்லை.. இந்த கட்சி அது இது வேலை இதெல்லாம் விட்டு போகணும்.. அதுக்கான ஸ்டெப்ஸ் தான் இதெல்லாம்.. இல்லையா.. அவன் இருக்கவே இருக்கக் கூடாது அவ்வளோதான்..” என்றவன்,

“இது இன்னிக்கு நேத்து இல்லை சேட்.. பல வருசமா நான் யோசிச்ச ஒரு விஷயம்.. அப்பாவோட நிழல் போல நான் இருக்கேன்.. ஆனா அவர்.. கேட்டீங்க தானே.. எல்லாத்தையும் விட அவன் முக்கியமாம்… அப்போ நான்??!!! அப்போ நான் யார்??!!!! ஹா… அன்னிக்கு என் முன்னாடியே சொல்றார் தீபன் இல்லைன்னா ஒண்ணுமே நடக்காதுன்னு…” என்றவன் ஆத்திரம் அடங்காது அங்கிருந்த மேஜையை குத்த, அதுவோ சில்லு சில்லாய் உடைந்தது..

“பேட்டா…!!!” என்று சேட் பதறி வர,

“ம்ம்ச் இதெல்லாம் ஒண்ணுமேயில்ல சேட்.. அப்பாக்கு அடுத்து, நான் தான் அப்படின்னு அப்பாவே சொல்லணும்.. சொல்ல வைப்பேன்.. அதுக்கு தீபன் அவரோட பார்வையில இருந்து மறையனும்.. இப்போவரைக்கும் தீபனுக்கு என்மேல இம்மியளவு கூட சந்தேகம் வரலை.. இனியும் அப்படிதான் இருக்கணும்.. தென்… நீங்க இங்க வந்து ரெண்டு நாள் ஆச்சுன்னு யாருக்கும் தெரியாது.. அதை அப்படியே மெய்ண்டைன் செய்யணும்.. அடுத்து.. நான் எப்போ சொல்றேனோ அப்போ சென்னை போங்க போதும்..” என்றவன்,

“ஷர்மா கதையை சீக்கிரம் முடிக்கப் பாருங்க.. தீபன் காதுக்கு எதுவும் போயிட கூடாது..” எனும்போதே, மிதுனுக்கு,

முதல்முறை ஷர்மா காரில் கேமெரா வைத்து தீபனை வீழ்த்த எண்ணியது, பின் அனுராகாவோடு அம்மாவின் திருமண பேச்சில் பட்டும் படாமல் இருந்துகொண்டு தீபனின் மாற்றங்களை கவனித்தது, பின் பெங்களூர்வில் தீபனை அனுப்பிவிட்டு தான் அங்கிருந்தது, அனுராகா கேட்டதும் தானே அவனின் அலைபேசியில் இருந்து தீபனுக்கு அலைப்புவிடுத்துக் கொடுத்தது என்று எல்லாமே அவனின்  மனதில் வந்து போனது..

எல்லாம்.. எல்லாம்.. ஆரம்பம் முதல் இப்போது வரை, நடக்கும் அனைத்து குழப்பத்திற்கும் மிதுன் தான் காரணகர்த்தா.. ஆனால் அவனின் பெயர் எப்போதும் எங்கேயும் எதிலும் வெளியில் வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாய் இருந்தான்.. இனியும் இருப்பான்..

உடன் பிறந்தவன் தான் தன் கண்ணுக்குத் தெரியாத எதிரி என்பது அறியாது அங்கே சென்னையில் தீபன்,  “என்ன ஷர்மா.. வெற்றிகரமா உனக்கு டைவர்ஸ் பண்ணி வச்சுட்டோம்.. இப்போ சந்தோசமா??” என்று தீபன் சிரித்துக்கொண்டு இருந்தான்.

“வேணாம் தீபன்.. இதெல்லாம் ரொம்ப தப்பு.. நீ என்னை பழி வாங்கனும்னா என்னை எதுவேணா செய்.. ஆனா என்னோட பேமிலி வச்சு விளையாடாத..” என்று ஷர்மா, வாயில் இருந்து ரத்தம் வழிய சொல்ல,

“எது எது.. பேமிலியா.. அப்படியொரு செண்டிமெண்ட் எல்லாம் இருக்காடா உனக்கு..??!!” என்றவன், “இவ்வளோ பேசுறவன்.. நீ என் பேமிலி பத்தி யோசிச்சு கூட இருந்திருக்கக் கூடாதுடா..” என,

“தொழில்னு வந்துட்டா ஆயிரம் இருக்கும்..” என்ற ஷர்மாவிற்கு மனது ஆறவேயில்லை..

பின்னே அவனின் மனைவி கையெழுத்து போட்டுக்கொடுத்த விவாகரத்து பத்திரம் அவனின் கண் முன்னே இருக்க, தர்மா அடித்த அடியில் ஷர்மாவும் கையெழுத்து போட்டிருந்தான் அதில். இனி அவனுக்கோ அவன் மனைவிக்கோ இல்லை பிள்ளைக்கோ எந்த சம்பந்தமும் இல்லை. ஷர்மாவின் மொத்த  குடும்பமும் இனி தீபனின் பார்வையில் தான் இருக்கும்.

“அதேதான்.. தொழில்னு வந்துட்டா ஆயிரம் இருக்கும்.. ஆனா எனக்கு எங்கப்பா.. அவரோட பேர்.. அவரோட மரியாதை.. அவரோட பதவி இதெல்லாம் தொழில் இல்லடா.. வாழ்க்கை.. புரிஞ்சதா…” என்று தீபன் கத்தியவன்,

“எங்க வாழ்கையை அழிக்க நினைச்ச, சிம்பிள் நான் உன்னை ஒண்ணுமில்லாம பண்ணிட்டேன்.. உயிர் மட்டும் மிச்சம் அவ்வளோதான்…” என உண்மையும் அதுதான்..

உடலில் எங்கெங்கே அடி பட்டது என்று சொல்லக் கூட முடியாது.. அப்படி உடல் முழுவதும் அடி.. உயிர் மட்டுமே ஷர்மாவிடம் மிச்சம் இருந்தது.

தீபன், அவனிடம் சரியாய் நடந்துகொண்டால் அவனும் சரியாய் இருப்பான். அந்தளவு மட்டுமே நல்ல மனிதன் அவன்.. அவனை வீழ்த்த எண்ணினால் அவன் எந்த எல்லைக்கும் செல்வான். இன்றோ இந்த ஷர்மாவும் சேட்டும் சேர்த்து செய்தது எல்லாம் அவனுக்குத் தெரிந்து கொலை வெறியில் தான் இருந்தான்.. இத்தனை நாள் இருவரையும் உயிரோடு விட்டு வைத்திருப்பது எல்லாம் ஒரே ஒரு காரணம், அது இவர்களை அட்டுவிப்பவன் யாரென்று தெரிந்துகொள்ள மட்டுமே..

ஷர்மா மூச்சு வாங்கி, ரத்தம் வடிய அமர்ந்திருக்க “ஒரே ஒரு வார்த்தை.. யார் அதுன்னு சொல்லிட்டா இப்போ இதெல்லாம் தேவையா ஷர்மா…” என,

அவனோ “எனக்குத் தெரியாது..” என்றுசொல்ல,

“அப்போ சாவு மட்டும்தான் உனக்கு..” என்றான் தீபனும்..

அப்போதும் ஷர்மா அமைதியாய் இருக்க “இன்னும் பத்து நாள் மட்டும்தான் உனக்கு டைம். எப்படியும் நான் போடலைன்னா.. உன்னை எவன் அனுப்பினானோ அவனே உன்னை போட்ருவான்… சாவு உறுதி.. ஆனா எப்படி சாகனும்னு நீயே முடிவு பண்ணிக்கோ…” என்றவன், தர்மாவிடம் கண் காட்டிவிட்டு கிளம்பினான்..

தீபனின் இத்தனை கோபத்திற்கும் காரணம், சேட் கொடுத்துவிட்டதாய் வந்த அந்த பெட்டியே.. உள்ளே ஒன்றும் இல்லை.. வெறும் காகிதங்கள் மட்டுமே இருந்தது.. இது இதெல்லாம் ஏதோ ஒரு வகையில் தீபனின் கவனத்தை திசை திருப்பும் செயல்கள் என்று அவனுக்குத் தெரியாதா என்ன??!!!

உஷா கேட்டதற்குக் கூட “ஒண்ணுமில்லம்மா பழைய கணக்கு வழக்கு..” என்றவன் “இனிமே சேட் கொடுத்ததுன்னு ஏதாவது வந்தா அதை அப்பா ரூம்ல வைக்கவேணாம்.. நாகா இல்லை தர்மா யாரவாது வரசொல்லி அங்க என்னோட பிளாட்க்கு அனுப்பிடுங்க..” என,

“ம்ம்ம் நீ ஒன்னு சொல்லு.. உங்கப்பா ஒன்னு சொல்லட்டும்.. மிதுன் ஒன்னு சொல்லட்டும்..” என்று உஷா ஆரம்பிக்கையில்,

“ம்மா அண்ணன் மேரேஜ் பத்தி என்னவோ பேசினியே என்னாச்சு??!!” என்று பேச்சை மாற்றி இருந்தான்..

மகன் பேச்சை மாற்றுவது புரிந்தாலும் அதை கண்டுகொள்ளாதவர் போல் “அது என்னடா.. நீங்க எல்லாம் எலெக்சன் முடியனும் சொல்லிட்டீங்க தானே.. சோ அது அப்படியே விட்டுட்டேன்..” என்றுவிட்டார்.

உண்மையில் அதை அப்படியே விடவில்லை.. லோகேஸ்வரனும், உஷாவும் பேசி ஒரு முடிவிற்கே வந்துவிட்டனர். லோகேஸ்வரன் இதை தாராவிடம் கூட சொல்லவில்லை என்பதுதான் உண்மை.. அப்படியிருக்க உஷா இங்கே வாய் திறப்பாரா என்ன??!!

Advertisement