Advertisement

                              நான் இனி நீ – 18

தீபன் சக்ரவர்த்தி, அனுராகா இன்னமும் அந்த கார் செட்டினுள் தான் இருக்க,  நேரம் கடந்துகொண்டே இருந்தது..

பேச்சுக்கள் இருந்தாலும், நேரம் செல்ல செல்ல, தீபனுக்கே அனுவை எப்போதடா அவளின் வீடு சேர்ப்போம் என்று தோன்றியது. தனியாய் இருக்கிறார்கள், திரும்பவும் ஏதாவது ஒன்றேன்றால் சிரமம் என்று தோன்ற, நாகாவிற்கு அழைத்தான்..

“இன்னும் எவ்வளோ நேரம்???” என்று..

அவன் என்ன சொன்னானோ “ஓகே… வர்றோம்..” என்றவன், “கம்மான் ராகா.. கார் வந்திடுச்சு..” என்றபடி எழ,

“நம்ம கார் இருக்கே..” என்றபடி அவளும் எழ, “இல்லை அது நாளைக்கு காலைல வரைக்கும் இருக்கட்டும்..” என்றவன்,

“உள்ள இரு..” என்றுவிட்டு, கார் செட் கதவினை திறந்து சுற்றிலும் பார்க்க, அனுராகாவோ “கைல கன் வச்சிட்டு இவ்வளோ யோசிக்கிற..” என,

“கைல கன் இருக்கிறது விட,  கூட பொண்ணு நீ இருக்க. சோ இதெல்லாம் பாக்கணும்..” என்றான் தீவிரமான முகபாவனையோடு.

‘அவன் தனக்காக பார்க்கிறான்..’ இந்த எண்ணம் அனுராகா போன்ற பணக்கார பெண்ணிற்கு மட்டுமல்ல, பெண்ணாய் பிறந்த அனைவருக்குமே இது பூரிப்பு கொடுக்கும்..

தனக்கு மட்டுமே சொந்தமான தனிப்பட்ட கரிசனைகள், அக்கறைகள், பத்திரங்கள், இவை எல்லாமே காதல் மொழிகளை தாண்டியும் பெண்களுக்கு பிடித்தமானவை.

அனுராகா எதுவும் சொல்லாது அப்படியே நிற்க “ஹேய் என்ன வா..” என்று தீபன் கை நீட்ட, சந்தோசமாகவே பற்றிக்கொண்டாள்.

ஒரு ஐந்து நிமிட நடை, நாகா ஒரு காரோடு நின்றிருக்க, அவனின் பார்வை எல்லாம் தீபன் மீது மட்டுமே இருந்தது.

அனுராகா என்ற ஒருத்தி அங்கே இருப்பதாய் அவன் கண்களுக்குத் தெரியவில்லை, கார் சாவியினை தீபனிடம் கொடுத்துவிட்டு “வர எவ்வளோ நேரமாகும்??” என,

“இவங்களை டிராப் பண்ணிட்டு வந்திடுவேன்..” என்றவன், “வேற எதுவும் பிரச்னை இல்லையே..” என,

“இல்லை.. எல்லாமே நம்ம ப்ளான் படி தான் இருக்கு..” என்று நாகா சொல்ல,

“ஓகே..” என்ற தீபன், “கிளம்பலாம்..” என்றதும் அனுராகா காரினுள் ஏறி அமர்ந்துகொண்டாள்,

சிறிது நேர அமைதிக்கு பின்னே “ராகா… சாரி இதெல்லாம் உன்னை டிஸ்டர்ப் பண்ணிருக்கும் ரொம்ப..” என்று தீபன் சொல்ல,

“நோ நோ..” என்று மறுத்தாள் அனுராகா..

“நிஜமாவா..!! பட் உன்னோட முகத்துல கொஞ்சம் கூட பயம் தெரியலை..”

“ஏன் பயப்படனும்??!!”

“இல்லை இது ஒரு எதிர்பார்க்காத சிச்சுவேசன் தானே..” என்றவனுக்கு,

‘ச்சே உருப்படியா ஒரு ப்ரொபோஸ் பண்ண விட்டீங்களா டா..’ என்று அதற்கும் சேர்த்து அவனின் கோபம் ஏறியது அந்த சேட் மீதும் ஷர்மா மீதும்..

“பயம் எல்லாம் இல்லை.. என்னவோ தெரியலை.. பட் இன்ட்ரெஸ்ட்டிங்கா இருந்தது.. என்ன உன்னோட சண்டை மிஸ்ஸிங்..” என்று அனுராகா சொல்ல,

“சண்டை போடுறது பெருசில்ல.. எப்போ போடறோம்.. யாரோட போடறோம்னு தான் பாக்கணும்.. வந்தவனுங்க எல்லாம் என் முன்னாடி நிக்க கூட ஒர்த் இல்லை..”

“ம்ம்.. ஆனா உன்கிட்ட வேலை செய்றவங்க கூட உன்னை போலத்தான் இருக்காங்க.. பாரு நான் ஒருத்தி நிக்கிறேன்னு கூட காட்டிக்கல அவன்..” என்று நாகாவை சொல்ல,

“ஹா ஹா..” என்று சிரித்தவன் “என்கிட்டே வேலை செய்றவங்க இல்லை ராகா அவங்க, என்னோட இருக்கிறவங்க.. நான் எப்பவும் அப்படிதான் பார்ப்பேன்..” என,

“ம்ம்… நீ அப்பப்போ கொஞ்சம் நல்லவனா தான் இருக்க..” என்று சொல்லி அவளும் சிரித்துக்கொண்டாள்.

அவளின் சிரிப்பினை கண்டவனுக்கோ எல்லாம் நல்லபடியாக நடந்திட வேண்டும் என்ற எண்ணம், மேலும் மேலும் அவன் மனதினில் ஆழமாய் பதிந்தது. நடக்கும் என்ற நம்பிக்கையும் இருந்தது. ஆனால் அனுராகாவிற்கோ தெளிவு படுத்த வேண்டியவைகளும், தெரியப்படுத்த வேண்டியவைகளும் நிறைய நிறைய இருக்க, அவள் இன்னும் யோசனை என்ற நிலையில் தான் இருந்தாள்.

தீபன் சக்ரவர்த்தி – அவனைப் பிடித்திருக்கிறது. அதில் எந்த மாற்றும் இல்லை. ஆனால் வாழ்வு முழுமைக்கும் என்று வரும்போது, நிச்சயம் அவள் அவனோடு நிறைய நிறைய கலந்து பேச வேண்டும்.. முன்னே செய்த தவறுகள் போல் இப்போது செய்யக் கூடாது என்பதில் உறுதியாய் இருந்தாள்.

கார் சென்றுகொண்டே இருக்க, வழியில் ஒரு டீ கடை இருக்க “ராகா டீ சாப்பிடலாமா??!!” என்றான்.

இருவரும் உண்ணவில்லையே. பசி இருந்தது. ஆனால் சொல்லிக்கொள்ளவில்லை. அனுராகாவோ அவளின் சிந்தனையில் இருந்தவள், தீபன் இப்படி கேட்கவும் நேரம் என்ன என்றுதான் பார்த்தாள். நள்ளிரவு இரண்டு என்று காட்டியது..

‘ரெண்டு மணியா…’ என்று கண்கள் விரிந்தாலும், தீபன் அவளின் பதிலுக்காக பார்ப்பது கண்டு “ம்ம் சாப்பிடலாம்.. பட் இங்கயா..” என்றாள் சாலையோர கடையைப் பார்த்து..

“ஏன் இங்க என்ன??!!” என்றவனுக்கு, இவளுக்கு எங்கே இங்கே எல்லாம் நின்று கூட பழக்கம் இருக்காது என்று தோன்ற,

“ஜஸ்ட் டேஸ்ட் பண்ணு பிடிக்கலைன்னா விட்டுடலாம்..” என,

“ம்ம்..” என்றதும், காரை ஓரமாய் நிறுத்தியவன், “ண்ணா ரெண்டு டீ..” என, அனுராகா தயங்கி தயங்கி தான் அங்கே அமர்ந்தாள்.

கடைக்காரரோ இருவரையும் வித்தியாசமாய் பார்த்தார், அவர்களின் நடை உடை பாவனை, வந்திருக்கும் கார் முதற்கொண்டு, இங்கே வந்து நிற்பதற்கும் சம்பந்தமே இல்லாதது போல் இருக்க இருவரையும் மாறி மாறி பார்த்தபடி அவர் டீ போட,

அனுராகா சுற்றி சுற்றி பார்க்க, சாலையில் அவ்வப்போது போகும் வாகனம் தவிர வேறு சப்தங்கள் இல்லை.. நள்ளிரவு நேர அமைதியும், அந்த ஜில் காற்றும் புது அனுபவமாய் இருந்தது அவளுக்கு. கைகளை தேய்த்துக்கொண்டவளிடம்

“இந்தா..” என்று தீபன் அந்த டீ கிளாசை நீட்ட, 

தொட்டுப் பார்த்தவள் “சூடா இருக்கு..” என, தீபனோ அவனின் கர்சீப் எடுத்து டம்ப்ளரை சுற்றிக் கொடுத்தான் “இப்போ பிடி..” என்று..

“பிடிக்க சூடா இருக்காது.. ஆனா குடிக்க சூடா இருக்குமே..”

“ஹ்ம்ம்.. கிளைமேட் ஜில்லுனு இருக்குல்ல.. ஊதி ஊதி குடி.. நல்லாருக்கும்..”

“ம்ம் ம்ம்..” என்றவளும் அதுபோலவே குடிக்க, நிஜமாகவே அந்த நேரத்தில் அந்த டீ அவ்வளவு ருசியாய் இருந்தது..

தீபனோ அவளின் முகத்தினைப் பார்த்தபடி தான் பருக்கிக்கொண்டு இருந்தான்.. முதல் வாய் அவள் பருகும்போது அவளின் முகம் காட்டிய பாவனைக்கும், அடுத்து அடுத்து அவள் முகம் மாறிய விதம் கண்டு தானாக ஒரு புன்னகை அவன் முகத்தினில்..

தீபன் சீக்கிரம் குடித்து முடித்துவிட,  அனுராகா இன்னமும் பாதி கூட முடிக்கவில்லை.. தீபன் குடித்த விதத்திலேயே அவனின் பசி தெரிந்தது போல கடைக்காரருக்கு.

“சார்.. டிபன் சாப்பிடுறீங்களா??!!” என,  “ம்ம்.. சூடா என்ன இருக்கு..” என்றான் இவனும்..

“கல்லு சூடா இருக்கு சார்.. தோசை ஆம்பல்ட் போடலாம்..” என, அவர் சொன்னதில் தீபனுக்கும் சரி அனுராகாவிற்கும் சரி அப்படியொரு சிரிப்பு வந்தது..

‘சூடா கல் இருக்கு சார்…’ கல்லினை மடித்து வாயில் வைத்து உண்ண முடியுமா??!!!

“அப்போ ரெண்டு தோசை ஒரு ஆம்லட்..” என்றவன் “நீ..” என்று அவளிடம் கேட்க, “வேண்டாம்..” என்று வேகமாய் தலையை ஆட்டிவிட்டாள்.

ஆனால் அவளுக்கும் பசிக்கும் என்று அவனுக்குத் தெரியாதா “சும்மா கம்பனி கொடு.. டேஸ்ட் பண்ணு பிடிக்காட்டி வேணாம்..” என,

“நீ சரியான ஆளு.. பேசி பேசியே சரி கட்டுற..” என்று அவள் சிரிக்க, “எங்க பொழப்பு எல்லாம் பேச்சுல தான் இருக்கு..” என்றவன்,

“அவங்களுக்கு ஒரு ஸ்பெசல் தோசை..” என, அடுத்த சிறிது நேரத்தில் அவர்கள் கேட்டது வந்தது..

கையில் உணவு வந்ததும் தான் இருவருக்குமே தங்களின் பசி எத்தனை தூரம் இருக்கிறது என்று தெரிய, அனுராகா வேகமாய் உண்டுவிட்டாள்.

தீபனோ ரசித்து ருசித்து உண்டுகொண்டு இருக்க, அவளோ அவன் உண்பதையே ரசிக்க, “ம்ம்ச் கண்ணு வைக்காத..” என்றான் வேண்டுமென்றே..

“வச்சிட்டாலும்..” என்றவளுக்கு அவன் தோசையினுள் ஆம்பலட் வைத்து உண்பது வித்தியாசமாய் இருந்தது.

“என்ன இப்படி சாப்பிடுற..??” என்று கேட்க,

“இது ஒரு டேஸ்ட் கொடுக்கும்..” என்றவன் “இந்தா..” என்று ஒரு வாய் அவன் உண்பது போல உருட்டிக்கொடுக்க “ம்ம்ஹும்..” என்றாள் தயக்கமாய்..

“சும்மா வாயில வச்சு பாரு.. இல்லன்னா துப்பிடு..” என,

“டேய்.. வித விதமா இந்த டைலாக் சொல்வியா நீ..” என்று அனுராகா முறைக்க, “சரி சரி இந்தா..” என்று அவன் ஊட்ட, அந்த உணவு பிடித்ததோ இல்லையோ அவன் ஊட்டியது பிடித்தது..

“ம்ம் நல்லாத்தான் இருக்கு..” என்றவளுக்கு இப்படியே இன்னும் கொஞ்சம் நேரம் சென்றால் நன்றாய் இருக்கும்போல இருந்தது..

அயல்நாடுகள் ஆயிரம் சுற்றியிருந்தாலும், இந்த அர்த்த ஜாம பயணம் அவனோடு மனதில் ஒரு புதுவித கிளர்ச்சி கொடுத்தது.. தீபனுக்கும் அப்படிதான்.. மனது மிக மிக லேசாய் உணர, கடைக்காரருக்கு அவர் சொன்னதற்கும் மேலே பணம் கொடுத்துவிட்டு கிளம்பினான்..

அடுத்த பத்து நிமிடத்தில் அனுராகாவின் வீடு வந்திட, “உன்னோட கார் காலைல வந்திடும் ராகா.. செக்கியூரிட்டி கிட்ட சொல்லிடு போதும்..” என,

“ம்ம் ஓகே.. டேக் கேர் தீபன்..” என்றவள் இறங்கிய பின்னே திரும்பி அவனைப் பார்த்தாள்.

அவனும் என்னவென்பது போல் பார்க்க “கொஞ்சம் பார்த்து இரு..” என்று சொல்கையில் அவளையும் மீறி ஒரு பிசிறு தட்ட, அவனும் கார் விட்டு இறங்கிவிட்டான்..

அத்தனை நேரம் ஒன்றாய் இருந்துவிட்டு இப்போது தீபன் தனியே கிளம்புவது மனதிற்கு சங்கடமாய் இருக்க “நீ.. நீ இங்க ஸ்டே பண்ணு தீபன்.. மார்னிங் கிளம்பி போ..” என,

“அட.. இவ்வளோ நேரம் நல்லா இருந்துட்டு இப்போ என்ன..” என்றவன், அதற்குமேல் எதுவும் சொல்லாது அவனின் கரங்களை விரிக்க, அவளாகாவே வந்து அவனை அணைத்துக்கொண்டாள்.

“பார்த்து போ..” என்று அவள் சொல்ல, “இதெல்லாம் ஜுஜுப்பி மேட்டர்..”  என்றவன், “நீ தைரியமா இரு.. எல்லாம் நான் பார்த்துக்கிறேன்..” என்று சொல்லி கிளம்பிவிட்டான்..

அனுராகா வீட்டினுள் வந்தவளுக்கோ, மனது ஒருநிலையாய் இல்லை.. அத்துனை நேரம் இருந்த தைரியம் இப்போது இல்லை.. அவன் வீடு போய் சேரும் வரைக்கும் அப்படிதான் இருக்கும் என்று தோன்றியது.  அவள் அறைக்கு வந்து அப்படியே கட்டிலில் விழ, அடுத்த பத்தாவது நிமிடத்தில் அவனுக்கு அழைத்தாள்.

“எங்க இருக்க..” என்று..

“போயிட்டு தான் இருக்கேன் ராகா.. வீட்டுக்கு போகலை.. என்னோட பிளாட் போறேன்..” என,

“ஏன்..??!! அங்க நீ தனியா இருக்கணுமே…” என்றாள் இவள் பதறி..

“ஹேய்.. கூல்… நாகா தர்மா எல்லாம் அங்கதான் இருப்பாங்க.. டோன்ட் வொர்ரி.. நீ தூங்கு.. ரிலாக்ஸ்..” என,

“ம்ம்..” என்றாள் சுரத்தே இல்லாது. 

“ஆன்ட்டி அங்கிள் எதுவும் கேட்கலையா???”

“ஐ திங் அவங்க யாரும் இங்க இல்லை போல.. அம்மா இருந்திருந்தா இந்நேரம் ஹால்ல இருந்திருப்பாங்க.. வீட்ல இல்லை..” என,

“ம்ம் ஓகே.. டேக் ரெஸ்ட்..” என்றவன் வைத்துவிட்டான்.. அவளும் அதற்குமேல் எதுவும் சொல்லவில்லை.

அனுராகாவிற்கு உறக்கம் வரவில்லை, ஆனாலும் அமைதியாய் படுத்தபடி அன்றைய தினம் நடந்தவைகளை யோசித்துக்கொண்டு இருக்க, எப்போது உறங்கினாள் என்பதும் தெரியவில்லை.

தீபன் அவனின் பிளாட் போனவன், தர்மா வந்து கதவு திறக்கவும் , “எல்லாம் ஓகே தானே..” என்று திரும்ப கேட்டபடி அமர,

“ம்ம்.. எல்லாமே ஓகே.. ஷர்மா வொய்ப் அப்புறம் குழந்தைங்க நாளைக்கு வர சொல்லிருக்கோம்..” என,

“இதெல்லாம் நாளைக்கு பேசிக்கலாம்.. இப்போ கொஞ்சம் தூங்கனும்..” என்றவன் அப்படியே அங்கிருந்த சோபாவில் படுத்துவிட்டான்..

எதையும் சிந்திக்கும் நிலையில் அவன் அப்போது இல்லை..

நாகா, தர்மா எப்போதும் தீபன் உறங்குகையில் எழுப்பவே மாட்டார்கள்.. மறுநாள் காலையில் அவர்கள் எழுப்பாது விட்டுவிட,   உஷா தான் விடாது போன் அடித்து எழுப்பினார்.

“ம்மா.. என்னம்மா…” என்று தூக்கத்திலேயே பேச,  உஷா என்ன சொன்னாரோ தெரியாது தீபன் சக்ரவர்த்திக்கு பட்டென்று உறக்கம் களைந்து எழுந்து அமர்ந்திட,  மனது அடித்துக்கொள்ள தொடங்கியது..

“ம்மா ஏன் ம்மா இப்படி..” என்று கேட்க,

“நான் என்னடா செஞ்சேன்… எப்பவும் போல சூட்கேஸ் வந்தது.. அப்பாதான் கொடுத்து அனுப்பினார்னு நினைச்சு வாங்கி வச்சிருக்கேன்..“ என,

“ம்மா.. நான் வர வரைக்கும் நீங்க அந்த சூட் கேஸ் ஒப்பன் செய்யவேண்டாம்..” என்று தீபன் சொல்லும்போதே,

“ஏன் டா… ??!!” என்று உஷா கேட்க,

“சொன்னா கேட்கறீங்களா??!!!” என்று கத்தினான்..

“டேய்.. இப்போ எதுக்கு கத்துற.. சேட் கொடுத்து விட்டது.. அப்பாக்கு தெரியாம எதுவும் வராது தானே.. அப்படிதான் வாங்கி வச்சேன்.. உன்கிட்ட சொல்லனும்னு தான் போன் பண்ணேன்.. ஆமா நீ எங்க இருக்க.. பெரியவன் நேத்துல இருந்து கேட்டிட்டு இருக்கான்.. போன் பண்ணா எடுக்கலைன்னு.. என்னதான் டா பண்ற..” என்று அம்மா கேட்க,

“ம்ம்ச் நீங்க வைங்க நான் வர்றேன்..” என்று அப்படியே கிளம்பினான்.

Advertisement