Advertisement

     மது – 17

மதுபாலா மனதில் அத்தனை குழப்பங்கள்.. இதுநாள் வரைக்கும் அவளுக்கு இப்படியான ஒருநிலை வந்ததில்லை.. தனியே இருந்த போதும்.. அவள் அன்னை இறந்தபோதும் ஏன் எப்போதுமே அவள் தன்னை மிகுந்த குழப்பத்திற்கு ஆளாக்கியது இல்லை..

இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற தெளிவு எப்போதுமே அவளிடம் இருக்க, ரிஷி மீதான நேசம் அவளுக்கு வந்தபிறகு, அத்தனை ஏன், ரிஷியை அவள் சந்தித்த பிறகு அவளிடம் நிறைய நிறைய மாற்றங்கள் அவளே உணர்ந்தாள்.. 

யாரோடும் இதுநாள் வரைக்கும் அவளாய் சென்று பேசியதில்லை. யாரையும் அவள் வீட்டிற்கு வா என்று அழைத்ததில்லை. நெருக்கமான நட்புக்கள் என்று யாருமில்லை. அத்தனை ஏன் சைலேந்திரனை அவளுக்கு எத்தனை வருடங்களாய் தெரியும், அப்படியிருந்தும் கூட அவளாக இதுநாள் வரைக்கும் அவரிடம் எதுவும் கேட்டதில்லை. ஏதாவது ஒரு விசயமென்றால் பேசுவாள் அவ்வளவே..

ஆனால் ரிஷி.. அவனைப் பார்க்கையில், அவன் கண்களில் தெரிந்த ஒரு ஆர்வமே அவள் கண்களில் பட்டது. அவளைக் கடந்து செல்லும் ஆண்கள் பெரும்பாலானோரின் கண்களில் தெரியும் ஆர்வம்..

‘பிறரைப் போலத்தான் நீயுமா…’ என்ற எண்ணம் அவனைப் பார்த்ததும் சட்டென்று அவள் மனதில் தோன்றினாலும், என்னவோ ரிஷி அப்படியில்லை என்ற குரல் மதுபாலாவின் மனதினுள்ளே ஒலித்துக்கொண்டே இருக்க, அவளாகவே அவனை அழைத்துப் பேசினாள்.

அவனோடு பேசிய கொஞ்ச நேரத்திலேயே ரிஷியின் கண்களில் அந்த ஆர்வம் மறைந்து ஒருவிதமான ஆராய்ச்சி தான் தெரிந்தது.. அவளுக்கு சிரிப்பாகக்கூட வந்தது.. ஒருவேளை தன்னைப் பற்றி அவனுக்கு தெரிந்துபோனால் இந்த ஆராய்ச்சியும் கூட மாறிப்போகுமோ என்று நினைத்தவளோ, அவளாகவே அவனிடம் பேச்சு வளர்த்தாள்.

ஒரு பெண்.. அதிலும் அழகான பெண்.. தன்னை தேடி வந்து பேசுகிறாள் என்று ரிஷி வழியவும் இல்லை, அவளை கீழாகவும் நினைக்கவில்லை.. மாறாக தனக்கு சமமாய் அவளை நடத்தினான்.

கோபமா கோவித்தான்.. சமாதானமா சகஜமாய் பேசினான்.. சண்டையா வெளிப்படையாகவே போட்டான்.. மன்னிப்பா கூசாமல் கேட்டான்.. அது அவளுக்கு பிடித்திருந்தது.. நிரம்ப பிடித்திருந்தது..

பின் தன்னைப் பற்றி அவளே சொல்கையில், மீண்டும் அவன் கண்களில் ஒருவித பாவனை.. அது பிரமிப்பு.. ஆச்சர்யம்.. ஒருவித மெச்சுதல் கூட.. எல்லாம் கலந்து அவன் கண்கள் பல பாஷைகள் பேசிட, மதுபாலாவிற்கு இன்னும் ரிஷியின் மீதான மதிப்பும் ஒருவித நட்பும் கூட கூடியது..

சொல்லப்போனால் ரிஷியின் வெளிப்படையான குணம் தான் அவளுக்கு அவன் மீது காதல் வரச் செய்ததுவோ என்னவோ??

அவளது தனிமையை அவன் பயன்படுத்த நினைக்கவில்லை. தனியாய் இருக்கும் பெண் என்று அவளையும் குறைத்து மதிப்பிடவில்லை. அவளது வாழ்வு இப்படித்தான் என்று தெரிந்தபிறகும் அவன் குணத்திலும் சரி, பழகும் விதத்திலும் சரி எவ்வித மாற்றமும் அவளுக்குத் தெரியவில்லை..

மாறாய் அவன் அவளிடம் அவனது குடும்பத்தினையும், அவனது அன்னனையும் தேடுகிறான் என்று தெரியவும் அவளுள் ஒரு பெரும் சலனம்..

சலனமே தான்..

ரிஷியின் அருகாமையையும்.. அவனது குரலையும்.. அவனது இருப்பையும் மதுபாலா அவளது வீட்டில் ரசிக்கத் தொடங்கினாள்.. யாருமே இல்லாது தனித்து இருந்தவளுக்கு, ரிஷி அவளது வீட்டில் தங்கிய நாட்கள் சுகமான ஒன்றுதான்.  

ரிஷியின் அன்பை விட, அவள் மீது காட்டும் நேசத்தை விட, அவன் காட்டும் அவளுக்கான மரியாதை அவளுக்கு ரொம்ப ரொம்ப பிடித்திருந்தது.. சில விசயங்களில் அவன் பிடிவாதமாய் இருக்கிறான் தான்.. ஆனால் ஒரு பெண்ணாய்.. ஒரு சக மனுசியாய் அவன் அவளுக்குக் கொடுக்கும் மரியாதை..  அவன்மேல் அவளுக்கான அன்பும் காதலும் கூடியதே தவிர மனதில் வேறு எவ்வித குழப்பங்களும் இல்லை..

ஆனால் இப்போது… எங்கிருந்து வந்தாளோ.. எதை வேண்டாம் என்று சொல்லி அவளது அம்மா அழைத்து வந்தாரோ.. இதுநாள் வரைக்கும் எதைப் பற்றியும் எனக்குத் தெரியவேண்டிய அவசியமே இல்லை என்று மதுபாலா ஒதுக்கி, ஒதுங்கி இருந்தாளோ, இன்று அங்கேயே செல்லவேண்டும் என்றதும் அவள் மனதில் குழப்பங்கள் தலைத் தூக்கின..

தந்தை என்ற ஒருவர் இருந்தபோதே அங்கே போகவில்லை.. இப்போதோ யாருமில்லை.. பின்னே ஏன் போகவேண்டும்??

சொத்து… அது யாருக்கு வேண்டும்.. என்னிடம் இருப்பது எனக்குப் போதும்.. அதையும் மீறி ரிஷி இருக்கிறான்.. அவனது குடும்பம் இருக்கிறது.. பின்னே ஏன் போக வேண்டும்.. ??

ஆனாலும் போகும் சூழல் வந்திட்டால் போய்த்தானே ஆகவேண்டும்.. விதி அழைக்கிறது சென்றுதானே ஆகவேண்டும் என்று தோன்றவும், அதற்கேற்றார் போல் அவள் மனதை துரிதமாய் தயார் செய்திட முடியவில்லை.. ஆக குழப்பமும், அவள் அம்மாவை எண்ணி ஒருவித வலியும் மதுபாலாவின் மனதில் தோன்றிட ரிஷியின் மார்பில் சாய்த்து அழுதுவிட்டாள்..

சாய்ந்துகொள்ள ஒரு தோள் கிடைத்தால் சில நேரம் அழுகையும் கூடுமோ என்னவோ??

எதை எதையோ… என்னென்னவோ நினைத்து அப்படி ஒரு அழுகை..

ஒருநிலையில் ரிஷி திணறிப்போனான்…

“மதுபி.. மதுபி.. ப்ளீஸ்… டோன்ட் க்ரை… நான் இருக்கேன் இங்க பாரு…” என்று அவள் முகத்தை இரு கைகளாலும் ஏந்த, கலந்திருந்த கூந்தலும், கண்ணீர் வடிக்கும் விழிகளும், அதிலும் முன்நெற்றியில் இருக்கும் பாதி கேசம், அவள் கண்ணீரோடு ஒட்டிக்கொள்ள நடுங்கிய இதழ்களுடன்

“ரிஷி…” என்று அழைத்த மதுபாலாவை அவனால் பார்த்து சகிக்க முடியவில்லை..

“ப்ளீஸ் மதுபி.. அழாத.. ஏன் இவ்வளோ அழுகை…” என்றபடி அவளது முகத்தை இன்னும் இறுக்கிப் பிடிக்க,

“திடீர்னு இதெல்லாம் கேட்கவும்,  ஐம் சோ மச் கன்பியுஸ்ட்…” என்றவள் புறங்கையால் அவள் முகத்தைத் துடைக்க முயல,

“நீ விடு.. நான் எதுக்கு இருக்கேன்…” என்றவன், அவளது கேசத்தை சரி செய்து ஒதுக்கி விட,

“இதுக்கு தான் இருக்கியா???” என்றாள் அழுகை பாதி, சிரிப்பு மீதியாய்..

“அடிப்பாவி…” என்றவன், வேகமாய் அவள் காதைப் பிடித்துத் திறுக,

“ஹேய் ஹேய் வலிக்குது…” என்றவள், கண்களைத் துடைத்துக்கொள்ள, “போ முதல்ல பேஸ் வாஸ் பண்ணிட்டு வா.. கன்றாவியா இருக்கு…” என்று ரிஷி கொஞ்சம் அவளை சகஜமாக்க முயல,

“ஓ… அப்போ அழகா இருந்தாத்தான் பார்ப்பியா?? அப்போ முடியாது நான் இப்படித்தான் இருப்பேன்…” என்றவள் அங்கேயே பிடிவாதமாய் அமர,

“ஹா ஹா… திஸ் வாட் ஐ வான்ட்.. கொஞ்ச நேரத்துல இப்படி டென்சன் பண்ணிட்ட…” என்று ரிஷியும் அங்கேயே அமர்ந்தான்..

“நான் இப்படித்தான் ரிஷி.. என்ன இத்தனை நாள், எப்போவாது தனியா அழுதிருக்கேன்.. இப்போ நீ இருக்க.. மறைக்கணும் தோணல.. அவ்வளோதான்…” என்று தோளைக் குலுக்கவும்,

“மதுபி.. என்னவா இருந்தாலும் சரி.. நான் இருக்கேன்.. எதுன்னாலும் என்கிட்ட சொல்லு.. கன்னியாகுமரி போகணும் சொல்றது உனக்குப் பிடிக்கலையா டெல் மீ.. ஐ வில் ஹேண்டில் திஸ்.. இல்லை போறது பத்தி உனக்கு என்ன குழப்பமோ அதையும் சொல்லு.. ஐ க்ளியர் தட்.. அதைவிட்டு அழாத.. கஷ்டமா இருக்கு..” என்றவன் அவள் தோள் மீது கரங்கள் போட்டுக்கொள்ள,

அதையே சாக்காக வைத்து மீண்டும் அவன் மார்பில் சாய்ந்துகொண்டாள் மதுபாலா..

“நான் அழணும் நினைக்கல ரிஷி.. அது வந்திடுச்சு.. கண்ட்ரோல் பண்ணனும் தோணல.. அழுதிட்டேன்.. ஒருவேளை நானா இருந்திருந்தா கண்ட்ரோல் பண்ணி அடுத்த வேலையை பார்த்திருப்பேனோ என்னவோ..”

“ஹ்ம்ம்… இனியும் நீ இப்படியே இருந்தா நான் ரொம்ப சந்தோசமா இருப்பேன்..” என்று ரிஷி சொல்லும் போதே,

“அட எனக்கு கழுத்து வலிக்குமே…” என்று நிமிர்ந்தவளை, ரிஷி முறைக்க, அவளது ட்ரேட் மார்க் சிரிப்பான “ஹா ஹா…” என்று சத்தமாய் மதுபாலா சிரிக்க,

“ஒண்ணு அழுது டென்சன் பண்ணு.. இல்லை சிரிச்சு டென்சன் பண்ணு…” என்று ரிஷியும் புன்னகை செய்ய, அதற்கு பதிலாய் இன்னமும் சிரித்தவள்,

“வாக் போகணும் சொன்னேன்.. இங்கேயே பாதி நேரம் முடிஞ்சது…” என,

“நான் என்ன செய்ய முடியும்.. நீ இருக்க வச்சிட்ட…” என்றவன் “ஆக்சுவலா இந்த டைம் கொஞ்சம் ரொமான்ட்டிக்கா போயிருக்கனும்.. நீ அழுது சொதப்பிட்ட…” என,  

“ஓ.. அப்படியா….” என்று இதழைக் குவித்தவள்,

“சொதப்பினது நான் இல்லை நீ.. உன் மேல சாஞ்சிருந்தேன்.. நீ நிமிரவே விட்டிருக்கக் கூடாது.. சோ இட்ஸ் யுவர் மிஸ்டேக்…” என்று தலையை ஆட்ட,

“ஓஹோ…” என்று இழுத்தவன், இரு கரங்களைத் தேய்த்துக்கொண்டு

“மிஸ்டேக்னு தெரிஞ்சா அதை சரி பண்ணியே ஆகணுமே…” என்றபடி அவளை நெருங்க, கொஞ்ச நேரம் அவனை நேருக்கு நேராகவே பார்த்தவள், பின் வேகமாய் பார்வையை தழைத்துக் கொள்ள,

“ஹா ஹா மதுபி… உன் வெக்கம் கூட வித்தியாசமாதான் இருக்கு…” என்றவன், அவள் காதோரம் “ஊப்….” என்று ஊத,

“ரிஷி.. சும்மாயிரு….” என்று கொஞ்சம் கூசியவள், “இதுக்குத்தான் ஆன்ட்டி உன்னை இங்கே ஸ்டே பண்ண கூடாதுன்னு சொல்லிருக்காங்க…” என,

“ஸ்டே தானே பண்ணக்கூடாது… அப்பப்போ இப்படிப் பண்ணிக்கலாம்… இல்லாட்டி சால்ட் அண்ட் ஸ்பைசின்னு எதுவுமே இருக்காது…” என்றவன் அவள் கன்னங்களில் இதழ் பதித்து அழுந்த முத்தமிட்டு,

“இது கொஞ்சம் சால்டி… நீ அழுததினால..” என்று சொல்ல,

“ம்ம் அப்போ ஸ்பைசி???” என்று கேட்டவளின் கண்களிலும் ஆர்வம் தெரிய,

“திஸ் ஒன்…” என்று அவளின் இதழ்களைத் தொட்டவன், பின் தன்னிதழால் தொட, அவன் சொன்ன ஸ்பைசி அவளுக்கும் புரிய,

கொஞ்ச நேரத்தில், மதுபாலாவே “போதும் ரிஷி….” என்று விலக,

“நான் சும்மாதானே இருந்தேன்….” என்று ரிஷி சிரிக்க, “இருந்த இருந்த…” என்று கிண்டலாய் சொல்லியவள், “பட் ஐ லவ்ட் இட்…” என்றாள் காதலாய்..

மதுபாலாவை  தனக்கு நேராய் அமர வைத்தவன், அவளின் இரண்டு கரங்களைப் பற்றி மீண்டும் தன் இதழில் அழுந்த பதித்தவன், “உனக்கு நான் இருக்கேன் மதுபி… சோ எந்த குழப்பமும் வேண்டாம்.. ஓகே..” என்றான் ஆழ்ந்த குரலில்..

“ம்ம்…” என்று  தலையை, அவன் சொன்னதை ஆமோதிப்பது போல் ஆட்டியவள்,

“ஓகே.. ரொம்ப சென்ட்டியா பேசுறது எனக்கே செட்டாகல ரிஷி..” என்று சிரித்தவள்,

“இதுக்குமேல எங்க வெளிய போறது…. சோ நானே ஏதாவது செய்றேன்.. நீ சாப்பிட்டு போ…” என்று எழ,

“ஓகே..” என்று எழுந்தவன்,

“அண்ணா கேட்டா என்ன சொல்வ???” என்றான் வேகமாய்..

“அண்ணா கேட்கிறது பொருத்து நான் பதில் சொல்லிக்கிறேன் ரிஷி.. இல்லை போயித்தான் ஆகணும்னா போய்க்கலாம்.. ஒண்ணும் பிரச்னையில்லை…” என்று சொன்னவளைப் பார்த்து,

“ஆர் யூ சியூர்…” என,

“எஸ்… பக்கா.. போறதுன்னா போகலாம்.. நோ.. பிராப்ளம்…” என்று மதுபாலா சிரித்த முகமாய் சொல்லவும் தான் ரிஷிக்கு கொஞ்சம் மனம் சமாதானம் ஆனது,

அதன் பின் ரிஷி சாப்பிட்டுக் கிளம்பும் நேரம் ஸ்ரீநிவாஸும், மைதிலியும் வந்திட, ரிஷி அவர்களை லேசாய் முறைத்தபடி தான் பேசினான்.

மைதிலி ரிஷியின் கோபத்தை புரிந்துகொண்டவள், “ரிஷி… நாங்க இங்கதானே இருக்கோம்.. நீயும் இரேன்…”  என்று ஸ்ரீநிவாஸ் முகத்தையும் ஒரு பார்வை பார்த்து சொல்ல,

“இரேன்டா.. உன்கூட பேசியும் ரொம்ப நாள் ஆச்சு…” என்று அவனும் சொல்ல,

“இல்ல இருக்கட்டும்.. ரூமுக்கு போறேன்…” என்று ரிஷி கிளம்ப,

“அண்ணா, அக்காதான் சொல்றாங்களே ரிஷி.. இரேன்…” என்று மதுபாலாவும் சொல்ல,

“வேண்டாம் மதுபி…” என்று பிடிவாதமாக மறுத்து கிளம்பிவிட்டான்..

‘ஹ்ம்ம் இவன் பிடிவாதம் இருக்கே…’ என்று மதுபாலா நினைக்க, அதை அப்படியே மைதிலி வாய்விட்டே சொல்ல, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொள்ள,

ஸ்ரீநிவாஸ் “மதுபாலா…” என்றழைத்து ஒருநொடி மௌனம் காக்க,

“ரிஷி எல்லாம் சொல்லிட்டான்ணா…” என்றாள் புன்னகை முகமாகவே..

“ஓ.. ஓகே.. அப்போ உனக்கு அங்க போறதுல எதுவும் பிராப்ளம் இல்லையே…” என்று ஸ்ரீநிவாஸ் கேட்க,

மைதிலியோ “மது.. உனக்கு என்ன தோணுதோ அதை சொல்லு.. எங்களுக்காகன்னு எதுவும் பார்க்கவேண்டாம்…” என்று சொல்ல,

“இல்லயில்ல… நான் மட்டுமா போகப்போறேன்… நீங்க எல்லாம் என்கூட வர்றீங்க தானே… சோ நோ பிராப்ளம்.. என்னிக்கு போறதுன்னு மட்டும் சொல்லுங்கண்ணா…” என்றாள் மனதில் எவ்வித சலனமும் இல்லாது..

“ஹ்ம்ம் நீ எப்படி எடுத்துப்பியோன்னு எல்லாருக்குமே கொஞ்சம் டென்சனா இருந்தது மது.. ரிஷியும் இதைப்பத்தி உன்கிட்ட பேசக்கூடாதுன்னு சொல்லிட்டான்.. ஆனா ஒன்ஸ் அங்க போயிட்டு வந்திட்டா எல்லாருமே கொஞ்சம் நிம்மதியா இருக்கலாம்…” என்று மைதிலி சொல்ல,

“அக்கா எனக்கும் எல்லாம் புரியுது.. சோ நானும் உங்க யாரையும் தப்பா நினைக்க மாட்டேன்…” என,

“ஹ்ம்ம் நல்லது மதுபாலா.. நான் அப்பாக்கிட்ட பேசிட்டு எப்போ போறதுன்னு சொல்றேன்..” என்றுவிட்டு ஸ்ரீநிவாஸ் உறங்கச் செல்ல, அதன்பின்னும் மதுபாலாவும் மைதிலியும் வெகு நேரம் பேசிவிட்டே உறங்கச் சென்றனர்..

ஆனால் ரிஷிக்குதான் உறங்கா இரவாய் அமைந்தது..

கன்னியாகுமரி செல்கையில் தானும் மதுபாலாவோடு செல்லவேண்டும் என்று மனதில் உறுதியாய் இருக்க, ஆனால் அவனுக்கு லீவ் கிடைக்குமா என்பதுதான் கேள்விகுறி..

இன்றுதான் வேலைக்கு என்று சேர்ந்திருக்கிறான்.. உடனே விடுமுறை எல்லாம் எடுத்திட முடியாது.. கொஞ்ச நாள் போக வேண்டும்.. இல்லை ஒரு வார விடுமுறை நாளில் போகவேண்டும் இதெல்லாம் அவன் சாம்பசிவத்திடம் தான் பேசவேண்டும்.

கல்யாணியிடம் பேசினால் அது இதென்று ஏதாவது சொல்லி அவன் வாயை அடைத்து விடுவார்.. ஸ்ரீநிவாஸ் இன்னும் ஒருபடி மேல்.. என்னவோ இப்போது மைதிலியிடம் கொஞ்சம் நன்றாய் இருக்கிறான்.. ஆனால் இன்னும் அப்பாவின் சொல்பேச்சு மட்டுமே எடுபடுகிறது..

நாளை முதல்வேலையாக சாம்பசிவத்திடம் தானே பேசவேண்டும் என்று முடிவெடுத்துக்கொண்டவன், நினைத்ததுபோல் செய்தான்..

ஆனால் சாம்பசிவமோ “நீ எதுக்கு ரிஷி.. நாங்க ஒரேநாள்ல போய் திரும்பிடுவோம்.. இல்லையா டூ டேஸ் ஆகும்.. உன் அம்மா.. மைதிலி எல்லாம் மதுபாலா கூட இருக்கப்போ நீ எதுக்கு??” என்றார்…

“இல்லப்பா…. நானும் வர்றது தான் சரியா இருக்கும்.. சோ.. வீக்கென்ட் போல ப்ளான் பண்ணுங்க…” என்று ரிஷி விடாது சொல்ல,

“இங்க பாரு ரிஷி.. இன்னும் உனக்கும் மதுபாலாக்கும் கல்யாணம் ஆகலை.. பெரியவங்க நாங்க போறப்போ நீ எதுக்கு.. கல்யாணத்துக்கு அப்புறம் நீயும் மதுபாலாவும் போறதுவேற” என்று சாம்பசிவம் சொல்கையிலேயே,

“அப்போ.. எங்க கல்யாணத்துக்கு ஒரு நாள் பாருங்கப்பா.. கல்யாணம் முடிச்சிட்டு மதுபிய கூட்டிட்டு எங்கவும் போகலாம் வரலாம்…” என்று ரிஷியும் சொல்லிட, இரண்டு பக்க அழைப்புகளிலுமே மௌனம்..                            

             

                       

 

                     

Advertisement