Advertisement

மது – 18

“நீ ஏன் ரிஷி இப்படி இருக்க? திஸ் இஸ் நாட் குட் ரிஷி….” என்று ஒருவித ஆற்றாமையில் பேசியது வேறு யாருமல்ல மதுபாலாவே தான்..

ஆனால் அவனோ ‘பேசு… பேசி முடி…’ என்பதுபோல் அமர்ந்திருந்தான்.. அதுவும் வீட்டில் வைத்துக்கூட இந்த பேச்சில்லை.. பீச்சில் வைத்து..

“நான் பேசிட்டே இருக்கேன் நீ இப்படியே பார்த்தா என்ன அர்த்தம்?? இல்ல நான் தெரியாமத்தான் கேட்கிறேன் உனக்கும் எனக்கும் கல்யாணம் பண்ணி வைக்கனும்னு அவங்களுக்குத் தெரியாதா?? அங்கிள் கிட்ட அப்படி பேசிருக்க??” என்று மதுபாலா பேச, ரிஷியோ கடல் அலையை வெறிக்கத் தொடங்கியிருந்தான்..

“உன்கிட்டத் தான் பேசுறேன்..” என்று அவனைத்  தட்டியவள், இன்னும் முறைத்தே இருக்க,

“எல்லாம் கேக்குது. இன்னும் வேறென்ன பேசணும்?? மிச்சம் மீதி எதுவும் இருந்தா அதையும் சேர்த்தே பேசிடு… மொத்தமா பதில் சொல்றேன்…” என்றவன் கொஞ்சம் தெனாவட்டாகவே பார்க்க,

“திமிர் கூடிப்போச்சு உனக்கு.. நீ சுவிஸ்லயே இருன்னு விட்டிருக்கணும்.. எப்படியோ போன்னு இருந்திருக்கணும்…” என்றாள் கோவமாய்.

“ஓகே… இப்போக்கூட நீ சொல்லு, நான் சுவிஸ் போறேன்.. பட் ஒன் திங்.. நான் எங்க போனாலும் எப்படி இருந்தாலும், நீ தான் எனக்கு.. நான் தான் உனக்கு..” என்றான் ஒற்றை விரலை நீட்டி..

கோவமாய் பேசிக்கொண்டு இருப்பவளிடம் இப்படிப் பேசினால், அவளின் கோவம் தான் தாக்கு பிடிக்குமா என்ன?? இருந்தாலும் இழுத்துப் பிடித்தாள்..

“நீ பேசுறது எல்லாம் நம்ம ரெண்டு பேருக்கு மட்டும்னா ஓகே ரிஷி.. பட் ஃபேமிலின்னு வர்றபோ எல்லாத்தையும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிட்டுத்தான் போகணும்.. நம்ம விருப்பத்துக்கே எல்லாம் நடக்காது..”

“கண்டிப்பா.. அது எனக்கும் தெரியும்.. பட் இப்போ என்ன தப்பா சொல்லிட்டேன்.. கன்னியாகுமரி நானும் வர்றேன் சொன்னேன்.. அது தப்பா..  அப்பா அம்மா அண்ணா அண்ணி எல்லாம் வர்றபோ நானும் வர்றதுல என்ன தப்பிருக்கு..

அங்க போய் யாரைப் பார்க்க போறாங்கத் தெரியாது.. உனக்கு எந்த மாதிரி மைன்ட் செட் இருக்கும்னு உனக்கே இப்போ சொல்ல முடியாது. சோ அப்படியான ஒரு நேரத்துல நான் உன்கூட இருக்கணும்னு நினைக்கிறேன்.. அது தப்பா??” என்று கேட்ட ரிஷியின் பேச்சிலும் கொஞ்சம் காட்டம் எட்டிப்பார்க்க,

இதற்கு என்ன பதில் சொல்வது என்பதுபோல் பார்த்தாள் மதுபாலா. ரிஷியின் எதிர்பார்ப்பில் தவறில்லை தான்.. ஆனால் அவளுக்கோ தன்னை முன்னிட்டு அப்பா மகன் இருவருக்கும் எவ்வித பிரச்சனையும் வந்துவிடக்கூடாது என்ற ஒரு பயம்..

ரிஷி அவன் குடும்பத்தோடு இணைவதற்கு வேண்டுமானால் மதுபாலா காரணமாய் இருக்கலாம்.. ஆனால் எக்காரணம் கொண்டும் அவர்களுள் ஒரு பிணக்கு வந்திட அவள் காரணமாய் இருந்திட விரும்பவில்லை.. ரிஷியோ அவன் சொல்வதே சரி என்றிருக்க இவளுக்கோ டென்சன் ஏறியது..

“என்ன சைலன்ட் ஆகிட்ட?? வீக்கென்ட் போல ப்ளான் பண்ணுங்க நானும் வர்றேன் சொன்னேன்.. உடனே கல்யாணம் ஆகாம அது இதுன்னு சொல்லவும் தான் அப்போ கல்யாணத்துக்கு நாள் பாருங்கன்னு சொன்னேன் இதுல என்ன தப்பிருக்கு…” என்று ரிஷி இரு கைகளையும் விரித்துக் கேட்க,

“பேசாம நீயும் லா காலேஜ் போயிருக்கலாம்..” என்று மதுபாலா சொல்லவும்,

“புரியுதுல.. நான் சொன்னதில தப்பில்லைன்னு.. இதேது வேற ரீசன் சொல்லிருந்தா ஒருவேளை நான் சரின்னு கூட சொல்லிருக்கலாம்.. ஏன் இப்போ நீயும் நானும் தான் பேசிட்டு இருக்கோம்.. இன்னும் கல்யாணம் ஆகலைத்தான்.. அதுக்காக நம்ம லிமிட்ஸ் தெரியாம இருக்கோமா என்ன??? என்ன மதுபி…” என்று அலட்சியமாய் தோளைக் குலுக்கியவன்,

“இங்க பார்.. நான் உன்கூட வர்றதுக்கும், பேசுறதுக்கும், பாக்குறதுக்கும் கல்யாணம்கிற அப்ரூவல் வேணும்னா அப்போ இந்த செக்கன்ட் கூட ஐம் ரெடி டூ மேரி.. சொல்லு.. இப்போ வர்றியா, என்ன கோவில் பக்கத்துல இருக்கோ அங்க வச்சு தாலி கட்றேன்….” என்று ரிஷி எழ, மதுபாலாவிற்கு பக்கென்று இருந்தது.

என்னதிது.. இப்படியெல்லாம் பேசுகிறான்.. கல்யாணம்.. தாலி அதெல்லாம் சும்மாவா போகிற போக்கில் கட்டிவிட்டுப் போவதா என்று தோன்ற, அவனோ எழுந்து நிற்க,

“நீ.. நீ.. நீ முதல்ல உட்கார் ரிஷி…” என்று மதுபாலா அவன் கரங்களை பிடித்து இழுக்க,

“நோ நோ.. டோன்ட் டச் மீ.. நமக்கு இன்னும் மேரேஜ் ஆகலை.. தொடக்கூடாது தப்பு…” என்று ரிஷி வேண்டுமென்றே பின்வாங்க, அவன் சொன்ன விதத்தில் அவளுக்கு சிரிப்பு கூட வந்திட்டது..

“ஏய் ரொம்ப பண்ற நீ.. உட்கார்…” என்று சிரிப்பை அடக்கி மதுபாலா சொல்ல,

“யாரு?? நானா?? நான் ரொம்ப பண்றேனா?? நீங்க எல்லாம் தான் ரொம்ப பண்றீங்க…” என்றவன் மீண்டும் மணலில் அமர,

“கொஞ்சம் பொறுத்துப் போறதுனால என்ன ரிஷி.. ஆன்ட்டி கூட ஓகே.. பட் அங்கிள் இந்தளவுக்கு மாறினதே பெரியவிசயம்.. சோ நீ கொஞ்சம் அமைதியா ஹேண்டில் பண்ணா என்ன??” என்று மதுபாலா தணிந்தே பேச,

“சில விசயங்கள்ல மட்டும் தான் மதுபி அப்படி இருக்க முடியும்.. எல்லா விசயத்தையும் அப்படியே விட்டு விட்டு போனதுனால தான் ஒரேதா வீட்டை விட்டு போகணும்னு எண்ணமே வந்தது..” என்றவன் கொஞ்ச நேரம் கடலை வெறித்துவிட்டு

“உனக்கு புரியுமா தெரியலை மதுபி.. இருபத்தி எழு வருஷம்.. இதுவரைக்கும் நான் ஆசைப்பட்டது எதுவுமே எனக்கு கிடைக்கல.. உன்னைத் தவிர.. சோ நீ என்னைப் பார்க்கிறது முன்னாடி எப்படி இருந்தியோ அதுபோலவே எப்பவும் இருக்கணும்னு நினைக்கிறேன்.. எனக்காக எனக்காகன்னு நீ எதுவும் அட்ஜஸ்ட் பண்ணிட்டு போகவேண்டியதில்லை மதுபி…” என,

“லைப் அது இல்ல ரிஷி..” என்று வேகமாய் சொல்லி முடித்திருந்தாள் மதுபாலா.

அவளது முகமே அப்படி மாறியிருந்தது.. இத்தனை நேரம் இருந்த கோவமோ, இல்லை அதன்பின் அவனை சமாதானம் செய்யவேண்டும் என்று வந்த சாந்தமோ எதுவுமே அவளிடம் இல்லை..

“என்ன சொல்ற மதுபி….” என்று ரிஷி கேட்க,

“எஸ்.. லைப்ல சில பல அட்ஜஸ்ட்மெண்ட்ஸ் இருக்கணும் ரிஷி.. அதுவும் ஃபேமிலின்னு வர்றபோ. கண்டிப்பா இருக்கணும். அப்போதான் உறவுகள் நீடிக்கும்.. இல்லையா.. என்னப்போல.. என் அம்மாபோல தனியா தான் நிக்கணும்…” என்று சொல்கையில் மதுபாலாவின் முகம் அப்படியே சிவந்திட,

“மதுபி….” என்று அதிர்ந்து போய் பார்த்தான் ரிஷிநித்யன்..

மதுபாலா கொஞ்ச நேரம் பேசாமல் அமைதியாய் இருந்தவள், ரிஷியை நேருக்கு நேர் காணாமல் பார்வையை வேறெங்கோ பதித்து, “எதுக்காக என் அம்மாவும் அப்பாவும் பிரிஞ்சாங்கன்னு உனக்குத் தெரியுமா ரிஷி…???” என்று கேட்க,

‘இப்போ எதுக்கு இது…’ என்ற பார்வையுடன், “ஹ்ம்ம் சைலேந்திரன் சொன்னார்…” என்றான் பொதுவாய்..

“அது பொய்…” என்றாள் வேகமாய்.

“வாட்???”

“எஸ் ரிஷி.. அது பொய்…”

“அப்போ சைலேந்திரன் பொய் சொன்னாரா???” என்றான் ரிஷி வேகமாய்..

“நோ நோ.. அவருக்குத் தெரிஞ்ச உண்மையை சொன்னார். சொல்லபோனா இதுதான் எல்லாருக்கும் தெரியும்.. இப்போகூட ஊர்லே போய் அப்பா அம்மாக்கு தெரிஞ்சவங்க யாரைக்கேட்டாலும் இதைத்தான் சொல்வாங்களா இருக்கும். பட் இந்த உண்மைக்குள்ள ஒளிஞ்சிருக்க உண்மை வேற ரிஷி…” என்று மதுபாலா பீடிகை போட்டு சொல்ல,

“ம்ம்ச் மதுபி. கொஞ்சம் புரியுற போல சொல்லு…” என்றான் ரிஷி..

“அப்பா அம்மா பிரிஞ்சதுக்கு அப்பா மட்டும் காரணமில்லை.. அம்மாவும் தான் காரணம்.. அவங்க லைப்ல லவ் நிறைய இருந்திருக்கு.. பட் நீ சொன்னியே  அட்ஜஸ்ட்மன்ட்ஸ் அது இல்லை.. எனக்காக நீ அட்ஜஸ்ட் பண்ணிக்கத் தேவையில்லைன்னு சொல்றப்போ ஆட்டோமெட்டிக்கா உனக்காக நானும் அட்ஜஸ்ட் பணிக்கத் தேவையில்லைன்னு ஒரு எண்ணம் வந்திடும்…

அதுதான் என் பேரன்ட்ஸ் லைப்லயும் நடந்திருக்கு.. அப்பா அம்மா லவ் மேரேஜ். இருபத்தி அஞ்சு வருஷம் முன்னாடி லவ் மேரேஜ் அத்தனை ஈசியில்லை தானே.. பட் ரொம்ப ஸ்ட்ராங்கா இருந்திருக்காங்க.. பைனலி ரெண்டு ஃபேமிலியும் ஓகே சொல்லி கல்யாணம் நடந்திருக்கு..

அப்பாவோட பேரன்ட்ஸ் ஏஜ்ட் பெர்சன்ஸ்.. ஆர்தோடக்ஸ் ஆல்சோ.. சோ அம்மாவுக்கும் அவங்களுக்கும் அப்பப்போ கருத்து வேறுபாடுகள்..  

அம்மா கன்சீவ் ஆகி கொஞ்ச நாள்ல அப்பாவோட அப்பா இறந்திட்டாங்க. சோ வழக்கமா சொல்றதுதான் ‘நீ உண்டான வேளை.. நேரம் சரில்லை.. என் புருஷன் போயிட்டார்’னு  அப்பாவோட அம்மா தினமும் அம்மாக்கூட சண்டை.. அப்பா எனக்காக கொஞ்சம் பொறுத்துக்கோ சொல்லிருக்கார்.  நடுவில டெலிவரிக்காக அம்மா அவங்க அம்மா வீட்டுக்கு வந்திட்டாங்க..  கிளம்பும்போது கூட வீட்ல அப்போ சண்டைதான் போல..

அடுத்து என்னையோ அம்மாவையோ பார்க்க அப்பாவோட அம்மா வரலை.. அப்பா மட்டும் தான் வந்திருக்கார்.. வீட்டுக்கு கூப்பிட்டதுக்கு அம்மா, உங்க அம்மா வந்து கூப்பிடாம என்னால வர முடியாது சொல்லிருக்காங்க.. அப்பா போய் அவங்கம்மாக்கிட்ட பேசினதுக்கு, அவங்களும் பிடிவாதமா இருந்திருக்காங்க..

முடிவா அப்பா, ‘நான் சொல்றேன்ல.. எனக்காக வரக்கூடாதா.. எனக்காக கொஞ்சம் பொறுத்துக்கோ.. நீ குழந்தையோட வீட்டுக்கு வந்தா, எல்லாம் சரியா போகும்.. இதெல்லாம் சின்ன சின்ன பிரச்னைங்க தான். எல்லார் வீட்லயும் இருக்கிறது தான்.. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிட்டா எல்லாமே சரியாகிடும்’னு எவ்வளவோ அம்மாக்கிட்ட சொல்லிருக்கார்..

பட் அம்மா.. ‘நான் உங்க வீட்டு மருமக தானே.. அப்போ என்னை முழு மரியாதையோட தானே கூப்பிடனும்.. முறைப்படி உங்க அம்மா வந்து கூப்பிட்டா தான் வருவேன் இல்லையா, நாங்க வேணும்னா நீங்க என் கூட இங்கயே இருந்திடுங்க’ன்னு பிடிவாதம் பண்ணிருக்காங்க..

ஒருபக்கம் அப்பாவுக்கு வயசான அம்மா, இன்னொருப்பக்கம் நாங்க. யாருக்குமே சொல்ல முடியலை… யாரையும் விடவும் முடியலை.. நாளுக்கு நாள் சண்டை.. கோபம்.. பிடிவாதம்.. லாஸ்ட்ல அப்பா ‘எனக்காகன்னு கூட நீ எதுவும் பார்க்கலை பின்ன ஏன் உனக்காகன்னு நான் எதுவும் பார்க்கனும்’னு ஒரு பிடிவாதத்துல தான் அவங்க அக்கா பொண்ணயே கல்யாணம் பண்ணிருக்கார்.. இது அம்மாக்கு பெரிய ஷாக்.. அடுத்து தான் பிடிவாதமா எதுவுமே வேண்டாம்னு சொல்லி அம்மா பிரிஞ்சிருக்காங்க..

அப்பாக்காக அம்மா கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிருக்கலாம் ஆர் அப்பாவோட அம்மா பையனோட வாழ்க்கைன்னு கொஞ்சம் விட்டுக்கொடுத்து போயிருக்கலாம். இல்லை அப்பாவாது ஓரளவு ரெண்டு பேரையும் சமாளிக்க பழகிருக்கலாம். ஆனா எதுவுமே.. யாருமே அட்ஜஸ்ட் பண்ணாம லாஸ்ட்ல எப்படி எப்படியோ போய் இப்போ இப்படி வந்து நிக்கிது..

ஒரு கோபத்துல வேகத்துல அப்பா இன்னொரு கல்யாணம் பண்ணாலும் அடுத்தும் அவர் லைப் ஒண்ணும் நல்லா இல்லை போல.. மறுபடி சண்டை கோபம்.. என் அம்மாவோட அம்மா இறக்கவும் தான் அம்மா என்னை கூட்டிட்டு இங்க வந்திருக்காங்க.. அதுக்கப்புறம் ரொம்ப நாள் கழிச்சு அப்பா இறந்ததா நியூஸ் மட்டும் வந்தது அவ்வளோதான்..” என்று மதுபாலா சொல்லி முடிக்கையில், ரிஷிக்கு சுற்றி இருக்கும் அனைத்துமே அமைதியானது போல் ஒரு நிலை..  

மதுபாலாவும் எதுவும் அடுத்து பேசவில்லை. ரிஷியும் அடுத்து எதுவும் பேசவில்லை.. அவனுக்கு இதெல்லாம் கேட்டு கிரகித்துக்கொள்ள நேரம் பிடித்தது.. மதுபாலா சொல்கையில் சாதாரணமாய் சொல்வது போல் தான் இருந்தது. ஆனால் இதெல்லாம் எத்தனை பெரிய விஷயங்கள் என்று ஆர அமர யோசித்தால் தான் தெரியும்..

அன்று பெரியவர்கள் செய்த தவறு, இன்று இரண்டு குடும்பத்திலும் யாருமே இல்லாது போய், மதுபாலா மட்டும் தனித்து நிற்கும் நிலை.. அன்று யாரேனும் ஒருவர் விட்டுக்கொடுத்து போயிருந்தால் இன்று மதுபாலா இப்படியிருந்திருக்க மாட்டாள்.. முதலில் இங்கேயே இருந்திருக்க மாட்டாள்.

ரிஷி வெகுநேரம் பேசாமல் அமைதியாய் இருப்பதைக் கண்டு “என்ன ரிஷி.. ஃபீல் பண்றியா??” என்று மதுபாலா கேட்க,

“இது.. இதெல்லாம் எப்படி உனக்குத் தெரியும் மதுபி..??” என்றான் இன்னமும் அதிர்ச்சித்  தெளியாமல்.. அவனுக்கான பதிலையும் மதுபாலா சொன்னாள்.

ஸ்ரீநிவாஸ், மைதிலி வந்த இரண்டு நாட்களில் கிளம்பிட, கிளம்புகையில் ஸ்ரீநிவாஸ் “அப்பாக்கிட்ட பேசிட்டு எப்போ கன்னியாகுமரி போறதுன்னு சொல்றேன் மதுபாலா..” என்றவன் கொஞ்சம் தயங்கி

“உனக்கு எந்த சங்கடமும் இல்லையே…” என,  மைதிலிக்குக்கூட கணவன் கேட்ட கேள்வி கொஞ்சம் ஆச்சர்யம் தான். பிறரின் சங்கடங்கள், சௌகரியங்கள் பற்றி கவலைப்படும் ஆள் அவனில்லை என்பது மைதிலிக்கு நன்றாவே தெரியுமே.

“ரிஷி சொன்னதும் கொஞ்சம் ஒருமாதிரி.. டென்சனா.. குழப்பமா இருந்தது நிஜம் தான்ணா.. பட்.. நான் தனியா போகப் போறதில்லையே. நீங்க எல்லாம் இருக்கீங்க தானே. சோ நோ ப்ராப்ளம்..” என்று தோளைக் குழுக்கி, தன் ஜீன்ஸ் பாக்கெட்டில் கைவிட்டபடி சொல்ல,

“ஹ்ம்ம் குட்.. ரிஷிதான் எல்லாத்தையும் க்ரிட்டிக்கள் பண்றான் நினைக்கிறேன்.. கொஞ்சம் ஃப்ரீ ஆகவும் அவன்கிட்ட பேசு மதுபாலா…” என்றவன், முன்னே நடக்க,

“என்னாச்சுக்கா???” என்று கேட்டபடி மைதிலியோடு நடந்தாள் மதுபாலா..

“தெரியலை மது.. ரெண்டு நாளைக்கு முன்ன  ரிஷி மாமாக்கூட சண்டை போல.. காலைல மாமா இவர்ட்ட பேசிருக்கார்.. இப்போ வரைக்கும் எனக்கும் தெரியாது.. ஊருக்கு போனதும் அத்தைக்கிட்ட கேட்டு சொல்றேன்.. ஆனா நீ இப்போவே ரிஷியை எதுவும் கேட்காத..” என்று சொல்லி மைதிலி காரில் ஏறிட,

இருவர் சொன்னதற்கும் பொதுவாய், சம்மதமாய் தலையைசைத்து, அவளது கையையும் அசைத்து விடைகொடுத்தாள் மதுபாலா.

இப்போதுவரைகும் ரிஷியும் எதுவும் சொல்லாததால், சரி அவனே சொல்லட்டும் நாமாக எதுவும் கேட்டு அது இன்னும் பெரிதாகவேண்டாம் என்று மதுபாலா இப்போதைக்கு அவ்விசயத்தை ஒதுக்கிவிட்டு, உடனே வீட்டிற்கு செல்ல பிடிக்காமல், அந்த அப்பார்மென்ட் காம்பவுண்டினுள் சிறுவர்கள் விளையாடவென இருக்கும் பார்க்கில் கொஞ்ச நேரம் அமர்ந்துவிட்டு போகலாம் என்று மதுபாலா செல்ல, அவளைத் தெரிந்தவர்கள் ஒருசிலர் புன்னகைத்துச் சென்றனர்.

பெரிதாய் இங்கே யாரோடும் பழக்கம் இல்லை.. பல வருடங்களாக இருப்பதால், ஒருசிலர் பார்த்தால் புன்னகைப்பர்.. எப்போதாவது ஒருசிலர் ஹாய் ஹலோ சொல்லிச் செல்வர்.. இவளும் அதுபோலவே.. யாரோடும் உறவுகொண்டாட இதுநாள் வரைக்கும் எண்ணமில்லை.. இன்று அவளுக்கென்று உறவுகள் வரவும் வேறெதுவும் தேவை என்றும் தோன்றவில்லை..

கொஞ்சம் நேரம் அந்த பார்க்கில் மதுபாலா அமர்ந்திருக்க, குழந்தைகள் உற்சாகமாய் விளையாடிக்கொண்டு இருக்க, சற்று தள்ளி அவர்களின் அம்மாக்கள் குழுவாகவோ இல்லை ஒருவர் இருவராகவோ அரட்டையிலும், இல்லை அலைபேசி பேச்சுக்களிலும் இருக்க, அனைத்தையும் ஒருவித புன்னகையோடு மதுபாலா பார்த்துக்கொண்டு இருந்தாள்.

அவளது வாழ்வும் இனி இப்படித்தான் இருக்குமோ. கணவன்.. அவன் குடும்பம். பிள்ளைகள். பின் அவர்களைத் தொட்டு அவளது வாழ்வு. அழகாய் இனிய கற்பனைகளும் காட்சிகளும் அவள் கண் முன்னே விரிய, மதுபாலாவின் இதழில் ஒட்டிய புன்னகை இன்னும் விரிந்து, மதுவின் அம்மா இறப்பதற்கு கொஞ்ச நாட்களுக்கு முன் அவளிடம் சொன்னது நினைவில் வந்தது.

“மது. என் லைப் வச்சு, நீ யாரையும் எடை போடாத.. உனக்குன்னு ஒரு வாழ்க்கை நீ கண்டிப்பா அமைச்சுக்கணும். உனக்கு பிடிச்சதுபோல அமைச்சாலும் சரி.. இல்லை உன்னை பிடிச்சு யாரும் வந்தாலும் சரி.. பட் கண்டிப்பா நீ தனியா இருக்கணும்னு நினைச்சிடாத.. உனக்கும் ஒரு துணை வேணும். அது ஒரு குடும்பமா இருந்தா நான் இன்னும் ரொம்ப ரொம்ப சந்தோசமா இருப்பேன்..” என்று அவளின் கரங்களைப் பற்றிக்கொண்டு கொஞ்சம் இதமாய் தட்டிக்கொண்டு சொன்னார்..

இதே வார்த்தைகளைத் தான் ரிஷியும் சொன்னான் .. ஆனால் வேறு விதமாய்.. அவன் சுவிஸ் கிளம்பும் முன்னே சொன்னான்..

‘கண்டிப்பா உனக்கொரு சேஞ் வேணும். உனக்குன்னு ஒரு பேமிலி வேணும். நீ இப்படியே இருக்கணும்னு மட்டும் நினைக்காத…’ என்று இப்படி பல பல சொன்னான்.

ஆகமொத்தம் அவளின் அம்மா சொன்னதும், ரிஷி சொன்னதும் ஒன்றே.. கடைசியில், அவளுக்குப் பிடித்தவனாகவும், அவளைப் பிடித்தவனாகவும் ரிஷியே  பிடிவாதமாய் வந்திட, மதுபாலாவின் மனத்தில் இத்தனை நாட்கள் இல்லாமல், குடும்பம், குழந்தை என்று ஒரு எண்ணம்.

மதுவின் அம்மா மகளது திருமணத்திற்கு என்றுகூட பணம் போட்டு வைத்திருந்தார் தனியே. நகைகள் எல்லாம் தனியே லாக்கரில் இருந்தது. இன்று வரைக்கும் அதெல்லாம் அவள் போட்டுக்கூட பார்த்ததில்லை.. அத்தனை ஏன் அந்த நகைப் பெட்டியை திறந்துகூட பார்த்ததில்லை.

“உன் கல்யாணத்துக்கு இது..” என்றும் சொல்வார்..

“நான் கல்யாணமே பண்ணிக்கலைன்னா???” என்று மதுபாலா கேட்டால்,

“அது நடக்கனும்னு இருந்தா கண்டிப்பா நடக்கும்.. அப்போ இந்த பணம், நகை  யூஸ் பண்ணு.. இல்லை புதுசு வேணும்னா மாத்தி வங்கிக்கோ..” என்று சொல்லியிருந்தார்.

இன்று அதெல்லாம் நினைவில் வந்தது. இதுநாள் வரைக்கும் அவளுக்கென்று நகைகள் அது இதென்று வாங்கவில்லை. ஆசையாய் கார் மட்டும் வாங்கிக்கொண்டாள். மதுபாலா, வசதியானவள்.. அழகானவள்.. ஆனால் அவளது வாழ்க்கையை அவளே எளிமையானதாய் ஆக்கிக்கொண்டாள்..

வசதியான வீடு, வெளியே சென்றுவர கார்.. தேவைக்கும் மேலாய் பணம்.. ஆக எல்லாமே அவளது விருப்பம் என்றிருக்க, விருப்பங்களை கம்மியாக்கிவிட்டிருந்தாள். இப்போது ரிஷி வந்தபிறகோ வித விதமாய் விருப்பங்களும் தோன்றலாயின,    

அதுவும் இப்போது  ரகம் ரகமாய்.. வித விதமாய் சேலை கட்டிக்கொள்ள வேண்டும் என்று. நகைகள் போட்டுக்கொள்ள வேண்டும் என்று. ரிஷிக்கு அழகு காட்ட வேண்டும் என்று எண்ணங்கள் முளைத்தன. ஒருவேளை இவ்விதமான ஆசைகள் அவளுக்கு மைதிலியைப் பார்த்ததினால் கூட வந்திருக்கலாம்.

‘அவருக்கு இப்படி ஷிபான்ல உடுத்தினா பிடிக்கும்..’ என்று மைதிலி சொல்கையில், சிரித்தபடி கேட்டாள், ஆனால் இப்போது நினைக்கையில் ரிஷிக்கு என்ன பிடிக்கும் என்று தோன்றியது??

திடீரென்று ஒரு எண்ணம், லாக்கரில் இருக்கும் நகைகளை எல்லாம் எடுத்து, ஒருநாள் அவன் முன்னே அலங்காரம் செய்து நிற்க வேண்டும் என்று. அவளுக்கே சிரிப்பாய் இருந்தது இருந்தாலும் ஆசையாகவும் இருந்தது.. நினைத்தது போலவே மறுநாள் பேங்க் சென்று பல வருடங்கள் கழிந்து அந்த நகைப் பெட்டியை தூக்கிக்கொண்டு வந்தாள்..

ஆனால் அந்த பெட்டிக்குள்ளே நகை மட்டுமில்லை.. அவள் அம்மாவின் கடிதமும் ஒன்று இருந்தது..

‘மை டியர் மதுபாலா…’ என்று ஆரம்பித்து, மதுபாலா ரிஷியிடம் கூறிய அனைத்தும் அவளின் அம்மாவின் கையெழுத்து மூலமாகவும் அவரின் பார்வையில் விரிந்த காட்சிகளாகவும் எழுதப்பட்டு இருக்க, முடிவில்

‘நீ இந்த ஜ்வெல் பாக்ஸ் ஓப்பன் பண்றப்போ கண்டிப்பா உன் லைப்ல பெரிய சேஞ் இருக்கும்னு எனக்குத் தெரியும் மதும்மா.. சோ கண்டிப்பா  இதெல்லாம் நீ தெரிஞ்சுக்கணும்னு தான் இந்த லெட்டர்.. ஐ க்னோ.. உன்னை நான் ரொம்ப சரியா வளர்த்திருக்கேன்.. எப்பவுமே என்னோட லைப்ப ரோல் மாடலா வச்சு நீ ஒரு வாழ்க்கை வாழ்ந்திடக்கூடாது.. என்னையும் உன் ரோல் மாடலா நினைச்சிடக்கூடாது..

இந்த உண்மை நீ உன்னோட வச்சிட்டாலும் சரி.. இல்லை உனக்கு க்ளோஸான பெர்சன் கிட்ட ஷேர் பண்ணாலும் சரி… ரொம்ப லேட்டாத்தான் நான் உணர்ந்தேன் உனக்கு நல்ல அம்மாவா இருந்த நான் நல்ல மனைவியா, நல்ல மருமகளா இருக்கலைன்னு. நான் சொல்லி உனக்குத் தெரிய வேண்டியது இல்லை. ஆல் தி பெஸ்ட் மை டியர் மது..’ என்று முடித்திருக்க, மதுபாலா அப்படியே உறைந்து போய்தான் அமர்ந்திருந்தாள்..

இத்தனை வருடங்கள் நினைத்தது ஒன்று, பின் அப்படியில்லை வேறு கதை என்று ரிஷி வீட்டினர் விசாரித்து சொன்னது ஒன்று. ஆனால் இப்போது அது எதுவுமே இல்லை இது தான் நிஜம் என்று மதுவின் அம்மா எழுதி வைத்திருப்பது ஒன்று அவளுக்கு எப்படியிருக்கும்..

ஜீரணித்துக்கொள்ளவே முடியவில்லை.. உடனே ரிஷியிடம் அழைத்து பேச வேண்டும் என்றிருக்க, அவனோ அப்போது தான் புது வீட்டிற்கு சென்றிருந்தான்.. மைதிலி, ஸ்ரீநிவாஸ் இருக்கையிலேயே பால் காய்ச்சி இருந்தனர்.

ஆக அவளுக்குத் தன்னை நிதானித்துக்கொள்ளவே நேரம் பிடிக்க, அவனிடம் இப்போது எதுவும் சொல்லக்கூடாது என்று இருக்க, மைதிலி அழைத்து ரிஷிக்கும், சாம்பசிவத்திற்கு என்ன சண்டை என்று சொல்லிவிட, அதன் பொருட்டு தான் இப்போது இருவரும் பீச்சில் பேச்சு வார்த்தை நடத்துவது..

“ஐம் ரியலி சாரி மதுபி.. நான் இதை எக்ஸ்பெக்ட் பண்ணவேயில்லை…” என்று ரிஷி வருந்தி சொல்ல,

“ஹேய்.. ரிஷி.. கம்மான் சியர் அப்.. இதை நீ பீல் பண்ணனும்னு சொல்லலை.. கொஞ்சம் நீயும் எல்லாம் புரிஞ்சுக்கோன்னு சொல்லத்தான் சொன்னேன்.. அதுவுமில்லாம, இதை உன்கிட்ட மட்டும் தான் ஷேர் பண்ண முடியும்…” என்று சொல்லி ரிஷியின் கரங்களை பற்றிக்கொள்ள, அவனோ இறுக்கமாய் பிணைத்துக் கொண்டான்.

மதுபாலா ரிஷியை தெளிவு படுத்த இதெல்லாம் சொன்னால், அவனோ மனதில் பாரம் ஏறியது போல் உணர்ந்தான்.. இருவரும் அப்படியே இருக்க, நேரம் ஆவது உணர்ந்து,

“ரிஷி கிளம்பலாமா??” என்று மதுபாலா கேட்க,

“ஹ்ம்ம் போலாம் மதுபி.. எனக்கு கொஞ்சம் மூட் அவுட்..” என,

“அடடா… ஒண்ணு டென்சன் இல்லையா ஃபீலிங்க்ஸ்..” என்று மதுபாலா கிண்டலாய் சொல்ல,

“போ டி…” என்று அவள் தோளைப் பிடித்துத் தள்ளியவன், “நீ கிளம்பு மதுபி.. எனக்கு கொஞ்சம் தனியா இருக்கணும் போல இருக்கு…” என்று சொல்ல, அவளுக்கும் அவன் உணர்வுகள் புரிந்து,

“ஓகே.. பட் ரொம்ப லேட் பண்ணாம கிளம்பிப் போ..” என்று எழ,

“அடிப்பாவி சொன்னதும் கிளம்பிட்ட, நேரம்.. அவனவன் பாரு.. எப்படி என்ஜாய் பண்ணிட்டு, கிஸ் பண்ணிட்டு உட்காந்திருக்கான், லாஸ்ட்ல இதுக்குதான் பீச்சுக்கு வந்தோம் போலே…” என்று ரிஷியும் எழ,

“ஹா ஹா.. நமக்கு இன்னும் கல்யாணம் ஆகலை பாஸ்… தொட்டு பேசுறதே தப்பு.. இதுல இதுவேறையா…” என்று மதுபாலா சிரிக்க, அவள் கைகளை பிடித்து பின்னே முறுக்கிக்கொண்டே நடந்தான் ரிஷிநித்யன்..      

                       

  

  

                                  

 

Advertisement