Advertisement

மது – 19

சாம்பசிவமும், கல்யாணியும் தயாராகி நிற்க, ஸ்ரீநிவாஸ் அவர்கள் அருகே நின்றிருக்க,  மைதிலியும், மதுபாலாவும் தான் இன்னும் வந்த பாடில்லை.  அனைவரும் முதல் நாளே மதுபாலா வீட்டிற்கு வந்திருந்தனர்.. கன்னியாகுமரி செல்வதற்கு. இவர்கள் எல்லாம் ஒருபக்கம் என்றால், ரிஷி முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தான்.

வேறொன்றுமில்லை, அனைவரும் அவனை விட்டு கன்னியாகுமரி செல்வது தான்.. எதோ வீட்டில் சின்ன பிள்ளையை மட்டும் விட்டுவிட்டு அனைவரும் கிளம்புவது போல் கம்மென்று உம்மென்று அமர்ந்திருந்தான். ஆபிஸ் போகவேண்டும் தான், இவர்களை எல்லாம் ரயில் ஏற்றி அனுப்பிவிட்டு போகவேண்டும் என்று இருந்தான்..

மதுபாலா கண்டிப்பாய் சொல்லிவிட்டாள் ‘நீ வராதே…’ என்று..

“ஏன் எல்லாரும் வர்றப்போ நான் வந்தா என்ன??” என்று அப்போதும் கொஞ்சம் கடுப்பாய் கேட்டான் தான்..

“ரிஷி.. ஐ கேன் ஹேண்டில் திஸ்…” என்று மதுபாலா தீர்க்கமாய் சொல்லிட, அதற்குமேல் வாயை மூடிக்கொண்டான்..

ஆனாலும் ஒரு சின்ன கோவம்.. அது உரிமையை பொருத்து வந்தது.. ‘அனைவரும் போகும்போது நான் மட்டும் வந்தால் என்ன..’ என்று.

அவனுக்கு லீவும் இருப்பதாய் தெரியவில்லை.. இவன் சொன்னது போல் வாரக்கடைசியில் எல்லாம் சாம்பசிவம் கன்னியாகுமரி போக எண்ணவில்லை. நாங்கள் எப்போதோ போவோம் நீ உன் வேலையை பார் என்று இருந்துவிட்டார்.

ரிஷியும் மதுபாலாவும் அன்று பீச்சிற்கு சென்று வந்தபின் அவளே அழைத்து கல்யாணியோடு பேசினாள்.

“ஆன்ட்டி நீங்க எந்த டென்சனும் படவேணாம்.. ரிஷி, அங்கிள் பேசினதுக்கு பதில் சொல்லனும்னு அப்படி சொல்லிருக்கான். அவ்வளோதான்…” என,

“என்னவோ மதுபாலா.. மேற்கொண்டு எந்த பிரச்சினையும் இல்லாம இருக்கணும்னு தான் நாங்களும் பாக்குறோம்.. பெத்தவங்க எங்களுக்குத் தெரியாதா கல்யாணத்துக்கு நாள் பார்க்கணும்னு. இவன் அப்படி சொல்லவும் அவர் ரொம்ப சங்கடப் பட்டுட்டார்…” என்று வருந்த,

“ப்ளீஸ் ஆன்ட்டி.. நீங்க எதுவும் பீல் பண்ண வேண்டாம்.. நான் ரிஷிக்கிட்ட பேசிருக்கேன்.. நீங்களும் அடுத்து பேசுறப்போ எப்பவும் போல பேசுங்க.. ஒரே விசயத்தை திரும்பத் திரும்ப பேசுறப்போ எல்லாருக்குமே அது ஒருமாதிரி எரிச்சலா இருக்கும்.. சோ இதை விட்டிடுங்க.. அங்கிள் கிட்டவும் இது பத்தி பேசவேணாம் ஆன்ட்டி…” என்றிட, கல்யாணி மௌனமாய் இருக்கவும்,

“ஆன்ட்டி இன்னும் உங்களுக்கு ரிஷி மேல கோவமா???” என்றாள்..

“கோவம்னு இல்லை மது… இது சொன்னாலும் இப்போ உங்க யாருக்கும் புரியாது.. உங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்க எங்களுக்குத் தெரியாதா? அதை அவன் சொல்றப்போ ஒரு அப்பா அம்மாவா எங்க மனசு சங்கடப்படும் தானே…” என, இப்போது மதுபாலா தான் மௌனமாகவேண்டி இருந்தது..

ஆனாலும் பேசாது இருக்க முடியாதே..

“சாரி ஆன்ட்டி… ரிஷிக்காக நான் சாரி கேட்கிறேன்.. இதுக்கு மேலவும் இதைப் பத்தி பேசினா எல்லாருக்கும் தான் சங்கடம்…” என,

“ஹ்ம்ம் சரி விடு.. நல்லதே நடக்கனும்னு தான் நாங்களும் முயற்சி பண்றோம்.. உங்க நிச்சயம் வீட்ல வச்சதுக்கே சொந்தபந்தம் எல்லாம் ஆயிரம் கேள்வி.. அவன் வேலைன்னு கிளம்பிட்டான்.. நாங்க தானே பதில் சொல்றோம்.. அதெல்லாம் தெரியவேணாமா…” என்றவர்,

“சரி விடு.. கல்யாணம்னு வந்தா அதோட தொட்டு ஒருசில கலகமும் வரத்தான் செய்யும்.. நீ இதெல்லாம் மனசில வச்சுக்காத.. சந்தோசமா இரு…” என,

“நான் எதையும் மனசில வச்சுக்கல ஆன்ட்டி.. நீங்களும் ரிஷிக்கிட்ட இதை பத்தியே பேசாம, சாதாரணமா பேசுங்க போதும்.. கண்டிப்பா இதைப் பத்தி பேசக்கூடாது…” என்று குரலில் ஒரு கண்டிப்புடன் தான் பேசினால் மதுபாலா..

நிஜம்தானே, ஒரு விசயத்தை திரும்ப திரும்ப பேசுகையில், அது ஒருவித எரிச்சலை கொடுக்கும், அமைதியாய் போகவேண்டும் என்று நினைப்பவர்களையும் தூண்டுவது போல் ஆகிவிடும்.. இதையே அனைவரும் ரிஷியிடம் பேசினால் அவன் வேண்டுமென்றே பிடிவாதம் பிடிக்கக்கூடும்,..

இல்லையோ சாம்பசிவம் வேறு எதுவும் வார்த்தைகளை விட்டுவிட்டால், பின் பிரச்னைகள் யாருக்கு அவர்கள் குடும்பத்தினருக்குத் தானே.. ஆக கல்யாணியும் அதோடு சமாதானம் ஆகிட, அவர்கள் பேசி முடிக்கவும் தான் மதுபாலாவிற்கு சைலேந்திரனிடம் இத்தனை நாள் எதுபற்றியும் தான் பேசாமல் இருப்பது சரியில்லை என்று தோன்றியது.

அப்படியொன்றும் அவள் அத்தனை நெருக்கம் காட்டியதில்லை என்றாலும், அவளுக்கான முக்கியமான தருணத்தில் எல்லாம் அவர் வந்து நிற்கிறார் தானே.. ஆக சைலேந்திரனுக்கு அழைத்தாள்..

“சைலேந்தர் ஃப்ரீயா இருக்கீங்களா பேசலாமா??” என்று ஆரம்பிக்கவும்,

“இப்போதான் ரிஷி கால் பண்ணான் மது.. கன்னியாகுமரி போறீங்களாமே??” என்று அவரும் கேட்க,

‘அதுக்குள்ள பேசிட்டானா..’ என்று ரிஷியை எண்ணி ஒரு புன்னகை சிந்தியவள், “எஸ்.. அதுபத்தி பேசத்தான் கூப்பிட்டேன்..” என்றாள்..

“நீ எதுவும் வொரி பண்ணிக்க வேண்டாம் மது.. பெருசா அங்க எந்த டென்சனும் இருக்காது.. ப்ராபர்ட்டீஸ் எல்லாத்துக்கும் லீகல் வாரிசு நீதான். அதெல்லாம் உன் அப்பாவோட பிரன்ட் பேமிலி மெய்ன்டைன் பண்ணிட்டு இருக்காங்க. அது என்னன்னு பார்த்து முடிக்கணும் இல்லையா..  தூரத்து சொந்தம் சில பேர் இருக்காங்க. அங்கக்கிட்ட உங்க கல்யாணம் விஷயம் தெரியப்படுதனும்.. ரிஷியோட அப்பாவும் என்கிட்டே பேசினார்..

நானும் என் சைட்ல விசாரிச்சிட்டேன்.. சோ நோ ப்ராப்ளம்.. நீ தாராளமா போகலாம்… அங்க போய் என்ன பண்றதுன்னு யோசிக்காம இப்போவே என்ன செய்யனும்னு யோசனை பண்ணிட்டுப் போ.. பட் முடிவு எடுக்கிறப்போ ரிஷிக்கிட்டவும், அவங்க வீட்ல இருக்கவங்க கிட்டவும் பேசிட்டு முடிவு எடு..” என,

“ஹ்ம்ம் ஓகே…” என்றவள் மேலும் கொஞ்ச நேரம் பேசிவிட்டு அழைப்பைத் துண்டிக்க, ஒருப்பக்கம் ரிஷியை நினைத்தும், அவனது வீட்டினர் நினைத்தும் மனதிற்கு பெருமையாய் இருந்தது..

நிறை குறை இல்லாத மனிதர்கள் யார்??

ஒரு குடும்பம் என்று வருகையில் எல்லாமே தான் இருக்கும்.. அன்பு, பாசம் இருக்கும் அதே நேரம் கோவங்கள், சண்டைகள், எரிச்சல்கள் அனைத்தும் தான் இருக்கும்..

ஆனால் அனைத்தையும் தாண்டிய ஒரு புரிதலும், பிரச்சனை என்று வந்தால் நன் இருக்கிறேன் என்று காட்டி, சரியான நேரத்தில் தோள் கொடுப்பதும் தான் உறவுகளை பிணைத்து வைக்கின்றன அல்லவா??

மதுபாலாவிற்கு அப்படியான ஒரு குடும்பமாய் தான் அமைந்துவிட்டது ரிஷியின் குடும்பம்…

சைலேந்தர் சொன்னதை வைத்துப் பார்க்கும் போது லீகல் பார்மாலிட்டீஸ் முடிக்கவே கன்னியாகுமரி செல்வதாய் பட்டது அவளுக்கு.. என்றிருந்தாலும் அதெல்லாம் செய்ய வேண்டும்தான். ஆக இப்போது கிளம்பியிருப்பது அவளுக்கு தவறாய் தெரியவில்லை. முன் மனதில் இருந்த சிறு சிறு குழப்பங்கள் கூட இப்போதில்லை..

இதுவரைக்கும் சாம்பசிவத்திடம் என்ன விசயமாய் போகிறோம் என்று கேட்கவில்லை. சொல்வதென்றால் அவரே சொல்வாரே என்று விட்டுவிட்டாள். இருந்தாலும் சைலேந்தர் சொன்னதை யோசித்துப் பார்த்தாள்..

கன்னியாகுமரி.. எப்படி இருக்கும் என்பதுகூட அவளது நினைவடுக்கில் இல்லை.. அப்படியிருக்கையில் அங்கிருக்கும் சொத்துக்கள் மட்டும் அவளது நினைவில் இருக்குமா என்ன?? இருந்தாலும் இப்போது அவளின் அம்மாவின் கடிதம் படிக்கவும், ஒருமுறை அவள் அப்பா அம்மா கொஞ்ச நாட்களேனும் வாழ்ந்த வீட்டினை காண வேண்டும் ஒரு ஆசை..  அது கண்டிப்பாய் சொத்தின் மீதான ஆசை இல்லை..

வெகு நேரம் யோசித்துக்கொண்டே இருந்தவள், அப்படியே திவானில் தூங்கியும் போனாள்..

அடுத்து வந்த நான்கு நாட்களும் அமைதியாகவே கழிந்தது.. ரிஷி வேறெதையும் பேசாது அவளுக்குத் தைரியம் சொல்லும் வகையில் தான் பேசினான்.. அவனது குடும்பத்தினரும் அப்படியே..

ஆனாலும் அவ்வப்போது “ஆர் யூ சியூர்.. நான் வர வேணாமா…” என்று ரிஷி கேட்கையில் ஒருப்பக்கம் சிரிப்பாக கூட இருந்தது..

‘கடைசி நேரம் வரைக்கும் விடுகிறானா பாரேன்…’ என்று.. ‘சரியான விடாகண்டன்…’ என்று நினைத்துகொண்டாள்..

அன்றைய தினம் மாலை அனைவரும் கும்பகோணத்தில் இருந்து வருகிறார்கள் என்றதும், வீட்டை எல்லாம் ஒழுங்கு படுத்தி வைக்க, மாலை ரிஷி வேலை முடிந்து அவள் சொன்ன பொருட்களை எல்லாம் வாங்கிக்கொண்டு வந்தவன்,  அப்போதும் ஆரம்பித்தான்,

“ஏன்.. இப்போ நானும் தானே ஒரு வீட்ல இருக்கேன்.. எல்லாரும் அங்க வந்தா என்ன??” என்று.

அவன் வாங்கி வந்தவைகளை எடுத்து வைத்துகொண்டு இருந்தவள், ரிஷியின் கேள்வியில், நிமிர்ந்து பார்க்க, அவன் பார்த்த பார்வையில் மதுபாலா வேகமாய் சிரித்துவிட்டாள்..

“என்ன என்ன..?? இப்போ நான் என்ன ஜோக் சொல்லிட்டேன்??” என்று ரிஷி கேட்டபடி அவளிடம் வர,

“இப்போ ஏன் கிட்ட வர.. அங்க நின்னே பேசு…” என்று மதுபாலா சொல்ல,

“எங்கவும் நின்னு பேசுவேன்.. ஏன் சிரிச்ச??” என்றான் விடாது..

“யப்பா.. சிரிக்கவும் கூடாதா… இதென்னடா நியாயம்…”

“நியாயம் அநியாயம் எல்லாம் எனக்கு வேண்டாம்.. நீ ஏன் சிரிச்ச மதுபி.. ரீசன் சொல்லு…” என்று ரிஷி இன்னமும் கிட்ட வர,

“அதொண்ணுமில்ல உன் கண்ணுல அப்பட்டமா….” என்று சொன்னவள் பேச்சை நிறுத்தி, அவன் முகத்தை குறும்பாய் பார்க்க,

“அப்பட்டமா???!!!” என்று அவனோ மீதி என்னவென்று தெரியும் ஆவலில் பார்க்க,

“அப்பட்டமா பொறாமை நிரம்பி வழியுது.. அதான்…” என்று சொல்லி மீண்டும் சிரிக்க,

“வாட்?? பொறாமையா?? எனக்கா???” என்று இரண்டு கைகளையும் தன்னை நோக்கி நீட்டியபடி மதுபாலாவைப் பார்த்துக் கேட்க,

“எஸ் உனக்கே தான்.. உன்னை விட்டு, அவங்க எல்லாரும் என்கிட்ட நல்லா மூவ் பண்றது உனக்கு கொஞ்சம் பர்னிங் ஆகுது இங்க..” என்று சொல்லி, அவன் வயிற்றை லேசாய் தட்டி செல்ல,

“ஹோய் ஹோய்.. என்ன அடுக்கடுக்கா என் மேல குற்றச்சாட்டு வைக்கிற…” என்றவன், அவள் கரங்களை பிடித்து இறுக்க,

“ஷ்… எப்போ பார் இப்படி பண்ணாத ரிஷி.. இதென்ன பழக்கம் கையை பிடிச்சு முறுக்குறது…” என்று மதுபாலா முகத்தை சுருக்கினாலும், ரிஷி தன் பிடியைத் தளர்த்தாமல் இருக்க,

“விடு ரிஷி…” என்று மதுபாலா சொல்ல,

“ஃபர்ஸ்ட் நான்தான் மதுபி.. அதுக்கப்புறம் தான் எல்லாரும்…” என்றவனின் குரலிலும் சரி, கண்களிலும் சரி ஒருவித தீவிரம் இருக்க, அவன் இப்படித்தான் சொல்வான் என்று மதுபாலா எதிர்பார்த்தாளோ என்னவோ, அவளது சிரிப்பின் பாவனையே மாறிவிட்டது..

கண்ணில் தெரியும் ஒரு காதல் மின்னலோடு, அவனைப் பார்த்தவள், “இதே போல எப்பவும் இருக்கணும்…” என்றாள் பார்வை முழுதும் அவன் விழிகளில் செலுத்தி,

“இருக்கமாட்டேனா என்ன??” என்று வினா எழுப்பியவன் லேசாய் அவளை அணைத்து இறுக்க,

“ம்ம்ஹும்.. திஸ் இஸ் நாட் குட்.. போ.. போ.. போய் உட்கார்…” என்று அவனிடம் இருந்து விலகப் போக,

“ப்ளீஸ் ப்ளீஸ்.. அப்பப்போதான் மதுபி நமக்குள்ள இப்படி கெமிஸ்ட்ரி எல்லாம் வொர்க் ஆகுது.. அதையேன் ஸ்பாயில் பண்ணனும்…” என்றபடி இன்னும் அவளை ஒட்டி நிற்க,

“ஹ்ம்ம் ஆன்ட்டி சரியாதான் சொன்னாங்க.. கல்யாணத்துக்கு முன்னாடி ஒரே வீட்ல ஸ்டே பண்ணக்கூடாதுன்னு…” என்றவளும், அவனை அணைக்க,

“அம்மா சொல்லலைனாலும் நான் ஸ்டே பண்ணிருக்கமாட்டேன்.. பட் அப்பப்போ இப்படி பண்ணிக்கலாம் தப்பில்ல மதுபி…”  என்று மெதுவாய் அவள் கன்னத்தில் தன் கன்னம் வைத்து கொஞ்ச,

“நீ காரியக்காரன்டா..” என்று சிரித்தவள், அவன் கன்னத்தில் அழுந்த முத்தமிட, பதிலுக்கு அவனும் கொடுக்கும் நேரம், வீட்டின் காலிங் பெல் சத்தம் கேட்டிட,

“எல்லாம் வந்துட்டாங்க போல ரிஷி…” என்று மதுபாலா விலகப் போக, “ஒன் செகன்ட் மதுபி…” என்று ரிஷி விடாது பிடிக்க,

“விளையாடாத ரிஷி…” என்றவள் வேகமாய் கதவை நோக்கி சென்றவள், ஒருநொடி நின்று திரும்பி அவனைப் பார்த்து,

“பொறாமை நிரம்பி வழியுது…” என்று கிண்டலடித்தபடியே, கதவை திறக்க, ரிஷியின் மொத்த குடும்பமும் வந்திருந்தது..

அனைவரையும் வரவேற்று மதுபாலா அவர்களோடு சேர்ந்து வர, கொஞ்சம் தள்ளி நின்றிருந்த ரிஷியை யாரும் எதிர்பார்க்கவில்லை போல,

சாம்பசிவம் ‘நீ என்ன இங்க??’ என்று பார்க்க, கல்யாணியோ அதை கேட்டேவிட்டார்..

‘நீங்கல்லாம் வர்றபோ நான் வரக்கூடாதா…’ என்றுதான் ரிஷிக்கு கேட்கத் தோன்றியது, இருந்தாலும் “இப்போதான் வந்தேன் ம்மா.. நீங்கல்லாம் வர்றீங்க இல்லையா…” என,

“நான்தான் கொஞ்சம் திங்க்ஸ் எல்லாம் வாங்கிட்டு வர சொன்னேன் ஆன்ட்டி…” என்றாள் மதுவும்..

“அதுவும் சரிதான்.. அப்போதான் இவனுக்கும் கொஞ்சம் பொறுப்பு வரும்..” என்று கல்யாணி சொல்லிட,

மைதிலியோ “ரிஷி நீ நிஜமாவே திங்க்ஸ் தான் வாங்கிட்டு வந்தியா.. எங்க எதையும் காணோம்…” என்று வம்பிழுக்க, மதுபாலா சிரிப்பை அடக்கியவள்,

“எல்லாம் கிட்சன்ல இப்போதான் எடுத்து வச்சேன் க்கா…” என்றவள், ‘எல்லாரோடும் பேசு…’ என்று ரிஷிக்கு சைகை செய்துவிட்டு,

“காப்பி எடுத்துட்டு வர்றேன்…” என்று சொல்லி உள்ளே போக, மைதிலியும் அவளோடு போக,

சாம்பசிவம் ரிஷியைப் பார்த்தவர் “ஜாப் எல்லாம் எப்படி போகுது ரிஷி…” என்று கேட்க,

“ஹ்ம்ம் நல்லா போகுதுப்பா..” என்றவன், “நாளைக்கு எப்போ கிளம்பனும்..” என்றார் தெரியாதது போல்..

ஸ்ரீநிவாஸும் அப்பாவோடும் தம்பியோடும் பேச்சில் கலந்துகொள்ள, வெகு நாளைக்குப் பிறகு அவர்கள் குடும்பத்தில் ஒரு இயல்பு நிலை திரும்பி இருப்பது போல் இருந்தது.. கல்யாணி தன் கணவரும், பிள்ளைகளும் சகஜமாய் பேசுவதைப் பார்த்தவர் கொஞ்சம் நேரம் அமைதியாய் இருந்துவிட்டு பின் மருமகள்களைத் தேடி செல்ல, அவரின் முகத்தில் அத்தனை நிம்மதி..

தன் மனதில் தோன்றியதை மதுபாலாவிடமும், மைதிலியிடமும் சொல்ல, அவர்களுமே ஒருவருக்கொருவர் பார்த்து சிரித்துக்கொண்டனர்..

“எல்லாம் இப்படியே இனியும் இருக்கிறது உங்க ரெண்டு பேர் கிட்டயும் தான் இருக்கு..” என்று இருவரின் கரங்களையும் பிடித்து சொல்லிட,

“ஆன்ட்டி.. ரிஷிக்கு நீங்க எல்லாம் அந்த வீட்டுக்கு வரலைன்னு லேசா வருத்தம்…” என்றாள் மதுபாலா..

“ஹா ஹா.. அவ்வளோ யோசிக்க ஆரம்பிச்சிட்டானா.. இப்போ என்ன.. ஊருக்கு போயிட்டு திரும்பி வர்றப்போ அங்க போகலாம் அவ்வளோதானே…” என்றவரும் அவர்களோடு பேச்சில் இறங்க, அடுத்து நேரம் போனது யாருக்கும் தெரியவில்லை..

ரிஷி இரவு உண்டுவிட்டு கிளம்ப மறுநாள் காலை வந்தவன் தான் அனைவரும் கிளம்புகையில் அமைதியாய் இருக்க, மதுபாலாகூட ‘கொஞ்சம் சிரியேன்..’ என்று சொல்லிப்பார்க்க, இவர்கள் அனைவரும் ரயில் ஏறும் வரைக்கும் அப்படியேதான் இருந்தான்..

“ரிஷி நீ இப்படி பண்றதுதான் எனக்கு டென்சன் ஆகுது.. ஐம் குட்.. நானும் ஒரு மைன்ட் செட்ல தான் போறேன்.. சோ என்னை நினைச்சு நீ டென்சன் ஆகவேணாம்..” என்று மதுபாலா சொல்லவும் தான்,

“ஹ்ம்ம் ஓகே மதுபி…” என்று அவளின் கரங்களை அழுத்திப் பிடித்தவன், அனைவருக்கும் கை காட்டி விடைகொடுக்க, கொஞ்ச நேரத்தில் ரயிலும் கிளம்பியது..

அப்போது தான் சாம்பசிவம் மதுபாலாவிடம் பேசினார்.. ஏறக்குறைய சைலேந்திரன் சொன்ன அதே விஷயங்கள் தான்..

“எனக்கு ப்ராபர்ட்டீஸ் பத்தி எதுவும் இன்ட்ரஸ்ட் இல்லை அங்கிள்.. ஜஸ்ட் அந்த வீடு மட்டும் பார்க்கணும்.. அவ்வளோதான்.. மத்தபடி நீங்க சொல்றதுனால வர்றேன்…” என்று தெளிவாய் சொல்லிவிட்டாள்..

கல்யாணி தான் “மதுபாலா உன் அம்மா வேண்டாம் சொன்னா என்ன?? நியாயமா நீதானே அதுக்கெல்லாம் வாரிசு.. எதுன்னாலும் யோசிச்சு முடிவு பண்ணு..” என்று சொல்ல,

“அங்க போய் பார்த்துக்கலாம் ஆன்ட்டி..” என்று விட்டாள்..

ஆனாலும் அவள் மனதில் ஒரு முடிவு இருந்ததுதான்..       

 

Advertisement