Advertisement

நான் இனி நீ – 10

அனுராகாவிற்கு மனதில் அமைதி என்பது சிறிதும் இல்லை. தீபனுக்குமே கூட அப்படித்தான்.  இருவர் மனதிலும் வெவ்வேறு எண்ணங்கள்.. ஆனால் அந்த அழகான மாலை பொழுது இருவருக்கும் ஒன்றுபோலவே மெதுவாய் நகர்ந்துகொண்டு இருந்தது.

அனுவின் மொத்த கவனமும் தான் எப்படி இங்கிருந்து வெளியேறுவது என்பதில் இருக்க, அவளுக்கு ஒருவிசயம் மட்டும் நன்றாய் புரிந்தது. தீபனின் இந்த குடில் மட்டும் மற்ற குடிகளில் இருந்து தனித்து இருந்தது. ஊருக்கு ஒதுக்குபுறம் என்று சொல்வதுபோல் இவனின் இந்த குடில் மட்டும் இன்னும் கொஞ்சம் உள்ளே தள்ளி இருந்தது..

சுற்றிலும் எங்குப் பார்த்தாலும் மரம் செடி கொடிகள் மட்டுமே.. கிட்டத்தட்ட ஒரு வனம் போலிருந்தது.. அப்படியான இடத்தில் தனக்கான குடிலை அவன் அமைத்திருந்தான். அவனின் ரசனை கண்டு அவளுள்ளம் கூட கொஞ்சம் புருவம் உயர்த்தியது தான்.

‘பார்ரா..!!!’ என்றுதான் பார்த்தாள் சிறிது நேரம் முன்பு..

எப்போதும் இவன் மட்டுமே தங்கும் இவ்விடம், இன்று அவளும் தங்குமிடமாய் இருந்தது.. மாலை நேரம் சுற்றிலும் ரம்யமாய் இருக்க,  அதில் லயிக்கத் தொடங்கிய மனதினை ஒருநிலைப்படுத்தி கண்ணுக்கு எதிரே இருக்கும் காட்சிகளை எல்லாம் ஒன்றுகூட்டி தனக்கான வழி எது என்று யோசித்துக்கொண்டு இருந்தாள். இன்னும் இரண்டே நாள் தான்.. அதற்குள் அவள் கிளம்பியாகவேண்டும்.

தீபன்.. அவனின் அடுத்த செயல் எதுவென்று தெரியாது. ஆனால் அவனுக்குமே முக்கிய வேலை இருப்பது அவளுக்குப் புரிந்தது. ஆக அவனுமே இங்கிருந்து சீக்கிரம் கிளம்பியாக வேண்டிய கட்டாயத்தில் இருப்பான் என்று எண்ணியவள், அவன் என்ன செய்கிறான் என்று பார்த்தாள்.

இவள் சாய்ந்து படுத்திருந்த இடத்திற்கு பத்து அடி தூரத்தில் தான் அவன் இருந்தான்.. இரண்டு கைகளையும் பின்னுக்குத் தள்ளி, கால்களை அங்கிருந்த ஒரு திண்டின் மீது நீட்டி சாய்ந்து அமர்ந்திருந்தான். பார்ப்பதற்கு அத்தனை எளிமையாய் இருந்தது அவனின் தோற்றம்..

மத்திய மந்திரியின் மகன் என்ற அந்த பந்தா சிறிதுமில்லை.. இங்கு வந்ததில் இருந்து அவன் உடுத்தும் உடைகள் கூட மிக மிக எளிய தோற்றத்தில் இருக்க, அவன் செயல் மட்டும் திமிர் காட்டுவதாய் இருக்க அனுராகாவிற்கு மனது இவன் எப்படியானவன் என்ற நிலையில் தான் இருந்தது.

பார்வை எல்லாம் அவன் மீது நிலைத்திருக்க, அவளின் உள்ளமோ ‘அவன் எப்படியோ இருக்கட்டும்… உனக்கு அது தேவையில்லை.. உன்னோட எண்ணமெல்லாம் இங்கிருந்து நீ கிளம்பனும்.. பிரஷாந்த் கண்டிப்பா இங்கதான் இருக்கணும்.. இல்லைன்னா இவன் இப்படி இடம் விட்டு நகராம இருக்க மாட்டான்..’ என்று எண்ண, தீபனின் அலைபேசி ஒலி எழுப்ப, இவள் வேகமாய் தன் பார்வையை திருப்பிக்கொண்டாள்.

அவனோ அலைபேசியை எடுத்துப் பார்த்தவன் அழைப்பது அவனின் அம்மா எனவும், எடுப்பதா வேண்டாமா என்ற யோசனையில் இருக்க, அதுவோ விடாமல் சத்தம் எழுப்பிக்கொண்டே இருந்தது. உஷாவும் ஒரு முடிவில் இருந்தார். இன்று இவன் எடுக்கும் வரைக்கும் விடாது அழைப்பது என்று.. தீபன் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவனோ, பின் என்றிருந்தாலும் பேசித்தானே ஆகவேண்டும் என்று

“மாம்..” என்றழைக்க,

“என்னடா.. என்ன??!! இப்போதான் போன் எடுக்க முடிஞ்சதா??!! மிதுனுக்கு பேசுற.. உங்கப்பா பிஏக்கு பேசுற.. ஆனா நான் போன் பண்ணா எடுக்க முடியாதா??!! என்னடா நினைச்சிட்டு இருக்க நீ..” என

“ம்மா… உன்னோட திட்டு கேட்டுக்கூட நாளாச்சு..” என்றுசொல்ல,  “டேய்..” என்று பல்லைக் கடித்தார் உஷா.

“ஹா ஹா.. சொல்லும்மா..” என்றவனோ மிக மிக இயல்பாய் பேசுவது போல் பேச, “என்ன சொல்லும்மா.. எப்போ வர நீ?? அந்த பொண்ணு அனு எங்க??” என்று கேட்க,

“வந்திடுவேன் சீக்கிரமே..” என்றுமட்டும் முடித்துக்கொண்டான் தீபன்..

“நீ பண்றது எதுவும் எனக்கு சரியா படலை தீபன்.. அந்த அமௌன்ட் வேற திருப்பிக் கொடுன்னு சொல்லி மிதுன்கிட்ட கோவமா பேசினயாம்.. என்ன திடீர்னு உனக்கு.. ட்ரிப் எல்லாம் போதும்.. முதல்ல கிளம்பி வா நீ.. அனு எங்க??!!” என்று திரும்ப அனு பற்றிய பேச்சினிலேயே வந்து நின்றார் உஷா. 

“ம்மா..!!! ஏன் இவ்வளோ வேகமா பேசுற??!! இந்த மன்த் செக்கேப் எல்லாம் பண்ணியாச்சா?? இல்லை அதுக்கும் நான்தான் வரணுமா??!!” என்று பொறுப்பான மகன் போல பேச,

“டேய் டேய்… உன்னைப் பத்தி எனக்குத் தெரியும்டா.. நான் சொன்னதுக்கு பதில் சொல்றியா இல்லையா நீ??” என்று உஷாவும் பேச, “வந்திடுவேன்.. அவ்வளோதான்.. தென் பணம்.. எல்லாம் ஏற்பாடு பண்ணியாச்சு.. சோ இப்போதைக்கு இவ்வளோதான்..” என்று கத்தரிப்பது போல் பேச,

“இங்க பார் தீபன் ஏதாவது ஒன்னு தப்பாச்சுன்னா உன்னை மகன்னு கூட நினைக்க மாட்டேன் தீபன்.. என்ன செய்வேன்னு உனக்கே தெரியும்..” என்றுவிட்டு அழைப்பை துண்டித்தார்.

ஆக.. அம்மாவோடும் ஒரு தகராறு செய்து முடித்தாயிற்று.. அண்ணனோடும் கசந்து பேசியாயிற்று.. இனி அப்பா மட்டுமே என்று நினைத்தவன், ஆழ்ந்த ஒரு மூச்சு விட்டான்..

‘இதெல்லாம் உனக்குத் தேவையா??!!!’ என்று தோன்றினாலும், இதிலிருந்து இனி பின்வாங்கவும் முடியாதே..

திரும்ப கண்களை மூடி சாய்ந்தவனுக்கு, உள்ளே சத்தம் கேட்க,  திரும்பிப் பார்த்தவனுக்கு, அனுராகா ரெஸ்ட் ரூமினுள் இருப்பது புரிந்தது..

உள்ளே போனவளோ வெகு நேரமாகியும் வெளியே வராது போக, காத்திருந்தவனோ “ராகா…” என்று வெளியிலிருந்து அழைப்புக் கொடுக்க, அவளோ பதில் சொல்லவில்லை முதலில்.

ஆனால் உள்ளே எதோ உருளும் சத்தம் கேட்க,  தீபனோ “ராகா.. என்ன பண்ற நீ..” என்று இப்போது அந்த மூங்கில் கதவினை தட்ட, அவளோ சாதாரணமாய் கதவு திறந்து வெளி வந்தவள்,

“நீ ஏன் இவ்வளோ டென்சன் ஆகற??!!” என,

“உள்ள போய் இவ்வளோ நேரம் என்ன பண்ண??!!” என்றவனின் கேள்வி அவனுக்கே அபத்தமாய் இருந்தது.

அவளும் அதையே உணர்த்துவது போல் பார்த்தவள், “ஏன் இங்க எதுவும் பதுக்கி வச்சிருக்கியா??” என, “நான் என்ன கேட்டேன் நீ என்ன சொல்ற??!!” என்று பல்லைக் கடித்தான்.

அவனின் மனதோ ஒவ்வொரு நொடியும் இவள் தப்பித்துவிடுவாளோ என்று எண்ணுவதற்கு பதிலாய் இவளுக்கு எதுவும் ஆகிவிடுமோ என்று எண்ணுவது அவனுக்கே விந்தையாய் இருந்தது. தீபன் பதில் சொல்லாது இருக்க,

அவள் எப்போது அணியும் மெல்லிய ஓவர் கூட்டின் கை பகுதியை மடித்தபடி “அப்பா பலவருசம மினிஸ்டர்.. உங்களை போல ஆளுங்க எல்லாம் இப்படிதான் எங்கயாவது எல்லாத்தையும் பதுக்கி வைப்பீங்க..” என்று சொல்ல,

“ஏய்..!!! வார்த்தையை அளந்து பேசு…” என்று கண்டிக்க,

“ஹா ஹா ஹா…” என்று சிரித்தவள் “என்னவோ பண்ணேன்..” என்றாள் வேண்டுமென்றே அவனை சீண்டும் பொருட்டு.

ஆனால் தீபனுக்கு உறுதியாய் சொல்ல முடிந்தது அனுராகா உள்ளே என்னவோ ஒன்று செய்து வைத்திருக்கிறாள் என்று. அவளை முறைத்தபடி உள்ளே போய் பார்த்தவனுக்கு எதுவும் வித்தியாசமாய் படவில்லை.

‘என்னவோ பண்றா இவ..’ என்று யோசித்தபடி வெளியே வந்தவனோ, அவள் திரும்ப பழையபடி சாய்ந்து கொண்டது கண்டு, அவனும் அவனின் இடம் சென்றுவிட்டான்..

‘இந்த ஒருநாளே இவ்வளோ டார்ச்சர் கொடுக்குறாளே.. இவளை எங்கம்மா மருமகளா வேற..’ என்று அவனின் மனம் போன போக்கில் ஒருப்பக்கம் சிரிப்பு தான் வந்தது..

அடுத்தது நிறைய சிந்தனைகள்.. எப்போது உறங்கினான் என்பது கூட தெரியவில்லை. ஆனால் அவனையும் மீறிய அசதியில் உறங்கியிருக்கிறான் அனுராகா எழுப்புகையில் தான் தெரிந்தது..

“ம்ம்.. என்னாச்சு??!!” என்று அதரி பதறி தீபன் எழ,

“நத்திங்… நைட் டின்னர் கொண்டு வந்திருக்காங்க..” என,

“ஓ!!!” என்றவன் எழுந்து அமர, அனுராகா தான் அவனுக்கும் சேர்த்து தட்டினில் எடுத்து வைத்தாள்.

எளிய உணவு தான்.. வரகு சாதம், ஒரு தக்காளி தொக்கு மற்றும் துவையல்.. அவனுவிற்கு அது என்ன சாதம் என்றுகூட தெரியவில்லை.. இதெல்லாம் உண்டும் பழக்கமில்லை. இருவருக்கும் எடுத்து வைக்க, அவனோ ‘இவ என்ன எடுத்து எல்லாம் வைக்கிறா??!!’ என்று கொஞ்சம் வியந்து தான் பார்த்தான்..

“என்ன பாக்குற??!! சப்பிடுறப்போ சண்டை எல்லாம் போடக்கூடாது..” என்றவள், ஒருவாய் எடுத்து வைக்க அவளின் முகமோ அஷ்டகோணலாய் மாறியது.

தீபன் பார்த்துக்கொண்டு இருந்தவனோ “என்ன டேஸ்ட் பிடிக்கலையா??!!” என,

“பர்ஸ்ட் டைம் இது டேஸ்ட் பண்றேன் சோ டிப்ரன்ட்டா இருக்கு அவ்வளோதான்..” என்றவள் அடுத்தும் உண்ண,

“ம்ம் நீ எப்பவுமே இப்படிதானா??!!” என்றான் அவளின் செயல்கள் புரியாது..

“இப்படிதானானா??!! எப்படி??!”

“இல்லை உன் பேஸ் பார்த்தாலே தெரியும் இந்த சாப்பாடு பிடிக்கலைன்னு.. ஆனா சாப்பிடுற.. வேற கொண்டு வர சொல்லட்டுமா??!!” என்றவனின் குரலில் அவனை மீறிய அக்கறை..

“நோ…” என்றவள், அடுத்த வாய் உணவை விழுங்க, அடுத்த வாய் எடுக்கையில் அவளின் கை பிடித்தவன் “பிடிக்கலன்னா விடேன் ராகா.. நான் வேற கொண்டு வர சொல்றேன்..” என்று அவனும் சொல்ல,

“ம்ம்ச்.. பிடிக்கலைதான் ஆனா இதை டாலரேட் பண்ணிக்க முடியும்.. ஆனா நீ பண்றது எல்லாம்??!!” என்றவள், அவனின் முகத்தினை நேருக்கு நேர் பார்க்க, அவள் சொல்ல வருவது புரியவும் கைகளை விட்டுவிட்டான்.

அடுத்து இருவருமே பேசிக்கொள்ளவில்லை.. மௌனமாகவே அந்த உணவு பொழுது கழிய, உண்டு முடிக்கவும், தீபன் தான் அனைத்தையும் ஒழுங்கு செய்து கழுவி எடுத்து வைக்க,

அப்போதும் அவனின் செயலை ‘பார்ரா..!!’ என்றுதான் மெச்சிக்கொண்டாள்.

அவனோ கையில் இருக்கும் ஈரம் போக அதை துடைத்தபடி வந்தவன் “ராகா.. ஒரு டென் மினிட்ஸ்.. சின்ன வொர்க் இருக்கு.. முடிச்சிட்டு வந்திடுறேன்..” என,

“ஒன் ஹவர் ஆனா கூட நான் உனக்கு வெய்ட் பண்ண போறதில்லை..” என்றவள், பின் யோசனையாய் “நான் அம்மாக்கிட்ட பேசணும்..” என்று பார்வையை வேறெங்கோ பதித்து சொல்ல,

“ம்ம்ம் அப்போ ஒன் ஹவர் வெயிட் பண்ணு…” என்றுவிட்டு வெளியே வந்தான்.

அவளால் எங்கேயும் தப்பிக்க முடியாது என்று திண்ணமாய் தெரியும் இருந்தும் அவள் முயற்சித்தாலும் இந்த இருட்டு பொழுதில் எதுவும் செய்ய முடியாது என்றாலும் கூட  குடிலை வெளிவாக்கில் பூட்டிவிட்டு வந்தவன், சிறிது தூரம் நடந்துவரவும், அவனுக்காகவே காத்திருந்தது போல் அங்கே ஒருவன் நிற்க,

“என்ன சுகுமார்… எல்லாம் ஓகே தானா??!” என்றான் சுற்றிலும் பார்த்தபடி.

“எஸ் சார்.. டபிள் ஓகே.. ஷர்மா இந்நேரம் டெல்லில இருப்பான்.. சோ அவனை தர்மா பார்த்துக்குவான்.. நாகவை சென்னை போக சொல்லிட்டேன்..”  என,

“ம்ம் குட்..” என்றவன் “வேற எதுவும் முக்கியமா??!!!” என்று இழுக்க,

“அந்த சேட் கொஞ்ச ஆப்போசிட் பார்டிக்கிட்ட பேச்சு வார்த்தை பண்றான்னு சந்தேகமா இருக்கு ..” என்றவனைப் பார்த்தவன்,

“ஓகே.. நான் பார்த்துக்கிறேன்..” என்றான் நெற்றியை சுருக்கி..

தீபனுக்கு வரும் ஒவ்வொரு தகவல்களும் அவன் இங்கிருந்து சீக்கிரம் கிளம்பியே ஆகவேண்டும் என்பதை சொல்லாமல் சொல்ல, அனுராகா எனும் பெரிய சுழலில் சிக்கிக்கொண்டது போலிருந்தது அவனுக்கு..

அவளின் ஏளன பார்வையும், உன்னை நான் வென்றிடுவேன் என்பது போன்ற பேச்சும் தீபன் சக்ரவர்த்தியை மேலும் மேலும் சீண்டுவதுதான் நிஜம்.. அதற்கான எதிர்வினையாய் தான் தீபன் இத்தனையும் செய்கிறான் என்பது அவனுக்கும் தெரியும்..

இருந்தாலும்..??!! தான் தோற்பதா என்ற கேள்வி?? அவனை இங்கே இருக்கச் செய்தது.

மேலும் சில விசயங்களை அந்த சுகுமாரோடு பேசியவன் “நீங்க போய் உங்க ஒர்க் பாருங்க.. பட் நான் சொன்னதுபோல கவனமா இருக்கணும்..” என்று அனுப்பிவிட்டு கொஞ்ச தூரம் தள்ளி இருந்த ஒரு கல் இருக்கையில் சாய்ந்து அமர்ந்து கொண்டான்.

“தீபன் அமர்ந்திருந்த இடத்திற்கு சற்று தள்ளித்தான் பிரஷாந்த் மற்றும் அவனோடு வந்திருந்த இரண்டு வெளிநாட்டவர்களும் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்..

இவன் தான் என்று தெரிந்ததுமே தீபன் சக்ரவர்த்தியின் பார்வை நொடியில் அவனை அளவிட ‘டேய் டேய் நீ எல்லாம் என்கிட்டே கூட வர முடியாது..!!’ அப்படியான எண்ணம் தான் அவனுக்குத் தோன்றியது..

இதற்கும் பிரஷாந்த அழகனே.. அவன் பார்க்கும் வேலையும் வாங்கும் சம்பளமும் கொடுத்த ஒரு நிமிர்வு மட்டுமே அவனிடம்.. அதைவிட்டு தனிப்பட்டு தீபனின் கண்களுக்கு சிறப்பாய் எதுவும் தோன்றவில்லை.

புகைப்படத்தில் பார்த்ததற்கும் நேரில் பார்ப்பதற்கும் நிறைய நிறைய வித்தியாசங்கள் தெரிய, ‘நீ ராகாக்கு மேட்சா??!!! வாட்ட ஜோக்..’ என்று தீபன் தானாகாவே சிரித்துக்கொள்ள,

“சார் நீங்க கேட்ட டீடெய்ல்ஸ்…” என்று ஒரு சிறு காகிதம் கொண்டு வந்து, அங்கே இருக்கும் சிப்பந்தி கொடுக்க  அதை வாங்கிப் பார்தவனுக்கோ கொஞ்சம் நிம்மதி மூச்சு.

“சோ… இன்னிக்கு நைட் இவன் வெக்கேட் பண்ணிடுவான்…” என்று முனுமுனுத்தவன் இதழில் சின்னதாய் ஓர் வெற்றிப் புன்னகை..

பிரஷாந்தோ தன்னை ஒருத்தி தேடி இத்தனை தூரம் வந்திருக்கிறாள் என்றோ, தன்னை ஒருவன் யாரென்றே தெரியாத போதும் எதிரியாய் பாவிக்கின்றான் என்றோ தெரியாது, அவனின் வேலையில் சிறந்து விளங்கவேண்டும் என்ற ஒன்றை மட்டுமே லட்சியமாய் கொண்டு, தன்னோடு வந்திருந்த இரு வெளிநாட்டு க்ளைன்ட்டுகளிடம் பேசிக்கொண்டு இருந்தான்.

எப்போதும் அவன் இப்படி வருவது கிடைக்காது. ஆனால் இம்முறை கையெழுத்தாக வேண்டிய ப்ராஜெக்ட் பெரியது.. அது சாத்தியமாக வேண்டுமெனில் அவனே இப்போது வரவேண்டிய நிலை. அவர்களோடு பேசியபடி எழுந்து போனவனோ தீபனை தாண்டித் தான் போனான்..

தீபனின் பார்வை அவனையே பின் தொடர, பிரஷாந்திற்கு என்னத் தோன்றியதோ நின்று அவனை திரும்பிப் பார்க்க,

‘நீ பார்த்தா நான் திரும்பிடனுமா??!!’ என்றுதான் தீபன் பார்த்தான்.

ஆனால் பிரஷாந்தோ அவனருகே இருந்தவர்களிடம் சொல்லிவிட்டு இவனை நோக்கி வந்தவன் “என்னோட எதுவும் பேசணுமா??!!” என,

“நோ..” என்று சொன்னவனின் உடல்மொழியும் பாவனையும் பிரஷாந்திற்கு முகத்தினில் அறைவது போலிருந்தது..

‘உன்னோடு எல்லாம் நான் பேசிடும் அளவு நீ பெரிய ஆள் இல்லை..’ இதுதான் தீபன் முகத்தில் அப்பட்டமாய் தெரிந்தது.

பிரஷாந்த் கண்களை இடுக்கி தீபனைப் பார்த்தவன் “ஓகே…” என்றுவிட்டு போக, அந்தநொடி பிரஷாந்திற்கு தீபனை பிடிக்காது தான் போனது.         

‘கிளம்பு டா.. கிளம்பு..’ என்று எண்ணிக்கொண்டவனுக்கு பிரஷாந்த் இங்கிருந்து கிளம்பிவிட்டால் கூட அனுவை அழைத்துக்கொண்டு போய்விடலாம் என்று எண்ணினான்.

அதே எண்ணத்தோடு குடிலுக்கு வர, அங்கே அனுராகா இல்லை.. தீபன் அவர்கள் குடில் விட்டு வெளியே வந்த நேரத்தில், அனுராகா தாமதமே செய்யாது, அங்கிருந்த குளியல் அறையினுள் நுழைந்தவள், அந்த குடிலின் மாடிப்போல் இருந்த இடத்தில் ஏறி, பின் வெளியேற முயற்சிக்க, மரக் கம்புகளாலும், மூங்கில் குச்சிகளாலும் வேயப்பட்டு இருந்த அந்த குடிலில் இருந்து மேற்புறம் அவ்வளவு எளிதாய் தப்பிக்க முடியவில்லை..

பழங்கள் வெட்டும் கத்தி மட்டுமே அவளிடம்.. அதனை வைத்து மட்டுமே சரடு இணைப்புகளை அறுத்தெறிய முடியும்.. அதனை செய்யவும் செய்தாள்தான். ஆனால் போதிய வெளிச்சம் என்பது இல்லாததால் வேகமாய் எதையும் செய்ய முடியவில்லை..  அவளின் உயரத்திற்கு எட்டுமளவு தானே அவளால் எதையும் செய்ய முடியும்… தலை எளிதாய் வெளியே வந்துவிட்டது. அனால் உடல்??!!!

இரண்டுப் பக்க கையிலும் காலிலும் சிராய்ப்புகளும், பின் சில ஆழமான வெட்டுக்களும். அனு அதெல்லாம் பொருட்படுத்தவே இல்லை.. மேலே மேலே முன்னேறிக்கொண்டு இருக்க, ‘எங்க போனா??!!’ என்று தேடியவனின் பார்வையில் கீழே சிந்தியிருந்த அவளின் ரத்தத் துளிகளே சாட்சியாய் அமைந்தன..

பார்த்ததுமே துடித்துப்போனான்..

“ராகா..!!!” என்று உள்ளிருந்து கத்தியவன், அவள் போன வழியில் எட்டிப்பார்க்க, அவனால் எதையும் கணிக்க முடியவில்லை.. வெளியே இருட்டாய் தான் இருந்தது.. வேகமாய் குடில்விட்டு வெளியே வந்தவன், மொபைல் டார்ச் ஆன் செய்து பின்னே போய் குடிலின் மேற்பக்கம் ஒளி பாய்ச்சிப் பார்க்க, அனுராகாவோ அந்த குடிலின் நடுப்பகுதியில் இருந்து மெது மெதுவாய் அமர்ந்து இறங்கிக்கொண்டு இருந்தாள். அவள் கையிலும் காலிலும் வழிந்தோடும் குருதி மட்டுமே கண்ணுக்குத் தெரிய,

“ராகா..!!! டோன்ட் மூவ்…” என்று கத்த, அவனின் குரல் கேட்டு கொஞ்சம் திடுக்கிட்டுத்தான் போனாள் அனுராகா..

உள்ளம் ஒருநொடி அதிர்ந்தாலும், இந்த வாய்ப்பினை விட்டால் அவளுக்கும் வேறு வழி தெரியவில்லை.. தான் இப்படி இறங்கி வருவதை யாரேனும் ஒருவர் பார்த்தாலும், அவளுக்கு இங்கிருந்து கிளம்பும் வாய்ப்பு இன்னும் பிரகாசமாய் இருக்கும்.. அதனால் தான் அவள் மேற்புறமாய் வெளியேறியது..

“ராகா.. அப்படியே இரு.. டோன்ட் மூவ்.. ப்ளட் வருது பாரு..” என்று கத்தியவனுக்கு, அவள் தப்பிக்கத்தான் இப்படி செய்கிறாள் என்பது எல்லாம் பின்னே போய்விட்டது.

அவளோ அவனை ஏளனமாய்த்தான் பார்த்தாளே இறங்கும் எண்ணத்தில் சிறிதும் இல்லை.. அனுராகாவின் கை கால் எல்லாம் கூர்மையான கம்புகள் கீறி ரத்தம் வழிந்து கொண்டு இருக்க, அவளோ முன்னேறிக்கொண்டு இருந்தாள். தீபன் சக்கரவர்த்தி நிற்பதற்கும், அனுராகா மேலே இருப்பதற்கும் கிட்டத்தட்ட பத்தடி உயரம் இருக்க,  தீபனோ தான் எப்படி மேலேறி அவளை பாதுகாப்பாய் கீழே கொண்டு வருவது என்று யோசிக்க,

அவளோ “திஸ் இஸ் எ கேம் தீபன்.. நீ உன்னோடது பண்ணிட்ட.. இப்போ நான் ப்ளே பண்ணவேணாமா??!!” என்று சொன்னவள், அவனைப் பார்த்துக்கொண்டே நகர்ந்ததில், கையில் என்னவோ குத்திட

“ஷ்!!!” என்று அவள் வலி பொறுத்தது, தீபனுக்கு மேலும் வலித்தது..

“ஏய்.. நில்லுடி அங்கேயே….” என்று கத்த,

“ஏன்..??!! கேம் ப்பா இது.. நீதானே சொன்ன..??” என்றவள், வலியை பொறுத்துக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாய் பின் பக்கமாய் மறைந்துகொண்டு இருந்தாள்.

சற்று தூரத்தில் யாரோ கும்பலாய் வருவது தெரிந்தது.. தீபனுக்கும் அரவும் கேட்க, அனுராகாவும் “ஹெல்ப்…” என்று கத்த,  ஆட்கள் வேகமாய் இங்கே வரும் சத்தம் கேட்டு, தீபன் அவளுக்கும் மேலே கத்தினான் “ஹெல்ப்..” என்று..

தீபனுக்குத் தெரியும், அவன் மேலேறினால் நிச்சயம் அனு இன்னும் பாதகமாய் ஏதாவது செய்து வைப்பாள் என்று.. இதேது பிறர் என்றால் அவள் அப்படி ஏதும் செய்ய மாட்டாள் ஏதாவது பேசி தானே திரும்ப அழைத்துவிடலாம் என்று நொடியில் கணக்கிட்டவன்,

“ஹெல்ப்…” என்று கத்தியபடி அனு இறங்கும் திசைப் பார்த்துப் போக, அவளோ ஒன்றும் விளங்காது பார்த்து.. ஆனால் வந்தவர்கள் அதற்குள் அங்கே வந்து என்னவென்று கேட்க,

“ப்ளீஸ்.. ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க..” என்று அனு காட்டி தீபன் சொல்ல, அதற்குள் அவங்கே வேலை செய்பவர்களும் வந்திட, அனுவிற்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.

அவள் யோசிக்கும் முன்னமே ஏணி ஒன்று வந்திட, கீழே இருவர் ஏணி பிடித்துக்கொள்ள தீபன் வேகமாய் மேலேறியவன், “கம்மான் பேபி..” என்று கை நீட்ட, அவனை கொலை செய்யும் வேகம் வந்தது அவளுக்கு..    

அனு அவன் கைப்பற்ற யோசிக்க, அவனே இறுக்கமாய் பிடித்தவன் “ஒழுங்கா இறங்கி வா.. சீன் போடணும் நினைச்ச.. நான் என்ன செய்வேன் எனக்கே தெரியாது..” என்று சொல்ல, அனுராகா சுற்றிலும் இருப்பவர்கள் எல்லாம் தங்களை வேடிக்கைப் பார்ப்பது கண்டு, ஒன்றும் சொல்லாது அவனின் கை பிடிக்க, அடுந்த சில நிமிடங்களில் அனு கீழே இருந்தாள்.

“பர்ஸ்ட் எய்ட் கொண்டு வாங்க..” என்று கத்தியவன், அவளைத் தாங்கியபடி அந்த குடிலுக்குள் செல்லப் பார்க்க, அதற்குள் அங்கே பெண் உதவியாளர்கள் வந்திட, அனுவிற்கு முதலுதவி செய்யப்பட, அவளின் காயங்கள் கண்டு  “ஓ!! மை காட்…!!” என்றுதான் உள்ளம் பதறியது தீபனுக்கு.

“சார் காயம் ஆழமா இருக்கு.. மெடிக்கல் ரூம் கூட்டிட்டு போயிடலாம்..” என்று ஒரு பெண் சொல்ல,

“ஓகே..” என்றவன் அதற்கான வழியைப் பார்க்க, அடுத்த பத்தாவது நிமிடம் மருத்துவ வசதிகள் நிரம்பியிருந்த ஒரு அறையினில் இருந்தாள் அனுராகா..

அவள் எண்ணியதுபோல் அங்க குடில் விட்டு வந்தாகிவிட்டது.. இனி பிரஷாந்த் மட்டுமே..?!!!

அனுவின் காயங்களுக்கு அடுத்தக்கட்ட சிகிச்சை செய்யப் போக, “வேணாம்..” என்று தடுத்தாள்..

“மேம்.. இப்படியே விட்டா உங்களுக்குத்தான் பிராப்ளம்.. அட்லீஸ்ட் ஹாஸ்பிட்டல் போற வரைக்குமாவது நீங்க பெய்ன் டால்ரெட் பண்ணனும்..” என்று ஒருத்தி சொல்ல,

“நோ தேங்க்ஸ்..” என்றவள் எழ,

அந்த பெண்ணோ “சார் இவங்க கோ அப்ரேட் பண்ணமாட்டேங்கிறாங்க..” என்று தீபனை அழைத்துவிட்டாள்.    

தீபன் உள்ளே வந்திட, அவளோ அவனை ‘நான் உன்னை வென்று விட்டேன்..’ என்பதுபோல் தான் பார்க்க, அதெல்லாம் அவனுக்கு ஒன்றும் பாதிக்கவில்லை. மாறாக அவளின் காயங்கள் மட்டுமே பெரிதாய் இருந்தது. 

“ராட்சசி… ரத்தக் காட்டேறி… எப்படி இருக்கா இவ??!!!” என்று அவளுக்கு கேட்கும் படியே அவன் சொல்ல, “ஹா ஹா ஹா!!!” என்று அனுராகா சத்தமாய் சிரித்தேவிட்டாள்.

அனுராகாவின் சிரிப்பினைப் பார்த்தவனோ,  “நீங்க போங்க..” என்று அங்கிருந்த இரு பெண்களையும் வெளியே அனுப்பியவன், தானே கையில் மருந்தை எடுத்து, அவளின் காலை இறுக பற்றி காயத்தில் வைக்க,

“ஏய் என்ன பண்ற நீ??!!” என்று அனு சத்தமாய் கேட்க,

“ஷ்..!!!” என்று அமைதி காட்டியவன், “கத்தினன்னு வச்சுக்கோ டிஞ்சர் எடுத்து உடம்பு முழுக்க ஊத்திடுவேன்… காயம் பட்ட இடமெல்லாம் சும்மா குளு குளுன்னு எரியும்..” என்று மிரட்ட, ஏற்கனவே காயத்தில் எறிவது பத்தாதது என்று இதுவேறா என்று பார்த்தாள்.

ஆனாலும் இத்தனை தூரம் வெளியே வந்தாகிற்று, இனியும் கொஞ்சம் முயன்றால் முழு வெற்றிதான் என்று எண்ணியவள், “உனக்கு என் கால் பிடிக்க இவ்வளோ ஆசையா??!!” என்றாள் ஒவ்வொரு வார்த்தைகளையும் கடித்துத் துப்பி.

அத்தனை நேரம் அவளின் காயமும், அதற்கான மருந்தும் மட்டுமே தீபன் சக்ரவர்த்திக்கு முக்கியமாய் பட, இப்போது அவள் சொல்லிய சொல்லில், தன் சுயம் அடிப்படுவதாய் பட, கையில் இருந்த பஞ்சினை தூக்கி எறிந்தவன்,        

“ஏய்… ஒழுங்கா கிளம்பி ஹாஸ்பிட்டல் வா..” என்று அதட்ட,

“ம்ம்ச் பிரசாந்த் வரட்டும்.. பேசிட்டு போலாம்.. இனி என்ன கிளம்புறது தானே..” என்று அவளும் சொல்ல,   ‘பாவி பாவி..’ என்றுதான் தீபன் பார்த்தான்.

“என்ன தீபன் பாக்குற??!! ஒன்னு அவன் இங்க இருக்கணும்.. இல்லை பிரஷாந்த் இருக்கிற இடம் உனக்கு தெரிஞ்சிருக்கனும்.. உனக்கு அரைமணி நேரம் டைம்.. பிரஷாந்த் இங்க வரணும்.. இல்லைனா.. இதோ டிஞ்சர்.. நீ சொன்ன தானே மேல ஊத்திடுவேன்னு.. அது மட்டுமில்லை இருக்கிற எல்லா மருந்தையும் எடுத்து நான் ஊதிப்பேன்..” என்று அவனின் விழிகளைப் பார்த்து தீவிரமாய் சொன்னாள் அனுராகா…

காதல் காயம் கொடுக்கும்..

காயம் காதல் கொடுக்குமா??

 

       

           

 

Advertisement