Advertisement

நான் இனி நீ – 17

ராகா என்று தீபன் அழைத்தது மட்டுமே அவள் அறிந்தது. ஆனால் அவனிட்ட அந்த வேம்பயர் முத்தமோ, அவளின் உடல் மொத்தத்தையும் கூசச் செய்திட, அவனின் தோள்களை இறுகப் பற்றிக்கொள்ளத்தான் வேண்டியதாய் இருந்தது..

சுற்றி இருந்த ஏகாந்தம், அது கொடுத்த ஓர் உணர்வு, அதையும் மீறிய அவர்களின் நெருக்கம் இது அனைத்தும் இப்போது வேறொரு விதமாய்..      மச்சத்தில் ஆரம்பித்த முத்தம், மிச்சம் மீதமில்லாது அவர்களின் இதழில் சங்கமிக்க, இன்னும் இன்னும் வேண்டும் என்று தான் தோன்றியதே தவிர விலகிட இருவருக்கும் எண்ணமில்லை போலும்..

அந்த நொடி… அந்த ஸ்பரிசம்.. அந்த நெருக்கம்.. அந்த தீண்டல் இதெல்லாம் எதனால்??

எப்படி என்று இருவருக்கும் தெரியாது.. ஆனாலும் பிடித்திருந்தது.. இருவரின் கண்களிலும் ஒருவித மயக்கம்.. அது நிச்சயமாய் மது கொடுத்தது அல்ல..

அவள் கன்னம் பற்றி, அவள் இதழில் லயிதிருந்தவன் “ராகா….” என்று அழைக்க, அவளோ விழிகள் திறந்தாள் இல்லை..

இன்னமும் அழுத்தம் கொடுத்து பற்றியவன் “ராகா…” என, மெல்ல இமைகள் திறந்தவளுக்கோ தன்னை குறித்தே ஆச்சர்யம்.

அழைத்தவனுக்கோ அடுத்து என்ன பேசவென்று தெரியவில்லை, அருகில் நிற்பவளுக்கும் என்ன பேசிட என்று தெரியவில்லை.. ஆனாலும் பேசிக்கொள்ளாத நிறைய விஷயங்கள் புரிந்துகொள்ள முடிந்தது..

அப்படியேத்தான் நின்றனர், சுற்றியும் இருந்த மெழுவர்த்திகள் உருகிக்கொண்டு இருந்தது அவர்களின் மனதினைப் போல, மெல்லிய இசை அவர்களின் செவிகளை வருடினாலும், இருவரின் இதயம் துடிப்பது மட்டுமே பேரொலியாய் கேட்க,

இருவரின் பார்வையும் ஒன்றோடு ஒன்று பிணைந்திருக்க “வில் யூ பி மைன்??!!” என்றுக் கேட்டான் தீபன் சக்ரவர்த்தி.

அவன் தன்னைப் பார்த்து எதுவோ சொல்கிறான் என்பதுமட்டுமே அவளுக்கு.. இன்னும் அந்த மாய வலையில் இருந்து அனுராகா மீளாது இருக்க,

“ராகா..!!” என்றான் திரும்ப, அவளின் முதுகில் ஓர் அழுத்தம் கொடுத்து.

அவ்வழுத்ததில் “ஹா..!! என்ன சொன்ன??!!” என, தன் கைகளில் இவள் மயங்கி நிற்கிறாள் என்பதிலேயே தீபனுக்கு ஒரு தனி உற்சாகம் பிறக்க,

“டைட்டன் ராகாவா இருக்கிற உன்னை தீபன் ராகாவா மாத்தணும்னு ஆசை..” என,

“என்னது??!!!” என்று அனுராகா புரிந்தும் புரியாதது போல கேட்க,

‘தோடா..!!’ என்று பார்த்தவன், மீண்டும் அதே போல் அவள் கழுத்து மச்சத்தில் இதழ் பதித்து “இது புரிஞ்சதா..” என,

“ராஸ்கல்..!!!” என்று சொல்லி அனுராகா சிரிக்கவும்

“கள்ளி டி நீ..” என்று அவனும் சிரிக்க, வெளியே வித்தியாசமாய் எதோ ஒரு சத்தம் கேட்டது.

யாரோ ஆட்கள் நடக்கும் சத்தம் போல் கேட்க, தீபன், வேகமாய் அவர்கள் உள்ளே இறங்கிய வழியை அடைத்தவன், எதுவும் பேசாதே என்பதுபோல் வாயில் விரல் வைத்துக் காட்டி, வெளியில் என்ன நடக்கிறது என்பதை செவிகளால் உணர முயற்சித்தான்.

ஆட்களின் காலடி சத்தம் தான்..

எப்படியும் கிட்டத்தட்ட பத்து பேருக்கும் மேலாவது இருப்பர்..

தீபனின் முகத்தினில் ஒரு பதற்றம் இப்போது.. ஆட்களை குறித்து அல்ல, அனுராகா குறித்து.. அவளை பத்திரமாய் வீடு சேர்க்கவேண்டும். மற்றது எல்லாம் பின்னே தான்.

யார் இதனை செய்திருப்பார்கள் என்று யூகிக்க முடிந்தது. நிச்சயம் அந்த சேட் தான். நன்றாய் தெரியும்.

ஆனால்.. இங்கே.. இப்போது அதை அவன் யூகிக்கவில்லை..

அனுராகா தீபனையே பார்க்க, தீபன் யோசித்தது எல்லாம் சில நொடிகளே, ஆட்களின் காலடி சத்தம் அருகே கேட்கத் தொடங்கவும், அவன் நின்றிருந்த இடத்திற்கு பக்கத்தில் இருந்த சுவிட்ச் போர்டில் இருந்த பொத்தானை அழுத்த அடுத்த நொடி, வெளியே சலசலவென்று நீர் பாயும் சத்தம்.

அனுராகாவிற்கு இப்போது புரிந்தது.. நீச்சல் குளத்தில் இப்போது நீர் இருக்கும், ஆட்கள் உள்ளே இறங்கி இவர்களை நெருங்குவது கொஞ்சம் தாமதம் ஆகும் என்று.. அவளுக்கு பயம் தோன்றவில்லை மாறாக ஒருவித வேடிக்கையாய் இருந்தது.

எல்லாமே புதிதாய்..

அனைத்தையும் தாண்டி.. அவன் இருக்கிறான் என்ற எண்ணம்.. அது கொடுத்த தைரியம்..

நீர் நிரம்புகிறது என்று தெரியவும் தீபன் வேகமாய் அவளின் கரம் பற்றியவன், வேறொரு வழியில் அந்த மூங்கில் பாதையில் அழைத்துச் சென்றவன், ஒரு ஐந்து நிமிட நடைக்கு பிறகு ஓர் இடத்தில் நின்றவன், அவர்கள் தலைக்கு மேலே இருந்த ஒரு பலகையில் இருந்த பொத்தானை அழுத்த அதுவோ சத்தம் இல்லாது திறந்துகொண்டது.

அனுராகா இதெல்லாம் வியப்பாய் பார்க்க “இன்னொரு நாள் வந்து ரசிச்சு பாரு.. இப்போ ஏறு..” என,

“நீ??!!” என்றாள் அனுராகா.                  

“நான் சொல்றதை கேளு ராகா.. இப்படியே நீ முன்னாடி போயிடு.. பிரன்ட் கேட் வந்திடும்..” என்று தீபன் அவளை அனுப்ப முயல,

“முடியாது தீபன்…” என்று அவளோ அவனின் கரங்களை இறுகப் பற்றி நிற்க,

“இதெல்லாம் ஒண்ணுமே இல்லை.. நான் எப்படின்னாலும் வந்திடுவேன்…” என்று அவன் அவளை சமாதானம் செய்ய,

“நோ  நான் போகவே மாட்டேன்..” என்றாள் பிடிவாதமாய்..

“அயோ ராகா.. சுத்தி எத்தனை பேர் இருக்காங்க தெரியாது.. ஆனா என்னோட கன்ல ஆறு புல்லட் தான் இருக்கு…” என,

“நீ கொஞ்சம் திரும்பி நில்லு..” என்றாள் வேகமாய்..

“ஏன்??!! என்னாச்சு.. நீ போ முதல்ல…” என்று அவளை அந்த துவாரத்தின் உள்ளே அவன் அனுப்ப முயல,

அவளோ “சொல்றேன் இல்லையா ஒரு ஒன் செக்கன்ட் திரும்பி நில்லு..” என்றவள் அவன் திரும்ப மாட்டான் என்பதை அறிந்து அவள் திரும்ப

‘என்னடா செய்கிறாள்…’ என்றுதான் பார்த்தான் தீபன் சக்ரவர்த்தி.

இரண்டு முறை விரல் சொடுக்கும் நேரத்தில் அவன்புறம் திரும்பியவள் “ம்ம் இந்தா..” என்று அவளின் துப்பாக்கி ஒன்றினை நீட்ட,

“கன்..!!!” என்றான் ஆச்சர்யமாய்..

“ம்ம்…” என்றவள் “எப்படியும் பத்து பேர் மேல இருப்பாங்கன்னு தோணலை.. சோ இப்போ உன்னோடது என்னோடது சேர்ந்து பன்னிரண்டு புல்லட்.. போதும்தானே..” என்று அவள் தலையை ஆட்டிக் கேட்க,

“அடிப்பாவி இடுப்புல கன் வச்சிட்டு தான் என்னோட நீ அப்படி..” என்றவனுக்கு இன்னமும் நம்ப முடியவில்லை..

தன் கரங்களில் உருகி நின்றவள், துப்பாக்கியோடு நிற்பாள் என்று..

அவளை ஆச்சர்யமாய் அவன் பார்த்து நிற்க “நீ அப்புறமா பொறுமையா பாரு.. இப்போ ஏறு..” என்று அவன் சொன்னதுபோல் சொன்னவள் அவன் முதுகை பிடித்துத் தள்ள, தலையை அவனே ஆட்டிக்கொண்டவன், ஒரே குதியில் மேலேறி விட்டவன்

“கம்மான் ராகா..” என்று கை கொடுக்க, அவளுக்கு அது அத்தனை எளிதாய் வரவில்லை..

எளிதாய் ஒருவர் மட்டுமே தப்பிக்க முடியும். இருப்பதோ இருவர்.. வெளியில் எத்தனை ஆட்களோ தெரியாது.. தீபனுக்கு ஒவ்வொரு நிமிடமும் செல்ல செல்ல மனது அடித்துக்கொண்டது.

அந்த சேட் அவனை அடித்துக் கொள்ளும் வேகமும் வந்தது.. எதிரில் நின்று எதிர்த்திருந்தால் இந்நேரம் நடப்பதே வேறு.. ஆனால் இப்போது அவனை நம்பி வந்தவள் ஒருத்தி இருக்கிறாள்.

அவளின் பாதுகாப்பு அவனுக்கு அனைத்தையும் விட முக்கியம்..

அவளோ ஏற முடியாது தவிக்க, அதற்கு அவள் அணிந்திருந்த அந்த பெரிய கவுன் வேறு மிகவும் இடைஞ்சல் செய்ய,

“ராகா நான் சொல்றது போல செய்..” என்றவன்

“உன்னோட ட்ரெஸ் மடக்கி கட்டு.. லென்த் கம்மியாகும்..” என, அவளும் அதுபோலவே செய்யவும் அடுத்த நொடி கீழே கொஞ்சம் குனிந்தவன், அவளின் இடுப்பினில் கை கொடுத்து அப்படியே மேலே தூக்கிவிட்டான்.

சுற்றிலும் இருட்டு மட்டும் கண்களுக்கு.. அனுராகா ஏறியதுமே, வேகமாய் அந்த வழியையும் அடைத்தவன், “உன்னோட போன் சைலேன்ட்ல போடு..” என்றபடி அவனது அலைபேசியையும் சைலெண்டில் போட்டவன், டார்ச் அடிக்க, இருபக்கமும் சுவர் கொண்டிருந்த அந்த பாதையில் ஒருவர் மட்டுமே நடக்க முடியும்.

அனுவிற்கு வியர்க்கத் தொடங்க “ராகா நான் சொல்றதை கவனமா கேளு.. இது காம்பவுண்ட் வால் குள்ள இருக்க பாதை.. இது வழியா போனா ரெண்டு வழி பிரியும்.. ஒன்னு முன்னாடி வெளிய போறது.. இன்னொன்னு பின் பக்கம் இருக்க கார் செட்டுக்கு போறது..” என,

“எதுவா இருந்தாலும் நான் உன்னோடதான் வருவேன் தீபன்..” என்றாள் அவளோ உறுதியாக.

“ம்ம்ச்.. நான் சொல்றதை புரிஞ்சுக்கோ.. ரொம்ப நேரம் நம்ம இங்க நிக்க முடியாது.. நம்ம உள்ள இருக்கோம்னு அவங்க கெஸ் பண்றதுக்குள்ள நம்ம வெளிய போயிடனும்..” என்று தீபன் சொல்லும்போதே, அவர்கள் நிற்கும் சுவற்றின் பக்க வாட்டு பகுதியில் திடு திடுவென்று ஆட்கள் ஓடும் சத்தம்.

அவ்வளோதான் இனி தாமதிப்பது கூடாது என்று தீபன், ராகாவிடம் அவளின் துப்பாக்கி கொடுத்து, முன்னே நடக்க வைத்தவன், அவனும் அவளின் பின்னேயே வந்தான்.

நடந்து செல்லும் அதே நேரத்தில் நாகாவிற்கும் தர்மாவிற்கு மெசேஜ் அனுப்ப, அவர்கள் அனுப்பிய செய்தியோ ‘இப்போதைக்கு வெளியே வராதீர்கள்..’ என்றே சொன்னது.

“ஓ…!! காட்…” என்று தீபன் சொல்ல,

“என்னாச்சு??!!” என்று அனுராகா வேகமாய் திரும்ப, இருவரும் ஒருவரை ஒருவர் மோதிக்கொண்டு நிற்க,

“பார்த்து ராகா..” என்றவன் “கார் செட் இருக்கப் பக்கம் தான் போகணும்.. இப்போதைக்கு வெளிய போக முடியாது..” என,

“யார் சொன்னா அப்படி??!!” என்றாள்

“இப்போ எதுவும் பேசாத.. வேகமா நட..” என்றவன், அவன் சொன்னது போல் இரு பாதைகள் பிரியும் இடம் வரவும், இரண்டிற்கும் மையமாய் நின்று சிறிது யோசித்தவன், “இந்த பக்கம்..” என்று சொல்லி அனுவை முன்னே நடக்க, வைக்க, தூரத்தில் ஓர் இடத்தினில் சிறு வெளிச்சம் வந்தது.

அந்த சிறு வெளிச்சத்தினை கண்ட பின்னேதான் தீபனுக்கு சற்று நிம்மதி எனலாம்.. அனுவிடம் “ராகா.. இந்த இடம் க்ராஸ் பண்றது ரொம்ப கேர்புல்..  இங்க வால் முடிஞ்சிடும்.. ஜஸ்ட் ஹாலோ ப்ளாக் ஸ்டோன்ஸ் தான்.. இருக்கும்.. சோ பார்த்து மெதுவா..” என, அவளோ காலில் போட்டிருந்த ஹை ஹீல்ஸ் கலட்டி மெதுவாய் நடந்தவள்

“எல்லாமே படத்துல பார்க்கிற மாதிரி இருக்கு..”  என,

“ம்ம் உன் அப்பாவும் இப்படி எத்தனை கட்டி வச்சிருக்கார் கண்டுபிடி..” என்றபடி அவனும் பின்னே வந்தான்.

அடுத்த இரண்டொரு நொடியில், மற்றுமொரு சுவர் வர, அதில் சதுரமாய் இருந்த டைல்ஸ் கல்லினை மெதுவாய் அழுத்தித் தள்ளினான். அதுவும் திறத்து கொள்ள,

“போ..” என்று சொல்லி, தீபன் மொபைல் டார்ச் அடிக்க, அனுராகா உள்ளே போனதும், தீபனும் பின்னே வந்துவிட்டு வழியை அடைத்தவன்,

“கார் செட் வந்தாச்சு..” என,

அனுராகா “அப்பாடி!!!” என்று ஒரு பெருமூச்சு விட்டாள்.

“இங்க இருக்கோம்னு யாரும் கெஸ் பண்ணாம இருக்கணும்…” எனும்போதே, வெளியே கார் சத்தம் கேட்டது..

“யாரோ வர்றாங்க..” என,  

“ஷ்..!!” என்றவன், நடக்கும் சத்தம் கூட வராது, அந்த செட்டினில் இருக்கும் சிறு துவாரம் வழியில் வெளியே பார்க்க, காரினில் வந்து இறங்கியது சாட்சாத் ஷர்மாவே..

அவனைக் கண்டதும் தீபனின் ஆத்திரம் இன்ன அளவில் இல்லை. ஷர்மாவை கண்டதும் அவனின் ஆட்கள் எல்லாம் அவனை சூழ்ந்து நிற்க, வெளியே பார்த்தபடி தீபன் இப்போது தர்மாவிற்கு அழைக்க,

“நீங்க உள்ளயே இருங்க நாங்கப் பார்த்துக்கிறோம்..” என்று தர்மா சொல்லி வாய் மூடவில்லை, இரண்டு லாரி நிறைய ஆட்கள் இறங்கிவிட்டனர் அங்கே..

எங்கிருந்து வந்தார்கள், இங்கேதான் நின்றார்களா??!! எதுவும் யாருக்கும் புரியவில்லை..

நாகாவும் தர்மாவும் முன்னே வர, அவர்களுக்குப் பின்னே அத்தனை பேரும் வர, இப்போது அணுவும் வந்து நின்று வேடிக்கைப் பார்க்க, வெளியே அடிதடி நடந்தது.

நாகாவும் தர்மாவும் ஷர்மாவை பிடித்துக்கொள்ள,

அனுராகாவிற்கு என்ன தோன்றியதோ “நான் இல்லைன்னா நீ போயிருப்பியா?!!!” என்றாள்.

“ஆம்..” என்றவன், பார்வை அவள் பக்கம் இல்லை.. எல்லாம் வெளியே தான்.

ஷர்மாவிற்கு திக் என்றானது. தீபன் தனித்து இருக்கிறான்.. அதுவும் ஒரு பெண்ணோடு என்ற செய்தி சேட் அறியவுமே, சட்டென்று இப்படியொரு திட்டம் தீட்டி சுற்றி வளைக்கலாம் என்று வர, இப்போது அவன் சுற்றி வளைக்கப் பட்டிருந்தான்.

அவன் மட்டுமல்ல அவனோடு வந்தவர்களும்.

அனுராகாவோ “நீ போ தீபன்.. எனக்காக நிக்காத..” என்று சொல்ல, “நீ இருந்த தானே எனக்காக..” என,

“ம்ம்ச் அது வேற.. அப்போ யாருமே இல்லை.. இப்போ இத்தனை பேர்.. நீ போ.. என்ன செய்யணுமோ செய்..” என்று அவனை அனுப்ப,

“ஆர் யூ சீரியஸ்?!!!” என்றான்.

“எஸ்…” என்று அவளும் சொல்ல, தீபனுக்கு இப்போது தான் வெளியே செல்வது உசிதமல்ல என்று நன்கு தெரிந்தது.

“இல்லை… இப்போ அதுக்கான நேரமில்லை..” எனும்போதே,

ஷர்மா வெளியே இருந்து கத்தினான் “டேய் தீபன்.. எங்கடா ஓடி ஒளிஞ்சு இருக்க.. வெளிய வாடா… சுத்தி இத்தனை பேரை நிறுத்திட்டா நான் பயந்துடுவேனா..” என,

அனுராகாவோ “நீ போ..” என்றாள்.

“நோ.. நான் சொல்றதை கேளு..” என்றவன், அவளை அழைத்து வந்து அமர வைத்து தானும் உள்ளே அமர்ந்தவன்,  தர்மாவிற்கு அழைக்க, அவனோ இவனின் எண்ணம் புரிந்தவனாய் அழைப்பை ஏற்று, ஸ்பீக்கரில் போட,   

“ஹா ஹா ஷர்மா.. என்னடா இப்படி சிக்கிட்ட நீ…” என்று தீபன் கொக்கரிக்க,

“ஏய் நீ வெளிய வா டா..” என்று திமிறினான் ஷர்மா..

கார் ஷெட் வெளியே சுற்றிலும் ஆட்கள்.. எல்லாம் சேட் அனுப்பியவர்கள்.. ஷர்மாவை காப்பாற்ற.. தீபனை பகைத் தீர்க்க என்று.. ஆனால் சேட் அறியாத விசயமும் ஒன்று உண்டென்றால் அது இந்த நிமிடம் அந்த ஷர்மாவும் அவன் ஆட்களும்  தீபனின் ஆட்களிடம் என்று..

“டேய் நான் வெளிய வந்தா நீ இப்படி பேசிட்டு எல்லாம் இருக்க மாட்ட.. போ போ போய் கொஞ்ச நேரம் உயிரோட இரு.. சீக்கிரமே உன்னை பார்க்க வர்றேன்..” என்று தீபன் சொல்ல,

அனுராகாவோ அவன் பேசுவதை எல்லாம் சுவாரஸ்யமாய் பார்த்துகொண்டு இருந்தாள்.

இந்த தீபன் அவள் காண்பது புதிது..!!

“தீபன் இது சரியில்லை… என்னோட குடும்பத்தை நீ என்ன பண்ணி வச்சிருக்க… உன்னை நான் சும்மா விடமாட்டேன்..” என்று ஷர்மா கத்த,

“ஹா ஹா டேய் போடா… நீயே இருக்க மாட்ட.. இதுல குடும்பமாம்…” என்று தீபனும் சொன்னவன் “தர்மா இழுத்துட்டு போங்க எல்லாரையும்..” என்றவன் அழைப்பை துண்டித்துவிட, அடுத்த ஐந்தாவது நிமிடம் அந்த இடமே அமைதி சூழ்ந்தது.   

“எல்லாரும் போயாச்சு…” என்று அனுராகா சொல்லும் நேரம், நாகா அழைத்தவன் “இப்போதைக்கு வெளிய எங்கயும் வரவேணாம்.. நான் சொன்னதுக்கு அப்புறம் வாங்க..” என்றிட,   

அதை தீபனும் ராகாவிடம் சொல்ல,   “நைட் புல்லா இப்படியே தானா??!!!” என்று அவள் கேட்க,

“மோஸ்ட்லி இருக்காது.. பட் நீ வீட்ல சொல்லிடு..” என்று அவன் சொல்ல,

“என்ன சொல்ல முடியும்.. உன்னோட இருக்கேன்னா.. அது இப்போ சுத்தம்மா முடியாது..” என்றவள், தாராவிற்கு ஒரு மெசேஜ் மட்டும் தட்டினாள்.

“என்ன சொன்ன??!!” என்று தீபன் கேட்க,

“உன்னைப் பார்த்ததுல இருந்து எங்கம்மா கிட்ட நிறைய பொய் சொல்றேன்.. வர வர ரொம்ப கெட்ட பொண்ணா நீ என்னை மாத்திட்ட..” என்று அனுராகா சொல்ல,

“ஹா ஹா…” என்று தீபன் சிரிக்க, “ஷ்..!!!” என்றாள் அவளும்..

ஆனாலும் அவன் சிரிப்பினை அடக்காது சிரிக்க “இப்போ என்ன இப்படி??!!!” என்றாள் கை ஆட்டி..

“நானும் இப்படிதான் நினைச்சேன்.. என்னை எல்லாரும் ரொம்ப கெட்டவன் ஆக்குறாங்கன்னு..” என,

“ஓ!! புதுசா ஆக்குறதுக்கு என்ன இருக்கு..” என்று அவள் சொன்னதும்,

“அதனால தான் கன் கொண்டு வந்தியா??!!!” என்றான்..

“ஹா ஹா.. அது எப்பவுமே என்னோட இருக்கும்..” என்றவள் “D- வில்லேஜ்ல கூட இருந்தது..” என,

“நிஜமா??!!!” என்றான் நம்பாது..

“ம்ம்..” என்று தலையை மேலும் கீழுமாய் ஆட்ட, “பின்ன ஏன் நீ அதை யூஸ் பண்ணலை..” என்று தீபன் கேட்க,

“என்னால எஸ்கேப் ஆக முடியலைன்னா கண்டிப்பா நீ இப்போ உயிரோட இருந்திருக்கவே மாட்ட..” என்று அனுராகா சொல்ல,

“ஒரு அழகான எதிரி கூட வாழ்நாள் முழுக்க..” என்று சொல்லி சத்தமாய் சிரித்தான்.

அனுராகாவோ அமைதியாய் பார்த்திருந்தவள் “நமக்குள்ள இன்னும் எதுவுமே மாறிடலை தீபன்.. எல்லாமே அப்படியே தான் இருக்கு.. நிறைய விஷயங்கள் இன்னும் பேசவேயில்லை.. அதுக்குள்ள நம்ம ஒரு கன்க்லூசனுக்கு வர முடியாது..” என,

“இப்போ பேசுறது பிஸ்னஸ் வுமன் அனுராகா..!!” என்றவன்,

“எது எப்படி இருந்தாலும் என்னோட முடிவு இதுதான்..” என்றான் உறுதியாய்..

இவர்கள் இப்படி கதைத்துக்கொண்டு இருக்க, அங்கே அந்த பல்ராம் சேட்டின் முகம் வெளிறிப் போய் இருந்தது.. அவரின் முன்னே இருந்தவன் பார்வையே அவரை கொல்லாமல் கொல்ல,

“எல்லாமே நீ சொன்ன ப்ளான் தான் பேட்டா..” என்று சேட் வார்த்தைகளை விழுங்க,

“பின்ன எப்படி பெய்லியர் ஆச்சு??” என்றான் எதிரில் இருந்தவன்,

“நிஜமா எனக்குத் தெரியலை பேட்டா.. இல்லைன்னா ஷர்மாவை நான் அங்க அனுப்பியே இருக்கமாட்டேன்..” என்று சேட் சொல்ல,

“பண்ணது எல்லாமே முட்டாள் தனம்.. இதுல பயந்தது போல நடிப்பு வேற..” என்றவன், கோபமாய் எழுந்திட, “நிஜமா பேட்டா…” என்று பல்ராமும் எழுந்திட,

“தீபன் பத்தி தெரிஞ்சும்.. இப்போ ஷர்மா மறுபடி அவன்கிட்ட.. அவன் உயிரோட நிச்சயம் திரும்ப வரமாட்டன்.. அப்படியே வந்தாலும் இனி ஷர்மா உயிரோட இருக்கக்கூடாது.. ஏன்னா தீபன் இந்தத் தடவை அவனை சும்மா வெளிய விடமாட்டன்..” என்றவன்,

“ஷர்மா சாகனும்..” என்றுவிட்டு செல்ல, சேட் கைகள் பிசைந்து நின்றிருந்தார்..

அவன் – நான் விரும்பும் எதிரி நீயடி

அவள் – எனை விரும்பச் செய்யும் எதிரி நீயடா

காதல் – எதிரி என்பது எல்லாம் எட்ட நிற்கும் வரைதான்..            

Advertisement