Advertisement

மது – 15

ரிஷிநித்யன்  சென்னை வந்து முழுதாய் ஒருநாள் கூட முடியவில்லை, அவனது நிம்மதி முற்றிலும் தொலைந்து போனது..

மதுபாலாவோடு பேசி, அதுவும் கோவம் குழப்பம் எதுவுமில்லாமால் சந்தோசமாகவே பேசி, பின் வீடு பார்க்கவென்று கிளம்பி வந்து, அதுவும் கூட அவனுக்கு பிடித்த மாதிரி வீடும் கிடைத்துவிட, எல்லாமே அவனுக்கு திருப்தியாய் இருக்கும் நேரத்தில், ஸ்ரீநிவாஸ் அழைத்து பேசிய விஷயம் அவனுக்கு அப்படியே மனதில் இருக்கும் உணர்வுகளை துடைத்துப் போட்டது போலானது..

அவனைப் பொருத்தமட்டில் மதுபாலா இப்போது எப்படி இருக்கிறாளோ அப்படியே அவன் வாழ்விலும், இதன் பிறகும் இருந்தால் போதும்.. அவள் அவனோடு இருந்தால் அதுவே… அதுமட்டுமே போதும்.. பெரிதாய் அவளது பின்னணி பற்றியோ இல்லை அவளது குடும்பம் கன்னியாகுமரியில் எப்படி இருந்தது என்பது பற்றியோ எதுவும் அவன் நினைக்கவில்லை.

அவனுக்குத் தேவை அவனது மதுபி மட்டுமே..

ஆனால் அது குடும்பம், கல்யாணம்.. என்று வருகையில் எல்லாமே நாம் நினைப்பது போல் நடக்குமா என்ன??

என்னதான் ரிஷியின் வீட்டினர் மதுபாலாவை ஏற்றுக்கொண்டாலும், முதலில் அது ரிஷிக்காக என்றாலும் பின் அவளது இயல்பு கண்டு அவர்களுக்கு தனிப்பட்ட முறையிலும் அவளை பிடித்துவிட, ஆனால் ஒரு திருமணம் என்று வருகையில் இதெல்லாம் மட்டுமே போதாதே…

ஆக சாம்பசிவம், மதுபாலாவை ஒருமுறை கன்னியாகுமரிக்கு அழைத்து செல்ல வேண்டும் என, அதை ஸ்ரீநிவாஸ் ரிஷியிடம் தெரிவிக்க, அவனுக்கு ‘என்னடா இது..’ என்று சலிப்பானது.

இதை மதுபாலாவிடம் சொன்னால், அவள் எப்படி எடுத்துக்கொள்வாள், வருந்துவாளோ, வாக்குவாதம் செய்வாளோ என்றெல்லாம் தோன்றிட, மதுபாலாவிடம் இதைப்பற்றி பேசிடவே கூடாது என்றுவிட்டான்..

ஆனால் அவனது சிந்தனை முழுவதும் இப்போது இதில் வந்திட, அவனருகே நின்றிருந்த மனோகரோ,

“டேய் என்னடா அப்படியே நிக்கிற… அட்வான்ஸ் கொடுத்துடலாம் தான…” என,

“ஹா.. என்னடா சொன்ன???” என்று திரும்பியவன், “ம்ம்ச்…” என்று நெற்றியைத் தேய்த்துக்கொண்டு,

“ம்ம் கொடுத்துடலாம்…” என்றவன், அவன் கையில் இருந்த பணத்தை டோக்கன் அட்வான்ஸாக கொடுத்துவிட்டு “டாக்குமன்ட்ஸ் ரெடி பண்ணி வைங்க சார்.. நாளைக்கு திரும்ப வர்றேன்..” என்று சொல்லிக்  கிளம்ப, அதற்குள் மதுபாலா அழைத்துவிட்டாள்..

பொதுவாக அவளது அழைப்பு வந்தாலே, சட்டென்று இதயத்தில் ஒரு உற்சாகம் குமிழியிட்டு இதழில் தோன்றும் புன்னகையோடு அழைப்பை ஏற்பவன், இப்போது முதல்முறையாய் ஒருவித திடுக்கிடலுடன் அழைப்பை  ஏற்காமல் பார்த்துகொண்டு நின்றிருந்தான்..

ஒருவேளை மதுபாலாவிடம் எதுவும் சொல்லியிருப்பார்களோ என்று அவன் யோசித்துக்கொண்டு இருக்க, “டேய் அட்டென்ட் பண்ணி பேசு…” என்று மனோகர் சொல்ல,

“ம்ம்…” என்று தலையை ஆட்டியவன்.. “மது….பி….” என்று அவளது பெயரை இழுத்து முடித்தான்..

“ரிஷி.. வீடு எதுவும் பிடிச்சதா..??” என்று அவள் சகஜமாய் கேட்ட பின்னே தான் ரிஷியால் மூச்சு விடவே முடிந்தது..

ஒருவித நிம்மதியில் கண்களை மூடித் திறந்தவன், “இப்போதான் அட்வான்ஸ் பே பண்ணேன் மதுபி..” என்றவன் “வீட்ல இருந்து யாரும் கால் பண்ணாங்களா???” என,

“இல்லையே… மார்னிங் ஆன்ட்டிக்கிட்ட பேசினது தான்…” என்ற அவளது பதிலில்

“ம்ம் ஓகே.. நான் வர கொஞ்சம் லேட் ஆகும் மதுபி.. சைலேந்திரன் சார மீட் பண்ணிட்டு வர்றேன்…” என,

“சைலேந்திரன்… அவரை எதுக்கு மீட் பண்ண போற??” என்றாள் வேகமாய்..

“நத்திங்… என்கேஜ்மென்ட் அடுத்து நான் பேசவேயில்லை.. இங்க வந்து பார்க்கலைன்னா அது மரியாதையா இருக்காது.. சோ ஒரு மீட் அவ்வளோதான்…”

“ம்ம் ஓகே… டின்னருக்கு வந்திடுவியா??”

“யா.. வந்திடுவேன்…” என்றவனிடம்,

“கார் எடுத்திட்டு போயிருக்கலாம்ல ரிஷி… இப்போ மாறி மாறி அலையணும்…” என்று மதுபாலா குறைபட,

“ஹா ஹா.. இட்ஸ் ஓகே.. இதையும் லைப்ல பழகனும் மதுபி…” என்றவன், “ஓகே வீட்டுக்கு வந்துட்டு பேசுறேன்…” என்று அழைப்பை வைத்துவிட, மனோகர் ரிஷியை வித்தியாசமாய் பார்த்துகொண்டு இருந்தான்..

“என்ன மனோ ??” என்று ரிஷி கேட்க,

“ஆரம்பத்துல இருந்தே நீ ஒரு புரியாத புதிர் தான்டா… திடீர்னு ஒருநாள் கால் பண்ண.. நான் அங்க வர்றேன் ஆனா யாருக்கும் தெரியாதுன்னு சொன்ன.. வந்த வேகத்துல கிளம்பிட்ட.. அடுத்து யாரோ ஒரு பொண்ணு அந்த பொண்ணு வீட்ல இருந்த..

அடுத்து சுவிஸ் போன.. இப்போ மறுபடியும் வந்துட்ட.. கேட்டா அந்த பொண்ண தான் கல்யாணம் பண்ண போறேன்னு சொல்ற.. இதுக்கு நடுவில உங்க வீட்டு ஆளுங்க… எனக்கு இப்போ என்ன பயம் தெரியுமா?? அந்த பொண்ணு தான்.. அதுபாட்டுக்கு தனியா இருந்தாலும் நிம்மதியா இருந்தது..

ஆனா இப்போ நீயும் சரி.. உன் வீட்டு ஆளுங்களும் சரி.. அந்த பொண்ணுக்கு நல்லது பண்றேன்னு சொல்லி அது நிம்மதிய கெடுக்காம இருந்தா சரி…” என்று மனோகர் தன் மனதில் இருப்பதை சொல்லிட, ரிஷிக்கு என்னவோ போல் ஆனது..

“என்னடா சொல்ற???” என்று ரிஷி கேட்க,

“நீ சொன்னதை வச்சு சொல்றேன்டா.. அவ்வளோதான்… அந்த பொண்ணு இதுநாள் வரைக்கும் தெளிவா இருந்திருச்சு.. இப்போ குடும்பம்.. ஆளுங்கன்னு நீங்க எல்லாம் வந்து போகன்னு இருக்கீங்க.. இப்போ சரி.. ஆனா கல்யாணம் ஆகி பின்னாடி ஒரு சின்ன விஷயம் நடந்தாக்கூட அந்த பொண்ணு பெருசா அப்சட் ஆகும்.. அது நடக்காம பார்த்துக்கோ…” என்றான் மனோகர் தெளிவாய்..

அவன் சொல்வதும் சரிதான்.. ஆனால் அது ரிஷிக்கோ மதுபாலாவிற்கோ பொருந்துமா என்று கேட்டால், அவர்கள் இருவரும் வாழ்ந்து பார்த்தால் தானே தெரியும்..

அதிலும் ரிஷிக்கு மதுபாலாவின் மீது நம்பிக்கை இருந்தது.. அவள் எதையும் சமாளித்து நிற்பாள் என்று..

ஆக, “மதுபி நீ நினைக்கிற போல பொண்ணு இல்ல டா.. ஷி இஸ் டோட்டலி டிப்ரன்ட்…” என்றுசொல்ல,

“என்ன டிப்ரன்ட்னாலும், பொண்ணுங்களுக்குன்னு  சில எதிர்பார்ப்புகள் இருக்கும்.. அது என்னன்னு தெரிஞ்சுக்கோ.. நீ பாட்டுக்கு வந்த.. அந்த பொண்ணு வீட்ல தங்கின.. அடுத்து உன் பேமிலி வந்தாங்க.. அப்புறம் நீ பிடிவாதம் பண்ண..

அடுத்து நிச்சயம் ஆச்சு.. இப்பவும் நீ இங்க வந்திருக்க.. இதோ வீடு பாக்குற.. நியாயமா பார்த்தா வீடு பார்க்க அந்த பொண்ணையும் கூட்டிட்டு வந்திருக்கணும்.. உனக்கு எல்லாமே நீ நினைச்சது நடக்கணும்.. கொஞ்சம் அந்த பொண்ணையும் யோசி டா…” என்று போகிற போக்கில் மனோகர் சொல்லிக்கொண்டே பைக்கை கிளப்ப,

ரிஷிக்கு ‘அட இது நமக்கு தோணலையே…’ என்று தோன்றியது..

ரிஷி கிளம்பும் போது, மதுபாலா வாசல் வரைக்கும் வந்து நின்று பார்த்தாள் தான்.. வருகிறேன் என்று அவளும், வருகிறாயா என்று அவனும் சொல்லவும் இல்லை கேட்கவும் இல்லை..

ஒருவேளை அழைத்திருந்தாள் வந்திருப்பாளோ என்று இருக்க, மனோகர் வண்டியைக் கிளப்பி நின்றவனிடம் “ஒன் மினிட் டா..” என்றுசொல்லி, திரும்ப மதுபாலாவிற்கு அழைத்தான்..

“ரிஷி…” என்றவளிடம்,

“மதுபி.. வீடு எனக்கு ஓகே தான்.. டோக்கன் அட்வான்ஸ் கூட குடுத்தாச்சு தான்.. பட்.. கொஞ்சம் நீயும் பார்த்திட்டா எனக்கு நிம்மதியா இருக்கும்..” என,

அவளோ “ஹா ஹா ஹா…” என்று வழக்கம் போல் சிரித்துவிட்டாள்..

“என்ன மதுபி சிரிக்கிற???”

“பின்ன சிரிக்காம…?? இதை நீ கிளம்பும் போது.. சொல்லிருக்கணும்.. நீயும் வான்னு.. இப்போ எல்லாம் பார்த்து முடிவு பண்ணிட்டு வந்து பாருன்னு சொன்னா.. நான் வந்து பார்த்து பிடிக்கலைன்னு சொன்னா நீ என்ன செய்வ ரிஷி…” என, ரிஷி பதில் சொல்ல முடியாமல் நின்றான்..

உண்மை அதுதானே.. அவனுக்கு பிடித்துவிட்டது என்றுதானே அட்வான்ஸ் கூட கொடுத்துவிட்டான்.. இப்போது வந்து அவளைப் பார் என்றால் அவள் என்ன செய்வாள்.. பேசாமல் நிற்க,

“ரிஷி.. ஒரு விஷயம் பண்றதுக்கு முன்ன என்னை கேளு.. இல்லை நீயா பண்ணிட்டியா அது சரியா இருக்கும்னு தெளிவா இரு.. சோ.. இந்த வீடு உனக்கு பிடிச்சிருந்தா எனக்கும் ஓகே.. நாளைக்கு ஷாப்பிங் போகணும் சொன்னதானே அப்போ வந்து பார்த்துக்கிறேன்…” என்று இலகுவாய் சொல்லிட, கொஞ்ச நேரம் முன்பு மனோகர் சொன்னது எத்தனை உண்மை என்று புரிந்தது ரிஷிக்கு..

அவளைப் பற்றி யோசித்தானா என்றால் இப்போது வரைக்கும் இல்லை என்றுதான் தோன்றியது.. அவள் அவனோடு இருந்தால் போதும்.. அதுமட்டுமே அவனது சிந்தையில் இருக்க, மதுபாலாவின் எண்ணங்கள் என்ன என்று கேட்டிட தவறிவிட்டான்..

“டேய்… இன்னும் எவ்வளோ நேரம் இப்படி நடுரோட்ல நின்னு தியானம் பண்ணுவ?? உனக்காக லீவ் போட்டிருக்கேன் இன்னிக்கு.. ஒழுங்கா ஒரு ஹோட்டலுக்காது கூட்டிட்டு போ…” என்று மனோகர் கத்த,

“ம்ம்ச் வர்றேன்டா…” என்றவனும் அவனோடு வண்டியில் தொத்திக்கொண்டான்..

சைலேந்திரனைப் பார்க்கவேண்டும் என்று இருந்தவனுக்கு, இப்போது அது பின் சென்று முதலில் மதுபாலாவோடு போய் பேசிட வேண்டும் என்று இருந்தது.. ஆனாலும் ஸ்ரீநிவாஸ் கூறிய விசயமும் அவன் மனதில் ஒரு உறுத்தலை கொடுக்க, கண்டிப்பாய் சைலேந்திரனை பார்த்து பேசுவதும் முக்கியமாய் பட்டது..

மனோகரும் அவனும் ஒரு ஹோட்டலுக்கு சென்றுவிட்டு உண்டு முடித்து கிளம்புகையில், சைலேந்திரனுக்கு அழைத்தவன், அவரைப் பார்க்க வருவதாய் சொல்ல, அவரும் சரியென்றுவிட,

“மனோ என்னை எக்மோர் கிட்ட டிராப் பண்ணுடா…” என்று சொல்லி இருவரும் கிளம்ப, அங்கே மதுபாலாவோ எப்போதும் போல் அவள் வீட்டு திவானில் சாய்ந்து ஒரு புத்தகம் படித்துகொண்டு இருந்தாள்..

ரிஷி இருந்தால் ஏதாவது சமைக்கலாம் என்று இருந்தவளுக்கு, இப்போது அவனும் கிளம்பிட, அதுவும் இரவே வருவேன் என்று சொல்லிட, சமைத்து உண்ண எதுவும் பிடிக்கவில்லை.. ஒரேதாய் இரவே ஏதாவது செய்துகொள்வோம் என்று கொஞ்சம் பழமும், ஒரு ஜூஸும் குடித்துவிட்டு புத்தகமும் கையுமாய் இருந்துவிட,  கல்யாணி அழைத்துவிட்டார்..   

“ஆன்ட்டி…” என்றபடி மதுபாலா எழுந்தமர,

“இன்னும் இந்த ஆன்ட்டிய மட்டும் விடமாட்டேங்கிற நீ…” என்று கல்யாணி சிரிக்க,

மதுபாலாவும் சிரித்தவள், “அது அப்படியே வருது…” என்று சொல்ல,

“ஹ்ம்ம் சரி சரி.. ரிஷி எதுவும் சொன்னானா??? நான் கால் பண்ணேன் நாட் ரீச்சபிள்னு வருது..” என,

“வீடு பார்த்திட்டேன், சைலேந்திரன பார்க்க போறேன்னு சொன்னான் ஆன்ட்டி.. அவ்வளோதான் தெரியும்.. நைட் டின்னருக்கு வர்றேன்னு சொன்னான்…” என்று மதுபாலாவும் எதார்ச்சையாக சொல்லிட,

“ஓ.. அப்போ நைட் அங்கயா ஸ்டே பண்றான்???” என்று வேகமாய் கேட்டார் கல்யாணி..

“ம்ம் ஆமா ஆன்ட்டி…” என்றாள் யோசிக்காமல்.

“மது.. நான் சொல்றேன்னு தப்பா நினைக்க வேணாம்… கல்யாணம் முடியுற வரைக்கும் இப்படி ஒண்ணா எல்லாம் இருக்க வேணாமே..” என்று கல்யாணி  தயங்கி தயங்கி சொல்ல,

மதுபாலாவிற்கு வேகமாய் “ஏன் அதுக்கென்ன??” என்று கேட்க வந்தாலும், அதை விட வேகமாய் சுதாரித்து வார்த்தையை விழுங்கி அமைதியாய் இருக்க,

“மதுபாலா…” என்று கல்யாணி மீண்டும் அழைக்க,

“ம்ம் சொல்லுங்க ஆன்ட்டி…” என்றாள் அமைதியாய்..

“பதிலே பேசாம இருக்க மது…”

“என்ன பேச ஆன்ட்டி… எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை..” என்றவள் மீண்டும் தன் அமைதியை தொடர,

“இல்லம்மா நான் சொல்றது உனக்கு சங்கடமா தான் இருக்கும்.. நினைச்சுப் பாரேன்.. இதுக்கு முன்னாடி வேற.. இப்போன்னா வேற.. நான் உங்களை தப்பு சொல்லல.. கண்டிப்பா அப்படி சொல்லவும் மாட்டேன்..

ஆனா இது நம்ம குடும்பத்துக்கு ஒத்து வராது… ரெண்டு பெரும் பார்த்துக்கோங்க.. பேசிக்கோங்க வேணாம் சொல்லலை.. ஆனா இப்படி ஒண்ணா ஸ்டே பண்றது வேண்டாம். ரிஷி அப்பாவும் இதை ஏத்துக்க மாட்டார்..” என்று தயக்கமாய் ஆரம்பித்தவர், திண்ணமாய் பேச்சை முடிக்க,

அவளுக்கு சரி என்று சொல்வதைத் தவிர வேறு வழியில்லை.

இதற்குமுன் சரி.. ரிஷி ஒரு விருந்தினராக வந்தான்.. ஆனால் இப்போது, அப்படியில்லையே.. ஒரு அன்னையாய்… ஒரு குடும்பத்தின் தலைவியாய்.. கல்யாணி சொல்வது சரிதான்..  ஆனால் ரிஷி என்ன சொல்வானோ என்று தோன்ற,

“சரி ஆன்ட்டி…” என்று சொன்னவள், “நீங்களே ரிஷிக்கிட்ட சொல்லிடுங்களேன்…” என,

“நானா??? வேணாம்… நீயே போன் பண்ணி சொல்லிடு. அந்த பையன் மனோ ரூம்ல இருக்க சொல்லிடு.. நீயும் நேரத்துக்கு சாப்பிடு மதுபாலா.. அப்படியே வீடுக்கு நீயும் போய் பார்த்திட்டு வா.. அவனுக்கு அதெல்லாம் ஒண்ணும் தெரியாது.. திங்க்ஸ் வாங்குறது எல்லாம் நீயே போய் பார்த்து வாங்கு..” என்றவர் அடுத்தும் கொஞ்ச நேரம் பேசிவிட்டு வைத்துவிட,

முதலில் சங்கடமாய் உணர்ந்த மதுபாலா, பின் கல்யாணி பேசி முடிக்கும் போது சிரிப்பாய் வந்தது..

உடன் சேர்ந்து ஊர் சுற்றலாம்… பார்க்கலாம்.. பேசலாம்.. ஆனால் ஒரே வீட்டில் தனி தனி அறையில் தூங்க மட்டும் கூடாது.. இதை எண்ணும் போது இன்னும் சிரிப்பு வர,

‘ரிஷிக்கிட்ட இதை சொல்லி அவன் முகத்தைப் பார்க்கணுமே.. ஹா ஹா..’ என்று அவளே கற்பனை பண்ணி சிரித்துக்கொண்டாள்..

ரிஷியோ சைலேந்திரனைக் காண சென்றவன், ஸ்ரீநிவாஸ் சொன்னதை சொல்லி, மதுவின் உறவினர்கள் யாரேனும் இருக்கிறார்களா என்று விசாரிக்க, அவரோ அப்படி யாரும் இல்லையே என்று திடமாய் மறுத்தார்..

“சார்.. மதுபிக்கு இன்னும் இந்த விசயம் தெரியாது.. நீங்க ஒன்ஸ் அங்க யாரையும் விசாரிக்க முடியுமா?? பிகாஸ் அப்பாவும் அண்ணனும் எதையும் யோசிக்காம இதை பண்ண மாட்டாங்க.. மதுபிக்கிட்ட பேசுறதுக்கு முன்ன எனக்கு என்ன டீடெயில்ஸ்னு தெரிஞ்சா நல்லாருக்கும்…” என்று ரிஷி சொல்ல,

கொஞ்சம் யோசித்த சைலேந்திரன் “ஹ்ம்ம் ஓகே ரிஷி.. என்னோட ரிலேடிவ்ஸ் கூட இப்போ அங்க யாரும் நிறைய இல்லை.. ரெண்டு மூணு பிரண்ட்ஸ் இருக்காங்க.. அவங்களை கேட்டுப் பார்க்கிறேன்.. ஆனா.. மதுபாலாக்கிட்ட பேசுறது மட்டும் கொஞ்சம் யோசித்து என்ன பேசணும் எப்படி பேசணும்னு முடிவு பண்ணிட்டு எல்லாம் பேசுங்க..” என்றவரிடம்,

அவனுக்கும் சரி என்று மட்டுமே சொல்லும் சூழல்..

தன் போக்கில் இருந்தவளை ஒருவித குடும்ப சூழல் வந்து சூழ்ந்துகொள்ள, தன் போக்கில் வாழவேண்டும் என்று இருந்தவனையும் அவனது குடும்ப சூழலில் இருந்து விலக முடியாது போக, இருவருக்கும் இடையில் மொட்டுவிட்டிருக்கும் காதல் கன்னத்தில் கை வைத்து வேடிக்கைப் பார்த்தது..

கிளம்பிவிட்டேன் கொஞ்ச நேரத்தில் வந்துவிடுவேன் என்று ரிஷி, மதுபாலாவிற்கு அழைக்க, அவளுக்கு வராதே என்று சொல்ல மனமே வரவில்லை..

காலையில் வந்தவன், ஒரு டீயோடு கிளம்பிவிட்டான்.. சரி வந்து நன்றாய் சாப்பிடவாது செய்யட்டும் என்று நினைத்தால், கல்யாணி அப்படி சொல்லிவிட்டார்..

அவர் சொல்வதும் ஒருவிதத்தில் சரியென்று தான் பட்டது..

ஆனால் இதை ரிஷியிடம் சொன்னால் என்ன நினைப்பானோ என்று ஒருவிதம் பயமும் இருக்க,

“ம்ம் சரி…” என்றுமட்டும் சொன்னவளிடம்,

“என்ன மதுபி டோன் சரியில்லையே.. என்னாச்சு…” என்று ரிஷி கேட்க,

“இல்ல ஆன்ட்டி போன் பண்ணாங்க…” என்று அவள் சொன்னதும், ரிஷியின் இதயம் அப்படியே கொஞ்சம் நின்றுவிட,

“என்ன சொன்னாங்க…” என்றான் வேகமாய்..

“அது… அதுவந்து…”

“ம்ம்ச் மதுபி.. என்னனு சொல்லு…” என்று ரிஷி பல்லைக் கடிக்க, கால் டாக்சி ஓட்டுனர் கூட வேகமாய் அவனை திரும்பிப் பார்த்தார்..

“அது ரிஷி.. நம்மளை ஒண்ணா ஸ்டே பண்ண வேணாம் சொல்றாங்க..” என்றதும்,

“ப்பூ.. இவ்வளோதானா…” என்று ரிஷி, இழுத்து பிடித்த மூச்சை வெளியிட,

“ஏன் நீ என்ன நினைச்ச???” என்றாள் மதுபாலா..

“நத்திங்.. நத்திங்.. நான் இதை முன்னமே எதிர்பார்த்தேன் மதுபி… சோ நோ பிராப்ளம்..”

“ம்ம் அப்போ நீ டின்னருக்கு வர்றேன்னு சொன்னது…” என்ற மதுபாலாவின் குரலில் இரண்டு விதமான உணர்வுகள்..

ஒன்று ரிஷி இதை பெரிதாய் நினைக்காத நிம்மதி.. மற்றொன்று ரிஷி வரமாட்டானோ என்ற ஏக்கம்..

“யார் சொன்னா.. வரலைன்னு.. கண்டிப்பா வர்றேன்.. வந்துட்டே இருக்கேன்.. ரெடி பண்ணி வை.. பட் சாப்பிட்டிட்டு கிளம்பிடுவேன்.. ரூம் கூட புக் பண்ணிட்டேன்…” என்று அவன் சொன்னதும், சந்தோசமாய் சரியென்றவள் அவனுக்கான இரவு உணவை தயார் செய்யப் போனாள்..                           

                           

                                                    

 

          

 

Advertisement