Advertisement

தீபன் எழுந்து பார்க்க, மணி ஒன்பது என்று காட்டியது.. இத்தனை நேரமா தூங்கினோம் என்று இருக்க, அம்மாவின் அழைப்பு மட்டும் இல்லையெனில் இன்னமும் உறங்கியிருப்போம் என்றும் தோன்ற, வேகமாய் கிளம்பினான்..

ஒன்றும் செய்யவில்லை, உடையை மட்டும் மாற்றிக்கொண்டு அப்படியே கிளம்ப, நாகாவோ வேகமாய் சென்று கார் எடுக்க,

“ராகாவோட கார்??!!” என்று தீபன் கேட்கும் முன்னமே, “அவங்க வீட்ல இருக்கு..” என்றுவிட்டான்..

அடுத்து ஒரு இருபது நிமிடம், தீபனுக்கு ஒரு யோசனையும் இல்லை.. வீட்டிற்கு வந்த அந்த பெட்டியின் மீது மட்டுமே.. சேட்டோடு நேரடியாய் மோதியாகிவிட்டது.

ஆக பல்ராம் அவனோடு நேரடியாய் எதுவும் பேச்சு வார்த்தையோ இல்லை இப்படி எதுவும் செய்யப் போவது இல்லை. அதுவும் தான் இங்கிருக்கும் நேரத்தில் நிச்சயம் அப்படி செய்யும் துணிவும் வராது.. அதையும் தாண்டி இப்படி பெட்டி வருகிறது என்றால்??!!!

கண்டிப்பாய் இதில் எதுவோ இருக்கிறது என்று தோன்ற, வீட்டிற்கு வந்தவன் முதலில் அம்மாவிடம் “எங்கம்மா அது..” என்றுதான் கேட்டான்..

உஷாவோ “என்னடா நைட்டெல்லாம் எங்க போன நீ..” என்று விசாரிக்க,

“ம்மா.. தூங்கிட்டு இருந்தவன் அப்படியே வந்திருக்கேன்.. டென்சன் பண்ணாம அந்த பெட்டி எங்கன்னு சொல்லு..” என்று எரிச்சலாய் கேட்க,

“உன்னை யார் அப்படியே வர சொன்னா..” என்று உஷா அடுத்து பேச,

“ம்மா…” என்று கத்தினான்.

“ம்ம்ச் சும்மா சத்தம் போடாத தீபன்.. நேத்து இருந்து நீ ஏன் போன் எடுக்கல.. பெரியவன் அங்க உக்காந்துட்டு என்னை கத்துறான்.. நீ இங்க வந்து கத்துற.. ச்சே பிள்ளைங்களாடா நீங்க.. வேலை வேலைன்னு இருந்தா போதாது.. வீட்டுக்கு முதல்ல புள்ளைங்களா இருக்கணும்..

உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வச்சாதான் உருப்படுவீங்க.. பெரியவன் கூட சரிதான்.. கேட்டுப்பான்.. ஆனா நீ இருக்கியே.. ஊர் இப்போவே உன்னை அடங்காதவன்னு சொல்லுது…” என்று அர்ச்சிக்கத் தொடங்கிவிட்டார்.

தீபனுக்கோ ‘என்னடா இது..’ என்றாகிப்போனது..

“ம்மா ம்மா.. உஷா ம்மீ…” என்று கொஞ்சி, அவரை தாஜா செய்ய “ச்சி போடா.. பல்லு கூட தேய்க்காம வந்துட்டான் ம்மீன்னுட்டு..” என்று அவன் முதுகில் அடித்தவர்,

“உங்க அப்பா ரூம்ல தான் வச்சிருக்கேன்..” என்றுவிட்டு போக, வேகமாய் அங்கே போனவன், முதலில் யார் வந்து கொடுத்துவிட்டு போனார்கள் என்பதனை அறிந்துகொள்ள சிசிடிவி திரையை உயிர்பிக்க, வந்தவன் யாரோ ஒரு புதியவன்.

சேட் வழக்கமாய் அனுப்பும் ஆள் அவனில்லை.. புதியவன். ஆகினும் அவனை அடிக்கடி பார்த்தது போலிருந்தது. சேட்டின் ஆட்களில் ஒருவனாய் இருக்கலாம்.. மீண்டும் மீண்டும் அந்த காட்சிகளை ஓடவிட்டு பார்த்துக்கொண்டு இருந்தான். சந்தேகத்திற்கு இடமாகவும் எதுவுமில்லை. ஆனால் எளிதாகவும் எடுத்துக்கொள்ளவும் முடியவில்லை.. 

ஒருவேளை மிதுன் எதுவும் கொடுத்துவிடச் சொல்லியிருப்பானோ என்று தோன்ற, அவனுக்கு அழைத்தான்.

மிதுன் எடுத்தவனோ “டேய் ஆர் யூ ஓகே..” என்று எடுத்தும் கேட்க,

“ஷ்..!! அதுக்குள்ள தெரிஞ்சிடுச்சா??!!” என்று தீபனும் சொல்ல,

“ஏன் தீப்ஸ்.. எதுவா இருந்தாலும் என்கிட்டே சொல்றதுக்கு என்னடா??!!” என்று மிதுன் கேட்க,

“நீ டெல்லில  இருக்க.. சும்மா ஒன்னும் நீ அங்க இல்லையே..” என்றான் இவனும்.

“அதுக்காக எல்லாத்தையும் நீ இழுத்துப் போட்டுட்டா எல்லாம் சரியாகுமா டா.. ஏதாவது ஒன்னு ஆகிருந்தா??!! கூட எதோ பொண்ணு வேற இருந்ததுன்னு சொல்றாங்க..” என்று மிதுன் சொல்லும்போதே,

“மிதுன்…” என்றான் அதட்டலாய் தீபன் சக்ரவர்த்தி..

“ஹேய் தீப்ஸ்.. நான் தப்பா சொல்லலைடா.. பட் நீ இப்படி தனியா எல்லாம் யாரையும் கூட்டிட்டு வர மாட்டியே..” என்று மிதுனும் கேட்க,

“சேட் கிட்ட இருந்து ஒரு பெட்டி வந்திருக்கு.. நீ எதுவும் கொடுக்கச் சொன்னியா..” என,

“தீப்ஸ் நான் என்ன கேட்கிறேன் நீ என்ன சொல்ற??!!” என்றான் மிதுனும்.

அவனின் பொறுமையும் கொஞ்சம் குறைந்திருந்தது. நேற்று நடந்த சம்பவம் அது போல் தானே.. ஏதாவது ஒன்று ஆகியிருந்தால்??!! மிதுனுக்கு எதையும் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. அதுவும் வந்தது சேட்டின் ஆட்கள் என்று தெரிந்ததும் இன்னும் பதற்றமாகிப் போனான்..

உடன் ஒரு பெண் வேறு இருந்தாள் என்பது வேற இன்னமும் அவனின் பதற்றத்தை கூட்ட, தீபனோ அதை விடுத்தது வேறு பேச மிதுனின் பொறுமையும் குறைந்துபோனது.

“மிதுன் நான் கேட்கிறதுக்கு பதில் சொல்லு..”

“ம்ம்ச் உனக்கும் சேட்டுக்கும் என்ன சண்டை??!! இப்படி ஆள் வச்சு செய்ற அளவு.. டேய் தீப்ஸ் இங்க பாரு பேசாம நீ எலெக்சன் முடியுற வரைக்கும் பாரின் ட்ரிப் போய்ட்டு வா.. நான் பார்த்துக்கிறேன்..” என்று மிதுன் சொல்ல,

“ஓ!! உயிருக்கு பயந்து ஓட சொல்றியா??!! அதுவும் என்னை.. சுட்டுத் தள்ளிட்டு போக ஒரு நிமிஷம் ஆகாதுடா.. அப்பாக்காக பாக்குறேன்..” என்று தீபன் சொன்னவன்,

“நீ சொல்லு.. எதுவும் கொடுத்து விட சொன்னியா??!!” என, “நான் அவரோட பேசியே நாள் ஆச்சு..” என்றான் மிதுன்..

“ஓ!!!” என்றவன் “சரி.. அங்க எல்லாம் ஓகே தானே.. வேற எதுவும் பிரச்னை இல்லையே..” என,

“அந்த ஷர்மா எங்கடா?? மறுபடியும் தூக்கி உள்ள வச்சிட்டியா??” என்று மிதுன் கேட்க,

“ஹா ஹா.. அது இன்னிக்கு அவனுக்கும் அவன் பொண்டாட்டிக்கும் டைவர்ஸ் பண்ணி வைக்கிறோம் மிதுன்..” என்று தீபன் சொல்லவும்

“என்னது?!!!!” என்று புரியாது கேட்டான் மிதுன்

“அதுடா அண்ணா.. நம்மளை ஒண்ணுமில்லாம செய்யணும் நினைச்சான் இல்லையா.. அதுதான் அவனுக்கு இனி எதுக்கு குடும்பம் குட்டி எல்லாம்.. சோ டைவர்ஸ் பண்ணி வைக்கிறோம்.. இதுக்குமேல அவன் இருந்தும் ஒன்னும் ஆகப் போறதில்லை.. ஆனா இப்போதைக்கு நம்ம கஸ்டடில இருக்கட்டும்..” என,

“டேய்…” என்று பல்லைக் கடித்த மிதுனோ, “அவனை எங்கடா வச்சிருக்க..” என,

“அது மட்டும் ரகசியம்டா அண்ணா..” என்றுசொல்லி தீபன் பேசி முடித்துவிட்டான்..

தேர்தல் முடியும் வரைக்கும் அந்த ஷர்மா எங்கிருக்கிறான் என்பது யாருக்குமே தெரியக்கூடாது என்பதில் தீபன் தெளிவாய் இருக்க,

அங்கே மிதுன் சக்ரவர்த்தியோ “அப்பா.. இவன் செய்றது எல்லாம் எங்க கொண்டு போய் விடும் தெரியலை.. நீங்க ஒன் டைம் சேட் தீபன் ரெண்டு பேரையும் வச்சு பேசுங்க..” என,

“என்னடா உங்களோட ரொம்ப தலைவலியா போச்சு.. இன்னும் சின்ன பசங்க மாதிரி கம்ப்ளைன்ட் பண்ணிட்டு வந்து நிக்கிறீங்க..” என்றான் சக்ரவர்த்தி..

“தப்பா எதுவும் ஆகிட கூடாதுன்னு தான் சொல்றேன்..” என்றவன் முதல் நாள் நடந்தவைகளை சொல்ல,

“என்னடா அடிதடி அளவு இறங்கியிருக்காங்க..” என்ற சக்ரவர்த்தி, “சேட் இங்க வர சொல்லு.. நான் பேசிக்கிறேன்.. சின்னவனை ஒரு வாரம் போல எங்கயாவது போக சொல்லு..” என,

“சொல்லிட்டேன் கேட்கலை..” என்றான் பெரியவன்.

“போன் போடு.. நான் பேசுறேன்..” என்றவர் மிதுன் மறுபடியும் தீபனுக்கு அழைத்து அப்பாவிடம் கொடுக்க,

“என்ன தீபன் அண்ணன் நிறைய சொல்றான்..” என்றார் ஒரு அப்பாவாய்..

“ஒன்னும் இல்லப்பா பார்த்துக்கலாம்..”

“அப்பா சொல்றதை கேளுடா.. கொஞ்ச நாள் இதெல்லாம் விட்டு பேசாம எங்கயாவது டூர் போய்ட்டு வா.. உனக்கும் ரிலாக்ஸா இருக்கும்..” என, சட்டென்று தீபனுக்கு கோவம் வந்துவிட்டது.

அதென்ன எல்லோரும் அவனையே தப்பு சொல்வது.. அம்மா ஆரம்பித்து, அண்ணன் தொடங்கி இப்போது அப்பாவும் என்கையில் அவனுக்கு அப்படியொரு கோபம்.

அவன் என்ன அவனுக்காக மட்டுமா இத்தனையும் இழுத்துப் போட்டு செய்கிறான்??!!

“தீபன்…” என்று திரும்ப சக்ரவர்த்தி அழைக்க,

“ம்ம் சொல்லுங்கப்பா..” என்றவனின் குரலிலேயே கண்டுவிட்டார் மகன் கோபத்தில் இருக்கிறான் என்று.

“என்னடா கோபமா…” எனும்போதே,

“மொத்தமா இதுல இருந்து விலகிக்கோ நாங்க பார்த்துக்கிறோம்ன்னு சொல்லிடுங்க நான் போயிடுறேன். ஆனா பயந்துட்டு கொஞ்ச நாள் எங்கயாவது போய் இருன்னு சொன்னா என்னால முடியாது..” என்று தீபன் இறுகிய குரலில் சொல்ல,

“டேய் டேய்.. உன்னை ஏன் டா அப்படி சொல்லப் போறேன்.. நீ இல்லைன்னா எந்த வேலைடா உருப்படியா நடக்கும்.. ஒரு வாராம் அப்பா சொல்றபடி கேட்டு இருன்னு தானே சொல்றேன்..” என, மிதுன் பார்த்தபடி தான் இருந்தான்.

தீபனோ “ப்பா.. எனக்காக நீங்க யாரோடவும் இறங்கி போய் பேசவேணாம்.. அதேபோல எனக்காக நீங்க நேரடியா யாரோடவும் பகைச்சுக்க வேணாம்.. நீங்க இத்தனை நாள் எப்படி இருந்தீங்களோ அப்படியே இருங்க.. ஆனா ஏதாவது ஒண்ணுன்னா அது எவனா இருந்தாலும் என்னைத்தாண்டி தான் உங்கக்கிட்ட வர முடியும்…” என்று உறுதியாய் சொல்ல,

“ஷ்..!! என்னடா நீ…” என்ற சக்ரவர்த்தி, “சரி இப்போதைக்கு நீ அங்க எலக்சன் வேலை மட்டும் பாரு.. இல்லையா என்னோட வந்து நீ இங்க இரு.. மிதுன் அங்க வரட்டும்..” என,

“இல்லை நான் பார்த்துக்கிறேன்..” என்றவன் வைத்துவிட்டான்..

அவனின் கோபம் போகவேயில்லை.. எல்லாரும் கடைசியில் இவனை கொஞ்சம் ஒதுங்கி இரு என்று சொன்னால் என்ன அர்த்தம்??!!

அந்த சேட் அவன் யார்?? அவன் என்ன பெரிய ஆளா.. இவர்களை போல அரசியல் ஆட்களை வைத்து பெரிய ஆள் ஆகிக்கொண்டான் அவ்வளவே.. அவனின் பின்னே யாரோ இருந்து இயக்குகிறார்கள் என்பது தெளிவாய் தெரிந்தது. அப்படி இருக்கையில் தீபன் சக்ரவர்த்தி எப்படி அனைத்தையும் விட முடியும்..

புலி வால் பிடித்த கதை தானே இது..

சக்ரவர்த்தியோ மிதுனிடம் “அவன் எப்போடா நம்ம சொல்றதை கேட்டான். நீ சேட் வர சொல்லு.. நான் பேசிக்கிறேன்.. ரொம்பவும் நம்ம யாரையும் சொல்ல முடியாது.. ஆனா திடீர்னு எங்க இருந்து இதெல்லாம் ஆரம்பிச்சது மிதுன்.. நான் கட்சி வேலைன்னு இருக்கிறதுனால பின்னால என்ன நடக்குதுன்னு சரியா கவனிக்கலையா என்ன??!” என்று அப்பாவாய் அவர் வருந்த,

“ப்பா.. ஒன்னும் வொர்ரி பண்ணிக்காதீங்க.. நான் பார்த்துக்கிறேன்.. தீபனுக்கு எதுவும் ஆகாது..” என்றவன், சேட் அழைத்து இங்கே வரச் சொல்ல, அங்கே சென்னை அலுவலகத்தில் பிரஷாந்த் நுழைந்துகொண்டு இருந்தான்.

“மேம் ஹெட் ஆபிஸ்ல இருந்து மிஸ்டர். பிரஷாந்த் வந்திருக்கார்..” என்றதுமே,

அனுராகாவிற்கு சட்டென்று மனதினில் ஒரு தடுமாற்றம். எப்படி இந்த சூழலை கையாள்வது என்று. பிரஷாந்த் இப்படி சொல்லாமல் வந்து நிற்பான் என்று அவளுக்குத் தெரியவில்லை.

‘இவனா??!! இவன் எதுக்கு வந்தான்…’ என்று எண்ணம் ஓடுகையில்,

“மேம்…” என்று திரும்ப அவளின் பி ஏ அழைக்க,

“யா வர சொல்லுங்க..” என்றவள், தன்னை திடப்படுத்திக்கொண்டிருந்தாள்.

அடுத்த இரண்டு நிமிடங்களில் பிரஷாந்த் அவளின் அறைக்கு வர, “வாங்க மிஸ்டர். பிரஷாந்த்..” என்று அனுராகா வரவேற்க,  

அவனோ “ஹாய் அனு…” என்று கை குலுக்க கரம் நீட்ட, அனுராகாவிற்கு அது சுத்தமாய் பிடிக்கவில்லை..

‘இவன் ஏன் இங்கு வரவேண்டும்??!!’ எந்த கேள்வி மட்டுமே,

அவனோ கரம் நீட்டியபடி நிற்க, நொடியில் அனுவின் மனதினில் மனதினில் ஒரு உத்வேகம், இங்கே நானே தலைமை.. இவன் வேலை செய்யும் ஒருவனே.. அவ்வளவே..

அந்த எண்ணம் வரவுமே நிமிர்ந்து அவனை நேருக்கு நேர் நோக்கியவள், அவளும் கரம் குலுக்கி, அமரும் படி இருக்கை காட்டி,  “சொல்லுங்க மிஸ்டர் பிரஷாந்த்..” என,

அவளின் தடுமாற்றத்தையும், பின் அவள் அதை மாற்றி இப்போது பேசுவதையும் கவனித்துக்கொண்டு தான் இருந்தான் பிரஷாந்த். அவள் கேட்டதற்கு பதில் சொல்லாது

“எப்படியிருக்க அனு..” என,

“இதை கேட்கத்தான் வந்தீங்கன்னா??!! ஐம் சோ சாரி.. ஆபிஸ் டைம்ல நான் தேவையில்லாதது எதுவும் பேசுறது இல்லை..” என்று அனு சொல்ல,

“அப்போ நம்ம கண்டிப்பா மீட் பண்ணித்தான் ஆகணும் அனு.. பேசித்தான் ஆகனும்..” என்று அவனும் சொல்ல,

“அப்படி எதுவும் இருக்கிறதா எனக்குத் தெரியலை..” என்றாள் அனுராகா தெள்ளத் தெளிவாய்..

இன்னொருமுறை இவன் விசயத்தில் மனதை குழப்பிக்கொள்ள தயாராக அவள் இல்லை. அவளைப் பொருத்தமட்டில் அவன் அவளுக்கு யாருமேயில்லை. அவளின் அப்பாவின் கீழ் வேலை செய்யும் ஒருவன் அவ்வளவே..

“அனு.. ஐம் ரியல்லி சாரி.. பட் நீ என்னால ஹர்ட் ஆகிருக்கன்னு நல்லா தெரியும்.. அப்போ என்னோட சூழ்நிலை அப்படி..” என்று பிரஷாந்த் சொல்லும்போதே,

“இப்போ.. இங்க எதுக்கு வந்தீங்க??!!!” என்றாள் அழுத்தம் திருத்தமாய்..

“ம்ம்ச் அனு..” என்று அவன் சலுகை எடுக்க,

அவளின் எரித்துவிடும் பார்வை கண்டு, “ஓகே.. ஓகே… எப்பவும் இயர்லி ஒன்ஸ் கம்பனி பார்ட்டி இருக்கும்தானே.. அது திஸ் டைம் இங்க பண்ணலாம்னு டிசைட் பண்ணிருக்காங்க..” என்றான்.

“ஐ க்னோ தட்.. அதுக்கும் நீங்க இங்க வந்ததுக்கும் என்ன??”

“அந்த பார்ட்டி ஆர்கனைஸ் பண்ணப் போறது நான் தான் இந்த வருஷம்..” என,

“ஓ…!! அப்போ அந்த வேலை மட்டும் பார்த்தா பெட்டர்..” என்கையில்,

“ஏன் மேடம்க்கு சர்வீஸ் பண்ண வேற யாரும் இருக்காங்களா??!!” என்று அவன் கேட்டு முடிக்கும் முன்னே சப்பென்று அறைந்துவிட்டாள் அனுராகா..

“மைன்ட் யுவர் வோர்ட்ஸ்…” என்று விரல் நீட்டி மிரட்டியவள்,

“இங்க பார் உனக்கு வேலை சம்பளம் இதெல்லாம் முக்கியம்னா ஒழுங்கா இரு.. லிமிட் க்ராஸ் பண்ண.. தொலைச்சிடுவேன்…” என,

அவள் அடித்த அடி கொடுத்த அதிர்ச்சி ஒருப்பக்கம், அவள் பேசிய விதம் கொடுத்த திகைப்பு ஒருப்பக்கம் பிரஷாந்தை அப்படியே சிலையென நிற்க வைக்க, அந்த நொடியில் இருந்து பிரஷாந்த் என்பவன் அனுராகாவின் எதிரியாகிப் போனான்..

Advertisement