Advertisement

நான் இனி நீ – 11

தீபனுக்கு தான் இதுவரை கண்டிராத உணர்வு இது என்றும், சூழல் இது என்றும் நன்கு புரிந்தது. அதிலிருந்து அவனால் எளிதாய் வெளிவர் முடியும். ஆனால் அவன் முயற்சிக்கவே இல்லையே. அவனின் மனது மேலும் மேலும் இந்த உணர்வு சுழலில் சிக்கித் தவிக்கவே விரும்பியதோ என்னவோ..

அனுராகாவை பார்த்தபடி தான் இருந்தான். அவள் பேச பேச அவனுள் அப்படியொரு காந்தல். அமிலம் குடித்தது போல் ஓர் உணர்வு. பதில் சொல்லவே இல்லை. ஆனாலும் அவளைத் தான் பார்த்திருந்தான்.

“தீபன்.. என்ன?? இங்க இருந்து போகணும்னு ஐடியாவே இல்லையா??!!” என்ற அனுவின் நக்கல் குரலில், கண்களை இறுக மூடித் திறந்தவன், சற்று தள்ளியிருந்த ஒரு செல்பில் இருந்த பெரிய கண்ணாடி பாட்டில் ஒன்றை எடுத்து, அதனுள் இருந்த திரவத்தை அப்படியே அனுவின் காலில் ஊற்றிவிட்டான்.

“ஏய் ஏய் என்ன பண்ற நீ??!!!!” என்று அனுராகா நிஜமாகவே பயந்து காத்திட, சில நொடிகள் பொறுத்துத் தான் அவளால் உணரவே முடிந்தது, அவளுக்கு ஒன்றும் ஆகவில்லை என்று.

காயத்தில் நீர் பட்டால் எரிச்சல் வருமே அதுபோல எரிச்சல் மட்டுமே இருக்க, “ஹேய் இடியட்.. என்ன பண்ண நீ??!!” என்று கத்தினாள்.

அவள் கண்களில் அந்த சிறு பயமும், குரலிலும் முகத்திலும் அந்த நடுக்கம் கண்ட பிறகும் தான் தீபனுக்கு கொஞ்சம் உள்ளக் குமுறல் அடங்குவதாய் இருந்தது. அனல் வீசிய பார்வையில் இப்போது கொஞ்ச அமைதி திரும்பியிருக்க, அனுராகவோ அவனின் சட்டை பிடித்தே இழுத்துவிட்டாள்.

“ஏய்… என்னடா??!!! என்ன??? நீ இப்போ பண்ற ஒவ்வொரு விசயத்துக்கும் கண்டிப்பா நீ அனுபவிக்கத் தான் போற தீபன்..” என,

“ஹா ஹா.. நாளைக்கு வர்றது நாளைக்கு பார்த்துக்கலாம்.. பட் நீ சொன்னல்ல எல்லா மருந்தையும் ஊதிப்பேன்னு.. இது வெறும் டிஸ்டில்ட் வாட்டர்.. அதுக்கே இந்த கத்து கத்துற..” என்றவன்,

“ஒரு வார்த்தை பேசுறதுக்கு முன்ன யோசிச்சு பேசணும்… நம்ம சொல்ற வார்த்தைகள் தான் நம்மை அடையாளம் காட்டும் புரிஞ்சதா???” என்று விரல் நீட்டியே மிரட்டினான்..

“ச்சே…” என்று அனுராகா எரிச்சலாய் முகத்தினை திருப்ப,

“இப்போ என்ன உனக்கு அந்த பிரஷாந்த் பார்க்கணும்.. அவ்வளோதானே..” என்றவன், “நல்லா புரிஞ்சுக்கோ, இப்போ கூட நானா சொல்றதுனால மட்டும் தான் உன்னால பிரஷாந்த் பார்க்க முடியுது.. அண்ட் நீ இப்படி எல்லாம் மேல ஏறி ஸ்டன்ட் பண்ணதுனால இதை நான் செய்யவும் இல்லை.. ஒரு ஸ்டேஜ்க்கு மேல நீ என்ன செஞ்சாலும் நான் பொறுத்துப் போவேன்னு மட்டும் நினைச்சுக்காத.. உன் அப்பா அம்மா எல்லாம் பார்க்கவே மாட்டேன் புரிஞ்சதா..” என்று எச்சரிக்கவும் செய்ய, அனுராகா சில நொடிகள் அமைதியாய் இருந்தாள்.

அவளை உறுத்துப் பார்த்துக்கொண்டே போனை எடுத்தவன், “ம்ம்  நான் சொல்லிருந்தேன்ல.. அவனை கூட்டிட்டு வாங்க..” என, அனுராகாவின் கண்களில் ஒரு பளிச் வந்துதான் போனது..

‘பைனலி.. பிரசாந்த் பார்க்கப் போறேன்..’ என்று அவள் எண்ண, முகத்தினை தன் இரு கைகளால் அழுத்தத் துடைக்க முயல, கையில் இருந்த காயம் அழுந்தி வலி கொடுக்க,

“ஷ்..!!!” என்றுவிட்டாள் அவளையும் மீறி.

இம்முறை தீபன் சக்ரவர்த்தி பதறவில்லை. அவளைத் திரும்பிப் பார்த்தவன், ‘நல்லா வலிக்கட்டும்…’ என்றுதான் எண்ணினான்.

வலியை விழுங்கி, அனுராகா “தீபன் …” என்றழைக்க, ஏன் என்று கேட்காது பார்த்தபடி தான் நின்றான்..

இப்படி ஒருவன் தன்னருகே நின்றுகொண்டு தன்னையேப் பார்ப்பது அவளுக்கு எப்படியோ இருக்க, “ம்ம்ச் கூப்பிட்டா என்னன்னு கேட்கமாட்டியா??!!” என,

“அந்த ஸ்டேஜ் எல்லாம் நீ தாண்டிட்ட..” என்றான் பல்லைக் கடித்து.

“வாட் எவர்.. இப்போ நான் ரூம் போகணும்.. ட்ரெஸ் சேஞ் பண்ணனும்..” என்றாள் அவளும் அதே தொனியில்.

“எதுக்கு??? இப்போ நீ பேசிட்டு கிளம்புற.. அப்டியே ஹாஸ்பிட்டல் போறோம்.. புரிஞ்சதா..” என்று அவன் கத்த, “தீபன்… சொன்னா புரியாதா.. ட்ரெஸ் எல்லாம் பிளட்டா இருக்கு…” என்றாள் அவளும் பொறுமையை இழுத்துப் பிடித்து.

“ஓ..!!” என்றவனின் பார்வை, இப்போது அவளின் உடையை வருட, “தீபன்..” என்றாள் கர்னகொடூரமாய்..

அவனின் பெயரை யாரும் இதுவரை இப்படியொரு விதத்தில் அழைத்தது இல்லை.. இதை நினைக்கையில் அவனுக்கு லேசாய் ஒரு புன்முறுவல் கூட.

“ம்ம் கம் லெட்ஸ் கோ..” என்றவன், அவளை தன் குடிலுக்கு அழைத்தும் போனான்.. சற்று முன்னிருந்த அவனின் அந்த கோபம் இப்போது இறங்கிப்போனது. கோபமோ சண்டையோ அவளின் அருகாமையும், ஸ்பரிசமும் அவனை ஆட்டுவிப்பது நிஜம்.   

அங்கே பிரஷாந்தை அழைக்கப் போனவர்களோ அவனிடம் “கிளம்பி எங்களோட வாங்க.. சார் உங்களை கூப்பிடுறார்..” என்றுமட்டும் சொல்ல,  “யார் நீங்க… என்னை எதுக்கு கூட்டிட்டு போக வந்திருக்கீங்க??” என்று பிரஷாந்த் கேட்க,

“சார் தான் உங்களை வரச் சொன்னார்..” என்றார் வந்த இருவரும் சொல்ல,

“எந்த சார்?? யாரா இருந்தாலும் அவரை வந்து பார்க்கச் சொல்லுங்க..” என்று பிரஷாந்தும் சொல்ல,

“ஏய்… என்ன கூப்பிட்டா வரணும்..” என்று இவர்கள் மிரட்ட, “ஹலோ என்ன??!!” என்று பதிலுக்கு அவனும் குரல் உயர்த்தினான்.

இப்படி ஆளாளுக்கு ஒவ்வொன்றாய் பேச, அப்படியே பிரச்சனையும் ஆகிப்போனது.  பிரஷாந்த் அப்போதுதான் D- வில்லேஜில் இருந்து கிளம்பிக்கொண்டு இருந்தான். அவனோடு வந்தவர்களை ஏற்கனவே ஏர்போர்ட் சென்று விட்டு வந்திருந்தான். தானும் காலி செய்து கிளம்பிடலாம் என்று எண்ணுகையில், இருவர் வந்து மொட்டையாய்,

‘சார் உங்களை கூப்பிடுறார்..’ என்று அழைக்க, அதுவும் கொஞ்சம் திமிராகவே அழைக்க, அவனுக்குக் கோபம் வந்து போனது..

“யாரா இருந்தாலும் வர முடியாது.. நான் இப்போ வெக்கேட் பண்றேன்..” என்று பிரஷாந்த் அவனின் பேக் எடுத்துக்கொண்டு கிளம்ப,

“ஹலோ.. அப்படியெல்லாம் இங்கிருந்து நீ போக முடியாது..” என்று இவர்கள் மிரட்ட, அதெல்லாம் பிரஷாந்த் கண்டுகொள்ளவே இல்லை. அவன் பாட்டில் கிளம்பிக்கொண்டு இருந்தான்.

உடனே அழைக்க வந்தவர்களோ தீபனுக்கு அழைத்து “சார், அந்தாளு வரலை.. பிரச்னை பண்றான்..” என,

“நீங்க பிரச்சனையா கூப்பிட்டா அப்படிதான் இருக்கும்..” என்றான் அடக்கப்பட்ட கோபத்தில்..

தான் அழைத்து வர சொல்லி, ஒருவன் வராது இருப்பதா??!! அந்த எண்ணம் இருந்தாலும் அவன் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை.

“இல்லை சார்… நீங்கன்னு சொன்னோம்..” என, “நான் யாருன்னு சொன்னீங்களா??!!” என்று கேட்ட தீபன் சக்ரவர்த்திக்கு அனுராகாவின் பெயரை சொல்லி பிரஷாந்த் வருவதில் துளியும் இஷ்டமில்லை.

இவர்கள் பேசுவதைப் பார்த்துக்கொண்டு இருந்தவளோ, “உன்னால உன்னோட இடத்துலேயே கூட ஒருத்தனை வர வைக்க முடியாதா??” என்ற அனுராகாவினை கொன்றுவிடும் ஆத்திரம் தான் வந்தது தீபனுக்கு.

அவளுக்காக என்று அவன் இத்தனை இறங்கிப் போவதே பெரிது.. அவளோ மேலே மேலே என்று அவளின் திமிரைக் காட்டினாள். அதாவது, உன்னிடம் எல்லாம் இப்படிதான் நடந்துகொள்ள வேண்டும் என்பதுபோல் அவள் சொல்ல, அது தீபனின் ஆண் என்ற ஈகோவை சீண்டிப் பார்த்தது.

“நான் யார்னு சொல்லி வர சொல்லுங்க..” என்று போனை வைத்தவன்,  “ஏய்.. உன்னோட ஹெல்த் கண்டிசன் பார்த்து நான் அமைதியா போனா.. நீ ரொம்ப பண்ற..” என்றான் பல்லைக் கடித்து.

“நானா எதுவும் ஸ்டார்ட் பண்ணலை.. பண்ணது எல்லாம் நீ.. சோ முடிவுக்கு கொண்டு வர்றதும் நீயா இருந்தா பெட்டர்..” என்று தோளைக் குலுக்கினாள் அனுராகா.

அவளும் அவளின் பிடியில் இருந்து இறங்குவாதாகவே இல்லை. நீ இதை செய்துதான் ஆகவேண்டும் என்று சொல்லியேவிட்டாள். அவளின் காய்ச்சல் வேறு நேரம் செல்ல செல்ல அதிகரித்துக்கொண்டு தான் இருந்தது.. கண்களின் சிவப்பு ஏறிக்கொண்டு தான் இருந்தது. வலியை மிக மிக சிரமப்பட்டே பொறுத்துக்கொண்டு இருந்தாள்.

இதில் பிரஷாந்த் வருவதில் வேறு பிரச்னை என்று தெரிய, அவளையும் மீறிதான் வார்த்தைகள் வந்தது. ஆனால் இதெல்லாம் தீபனின் சோதனை காலம் தான்..

“ட்ரெஸ் சேஞ் பண்ணித் தொலை…” என்று வார்த்தைகளை உமிழ்ந்துவிட்டு, குடிலுக்கு வெளியே வந்து நின்றுகொண்டான்.

மனது ‘சீக்கிரம் இங்கிருந்து கிளம்பிட வேண்டும்..’ என்று சொல்லிக்கொண்டே இருந்தது.

‘நீ நீயாக இல்லை தீபன்.. இப்படியே போனால் உன்னை நீ இழக்கும் தருணம் இங்கயே நேரும். அதுவும் அவளின் முன்னேயே..’ என்று எச்சரிக்கை செய்ய, அடுத்தது என்னவென்று யோசித்துக்கொண்டு இருக்கும்போதே, தீபன் அனுப்பிய ஆட்கள் ஒருவழியாய் பிரஷாந்தை அழைத்துக்கொண்டு வந்துவிட்டனர்.

“யார் சார் நீங்க??!! இப்படிதான் பீகேவ் பண்ணுவாங்களா??!!” என்று எகிறியபடி தான் வந்தான் பிரஷாந்த்..

ஏற்கவே தீபன் கொதிநிலையில் இருக்க, இப்போது பிரஷாந்த் வந்ததும் எகிற “ஹலோ.. மைன்ட் யுவர் டங்..” என்று விரல் நீட்டியவன்,

‘ச்சேய்… இவனோட எல்லாம் என்னை பேச வைக்கிறா??!!!’ என்றெண்ணியவன், “லுக் மிஸ்டர் பிரஷாந்த்.. ரா… அனுராகா உங்களோட பேசணும் சொன்னா தட்ஸ் வொய்…” என்று சொல்லிமுடிக்கவில்லை,

“அனு… அனுவா…. அனு இங்க இருக்காளா??!!” என்று பிரஷாந்தின் கண்கள் வேகமாய் பார்வையை சுற்றவிட்டது.

அவனின் இந்த பரபரப்பு தீபனுக்கு எப்படியானதொரு கடுப்பினை கொடுக்கும் என்று சொல்லவேண்டியதே இல்லை. முயன்று, மனதினை ஒருநிலைப் படுத்தி, தன்னை நிலைபெறச் செய்தவன், “எஸ் அனு இஸ் தேர்..” என்று குடிலைக் காட்ட,

“நான்.. நான் போய் பார்க்கலாமா??!!” என்று அவசரம் காட்டினான் பிரஷாந்த்.. கேட்டுக்கொண்டு இருக்கையிலேயே பிரஷாந்தின் கால்கள் கூட இரண்டடி முன்னேறிவிட, “நோ…” என்றான் தீபன் அழுத்தம் திருத்தமாய்..

“ஏன்??!! ஏன்??!!”

“அனுராகா ரெடியாகிட்டு இருக்காங்க..” என,

“இந்த டைம்ல ரெடியாகிட்டு இருக்காளா..” என்று பிரஷாந்த் கேட்ட அடுத்த நொடி “இருக்காங்களா??!!! அப்படி சொல்லணும் மிஸ்டர். பிரஷாந்த்..” என்றான் தீபன் சக்ரவர்த்தியும்.

பிரஷாந்த் உரிமையாய், ஒருமையில் அவளை அழைப்பது சுத்தமாய் பிடிக்கவில்லை. தன்னை சலனப்படுத்திய ஒருத்தியை இன்னொருவன் உரிமையாய் அழைப்பதா.. தீபன் சொன்ன விதத்தில் பிரஷாந்த் அவனைப் பார்த்தவன், ஒன்றும் சொல்லாது நின்றுகொள்ள, தீபன் தான் குடிலின் வெளியே நின்று “ராகா..” என்று அழைத்தான்..

“யா… தீபன்.. ஐம் ரெடி.. ஒன் செக்கன்ட் உள்ள வாயேன்..” என்று அனு அழைக்க,

‘என்னடா இது…’ என்று யோசித்தபடி தீபன் சக்கரவர்த்தி உள்ளே செல்ல, எதுவோ பார்டிக்கு செல்வது போல் தயாராகி நின்றிருந்தாள் அனுராகா..

சிறிது நேரம் முன்னிருந்த தோற்றம் இப்போது இல்லை.. இவளுக்கு கை கால்களில் காயம் பட்டிருக்கிறது என்று யாரிடமும் சொன்னால் கூட நம்பிடமாட்டர். காய்ச்சல் அடிக்கிறது என்று அவளே சொன்னாலும் கூட அது பொய் என்றுதான் சொல்வர்.

அடர் நீல நிற ப்ளோர் டச் சுடிதார் அணிந்திருந்தாள். அதற்கேற்றார் போல் ஒப்பனையும் செய்து பார்ப்பதற்கே ஒரு மூச்சடைக்கும் தோற்றம் கொடுக்க, தீபனின் பார்வையை மீறி அவனின் மனது அவளை ரசித்தது.

“தீபன்…” என்று திரும்ப அனு அழைக்க, “ஹா… யா டெல் மீ..” என்று தீபன் அவனின் கண்களை திருப்ப பெரும்பாடு படவேண்டியதாய் இருந்தது..

“எவ்ரிதிங் இஸ் ஓகே… என்னைப் பார்க்க டல்லா தெரியலை இல்லையா..” என்று அனுராகா கேட்க,  ‘சும்மாவே பார்ப்பேன்.. இதுல பாருன்னு சொல்லாம வேற சொல்றா..’ என்று நினைக்கையில் அவனுக்கு மௌனமாய் தான் நிற்க முடிந்தது.

என் கண்கள் உன்னை

கொஞ்சுதடி..

உன் வார்த்தை என்னை

கொல்லுதடி… 

“ம்ம்ச் தீபன்..” என்று அவன் தோள் தொட்டவள், “ஓகே வா…” என்று கேட்க,

“ம்ம்ம்…” என்று அவனின் தலை ஆட, “ம்ம் பிரஷாந்த் வர சொல்லேன்.. நான் இந்த சேர்ல உக்காந்துக்கிறேன்.. இதுதான் கம்பர்ட்டா இருக்கு…” என்றவள், தீபன் எப்போதும் அமரும் இருக்கையில் அமர்ந்துகொண்டாள்.

அவள் அமர்ந்த அடுத்தநொடி, அவளின் முக பாவனைகளும் மாறிப்போனது. ஒரு முதலாளியின் தோற்றம் அவள் உடல்மொழியிலும், முகத்திலும்.  அவளோ அமர்ந்தததும், “யா ஓகே தீபன்.. பிரஷாந்தை வர சொல்லேன்..” என,

“போறேன்…” என்று வெளியே போனவன், “ம்ம்…” என்றான் உள்ளே போ என்பதுபோல்..

“தேங்க்ஸ்..” என்றுவிட்டு பிரஷாந்த் உள்ளே செல்ல, ‘இந்த நிமிஷம் நீ உயிரோட இருக்கிறது நீ தேங்க்ஸ் சொல்லித்தான் ஆகணும்…’ என்று எண்ணியது தீபனின் உள்ளம்.  

‘என்ன பேசுவார்கள்??!!!’ இதுவே வண்டாய் துளைக்க, மான ரோசம் பார்க்காது உள்ளே போய்விடலாமா என்றுகூட தோன்றியது.. பின் அவனே ‘ச்சே ச்சே…’ என்று தலையை ஆட்டிக்கொண்டான்..

அவனால் அங்கே நிற்கவும் முடியவில்லை.. நிற்காது இருக்கவும் முடியவில்லை, இப்படியே நின்றால் பொறுமை இழந்து உள்ளே சென்றிடுவோம் என்று தோன்ற மெதுவாய் நடக்கத் தொடங்கினான்.. சிந்தனை எல்லாம் அந்த குடிலில் தான் நின்றது.

‘ராகா…’ என்று அவனின் உதடுகள் முணுமுணுக்க, அவனின் அலைபேசியும் சத்தம் எழுப்பியது.. எடுத்துப் பார்த்தல் மிதுன் தான் அழைப்பது.. இந்த நேரத்தில் அழைக்கிறான் என்றால், எதுவும் முக்கியமான விஷயமாய் இருக்கும் என்றெண்ணியவன்,

“ஹலோ மிதுன்…” என,       

“தீபன் எங்க இருக்க??!!” என்றான் எடுத்ததும்.

“ஏன் என்னாச்சு??!!” என்று இவனும் பதில் சொல்லாது கேள்வி கேட்க, “ஒன்னும் ஆகலை.. நீ எங்க இருக்க அதை சொல்லு..” என,

“ம்ம்ச் வேலை எல்லாம் சரியாதானே போகுது..” என்றான் தீபன் சக்கரவர்த்தி.

“அதெல்லாம் போகுது.. பட் தீப்ஸ் நீ இங்க வந்துதான் ஆகணும்டா..” என்று மிதுன் அழைக்க,

“டேய் என்னடா… நீ சொன்னதையே திரும்ப திரும்ப சொல்ற.. ஒன்னு எங்க இருக்கன்னு கேட்கிற.. இல்லை இங்க வா சொல்ற.. ஐம் நாட்ட கிட் ஓகே..” என்று தீபன் காட்டுக் கத்தல் தான் கத்தினான்.

அவனின் பொறுமை எல்லாம் காற்றோடு போனது.. இழுத்து இழுத்து பிடித்து வைத்தது எல்லாம் மொத்தமாய் ஒன்றுமில்லாது போவதாய் உணர்ந்தான். அனுராகா அங்கே பிரஷாந்தோடு பேச அமர்ந்த இந்த சில வினாடிகளே மொத்தமாய் தீபன் வீழ்ந்து போனது போல் உணர்ந்தான்..

அதே நேரம் மிதுன் வேறு அழைக்க, அவனால் எதையும் கையாளும் நிலையில் இல்லை என்ற நிலை..

“உனக்கு என்னதான்டா ஆச்சு.. நீ நீயா இல்லைங்கிறது மட்டும் நல்லா தெரியுது.. பட் இது உனக்கும் நல்லதில்ல தீபன்.. நமக்கும் நல்லதில்ல.. சொல்றதை கேளு..” என்று மிதுன் எச்சரிக்க,

“எல்லாம் எனக்குத் தெரியும்.. பொதுக்கூட்டம் வேலை சரியா நடக்குதா அதை மட்டும் பாரு.. நாளைக்கு நைட் அங்க இருப்பேன்..” என்றவன் அழைப்பை துண்டித்துவிட்டான்.

மேலும் மேலும் குடும்பத்தினரின் மனதை நோகடிப்பது தீபன் நன்கு உணர்ந்தான். ஆனாலும் அதெல்லாம் அவனை மீறி நடந்துகொண்டு இருந்தது.. எல்லாம் அவளால் என்று நினைக்கத் தோன்றினாலும், அவனால் இனி எதுவும் செய்ய இயலாது என்றுமட்டும் தோன்றியது.

எது எப்படியானாலும் அனுராகா இனி அவனின் சொந்தமாக வேண்டும்.. அது அவளுக்கே சம்மதமில்லாது போனாலும் கூட.. தீபன் சக்கரவர்த்தி என்ற ஒருவன் இனி நல்லதனமாய் இருந்திடவேண்டும் என்றால் அனுராகா என்ற பெண் அவனின் வாழ்வில் இருந்திட வேண்டும்.. தான் தன்னிடமே தோற்றுவிடாது இருக்க, தீபனுக்கு அனுவின் துணை கண்டிப்பாய் வேண்டும்..  

மண்ணாசை.. பொன்னாசை.. பெண்ணாசை.. மூன்றுமே ஆபத்தானது தான். முதல் இரண்டில் இருந்து கூட மீண்டுவிடலாம்.. ஆனால் ‘பெண்ணாசை..’ என்பது ஆசை கொண்டவனை அழிக்கும் ஆயுதம்..

ஆரம்பத்தில் சுவையாய் இருக்கும்.. ஆனால் அது கழுதை நெருக்கும் சுருக்குக் கயிறு என்பது போகப் போகத்தான் புரியும்.. உயிரும் போகாது.. பிடியும் விடாது.. சிக்கித் தவிக்க மட்டுமே முடியும்.. தீபனுக்கு இப்போது இதே நிலை தான். தன் தலையை கோதியபடி லேசாய் திரும்பிப் பின்னே பார்க்க, பிரஷாந்த் வெளியே வருவது தெரிந்தது..

உள்ளே போனபோது இருந்தது போல் இல்லை அவனின் முகம். ஒருவித குழம்பிய நிலை.. தீபன் அருகே செல்வதற்குள் பிரஷாந்த் சென்றுவிட்டான். தன் முகத்தினை பார்ப்பதற்கு பதில் அவன் இப்படி வேகமாய் செல்கிறான் என்று  தீபனுக்குப் புரியாதா என்ன..

ஆனால் அவனுக்கு அவன் முக்கியமல்லவே… அனுராகா தானே முக்கியம்.. குடிலினுள் சென்று பார்க்க, அவளோ ஒரு ஜன்னல் பக்கத்தில்  நிற்க,

“ராகா…” என்ற அழைப்போடு தீபன் அருகே செல்ல, இவன் சொல்வதற்காகவே காத்திருந்தது போல், அவனைத் திரும்பிப் பார்த்தவள் “தீபன்…” என்று முணுமுணுப்போடு  மயங்கிச் சரிகையில் “ஏய்….” என்றுதான் பதறிப் போய் பிடித்தான்..

உடல் சூடு அப்படிக் கொதித்தது. தாங்கிப் பிடித்தவனுக்கு என்ன செய்வது என்று ஒரு நொடி ஒன்றும் விளங்கவில்லை..

“ராகா… ராகா…” என்று கன்னம் தட்ட, அவளோ அசைவதாய் இல்லை.

அவளைக் கீழே படுக்க வைத்தவன், தண்ணீர் எடுத்து வந்து முகத்தினில் தெளிக்க, ம்ம்ஹும் எவ்வித சிறு அசைவு கூட இல்லை..

‘ராகா…!!!!’ என்று அவனின் உள்ளம் அலறியது தான் மிச்சம்… இதற்குமேல் இங்கிருப்பது உசிதமல்ல என்று தோன்ற, கார் எடுக்கச் சொல்லிவிட்டான்.

பெங்களூருவின் புகழ்பெற்ற மருத்துவமனையில், தீபன் அனுராகவை அழைத்துக்கொண்டு செல்வதற்கு முன்னமே அனைத்தும் தயாராகி இருக்க, இவர்கள் போனதுமே மருத்துவம் தொடங்கிப் போனது.

“டோன்ட் வொர்ரி தீபன்…” என்றுவிட்டுத்தான் தலைமை மருத்துவர், உள்ளே போனார்.. ஆனால் அவனால் அப்படி இருக்க முடியுமா??!!

என்னவோ சொல்ல முடியாத உணர்வு ஒன்று தீபனைப் போட்டு அழுத்த, அவனையும் மீறி உஷாவிற்கு அழைத்துவிட்டான்.

நள்ளிரவு இரண்டு மணி..

இந்த நேரத்தில் மகனிடம் இருந்து அழைப்பு என்றதுமே உஷாவிற்கு திக்கென்று ஆனது.. எப்போதும் தீபன் சக்கரவர்த்தி இப்படியில்லை.. அவனிடம் பேசிவிட்டு மிதுன் கூட சொன்னான்,

“ம்மா அவனுக்கு என்ன ஆச்சு.. வரவும் கொஞ்சம் ரிலாக்ஸா பேசுங்க..” என்று.

அதையே யோசித்தபடி தான் உஷா படுத்திருந்தார். இப்போது தீபனே அழைக்க, “டேய் என்னடா ஆச்சு..??!!!” என்று எழுந்து அமர்ந்து விட்டார்.

“ஐம் ஓகே மாம்.. பட்..” என்றவனின் குரலே சொன்னது என்னவோ சரியில்லை என்று..

“என்னடா தீபன்…??!! என்னாச்சு?? ஏன் வாய்ஸ் எப்படியோ இருக்கு??” என்று அம்மா பதற,

“நீ இங்க  வா ம்மா..” என்றான் சோர்வாய்.

அர்த்த ஜாமத்தில் மகனிடம் இருந்து அழைப்பு, அதுவும் அவனின் குரலே எதுவோ பிரச்னை என்று காட்ட, அவனோ சோர்ந்து போய், நீ இங்க வா என்று சொல்ல, எந்த அம்மாவிற்குத்தான் உள்ளம் பதறிடாது. அதுவும் அரசியல் வாழ்வில், தீபனுக்கு கண்ணுக்குத் தெரிந்த எதிரிகளை விட, தெரியாத எதிரிகள் தானே அதிகம்..

‘என்னானதோ..’ என்று உஷா எண்ணினாலும்,

‘என் மகன் இதுக்கெல்லாம் சோர்ந்து போக மாட்டானே…’ என்றும் யோசித்தார்..

“ம்மா…” என்று தீபன் திரும்ப அழைக்க, “ம்ம் சொல்லுடா…” என,

“ப்ளீஸ் ம்மா இங்க வா..” என்றான் திரும்ப..

“என்ன தீபன்.. என்னாச்சு???!!” என்று உஷாவும் கேட்க, “அ.. அனுராகா… ரொம்ப முடியலைம்ம்மா… ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணிருக்கேன்..” என்றதும் அடுத்த அதிர்ச்சி உஷாவிற்கு..

‘ஐயோ..!!’ என்றுதான் அவரின் உள்ளம் பதறியது.

அவன் – நான், நானாக இருக்க நீ வேண்டுமடி..

அவள் – யாரோ நீ.. யாரோ நான்..

காதல் – யாமிருக்க பயமேன்….!!!

        

 

Advertisement