Advertisement

                     மனம் அது மன்னன் வசம் – 9

சென்னை…

பசுபதிக்கு அங்கே ஏற்கனவே நேரில் சென்று முடிக்க வேண்டிய வேலைகள் இருந்தது. வீட்டிற்கு ஆட்கள் வரவும் உமையாளை இங்கே விட்டுவிட்டு சென்று வரலாம் என்று எண்ணியிருக்க,  பிரேமாவின் உடல்நலம் சரியில்லை என்று தகவல் வரவும், அடித்து பிடித்து கிளம்பிச் செல்லவேண்டிய நிலை.

வார்த்தைகளின் வீரியம் நாம் கொட்டிய பிறகு தானே புரியும்..!!

அந்த ஒரு சூழல் தான் இப்போது.!!

உமையாள் கொட்டிய வார்த்தைகள், அவளின் அந்த நேரத்து மன குமுறலாய் இருந்தாலும், அதனைக் கேட்ட பிரேமாவிற்கும் சரி, பசுபதிக்கும் சரி அதனை அத்தனை எளிதாய் எடுத்துக்கொள்ளவும் முடியவில்லை.

பசுபதிக்கு மனதில் பெருத்த அடி எனில், பிரேமாவிற்கு மனதோடு சேர்த்து உடலும் வீழ்ந்து போனது.

உமையாளை நல்லபடியாய் வளர்த்து அவளுக்கென்று ஓர் வாழ்வு அமைத்துக் கொடுத்த நிம்மதியில் இருந்த பிரேமாவை, உமையாளின் வார்த்தைகள் அடியோடு சாய்த்தது என்றுதான் சொல்லவேண்டும்.

ரத்த அழுத்தம் கூடி, மயங்கி சரிய, அவசர அவசரமாய் மருத்துவமனையில் சேர்த்தனர். இங்கே பசுபதியோ, உமையாள் பேசியதை எல்லாம் கேட்டதாய் வெளியே காட்டிக்கொள்ளாது இருக்க பெரும்பாடு பட, சரி வேலை விசயமாய் சென்று வந்தாலாவது மனது சற்று தெளிவு பெரும் என்று நினைக்கும் வேளையில், பூஜா உமையாளுக்கு அழைத்து,

“அம்மாக்கு முடியல.. ஹாச்பிட்டல்ல அட்மிட் பண்ணிருக்கோம்…” என, அவ்வளோதான் அடுத்த நொடி உமையாள் அதறி பதறி பசுபதிக்குத் தான் அழைத்தாள்.

முதலில் அழைப்பை எடுக்கவே இல்லை அவன்.

அந்த நேரம் அவளின் குரல் கேட்டால் கூட, தானும் ஏதேனும் பேசிடுவோம் என்று எடுக்காது விட, விடாது அழைத்தாள் உமையாள்.

“ம்ம்ச் என்ன வேணும்…”

“அ.. அங்க.. சென்னைல.. அத்தைக்கு முடியல் .. ஹாஸ்பிட்டல்… உடனே போகணும்…” என்று உமையாள் படபடக்க,

“என்னாச்சு??!” என்றான் நிதானமாகவே.

“தெரியலை.. போகணும்..” என்றவளுக்கு அழுகை வெடித்தது.

“ஷ்..!! உமையாள்..” என்றவனின் குரலில் இருக்கும் நிதானம் எல்லாம் அவளிடம் இல்லை.

“நீங்க வாங்க.. என்னை கூட்டிட்டு போங்க ப்ளீஸ்…”

“நீ கொஞ்சம் முதல்ல அமைதியா இரு.. நான் அங்க போன் பண்ணி கேட்கிறேன்…” என்றவனுக்கு, எதனால் இப்படி என்று யூகம் செய்ய முடிந்தது.

“இல்ல.. நான் அத்தைய பாக்கணும்…” என்றவள் மேலும் அழுகை கூட்ட,

“ம்ம்ம்…” என்று கண்கள் மூடித் திறந்தவன், “சரி ட்ரெஸ் எடுத்து வை..” என்றுவிட்டான்.

அவளிடம் உரிமையாய் அதட்டியோ இல்லை அனுசரனையாகவோ அந்தநொடி அவனால் பேசிட முடியவில்லை. எதோ ஒரு விலகல், விரிசல் அவனுள்  வந்துவிட்டது நிஜம். அலைபேசியை காதில் வைத்தபடியே தான் அவன் அமர்ந்திருந்தான்.

வாழ்வில் தோற்றுவிட்டதாய் ஓர் உணர்வு. எல்லாமே இருந்தும் எதுவும் இல்லை என்ற ஓர் எண்ணம் வெகுவாய் அவனுள் பரவிப் போனது.

‘நான் நல்லாவே இல்லை…’ என்ற உமையாளின் வார்த்தைகள் அவனுள் ஒலித்துக்கொண்டே இருந்தது.

‘என்னோட அவ நல்லா இல்லைன்னா… இப்படியொரு வாழ்க்கை தேவையா??!! பிடிக்கலைன்னு சொல்றவளை பிடிச்சு வைக்க முடியுமா??!’

இதுவே ஓட, மீண்டும் அழைப்பு உமையாளிடம் இருந்து “என்னங்க எடுத்து வச்சிட்டேன்.. எப்போ வர்றீங்க??!!” என்ற குரலில் அவசரமும் படபடப்பும்.

“ம்ம்ம் இதோ.. டிக்கெட் இருக்கான்னு பாக்குறேன்…” என்றவன் தன் உணர்வுகள் அனைத்தும் மறைத்து, மதுரையில் இருந்து பிளைட் டிக்கட் இருக்கிறதா என்று பார்த்து, அதனை ஏற்பாடு செய்து, பின் சித்தி சித்தப்பாவிற்கு அழைத்து சொல்லி, பள்ளியில் இருந்து கிளம்பி வந்து அவளையும் அழைத்துக் கொண்டு கிளம்பிவிட்டான்.

அதற்குள் உமையாள், பால்நிலாவிடமும், பனிமலரிடமும் சொல்லியிருக்க, வீட்டிலிருந்து மதுரை செல்லும் நேரம் முழுதும் அவர்களின் பேச்சு தான் அலைபேசியில்.

பசுபதிக்கு இருந்த மனநிலையில் எரிச்சல் அடக்கமாட்டாமல் வந்தது. எல்லாரும் அவளுக்காகவே பார்க்கிறார்கள், தன்னை யாரும் ஒருவார்த்தை கேட்பதில்லை என்ற கவலையும் கூட..

அவளுக்கு மட்டுமா இவ்வாழ்வு புதிது.. அவனுக்கும் தானே.. மனம் ஏனோ மிக மிக தனிமையை உணர, தனியே இருக்க வேண்டும் போலும் இருக்க, உமையாள் அலைபேசியில் பேசிக்கொண்டே வருவது எரிச்சல் கொடுக்க, இடக்கையால் அவளின் அலைபேசியை வெடுக்கென்று பிடுங்கியவன், அதனை அமர்த்தி வைத்துவிட்டான்.

இதுபோல் தான் அன்று ட்ரைனிலும் செய்தான்..!! இன்றும் இப்படி.. உமையாள் அப்போதும் அவனை அதிர்ந்து பார்க்க

“ஊர் போற வரைக்கும் யாரோடையும் பேசக்கூடாது..” என்று மிரட்டல் தான் செய்தான்.

அவளுக்கோ கண்ணில் இருந்து நீர் பொல பொல என்று வழிய, “ம்ம்ச்… இப்போ என்னாச்சுன்னு இவ்வளோ அழுகை உனக்கு.. ப்ரெஷர் கூடிருக்கு அவங்களுக்கு.. சரியா போகும்.. அழுது அழுது என்னை இம்சை பண்ணாத.. பேசாம வா…” என்று அதட்ட,

உமையாளுக்குமே “ச்சே…” என்ற உணர்வு..

அதன் பின்னே சென்னை செல்லும் வரைக்கும் இருவரும் பேசவேயில்லை. சென்னை சென்று விமான நிலையம் விட்டு நேரே மருத்துவமனை செல்ல, அங்கே மாணிக்கம் இவர்களை எதிர்பார்க்கவில்லை போல, அதிர்ச்சியாய் தான் பார்த்தார். பூஜாவும் சொல்லவில்லை போல.

“மாமா..” என்று வேகமாய் உமையாள் அவரை நெருங்க, அவரோ பசுபதியை தான் பார்த்து “வாங்க.. வாங்க தம்பி…” என,

“இப்போ எப்படி இருக்காங்க..??” என்றான் அவனும்.

“ப்ரெஷர்தான்.. என்னாச்சு தெரியலை திடீர்னு.. ரெண்டு நாள் இருக்க சொல்லிருக்காங்க..” என்றவர், அழுதபடி நிற்கும் உமையாளைப் பார்த்து

“இப்போ என்னாச்சுன்னு இப்படி அழுகை…” என்றார் ‘வாயை மூடு…’ என்ற தொனியில்.

“இல்ல மாமா அத்தை..” என்று ஆரம்பிக்க,

“இங்க நாங்க எல்லாம் இருக்கோம்தானே.. இப்படி அடிச்சு பிடிச்சு இவரையும் டென்சன் பண்ணி வரணுமா நீ?? கொஞ்சம் நிதானமா எதையும் யோசிக்க மாட்டியா??” என, அவளுக்கோ மேலும் அழுகை கூட, அதைக் கட்டுப்படுத்த பெரும்பாடு பட்டுப் போனாள்.

அவளின் போராட்டம் பசுபதிக்கு புரிந்ததுவோ என்னவோ,

“இல்ல.. நாங்க ஏற்கனவே சென்னை தான் கிளம்பி இருந்தோம்.. எனக்கு இங்க ரெண்டு நாள் வேலை இருக்கு.. அதனால ஏற்கனவே இங்க வர ப்ளான் தான்… இப்போ கொஞ்சம் அவசரமா வந்தோம் அவ்வளோதான்..” என, மாணிக்கம் சற்று ஆசுவாசம் அடைவது போல் இருந்தது.

“சரிங்க தம்பி.. நீங்க இவளை வீட்டுக்கு கூட்டிட்டு போங்க.. பூஜா இங்க வரவும் நான் அங்க வர்றேன்…” என்றவர்

“பார்த்துக்கோ…” என்று உமையாளிடமும் சொல்ல, அவளோ அத்தையை கண்ணில் காணாது வீடு செல்வதா என்ற நினைப்பில் இருந்தாள்.

அவள் முகத்தைப் பார்த்தவனுக்கோ, இது சரிபடாது என்றெண்ணி “நான் ஏற்கனவே ரூம் பூக் பண்ணிட்டேன்.. ஒன்னும் பிரச்சனை இல்லை.. உமையாள் அவங்க அத்தை கூட இருக்கணும்னு நினைப்பா.. சோ இருக்கட்டும்…” என்றவன் கிளம்பியும் விட, இருவருமே அவனை திகைத்துத் தான் பார்த்தனர்.

‘எதுவும் கோபமாய் கிளம்புகிறானோ..’ என்று.

பணம் படைத்தவர்களின் கோபம், பணத்தை விட பெரியது போல..!!

மாணிக்கம் அப்படி எண்ணிப் பார்க்க, உமையாளுக்கோ தனியே விட்டுப் போகிறானே என்ற நினைப்பு.

‘இரு…’ என்று சொல்வாளா என்று சிறிய நப்பாசை அவனுக்கு இருந்தது நிஜம். அவளோ எதுவுமே சொல்லாது இருக்க, ‘போதும்டா சாமி…’ என்று கிளம்பிவிட்டான்.

தன் வாழ்வு பற்றிய சிந்தனையில், கண் முன்னே நடப்பது எல்லாம் அவனின் கருத்தில் பெரிதாய் தெரியவில்லை.

பசுபதி கிளம்பிட, மாணிக்கமோ பிடி பிடியென பிடித்துவிட்டார் உமையாளை. அவருக்கு என்னவோ பசுபதியை பிடிவாதம் பிடித்து உமையாள் அழைத்து வந்திருப்பதாய் பட்டது. அவர் திட்ட திட்ட, அவள் அமைதியாகவே நிற்க, மாணிக்கத்தின் அலைபேசி அடிக்க, எடுத்துப் பார்த்தார்.

பசுபதி தானே.

“சொல்லுங்க தம்பி..” என்று உடனே பதில் சொல்ல, அடுத்து “சரி சரி.. இதோ சொல்றேன்…” என்றவர்,

“உன்னோட போன் தம்பிக்கிட்ட இருக்காம்.. வெளிய வர சொல்றார்…” என, உமையாளுக்கு அவனும் திட்டுவானோ என்ற பயமே அப்போது.

‘அத்தையை பார்க்க வேண்டும்..’ அதுமட்டும் தான் அவளுக்கு சிந்தையாய் இருக்க, யார் என்ன திட்டினாலும் பரவாயில்லை என்று மனதை திடம் செய்துகொண்டு, வெளியே செல்ல, அப்போதும் பசுபதி கடுகடுவென தான் முகம் வைத்து நின்றிருந்தான்.

அருகில் போய் நின்றவள் பேசாது நிற்க “உன்னோட போன்…” என்று நீட்ட, மௌனமாய் வாங்கிக் கொண்டாள்.

பின் பர்சில் இருந்து பணம் எடுத்து “செலவுக்கு வச்சுக்கோ…” என, சட்டென்று அவளுக்கு வேண்டாம் என்று சொல்லத்தான் மனம் வந்தது.

சொல்லியும் விட்டாள்.!!

அவளை ஒரு பார்வை பார்த்தவன் “பரவாயில்ல வச்சுக்கோ.. அவங்களுக்கு ஏதாவது வாங்கிக் கொடுக்கணும்..” என்று அவள் கையில் பணம் வைத்தவன்,

பின் ஏதோ யோசனை வந்தவனாய் “அவங்களோட பேசுறப்போ நான் நல்லாருக்கேன்.. நம்ம நல்லாருக்கோம் சொல்லு.. மனசுல இருந்து இல்லைன்னாலும், அட்லீஸ் அவங்களுக்காகவாது சொல்லு..” என்றவன் அவளின் பதில் கேளாது நடந்துவிட்டான்.

உமையாளோ ‘என்ன சொல்லிட்டு போறாங்க…’ என்று பார்த்து நிற்க, கிஞ்சித்தும் அவளுக்கு தான் பேசிய வார்த்தைகளின் அர்த்தம் செய்த அனர்த்தம் புரியவில்லை.

அதனைப் பற்றி யோசித்தால் தானே புரியும்..

பசுபதிக்கு மற்றதெல்லாம் விடுத்தது ‘இவளுக்கு என்னோட வாழவே பிடிக்கலன்னு சொல்லிட்டா என்ன செய்ய??!!’ இது தான் அவனுக்கு. இவ்வெண்ணத்தில் இருந்து தப்பிக்க, ஊர் சுற்ற ஆரம்பித்துவிட்டான்.

தனியே இருக்கவேண்டும் போல இருந்தாலும், அதுவும் பிடிக்கவில்லை அவனுக்கு. ஆக ஊர் சுற்றினாலாவது மனது வெவ்வேறு விசயங்களை உணரும் என்று சுற்ற, கண்ணில் பட்ட ஹோட்டல் ஒன்றில் ரூமும் புக் செய்துகொண்டான்.  

உமையாளோ பிரேமா கண் விழித்ததும் ஒருபாடு மேலும் அழ, நல்லவேளை அந்நேரம் பூஜா தான் அங்கிருந்தாள். மாணிக்கம் இருந்திருந்தால் அவ்வளோதான்.

உமையாளைப் பார்த்து பிரேமா கேட்ட முதல் கேள்வியே “யாரோட வந்த??” என்பது தான்.

“அவ.. அவரோட…” என்றவள் “என்னோட நல்லாதானே பேசினீங்க அத்தை..” என,

“ம்ம்…” என்றவர், சிறிது நேரம் கண் மூடியே படுத்திருந்தார்.

பூஜாவோ மருந்து மாத்திரை வாங்கவென செல்ல, உமையாள் மெதுவாய் பிரேமாவின் கை பிடித்திருக்க, “உமையா…” என்ற அவரின் குரலில் அவர் முகம் பார்க்க,

அவரோ “உனக்கு தப்பான வாழ்க்கை அமைச்சுக் கொடுத்துட்டேனா??” என்று நிறுத்தி நிதானமாய் கேட்க,

‘அச்சோ.. என்ன பேச்சு இது…’ என்றுதான் அவளுக்குத் தோன்றியது.

அவள் பேசும் முன்னம் பிரேமாவே “நீ எதுவுமே பிடிக்கலன்னு சொன்ன நிமிஷம் இருந்து எனக்கு என்ன செய்றதுன்னே தெரியலை. மாமாக்கிட்ட கூட இதெல்லாம் சொல்ல முடியாது.. ஒரே டென்சன்.. அதான் இப்படி…” என்றவர்,

“நீ.. நீ சொல்லு.. உனக்கு பிடிக்கலயா அங்க?? என்ன நடந்துச்சு…” என்று வேக வேகமாய் பேச, உமையாளுக்கு அப்போது தான் தான் செய்த மடத் தனம் புரிய, தலையில் அடித்துக் கொண்டாள்.

“உமையா…!!”

“அத்தை… ஒண்ணுமில்ல.. எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை..” என்றாள் சமாதானம் செய்யும் விதமாய்.

“இல்ல… நீ அப்படி அழுதுட்டு பேசின… என்னவோ சரியில்ல தானே.. நீ அப்படியெல்லாம் பேசமாட்ட தானே..” என்றவருக்கு அழுகை முட்ட,

“அத்தை ப்ளீஸ்.. நா.. நான் நல்லா இருக்கேன்.. நிஜமா…” என்கையில் பசுபதி சொல்லி சென்றதும் நினைவில் வர,

‘ஒருவேளை இதெல்லாம் தான் சொன்னாங்களோ…’ என்றும் தோன்றியது.

“இல்லை உன் முகமே சரியில்லை…”

“நிஜமா அத்தை.. நான் நல்லா இருக்கேன். அப்.. அப்போ சும்மா சின்னதா ஒரு சண்டை.. நீங்க போன் பண்ணவும் அப்படி பேசிட்டேன்..” என, சில நொடிகள் அவள் முகம் பார்த்தவர், அதில் உண்மை இருப்பது கண்டு,   

“அதுக்காக.. எதுவுமே பிடிக்கலைன்னு சொல்வியா நீ?? மாப்பிள்ளை வீட்டு ஆளுங்க யாரும் கேட்டிருந்தா என்ன பண்ணிருப்ப?? இது எவ்வளோ பெரிய பிரச்சனை எல்லாம் கொண்டு வரும் தெரியுமா??”

“யா.. யாரும் வீட்ல இல்லை…” எனும் போதே உமையாளுக்கு குரல் இறங்கிப் போனது.

பசுபதி கேட்டிருந்தால் அவன் என்ன நினைத்திருப்பான் என்றெண்ண, கேட்டிருக்க வாய்ப்பில்லை என்றும் நினைத்து திடப் படுத்திக்கொண்டாள்.

ஓரளவு பிரேமாவிற்கு மனம் சமாதானம் ஆனாலும், பசுபதி வந்து விட்டுவிட்டு சென்றுவிட்டது சற்று உறுத்தலாகவே இருக்க,

“அந்த தம்பிக்கு போன் போடு..” என,

“அவருக்கா??!!” என்று பார்த்தாள்.

“ம்ம் போடு…”

“எ.. எதுக்குத்தை.. எதோ வேலைன்னு போனார்…”

“போய் நேரமாச்சு தானே.. சாப்டீங்களா என்ன எதுன்னு கேட்க மாட்டியா நீ??!!”

“ம்ம்ம்…” என்று இழுத்தவளுக்கு பயமாய் போனது.  இவன் என்ன சொல்வானோ என்று.

“கூப்பிட்டு பேசு உமையா.. பொண்டாட்டின்னு சும்மா பேருக்கு இருக்கக் கூடாது.. இதெல்லாம் தானா வரணும்..” என்று பிரேமா அதட்ட, வேறு வழியே இல்லாது பசுபதிக்கு அழைத்தாள்.

அப்போது தான் ஹோட்டல் அறைக்கு வந்து குளித்தவன், மீண்டும் வெளியே கிளம்பத் தயாராக, உமையாளின் அழைப்பு கண்டு எடுத்து பேச சிறிது தயக்கம் என்றாலும், அவள் இருப்பது மருத்துவமனை என்று கருதி “ஹலோ..” என,

“எ.. என்னங்க… என்ன செய்றீங்க…” என்றாள் கொஞ்சம் அடக்கமாய்.

‘புதுசா கேக்குறா…’ என்று நெற்றி சுருக்கியவன் “வெளிய கிளம்பிட்டு இருக்கேன்..” என,

“சா.. சாப்பிட்டீங்களா??”

“ம்ம் இனிமேதான் சொல்லணும்…” என்றவன் “உன் அத்தை எப்படி இருக்காங்க??” என,

“ம்ம் அப்போவே கண் முழிச்சிட்டாங்க.. என்னோட பேசினாங்க…”

“ஓ..!! குட்.. நீ என்ன சொன்ன??”

“ஒ… ஒன்னும் சொல்லலை.. நீங்க.. நீங்க இங்க வருவீங்களா??”

“ம்ம்.. வர்றேன்…” என்றவன் வைத்துவிட்டான்.

‘அத்தைக்காக அழைக்கிறாள்…’ என்று புரிந்தது..

மனம் விட்டு பேசிக்கொண்டால்  இதெல்லாம் பெரிய விசயமே இல்லைதான். ஆனால் அதற்கு இருவருமே முயற்சி செய்திட வேண்டும் தானே..

மருத்துவமனை வந்தவன், பிரேமாவிடம் ஓரிரு வார்த்தை பேச “அவளுக்கு அவ்வளவோ ஆளுங்களோட பழகத் தெரியாது..” என்றார் பொதுவாய்.

உமையாள் எதுவுமே பேசாது அமைதியாய் இருக்க, “ம்ம்…” என்றுமட்டும் பசுபதி சொல்ல, அடுத்து சில நேரம் பேச்சுக்களில் கழிய,

“சரி நான் கிளம்புறேன்…” என்று எழுந்துவிட்டான்.

பிரேமா உடனே “உமையா நீயும் போ..” என, “நானா??!!” என்று முழித்தாள்.

வா என்றும் சொல்லவில்லை, இரு என்றும் சொல்லவில்லை, பசுபதி அவளே சொல்லட்டும் என்று பார்க்க, உமையாளோ தனியே இவனோடு போய் மீண்டும் ஓர் சண்டை வந்தால் என்ன செய்ய என்ற நினைப்பிலேயே “நா.. நான் பூஜாவோட வீட்டுக்கு போறேன் அத்தை…” என்றுவிட, அவ்வளோதான் பசுபதி இப்போதும் நிற்காது நடந்துவிட்டான்.

Advertisement