Advertisement

மது – 21

“ஹே… வாவ்… வாவ்… வாவ்.. ரிஷி… செம…. ஓ மை காட்…. செமையா இருக்கு ரிஷி…” என்று வானில் பறந்துகொண்டே கத்திக்கொண்டு இருந்தாள் மதுபாலா.

அவளுக்கு சற்று பின்னே, லேசாய் அவளை அணைத்த வாக்கில் ரிஷி இருக்க, அவர்களுக்கு பின்னே ஒருவர் இருந்தார்.

“யாய்…. நான் சொன்னேன்ல ரெண்டுபேரும் சேர்ந்து பறப்போம்னு….” என்று ரிஷியும் கொஞ்சமே கத்தி சொல்ல,

“அப்போவே ப்ளான் பண்ணிட்டியா நீ….” என்று அவன் முகத்தை திரும்பிப் பார்க்க முயன்று பின் முடியாமல் மீண்டும் கழுத்தை மதுபாலா முன்னே திருப்ப,

“மதுபி இப்படி பார்…” என்று அவளை பக்கவாட்டில் பார்க்க வைத்தவன் கையில் இருந்த செல்பி ஸ்டிக்கால் அழகாய் செல்பி எடுக்க,

“இன்னும் எடு…” என்று மதுபாலா விதவிதமாய் போஸ்கள் கொடுக்க,

“ஹா ஹா.. மதுபி… பின்னால ஒருத்தர் இருக்கார் பாவம்…” என்று சிரித்தாலும், அவனும் அவளுக்கு சளைக்காது முகத்தினை வேறு வேறு பாவங்களில் காட்டி செல்பியாய் எடுத்துத் தள்ள,  இவர்களது பாராசூட்டை செலுத்துபவரோ நீங்கள் என்னவோ செய்யுங்கள் என் வேலையை நான் பார்கிறேன் என்று இருந்தார்.. இவர்களைப் போல் எத்தனைப் பேரை அவர் பார்த்திருப்பார்..       

அதே ஏலகிரி பயணம் தான்..

ஆனால் இம்முறை அங்கே ‘பாரா க்ளைடிங்…’ எனும் பாராசூட் திருவிழா நடக்க, மதுபாலாவும் ரிஷிநித்யனும் அங்கு வந்திருந்தனர். அவர்களின் தேனிலவு அங்கே..

மதுபாலா கன்னியாகுமரி சென்றுவந்த பின்னே அடுத்து வந்த இரண்டாவது மாதம் ஒரு சுப முகூர்த்த நாளில் இவர்களின் திருமணம் சீரும் சிறப்புமாய் நடந்தேறியது.. கும்பகோணத்தில் தான் திருமணம்.. பிரம்மாண்டமாய் சாம்பசிவம் ஏற்பாடு செய்திருந்தார்.. ரிஷியே கூட இத்தனை பெரிதாய் நினைக்கவில்லை..

“என்னம்மா அப்பா இவ்வளோ கிரான்டா பண்ணிருக்கார்…” என்று ரிஷி கல்யாணியிடம் கேட்க,

“பின்ன… ரிட்டயர்ட் கலக்டர் சாம்பசிவம் வீட்டு கல்யாணம்னா சும்மாவாடா.. பொண்ணு மட்டும் எதுல குறைச்சல்.. கன்னியாகுமரில பேர் போன குடும்பம்.. யார் இல்லைனாலும் அந்த குடும்பத்துக்குன்னு ஒரு பேர் இருக்கு இல்லையா…” என்று கல்யாணி சொல்ல,

இதெல்லாம் மதுபாலாவும் சிரித்தபடி தான் கேட்டுக்கொண்டு இருந்தாள்…

இந்த நாளில் திருமணம் வைத்துகொள்வோம் என்று சாம்பசிவம் ஒரு தேதி சொல்லவுமே, வங்கிக்கு சென்று அவள் அம்மா, அவளின் திருமணத்திற்காக என்று சேர்த்துவைத்திருந்த பணத்தை எடுத்து சைலேந்திரனிடம் கொடுத்துவிட்டாள்..

“இதெல்லாம் எதுக்கு மது.. ரிஷி வீட்ல ஏத்துக்க மாட்டாங்க…” என்று சைலேந்தர் தயங்க..

“கல்யாண செலவு பாதி பாதிதான்.. இதுல எந்த மாற்றமும் இல்லை.. நீங்க பேசுறீங்களா இல்லை நானே அங்கிள் கிட்ட பேசவா??” என்றவளை,

“நீ மாறவே மாட்டியா???!!!” என்றுதான் பார்த்தார் சைலேந்தர்..

“அப்பா பணம் வேணாம் சொல்லிட்டு அம்மா பணம் மட்டும் எடுதுக்கிறன்னு நீங்க கேட்கலாம்.. பட்.. அம்மா கூட கொஞ்ச நாள் வல்ந்திருக்கேனே.. சோ அவங்களோட உணர்வுகள் எனக்கு புரியும்.. அப்பாவை ஒன்ஸ் பார்த்து பேசிருந்தா கூட என்னோட திங்கிங் மாறியிருக்குமோ என்னவோ…” என்றவள்,

“நீங்க அங்கிள் கிட்ட பேசுங்க.. தென் நான் பேசிக்கிறேன்…” என்று கிளம்பிவிட்டாள்..

வீட்டிற்கு வந்தவளோ ரிஷிக்கு அழைத்து சொல்ல, “நான் நோ சொல்லமாட்டேன் மதுபி. இட்ஸ் யுவர் ரைட்ஸ்.. பட் அப்பா எப்படி எடுத்துப்பார் தெரியலை.. எதுக்கும் அம்மாக்கிட்ட ஒருவார்த்தை சொல்லிடலாம்..” என்றவன்  “நானே பேசுறேன்…” என்றுவிட்டு கல்யாணிக்கு பேசினான்..

“ம்மா.. மதுபி அம்மா கல்யாணத்துக்குன்னு தனியா பணம் நகை எல்லாம் வச்சிருப்பாங்க போல..” என்றதுமே,

“அதெல்லாம் வேணாம்.. நம்ம அதெல்லாம் எதும் எதிர்பார்க்க கூடாது ரிஷி…” என்றவரிடம்,

“நான் என்ன மதுபிக்கு வாழ்க்கை கொடுக்கிறேனா???” என்றான் வேகமாய்..

“டேய் ரிஷி…!!!!”

“பின்ன என்னம்மா??? அவங்க அம்மா தனியா வச்சிட்டு போயிருக்காங்க.. போனா போகுதுன்னு ஒன்னும் நான் மதுபியை கல்யாணம் பண்ணலை.. அவளுக்கான சகல மரியாதையோட, உரிமையோட இந்த கல்யாணம் நடக்கிறதா இருந்தா நடக்கட்டும்..” என்றுவிட்டான்..

கல்யாணிக்குமே கொஞ்சம் பயம் தான் சாம்பசிவம் என்ன சொல்வாரோ என்று.. மைதிலியிடம் புலம்ப, “அத்தை ரிஷி சொல்றதும் சரி. நமக்குத் தெரியும் மதுபாலா பத்தி.. ஆனா எல்லாருக்கும் விளக்க முடியாது இல்லையா…” என,

“ஹ்ம்ம் சரிதான் அவர்கிட்ட பேசுறேன்…” என்று மெதுவாய் விஷயத்தை சாம்பசிவத்திடம் சொல்ல, அவரோ “அப்படியா…” என்றதை தவிர ஒன்றும் சொல்லவில்லை..

பின் சைலேந்திரன் அழைத்துப் பேசினார்..

பேசியது என்னவோ சைலேந்திரன் தான், ஆனால் திரை கதை வசனம் எல்லாம் ரிஷிநித்யன். ஓரளவு யூக்கித்து இருந்தான் எப்படி பேசினால் சாம்பசிவம் சரியென்று சொல்வார் என்று.

“சார்.. மதுபாலாவோட அம்மா, அவளுக்கான கல்யாண செலவு பணம் என் பொறுப்புல கொடுத்திருந்தாங்க.. கல்யாண செலவுல என்ன வருதோ அது ஷேர் பண்ணிக்கலாம். அதுபோக மத்த சீர் எல்லாம் இங்கவே வாங்கினாலும் சரி.. இல்லை நீங்க எப்படி சொல்றீங்களோ அப்படி வாங்கிடலாம்..” என,

“இல்லை அது…” என்று சாம்பசிவம் யோசித்தவர், “நான் மதுபாலாக்கிட்ட பேசிட்டு சொல்றேன்…” என்றுவிட்டார்..

அவளோ “அங்கிள்.. நகை எல்லாம் லாக்கர்ல இருந்து நானே எடுத்து வச்சிட்டேன்.. பணம் சைலேந்தர் கிட்ட இருக்கு.. கண்டிப்பா நீங்க மறுக்கக் கூடாது..” என்று தன்மையாகவும் ஆனால் அழுத்தமாகவும் சொல்ல,

“ம்ம் சரிம்மா..” என்றுவிட்டார்..

“ஹப்பாடி….” என்று நிம்மதி பெருமூச்சு விட, “எப்படி என்னோட ஐடியா…” என்று ரிஷி சிரிக்க,

“உன்னை காரியக்காரன்னு நான் சொல்றது தப்பேயில்ல ரிஷி…” என்று அவளும் சிரித்தவள், “சரி சரி.. கல்யாணத்துக்கு அப்புறம் நம்ம எங்க இருக்கிறது??” என்று கேள்வியை தூக்கிப் போட,

“இதென்ன கேள்வி…” என்று வேகமாய் சொன்னவனுக்கும் பதில் வேகமாய் வரவில்லை..

ஒன்று ரிஷி இங்கே வரவேண்டும் இல்லை அவனும் மதுபாலாவும் வேறு வீடு செல்லவேண்டும். ஏற்கனவே அவனிருக்கும் வீடு இருக்கிறதுதான்.. ஆனால் இருவர் அது சரியாய் வருமா என்றும் தெரியவில்லை..

கல்யாணியோ “நம்ம கெஸ்ட் ஹவுஸ் அப்படியே இருக்கு.. அங்க இருங்க…” என்றுசொல்ல, “அது ஆபிஸ்க்கு தூரம்.. வேண்டாம்..” என்றுவிட்டான் ரிஷி.

“ரிஷி.. நான் ஒண்ணு சொல்லவா??” என்று மதுபாலா தயங்கிப்பார்க்க,

“உனக்கு என்ன என்கிட்ட தயக்கம்??” என்று முறைத்தான் ரிஷி.

“இல்லப்பா.. இந்த வீடு அப்படியே இருக்கட்டும்.. உனக்கு ஆபிஸ் பக்கத்துல வேற டபிள் பெட்ரூம் ப்ளாட் ஆர் தனி வீடு எதுனா பார்த்துக்கலாம்..” என, “ஆர் யூ சியூர்…” என்று கண்களை விரித்தான்.

“எஸ்… கல்யாணத்துக்கு அப்புறம் எனக்கும் ஒரு சேஞ் வேணுமில்லையா?? இதே வீடுன்னா எனக்கு எந்த வித்தியாசமும் தெரியாது. நமக்கு அங்க போர் அடிச்சா அப்பப்போ வந்து இங்க ஸ்டே பண்ணிக்கலாம்..” என்று மதுபாலா சொல்ல,

“நீ சொல்றது ஓகே.. பட்.. உனக்கு.. உனக்கு இங்கவிட்டு வந்தா எதுவும் மிஸ் பண்றதுபோல இருக்காதா??” என,

“என்ன மிஸ்?? ஹே ரிஷி.. இப்படி திங் பண்ணு இப்போ எனக்கு அப்பா அம்மா இருந்து கல்யாணம் பண்ணிருந்தா நான் இங்கயே இருந்திருப்பேனா என்ன?? இல்லைதானே.. சோ கண்டிப்பா வேற வீடு தான்…” என்றுவிட்டாள்…

பின்னே என்ன.. இரண்டு மாதங்கள் கண் மூடி திறக்கும் முன்னே ஓடிவிட, கும்பகோணத்தில் ஒருப்பக்கம் சாம்பசிவம் ஸ்ரீநிவாஸ் எல்லாம் திருமண வேலைகளில் இருக்க, இங்கே ரிஷி மனோகரோடு சேர்ந்து மீண்டும் வீடு தேடும் பணியில் சுற்ற,

பெண்களோ அவர்களுக்கு தேவையான சேலை நகை என்று எடுப்பதும், புது வீட்டில் என்ன பொருட்கள் வாங்குவது என்று ஷாப்பிங் செல்வதுமாய் அனைவரும் கும்பகோணத்திற்கும் சென்னைகுமாய் மாறி மாறி அலைந்து கொண்டு இருந்தனர்..

“மது இப்போ நீ யூஸ் பண்ற திங்க்ஸ் போதாதா.. புதுசா ஏன் வாங்கணும்…” என்று மைதிலி கேட்க,

“அக்கா.. நான் கல்யாணமாகி புகுந்த வீடு போறேன்.. சோ எல்லாம் புதுசுதான்…” என்று மதுபாலா சொல்கையில், யாராலும் எதுவும் சொல்ல முடியவில்லை..

சில பொருட்கள் ரிஷியும் அவளும் சென்று வாங்கினர்.. ரிஷி எதற்குமே தடை சொல்லவில்லை.. முழுக்க முழுக்க அவள் விருப்பம்.. அவளது பெற்றோர் இருந்திருந்தால் என்னென்னவெல்லாம் நடந்திருக்குமோ அதெல்லாம் இப்போதும் நடக்கவேண்டும் என்பதில் அவன் திண்ணமாய் இருந்தான்.

ஒருநொடி கூட மதுபாலாவின் மனதில் ‘என் அம்மா அப்பா இருந்திருந்தா இப்படியா நடந்திருக்கும்…’ என்ற எண்ணம் வந்திடக்கூடாது என்பதிலும் உறுதியாய் இருந்தான்..

ஆக இவர்கள் அனைவரும் ஆவலாய் எதிர்பார்த்த திருமண நாளும் வந்திட, ஊரே மெச்சும் வகையில் தான் அவர்களின் திருமணம் நடந்தேறியது.. மதுபாலா பக்கத்து ஆட்களை சைலேந்திரனும், அவளது அப்பாவின் நண்பரும்.. பின் ஒருசில தூரத்து உறவுகளும் வந்திருக்க, அவளுக்கான இனிய சர்ப்ரைஸாக ரிஷி மதுபாலாவின் கேம்ப் டீம் ஆட்களை அழைத்திருந்தான்..

“ரிஷி… இதெல்லாம் உன் வேலையா??” என்று அவர்களை பார்த்ததும், மேடையிலேயே அவனைப் பார்த்துக் கேட்க,

“நான் சொன்னேனே கண்டிப்பா இந்த டீம்ல ஒரு ரியல் லைப் ஜோடி சேரும்னு..” என்று சிரித்தவனை

“காரியக்காரன்டா நீ…” என்று அப்போதும் சொல்லிக்கொண்டாள்..

நாட்கள் எல்லாம் பறப்பதாய் தான் தோன்றியது அவர்களுக்கு. திருமணம் முடிந்து நான்கே நாட்களில் சென்னை வந்து, புது வீடு பால் காய்ச்சி, வாங்கியிருந்த அனைத்துப் பொருட்களையும் செட் செய்து என்று ஒருவாரம் கடந்திருந்தது..

சம்பசிவமோ “ரிஷி இதே ஏரியால சொந்தமாக்கூட வீடு வாங்கித் தரேன்…” என,

“வேணாம்ப்பா கொஞ்ச நாள் போகட்டும்.. நானே சம்பாரிச்சு வாங்கிக்கிறேன்…” என்று மரியாதையாய் மறுத்துவிட்டான்..

அனைவரும் இரண்டு நாட்கள் இருந்துவிட்டுத்தான் கிளம்பினர்.. அவர்கள் கிளம்பியதுமே அந்த வாரக் கடைசியில், மதுபாலாவை அழைத்துக்கொண்டு ஏலகிரி கிளம்பிவிட்டான்..

“ஏற்கனவே பார்த்த பிளேஸ் தானே…” என்று சிணுங்கிக்கொண்டே தான் கிளம்பினாள்..

ஆனால் அவள் கொஞ்சமும் எதிர்பார்க்காத விஷயம் ‘பாரா க்ளைடிங்..’

சும்மாவே ரிஷியோடு திருமணம் முடிந்ததில் இருந்து மதுபாலா வானத்தில் பறப்பது போல் தான் இருந்தாள்.. இப்போது நிஜமாகவே பறக்க அவளால் சந்தோசத்தை தாங்க முடியவில்லை..

பாராசூட்டில் இருந்து கீழிறங்கும் வரைக்கும் கத்திக்கொண்டே தான் இருந்தாள்.. ரிஷி எதுவுமே சொல்லவில்லை.. மௌனமாய் ஒரு சிறு புன்னகையோடு அவளை ரசித்துக்கொண்டு இருந்தான்..

பறந்து முடிந்து கீழே இறங்கியபின்னே கூட ரிஷியை ஒட்டிக்கொண்டே இருந்தாள்..

“ஹேய் மதுபி போதும்..” என்றவனை,

“வாவ்.. ரியல்லி.. நான் எதிர்பார்க்கல ரிஷி…” என்று அப்போதும் அவன் தோள்களை பிடித்து குதித்துக்கொண்டே தான் நடந்தாள்..

“பின்ன வேறென்ன எதிர்பார்த்த..” என்றவனும் அவள் தோள் மீது கை போட்டு, அணைத்தவாக்கில் நடக்க,  

“ஹனிமூன் வந்திட்டு என்ன பாஸ் எதிர்பார்ப்பாங்க..” என்று கேட்டு கலகலவென சிரிக்க, அவளின் அந்த சிரிப்பும், ரிஷியின் அந்த அணைப்பும் தொடர்ந்துகொண்டே தான் இருந்தது..

ஒருவழியாய் தேனிலவு முடிந்து சென்னை வந்து, அவர்களின் அன்றாட வாழ்வும் தொடங்கிட, முதலில் மதுபாலாவிற்கு கொஞ்சம் திணறலாய் தான் இருந்தது. ஆனாலும் ஒவ்வொன்றையும் ரசித்து ரசித்து செய்ய, ரிஷியோ கேட்கவே வேண்டாம், அவளைத் தாங்கினான் என்றுதான் சொல்லிட வேண்டும்…

அதற்காக இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் வராமல் எல்லாம் இல்லை..  ஊடல் கூடல் என்று சந்தோசமாகவே அவர்களின் தினசரி கடந்தது.

மதுபாலாவின் பூர்வீக சொத்து பின் அதை ட்ரஸ்ட்டாக மாற்றுவது தொடர்பாக அடிக்கடி ஸ்ரீநிவாஸோடு மதுபாலா கன்னியாகுமரி சென்றுவந்தாள்..  அன்றும் அப்படித்தான் கன்னியாகுமரி சென்று வந்திருக்க, ஸ்ரீநிவாஸ் மைதிலி இருவரும் மதுபாலாவோடு சென்னை வந்திருந்தனர். 

ரிஷியும் வீட்டிலிருக்க, அவனைப் பார்க்கவென்று மனோகர் வந்திருந்தான்..

“ஜூஸ் எடுத்துக்கோங்க…” என்று வந்து மதுபாலா இரண்டு டம்ளரை நீட்ட,

“தேங்க்ஸ்…” என்று எடுத்துக்கொண்டவன், ரிஷியைப் பார்க்க, அவனோ ஜூஸ் குடிப்பதே முக்கியம் என்பதுபோல் அமர்ந்திருந்தான்.

மதுபாலா நகர்ந்ததும் “டேய் நல்லவனே.. இப்போவாது சொல்லேன்டா…” என்று மனோகர் கேட்க,

“இப்போ உனக்கு என்னடா தெரியனும்??” என்றான் எரிச்சலாய் ரிஷி..

“எப்படிடா… எப்படி அந்த பொண்ணு எதுமே வேணாம்னு சொல்லுச்சு.. இப்போகூட நம்ப முடியலை.. அப்படி என்னடா பண்ண நீ?? சொத்துபத்து எதுமே வேணாம் ரிஷி மட்டும் போதும்னு சொல்ற அளவுக்கு நீ என்ன பண்ண??” என்று இப்போதும் மனோகர் ஆர்ச்சர்யமாய் தான் கேட்டான்..

இன்று நேற்று அல்ல.. கிட்டத்தட்ட இந்த விஷயம் அவன் கேள்விப்பட்டதில் இருந்து கேட்கிறான்.. அனால் ரிஷிநித்யன் தான் பதில் சொன்னானில்லை.. இப்போதும் அதுபோலவே ரிஷி சிரித்தவன் அமைதியாய் இருக்க,  

“டேய் பதில் சொல்லுடா நானும் எப்போயிருந்து கேட்கிறேன்…” என்று மனோகர் அவனைப் படுத்த,

“ஷ்.. இப்போ என்ன உனக்கு தெரியனும்..” என்றவன்

“மதுபிய நான் லவ் பண்ணது ரெண்டாவது விஷயம்.. முதல்ல அவளை நான் மதிச்சேன்..” என, மனோகர் புரியாமல் பார்த்தான்..

“என்னடா புரியலையா?? லுக் பொண்ணுங்களுக்கு நம்ம அன்பை வெளிப்படுத்துறோமோ இல்லையோ அவங்களுக்கான மரியாதையை நம்ம கண்டிப்பா வெளிப்படுத்தணும்.. சின்னவங்க பெரியவங்கன்னு இல்லாம லேடீஸ்க்கு ஒரு ரெஸ்பெக்ட் அண்ட் அவங்களுக்கான ஸ்பேஸ் கொடுக்கணும்.. அதைதான் நானும் செஞ்சேன்..

என்னைப் பொருத்தவரைக்கும் மதுபி நான் பார்த்தப்போ எப்படி இருந்தாளோ அதுபோலவே இனியும் இருக்கணும்.. அவளுக்கான ஸ்பேஸ்ல நான் கூட நுழைய மாட்டேன்.” என்றவனை மலைப்பாய் தான் ஒரு பார்வை பார்த்தான் மனோகர்.

“டேய் என்ன அப்படி பாக்குற?? நிஜம்தான்.. இதுவரைக்கும் மதுபிக்கிட்ட ஏன் இப்படி இருக்கன்னு நான் கேள்வி கேட்டதுமில்லை.. இப்படி இருந்திருந்தா என்னன்னு அட்வைஸ் பண்ணதும் இல்லை.. இனியும் அப்படித்தான் சொல்லப்போனா எப்படி இப்படி இருக்கான்னு நான் ஆச்சர்யம் தான் பட்டிருக்கேன்…” என

“இல்ல.. நீ இவ்வளோ நல்லவனாடா???” என்றான் மனோகர்..

“ஹா ஹா.. லவ் பண்ணு மச்சி.. இதெல்லாம் தானா வரும்.. மரியாதைக் கொடுக்காத அன்பு, திருப்தி கொடுக்காது.. நான் என் லைப்ல மதுபி இருக்கணும்னு நினைச்சேன் அவ்வளோதான்.. எங்க லைப்ப நாங்க சேர்ந்து க்ராஸ் பண்ணனும்னு ஆசைப்படுறோம் தட்ஸ் ஆல்..” என்று ரிஷி தோளைக் குலுக்க, இதெல்லாம் சற்று தள்ளி அமர்ந்திருந்த ஸ்ரீநிவாஸ் காதுகளிலும் விழுந்தது..

ரிஷி அவனின் தம்பிதான் ஆனால் அவன் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும் வக்கீலான ஸ்ரீநிவாஸிற்கே பொட்டில் அடித்தது போலிருந்தது..

‘அன்பை வெளிப்படுத்துறோமோ இல்லையோ கண்டிப்பா அவங்களுக்கான மரியாதையை வெளிப்படுத்தணும்..’

ரிஷியின் இந்த வார்த்தைகளே ஸ்ரீநிவாஸ் மனதில் ஓடிக்கொண்டு இருக்க, மைதிலியை தேடிச் சென்றவன், அவள் மதுபாலாவோடு இருப்பது கண்டு தயங்கி நிற்க,

“அக்கா அண்ணா உங்களைத் தேடித்தான் வந்திருக்கார் போல…” என்று சொன்னபடி மதுபாலா விலகி சென்றிட, அதற்குள் மனோகரும் கிளம்பியிருந்தான்..

“என்னங்க…” என்று மைதலி வர, ஸ்ரீநிவாஸ் வேகமாய் அவளது கைகளைப் பற்றிக்கொண்டவன் “சாரி மைதிலி…” என்றான் உணர்ந்து..

“என்னது???!!” என்று மைதிலி நம்பமுடியாமல் பார்க்க, “எஸ்.. சாரி.. எல்லாத்துக்கும்..” என்று அதற்குமேல் அவனால் பேசிட முடியாமல் போக, மைதிலியோ கண்களும் மனதும் ஒருநொடியில் நிரம்பிப் போனதும்..

சொல்லப் போனால் ரிஷி பேசியது மதுபாலா, மைதிலி இருவரின் காதுகளிலும் விழுந்ததுதான்.. ஆனால் ஸ்ரீநிவாஸ் வந்து இப்படி மன்னிப்பு கேட்பான் என்று அவள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை..

அங்கே மதுபாலாவோ ரிஷியை தன் முத்தத்தால் நிறப்பிக்கொண்டு இருந்தாள்..

“எப்படி ரிஷி.. எப்படி இப்படியெல்லாம்…” என்று கேட்டபடி அவனைக் கொஞ்சிக்கொண்டு இருக்க,

அவனோ “நீ சொல்வியே காரியக்காரன்னு.. இதுக்குதான் அதெல்லாம்…” என்று சொல்லி கண்ணடிக்க,

“அடப்பாவி…!!!!” என்று முறைத்தவளை,

“ஹா ஹா என்ன சொன்னாலும் நம்புறா டா…” என்று அணைத்தவன் சிரித்தாலும் அவன் சொன்னது முற்றிலும் உண்மை என்று மதுபாலா இந்த கொஞ்ச நாளிலே உணர்ந்திருந்தாள்..

உணர்த்தியிருந்தான் ரிஷிநித்யன்..

 

ஆறு மாதங்களுக்குப் பிறகு…

“அக்கா நீங்க ஏன் நின்னுட்டே இருக்கீங்க.. உட்காருங்க…” என்று மைதிலியை மதுபாலா அமரச் சொல்ல,

“இருக்கட்டும் மது கொஞ்ச நேரம்தானே..” என்றவளோ நின்றுகொண்டே இருக்க, சாம்பசிவம் கல்யாணியிடம் என்ன சொன்னாரோ, மருமகள்களை நோக்கி வந்தவர்,

“மைதிலி உட்கார்.. நின்னுட்டே இருக்கன்னு உங்க மாமா திட்றார்…” என்று நான்கு மாதம் கர்பிணியாய் இருந்த மைதிலியை அன்பாய் கடிந்தவர், 

“அடுத்து நீயும் சீக்கிரம் எங்களை தாத்தா பாட்டி ஆக்கிடு..” என்று மதுபாலாவிடம் சொல்லிவிட்டு செல்ல,

“பார்த்தியா..??!!” என்று ரிஷியை நோக்கி ஜாடையாய் மதுபாலா கண் காட்ட,

“முதல்ல ஸ்ரீனி ஷிப்ட் முடியட்டும் அடுத்து நம்ம…” என்று ரிஷி சொல்ல, “நீ இதையும் காரியாம செய்வடா…” என்று சொல்லி சிரித்தாள் மதுபாலா..

அன்று ட்ரஸ்டின் திறப்புவிழா..

மதுபாலா அம்மாவழி பூர்வீக வீடும் மதுபாலா பெயரில் வாங்கியிருக்க, அப்பாவழி பூர்வீக வீடு தவிர மற்ற சொத்துக்களை எல்லாம் விற்று ட்ரஸ்ட்டாக மாற்ற சற்று நாள் பிடித்ததுதான்..

சென்னையில் ஒரு ட்ரஸ்ட்டும், அதன் கிளையாக கன்னியாகுமரியில் ஒன்றும் வேண்டும் என்று மதுபாலா சொல்லியிருந்தாள்.. அதன்பொருட்டு முதலில் சென்னையில் ட்ரஸ்ட் ஆரம்பிக்கும் ஏற்பாடுகள் எல்லாம் தயாராகின..

“இனி நீங்க பிஸி ஆகிடுவீங்க…” என்று ரிஷி அடிக்கடி அவளைப் பார்த்து சொன்னாலும், அவளுக்கான அத்தனை மாரல் சப்போர்ட்டும் அவன் செய்தான்..

சைலேந்திரனும் தன் பங்காய் எத்தனை உதவிகள் செய்திட வேண்டுமோ அத்தனை செய்தார்.. மதுபாலாவின் அப்பாவின் நண்பரும் வேண்டியதை செய்துகொடுத்தார்.

ஒருசில தொண்டு நிறுவன் அமைப்புகளுக்கு அழைப்புகள் வைக்கப்பட்டு இருக்க, அனைவரும் வந்திருந்தனர். கல்யாணிதான் குத்துவிளக்கு ஏற்றினார்.. சாம்பசிவம் தான் ரிப்பன் வெட்டினார்..  ட்ரஸ்டின் பெயர் பலகையை சைலேந்திரனும், மதுபாலாவின் அப்பாவின் நண்பரும் திறந்துவைத்தனர்.

“மதுமஞ்சரி பாலசண்முகம் ட்ரஸ்ட்…” என்ற பெயர்பலகை அழகாய் மின்னியது..

மதுபாலாவின் கண்கள் அவ்வபோது அந்த பெயர் பலகையை தொட்டு தொட்டு மீண்டது.. இந்த பெயர் பலகையிலாவது அவளது அப்பாவும் அம்மாவும் ஒன்றாய் இருக்கட்டும் என்று எண்ணிக்கொண்டாள்…

அவள் எண்ணத்தை சரியாய் ரிஷி யூக்கிக்க, “மதுபி இன்னிக்கு நம்ம அந்த வீட்ல ஸ்டே பண்ணலாமா..” என்றான்..

“என்ன?? ஏன்???” என்று மதுபாலா புரியாமல் கேட்க,

“உனக்கு இன்னும் கொஞ்சம் புல்பில்ட்டா இருக்கும்..” என்றவனை பெருமிதமாய் பார்த்தவள்,

“எல்லாரும் வந்திருக்கப்போ நம்ம எப்படி அங்க போறது..” என,

“ஒன் டே தானே.. நாளைக்கு கிளம்பி நம்ம வீட்டுக்கு போயிடலாம்..” என்றவன், விஷயத்தை சாம்பசிவத்திடமும் சொல்ல, “அதுக்கென்ன தாராளமா போய் இருந்திட்டு வாங்க…” என்று அனுப்பி வைத்தார்..

ரிஷி மதுபாலா இருவரும், அவள் முன்னிருந்த வீட்டிற்கு வந்திட, ரிஷியின் குடும்பமோ அவர்கள் இப்போது இருக்கும் வீட்டிற்கு சென்றனர்..

அவ்வபோது இங்கு வந்துபோவதால் வீடு சுத்தமாகவே இருக்க, வரும்போதே சமைப்பதற்குத் தேவையான கொஞ்சம் பொருட்களையும் வாங்கி வந்திருந்தனர்.. ஆனால் சமைத்து உண்ணும் எண்ணமெல்லாம் இல்லை.. வீட்டினுள் நுழைந்ததும் நேராய் அறைக்குள் போனவள் அப்படியே அவளின் கட்டிலில் விழ, ரிஷியும் அவளோடு சேர்ந்தே விழுந்தான்..

இருவருமே கொஞ்ச நேரம் பேசிக்கொள்ளவில்லை..

சிறிதுநேரம் கழித்து மதுபாலா “ரிஷி…” என்றழைக்க, “மதுபி…” என்றான் அவனும்…

அவனைத் திரும்பிப் பார்த்தவள், அவன் மார்பின் மீது தலையை வைத்துகொள்ள, “இப்படி ஒரு லைப் நான் எதிர்பார்கக்கல ரிஷி.. சொல்லப்போனா மேரேஜ்.. அதுபத்தின திங்கிங் எல்லாம் இல்லை..

நான் தனியா இருக்கேன்.. எனக்கொரு துணை வேணும் எத்தனை நாள் இப்படியே இருக்க முடியும்னு இந்த ரீசனுக்காக மட்டும் கல்யாணம் பண்ணனும்னா நான் கல்யாணமே பண்ணிக்க கூடாதுன்னு இருந்தேன்..

பட் நீ என் லைப்ல வந்த. அப்பவும்கூட இதெல்லாம் நடக்கும்னு நான் நினைக்கல..  ஐ டோன்ட் க்னோ ஹவ் இட் இஸ் அண்ட் வொய் இட் இஸ்னு.. பட் இட்ஸ் ஹேப்பன்.. அண்ட் நவ் வீ ஆர் டூகெதர்..” என,

“யா வீ ஆர் டூகெதர்..” என்றவன் அவளைத் தன்னோடு இறுக்கிக்கொள்ள அதன்பின்னான நேரம் அவர்களுக்கே உரியதாய் இருக்க, எப்போது உறங்கினார்கள் என்று அவர்களுக்கேத் தெரியாது..

இடையில் ரிஷிக்கு முழிப்பு வர, கைகள் மதுபாலாவை துலாவ, அவளில்லாத கட்டில் மட்டுமே அவன் கைகளில் பட,

“மதுபி…” என்று கண்களை திறந்துபார்க்க, அவள் அறையிலும் இல்லை என்பது புரியவும் வேகமாய் எழுந்து வெளியே வந்தான்..

மதுபாலா சமையல் அறையில் இருப்பது தெரிந்து “இந்நேரம் என்ன செய்றா??” என்று யோசித்தபடி அங்கே வர, அவளோ சூடாய் அந்நேரத்தில் தூள் பஜ்ஜி செய்துகொண்டு இருந்தாள்.

“மதுபி… என்ன பண்ற???” என்று ரிஷி அங்கே போக, “ஸ்டாப் ஸ்டாப் ரிஷி குளிக்காம கிட்சன் குள்ள வரக்கூடாது…” என்று கையில் இருந்த கரண்டியை வைத்து அவனை வெளியே போ என்று சைகை செய்ய,

“தோடா….” என்று அவளைப் பார்த்தவன் அப்போது தான் புரிந்தான் அவளே குளித்துத்தான் வந்திருக்கிறாள் என்று..

மெல்லிய இரவு உடையில், கழுத்து தாலி மட்டும் வெளிய தொங்க, வகிடில் மட்டும் குங்குமம் இட்டு அவளைப் பார்க்கவே ரிஷிக்கு இரண்டு கண்கள் போதாத நிலை..

“ஓய்… என்ன பாக்குற.. போ போ.. நானே எழுப்பிருப்பேன்..” என்றவள்,

ஒரு தட்டில் தூள் பஜ்ஜிகளை போட்டு, சின்ன கிண்ணத்தில் சாஸும் விட்டு, பால்கனி அருகே இருக்கும் சிறு டைனின் டேபிளில் கொண்டு வந்து வைக்க,  வெளியில் லேசாய் சாரல் அடித்துக்கொண்டு இருந்தது..

ரிஷி அப்போதுதான் நேரம் பார்த்தான்..  நள்ளிரவு இரண்டு மணி..

“ரெண்டு மணிக்கு பஜ்ஜி சுட்டவ நீயாதான் இருப்ப…” என்றபடி ரிஷி அமர,

மதுபாலா எதிரே இருந்த இருக்கையில் அமரப்போக “எங்கத் தனியா போற, இங்க வா…” என்றவன் அவளை தன் மடிமீது அமர வைக்க,

“பஜ்ஜி சாப்பிடுறதுக்கு டைம் தேவையில்லை பசிச்சா போதும் ஆர் சாப்பிடனும்னு தோணினா போதும்..” என்றவள் அவனுக்கு ஒரு வாய் ஊட்டிட,

“நோ இப்படியில்லை…” என்றவன் ஒரு சிறு துண்டு பஜ்ஜியை எடுத்து தன் வாயில் வைத்து வெளியே தெரியும் பகுதியை காட்டி “டேக் இட்…” என்று சைகை செய்ய,

“ரிஷி…” என்று அவன் மார்பில் குத்தியவள், சந்தோசமாகவே அவன் சொன்னதை செய்ய,

அடுத்து மதுபாலா அவனைப் போல் செய்ய, இப்படி மாறி மாறி இருவரும் செய்துகொண்டு இருக்க, ஒருநிலையில் வெளியே சிந்திய சாரலும், தட்டில் இருக்கும் பஜ்ஜியும் அவர்களை வேடிக்கைப் பார்த்துகொண்டு இருக்க, மதுபாலா ரிஷியின் காதல் மழையில் நனைந்துகொண்டு இருந்தாள்..  

                                    

 

 

 

 

Advertisement