Advertisement

மது – 16

மதுபாலாவின் முகத்தில் இருந்து ரிஷிக்கு எவ்வித உணர்வையும் கண்டுகொள்ள முடியவில்லை.. முதல் முறையாய் அவளை இப்படியொரு பாவனையில் காண்கிறான்….

அவளது மௌனம்.. அதிலும் எப்போதுமே உணர்வுகளை அப்படியே கண்ணாடி போல் பிரதிபலிக்கும் அவளது கண்கள் இப்போது அவன் முகத்தைப் பாராது, எதிரே டேபிள் மீதிருக்கும், ஜூஸை வெறித்துக்கொண்டு இருக்கும் அவளின் கண்களும் ரிஷிக்கு உள்ளூர என்னவோ செய்தது..

இரண்டு நாட்கள்.. இரண்டே நாட்கள் அதற்குமே ரிஷியால் அவளிடம் எதுவும் மறைக்க முடியவில்லை.. மறைக்க முடியவில்லை என்பதனை விட, அவனாலே உள்ளுக்குள்ளே ஒரு விசயத்தை போட்டு பூட்டிக்கொண்டு, வீட்டினரையும் சொல்லவேண்டாம் என்று தடுத்து, மதுவோடு இயல்பாய் பேசிட முடியவில்லை..

இதற்கு இந்த இரண்டு நாட்களில், முதல் நாள்  முழுதும் மதுபாலா அவனோடு தான் இருந்தாள்..

ரிஷி பார்த்திருந்த புது வீட்டினை சென்று பார்த்து, அங்கே என்ன மாதிரியான பொருட்கள் எல்லாம் தேவைப்படும் என்பதையும் ரிஷியோடு கலந்து பேசியே ஒரு லிஸ்ட் போட்டு, ஷாப்பிங் என்ற பெயரில் ஊரை சுற்றி ஒருவழியாய் அனைத்தையும் வாங்கி வந்து புதுவீட்டில் சேர்க்கையில் இரவாகிட, மறுநாள் ரிஷி ஆபிஸ் போகவேண்டும் என்பதால்,

“ரிஷி திங்க்ஸ் எல்லாம் இப்படியே இருக்கட்டும்.. வீக்கென்ட் லீவ் தானே உனக்கு.. அப்போ வந்து செட் பண்ணிக்கலாம்.. அடுத்து ஒரு நல்ல நாள் பார்த்து பால் காய்ச்சலாம்” என,

“ஹ்ம்ம் நீங்க சொன்னா சரிதாங்க மேடம்..” என்றவன், என்ன வாங்கியிருக்கிறோம் என்று சரி பார்ப்பது போல், திரும்பிட,

அவன் முதுகிற்கு பின்னே கை கட்டி நின்றவள், “ரிஷி….” என்றழைக்க,

“ம்ம் சொல்லு மதுபி…” என்றான் வேலையில் கவனமாக இருப்பதுபோல்..

“லுக் அட் மீ…”

“வெய்ட் மதுபி… திங்ஸ் எல்லாம் சரி பார்த்திட்டா.. ஹவுஸ் ஓனர் கிட்ட சொல்லிட்டு கிளம்பலாம்….” என்று முன்னேயிருந்த பொருட்களின் மீதும் கவனம் செலுத்த,

அவன் தோளைத் தொட்டு கொஞ்சம் பிடிவாதமாகவே தன்புறம் திருப்பியவள், “என்னாச்சு??” என்பதுபோல் சைகை செய்து, அவளது பார்வையை ரிஷியின் முகத்தினில் படரவிட, இதற்குமேல் இங்கே இருப்பது சரியெனப் படாமல்

“என்ன மதுபி… கிளம்புற ஐடியா இல்லையா உனக்கு???” என்று பற்றியிருந்த அவளது கரங்களை இப்போது இவன் பற்றி இழுத்து வாசல் நோக்கி நகரப் போக,

“ரிஷி…” என்ற அவளது குரல், அவனை நிற்க வைக்க, திரும்பி அவளைப் பார்த்தவன், அப்படியே நிற்க,

“என்னாச்சு உனக்கு.. என் ஃபேஸ் பார்த்து பேச இவ்வளோ தயக்கம் உனக்கு???” என்ற மதுபாலாவின் குரலே மாறிட,

“அதெல்லாம் இல்லையே…” என்று வேகமாய் மறுத்தான் ரிஷிநித்யன்.

“நிஜமாவா….” என்று மதுபாலா அவனை நெருங்கி நிற்க,

“எஸ்…” என்று அவளை நேருக்கு நேராய்ப் பார்த்தவன், “ஏன் உனக்கு என்னாச்சு? திடீர்னு இப்படி கேட்கிற??” என்று அவளைப் பார்த்துக் கேட்க

“நத்திங்… கிளம்பலாம்…” என்று மதுபாலா முன்னே நடந்திட,

“மதுபி….” என்று ரிஷி பின்னேயே போக,

“கார் ஸ்டார்ட் பண்றேன்.. நீ சொல்லிட்டு வா…” என்று நடந்துவிட்டாள்..

மதுபாலாவும் இத்தனை நேரம் நன்றாய்த்தான் இருந்தாள்.. என்னவோ ரிஷி அவளிடம் சரியாய் பேசிடவில்லை என்று தோன்றவுமே, அவனிடம் கேட்டும்விட்டாள். ஆனால் அவனிடமிருந்து அவளுக்கு சரியாய் ஒரு பதில் வராது போகவும் அதற்குமேல் அவள் அங்கே நிற்க விரும்பவில்லை.

ரிஷிக்காக காத்திருக்க, காரில் எரியவனோ அவளை வித்தியாசமாய் பார்த்தான்..

எப்போதுமே ரிஷியோடு மதுபாலா வெளியே செல்கிறாள் என்றால், கார் ஓட்டுவது அவனே.. அது அன்றிலிருந்து, அவனை முதல்முறை அவள் வீட்டிற்கு அழைத்து சென்ற அன்றைய தினம் இருந்து அப்படித்தான்..

நடுவிலும் இருவரும் அப்படியொன்றும் வெளியே சுற்றிடவில்லை, என்றாலும் அவனோடு செல்கையில் மதுபாலா “நீ டிரைவ் பண்ணு…” என்றுவிடுவாள்..

காலையில் கிளம்பும் போது அப்படித்தான்.. ஆனால் இப்போது நேராய் சாலையைப் பார்த்தபடி அமர்ந்திருந்தவளோ ஒன்றும் பேசாமல் இருக்க,

“மதுபி…” என்று ரிஷி அவளைப் பார்க்க,

“ஹ்ம்ம் சொல்லு ரிஷி.. டின்னர் எப்படி?? ஹோட்டல் ஆர் வீட்ல ரெடி பண்ணவா???” என்று மதுபாலா கேட்க,

“நான் அது கேட்க கூப்பிடலை…” என்றவன், “என்னதிது…” என,

“எது???” என்றாள் அவளும்…

“நீ ஏன் டிரைவ் பண்ற???”

“இதென்ன கேள்வி ரிஷி… என் கார் நான் டிரைவ் பண்ண கூடாதா???” என்றாள் அவன் கேட்கும் கேள்விக்கு அர்த்தமேயில்லை என்பதுபோல் பார்வை பார்த்து..

“இது உன் கார் தான்.. இல்லைன்னு சொல்லலை.. பட்.. எப்பவும் என்னைத்தானே பண்ண சொல்வ…”

“இப்போ நான் பண்றேன்.. ஏன் உனக்கு எதுவும் கஷ்டமா???” என்றவள் முகத்தை சுருக்க,

“நீ இப்படி பண்றது தான் மதுபி கஷ்டமா இருக்கு…” என்றவன், சீட் பெல்டை போட்டுக்கொண்டு நேராய் அமர்ந்தான்.

“ஓ.. சரி…” என்றவள், பதிலே பேசாமல் ரிஷி தங்கியிருக்கும் ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு சென்று காரை நிறுத்த, அவனோ கேள்வியாய் அவளைப் பார்க்க,

“இங்கயே சாப்பிட்டு நான் அப்படியே வீட்டுக்கு போறேன் ரிஷி…” என்று மதுபாலா இறங்கிட, ரிஷிக்கு மிக மிக சங்கடமாய் போனது..

கிளம்பும் வரைக்கும் கலகலவென்று பேசிக்கொண்டு இருந்தவள், ஆசை ஆசையாய் அனைத்துப் பொருட்களையும் வாங்கியவள், இப்போது முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு காரை செலுத்த, அவனுக்கு தன்மீதே கோவமாய் வந்தது.

மனோகர் சொன்னது வேறு நினைவில் வந்துத் தொலைக்க, எங்கே இவளை கஷ்டபடுத்தி விடுவோமோ என்ற பயம் கூட ரிஷிக்கு வந்துவிட்டது.. ‘கன்னியாகுமரி போகவேண்டும்…’ என்பது சிறிய விஷயம் தான்.. ஆனால் அதையே அவனால் அவளிடம் சொல்லிட முடியவில்லை..

ஒருவேளை சொல்லிவிட்டால் இத்தனை குழப்பங்கள் இருக்காதோ என்னவோ..

மதுபாலா இறங்கிய பின்னும் கூட ரிஷி இறங்கவில்லை.. “ரிஷி….” என்று அவன் பக்க ஜன்னால் கண்ணாடியை மதுபாலா தட்டவும் தான், இறங்கினான்..

இருவரின் உணவு பொழுதுமே மௌனமாய் கழிய, “ஓகே ரிஷி… நாளைக்கு ஃபர்ஸ்ட் டே ஜாயின் பண்ற… ஆல் தி பெஸ்ட்….” என்று மதுபாலா கைகுலுக்க,

“நான் வந்து உன்னை பார்த்துட்டு தான் மதுபி ஆபிஸ் போவேன்…” என்றவனோ அவள் கரங்களை விடாது பிடித்திருக்க,

“நான் கிளம்பனுமா வேணாமா???” என்று மதுபாலா மீண்டும் அவன் முகத்தில் தன் பார்வையை பதிக்க,

“சாரி சாரி..” என்று கைகளை விட்டவன், வெளியே வந்து அவள் கிளம்பி செல்லும் வரைக்கும் நின்று பார்த்துவிட்டு உள்ளே செல்ல, அவளை இப்படி தனியே அனுப்புகிறோமே என்றிருந்தது..

அறைக்கு வந்தவன், அப்படியே கட்டிலில் விழுந்திட, மதுபாலாவைத் தவிர வேறெதுவும் அவன் மனதில் சிந்தனை இல்லை..

புது வீடு.. புது வேலை… இன்று அவளோடு கழித்த பொழுதுகள் இது எதுவுமே அவனுக்கு சந்தோசம் அளிக்கவில்லை.. மாறாக் அவளது சின்ன சுணக்கம்.. லேசான முகத் திருப்பல்… அவனை பயம்கொள்ள வைத்தது நிஜம்தான்..

சாம்பசிவம் அன்று சொன்னது இப்போதும் அவன் காதுகளில் ஒலித்தது..

“உனக்கு பிடிச்ச வேலை.. உனக்கு பிடிச்ச பொண்ணு.. ரெண்டுமே இப்போ உன் லைப்ல இருக்கு ரிஷி.. இனிமே நீ தான் எல்லாம் பார்த்துக்கணும்…”

வேலை போனால் கூட வேறு வேலை கிடைத்திடும்.. ஆனால் ‘பிடிச்ச பொண்ணு..’ அதிலும் மதுபாலா போல் ஒருத்தி.. ஆயிரத்தில் ஒருத்தி என்றுகூட அவளை சொல்லிட முடியாதே…       

“மதுபி….” என்று சொல்லிக்கொண்டே ஆழ்ந்து சுவாசத்தை இழுத்து விட்டவன், திரும்ப அவளுக்கே அழைக்க,

“யா ரீச்ட் ஹோம் ரிஷி.. நீ தூங்கு… மார்னிங் பாக்கலாம்…” என்று வைத்துவிட,

“ம்ம்ம் ஓகே…” என்று ஒருவித சோர்வில் பதில் சொல்லி அழைப்பைத் துண்டிக்க, அடுத்தநொடியே கல்யாணி அழைத்தார்..

“என்னம்மா….” என்றவன், அடுத்து அவர் சொன்னதில் வேகமாய் எழுந்து அமர்ந்துவிட்டான்..

விஷயம் வேறொன்றுமில்லை ஸ்ரீநிவாஸ், மைதிலி இருவரும் சென்னை வருகிறார்கள் அதுவும் இன்னும் கொஞ்ச நேரத்தில் மதுபாலாவின் வீட்டில் இருப்பர் என்று கல்யாணி சொன்னதும் இவனுக்கு திக்கேன்றானது..

“ம்மா.. ஏன் ம்மா எல்லாம் சேர்ந்து இப்படி பண்றீங்க?? இல்லை தெரியாமத்தான் கேட்கிறேன்.. நான் நிம்மதியாவே இருக்க கூடாதுன்னு நினைக்கிறீங்களா??” என்று ரிஷி கத்த,

“டேய் என்னடா இப்படி சொல்ற. அந்த பொண்ணு மது கூட சந்தோசமா சரின்னு சொல்லிட்டா.. நீ இப்படி கத்துற…” என்று கல்யாணி சொல்ல,

“என்னது மதுபிக்கிட்ட  பேசினீங்களா???” என்றான் முன்னை விட வேகமாய்..

“அதுக்கேன் இவ்வளோ ஷாக் ஆகுற.. நாங்க தினமும் தானே பேசுறோம்.. உனக்கு பேசுறதுக்கு முன்ன அவக்கிட்ட தான் பேசினேன்.. அவ்வளோ சந்தோசமா சரின்னு சொன்னா.. நீ தான் இப்படி காயுற.. இங்க பாருடா மதுபாலா நீ செலக்ட் பண்ண பொண்ணாவே இருக்கட்டும்.. ஆனா அவ நம்ம வீட்டு மருமக.. எங்களுக்கும் அவக்கிட்ட உரிமை இருக்கு..” என்றவர் போனை சொல்லாமல் கொள்ளாமல் வைத்துவிட,

‘கடவுளே….’ என்று பல்லைக் கடித்தவன், தலையில் அடித்துக்கொண்டான்..

இப்போது தானே அவளிடம் பேசினோம் என்னிடம் ஒருவார்த்தை சொல்லவில்லை என்றும் அவன் மனம் சுனங்க, எல்லாமே சேர்ந்து அவனை எரிச்சல் அடைய வைத்துக்கொண்டு இருந்தது..

என்ன நடந்தாலும் சரி நின்று சமாளிக்கவேண்டும் என்று மனதில் ஒரு முடிவோடு வந்தவனை இப்படி இரண்டொரு நாளிலேயே சூழ்நிலைகள் திருப்பிப் போட, அவனுக்கு பிடித்த விஷயங்கள் வாழ்வில் நடந்தாலும் கூட அதை ரிஷியால் முழுதாய் சந்தோசமாய் அனுபவிக்க முடியவில்லை..

மதுபாலாவிற்கு திரும்ப அழைத்தான்.

அவளோ “அண்ணா.. அக்கா வர்றாங்க ரிஷி.. அவங்களுக்கு சமைச்சிட்டு இருக்கேன்…” என, ரிஷிக்கோ தன்னைப்போல் அவன் கண்கள் கடிகாரத்தைப் பார்க்க, நேரம் இரவு பத்தை நெருங்க,

“இதுக்கு மேல நீ குக் பண்ணி எப்படி மதுபி.. நீ எதுவும் பண்ணாத.. நான் வாங்கிட்டு வர்றேன்..” என,

“நோ நோ.. நான் வீட்ல வந்து சாப்பிடுங்க சொல்லிட்டேன் ரிஷி.. எதுவும் வேணாம்.. ஐ வில் மேனேஜ்…” என்றவளின் குரலில் பழைய உற்சாகம் தெரிந்தது..

‘ஆமா என்கிட்ட மட்டும் முகத்தை திருப்புவா…’ என்று கடிந்தவன், “ஓகே…” என்று ஒரு சின்ன கடுப்போடு சொல்லி வைத்துவிட்டான்..

இத்தனை நேரத்திற்கு மேல் வருகிறார்கள் வரும்போதே ஹோட்டலில் சாப்பிட்டு வரவேண்டியதுதானே என்று ஸ்ரீநிவாஸ், மைதிலி மீது கோவம் கோவமாய் வந்தது.. என்ன நினைத்தானோ ஸ்ரீநிவாஸிற்கு அழைத்தவன்,

“வர்றதுன்னா முன்னாடியே சொல்லவேண்டமா…” என்று எடுத்ததுமே கேட்க, மைதிலி தான் பதில் சொன்னாள்.

“உங்க அண்ணா டிரைவிங்ல இருக்கார் ரிஷி. நாளைக்கு ஒரு இம்பார்டன்ட் ஹியரிங்காம். அதான் கிளம்பி வர்றோம்…”

“அண்ணி.. நீங்க வர்றதை தப்பு சொல்லலை.. ஆனா முதல்லயே ஏன் சொல்லலைன்னு தான் கேட்டேன்…”

“அவர் மட்டும்தான் வர்றதா ப்ளான்.. எனக்கு போர் அடிக்கவும் நானாதான் லாஸ்ட் மினிட்ல கிளம்பினேன்.. அதான் சொல்லலை.. நான் வர்றதுனால தான் மதுபாலா வீட்ல ஸ்டே…” என்று மைதிலி சாதாரணமாய் சொல்ல,

‘நல்லா வந்து சேர்ந்தீங்கடா எனக்கு…’ என்று நினைத்துக்கொண்டான்..

“அண்ணி.. மதுபிக்கிட்ட கன்னியாகுமரி விஷயம் எதுவும் நான் இப்போவரைக்கும் சொல்லலை.. நீங்களும் எதுவும் காட்டிக்கவேண்டாம்.. நானே டைம் பார்த்து சொல்லிக்கிறேன்…” என்று ரிஷி சொன்னதும்,

“ஹ்ம்ம் ஓகே ரிஷி.. பட் மாமா இதையும் பேசிட்டு வரசொல்லி தான் அனுப்பிருக்கார்.. டூ டேஸ் தான் இங்க ஸ்டே.. எப்படியும் கிளம்புறதுக்கு முன்னாடி உங்க அண்ணா மதுபாலாக்கிட்ட பேசிடுவார்.. அதுக்குமுன்னாடி நீயே பேசிட்டா நல்லது…” என்றவள்,

“ஓகே ரிஷி.. மது அப்பார்ட்மென்ட் கிட்ட வந்தாச்சு.. நாளைக்கு பார்க்கலாம்..” என்று மைதிலியும் போனை வைத்துவிட,

ரிஷிக்கு அப்படியே வந்த ஆத்திரத்திற்கு எங்காவது போய் முட்டிக்கொள்வோமா என்றுகூட இருக்க, முழுதாய் ஒருநாள் கூட அவனால் இந்த டென்சனை தாங்க முடியவில்லை..

சைலேந்திரனுக்கு அழைத்துப் பேசினான்.. அவர் சொன்ன தகவலோ இன்னும் அவனுக்கு மண்டை காய்ந்தது..

“மதுபாலா நேம்ல இன்னும் அங்க ப்ராபர்ட்டீஸ் இருக்கு போல ரிஷி.. மது அம்மா வீட்டு சைடு இருந்ததை தான் மதுவோட அம்மா சேல்ஸ் பண்ணிட்டு இங்க வந்திட்டாங்க. அப்பா வீட்டு சைட் இப்போ யாருமில்லை. தூரத்து சொந்தம் கொஞ்சம் இருக்காங்க.. ஆனா அவங்களும் பெருசா கேர் பண்ண போல தெரியலை.. எல்லாமே ரொம்ப ரொம்ப வசதியான ஆளுங்க.

என்னால ஈசியா போய் எதுவும் அப்ரோச் பண்ண முடியலை.. ஆனா லீகல் சைல்ட்டா மதுபாலா நேம் தான் இருக்கு.. அதை மேனேஜ் பண்றது மது அப்பாவோட பிரன்ட் பேமிலி…

இதுநாள் வரைக்கும் மதுபாலா பத்தி எந்த டீடைல்ஸும் கிடைக்காம இருந்திருக்காங்க.. இப்போ உங்க அண்ணா.. அப்பா எல்லாம் விசாரிக்கவும் அவங்களும் யாரு என்னன்னு விசாரிச்சிருக்காங்க…” என்று சைலேந்திரன் சொல்லிட, ரிஷிக்கு இது என்னவோ தலையை சுத்தி மூக்கை தொட்ட கதையாய் இருந்தது..

மறுநாள் முதல் வேலையாக, ஆபிஸ் விட்டு கிளம்பியவன் நேராய் மதுபாலாவின் வீட்டிற்கு செல்லம் அங்கேயோ மைதிலி ஸ்ரீநிவாஸ் இருவரும் இல்லை..

“ஷாப்பிங் போயிருக்காங்க…” என்று மதுபாலா சொல்ல,

“ம்ம்ம்..” என்றவன் “நீ போகலை…” என,

‘லூசா நீ…’ என்பதுபோல் பார்த்தாள்..

“என்ன மதுபி…”

“அவங்க ஹஸ்பன்ட் அண்ட் வொய்ப்.. அவங்க போறப்போ நான் ஏன் போகணும்…” என,

“ஆமால்ல…” என்று லேசாய் அசடு வழிந்தவன், அவனாகவே அங்கே பிரிட்ஜில் இருந்த ஜூஸை எடுத்துக்கொண்டு அமர, அவளும் தனக்கு ஒன்றை எடுத்துக்கொண்டு அமர்ந்தாள்..

“மதுபி.. உன்கிட்ட கொஞ்சம் பேசணும்…” என்று ரிஷி பீடிகை எல்லாம் போட,

“ஹ்ம்ம் கம் டூ தி பாயின்ட் ரிஷி…” என்றாள் அவள்..

“இல்லை.. நீ கன்னியாகுமரி போயிருக்கியா???” என்றவனின் கேள்வியில், மதுவின் கண்கள் லேசாய் சுருங்கியதே தவிர, பெரிதாய் அவள் முகத்தில் ஒன்றும் காண முடியவில்லை அவனால்..

“அங்கிருந்து வந்தவதான்.. ஆனா பெருசா அதைப்பத்தின நியாபகம் எனக்கில்லை ரிஷி…” என்றவளின் குரலும், இதென்ன இப்போது திடீரென்று இந்த பேச்சு என்ற கேள்வியை தொட்டே இருக்க, ரிஷி அதற்குமேலும் மனதில் அனைத்தையும் போட்டு வைக்காமல், அனைத்தையும் சொல்லிட, மதுபாலாவின் முகமோ உணர்வுகளை துடைத்து வைத்தது போலானது..

ஏதாவது பேசுவாள் என்று ரிஷி அவளைப் பார்க்க, அவளோ எதிரே இருந்த ஜூஸை வெறித்துக்கொண்டு இருந்தாள்..

“மதுபி…” என்று ஜூஸைப் பற்றியிருந்த அவளின் கரங்களை ரிஷி பற்ற,

“ம்ம்ச்…” என்று மட்டும் அவள் இதழ்கள் சப்தமிட,

“உனக்கு பிடிக்கலைன்னா வேண்டாம் மதுபி.. நான் கம்பல் பண்ணமாட்டேன்…” என்றவனை இமைகள் மட்டும் நிமிர்த்தி பார்த்தவள்,

“அப்படியா??” என்று மட்டும் கேட்க,

“கண்டிப்பா.. உனக்கு பிடிக்கலைன்னா அங்க போகவே வேண்டாம்..” என்று ரிஷியும் சொல்ல,

“ஹ்ம்ம்..” என்று தலையை ஆட்டியவள்,

“ஓகே.. அண்ணா அக்கா வெளிய சாப்பிட்டு வந்திடுவாங்க.. சோ நம்ம ஒரு வாக் போயிட்டு அப்படியே டின்னர் முடிச்சிட்டு வரலாமா??” என, ரிஷி அவளை புரியாமல் பார்த்தான்..

“என்ன ரிஷி போலாமா??!!!” என்று கேட்டவளிடம், “ஹ்ம்ம் ஓகே…” எழ,

“ஜூஸ் குடிச்சிட்டு கொஞ்சம் ஃபிரெஷ் ஆகு… நானும் ரெடியாகிட்டு வந்திடுறேன்…” என்றவள், அவளது அறைக்கு செல்லாமல், அவளது அம்மாவின் புகைப்படம் மாட்டியிருக்கும் அறைக்குள் செல்ல, ரிஷியும் பின்னோடே போனான்..

அவன் நினைத்தது சரிதான் என்று நன்கு புரிந்தது..

மதுபாலா அவளின் அம்மாவின் புகைப்படத்தை எடுத்துவைத்துப் பார்த்துகொண்டு இருந்தாள்..

“மதுபி….” என்று ரிஷி ஆதரவாய் அவளது தோள்களைப் பற்ற, அவனது அழைப்பில் வேகமாய் திரும்பியவள், அப்படியே அவன் நெஞ்சின் மீதே சாய்ந்துகொள்ள,

“என்ன மதுபி.. யூ ஆர் எ ஸ்ட்ராங் வுமன்…” என்றபடி ரிஷி அவளை அணைக்க,

“எஸ்.. ஐம் ஸ்ட்ராங்.. அதில நோ டவுட்.. பட் என்னை கேட்டு எதுவுமே நடக்கலையே.. அம்மா இங்கே வர்றபோ உனக்கு அப்பா பாக்கணுமா.. இல்லை வேணுமா?? நம்ம வேற ஊருக்கு போலாமா?? இல்லை இங்கயே உனக்கு பிடிக்குதா?? இப்படி எதுவுமே கேட்கலை ரிஷி..

ஒரு ஸ்டேஜ்ல அப்பா பத்தின கொஸ்டீன் வரவும், இதுதான் பிராப்ளம்னு முழுசாக்கூட அம்மா  சொல்லலை.. சொல்லிருக்கணும் தானே.. நான் எப்படி இருக்கணும்னு சொன்னவங்க, இதெல்லாம் சொல்லிருக்கணும் தானே.. ” என்றவளின் கண்கள் லேசாய் நீர் படலத்தை வெளியிட,

“ஷ் மதுபி…” என்றவன் முதல்முறையாக அவள் அழுவதைப் பார்க்கிறான்… 

அவள் அழுதிருக்கிறாள் தான்.. ஆனால் அவனிடம் காட்டியதில்லை.. அவனோடு இருக்கையில், அதுவும் அவனது அணைப்பில் இருக்கையில் மதுபாலா அழுவதா?? இந்த கேள்வி எழவுமே.

ரிஷி மனதிலோ ‘நீ என்னடா அவளை கவனிக்கிறாய்…’ என்ற கேள்வியும் எழுந்தது..          

      

 

Advertisement