Advertisement

                           நான் இனி நீ – 12

தீபன் சக்கரவர்த்தி, அம்மாவை மட்டும் அழைக்கவில்லை.. தன் நண்பர்களையும் பின் நீரஜாவையும் அழைத்துவிட்டான். அதுவும் உஷா இங்கே வரும் முன்னே அவர்கள் இங்கிருக்கவேண்டும் என்ற கட்டளையோடு..

பொய் சொன்னால் பொருந்தச் சொல்லவேண்டுமே.. அதுதான் இப்படி.. இவர்களோடு தான் ட்ரிப் என்று சொல்லியாகிற்று.. அது இல்லை என்று போனால்??!! நிச்சயம் அம்மா அனுராகாவை தவறாக நினைக்கத் தோன்றும். அது தீபனால் ஏற்றுக்கொள்ள முடியாதே.

தேவ்வும் புனீத்தும், “நாங்க மட்டும் வர்றோம்..” என்றதற்கும்,

“நோடா… நீரஜா கண்டிப்பா வரணும்..” என,

“ஏன்டா.. நீ பண்றது உனக்கே நியாயமா இருக்கா??!!” என்று கடிந்தான் தேவ்.

“இப்போ அதெல்லாம் நான் யோசிக்கிறதா இல்லை.. நீங்க வர்றீங்க அவ்வளோதான்.. தர்மா வந்து பிக்கப் பண்ணிப்பான்…” என,

“வந்துத் தொலையுறோம்..” என்றுதான் கடிந்தனர்.

‘ராகா..’  இப்பெயரைத் தவிர அவனின் மனது வேறெதுவும் நினைக்கவேயில்லை.

இதுநாள் வரைக்கும் யாருக்காகவாவது அவனின் அத்தனை அலுவலையும் விட்டு இப்படி அமர்ந்திருப்பானா என்று கேட்டால் இல்லவே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். நிஜமும் அதுதானே. அவன் காலால் இட்ட வேலையை தலையால் செய்ய எத்தனையோ பேர்.

நேரம் பார்க்காது தர்மாவிற்கு அழைத்தவன் “அம்மா இங்க வர்றதுக்குள்ள அவங்க எல்லாம் இங்க இருக்கணும் தர்மா..” என,

இவன் சொல்வதற்கு சரி என்று சொல்லவே படைக்கப்பட்ட இருவரில் ஒருவன் வேறென்ன சொல்வான். சரி என்பதைத் தவிர??!! அவனோடு பேசிவிட்டு வைக்கவும் மிதுன் அழைத்துவிட்டான்.

“என்னாச்சு தீப்ஸ்.. அம்மா இப்போவே கிளம்பிப் போகணும் சொல்றாங்க??!! அ.. அனு எப்படி இருக்கா??!!” என,

“ம்ம் என்னாச்சு??!! தெரியலை.. டாக்டர்ஸ் ஒன்னும் சொல்லலை..”  என்றவனுக்கு அண்ணனும் அம்மாவோடு வருவானோ என்ற யோசனை??

கூடாது என்ற ஆசையும்.

இவன் ஏன் வரவேண்டும் என்ற கேள்வியும்.

“ஓ..!! அனு பேரன்ட்ஸ் கிட்ட சொல்லலையா??! நான் வேணும்னா சொல்லிடவா..” என்று மிதுன் கேட்க, வேகமாய் வேண்டாம் என்றான் தீபன்.

“ஏன்டா??! சொல்லவேணாமா???” என,

“இப்போ வேணாம்… அம்மா வரட்டும்.. அனு கண் முழிக்கட்டும்.. நான் பார்த்துக்கிறேன்..” என்றவனின் குரலில் நீ வந்திடாதே என்ற செய்தி இருக்க,

“அம்மாவோட நானும் தான் வர்றேன்.. அங்க கொஞ்சம் வேலை இருக்கு..”  என்று மிதுன் அழுத்தம் திருத்தமாய் சொல்லி, தீபனுக்கு அண்ணன் என்பதை நிரூபித்தான்.

“என்ன வேலை.. எனக்குத் தெரிஞ்சு உனக்கு இங்க எதுவும் இல்லையே..???!!” என்று தீபன் கேட்க,

“ஓ.. காட் தீப்ஸ்.. எப்போயிருந்து நீ இப்படி பீகேவ் பண்ண ஆரம்பிச்ச??!!” என்று மிதுன் கேட்க, “ஓகே.. நீ வந்து உன் வேலை மட்டும் பாரு..” என்று வைத்துவிட்டான். 

ஒருப்பக்கம் அனுராகா. இன்னொருபக்கம் அவனின் அம்மா இப்போ அண்ணனும் கூட. தீபனுக்கு யாருக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. மருத்துவர் உள்ளே சென்று கிட்டத்தட்ட அரைமணி நேரத்திற்கும் மேலானது.

‘இன்னும் என்ன பண்றானுங்க… இந்த டாக்டர்க்கு ட்ரீட்மென்ட் பண்ணத் தெரியுமா தெரியாதா??!!’ என்று சத்தமிட வேண்டும் போல இருந்தது. இப்படி எமர்ஜென்சி சூழலில் எப்போதும் அவனை சுற்றி நான்கைந்து ஆட்களாவது இருப்பர். இவனின் தலையில் எதுவும் ஏறாது. முடிவு மட்டும் கேட்பர் செய்யலாமா வேண்டாமா என்று. ஆனால் இப்போது தனியாளாய் நிற்பது என்னவோ ஒருமாதிரி இருந்தது.

இப்படி அவனின் சிந்தனையில் அமர்ந்திருக்க, டாக்டர் வந்தவரோ “நத்திங் டூ வொர்ரி தீபன்.. காயம்.. ரெஸ்ட்லெஸ்னஸ்.. சோ பீவர்.. டூ ஆர் த்ரீ டேஸ் கம்ப்ளீட் ரெஸ்ட் எடுத்தா சரியாகிடும்.. நாளைக்கே நீங்க ஷிப்ட் பண்றதுன்னா பண்ணிக்கலாம்..” என,

“ஓ..!!! ஓகே.. இப்போ பார்க்கலாமா??!!” என்றவனுக்கு உள்ளே ஓடிட கால்கள் துடித்தது.

“நோ நோ.. ஷி இஸ் ஸ்லீபிங்.. எப்படியும் ஒரு பைவ் ஹவர்ஸ் ஆகும்… நீங்களும் ரெஸ்ட் எடுங்க..” என்றுவிட்டு போனார் மருத்துவர்..

‘பைவ் ஹவர்ஸ்…’ அவன் உதடுகள் உச்சரிக்க, அதற்குப்பின், அனு இப்படி அவனோடு இருக்க நேருமா?? இல்லை அனைத்தையும் அம்மாவிடம் சொல்லி கிளம்பிடுவாளா?? இதெல்லாம் இப்போது புத்தியில்.

“சார் ரூம் கீ..” என்று, அந்த இரவு நேர இன்சார்ஜ் வந்து கொடுக்க, “ம்ம்..” என்று அதனை வாங்கியவனுக்கு ரூம் எல்லாம் செல்லும் எண்ணமில்லை.

சிறிது நேரம் வெளியே தான் அப்படியே அமர்ந்திருந்தான். அம்மா வருவதற்குள் ஒருமுறை அனுராகாவிடம் பேசிடவேண்டும். நிச்சயம் அம்மா வந்துவிட்டால் சூழல் மாறிடும். தீபன் மேலிருக்கும் கோபத்தில் அவனின் வார்த்தைகள் ஒன்றைக் கூட உஷா கேட்கவே மாட்டார். யார் கண்டது அனுவின் பெற்றோர்களையும் உடன் அழைத்து வந்தாலும் வருவார்.

உண்மையும் அதுதான். உஷா அந்த முடிவில் தான் இருந்தார். அனுராகாவை தன் வீட்டிற்கு மருமகளாய் கொண்டுவந்திட முடிவு எடுத்தபிறகு அனைத்தையும் முறைப்படி செய்யவே விரும்பினார். இப்போது மிதுன் வேறு அவருக்கு துணையாய் நிற்க,

“அவன் சொன்னா சொல்லிட்டே இருக்கட்டும் மிதுன். நீ அப்பாக்கு போன் போட்டு சொல்லிடு.. தென் தாராக்கிட்ட நான் பேசிக்கிறேன்.. இந்த டைம்ல கால் பண்ணா என்னவோ ஏதோன்னு நினைக்க தோணும்..” என்றவர்,

“பெங்களூர் வீட்டுக்கு போன் பண்ணி எல்லாம் கிளீன் பண்ண சொல்லு.. அனுராகாக்கு ரூம் ரெடி பண்ண சொல்லு.. மெடிகல் கிட் எல்லாம் இருக்கட்டும் அங்கே.. அப்படியே ஒரு நர்ஸ் சொல்லிடு..” என்றார் அடுத்தடுத்து அடுக்கிக்கொண்டே போக,

“ம்ம்மா… கூல் டவுன்.. நான் பார்த்துக்கிறேன்.. ஜஸ்ட் ரிலாக்ஸ்..” என்றவன் அனைத்து ஏற்பாடுகளையும் தன் பொறுப்பாக்கிக் கொண்டான்.  

“நீ பாதுப்ப சரிதான்.. ஆனா இந்த சின்னது என்ன பண்ணி வச்சிருக்கோ.. திடீர்னு அவனை நினைச்சு ரொம்ப வருத்தப்பட வைக்கிறான் டா.. எப்பவும் இவன் இப்படி இல்லைதானே..” என்று உஷா சொல்ல,

“ம்மா.. இப்பவும் அவன் நல்லாத்தான் இருக்கான்.. கொஞ்சம் விடியட்டும் கிளம்பிடலாம்..” என்று மிதுன் சமாதானம் செய்தாலும் இருவரின் மனதிலும் தீபன் ஏன் இப்படியாகிப் போனான் என்றே தோன்றியது.

பொழுது விடியவே அனைவரும் காத்துக்கொண்டு இருந்தனர். ஒருபுறம் தீபனின் நண்பர்கள் பெங்களூருவை தொட்டிருக்க, உஷாவும் மிதுனும் சென்னையிலிருந்து கிளம்பியிருந்தனர். தாராவிற்கு அழைத்துப் பார்க்க, லைன் கிடைக்கவேயில்லை. மிதுன் லோகேஸ்வரனுக்கு அழைக்க, அவருக்கும் லைன் கிடைக்கவில்லை.

“என்னடா??!!” என்று உஷா கேட்க,

“இப்போதைக்கு சொல்லவேணாம்னு தீப்ஸ் சொன்னான் ம்மா.. பார்த்துக்கலாம்.. அங்கிளோட பிஏ க்கு சொல்லியாச்சு..” என, அப்போதும் கூட உஷாவிற்கு மனது சமாதானம் ஆகவில்லை.

என்னவோ ஒன்று அவரை நிம்மைதியடைய விடாது செய்துகொண்டு இருந்தது.

அங்கே மருத்துவமனையிலோ, நான்கு மணி நேரத்திலேயே அனுராகா கண் விழித்துவிட, முதலில் அவள் கேட்டது “தீபன் எங்கே??” என்பதுதான்.

“சார் இவ்வளோ நேரம் வெய்ட் பண்ணிட்டு இப்போதான் ரூம் போனார் மேம்..” என்று நர்ஸ் சொல்ல,

“வர சொல்லுங்க..” என்றவள், திரும்ப கண்களை மூடிக்கொண்டாள்.

உடலில் அப்படியொரு சோர்வு. ஆனாலும் அவனோடு பேசிட சில இருந்தது.. அதுவும் யாரும் வருமுன்னே.

நர்ஸ் சென்று தள பொறுப்பாளரிடம் சொல்ல, அவர் சென்று தயக்கமாகவே தான் தீபன் இருந்த அறையின் கதவினை தட்டினார். விஐபி ரூம். பொதுவாய் அவர்களாய் அழைக்காது யாரும் அங்கே செல்லவும் மாட்டர். அதிலும் தீபன், மத்திய மந்திரியின் மகன். அழைத்தால் என்ன நினைத்துக்கொள்வானோ என்ற தயக்கம் இருக்க,

தீபனோ எந்த பிகுவும் இல்லாது “இதோ வர்றேன்..” என்று வந்துவிட்டான்.

அனுராகா அழைத்தபின் அவன் நிற்பானா என்ன??!!

அறைக்குள் செல்லும்போதே “சார்.. அவங்க வீக்கா தான் இருக்காங்க.. சோ..” என்று நர்ஸ் இருக்க,

“யா ஓகே..” என்றவன் உள்ளே செல்ல, “ராகா..” என்றான் மெதுவாய்.

“ம்ம்..” என்ற சப்தம் மட்டுமே வந்தது. அவள் கண் விழிக்கவில்லை.

“ராகா என்னை பாரு…” என்றவனுக்கு என்னவோ அந்த நொடி குரல் நடுங்க,  “தீபன்…” என்றாள் மெதுவாய்.

“எஸ்… என்னாச்சு உனக்கு??!! மயக்கம் போடற அளவு.. அப்போவே சொன்னேன் தானே ஹாஸ்பிட்டல் போலாம்னு..” என,

“இப்போவும் அங்கதானே இருக்கோம்..” என்றாள் லேசாய் சிரித்து.

‘பாவி இப்போ கூட சிரிக்கிறா..’ என்றுதான் அவனின் உள்ளம் எண்ண,

“உன்னோட பேசணும் தீபன்.. அதான் வர சொன்னேன்..” என்றவளுக்கு பேச்சு கொஞ்சம் இயல்பாக வர, “நான் எழுந்து உக்காரணும்..” என்றாள்.

“நீ.. நீ.. ஸ்ட்ரெயின் பண்ணிக்கவேண்டாம்..” என்றவன், கட்டிலின் கம்பியை சுற்ற, அவளின் முதுகு புறம் மட்டும் மேலே எழும்பி, அனுராகா இப்போது அமர்ந்த நிலையில் இருந்தாள்.

அவளின் அருகேயே அமர்ந்துகொண்டவன், “இப்போ ஓகே வா..” என, “ம்ம்…” என்று தலையை ஆட்டியவள், “யாரை வரச் சொன்ன??!!” என்றாள், அவனின் செயலை யூகித்தபடி.          

“ஏன்?? உனக்கு யாரையும் வர சொல்லனுமா??!!” என்றவனுக்கோ எங்கே இவள் பிரஷாந்தை அழைக்கச் சொல்வாளோ என்று இருந்தது.

“ஹா ஹா நோ..” என்று சிரித்தவள், “ஓகே.. இங்க நடந்தது எதுவும் யாருக்கும் தெரிய வேணாம் தீபன்.. இது.. இதெல்லாம் நம்மோடவே இருக்கட்டும்..” என, ஒன்றும் புரியவில்லை அவனுக்கு.

எதை சொல்கிறாள்??!! இவள் குடில் மீது ஏறி காயம் செய்துகொண்டதையா?? இல்லை பிரஷாந்த் பார்த்ததையா??!! இல்லை ட்ரிப் என்று சொல்லி இவன் அடைத்து வைத்ததையா?? எதுவும் விளங்கவில்லை. மூன்றில் எதுவும் வெளியில் சொல்லிக்கொள்ளும்படியும் இல்லைதான். 

“புரியலையா??!!” என்று அவன் முகம் பார்த்தவள், “ட்ரிப் போனோம்.. எனக்கு அடிபட்டிடுச்சு.. நீ அட்மிட் பண்ணிட்ட.. இவ்வளோதான் விசயம்.. ஓகே வா.. தென் பிரண்ட்ஸ்..” என்று சொல்லி முடிக்கும் முன்னே,

“வந்திட்டு இருக்காங்க..” என,

“ம்ம் தட்ஸ் குட்.. நமக்குள்ள நடந்தது நமக்கு மட்டும் தெரிஞ்சதா இருந்தா போதும்..” என்றவளின் முகத்தினில் ஒரு அமைதி தெரிந்தது. முன்னிருந்த கோபமும் ஆவேசம் அதெல்லாம் எதுவுமில்லை.

ஆனால் அவனுக்கோ ‘நமக்குள்ள அப்படி என்ன நடந்துச்சு??!!’ என்றுதான் கேள்வி ஓடியது.

“நான் ஒரு விசயம் நினைச்சேன்.. அதுவும் நடந்திடுச்சு.. தென் நீ ஒன்னு நினைச்ச அதுவும் கூட நடந்திடுச்சு..” என, தீபன் நீயே பேசு என்றுதான் பார்த்தான்.

“புரியலையா உனக்கு?? நான் உன்னை யூஸ் பண்ணிக்கிட்டேன்னு நினைச்ச சோ பணிஷ் பண்ண நினைச்ச.. இட்ஸ் ஹேப்பன்ல… இதோ வந்து படுத்தாச்சு..” என்று சொல்ல,

“ஹேய் அப்படியெல்லாம் இல்லை..” என்றான் வேகமாய்.

“ஹா ஹா.. தீபன்.. நான் உன்னை தப்பா நினைக்கலை..” என்றவள், “நீயும் நானும் மீட் பண்ணிருக்கவே கூடாது.. பட் நடந்திடுச்சு.. உன்னைப் போல ஒருத்தனை லைப்ல பார்க்கக் கூடாதுதான்.. ஆனா இந்த செக்கன்ட் கூட உன்னைத்தான் பார்த்துட்டு இருக்கேன்..” என்று அனுராகா சொல்ல,

தீபனுக்கோ இதயம் தாறுமாறாய் துடிக்க ஆரம்பித்தது.

இது என்ன மாதிரி வார்த்தைகள்?? இதற்கான நேரடி பொருள் தான் என்ன?? அவளாய் சொல்லாது அவனுக்கு ஒன்றும் விளங்கப் போவதில்லை. யோசிக்கும் நிலையில் அவன் இல்லை.

“ஹா ஹா இப்போவும் உனக்கு புரியலையா தீபன்..” என்று அனுராகா சிரிக்க,

“நீ பேசாம தூங்கு..” என்றுவிட்டான். அவளின் வார்த்தைகளை தாங்கிக்கொள்ள அப்போது அவனால் முடியவில்லை.

“நோ…” என்றவள் “இதுக்கு முன்ன இப்படி நீ யாரையும் ட்ரீட் பண்ணிருக்கியா தெரியலை.. பட் இப்படி யாரையும் இனி நீ பண்ணிடாத.. நான்.. ம்ம்.. இதை எப்படி எடுத்துக்கிட்டேன் எனக்கே சொல்லத் தெரியலை.. ஏன்னா.. பிரஷாந்த் பார்க்கணும்னு எங்கப்பாவை நான் எதிர்த்தேன். அப்போ உன்னை அப்போஸ் பண்றதுல எனக்கு தப்பா எதுவும் தோணலை.. நீ உனக்கு சரின்னு பட்டதை பண்ண.. நானும் அப்படியே.. சோ ரெண்டும் டேலி ஆகிடுச்சு..” என,

“உன்னை தூங்கு சொன்னேன் ராகா…” என்றான் பல்லைக் கடித்து.

என்னவோ அவள் பேசுவது, ‘இனி உனக்கும் எனக்கும் ஒன்றுமில்லை.. போனது போகட்டும்.. கை குலுக்கி அவரவர் வேலையைப் பார்க்க சென்றிடலாம்..’ என்று சொல்வதாய் இருக்க, தீபனுக்கு மீண்டும் அந்த கோபம் தலை தூக்க ஆரம்பித்தது.

இந்த நிலையில் கூட இவள் இப்படி பேசுகிறாள் என்றால், தான் அவளின் மனதின் சுவர்களில் கூட ஒட்டவில்லையோ என்ற எண்ணம்.

“தூங்கிடுவேன் தீபன்.. நாளைக்கு கிளம்பிட்டா பின்ன பேச முடியாது இல்லையா..??” என,

“ஏன்.. ஏன் முடியாது??!!” என்றவனுக்கு இப்படியே இவளை திரும்ப தூக்கிச் சென்றிடலாமா என்று வந்தது..

“ம்ம்ச் நமக்குள்ள பேச எதுவுமில்லை புரிஞ்சதா.. இந்த டூ டேஸ், ஜஸ்ட் லைப்ல ஒரு எக்ஸ்பீரியன்ஸ். பேட் ஆர் குட்.. வாட் எவர்..  அப்படிதான் எடுத்துக்கணும்.. உனக்கும் நிறைய வேலை இருக்கு.. எனக்கும் கூட..” என, தீபன் எழுந்துவிட்டான்..

அமைதியாய், தன்மையான வார்த்தைகள் கொண்டு  ஒருவனின் உணர்வுகளோடு விளையாடுவது எப்படி என்பது அனுராகாவிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும்போல. அவள் தெரிந்து செய்தாளா இல்லை வேண்டும் என்றேவா எதுவும் பிரித்தறிய முடியவில்லை.

தீபனுக்கு அந்த பேச்சு சுத்தமாய் பிடிக்கவில்லை. எழுந்து அப்படியே வெளியே வந்துவிட்டான். ஒவ்வொரு முறையும் அவளிடம் நல்லபடியாய் நடந்திட வேண்டும் என்று நினைக்கையில் எல்லாம் அவளே அதை தட்டிவிடுகையில் அவனும்தான் என்ன செய்வான்.

அவனுக்கான அறைக்கு வந்தவன், அப்படியே கண்களை மூடி சாய்ந்துகொள்ள, நேரம் போனதே தெரியவில்லை அவனுக்கு.. தான் என்ன நினைக்கிறோம் என்பதுகூட அவனுக்கு உணரவில்லை.

அனுராகாவோ தீபன் எழுந்து போவதையே பார்த்தவள் ‘நான் ஒன்றும் இனி செய்ய முடியாது..’ என்பதுபோல் அவளாகவே லேசாய் தோள்களை குலுக்கிக்கொள்ள மனதோ தான் என்ன தவறு செய்தோம் என்று தோன்றியது.

பிரஷாந்தும் இப்படிதான் பாதியில் எழுந்து வந்துவிட்டான்..

அனுராகாவிற்கு இப்போது அதை நினைத்தால் சிரிப்புத்தான் வந்தது. அவன் செய்த தவறு அப்போது அவனுக்குத் தெரியவில்லையா என்ன?? இதற்கும் அனுராகா வேறொன்றும் செய்யவில்லை பிரஷாந்திடம் மன்னிப்புத்தான் கேட்டாள்.

அவளின் நிலையில் இருந்து இறங்கி வந்து..

அவளின் மீது தவறேயில்லை என்ற நிலையில் கூட பிரஷாந்தை அவளின் அப்பா செய்த அலைக்களிப்பிற்காக அவள் மன்னிப்புக் கேட்டாள்.

“அனு… அனு நீ எப்படி இங்க??!!” என்று பிரஷாந்த் முதலில் நம்ப இயலாது கேட்க,

“டேக் யுவர் சீட் பிரஷாந்த்..” என்ற அனுவின் தொனியில் கிஞ்சித்தும் ஒரு தெரிந்த பாவனையே இல்லை.

பிரஷாந்தின் காதலை ஏற்றுகொள்ளும் நிலையில் இருந்தவள் என்று பிரஷாந்தே சொன்னால் கூட யாரும் நம்பிட மாட்டர். அப்படிதான் இருந்தது அவளின் பார்வை.

“அனு..!!!” என்று பிரஷாந்த் திகைத்துப் பார்க்க, “உட்காருங்க…” என்று கை காட்டியவளிடம் நான் உனக்கு சம்பளம் கொடுப்பவள் என்ற தோரணையே.

பிரஷாந்த் ஒன்றும் சொல்லாது அமர்ந்திட, “சோ.. எப்படியிருக்கு நியு பிளேஸ்.. ப்ரோமோசன் எல்லாம்..” என்று கேட்டவளின் குரலில் நக்கலோ கிண்டலோ வருத்தமோ கோபமோ எதுவுமேயில்லை.

பிரஷாந்த் பதில் சொல்லாது அவளைப் பார்க்க, “டைம் இஸ் கோல்ட் பிரஷாந்த்..” என்று அவள் தன் கைக்கடிகாரம் பார்க்க,

“நானும் கூட கிளம்பிட்டுத்தான் இருந்தேன்.. இப்போ பிளைட் மிஸ் ஆகிருக்கும்..” என்று அவன் ஒரு கடுப்பில் சொல்ல,

“பிளைட்.. ம்ம்..” என்றவள், “உங்களோட பேசணும்னு நான் தான் வர சொன்னேன்..” என,

“என்கிட்டே நேராவே சொல்லிருக்கலாமே பேசணும்னு அனு..” என்று பிரஷாந்தும் சொல்லிட, “ஆக்சுவலா பேச ஒண்ணுமில்ல.. ஜஸ்ட் ஐ வான்ட் டு ஆஸ்க் சாரி டூ யு.. அவ்வளோதான்..” என்றாள் அனுராகா.

மன்னிப்பை இப்படியொரு கம்பீரத்தில் கேட்கமுடியுமா என்றுதான் தோன்றியது பிரஷாந்திற்கு. அனுராகா அழைத்துவர சொன்னாள் என்றதுமே, பிரஷாந்தின் மனது நொடியில் நிறைய கணக்குகள் போட்டுவிட்டது. ஒருவேளை அனைத்தையும் தாண்டி, லோகேஸ்வரன் என்ற கோடீஸ்வரனையும் மீறி, தனக்காக வந்துவிட்டாளோ என்றுதான் நினைக்கைத் தோன்றியது.

ஆனால்??!! அவளின் பாவனையும் பேச்சும் முற்றிலும் வேறாய் இருக்க, அதிலும் இப்போது மன்னிப்பும் வேறு கேட்க, “அனுராகா??!!!” என்றுதான் திகைத்துப் பார்த்தான்.

“எஸ்… நமக்கு வேண்டியவங்களுக்கு நம்ம தொல்லை கொடுக்கலாம்.. தப்பில்ல.. அதுவுமே கூட ஒரு அண்டர்ஸ்டாண்டிங்ல இருந்தாத்தான்.. பட்.. சம்பந்தமே இல்லாத ஒருத்தர்.. அதுவும் என்னால மென்டலி டிஸ்டர்ப் ஆகுறது ம்ம்ச் ம்ம்ச்.. அது எனக்குப் பிடிக்காது பிரஷாந்த்..” என,

“ச்சே ச்சே அப்படியெல்லாம் இல்லை அனு…” என்று பிரஷாந்த் விளக்க முயல,

“நான் தான் உங்களை பேசணும்னு வர சொன்னேன்..” என்றவளின் பார்வையில் பிரஷாந்தின் வாய் தன்னைப்போல் மூடிக்கொண்டது.

“உங்களோட இந்த ட்ரான்ஸ்பர்.. ம்ம் இங்க அங்கன்னு ஒரே அலைச்சல் இதெல்லாம் ரொம்ப உங்களை டிஸ்டர்ப் பண்ணிருக்கும் இல்லையா??!!” என,

“ம்ம்.. எஸ்..” என்றான் பிரஷாந்தும்.

“ஆக்சுவலி இப்படின்னு எனக்குத் தெரியாது.. நீங்க ஏன் இந்த டீலிங் ஓகே சொன்னீங்கன்னு தெரியாது.. பட்.. இது எல்லாமே என்னால நடந்தது தான் இல்லையா.. சோ சாரி கேட்டு கணக்கு முடிச்சிடனும்னு தான் வர சொன்னேன்..”  என்றவளை திகைத்துப் பார்த்தான் பிரஷாந்த்.

“என்ன??!! ஏன்னா இப்போ நான் பேசி முடிக்கலைன்னா என்னவோ நீங்க வேணாம் சொல்லி நான் அப்படியே வந்ததுபோல ஒரு பீல் ஆகிடும்.. பட் பின்வாங்கிப் போனது நீங்க.. எனக்கு அதுல பெருசா எந்த ஒரு வருத்தமோ ஏமாற்றமோ இல்லை… இப்போ…” என்று பேச்சை முடிக்க,

பிரஷாந்த் போதும் என்று எழுந்துவிட்டான்..

இதற்குமேல் அவனால் அதெல்லாம் கேட்டிட முடியவில்லை. அவன்பாட்டில் கூட போயிருப்பான் ஆனால் அழைத்து வரச் செய்து இப்படி பேசியது என்னவோ அவனின் மனதை காயப் படுத்தியது.

“நீ இப்படி பேசுவன்னு நான் எதிர்பார்க்கலை அனு..” என்றவன் “நான் கிளம்புறேன்..” என்று வெளியேறிவிட்டான்..

அவள் – நான் கேளாத சப்தம் நீ

அவன் – நான் ரசிக்கும் ராகம் நீ

காதல் – தகதிமி தா.. தகிட தா.. தவிப்பு தானே இனி…

Advertisement